இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
தீபாவளி கொண்டாட்டங்கள் நிறைவு பெற்று, கந்த சஷ்டி வழிபாட்டில் அனைவரும் இருப்பீர்கள் என்று நம்புகின்றோம்.முருகா! எந்தனுக்கு ஏதும் தெரியாது. மனிதனாகப் பிறந்து விட்டோம். அனைத்தும் நீயே! அனைத்தும் நீயே செய்து தா! அனைத்தும் நீயே செய்து கொண்டிருக்கிறாய். இன்னும் செய்து தா!என்று வேண்டுவது ஒன்று தான் நம் கையில் இருக்கின்றது.
இன்றைய கந்த சஷ்டி பதிவாக சுவாமிமலை நவரத்ன மாலை பற்றி இங்கே அறிய உள்ளோம் .
சுவாமிமலை நவரத்ன மாலை
சூரனை சம்ஹாரம் செய்யவேண்டும்; அதற்கு குமார சம்பவம் நிகழ வேண்டும். தேவர்களின் தூண்டுதலால் மன்மதன் தன் புஷ்பபாணங்களை ஈசனின் மீது எய்ய தவம் கலைந்த ஈசனின் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகள் தோன்றி சரவணப் பொய்கையில் விழுந்தன. அவை ஆறு குழந்தைகளாய் மாறி கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டு பின் பார்வதி தேவியின் அணைப்பில் ஷண்முகராக மாறி திருவருள் புரிந்தது.
அறுபடை வீடுகளில் ஆறுமுகனான முருகப்பெருமான் திருவருட்பாலித்து வருகிறார். திருக்கார்த்திகை நன்நாளில் கடுக்கண் தியாகராஜ தேசிகர் எனும் பக்தரால் 350 ஆண்டுகளுக்கு முன் அருளப்பட்ட, கீழ்க்காணும் சுவாமிமலை எனும் திருவேரக நவரத்ன மாலையை பாராயணம் செய்து முருகப்பெருமானின் திருவருளையும் வள்ளி, தெய்வானையின் பேரருளையும் இந்த கந்த சஷ்டி விரத நேரத்தில் பெறுவோம்.
பொன்னரங்கு ஆகவுறை மார்பன் சகோதரா
புரந்தரா துரந்தரா உமை
பூமி புகழ் வாமி அபிராமி சிவகாமியருள்
புதல்வ! குருபர சுவாமி! நின்
சந்நதியடைந்தவர்க்கு எந்நிதியமும் உதவும்
தயாநிதி! கிருபாநிதிபதி!
சடாட்சர சுபாகர கடாட்சமது செய்ய இது
சமயம் நல்லசமயம் ஐயா!
உன்னுருவம் உலகுயிர்கள் யாவும் என்றால்,
எந்தன் உள் மெலிவை நீ அறியையோ?
ஓம் நமோ சரவணோற்பவ குமர! முருகா என்
உறுதி நிறைவேற்றி வைத்தாள்
மன்னும் உரு சொன்ன மொழி கன்னலெழில்
மின்னரசி வள்ளி மணவாள சரணம்
வண்ணமயில் வாகனா! பொன்னேரகப்
பதியில் வளர் சாமிநாத குருவே.
நின்பக்கல் அன்பில்லாப் பாவியர் படுந்துயரம்
நின்னடியர் தாமுறுவதும்,
நின்னை என்றும் மறவாத புண்ணியர் பெருஞ் செல்வம் நிர்மூடர் தான் பெறுவதும்,
அன்புடன் நல்லறம் செய் தருமசாலிகள்
அல்லலால் மனநோவதும்,
அறந்தனை மறந்திடும் அசத்தியப் பேயர்கள்
அகமகிழ்ந்தே வாழ்வதும்,
உன் மகிமையோ அல்லது கலியுகப் பெருமையோ?
உனையன்றி அணு அசையுமோ?
உலகினிற் கண்கண்ட மெய்யான தெய்வமே.
உயர் பரங்குன்றில் உறைவாய்!
வன் பகைச் சூர்வேர் களைந்ததுபோல் என்
பகையை மாற்றிடும் வடிவேலவா!!
வண்ணமயில் வாகனா! பொன்னேரகப்
பதியில் வளர் சாமிநாத குருவே.
ஓரு தரம் சரவணபவா என்று சொல்பவர்
உளதினில் நினைத்த எல்லாம்
உடனே கைகூடுமென வேதங்கள் மொழியுதே;
உண்மை அறிவான பொருளே!
பார்வாகவே அநந்தந் தரம் சரவண
பவாவென்று நான் சொல்லியும்,
பாங்குமிகு காங்கேயா! அடியனேன்
எண்ணியது பலியாதிருப்பது ஏனோ?
குருபரா! முருகையா! கந்தா! கடம்பா!
சொல் குமரா! குகா! ஷண்முகா!
கோலாகலா! வெற்றிவேலா! எனக்கருள்
கொடுத்தாள்வை முத்தையனே!
மருமலர்க் குழலழக தேவகுஞ்சரி, வள்ளி
மணவாளனே! என் துணைவனே!
வண்ணமயில் வாகனா! பொன்னேரகப்
பதியில் வளர் சாமிநாத குருவே.
கந்தா! குழந்தை! வடிவேலா! குகா!
ஷண்முகா! பரமகுரு தேசிகா!
கனம் பெற உனக்கே ஜெயம் தரவும்; நீ உன்
கருத்திற் பயப்படேல் என்று
எந்தாய வேளையிலும், அசரீரி மொழியாலும்
எண்ணில் சகுனங்களாலும்
இயம்புமுன் உத்தரவு பொய்க்குமோ?
உனை நம்பி என்மனம் மயங்கலாமோ?
சிந்தா குலந்தவிர்த்து இந்தா எனக்கருணை
செய்து என் அபீஷ்டம் யாவும்
சித்திக்கவே அருள் செய்; பக்தர்க்கு இரங்கும்
என் தெய்வமே உனை நம்பினேன்.
மந்தாகினிக்கு இனிய மைந்தா! முகுந்தற்கு
மருகா! சிறந்த முருகா!
வண்ணமயில் வாகனா! பொன்னேரகப்
பதியில் வளர் சாமிநாத குருவே.
நெஞ்சினிற் கவலையும், சஞ்சல கிலேசமும்
நீ என்ன அறியாததோ?
நீரினில் தன்மைபோல், உயிரினுக்கு
உயிராகி நிறைகின்ற பரிபூரணா!
தஞ்சம் புகுந்தவன், கொத்தடிமை என்று
எனைத்தற்காக்கவேணும், அல்லால்
தள்ளிவிடல் நீதியோ? சமயமிது அல்லவோ?
சரணம் புகுந்த பின்னர்,
அஞ்சலெனஆதரவு செய்வது போல்
செய்து ஒன்னலாரிடம் விடுக்கலாமோ?
ஐயனே உனது திருவிளையாடலோ? உன்
அடைக்கலம் அடைக்கலம் காண்.
மஞ்சுஒதிமத் தேவகுஞ்சரிமனோகரா!
வள்ளி நாயக தெய்வமே!
வண்ணமயில் வாகனா! பொன்னேரகப்
பதியில் வளர் சாமிநாத குருவே.
ஆறுதலையர் அருள்செய் ஆறுதலையாய்!
எனக்கு ஆறுதலை யார்? உனை அலால்!
ஐயனே! ஈராறு கையனே! மெய்யனே!
அனைத்திலும் நீ ஒருவனே
தேறுபொருள் என வேத வேதாந்த
மதனிலும், தீர்க்கமா வாக்கியம் எலாம்
திவ்ய தேஜோமயா நந்த பரிபூரணத்
தேவசிவ குருவே! உனை
வீறுள்ள தேவென்று கூறுவதலால், எங்கும்
வேறு மொரு தெய்வம் உளதோ?
விண்ணவர்கள் சிறைமீள,
ஆயிரங்கண்ணுளான்
மேலுலகு தன்னை யாள,
மாறிட்ட சூரனைக் கூறிட்டவேலால்
மனத்துயர் ஒழித்தருள் செய்வாய்!
வண்ணமயில் வாகனா! பொன்னேரகப்
பதியில் வளர் சாமிநாத குருவே.
உண்டு என்னிடத்திற் பலகுற்றம்;
ஆகிலும் உனையடைந்தேன்! ஆதலால்,
உவந்தே பொறுத்திடுதல்
உன் கடமையல்லவோ;
உண்மையாய் ஒரு விண்ணப்பம்;
பண்டு உதிரம் அதுசிதற வில்லால்
அடித்திட்ட பார்த்தனைக் கோபியாமல்
பாசுபதம் அருள் செய்த சிவகுமரா! நிற்
பயந்தவர் செய் பாங்கு போலும்,
திண்டு முண்டு உரை செய்த நக்கீரனைக்
காத்த செய்கைபோல், உன் கிருபையால்
சிறியன் மீதே பூரண கருணா கடாட்சமது
செயவேணும், இது சமயமே!
வண்டுகுடி கொண்டகுழல் கெண்டைவிழி,
கண்டுமொழி, வள்ளி மணவாளா சரணம்!
வண்ணமயில் வாகனா! பொன்னேரகப்
பதியில் வளர் சாமிநாத குருவே.
கொஞ்ச நெஞ்சம் பயமின்றி, அற மதனைக்
குலைத்திடல், சிவத்துரோகம்,
குருநிந்தையோடு சகோதரத் துரோகம்,
அன்னம் கொடுத்தவர்க்குத் துரோகம்,
வஞ்சகம், பொய், சூது, அசத்தியம், ஈரஷை,
மாச்சரியம், மிக்க நன்றி
மறத்தல், புறங்கூறல், இன்னம் இப்படி
வெகு மாபாவஞ் செய்த கொடிய
பஞ்சமா பாவிகள் எண்ணமோ முடியும்?
இப் பார்மீதில் உனை நம்பிவாழ்
பக்தர்கள் நினைப்பு ஒன்று முற்றாது
இருக்குமோ? பரம குருநாத சுவாமி!
வஞ்சகச் சூரரெனும் மாசினை அகற்றியே
வானுலகு வாழ வைத்தோய்
வண்ணமயில் வாகனா! பொன்னேரகப்
பதியில் வளர் சாமிநாத குருவே.
மைந்தர் மேல் மோடியது, தந்தை தாய்
செய்வது என்ன மாயமோ? இது ஞாயமோ?
பாலசுப்பிரமணியன் என்ற பேர் நிஜமென
வகுத்தது உன் வேடிக்கையோ?
எந்தனுடல், உயிர், பொருள், யாவுமே
“நீ’’ யென இருப்போர்க்கும் இரங்காவிடில்,
என்னையும் நகைத்து ஐயா! உன்னையும்
நகைப்பதற்கு இடம் அல்லவோ! கருணையாய்ச்
சுந்தர மிகுந்திலகு ஷண்முகமும், ஈராறு
தோளும், கடம்பும், எங்கள்
தொகை தெய்வானை, குற மங்கையோடு,
தோகைமேல் தொண்டனேன் கண்டுமகிழ,
வந்து எழுந்தருளி, எனை ஆண்டு கொள்வாய்!
உன் மலர் பதம் சரணம் ஐயா!
வண்ணமயில் வாகனா! பொன்னேரகப்
பதியில் வளர் சாமிநாத குருவே.
அகத்தியர் பதிகமும், கூடுவாஞ்சேரி அகத்தியர் ஐப்பசி ஆயில்ய ஆராதனை அழைப்பும்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_5.html
ஓம் ஸ்ரீ தாமிரபரணி தாயே போற்றி! போற்றி!! - https://tut-temples.blogspot.com/2022/08/blog-post_38.html
ஆடிப்பெருக்கு - அருளும் பொருளும் பெருக! - https://tut-temples.blogspot.com/2022/08/blog-post_3.html
நவ கைலாய திருத்தலங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_18.html
மார்கழி சிறப்பு பதிவு - நவ கைலாய திருத்தலங்கள் தரிசிக்கலாமே - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_22.html
அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 06.11.2022 - https://tut-temples.blogspot.com/2022/10/06112022.html
திருவாசகம் ஓதுக! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_27.html



No comments:
Post a Comment