இறைவா.! அனைத்தும் நீயே..!!
சர்வம் சிவார்ப்பணம்...!!!
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவருளால் நாம் அவ்வப்போது திருமுறைகள் படித்து வருகின்றோம். நால்வர் காட்டிய வழியில் நாம் சென்றால் இறையை உணரலாம். நால்வர் பெருமக்கள் நமக்கு தந்துள்ள ஞானத்தை படிக்க வேண்டியது நமது வாழ்வின் நோக்கமாக கொள்ள வேண்டும். தித்திக்கும் திருமுறை பாராயணம் தினமும் செய்வோம் என்பதை நமது வாழ்வியல் கடமையாக எண்ணுதல் வேண்டும்.
எந்த நாட்டிலும் நாம் காண இயலாத பல அதிசயங்கள் நம் நாட்டில் உண்டு. பொத்தாம் பொதுவாக நாம் பார்த்தால் இதில் என்ன அதிசயம் என்று நமக்குத் தோன்றும். சற்று ஆழ்ந்து சிந்தித்து பார்த்தால் தான் நம் மொழியின், நாட்டின், கலாச்சாரம்,பண்பாடு, பாரம்பரியம் என அனைத்தும் புரியும். இதில் நாம் சித்தர்கள், ஜீவ நாடி என எடுத்துக் கொள்ளலாம், இதில் மேலும் நமக்கு இன்பமூட்டுவது திருமுறைகள் ஆகும். ஆம். நமக்கு கிடைத்துள்ள திருமுறைகள் போன்று வேறெங்கும் உள்ளனவா என்று பார்த்தால் வெறும் கேள்விக்குறியே மிஞ்சும். எனவே தான் மீண்டும் மீண்டும் சொல்கின்றோம். பாரத பூமி பழம்பெரும் பூமி மட்டும் அன்று. இது ஞான பூமி. ஆடல்வல்லான் 64 திருவிளையாடல்களை வேறெந்த நாட்டிலாவது நடத்தி இருக்கலாமே? ஏன் நம் தமிழ் நாட்டில் நடத்தினார். சைவம் ம் மட்டுமல்ல. இதில் வைணவமும் அடங்கும். இதே போல் கௌமாரம், சாக்தம், காணாபத்யம் என அனைத்தும் எடுத்துக் கொள்ளலாம்.
தமிழ் மொழி ஒன்றே போதும், இது பக்தி மொழி மட்டும் அல்ல, வாழ்வியல் மொழி, முக்தி மொழியும் ஆகும்.எனவே தமிழ் மறைகள் படிப்பது,கேட்பது இன்பம் ஆகும். ஒரு தட்டில் தமிழ் மொழியில் உள்ள பக்தி நூல்களையும், மற்றோரு எடைத் தட்டில் பிற மொழி பக்தி நூல்களையும் வைத்தால் கூட தமிழ் மொழிக்கு ஈடு இணை சொல்ல முடியாது.
திருமுறைகள் என்றால் ஒன்று, இரண்டு இருக்கும் என்று எண்ண வேண்டாம். மொத்தம் பன்னிரு திருமுறைகள் உண்டு. கலியுகத்தில் நமக்கு ஊழ்வினையால் ஏற்படும் துன்பங்களுக்கும், வாழ்வில் நாம் சந்திக்கும் அனைத்து துன்பங்களுக்கும், பிறவி என்னும் மிகப்பெரிய பிணிக்கும், மருந்தாக அமைந்து நம்மைக் காத்து அருள்வது பன்னிரு திருமுறைகள் எனப்படும் சிவ ஆகமங்களாகும். மிகவும் பெருமைமிக்கது, அளப்பரியது, ஆற்றல்மிக்கது. வேத ஆகமங்கள் மற்றும் சைவ சித்தாந்தத்தின் பிழிந்த சாறாக, நமக்கு இன்பம் தரும் நமது தமிழ் மொழியில், அருளாளர்கள் வழியாக இறைவனால் நமக்கு அருளப்பட்டது, பன்னிரு திருமுறை என்னும் தமிழ் வேதம். நம்முடைய துன்பங்கள் அனைத்திற்க்கும் மூல காரணமாக விளங்குவது நம் அறியாமை. அந்த அறியாமையிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்கு திருமுறை வாக்குகள் பெரிதும் உதவுகின்றன. வினை வயப்பட்டுத் துன்புறும் நாம் திருந்தி உய்யும் பொருட்டு, இறைவன் அருளாளர்களை இப்பூமிக்கு அனுப்பி அவர்கள் வாயிலாக நமக்கு இந்த திருமுறைகளை அருளிச் செய்துள்ளான். திருமுறைகளில் உள்ள ஒவ்வொரு சொல்லும் மிகுந்த மந்திர ஆற்றல் உடையவை. திருமுறைகளை நாம் பாராயணம் செய்து ஓதுவித்தால், அதில் உள்ள மந்திர ஆற்றல், நம் உயிரில் கலந்து நமது அறியாமையைப் போக்கும். யாராலும் மாற்றியமைக்க முடியாத நம் விதியை, இறைவனின் கருணையினால் மட்டுமே மாற்றியமைக்க முடியும். விதியை மதியால் வெல்வது என்பது திருமுறைகளை ஓதுவித்து, இறைவன் அருள்பெற்று, நம் விதியை மாற்றுவதேயாகும்.
இந்த வழியில் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே என்று கூறிய பதிகத்தை காண உள்ளோம்.
திருநாவுக்கரசர் - தேவாரம்- ஆறாம் திருமுறை - 6.001 - கோயில் ( தில்லை / சிதம்பரம்)
கோயில் (சிதம்பரம்)
பெரியதிருத்தாண்டகம்
அருள்தரு சிவகாமியம்மை உடனுறை அருள்மிகு திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் திருவடிகள் போற்றி
இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் பெரும்பற்றப் புலியூர் என்ற பெயரே பயன்படுத்தப் பட்டுள்ளது. வியாக்ரபாதர் என்று அழைக்கப்பட்ட புலிக்கால் முனிவர், மிகுந்த பற்று கொண்டு வழிபட்ட தலம் என்பதை உணர்த்தும் வகையில் பெரும்பற்றப் புலியூர் என்று தில்லைச் சிதம்பரம் அழைக்கப்படுகின்றது. மத்தியந்தினர் என்ற பெயருடன் காசியில் வசித்து வந்த அந்தணர், தனது தந்தை மூலமாக தில்லையின் சிறப்பினைக் கேட்டு, தில்லை வந்தடைந்தார். தில்லை வந்த அவர், தில்லை வனத்தின் நடுவே ஒரு சுயம்பு இலிங்கம் இருப்பதைக் கண்டு அதனை தினமும் வழிபட்டு வந்தார். அதே சமயத்தில், ஆதிசேஷன், பதஞ்சலி என்ற பெயருடன், சிவபெருமானின் நடனக் கோலத்தைக் காண்பதற்காக மண்ணுலகம் வந்தார். வந்தவர் தில்லையில் மத்தியந்தினரை சந்தித்தார். அவரிடம் சிவபெருமான் தாருகாவனத்தில் ஆடிய நடனத்தின் சிறப்பு பற்றி, திருமாலிடம் தான் கேட்டு அறிந்த விவரத்தைக் கூறினார். இருவரும் சிவபிரானை நோக்கித் தீவிரமாக தவம் இருந்தனர், சிவபெருமானை வழிபடுவதற்காக, வண்டுகள் மொய்க்காத மலர்கள் பறிக்க வசதியாக தனக்கு, புலியின் கண்களும் புலியின் பாதங்களும் வேண்டும் என்று சிவபிரானிடம் வேண்ட சிவபிரானின் அருளால் அவ்வாறு அமைந்தமையால் மத்தியந்தினருக்கு வியாக்ரபாதர் என்ற பெயர் ஏற்பட்டது. சிவபெருமான், பதஞ்சலிக்கும் வியாக்ரபாதருக்கும் காட்சி கொடுத்து, தக்க சயமத்தில் அவர்களுக்கு தனது நடனத் திருக்கோலத்தை காட்டுவதாக வாக்களித்தார். பின்னர் காளியுடன் நடனப் போட்டியில் ஈடுபட்ட சமயத்தில், வியாக்ரபாதர், பதஞ்சலி இருவருக்கும், அந்த நடனக் காட்சியினை காணும் வாய்ப்பினை அளித்தார். சிவபெருமான் தனக்கு நடனக் காட்சி அருளியதால் மிகவும் மகிழ்ந்த வியாக்ரபாதர் தில்லையில் தங்கி, இறைவனை தொடர்ந்து வழிபட்டார். இவ்வாறு இறைவனின் மீது மிகுந்த பற்று கொண்டு வழிபட்டமையால், அவர் இறைவன் மீது கொண்ட பற்றினை நினைவூட்டும் வகையில், இந்த தலத்திற்கு பெரும்பற்றப்புலியூர் என்று பெயர் ஏற்பட்டது. வியாக்ரபாதர் என்ற அடியவருக்கு மிகவும் எளியவனாகத் திகழ்ந்து அவருக்கு புலிக்கால் அருளி. நடனக்காட்சியும் அருளிய இறைவன் என்பதை இந்த பெயர் மூலம் நமக்கு நினைவூட்டும் அப்பர் பிரான், இறைவன் மீது பற்று கொண்டு வழிபட்டால் நமக்கும் இறைவன் எளியவனாக இருப்பான் என்பதை உணர்த்தும் வண்ணம், பெரும்பற்றப்புலியூர் என்ற பெயரினையே அனைத்துப் பாடல்களிலும் பயன்படுத்தியுள்ளார்.
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
கண்ணாரமுதக் கடலே போற்றி.
சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாறா போற்றி
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெணுரு ஆனாய் போற்றி
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி
குவளைக் கண்ணி கூறன் காண்க
அவளுந் தானும் உடனே காண்க
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
- மீண்டும் சிந்திப்போம்.
No comments:
Post a Comment