"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, July 26, 2021

குரவு விரவு முருகா வருக!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் தளம் சார்பில் குருபூர்ணிமா சிறப்பாக அமைந்தது. அன்றைய தினம் அன்னசேவையும் குருவருளால் அமையப்பெற்றது. இது ஒரு புறமிருக்க பெருந்தொற்று இன்னும் முடிந்தபாடில்லை. ஒவ்வொருவருக்கும் இறை கொடுத்துள்ள நிலையை பார்த்தால் நாம் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் என்று புரியும். குறை சொல்லும் வாழ்வில் இருந்து வெளியே வாருங்கள். வாழ்கின்ற ஒவ்வொரு நொடியிலும் நிறைவை காணுங்கள்.காலையில் எழுந்த போதும், இரவில் உறங்க செல்லும் முன்னும் இறையை வணங்குங்கள். இந்த வாழ்வில் நாம் உயிரோடு இருப்பதற்கு இது தான் நாம் அவருக்கு செய்யும் நன்றி. இந்த பெருந்தொற்று காலத்திலும் நம்மை பாதுகாத்து அருள் செய்கின்ற இறைக்கு நன்றி சொல்லுங்கள். இதனையொட்டியே நாம் தினமும் மாலை 6 -7 மணி அளவில் கூட்டுப் பிரார்த்தனை சில பதிகங்கள் பாடி செய்து வருகின்றோம். இந்த எண்ணத்தில் நின்று இன்று வழித்துணையாக வரும் முருகப் பெருமானை பற்ற இருக்கின்றோம்.

குரவு என்றால் திருக்குராவடி என்று பொருள் கொண்டு, குராவடியில் அருளும் குமரன் தரிசனம் இன்றைய பதிவில் காண இருக்கின்றோம். குராவடியில் அருளும் குமரன் என்றால் திருவிடைக்கழி குமரன். ஆம்.திருவிடைக்கழி  பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக விளங்குகிறது, நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள திருவிடைக்கழி தெய்வானை சமேத முருகப்பெருமான் கோவில்.                                       


முருகப்பெருமான் பாவ விமோசனம் பெற்றது, திருப்பல்லாண்டு பாடப்பெற்ற தலம், அதைப் பாடிய சேந்தனார் முக்தி பெற்ற தலம், ஆண்டுதோறும் புரட்டாசி மாத முதல் வெள்ளிக்கிழமை பாதயாத்திரை மேற்கொள்ளப்படும் கோவில் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக விளங்குகிறது, நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள திருவிடைக்கழி தெய்வானை சமேத முருகப்பெருமான் கோவில்.

                                         

தமிழ்கடவுள் முருகப்பெருமானை தனித்துவம் மற்றும் தன்னம்பிக்கையின் அடையாளமாகக் கூறலாம். இந்து மதத்தினர் ஒரு காலகட்டத்தில் தங்களுக்குள் ஆறு பிரிவாக பிரிந்து, ஒவ்வொரு பிரிவினரும் ஒவ்வொருவரை கடவுளாக வரித்துக்கொண்டு வழிபாடு மேற்கொண்டனர். இவர்களில் முருகப்பெருமானை கடவுளாக வழிபட்ட அமைப்புக்கு ‘கவுமாரம்’ என்று பெயர். பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு திருவேரகம் என்னும் பழனி மலையேறிய பெருமானுக்கு அவரது பக்தர்கள் குன்றுதோறும் கோவில்களை கட்டி வழிபட்டனர். குன்றுகள் இல்லாத இடங்களிலும் கூட முருகப்பெருமானுக்கு சிறப்பு மிக்க பல ஆலயங்கள் அமைந்துள்ளன. அதில் ஒன்றுதான் திருவிடைக்கழி முருகப்பெருமான் கோவில்.

 முருகப்பெருமான், தான்செய்த பாவத்திற்கு விமோசனம் பெறுவதற்காக, சிவனை வழிபட்டு பேறுபெற்ற தலம் இதுவாகும். இந்தத் திருத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடவூர் மற்றும் தில்லையாடிக்கு அருகிலுள்ளது. புரட்டாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமை சிதம்பரத்தில் இருந்து பாதயாத்திரையாக இந்த முருகன் ஆலயத்திற்குச் சென்று வழிபடும் வழக்கம் கடந்த 38 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
                                         
முசுகுந்த சக்கரவர்த்தி என்னும் சோழ மன்னன் இவ்வாலயத்தைக் கட்டியதாக தலவரலாறு கூறுகிறது. ஆனால் காலத்தை சரியாக கூறமுடியவில்லை. இத்தலம் முற்காலத்தில் ‘மகிழ்வனம்’ என்றும், ‘குராப்பள்ளி’ என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இவ்வாலயத்தில் பல கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன. அவற்றின் வாயிலாக இந்தப் பகுதியில் பல மடங்கள் இருந்த விவரமும், அதன்மூலம் நாள்தோறும் அன்னதானம் பல ஆண்டுகள் நடைபெற்று வந்ததும், வேதம் ஓதும் அந்தணர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டதும் செய்தியாக குறிப்பிடப்பட்டுள்ளன. கல்வெட்டில் முருகப்பெருமானுடைய பெயர் ‘திருக்குராத்துடையார்’ என்று பொறிக்கப்பட்டுள்ளது.

தலவரலாறு :

திருச்செந்தூர் சூரனை வதம் செய்வதற்கான பணியில் இருந்தார் முருகப்பெருமான். அப்போது சூரனின் இரண்டாவது மகன் ஹிரண்யாசுரன், பித்ரு கடன் செய்ய வேண்டி போரில் இருந்து பின் வாங்கி, தரங்கம்பாடி கடலில் மீன் உருவம் எடுத்து மறைந்தான். இதையறிந்த முருகப்பெருமான், அவனைத் தேடிப்பிடித்து சம்ஹாரம் செய்தார். ஹிரண்யாசுரன் சிறந்த சிவபக்தன் என்பதால், அவனைக் கொன்ற முருகப்பெருமானுக்கு பாவம் உண்டானது.

அந்தப் பாவத்தில் இருந்து விமோசனம் அடைவதற்காக தரங்கம்பாடி அருகில் உள்ள சிவாலயத்தின் குரா மரத்தடியில் அமர்ந்து தவம் இயற்றினார். இதையடுத்து அவருக்கு பாவ விமோசனம் கிடைத்தது. தன் மகனான குமரனை, இந்தத் தலத்திலேயே இருந்து அருள்புரியும்படி சிவபெருமான் கேட்டுக் கொண்டார். மேலும் அவருக்கு பின்புறத்திலேயே தானும் அமர்ந்தார் என்பது தல வரலாறு. ஹிரண்யாசுரனை கொன்ற பாவம் கழிந்த தலம் என்பதால், இதற்கு ‘விடைக்கழி’ என்று பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.

சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் பெற்ற தரிசனப் பதிவுகளை இங்கே தருகின்றோம். அன்று முழுதும் முருகன் அருள் முன்னின்று நம்மை வழிநடத்தியதை உணர்ந்தோம்.






திருமுறைகளில் இடம் பெற்றுள்ள முருகப்பெருமான் திருத்தலங்களில் இதுவும் ஒன்று. முருகனின் திருவிளையாடல்கள் நடைபெற்ற அறுபடை வீடுகளைத் தவிர, கந்தனின் காலடிபட்ட தலங்கள் இரண்டு மட்டுமே. அதில் ஒன்று முருகப்பெருமான் வள்ளியை மணம்புரிந்த வள்ளிமலை. மற்றொன்று பாவ விமோசனம் பெறுவதற்காக முருகன் தவம் இயற்றிய இந்த திருவிடைக்கழி என்பது சிறப்புக்குரிய விஷயமாகும்.

முருகப்பெருமான் சிவனை வழிபட்ட குரா மரத்தடியில் அமர்ந்து, ராகு பகவான் முருகப்பெருமானை வழிபட்டிருக்கிறார். இதனால் ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் விரைவில் திருமணம் நடந்தேறும். தம்பதியரிடையே ஒற்றுமை பலப்படும். நவக்கிரகங்கள் இல்லாத இந்த ஆலயத்தில் முருகப்பெருமானே நவ நாயகர்களாக இருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம். இத்தல முருகனை வழிபட்டாலேயே அனைத்து விதமான நவக்கிரக தோஷங்களும் விலகிவிடும் என்கிறார்கள்.

இத்திருத்தலத்தில் ‘சர்வமும் சுப்ரமணியம்’ என்ற வகையில் பிரதோஷ நாயகர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர் என அனைத்து மூர்த்திகளும், வலது திருக்கரத்தில் வஜ்ரவேலுடன் சுப்ரமணிய சுவாமி சொரூபமாகவே காட்சிஅளிக்கின்றனர். சண்டிகேஸ்வரர் சன்னிதியில் உள்ள சிவசண்டிகேஸ்வரரும், குக சண்டிகேஸ்வரரும் தங்கள் திருக்கரத்தில் மழுவை ஏந்தாமல், வஜ்ர வேலை ஏந்திக் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலயத்தில் 16 விநாயகர் மூர்த்தங்கள் இடம்பெற்றுள்ளன. பொதுவாக, கோவில் கொடி மரத்தின் அடியில் விநாயகர் மட்டுமே காட்சி தருவார். ஆனால், இங்குள்ள கொடி மரத்தின் கீழ் விநாயகப்பெருமானுடன் வேலவனும் காட்சி தருவது தனிச்சிறப்பு.

கருவறையில் முருகப்பெருமானுடன் சிவபெருமானும் சேர்ந்தே அருள்பாலிக்கிறார். இத்தலத்தின் நான்கு எல்லைகளிலும் ஐயனார் கோவில்கள் இருப்பதும், இங்குள்ள முருகப்பெருமானுக்கு மயிலுக்குப் பதிலாக யானை வாகனமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மூலவர் முருகப்பெருமான், தெய்வானை. பின்புறம் சிவலிங்கம்


அன்று காலை சுமார் 10 மணி அளவில் கோயிலுக்கு சென்றோம். கிழக்கு நோக்கிய ராஜ கோபுர தரிசனம் பெற்று உள்ளே சென்று கொடி மர தரிசனம், அடுத்து விநாயகர் தரிசனம் பெற்றோம். அடுத்து முன்மண்டபம் முழுதும் உள்ள கல்வெட்டு பார்த்தோம். முழுதும் முன்மண்டபத்தில் திருப்புகழ் பாடல்கள், வேல் விருத்தம் முதலியவை கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளன.
















திருப்புகழ் 794 பகரு முத்தமிழ்  (திருவிடைக்கழி)

பகரு முத்தமிழ்ப் பொருளு மெய்த்தவப்
     பயனு மெப்படிப் ...... பலவாழ்வும்

பழைய முத்தியிற் பதமு நட்புறப்
     பரவு கற்பகத் ...... தருவாழ்வும்

புகரில் புத்தியுற் றரசு பெற்றுறப்
     பொலியும் அற்புதப் ......பெருவாழ்வும்

புலன கற்றிடப் பலவி தத்தினைப்
     புகழ்ப லத்தினைத் ...... தரவேணும்

தகரி லற்றகைத் தலம்வி டப்பிணைச்
     சரவ ணத்தினிற் ...... பயில்வோனே

தனிவ னத்தினிற் புனம றத்தியைத்
     தழுவு பொற்புயத் ...... திருமார்பா

சிகர வெற்பினைப் பகிரும் வித்தகத்
     திறல யிற்சுடர்க் ...... குமரேசா

செழும லர்ப்பொழிற் குரவ முற்றபொற்
     றிருவி டைக்கழிப் ...... பெருமாளே.

திருப்புகழ் 796 பழியுறு சட்டகமான  (திருவிடைக்கழி)

பழியுறுசட் டகமான குடிலையெடுத் திழிவான
     பகரும்வினைச் செயல்மாதர் ...... தருமாயப்

படுகுழிபுக் கினிதேறும் வழிதடவித் தெரியாது
     பழமைபிதற் றிடுலொக ...... முழுமூடர்

உழலும்விருப் புடனோது பலசவலைக் கலைதேடி
     யொருபயனைத் தெளியாது ...... விளியாமுன்

உனகமலப் பதநாடி யுருகியுளத் தமுதூற
     உனதுதிருப் புகழோத ...... அருள்வாயே

தெழியுவரிச் சலராசி மொகுமொகெனப் பெருமேரு
     திடுதிடெனப் பலபூதர் ...... விதமாகத்

திமிதிமெனப் பொருசூர னெறுநெறெனப் பலதேவர்
     ஜெயஜெயெனக் கொதிவேலை ...... விடுவோனே

அழகுதரித் திடுநீப சரவணவுற் பவவேல
     அடல்தருகெற் சிதநீல ...... மயில்வீரா

அருணைதிருத் தணிநாக மலைபழநிப் பதிகோடை
     அதிபஇடைக் கழிமேவு ...... பெருமாளே.






அடுத்து நம் தள அன்பர்களுக்காக அபிஷேகம், அர்ச்சனை செய்து மனம் மகிழ்ந்தோம். அந்த இறை தரிசனத்தை இப்போது நினைத்தாலும் உள்ளம் உருகுகின்றது .

 வலதுபுறம் தெய்வானை தனி சன்னிதியில் தவக்கோலத்தில் தரிசனம் தந்து அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் விநாயகர் சன்னிதி. தலவிருட்சம் ‘குராமரம்’ தழைத்துக் காட்சி தருகிறது. முருகப்பெருமான் சிவபெருமானை சிந்தித்துத் தவம் செய்த இம்மரத்தடியில் பலிபீடம் (பத்ர லிங்கம்) அமைந்துள்ளது. இதற்கு அபிஷேக, ஆராதனை நடைபெறுகிறது. குராமரத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்தால் மனமும் ஒன்றி, சாந்தமான குணத்தை அடையலாம். தனிச் சன்னிதியில் திருக்காமேஸ்வரர் சிவலிங்க வடிவில் தரிசனம் தருகிறார். கருவறையைச் சுற்றி முன்புறம் ஸ்படிக லிங்கமும், தெற்கில் தட்சிணாமூர்த்தியும், பின்புறம் பாபநாசப் பெருமானும், வடக்கில் வசிஷ்ட லிங்கமும் காட்சி தரும் அமைப்பினை இத்தலத்தில் மட்டுமே தரிசிக்கலாம்.

பிரகார வலம் முடித்து உள்வாசலைத் தாண்டி இடதுபுறம் செல்லும்போது சந்திரன், அருணகிரிநாதர், சேந்தனார் மூர்த்தங்களை வழிபடலாம். உட்சுற்றில் நவசக்திகளும், விநாயகரும், சுப்பிரமணியரும் அடுத்தடுத்துக் காட்சி தருகின்றனர். அடுத்தாற்போல் நாகநாதலிங்கம், கஜலட்சுமி, வில்லேந்திய முருகர் உற்சவமூர்த்தம் ஆகியவற்றை வணங்கி தொழலாம்.

 இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.












தில்லையில் இருந்து திருக்குராவடி :

சிதம்பரத்தில் இருந்து திருவிடைக்கழி செல்லும் 50 கிலோமீட்டர் தூர பாதயாத்திரை, ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமையில் புறப்படுகிறது. வெள்ளிக்கிழமை புறப்படும் பாதயாத்திரை, சனிக்கிழமை இரவு திருவிடைக்கழி முருகன் கோவிலை அடையும். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தின் எதிரில் உள்ள மண்டபத்தில் இருந்து பால் காவடி எடுத்துச் சென்று முருகப்பெருமானுக்கு, குராமரத்தடியில் வைத்து மகா அபிஷேகம் செய்யப்படும். தொடர்ந்து தீபாராதனை நடைபெறும். இந்த பாதயாத்திரை வழிபாட்டில் கடலூர் மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி, பல வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் சிதம்பரம் வருகை தந்து இங்கிருந்து பாதயாத்திரையாக சென்று முருகனை வழிபடுகின்றனர். 

அமைவிடம் :

சிதம்பரத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், திருக்கடவூருக்கு தென்மேற்காக திருவிடைக்கழி அமைந்துள்ளது. திருக்கடவூரில் இருந்து தில்லையாடிக்குச் செல்லும் வள்ளியம்மை நினைவு வளைவு சாலைவழியாக 3 கி.மீ. தெற்காகச் சென்று மேற்காக திரும்பினால் இத்திருத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறையில் இருந்து மேற்குறிப்பிட்ட வழியாகவும், செம்பொன்னார்கோயில் வழியாகவும் இயக்கப்படும் பேருந்துகள் ஆலய வாசல் வரை செல்லும்.

முருகன் அருள் முன்னிற்க மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

திருக்குராவடி நிழல்தனில் உலவிய பெருமாளே! - https://tut-temples.blogspot.com/2021/01/blog-post_17.html

மருத மலையோனே!...மருதமலை மாமணியே...!! - https://tut-temples.blogspot.com/2020/11/blog-post_21.html

பழமுதிர்ச்சோலை பரமகுருவே வருக! வருக!! (6) - https://tut-temples.blogspot.com/2020/11/6.html

குன்றுதோறாடும் குமரா போற்றி (5) - https://tut-temples.blogspot.com/2020/11/5.html

திருவேரகம் வாழ் தேவா போற்றி! போற்றி!! (4) - https://tut-temples.blogspot.com/2020/11/4.html

திருவா வினன்குடி சிறக்கும் முருகா (3) - https://tut-temples.blogspot.com/2020/11/3.html

செந்தின் மாமலையுறும் செங்கல்வராயா (2) - https://tut-temples.blogspot.com/2020/11/2.html

திருப்பருங்குன்றுரை தீரனே குகனே (1) - https://tut-temples.blogspot.com/2020/11/1.html

Thursday, July 22, 2021

குருவே சிவம் - குரு பூர்ணிமா சிறப்பு பதிவு

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்று ஆடி மாத பௌர்ணமி ஆகும். ஆடி மாத பௌர்ணமி குரு பூர்ணிமா என்று கொண்டாடப்பட்டு வருகின்றது.குரு பூர்ணிமா , ஆடி மாதத்தில் (சூன் - சூலை) வரும் ழுழுநிலவு (பௌர்ணமி) நாள் அன்று, சீடர்கள் (மாணவர்கள்) தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய குருவை (ஆசிரியரை) போற்றும் முகமாக குரு வழிபாடு எனும் குரு பூஜை செய்வார்கள். இதனை துறவிகள், வியாசபூசை என்றும் வியாச பூர்ணிமா என்றும் அழைப்பர்.

 மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த குருவினை வழிபடுவதுடன், தட்சிணாமூர்த்தி, பகவத் கீதைஅருளிய கிருஷ்ணர், வேதங்களை தொகுத்த வியாசர், உபநிடதங்களுக்கு விளக்கம் எழுதிய ஆதி சங்கரர், மத்வர் மற்றும் இராமானுசர் போன்றவர்களையும் குரு பூர்ணிமா நாளில் வழிபட்டு குருவின் திருவருள் பெறுவர்.


இன்றைய நாளில் நாமும் குருவை போற்ற உள்ளோம்.

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல் 
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் 
தெளிவு குருவின் திருஉரு சிந்தித்தல்தானே

என்று திருமந்திரம் குருவின் மகிமையை சொல்கின்றது. மேம்போக்காக பார்த்தால் குருவின் திருமேனி காண்பது, குருவின் திருநாமம் சொல்வது, குருவின் வார்த்தை கேட்டல், குருவின் திரு உரு சிந்தித்தால் தெளிவு பிறக்கும் என்பது தெளிவாக நமக்கு புரிகின்றது. மீண்டும் முதல் வரியையும், நான்காம் வரியையும் பாருங்கள். குருவின் திருமேனி, குருவின் திரு உரு வேறு விதமாக பொருள் வருகின்றது அல்லவா? இங்கே குருவின் திருஉரு என்பது குருவின் உபதேசம் ஆகும். இது மிக மிக கடினம் ஆகும். ஆம். முதலில் குருவை காண்பது , அவர் நாமம் சொல்வது, அவரது திருவார்த்தை கேட்பது என அனைத்தும் எளிதாக பெறலாம். ஆனால் குருவின் திருஉரு கிடைப்பது அரிதினும் அரிதாம். அவ்வாறு கிடைத்த குருவின் திருஉருவை சிந்திப்பது அதனினும் அரிதாம்.

மேலும் குரு வழிபாட்டின் சிறப்பு பற்றி மஹா பெரியவர் கூறும் செய்திகளை இங்கே காண உள்ளோம்.



ஈச்வரன் என்று தனியாக ஒருவனை வைத்துக்கொண்டு உபாஸிக்காமல் குருவையே அப்படி உபாஸிப்பதற்கு ஆதரவாகச் சில காரணங்கள் உண்டு.

முக்யமாக, ஈச்வரன் நம் கண்ணுக்குத் தெரியவில்லை. அவனை மஹான்களின் வர்ணனைகளிலிருந்து பாவனையாகத்தான் மனஸில் கல்பித்துப் பார்க்க முடிகிறது. குருவோ கண்ணுக்குத் தெரிகிறார். அவரோடு நாம் கலந்து பழக முடிகிறது. நேருக்கு நேர் கேட்டுக்கொள்ள முடிகிறது. ஈச்வரனால் நமக்கு நடக்கவேண்டிய கர்ம நாசம், ஞான ப்ராப்தி எல்லாம் இவரே நடத்திக் கொடுக்கிறார்.

நாமே நேரே ஈச்வரனிடம் ப்ரார்த்தித்துக்கொண்டால் அவன் நமக்குச் செய்கிற அநுக்ரஹத்தைவிட ஜாஸ்தியாகவே நாம் அவனை ப்ரார்த்திக்காமல் குருவையே ப்ரார்த்திக்கும்போது, அந்த குருவின் மூலம் பெற்று விடலாம்! எப்படி என்கிறீர்களா? நாமே நேராக ஈச்வரனிடம் ப்ரார்த்திக்கிறோம் என்றால், நம்முடைய ப்ரார்த்தனா சக்தி எவ்வளவு? ரொம்பக் கொஞ்சந்தான். மனஸின் ஆழத்திலிருந்து தீவிரமாகப் பிரார்த்திக்கவே நமக்குத் தெரியாது. அதோடு நமக்கேதான் நாம் பிரார்த்தித்துக் கொள்கிறோம். நம்முடைய ஸொந்த நலனையேதான் ஈச்வரனிடம் வேண்டுகிறோம். இதற்கு அவன் செவி சாய்க்க மாட்டானென்றில்லை. ஆனாலும் நம்முடைய அல்ப ப்ரார்த்தனா பலத்தில் நமக்காகவே நாம் வேண்டிக் கொள்வதற்கு அவன் பெரிசாக எப்படி ஒரு பலன் தருவான்? ஆனால் நாம் குருவே எல்லாம் என்று இருந்து விட்டால், ‘அவர் இந்தக் குழந்தைக்காக நாம்தான் ப்ரார்த்திச்சுக்கணும்’ என்று ஈச்வரனிடம் நம் சார்பில் ப்ரார்த்தனை செய்வார். அவர் நம்மைப்போல ஈச்வரனை நேரில் தெரிந்துகொள்ளாதவரில்லை. அவருடைய ப்ரார்த்தனா சக்தி மிகவும் பலமானது. நமக்கு எட்டாக்கையனாக இருக்கும் ஈச்வரனுக்கு ஸமீபத்திலேயே இருப்பவர் அவர். தன்னுடைய வலுவாய்ந்த பிரார்த்தனா சக்தியோடு அவர் நமக்காக அவனிடம் வேண்டிக்கொண்டு, எடுத்துச் சொல்லி கேட்டுக் கொள்கிறபோது அவன் அதை நிச்சயம் கேட்கத்தானே கேட்பான்? நாம் எக்கேடு கெட்டுப் போனாலும் குருவுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. அப்படியிருந்தும் அவர் பரம கருணையோடு நமக்கு உபதேசம் பண்ணி, நம் அழுக்கைப் போக்குவதற்காகப் பாடுபட்டு, ஸ்வய நலமே கொஞ்சங்கூடக் கலக்காமல் நம் பொருட்டாகவே ஈச்வரனிடம் வேண்டிக் கொள்கிறாரென்றால் அதற்கு வால்யூ ரொம்ப ஜாஸ்திதானே? நம்முடைய ஸாதனை, ப்ரார்த்தனை ஆகியவற்றுக்காக ஈச்வரன் ஏதோ கால் பங்கு, வீசம் பங்கு அநுக்ரஹம் பண்ணுவானென்றால், நமக்காக குரு ப்ரார்த்திக்கும்போது முழுப் பங்கும் பண்ணிவிடுவான். லௌகிகத்திலேயே பார்க்கிறோமோல்லியோ? கவர்னர், மந்திரி மாதிரி ஒருவரால் நமக்கு ஒரு கார்யம் நடக்குமென்றால் நாமே அவரிடம் போய் நிற்க முடியுமா? நமக்குப் பேட்டி கிடைக்குமா? அவரிடம் சாய்கால் உள்ளவராக இருக்கிற நமக்குத் தெரிந்த ஒருவரிடம் நாம் போய் முறையிட்டாலே போதுமானதாக இருக்கிறதல்லவா? இவருடைய சிபாரிசுக்காகவே கவர்னர் நம்மைப் பார்க்கக்கூடப் பார்க்காமல் நமக்கு வேண்டிய கார்யம் ஆவதற்கு உத்தரவு போட்டு விடுகிறாரல்லவா?

ஈச்வரனிடம் நாம் போகவேண்டாம். நாம் போய் நடத்திக்கொள்வதைவிட இன்னம் நூறு பங்கு நன்றாக நமக்கு அவனிடம் சொல்லி நடத்திக் கொடுப்பதற்காக இருக்கிற குருவிடம் போய் அவரிடமே முறையிட்டுவிட்டால் போதும்.

நாமாக நம் கர்மாவைக் கழித்துக்கொள்வது கஷ்டம். குருவுக்கு ஈச்வரன் கொடுத்திருக்கிற விசேஷ சக்தியால் அவர் நம் கர்மாவிலே எவ்வளவோ பங்கு கழிந்து போவதற்கு ஸஹாயம் செய்வார். தம்முடைய தபோ சக்தியைக் கூட அதற்குச் செலவழிப்பார். பரம கருணாமூர்த்தியாகவும் த்யாகியாகவும் இருக்கப்பட்ட அவர் ஓரளவுக்குத் தாமே கூட நம் கர்மாவை வாங்கிக்கொண்டு அநுபவித்து, நமக்கு பாரத்தைக் குறைப்பார். இப்படி அவர் தம்மை வருத்திக் கொண்டுதான் நமக்கு ஈச்வரனிடமிருந்து உய்வு பெற்றுத்தரவேண்டுமென்றில்லை. அவர் அவனிடம் ரொம்ப நெருக்கமாக இருப்பவரானால் ஸ்வாதீனமாகவே அவன்கிட்டே, “இவனுக்காக இந்த அநுக்ரஹம் பண்ணு. பண்ணியே ஆகணும். [குரலை உயர்த்தி மிரட்டுவது போல:] என்ன, பண்றயா, இல்லையா?” என்பார். “ஆஹா, பண்றேன்” என்று ஈச்வரனும் அவர் சொன்னபடியே செய்து விடுவான்.

குரு வழிபாட்டை நிறைவாக செய்வோம். இன்றைய குரு பூர்ணிமா நாளில் குருவின் அருள் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்தனை செய்து, குருவின் தரிசனம் இனி பெற உள்ளோம்.



அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்.












குருவின் தரிசனம் அனைவரும் பெற்று இருப்பீர்கள் என்று நம்புகின்றோம். குருவைப் பற்றி பேச இந்த ஒரு பதிவு போதாது. குருவை மனதார வேண்டுங்கள்.அவரே நம்மை  அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்ல முடியும். முற்பிறவியில் மனதால் கூட குருவிற்கு துரோகம் செய்திருக்கலாம். கண்ணீர் மல்க ஆத்மார்த்தமாக மன்னிப்புக் கேளுங்கள். உங்கள் வீட்டின் அருகில் உள்ள ஜீவசாமாதிக்கு சென்று ஒரு தீபமாவது ஏற்றுங்கள். முடிந்தவர்கள் குரு பூர்ணிமா அன்று அன்னதானம் செய்யுங்கள்.

நம்மை தினமும் வழிநடத்தி வரும் அனைத்து குருமார்கள், பெரியோர்கள் பாதம் பணிந்து பதிவை நிறைவு செய்கின்றோம்.

மீள்பதிவாக:-

குரு பூர்ணிமா (16/7/2018) சிறப்புப் பதிவு (2) - https://tut-temples.blogspot.com/2019/07/1572018-2.html

ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? - குரு பூர்ணிமா சிறப்பு பதிவு  - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_54.html

அகத்தீசனே... சரண் சரணம் - https://tut-temples.blogspot.com/2021/07/blog-post.html

குரு உபதேசம் - ஓம் அகத்தீசாய நம! - https://tut-temples.blogspot.com/2021/06/blog-post_14.html

வள்ளலாரும் அகத்தியரும்! - https://tut-temples.blogspot.com/2021/06/blog-post.html

குருவே சரணம் - ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம ஸ்வாமிகள் அவதார திருநாள் - https://tut-temples.blogspot.com/2021/05/blog-post.html

ஐந்தாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2021/04/tut.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் சித்திரை ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு  - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_30.html

ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்தோர்க்கான ஆயுட்கால வழிபாட்டுத் தலம் - திருப்பாடகம் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_13.html

பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html

குருவடி பொற்றாள் சரண் சரணம் - தை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_92.html

கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_10.html

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 2 - https://tut-temples.blogspot.com/2019/12/2_14.html

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - 22.05.2020 - https://tut-temples.blogspot.com/2020/05/22052020.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post.html