அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இன்றைய நாளில் நால்வரின் பாதம்
பணிவோம் என்ற தலைப்பில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி
அடைகின்றோம். சென்ற மே மாதம் இதே போன்று தலைப்பில் ஒரு பதிவு கண்டோம். அன்றைய பதிவில் ஸ்ரீ மத் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள்,திருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள்,ஸ்ரீ சற்குரு நாத மாமுனி சுவாமிகள் ,ஶ்ரீலஶ்ரீ பழனி சாக்கடை சித்தர் என நான்கு அருளாளர்களின் தரிசனம் பெற்றோம். இதோ இன்றும் அதே போன்றதொரு தலைப்பில் இன்று நான்கு அருளாளர்களை பற்றி அறிய உள்ளோம்.
இன்று குருபூஜை காணும் மகான்கள்
1.கமலமுனி சித்தர் திரு நட்சத்திரம் - திருவாரூர் பெரிய கோயில்
2. ஸ்ரீலஸ்ரீ காளிமுத்து சுவாமிகள் - சதுரகிரி
3.சேக்கிழார் குருபூஜை - குன்றத்தூர் சென்னை
4.வல்லநாட்டு சித்தர் ஸ்ரீ சாது சிதம்பரம் சுவாமிகள் குருபூஜை விழா
இப்பொழுது பதிவின் தலைப்பு சரியாக இருக்கின்றது அல்லவா? சரி. இனி ஒவ்வொரு அருளாளர்களைப் பற்றி காண உள்ளோம்.
1. கமலமுனி சித்தர்
காப்பான கருவூரார் போகநாதர்
கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
மூப்பான கொங்கணரும் பிரம்மசித்தர்
முக்கியமாய் மச்சமுனி நந்தி தேவர்
கோப்பான கோரக்கர் பதஞ்சலியார்
கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர்
வாப்பான வாதத்திற்கு ஆதியான
வாசமுனி கமலமுனி காப்புத் தானே....
என்று பாடப்பட்டு வரும் சித்தர்கள் போற்றி துதித்து கமலமுனி சித்தரை போற்றுவோம்.
பதினெண் சித்தர்களுள் ஒருவராக கருதப்படுபவர் கமலமுனி சித்தர் ஆவார். குறவர் குடியில் வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர். மேலும் 4000 ஆண்டுகள் வாழ்ந்தார் என்றும், சிலர் இவரை நான்முகனே கமல முனியாக அவதரித்தார் எனக்கூறுவர். கருவூராரின் சீடராக இருந்தார் என்று சிலர் சொல்வதுண்டு. இவர் போகரிடம் சீடனாய் சேர்ந்து யோகம் கற்று சித்தர் கூட்டத்துள் ஒருவராய்ப் புகழ்ப் பெற்றார்.
“கமலமுனி முந்நூறு”, “ரேகை சாஸ்திரம்” முதலிய நூல்களை இவர் இயற்றியுள்ளார். காப்பான கருவூரார் என்று தொடங்கும் காப்புப்பாடல் கமலமுனி அருளியது. பாரத தேசத்தில் இருந்ததைக் காட்டிலும் சீனாவில் வெகுகாலம் இருந்ததாக போகர் கூறுகிறார். திருமூலர் இவரைக் காலங்கி , கஞ்ச மலையன் என பல பெயர்களில் குறிப்பிடுகிறார்.
சித்தர்களின் நூல்களை அரங்கேற்றம் செய்ய கமலமுனி சதுரகிரிக்கு வந்தார். மற்ற இடங்களில் அந்த நூல்களை வெளியிடாமல் சிலர் தடுத்ததால் சதுரகிரியில் வெளியிடும் எண்ணத்தோடு அங்கு வந்து சேர்ந்தார். ரோமரிசியை சந்தித்து நிகழ்ந்ததை கூற அவரும் எங்களுக்கு பரிபூரண சம்மதம் என்று கூறி அரங்கேற்றம் முடிவு செய்யப்பட்டது.
ரிஷிகள், தேவர்கள், சித்தர்கள் ஒன்று கூடி வெளிச்சம் நிறைந்த குகையில் நூலை அரங்கேற்றம் செய்தனர். சில சமயம் தம்மைத்தாமே மறைத்து வைத்து தவம் செய்வார். மற்றவரிடன் கண்ணில் படாமல் மறைந்துகொள்வார்.
திருவாரூரில் தியாகராஜர் (சிவன்) சுயம்பு மூர்த்தியாக அருள் தருகிறார். தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கெல்லாம் ராஜா என்று பொருள். கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி என்று போற்றப்படும் மிகப் பெரிய சிவாலயமும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடையத் தலம். தமிழகத்திள்ள தேர்களிலேயே திருவாரூர் தேர் தான் மிகவும் பெரியதாகவும், அழகாகவும் இருக்கும். கமலமுனி சித்தர் பீடம் அம்மன் மூலஸ்தானம் அருகே உள்ளது. சித்துக்களில் கமலமுனி நிகரற்றவர் என போகர் கூறுகிறார்.
காலாங்கிநாதர் சீன நாட்டில் சமாதி கொண்டிருப்பதாக பல இடங்களில் கூறியிருந்த போதிலும் போகர் ஜனை சாகரம் என்ற நூலில்,
“ஆதி என்ற சிதம்பரமே திருமூலரச்சு
அவருடன் பதினெண்பேரதிலே யாச்சு
சோதியென்ற காலங்கிநாதர் தாமும்
துலங்குகின்ற காஞ்சிபுரம் தண்ணிலேயாகும்” என்று கூறுகிறார்.
சீன முதலியவனம் எங்கெங்கு சுற்றிய போதிலும் , சமாதிகள் இருந்தபோதிலும் கடைசியாக முக்தி அடைவதற்கு தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்தார்கள் என்பதை இதிலிருந்து அறிய முடிகிறது.
திருமூலர் இவரைக் காலங்கி , கஞ்ச மலையன் என பல பெயர்களில் குறிப்பிடுகிறார்.
2. சேக்கிழார் பெருமான்
சேக்கிழார் என்பவர் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவ அடியார் ஆவார். இவர்
இரண்டாம் குலோத்துங்க சோழனின் அரசவையில் முதன்மை மந்திரியாக இருந்தவர்.
சோழன் சீவகசிந்தாமணி எனும் காமரசம் அதிகமுள்ள சமண நூலை படிப்பதனால்,
சோழனையும், மக்களையும் நல்வழிப்படுத்த சிவபெருமானின் அடியார்களான அறுபத்து
மூன்று நாயன்மார்களின் வரலாற்றை விளக்கும் திருத்தொண்டர் புராணத்தினை
இயற்றியவர் ஆவார்.
பெரியபுராணத்தைப் பாட தில்லையில் சிவபெருமானே உலகெல்லாம் என்று அடியெடுத்து
கொடுத்தாக நம்பிக்கையுண்டு. சிவத்தொண்டின் காரணமாகவும், மதிநுட்பத்தின்
காரணமாகவும் இவர் உத்தம சோழப் பல்லவன், தொண்டைமான், தெய்வப்புலவர்,
தெய்வச்சேக்கிழார் போன்ற பட்டங்களைப் பெற்றவர். உமாபதி சிவாச்சாரியார்
என்பவரால் சேக்கிழார் புராணம் எனும் நூலும், மீனாட்சிசுந்தரம் பிள்ளை
அவர்களால் சேக்கிழார் பிள்ளைத்தமிழ் எனும் நூலும் சேக்கிழாரை முன்வைத்து
இயற்றப்பட்டுள்ளன.
சே என்பதற்கு காளை என்றும் சேக்கிழார் என்றால் காளைக்கு உரியவர் என்று
பொருள் தருவதாகும். வெள்ளாளர்களில் காளையை வைத்து உழவுத்தொழில் செய்து
வந்தோர்களில் அமைச்சராகவும், சிவனடியாராகவும் சிறந்து விளங்கியமையால்
இயற்பெயரான அருண்மொழித்தேவர் என்பது மறைந்து சேக்கிழார் என்பதே பெயராக
அறியப்படுகிறது.
கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் தொண்டை நாட்டைச் சேர்ந்த புலியூர்க்
கோட்டத்தில் உள்ள குன்றத்தூர் என்னும் ஊரில் வேளாளர் மரபில் வெள்ளியங்கிரி
மற்றும் அழகாம்பிகை ஆகியோருக்கு முதல் மகனாக சேக்கிழார் பிறந்தார்.இவருக்கு
பெற்றோர் அருண்மொழித்தேவர் என்று பெயரிட்டனர். இவருக்கு பாலறாவாயர் என்ற
தம்பியும் இருந்தார்.
சோழநாட்டு அரசனான இரண்டாம் குலோத்துங்க சோழன் அநபாயசோழருக்கு கடலினும்
பெரியது எது உலகினும் பெரியது எது மலையினும் பெரியது என்ற கேள்விகள்
தோன்றின. அநபாய சோழரின் அமைச்சராக இருந்த சேக்கிழாரின் தந்தை இந்தக்
கேள்விகளுக்கு விடைதெரியாது தவித்த பொழுது, சேக்கிழார் விடையை அளித்தார்.
அதனை மன்னரிடம் கூறியமையால் சேக்கிழாருக்கு அமைச்சர் பதவியை அநபாய சோழர்
அளித்தார்.
சேக்கிழார்க்கு உத்தம சோழப் பல்லவன் என்ற சிறப்பு பட்டத்தினை தந்தார்
அரசன். சேக்கிழார் திருநாகேசுவரம் கோயில் இறைவன் மீது பற்று
வைத்திருந்தார். அதனால் குன்றத்தூரில் திருநாகேசுவரம் என்ற பெயரிலேயே
கோயிலொன்றினைக் கட்டினார்.
இரண்டாம் குலோத்துங்க சோழன் போர்களில் ஈடுபடாமல், கேளிக்கைகளில் மனதினை
செலுத்தியதாகவும், அதன் காரணமாக சமண முனிவரான திருத்தக்க தேவரால்
எழுதப்பெற்ற சீவகசிந்தாமணி எனும் நூலை படித்து இன்புற்றதாகவும் தெரிகிறது. சீவகசிந்தாமணி
என்பது களவிநூலாக இருந்தமையாலும், அந்நூல் இம்மைக்கும் மறுமைக்கும் துணை
செய்யாது என்பதையும் எண்ணி சேக்கிழார் வருத்தம் கொண்டு, மன்னனுக்கு
எடுத்துரைத்தார்.
மறுமைக்கு துணை புரியக் கூடிய சிவபெருமானின் தொண்டர்கள் வரலாற்றை
சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பெற்ற திருத்தொண்டர் தொகையிலிருந்து சோழ
மன்னனுக்கு சேக்கிழார் எடுத்துரைத்தார். அத்துடன் நம்பியாண்டார் நம்பி
அவர்களால் பாடல்பெற்ற திருத்தொண்டர் திருவந்தாதியையும் கூறினார். அவற்றைக்
கேட்ட சோழ மன்னன், நாயன்மார்களின் வரலாற்றை விரிவாக எடுத்துரைக்குபடி
சேக்கிழாரை வேண்டினான். அதன் காரணமாக சுந்தரமூர்த்தி நாயனாரையும், அவருடைய
நூலில் குறிப்பிடப்பட்டுள்ள அறுபத்து இரண்டு சிவத்தொண்டர்களின்
வரலாற்றையும் ஊர் ஊராக சென்று அதிக தகவல்களை திரட்டினார் சேக்கிழார். எழுதா
இலக்கியம் எனும் நாட்டுப்புற பாடல்களையும், கல்வெட்டுகளையும், அடியார்கள்
கதையும் கேட்டறிந்து, அவர்கள் வாழ்ந்த இடங்களுக்குச் சென்று குறிப்புகள்
எடுத்துக் கொண்டார்.
புராணம் இயற்ற தில்லை எனப்படும் சிதம்பரம் நடராசர் கோயிலுக்குச்
சென்றார். அங்கு சிவகங்கைத் தீர்த்தத்தில் நீராடித் தில்லை நடராசப்
பெருமானை வணங்கினார். பின்பு ஆயிரம் கால் மண்டபத்தில் அடியார்கள்
முன்னிலையில் இறைவன் "உலகெலாம்" என அடியெடுத்துக் கொடுக்க புராணம் பாடத்
தொடங்கினார். சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திர நாளன்று புராணம்
தொடங்கி, அடுத்த வருடம் சித்தரை மாதம் அதே திருவாதிரை நட்சத்திரத்தில்
புராணத்தினை முடித்தார். ஓராண்டு காலம் புராணம் இயற்றப்பட்டது. இந்நூலில்
திருத்தொண்டத் தொகையில் சுந்தர மூர்த்தியார் பாடியவாறே அடியார்களின்
வரலாற்றை அதன் வரிசையிலேயே பாடினார். அத்துடன் சுந்தரமூர்த்தியாரையும்,
அவரது பெற்றோர் சடையனார், இசைஞானியாரையும் நாயன்மார்களாக இணைத்துக்
கொண்டார்.
பெரிய புராணத்தில் இரண்டு காண்டங்களும், பதிமூன்று சருக்கங்களும்,
நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) பாடல்களும் உள்ளன. அதுநாள்
வரை சைவசமய இலக்கியங்களில் பதினொரு திருமுறைகள் இருந்தன. அதனுடன்
பன்னிரண்டாம் திருமுறையாக பெரியபுராணம் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
சேக்கிழார் பெரியபுராணத்தினை திருவாதிரை நட்சத்திரத்தன்று பாடி
முடிந்ததும், அரசன் வந்து அவரை தன்னுடைய பட்டத்து யானையின் மீது ஏற்றினார்.
பின்பு தானும் அந்த யானையின் மீது ஏறி, சேக்கிழாருக்கு வெண் சாமரம் வீசி
புராணத்தோடு ஊர்வலம் சென்றார். அடியார்கள் பின் தொடர்ந்து வந்தனர்.
தில்லையில் வாழ்ந்த அடியார்கள் பெரிய புராணத்தினை சிவபெருமானாக கண்டனர்
என்பது நம்பிக்கையாகும்.
3. வல்லநாட்டு சித்தர் ஸ்ரீ சாது சிதம்பரம் சுவாமிகள் குருபூஜை விழா

வல்லநாடு பாறைக்காட்டில் உள்ள சித்தர் பீடத்தில் மாதந்தோறும் பூச நட்சத்திரத்தில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பாறைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகசாது - உலகம்மை தம்பதியர். தெய்வபக்தி மிக்கவர்கள், ஏழைகளுக்கு மூலிகை மருத்துவம் செய்து வந்தனர். தம்பதியருக்கு வெகுநாளாய் குழந்தை பாக்கியம் இல்லை. எனவே ராமேஸ்வரத்திற்கு நடந்து சென்று சிவபெருமானை வணங்கி நின்றனர். இதன் பயனாக ஐப்பசி மாதம் அமாவாசைஅன்று சித்திரை நட்சத்திரத்தில், வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள் பிறந்தார். 3-வது வகுப்பு வரை படித்தார். ஏழ்மை காரணமாக வல்லநாடு மலையில் ஆடு மேய்க்க ஆரம்பித்தார். அப்போதே இவர் அனைத்து உயிர்களையும் நேசிக்க ஆரம்பித்தார்.
இவருக்கு நஞ்சு கக்கும் நாகப்பாம்பு ஒன்று நண்பன் ஆனது. இருவரும் ஒரே கலசத்தில் உணவு அருந்தினர். இதைக் கண்ட அவரது நண்பர்கள் அச்சமடைந்தனர். மலை மீது திடீரென்று தோன்றிய சித்தர் மூலம் உபதேசம் பெற்றார். இதை அறிந்த பெற்றோர், தங்கள் பிள்ளை தங்களைவிட்டு பிரியாமல் இருக்க திருமணம் செய்து வைத்து விடலாம் என்று யோசித்தனர். அதன்படி லட்சுமி என்ற பெண்ணை மணமுடித்து வைத்தனர். ஆனாலும் துறவறம் மேற்கொள்வதே என் எண்ணம் என்று முதல் நாள் இரவே அப்பெண்ணை பிரிந்து இல்லற துறவு பூண்டார். கணவனை தெய்வமாக போற்றிய அவரது துணைவியார், கணவன் ஈடுபட்டிருந்த ஆன்மிகப் பணியில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டார்.
சுவாமி ஏற்படுத்திய சமூகப் பணியிலும் சிறந்து விளங்கினார். சுவாமிகள் அன்னக்காவடி எடுத்து ஏழைக்கு அன்னதானம் வழங்கினார். இது அவரின் உறவினர்களுக்கு பிடிக்கவில்லை. பெரிய சமுதாயத்தில் பிறந்தவன் பிச்சை எடுப்பதா? என கண்டித்தனர். ஆனாலும் சுவாமி தொடர்ந்து பிச்சை எடுத்தார். எனவே அவரை கொலை செய்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் உறவினர்கள் சிலர் அவரது வீட்டுக்கு வந்தனர். அங்கு அவர் தனது உடலை எட்டு துண்டாக பிரித்து நவயோகம் செய்து கொண்டிருந்தார், *சிதம்பர சுவாமிகள். அதை கண்டவர்கள் யாரோ ஒருவர் நமக்கு முன்பு சுவாமியை வெட்டி கொன்று விட்டனர் என்று பயந்து ஓடினர். மறு நாள் ஊரார்களை கூட்டி வந்த போது, சுவாமி குளித்து விட்டு பூஜை செய்து, “என்ன சாமி நீங்க நினைச்சது நடக்கலையா?” என்று கேட்டாராம். காடுகளிலும், மலைகளிலும் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலை இவருக்கு மிகவும் பிடித்த இடமாகும்.
அங்கு மதம்பிடித்த யானை ஒன்றை, தனது பார்வையால் கட்டுப்படுத்தினார். அதன் பின் சுவாமி எப்போது சதுரகிரிக்கு சென்றாலும் அந்த யானை சுவாமியை பார்க்க வந்துவிடுமாம். யானை இறந்த பிறகு அதன் சிரசை, சட்டபடி வாங்கி பாறைக்காட்டில் உள்ள தனது தியானமடத்தில் தீபம் போட்டு வணங்க வைத்துள்ளார். சுவாமிகள் வேட்டியும் துண்டும்தான் அணிவார். எளிய தோற்றம் படைத்தவர்கள். எளிதில் எவரும் அருகே சென்று பேசலாம். ஆனால் காலைத் தொட்டு வணங்க மட்டும் சம்மதிக்கமாட்டார். தெரியாமல் யாராவது, அவரது காலை தொட்டு கும்பிட்டு விட்டால், அவரும் அதே போல் அந்த நபரின் காலில் விழுந்து வணங்குவார். இனிய வார்த்தைகளையே பேசுவார். அடிக்கடி மொட்டையடித்துக் கொள்பவர். மண்சட்டியில் சோறு போட்டு உண்ணுவார்.
மூலிகை மருந்தை ஏழைகளுக்கு இலவசமாக வழங்குவார். தமக்கு பணம் தர முயலுவோர்களுக்கு ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கச் சொல்வார். ‘அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை’ என்ற வள்ளலாரின் வாசகத்தைத் தனது வாழ்நாளில் நோக்கமாகக் கொண்டு மக்களை வழிநடத்தியவர். பல ஊர்களுக்கு சென்று பக்தர்களின் வீடுகளில் தீப வழிபாட்டினைச் செய்தார். அற்புதங்களை விளைவித்து அருள்வாக்குகளைத் தந்தார். சுவாமிகள் பெற்றோரைப் பேணியவர். வீட்டாருக்கும், வெளியாருக்கும் மகானாக விளங்கியவர்.
ஊனமுற்றோருக்கு தீபாவளிஅன்று எண்ணெய் தேய்த்து குளிக்க உதவிகள் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதற்காக பாளையங்கோட்டை காதுகேளாதோர் மற்றும் கண் தெரியாதோர் பள்ளிக்குசென்று வருவார். தொண்டர் குலத்தார் அப்பணியை தொடர்ந்து செய்து வருகிறார்கள். வல்லநாடு பாறைக்காட்டில் உள்ள சித்தர் பீடத்தில் மாதந்தோறும் பூச நட்சத்திரத்தில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. 1981-ல் வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தன்று சுவாமிகள் ஜோதியில் இரண்டறக் கலந்தார். அவரது உடல் தனது தாய் தந்தையர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகில் அடக்கம் செய்யப்பட்டது. இவ்விடத்தில் வந்து நின்றாலே நமது வினைகள் தீருகிறது. கேட்ட வரம் கிடைக்கிறது. சுவாமி ஜோதியில் கலந்த நாளில் குருபூஜை நடத்தப்படுகிறது. தை பூசத்தில் வள்ளலார் ஜோதியான நாளை முன்னிட்டும், வைகாசி பூசத்தில் சுவாமி ஜோதி ஆன நன்னாளிலும் 1008 தீப வழிபாடு நடைபெறுகிறது.
அன்னதான மகிமை:
ஏர்வாடியைச் சேர்ந்த முகமதியப் பெண் ஒருவர் தீராத வயிற்று வலியால் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார். சுவாமி அந்த பெண்ணின் வயிற்று வலியை போக்க அன்னதானத்தில் வந்து உணவு உண்ண கூறினார். அதுவரை சாப்பிடக்கூட முடியாத அளவிற்கு, தீராத நோயாக இருந்த அந்நோய் தீர்ந்தது. தற்போதும் கூட வல்லநாட்டு சித்தர் பீடத்திற்கு வந்து சுவாமியை வணங்கி விட்டு அன்னதானம் சாப்பிட்டால் பலதரப்பட்ட நோய்களும் தீருகிறது. இந்த சித்தர் பீடத்தில் தினமும் அன்னதானம் நடந்துவருகிறது.
சித்தர் அற்புதம்:
சாது சித்தர் சுவாமிகள், ஒரே சமயத்தில் இரு இடங்களில் இருப்பார். இப்படித்தான் ஒரு சமயம் நெல்லை அருகே ஒரு கிராமத்தில் தீப வழிபாட்டினை சுவாமி நடத்திக் கொண்டிருந்தார். அதே சமயம் அருகில் உள்ள ஆற்றில் ஒருவர் குளிக்க இறங்கியபோது தண்ணீர் அடித்து சென்று விட்டது. அங்கு வந்த சுவாமி அவரை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தார். காப்பாற்றப்பட்ட நபர் தீப வழிபாட்டு இடத்திற்கு வந்தபோது அங்கேயும் சுவாமி இருந்தார். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
அமைவிடம் :
வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமி பீடத்திற்கு செல்ல திருநெல்வேலி - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள வல்லநாட்டில் இறங்க வேண்டும். அங்கிருந்து கலியாவூர் செல்லும் சாலையில் 1 கிலோமீட்டர் தூரத்தில் பாறைக்காடு திருத்தலம் உள்ளது. வல்லநாட்டில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது.
4. ஸ்ரீலஸ்ரீ காளிமுத்து சுவாமி

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4000 உயரத்தில் உள்ள சதுரகிரி மலையில் அகத்தியர் முதலான பதினெட்டு சித்தர்களும், பல்லாயிரக்கணக்கான முனிவர்களும் தங்கித் தவம் மேற்கொண்டதாக நம்பப்படும் 'பூலோகக் கைலாயம்' என்று புகழப்படும் இம்மலையின் நாற்புறமும் மலைகளால் சூழப்பட்டு 'சதுரகிரி' எனத் திருநாமம் பெற்று விளங்கி வரும் இத்திருமலையில் அ/மி சுந்தரமகாலிங்கம், அ/மி ஆனந்தவல்லி அம்மனைத் தரிசிக்க வரும் பக்தர்கள்,இம்மலைகளில் நிறைந்துள்ள மூலிகைகளால் பல்வேறு நோய் நீக்கம் பெற்றும் குருவருளையும்,இறையருளையும் பெற்று மனம் நிம்மதி கொள்கின்றனர்.
அன்னையின் ஆசை:-
இவ்விதம் இறைவனைத் தரிசிக்க வரும் பக்தர்களின் ஆன்மப்பசி அடங்கியவுடன், மலை ஏறி வந்த பக்தர்களின் களைப்பை நீக்கியும், வயிற்றுப் பசியையும் போக்கி புத்துணர்வு தந்திடும் வண்ணம் இரக்கம் கொண்ட தாயுள்ளம் தான் ஸ்ரீலஸ்ரீ காளிமுத்து சுவாமிகள் ஈன்றெடுத்த அன்னை பத்ரகாளியம்மாள்.
தாயின் உள்ளத்தில் உதித்த எண்ணத்தைச் செயலாக்க பிள்ளையின் மனதில் பிறந்த திட்டமே 'அன்னதானத் திட்டம்' ஆகும்.
சதுரகிரி மலையின் மீது நடந்து செல்லவே தடுமாறும் கடினமான மலைப்பாதையில் சமையலுக்கு வேண்டிய சாமான்களைத் தலையில் சுமந்து சென்று மலைக் கோவிலில் தினமும் அன்னதானம் செய்ய சுவாமிகள் முடிவு செய்தார்கள். தம் முடிவின் பயனாய்த் தோன்றியதே ஸ்ரீ காளிமுத்து சுவாமிகளின் 'அன்னதான மடம்' ஆகும்.
கஞ்சி மடம்:-
ஸ்ரீ காளிமுத்து சுவாமிகள் 1976 ஆம் ஆண்டில் சதுரகிரி மலையில் துவக்க காலத்தில் அரிசிக் கஞ்சியும்,கூழும் வழங்கப்பட்டு வர 'கஞ்சி மடம்' எனப் பெயர் பெற்று, பின்பு சில காலம் கழித்து சுவாமிகளின் திருவுளப்பாங்கின்படியே தினமும் சுவையான சாம்பார், ரசம், கூட்டு வகைகளுடன் கூடிய சூடான சாதம் வழங்கப்பட்டு வருகிறது.
இன்றளவும் சுவாமிகளின் அன்னதான மடத்தில் உணவருந்துவதை ஒரு தேவப் பிரசாதமாகவே பக்தர்கள் கருதி வருகின்றனர்.
படி அரிசித்திட்டம்:-
இதற்கென சுவாமிகள் 'படி அரிசி'த் திட்டத்தை விருதுநகர் மாவட்ட பக்தர்களிடம் அறிமுகப்படுத்தினார்கள்.அதன்படி நம் இல்லங்களில் தாய்மார்கள் சமையல் செய்யும் போது ஒரு கைப்பிடி அரிசியை எடுத்துத் தனியே ஒரு பையில் "இது ஸ்ரீ சுந்தர மகாலிங்கத்திற்கு" எனச் சொல்லி தனியாகச் சேகரித்து வருவார்கள். அதனை சுவாமிகள் மாதமொருமுறை ஊருக்குள் வந்து சேகரித்துப் பின் அதனைத் தலைச்சுமையாகத் தாய் பத்ரகாளி அம்மாளுடன் சேர்ந்து சுமந்து சதுரகிரி மலை மீது எடுத்துச்சென்று அன்னதான மடத்தில் அன்னதானத்திற்கெனக் கொண்டு சேர்ப்பார்கள்.
இதுவே சுவாமிகளின் மனதில் உதித்த 'தானம் பெற்று தானம் வழங்கும்' திட்டமாகும். இன்றளவும் மலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் மனமுவந்து இம் மகத்தான கைங்கர்யத்திற்குத் தங்களால் இயன்ற காணிக்கையைக் கஞ்சி மடத்திற்குச் செலுத்தி வருகின்றனர்.
ஜீவ முக்தி:-
தானத்தில் சிறந்த தான அன்னதானத்தினை இட்டு 'அன்னதானச் சக்கரவர்த்தி' என்று அன்போடு அழைக்கப்பட்டு வந்த ஸ்ரீலஸ்ரீ காளிமுத்து சுவாமிகள் 10.06.2005 அன்று ஜீவ முக்தி அடைந்தார்கள்.
ஸ்ரீலஸ்ரீ காளிமுத்து சுவாமிகள் ஜீவசமாதி சுந்தரபாண்டியத்திற்கு அருகில் எஸ். ராமச்சந்திரபுரத்திலுள்ள ஸ்ரீ காளிமுத்து சுவாமிகளின் ஆசிரமத்திலேயே சமாதி பீடத்தின் மீது சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து ஜீவசமாதி அமைக்கப்பட்டுள்ளது
குருபூஜை:-
ஸ்ரீலஸ்ரீ காளிமுத்து சுவாமிகளின் குருபூஜை இன்று சதுரகிரி அருகில் சுந்தரபாண்டிக்கு அண்மையில் எஸ்.ராமச்சந்திரபுரத்திலுள்ள சுவாமிகளின் ஆசிரமத்தில் நடைபெறுகிறது.
ஓம் குருவே சரணம்! ஓம் குருமார்களின் பதம் போற்றி!!
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
No comments:
Post a Comment