"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, June 12, 2021

ஸ்ரீஅகத்தியர் ஞானம் - ஓம் அகத்தியர் மலரடிகள் போற்றி

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நேற்று மூன்றாம் பிறை தரிசனம் அனைவரும் பெற்று இருப்பீர்கள் என்று விரும்புகின்றோம். இன்றைய பதிவில் ஸ்ரீஅகத்தியர் ஞானம் பற்றி சிறிது சிந்திக்க உள்ளோம். இதனை ஸ்ரீஅகத்தியர் உபதேசமாக கூட நாம் எடுத்துக் கொள்ளலாம். முதலில் ஞானம் என்றால் என்ன? இது தான் மிக மிக உயர்ந்த நிலை. நாம் தற்போது ஆன்மிகத்தில் அரிச்சுவடி படித்துக் கொண்டு இருக்கின்றோம். இதில் பக்தி என்ற நிலை தான் முதலில் கைக்கொள்கின்றோம். இங்கிருந்து தான் நாம் ஞானம் நோக்கி செல்ல வேண்டும். பக்தியின் உச்சம் ஞானம் என்று சொல்லலாம். ஞானத்திற்கு அடிப்படை என்றால் அது அன்பு மட்டும் தான். அன்பில் இருந்து தான் அகத்தியமும் தோன்றுகின்றது. இன்ப ஊற்றான இறைவனை தரிசிக்க வேண்டும் என்றால் அது அன்பால் தான் முடியும்.இதனை தான் நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் முதல் கொண்டு அனைத்து சித்தர்களும் போதித்து வருகின்றார்கள். இதனை தான் அனைத்து அருளாளர்களும் கூறி வருகின்றார்கள். 

இன்னொரு வழியில் பார்த்தால் ஞானம் என்பது எப்போது கிடைக்கும்? பெறுவதிலா? கொடுப்பதிலா? கொடுப்பதில் தான் என்று கூற முடியும். இது நாள் வரை நாம் பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றோம். ஆனால் பெறுவதில் என்ன பயன்? இன்னும் இன்னும் நாம் பக்குவப்படவில்லையே. ஆனால் கொடுத்து பாருங்கள். கொடுப்பதற்கு அருள் வேண்டும். இந்த அருளிற்கு அன்பு வேண்டும். எனவே கொடுப்பதற்கு அன்பு தான் தேவை. அன்பு இருக்குமிடத்தில் தான் கொடுக்கும் எண்ணம் வரும். இன்று நாம் பார்க்கும் பற்பல சேவைகள் அனைத்தும் அன்பில் இருந்து தான் பிறக்கின்றது. எனவே தான் மீண்டும் மீண்டும் அன்பு தான் ஞானதின் அடிப்படை என்று சொல்கின்றோம்.

இந்த அன்பின் வலைப்பின்னலில் தான் தேடல் உள்ள தேனீக்களாய் குழுவும் இயங்கி வருகின்றது. பற்பல வழிகளில் குருவருளால் கொடுத்து வருகின்றோம். வழக்கமான நம் தள சேவைகளை தொடர்ந்து வருகின்றோம். இம்முறை குருவருளால் 1000 கிலோ அரிசி வாங்கி அதனை பல ஆன்மிக அமைப்புகளுக்கு 100கி என பிரித்து கொடுத்துளோம். இவை அனைத்தும் உங்களால் தான் சாத்தியம். அடுத்து ஊரப்பாகத்தில் சுமார் 10 அன்பர்களுக்கு அன்னசேவை ஒரு நாள் செய்துள்ளோம். கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் பாதத்தில் என்றும் அவர் பதம் பற்றிட, லோக ஷேமத்திற்காக தீபமேற்றி வழிபாடு செய்துள்ளோம். தரிசன காட்சிகளை இங்கே பகிர்கின்றோம்.

                                               





அடுத்து இனி நம் குருநாதரின் உபதேசம் பெற இருக்கின்றோம். இது போல் பல சித்தர் பெருமக்கள் ஞானப் பாடல்களை வழங்கியுள்ளார்கள். இவை அனைத்தும் நாம் பொருள் கொண்டு விளங்கிக்கொள்ள குருவருள் வேண்டி நிற்க வேண்டும். பாடலின் இடையிடையே நம் குருவின் தரிசனமும் பெற்றுக் கொள்ளுங்கள்.




ஸ்ரீஅகத்தியர் ஞானம் 

சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம்
சகலவுயிர் சீவனுக்கு மதுதா னாச்சு;
புத்தியினா லறிந்தவர்கள் புண்ணி யோர்கள்
பூதலத்தில் கோடியிலே யொருவ ருண்டு;
பத்தியினால் மனமடங்கி நிலையில் நிற்பார்
பாழிலே மனத்தை விடார் பரம ஞானி;
சுத்தியே யலைவதில்லைச் சூட்சஞ் சூட்சம்
சுழியிலே நிலையறிந்தால் மோட்சந் தானே.



மோட்சமது பெறுவ தற்குச் சூட்சஞ் சொன்னேன்
மோசமுடன் பொய்களவு கொலை செய்யாதே;
காய்ச்சலுடன் கோபத்தைத் தள்ளிப் போடு
காசினியிற் புண்ணியத்தைக் கருதிக் கொள்ளு;
பாய்ச்சலது பாயாதே பாழ்போ காதே
பலவேத சாஸ்திரமும் பாரு பாரு;
ஏச்சலில்லா தவர்பிழைக்கச் செய்த மார்க்கம்
என்மக்கா ளெண்ணி யெண்ணிப் பாரீர் நீரே.



பாரப்பா நால்வேதம் நாலும் பாரு
பற்றாசை வைப்பதற்கோ பிணையோ கோடி;
வீரப்பா ஒன்றொன்றுக்கு கொன்றை மாறி
வீணிலே யவர்பிழைக்கச் செய்த மார்க்கம்;
தேரப்பா தெருத்தெருவே புலம்பு வார்கள்
தெய்வநிலை ஒருவருமே காணார் காணார்;
ஆரப்பா நிலைநிற்கப் போறா ரையோ!
ஆச்சரியங் கோடியிலே யொருவன் தானே!




கூடப்பா துரியமென்ற வாலை வீடு
கூறரிய நாதர்மகேச் சுரியே யென்பார்;
நாடப்பா அவள் தனையே பூசை பண்ணு;
நந்திசொல்லுஞ் சிங்காரந் தோன்றுந் தோன்றும்;
ஊடப்பா சிகாரவரை யெல்லாந் தோன்றும்;
ஊமையென்ற அமிர்தவெள்ளம் ஊற லாகும்;
தேடப்பா இதுதேடு காரிய மாகும்;
செகத்திலே இதுவல்லோ சித்தி யாமே




ஒருவனென்றே தெய்வத்தை வணங்க வேணும்
உத்தமனாய்ப் பூமிதனிலிருக்க வேணும்;
பருவமதிற் சேறுபயிர் செய்ய வேணும்
பாழிலே மனத்தை விடான் பரம ஞானி;
திரிவார்கள் திருடரப்பா கோடா கோடி
தேசத்திற் கள்ளரப்பா கோடா கோடி;
வருவார்க ளப்பனே அனேகங் கோடி
வார்த்தையினால் பசப்புவார் திருடர் தானே.



கற்பமென்ன வெகுதூரம் போக வேண்டா!
கன்மலையில் குவடுகளில் அலைய வேண்டா;
சர்ப்பமென்ன நாகமதோர் தலையில்நின்று
சாகாத கால்கண்டு முனை யிலேறி
நிற்பமென்று மனமுறுத்து மனத்தில்நின்று
நிசமான கருநெல்லிச் சாற்றைக் காணு;
சொற்பமென்று விட்டுவிட்டால் அலைந்து போவாய்;
துரியமென்ற பராபரத்திற் சென்று கூடே.

ஓம் அகத்தியர் மலரடிகள் போற்றி



மீண்டும் நம்மை நாமே திருத்திக் கொள்ள இறை கொடுத்த வாய்ப்பை தவற விட வேண்டாம்.

1. குருவின் பாதம் பிடியுங்கள்

2. கல்கண்டு தீபம் ஏற்றுங்கள். ( கல்கண்டு,ஏலக்காய்,கிராம்பு பொடி செய்து விளக்கில் சேர்க்க)

3. நமக்கு கிடைத்து வரும் ஒவ்வொரு நாளுக்கும் நன்றி சொல்லுங்கள்

4.  ஒவ்வொரு நாளும் ஒரு உயிருக்கு உதவி செய்ய விரும்புங்கள்

5.  தினசரி மாலை 6-7 மணி அனைவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்

6.  ஆரோக்யத்தை மேம்படுத்த உடற்பயிற்சி, யோகா என செய்யுங்கள்

7. கண்டிப்பாக சைவ உணவை கடைபிடியுங்கள். சைவ உணவு கொண்டு செய்யும் வழிபாடு,பரிகாரம் மட்டுமே பலனைத் தரும்.

ஓம் குருவே சரணம்! ஓம் குருமார்களின் பதம் போற்றி!!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

சிவசற்குரு கண்ணாயிரம் (எ) மெளனகுரு வீராசாமி சுவாமிகளின் 23-ஆம் ஆண்டு குருபூஜை - 07.06.2021 - https://tut-temples.blogspot.com/2021/06/23-07062021.html

ஸ்ரீ போகர் சித்தர் குரு பூஜை - 07.06.2021 - https://tut-temples.blogspot.com/2021/06/07062021.html

மண்ணே மருந்து; மலையே மருந்து - சித்தர்கள் வாழும் திருக்கச்சூர் கிரிவலம் - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post_3.html

வள்ளலாரும் அகத்தியரும்! - https://tut-temples.blogspot.com/2021/06/blog-post.html

திருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் 121 ஆவது குருபூஜை - https://tut-temples.blogspot.com/2021/05/121.html

அத்தியாச்சிரம சுத்தாத்வைத வைதிக சைவ சித்தாந்த ஞானபானு பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 92 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2021/05/92.html

No comments:

Post a Comment