அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
பெருந்தொற்று காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். கடந்த ஆண்டு முதல் தொடர்ந்த இந்நிலை என்று சரியாகும் என்று சொல்வது கடினமே.. நாம் தான் இந்த சூழலில் வாழ பழக வேண்டும்.நாளொரு பொழுதும் பெருந்தொற்றின் காரணமாக இழப்புகள் தாங்கொணா துயரமாக இருக்கின்றது. இது நாள் வரை நாம் எப்படி வாழ்ந்துள்ளோம்? பஞ்சபூதங்களை மதித்தோமா? இன்று பஞ்ச பூதங்களால் மிதிபட்டு வருகின்றோம்.
நிலத்தை எப்படி எல்லாம் பாழ்படுத்தி வந்துள்ளோம். ஒரு நாள் நம்மால் பிளாஸ்டிக் பயன்படுத்தாது வாழ முடியவில்லை. மற்றவரை குறை சொல்வது போதும். நம்மை நாமே திருத்திக் கொள்ள இறை கொடுத்த வாய்ப்பை தவறவிட்டு, இன்று திருத்தப்பட்டு வருகின்றோம்.
1. குருவின் பாதம் பிடியுங்கள்
2. கல்கண்டு தீபம் ஏற்றுங்கள். ( கல்கண்டு,ஏலக்காய்,கிராம்பு பொடி செய்து விளக்கில் சேர்க்க)
3. நமக்கு கிடைத்து வரும் ஒவ்வொரு நாளுக்கும் நன்றி சொல்லுங்கள்
4. ஒவ்வொரு நாளும் ஒரு உயிருக்கு உதவி செய்ய விரும்புங்கள்
5. தினசரி மாலை 6-7 மணி அனைவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்
6. ஆரோக்யத்தை மேம்படுத்த உடற்பயிற்சி, யோகா என செய்யுங்கள்
7. கண்டிப்பாக சைவ உணவை கடைபிடியுங்கள். சைவ உணவு கொண்டு செய்யும் வழிபாடு,பரிகாரம் மட்டுமே பலனைத் தரும்.
இன்றைய நாளில் நம் குருநாதர் தரிசனம் பெற்று, பதிவைத் தொடர்வோம். மலேசியா (setia eco city) விலிருந்து ஸ்ரீ அகத்திய பெருமானின் அருளை நாம் அனைவரும் பெற்றுக்கொள்வோம்.
என்னப்பா? பதிவின் தலைப்பில் இன்னும் செல்லவில்லை என்று தோன்றுகிறதா? இது இன்று மாலை நடைபெற உள்ள சத் சங்கத்தை பற்றிய அறிவிப்பே ஆகும். இந்த தொற்று காலத்தில் அனைத்து ஆன்மிக அமைப்புகளும் பல்வேறு வழிகளில் தங்கள் சேவையைத் தொடர்ந்து வருகின்றார்கள். தஞ்சாவூர் சித்தர் அருட்குடில், திருஅண்ணாமலை தயவு சித்தாஸ்ரமம், சின்னாளப்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக் குடில், தென்காசி ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோயில், செங்கல்பட்டு ஸ்ரீ அகத்தியர் கோட்டம், மதுரை திருச்சுனை ஸ்ரீ அகத்தியர் கோயில், திருவள்ளூர் ஸ்ரீ ஆதி சிவன் ட்ரஸ்ட், மதுரை இறையருள் மன்றம், கூடிடுவாஞ்சேரி வள்ளலார் சபை, மயிலாதுறை ஓம்காரம் ட்ரஸ்ட் என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். இது போன்ற பல அமைப்புகள் அன்னதானம் செய்வதில் தொடங்கி மருத்துவ உதவியும் செய்து வருகின்றார்கள். இதில் மேலும் சில அமைப்புகள் இணைய வழியில் சத் சங்கம் செய்து வருகின்றார்கள்.
மௌனத்தில் அலைகளில் இருந்து இனி தொடர்வோம்.
ஸத் என்றால் உண்மை அதாவது மெய்ப்பொருள். சங்கம் என்றால் பற்றுதல், கூடுதல், கூட்டம் என்று பல பொருட்கள் உள்ளன. இதில் என்ன பிரச்சனை என்றால், யாரைக் கேட்டாலும் தாங்கள் உண்மையைத் தேடுவதாகவோ அல்லது தாங்கள் சார்ந்திருப்பது மட்டுமே உண்மை மற்றவை அனைத்தும் நிலையற்றவை, பொய்யானவை என்பார்கள். எனவே இதில் எந்த சத்சங்கத்தைக் கூடுவது என்று கோள்வி எழுகிறது. ஆனால், உண்மை எது என்பதை அறிந்தார் யாருமே இல்லை என்பதே மிகப் பெரிய உண்மை. நாம் மெய்ப்பொருள் குறித்து கேட்கிற அனைத்தைம் அனுமானங்களே. ஆயினும் மெய்ஞானிகளின் தரத்தை கருத்தில் கொண்டு அவற்றையே பிரமாணமாக ஏற்றுக் கொள்கிறோம். எனவேதான் இந்த மெய்ப்பொருள் குறித்த கோட்பாடுகளில் முரண்பாடு காணப்படுகிறது. உங்களுக்கு எது அடையாளப்படுத்தப்பட்டதோ, எந்த வழி உங்களுக்கு உகந்ததாக, ஏற்புடையதாகத் தோன்றுகிறதோ, அந்த வழியில் மெய்பொருளை உணர்ந்தவர்களோடு அல்லது தேடுபவர்களோடு கூடுவதே சத்சங்கம்.
எல்லா வழிகளும் மெய்ப்பொருளை நோக்கியே. எதற்காக சாதகர்களுக்கு இந்த சத்சங்கம் தேவை என்று சொல்கிறார்கள் என்றால், சாதனங்களுக்கிடையே ஏற்படும் தேக்கங்கள் மற்றும் ஐயப்பாடுகள் நீங்கித் தெளிவு பெற்றுக் கொள்வதற்காகவே. உலகாய பந்தங்களில் கட்டுண்டு கிடப்பவன் உண்மையை விட்டு விலகி அவித்தையில், அஞ்ஞானத்தில் மூழ்கிக் கிடக்கிறான். இந்த உலக பந்தங்களில் இருந்து விடுபட்டு மெய்ப்பொருளை அடைய நினைப்பவன் அதற்குரிய நல்லொழுக்கம் உடையவனாக தன்னை மாற்றி அமைத்துக் கொள்கிறான். அத்தகைய மேன்மக்களோடு கொள்ளும் இணக்கமே சத்சங்கம் எனப்படுகிறது. இதனால் அவித்தை, மற்றும் அஞ்ஞானம் விலகி பரம்பொருள் நாட்டம் அதிகரிப்பதோடு, நல்லொழுக்கம் உருவாகிறது. தனக்கோ, பிறர்க்கோ உடலாலோ, மனதாலோ தீங்கு செய்யாமல் வாழ்வதே சிறந்த நல்லொழுக்கமாகும்.
அத்தகையவர்கள் கூடும் சத்சங்கத்தையே நாம் கூடுவது நல்லதாகும். வள்ளுவப் பெருந்தகை கூறும் பொழுது,
''நிலத்தியல்பா னீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு''
என்பார். நீருக்கு நிறமோ, சுவையோ கிடையாது. எனினும் அது சார்ந்திருக்கும் வஸ்துவுடைய நிறத்தையோ, சுவையையோ கொண்டிருக்கும். அது போல மனிதன் பெற்றிருக்கும் அறிவும், ஒழுக்கமும் அவன் சார்ந்திருக்கும் கூட்டத்தினரின் அறிவையும், ஒழுக்கத்தையும் பொருத்தே அமையும்.
பட்டினத்தார் பாடும் பொழுது
''நல்லாரி ணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே
அல்லாது வேறு நிலையுள தோ ?''
என்று இறைவனிடம் கேட்பார்.
மாணிக்கவாசகப் பெருமான்
''உன்னடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய்''
என்று இறைவனிடம் வேண்டுவார். சிவ ஞான போதம் எனும் சைவ நூல்
''பத்தரினத் தனாய்ப்பரன் உணர்வினால் உணரும்
மெய்த்தவரை மேவாவினை''
என்கிறது.
எனவே இதையெல்லாம் பார்க்கும் பொழுது, மனிதன் மேன்மையடைய வேண்டும், நல்லொழுக்கம் உடையவனாக விளங்க வேண்டும் என்றால், மெய் உணர்வு பெற்றவர்கள், மெய்யுணர்வு வேண்டி தவ வாழ்வு மேற் கொள்பவர்கள் போன்றவர்களைச் சார்ந்து ஒழுக வேண்டும் என்பது புலனாகிறது. முதலில் மனிதன் மனிதனாக வாழ்வதற்கு நல்லொழுக்கம் உடையவர்களோடு கூடி வாழ வேண்டும். அவ்வாறு நல்லொழுக்கம் உடையவனாக வாழும் பொழுதுதான் அஞ்ஞானம் விலகி மனம் உள்ளதை உள்ளபடி உணர்த்தும்.
வசிஷ்டரிடம் இராமர் பிராணனுடைய சலனத்தை அடக்குவது எங்ஙனம் என்று கேட்ட பொழுது, அவர் சாஸ்திரங்களைக் கற்றுணர்தல், நல்லோர் இணக்கம், வைராக்கியம், அப்பியாசம், தவம் இவற்றால்தான் பிராணனின் சலனத்தை அடக்க முடியும் என்பார். எனவே சத்சங்கத்தை நாட வேண்டும். நல்லாரோடு கூட வேண்டும். உலகியல் சங்கிலிகளிலிருந்து நாம் நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும். மற்ற உலகாய சங்கங்கள் அனைத்தும் துர்ச்சங்கங்களேயாம். அவை என்றும் கெடுதலையே விளைவிக்கும். நம்முடைய அகங்காரம் அழிந்து, பேதமற்ற மனப்பாங்கு வளர்வதற்கு சத்சங்கம் உதவுகிறது. சத்சங்கம் ஆசையிருந்து நம்மை விடுவிக்கும். சம்சார பந்தங்களிருந்து விடுதலை அளிக்கும். சத்சங்கத்தால் நாம் நல்ல பல உபதேசங்களைப் பெறலாம். சத்சங்கம் ‘நான் யார்’ என்பதைக் கண்டுபிடிக்க நமக்கு உதவும். சத்சங்கம் தேக அபிமானத்தை நாசம் செய்யும். சத்சங்கம் பிறப்பிறப்பு சுழலை உடைக்கும். சத்சங்கம் உலக பந்தங்களை அறுத்து, மெய்ப்பொருளை அடைய வழிவகுக்கும். அப்படி அந்த மெய்ப்பொருளை நாம் அடைவதே உயர்வான, நிலையான, நிரந்தரமான சத்சங்கமாகும்.
நல்லொழுக்கத்துக்கு இன்னொரு வழி நல்லோர்
தொடர்பு. அது நேரடித் தொடர்போ,சொற்பொழிவுகளோ அல்லது புத்தகங்களோ ! ஏதோ
ஒன்று நம்மை நல்வழிக்கு மாற்றுவதாயிருந்தால் ஒழுக்கம் துளிர்விடத்
தொடங்கும்.
அவ்வை சொல்கிறார்,
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே – நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று
நல்லாரோடு இணங்கி இருப்பதற்கு சத்சங்கம் உதவி செய்கின்றது. இன்று பலவித சத்சங்கங்கள் இணைய வழியில் நடைபெற்று வருகின்றது. இன்று மாலை நடைபெற உள்ள வள்ளலார் மிசன் சார்பில் நடைபெற சத்சங்கத்தில் வள்ளலாரும் அகத்தியரும்! என்ற தலைப்பில் சிந்திக்க உள்ளார்கள். இதனை ஒட்டியே இந்த பதிவை பார்த்து வருகின்றோம்.
நம் தேடல் உள்ள தேனீக்களாய் - TUT குழு முதன் முதலில் சுமார் 10 நபர்களுக்கு அன்னதானம் என்றே ஆரம்பிக்கப்பட்டது. அடுத்து சித்தர்கள் வழிபாட்டில் நம்மை நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் வழிநடத்தி வருகின்றார். கூடுவாஞ்சேரி வள்ளலார் சபையும், கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் நம் குருநாதர் தரிசனமும் நம் குழுவிற்கு ஆசி வழங்கி வருவதை நம் கண்டு வருகின்றோம். இன்னும் சிறப்பாக சொல்வது என்றால் வள்ளலாரும், அகத்தியரும் நம் இரு கண்கள் ஆவர். பலமுறை நம் தளத்தில் வள்ளலார் பற்றியம், ஸ்ரீ அகத்தியர் பெருமான் பற்றியும் பேசி வருகின்றோம். இருப்பினும் தேனை சுவைக்க நேரம்,காலம் உண்டா என்ன?
நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி... தனிப்பெருங்கருணை அருட்பெருஜோதி...
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன் !
எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே என பேசும் போதெல்லாம் நமக்கு வள்ளலார் தான் வாழ்ந்து வருகின்றார்.
மிகப் பெரும் வாழும் சித்தர், மகான், வள்ளல். ஆன்மிகத்திற்கும் மட்டும்
அல்ல..அறத்திற்கும் வள்ளல். ஆன்மிகமே அன்னதானத்தில் தான் அடங்கி
இருக்கின்றது, ஒரு வேளை வயிற்றிற்கு சோறிடாது என்ன தான் ஆன்மிகம், அறம்
என்று உபதேசித்தாலும் அது விழலுக்கு இறைத்த நீர் தான். வள்ளலார் என்று
சொன்னாலே அன்னதானம் தான் நம் கண் முன் நிற்கின்றது. எத்துணை எத்துணை
சான்றோர் பெருமக்கள் இன்றும் அந்த அறப்பணியை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
வள்ளலாரும் அவர் தம் மார்க்கமும் பற்றி பேசுவது பெருங்கடலில் சென்று ஒரே
ஒரு நீர்த்துளியை எடுத்து பருகுவது போன்றதாகும்.
அருட்பெருஞ்சோதி ஆண்டவரை ஆராதனை செய்தவர். வாடிய பயிரை கண்டபோதெல்லாம்
வாடினேன் என முழங்கியவர். அந்த முழக்கமே வடலூரில் சத்திய தரும சாலையாய்
இன்றும் பசிப்பிணி தீர்த்து வருகின்றது. அவர் பிறப்பு முதல் எத்தனை எத்துனை
சம்பவங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. வள்ளலார் நமக்கு எப்படி
தெரிகின்றார் ? ஆன்மிகவாதி மட்டும் என்றால் அது மேலோட்டமாக உணர்வதே.
சிறந்த சொற்பொழிவாளர்,போதகாசிரியர்,உரையாசிரியர்,சித்தமருத்துவர்,பசிப்
பிணி போக்கிய
அருளாளர்,பதிப்பாசிரியர்,நூலாசிரியர்,இதழாசிரியர்,இறையன்பர்,ஞானாசிரியர்,அருளாசிரியர்,
சமூக சீர்திருத்தவாதி,தீர்க்கதரிசி,மொழி ஆய்வாளர் (தமிழ்) என்றெல்லாம்
உணர்த்தப்பட்டு வருகின்றார்.இதெல்லாம் சாதாரண மானிடனுக்கு வாய்க்குமா?
ஞானிகளுக்கு வாய்க்குமா?
அன்பு,கருணை ,இரக்கம், தயவு என்று அனைத்திற்கும் இலக்கணம் நம் வள்ளலார் தான் என்று சொல்லத் தோன்றுகின்றது.
அடுத்து நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமான் பற்றி சிறிது தொட்டுக்காட்ட விரும்புகின்றோம்.
விதியினிதான் நமக்கேது குறுமுனி நம் காப்பாமே!
பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்
எந்தையும் தாயும்
குருவடி பொற்றாள் சரண் சரணம்
கும்பமுனி குருவே சரணம்! சரணம்!!
அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம்
ஞானத்தேவே! வருக! வருக!!
மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே
மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு என்றெல்லாம் பேசும் போது நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமான் தான் நம்முடன் இருந்து வழிகாட்டுவதை உணர்ந்து வருகின்றோம்.
நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவானை
நீங்காதார் குலம் தழைக்க நிதியாவானை
செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்
சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை
வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர் என்று யுகயுகத்தும் தோன்றும்
அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!
நெஞ்சார
மனதில் நினைப்பவருக்கு நிழல் போன்று இருப்பவர்.அதாவது நிழல் என்றால்
பகலில் மட்டும் தெரியும்.இங்கே இரவு பகல் பாராது, நம்முடனே இருந்து வழி
காட்டும் அருட்குரு அகத்தியர்.நம் குலம் தழைக்க, செல்வம் மட்டும் தராமல்,
அதனோடு சேர்த்து மிக மிக முக்கியமான செல்வமான ஆரோக்கியமும் தருகின்ற அக
குரு ஆவார்.இதனை நாம் தற்போது கண்கூடாக உணர்ந்து அனுபவித்து
வருகின்றோம்.அகத்தியரின் நாமம் சொல்ல,சொல்ல நம் அகம் ஒளி பெறுகின்றது.அகம்
ஒளிர,ஒளிர புற செயல்கள் மிளிரும் என்பதே ஆன்றோர் வாக்கு. அகத்தில் உள்ள
ஈசனை உயிர்ப்பிக்க செய்தால் அகத்தியம் மிளிரும்.அகத்தியம் மிளிர அகத்தியர்
அருள் காட்டுவார்.
அடுத்த இன்று மாலை நடைபெற உள்ள சத்சங்க அழைப்பிதழை பகிர்கின்றோம்.
அருட்பெருஞ்ஜோதி
வள்ளலார் சன்மார்க்க ஞானசத்சங்கம்
வள்ளலாரும் அகத்தியரும்
தயவுதிரு.தம்பையா ஐயா அவர்கள்
6.00-8.00pm ( IST )
YouTube live
VALLALAR MISSION ORG
https://youtube.com/user/saintvallalar
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/4497966411?pwd=VFFwQVBQbGgwcVpCSmhQbVg1dDRYdz09
Meeting ID: 449 796 6411
Passcode : vallalar
+91 98940 10007
vallalarmission.org
நிகழ்ச்சி ஏற்பாடு
அருள்திரு.பாபு சாது
அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் அறக்கட்டளை
திருவண்ணாமலை
No comments:
Post a Comment