அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
ஜீவ
நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில்
மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். நம் தளத்திற்கு முருகன் அருள் முன்னின்று
நடத்துவதால் தான், நாம் செய்யும் அனைத்து சேவைகளும் அற்புதமாக நடைபெற்று
வருகின்றது. 2021 ஆம் ஆண்டில் 108 தீபமேற்றி செய்த வழிபாடு
மற்றும் ஜனவரி 2ஆம் நாள் நடைபெற்ற கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய
வழிபாடு என ஒவ்வொரு நிகழ்விலும் நாம் நெக்குருகி போகின்றோம்.இவையனைத்தும் குருவருளாலே என்பது
நிதர்சனமான உண்மை.
நமது ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமார பீடத்தில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி பெருமான் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் சிவ ஸ்ரீ ஜெகதீஸ்வர ஈசான கண சிவம் அவர்களை ஆட்கொண்டு ஜீவநாடி மூலமும், அருள்வாக்கின் மூலமும் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டு இருக்கிறார். அந்த வகையில் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமார பீடத்தில் ஆதிசங்கரர் தோற்றுவித்த அறுசமய வழிபாடுகளையும் தோற்றுவிக்குமாறு ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி அருளாணை வழங்கியிருக்கிறார். திருப்பதி திருமலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாளும் சுவாமிகளின் கனவில் தோன்றி இங்கு எழுந்தருளி ஆசி தருவதாகவும் வாக்கு உரைத்திருக்கிறார். மகான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளும் இங்கு எழுந்தருளி ஆசி வழங்குவதாகவும் நமது சுவாமிகளுக்கு கனவில் உரைத்திருக்கிறார். ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தியின் அருளாணையின் படி ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி கௌமார பீடத்தில் ஸ்ரீ அவிநாசியப்பர், ஸ்ரீ கருணாம்பிகை தாயார், ஸ்ரீ நந்தீஸ்வரர், திருப்பதி ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள், ஸ்ரீ பத்மாவதி தாயார், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர், மகான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள், ஆகிய அனைத்து விக்கிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு சேலம் பெரிய புத்தூர் ஆதீனம் ஸ்ரீ ராஜலிங்க சிவாச்சாரியர் அவர்கள் தலைமையில் கார்த்திகை மாதம் 16 ம் தேதி (4/12/2020) அன்று காலை கும்பாபிஷேகம் இனிதே நடைபெற்றது.
இறைவன் மீது நம்பிக்கை இல்லாமல் ஜீவநாடி சொல்வதும், கேட்பதும்,நடைமுறையில் பலன்களைத் தருவதில்லை. நம்பிக்கைதான் முக்கியம்.
நம்பிக்கைதான் வாழ்க்கையின் தும்பிக்கை. ஆராய்ச்சி மனத்தோடு அணுகி இவர் எப்படி இதைச் சொல்கிறார்? எப்படி எழுத்துக்கள் தோன்றுகிறது?
என்று அலைபாயும் மனதுடனும், ஆதங்கத்துடனும், அங்கலாய்ப்புடனும் வருகின்றவர்களுக்கு ஜீவநாடி பாடம் புகட்டி விடுகிறது என்றே சொல்ல வேண்டும். கலியுகத்தில் யாரையும் நல்லவர் என்று நம்ப முடிவதில்லை.
நாடியை ஆராய்ச்சி செய்யும் நோக்கில் அணுகுவதும், அதில் என்ன மர்மம் உள்ளது என்பதை அறிந்துக் கொள்ள வருவதும் நடைமுறையில் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். என்னைப் பொறுத்தவரையில் என்னிடம் இருக்கும் ஜீவநாடி மந்திர நாடி அல்ல. சாட்சாத் முருகப்பெருமானின் ஆசியோடு சொல்கின்ற அருள்வாக்கு நாடி. தம்மை உண்மையோடும், பக்தியோடும், பக்குவத்தோடும் நாடி வருபவர்களுக்கு தேடிச் சென்று திருவிளையாடல்களை நடத்துகின்ற நமது ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தியின் வாக்கு இதுவரை பொய்த்தது கிடையாது.
இந்த தொடரை எழுதுவது கூட சுய விளம்பரமாகப் போய்விடுமோ என்று எழுதும் முன்பு யோசித்தேன். பொய்யைச் சொன்னால் தானே விளம்பரமாகப் போகும். உண்மையை, உணர்ந்ததை ஊரரியச் சொல்லுவதில் எந்த வித தவறும் இல்லை என்று அறிவுறுத்தியது. எனது குரு சக்திவேல் அடிகளாரும், ஆசிரியர் ஸ்ரீராஜு ஐயா அவர்களிடமும் ஆரம்பம் முதலே பல இரகசியங்களைப் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் கொடுத்த ஊக்கம் தான் இதை எழுதத் துடிக்கும் தாக்கம் எனக்கு ஏற்பட்டது. இந்த தாக்கம் தான் அனைவருக்கும் ஒளிவு மறைவுமின்றி வெளிப்படுத்திடும் வாய்ப்பு கிட்டியது. அனுபவித்தவர்களின் ஆர்ப்பரிப்பான ஆதங்க வெளிப்பாடுகள் ஏராளம், ஏராளம். இந்த தொடரை ஆவலோடுஎதிர்பார்க்கும் வாசகர்கள் ஏராளம் விரும்பிப் படிக்கின்றவர்களும் தாராளம்.
இதைப் படித்த பின்பு உடனடியாக என்னைச் சந்திக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். தற்போது அதற்கான கால அவகாசம் இல்லை என்பது தான். வாய்ப்பு கிடைக்கும் போது முறையாக அறிவிப்பு செய்கிறேன். அதன்பின்பு தடையில்லாமல் சந்தித்துவிடை காணலாம். வாழ்வின் வெற்றிக்கு தடையில்லா நிலை காணலாம். தடம் மாறாமல் வாழ்வில் வளம் பெறலாம்.
சரி..இனி இன்றைய அற்புதம் காண செல்வோமா?
ஒரு மிகப் பெரிய நகைக்கடையின் அதிபர் தனது மகள் திருமணம் பற்றி கேட்க வேண்டும் என்று என்னிடம் அனுமதி வாங்கி ஒரு நாள் வந்து
சந்தித்தார். பெரிய கோடீஸ்வரன் என்றே சொல்லும்படியான தோற்றம் தெரிந்தது. பலவரன் பார்த்தும் படியவில்லை ஐயா தாங்கள் தான் இதற்கு
ஒரு தீர்வு சொல்ல வேண்டும் என்று வந்தார். சரி கந்தன் விட்ட வழி என்று சுவடியைப் பூஜித்து பிரித்து படித்தேன். பின்வரும் விஷயம் பாடலாக வந்தது.
“கச்சிதமாய் முடியும்
காலமது கனியும்
கந்தனது ஆசிகள்
கனிவாக உண்டுண்டு
கவலைகள் தேவையில்லை
கட்டழகு கொண்டவன்
கன்னியை விரும்பி வந்து
கைப்பிடிப்பான் அஞ்சேல்
கவலைகள் வந்ததுவும்
கஷ்டங்கள் வந்ததுவும்
காட்சிகளங்கே கண்டதும்
காணுகின்ற அக்னி ஸ்தலம்
கச்சிதமாக ஏகியங்கு
கந்தனின் தந்தை நாமம்
கொண்டதன் அடியார்கள்
காவி பூஜை செய்து பின்
கச்சிதமாய் வில்வமொன்றை
கந்தனை தொழுது நட்டுவா
நலம் என்றோம் நலம்!
ஆசி! ஆசி! ஆசி!”
ஸ்ரீஞானஸ்கந்தர் நாடியில் வாக்கு தந்தது ஸ்ரீஅகத்தியர்.
முருகப் பெருமானது வாக்கு வராமல் அகத்திய மகரிஷி வாக்கு தந்தார்.எந்த நேரத்தில் யாருக்கு யார் சொல்ல வேண்டும் என்ற விதி இருக்கிறது என்பதால் யார் வாக்கு தந்தாலும் அதை உரைப்பது மட்டுமே எமது பணி. சித்தர்கள் ஆசி இருப்பதால் பணத்தின் மீது ஆசை எனும் பேய் என்னைப்
பிடிக்காததால் தூய்மை இருக்கிறது. எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்பதால் வாய்மை இருக்கிறது. வாக்கு பலிக்கிறது. கேட்பவர்கள் வாழ்வு சிறக்கிறது. அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை சென்று சிவனடியார்களுக்கு மகேஸ்வர பூஜை செய்து பின்பு வில்வமொன்றை பிரதிஷ்டை செய்து
வந்தால் கந்தனது ஆசியால் விரைவில் திருமணம் நடக்கும் என்று வாழ்த்தி முருகனது ஆசி இருப்பதாகவும் கூறி ஆசி கொடுத்தார் அகத்தியர்.
முகமலர்ச்சியோடு ஆசி வாங்கிச் சென்றார்கள்.
திருவண்ணாமலையைப் பொறுத்தவரை அடியார்கள் அதிகம். யாருக்கு தானம் செய்தாலும் சிறப்புதான். ஆனாலும் சிவனை சிந்தையில் வைத்து சிவ நாமத்தை உச்சரித்து சிவவேடம் பூண்டு இருக்கும் உண்மையான சிவனடியார்களுக்கு பூஜை செய்து, போஜனம் செய்து ஆசி வாங்குவது
முடிகின்ற காரியமா? என்ற யோசனை வரும். உண்மைதான் பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்பது பழமொழி. ஆசி வாங்குவதும் அப்படித்தான்
இதற்கு ஒரு விடை கொடுக்கும் வகையில் திருவண்ணாமலையில் ஓர் ஆசிரமம் சிறப்பான சேவை செய்து வருகிறது. எனது குருநாதர் ஸ்ரீவகாப் ஜோதி அக்பர் சுவாமிகளின் ஆசியோடு அவர் அறிவுறுத்தலின் பேரில் ஸ்ரீசரவணபவா சுவாமிகளின் தொடர்பு கிடைத்தது. மீனாட்சி நாடியின்
அற்புதங்களையும், நமது ஞானஸ்கந்தர் நாடியின் அற்புதங்களையும் பல ஆண்டு எழுதலாம். அவ்வளவு விஷயங்கள் இருக்கிறது. ஸ்ரீ ஜோதி அக்பர் சுவாமிகள் யாரையும் அவ்வளவு எளிதில் நெருங்க விட மாட்டார்
அவரிடம் முருகப் பெருமானும், மீனாட்சியும் உரையாடி வருவது என் அனுபவத்தில் கண்டுக் கொண்ட உண்மை. ஜோதி அக்பரின் ஆசியால் அன்னை வாராஹி தேவியே எனக்கு காட்சி கொடுத்து என்னிடம் உரையாடி இருக்கிறாள் என்றால் சுவாமியிடம் இன்னும் எத்தனை அதிசயம் உண்டோ அறியேன். என்னைப் பொறுத்த வரையில் எனது முன் ஜென்ம பலனால் கிடைத்த பொக்கிஷம் ஸ்ரீ ஜோதி அக்பர் சுவாமிகள் அவர்கள்.
ஸ்ரீ வகாப் ஜோதி அக்பர் சுவாமிகள் ஸ்ரீ சரவணன் சுவாமிகளை அறிமுகம் செய்து வைத்தார். பொள்ளாச்சியில் இருந்து அண்ணாமலைக்கு இளமை காலம் முதலே வந்து சரணாகதியடைந்தவர். சரவணன் சுவாமி வள்ளலார் பேரில் அன்பு பூண்டு அவர் மார்க்கத்தில் நிற்பவர். பல
சித்தர்களுக்கு அன்னம் படைத்து அவர்களின் ஆசியையும், அன்பையும் பெற்றவர். இப்படி பல சிறப்புகளைக் கொண்ட இவர் செய்யும் மகேஸ்வர பூஜையை கண்ணால் கண்டு தொழும் பாக்கியம் கிடைக்கப் பெற்றேன்.
எத்தனை அடியார்களுக்கு அன்னதானம் செய்து பூஜை செய்ய வேண்டும் என்று முன் கூட்டியே சொல்லி விட்டால் அத்துணை அடியார்களுக்கும் தகவல் கொடுத்து பூஜைக்குத் தயார் செய்து விடுவார். அவர் அழைக்கும் அடியார்கள் உண்மையான சிவனடியார்களாக இருப்பார்கள். அவர்களை வரிசையாக அமர வைத்து இலை போட்டு அறுசுவை உணவு படைத்து அடியார்கள் நமசிவயா வாழ்க... நாதன் தாள்
வாழ்க... என்று சிவபுராணம் ஓதி பூஜை செய்பவர்களுக்கு ஆசி வழங்கி பின்பு அன்னம் உண்டு செல்வார்கள். இது போன்ற பூஜை சாதாரணமாக யாரும் செய்து விட முடியாது. பிராப்தம் உள்ளவர்கள் தான் செய்ய முடியும்.
இன்றைய பதிவில் இத்துடன் முழுமை செய்கின்றோம். அன்பர்கள் அனைவரும் அருள் பெரும்பொருட்டு ஸ்ரீ ஞானஸ்கந்த பீடத்தின் தரிசன காட்சிகளை பதிவின் இடையும், இனியும் தருகின்றோம்.
ஒவ்வொரு முறை நாம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை முருகப் பெருமான் அருள் பெற்று ஜீவ நாடி அற்புதத்தை இங்கே பெற்று வருவோம். இங்கே நாம் மனம் பதித்து முருகப்பெருமான் தரிசனம் பெறும் போது நம் மனம் மத்தாப்பாய் சிரிக்கும். குருநாதர் தரிசனம் நேரில் இங்கே பெற்று வரும் போது உள்ளம் உவகையுறும்.
கடந்த
இரண்டு ஆண்டுகளாக நாம் தொற்றுக்கிருமி கட்டுப்பாட்டில் இயல்பு
வாழ்க்கையில் இருந்து விலகி, பல தடைகளோடு அன்றாட வாழ்க்கையில் இருந்து
வருகின்றோம். இப்படி ஒரு அசாதாரண சூழலை நாம் சந்திக்க போகின்றோம் என்று
எதிர்பார்க்கவில்லை. இந்த சூழலில் இந்தப் பதிவின் மூலம் அனைவரும் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி அருள் பெற வேண்டி பிரார்த்தனை செய்கின்றோம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!
அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்
மீள்பதிவாக:-
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 43 - அந்தநாள் >> இந்த வருடம் - [2021-22] - https://tut-temples.blogspot.com/2021/04/43-2021-22.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 42 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2021/01/42.html
No comments:
Post a Comment