"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, September 16, 2019

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை

முருகன் அருள் முன்னிற்க!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். நம் தளத்திற்கு முருகன் அருள் முன்னின்று நடத்துவதால் தான், நாம் செய்யும் அனைத்து சேவைகளும் அற்புதமாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நிகழ்விலும் நாம் நெக்குருகி போகின்றோம். சென்ற வாரம் செங்கல்பட்டில் உள்ள செம்மலை முருகன் செல்ல வேண்டி வீட்டிலிருந்து கிளம்பினோம். நம் நண்பர் சத்யராஜை நம்முடன் இணைய அழைத்தோம்.வழியில் செல்லும் போது தான், குருவருள் நம்மை ஒளஷதகிரி செல்ல பணித்தார்கள். அதென்ன ஒளஷதகிரி என்று நீங்கள் கேட்பது நம் காதில் விழுகின்றது.

கூடுவாஞ்சேரி வந்து சுமார் 5 வருடங்களாகி விட்டது. ஏற்கனவே இரண்டு முறை ஒளஷதகிரி செல்ல முயற்சித்து பலனில்லை. இம்முறை நம் குருநாதரை வணங்கிக் கொண்டே இருந்தோம். அப்போது தான் குருநாதர் ஒளஷதகிரி பற்றிய அருளிய ஜீவ நாடி வாக்கு கிடைத்தது. இதோ அப்படியே பகிர்கின்றோம்.




இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால் அஃதொப்ப ஆப்பூர் கிரி என்று யாம் பலரையும் அங்கு செல்ல அருளாணை கூறியிருக்கிறோம். அங்கே எம்பெருமான் பெருமாள் வடிவிலே அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். முன்பு ஒருவன் ஓங்கி உரத்த குரலில் புலம்பினானே, ( பெண்களுக்கு ) திருமணம் ஆகவில்லை என்று, அந்த ஆப்பூர் கிரிக்கு சென்று நல்ல முறையிலே குறிப்பாக சுக்ர வாரம், எத்தனை முறை இயலுமோ அத்தனை முறை அங்கு சென்று மானசீகமாக பிரார்த்தனை செய்து, அங்குள்ள வானரங்களுக்கு நிறைய உணவுகளைத் தந்து வேண்டிக்கொண்டு வந்தாலே திருமண தோஷம் நீங்கும். அடுத்தபடியாக ‘ நாங்கள் சுக்ர வாரம் சென்றோம். ஆலயம் திருக்காப்பிட்டு இருக்கிறது. என்ன செய்வது ? ‘ என்று எம்மை நோக்கி வினவினால் அதற்கு நாங்கள் என்ன செய்ய இயலும் ? பலரும் வந்து தட்சிணை நிறைய வந்தால்தான் ஆலயத்தைத் திறக்க இயலும் என்பது மனிதர்களின் நிலை. ஆனால் ஆலயம் திறந்திருந்தாலும், சாத்தியிருந்தாலும் பக்தன் ஒருவன் பரிபூரண சரணாகதியோடு சென்றால் இறைவன் அருள் உண்டு என்பது எமது வாக்கு. எனவே ‘ வெள்ளிக்கிழமை செல்ல இயலவில்லை ஐயா. எனக்கு அனலிவாரம்தான் விடுப்பு இருக்கிறது ‘ என்றால் தாராளமாக அன்றும் செல்லலாம். உலகியல் ரீதியான எத்தனையோ சிறப்புகளில், திருமண தோஷம் நீங்குவதற்கும், திருமணத்திற்கு பிறகு கருத்து வேறுபாட்டால் பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேர்வதற்கும், குழந்தை பாக்கியம் தருவதற்கும், லோகாயத்திலே சுக்ரனின் அனுக்ரஹம் வேண்டும் என்று எண்ணக்கூடியவர்கள் செல்ல வேண்டிய ஸ்தலங்களில் அதுவும் ஒன்று. அதையும் தாண்டி, இன்றும் 64 சித்தர்கள் அரூபமாக அங்கு தவம் செய்து கொண்டிருக்கிறார்கள். முழுமதி தினமான பௌர்ணமி அன்று அங்கு சென்று மானசீகமாக வேண்டினால் வாய்ப்புள்ள பக்தர்களுக்கு, ஆத்மாக்களுக்கு ஒளி வடிவில் சித்தர்கள் தரிசனம் தருவார்கள். எனவே அது ஒரு சித்த பூமி, ஜீவ பூமி, அது ஒரு மூலிகை வனம். அங்குள்ள மூலிகைகளில் பட்டு வருகின்ற சுவாசக்காற்று மனிதர்களின் பிணிகளை போக்க வல்லது.





என்ன அன்பர்களே..ஒரு முறை படித்து விட்டீர்களா? இது போதாது. மீண்டும் மீண்டும் படித்து மனதில் ஒற்றி வையுங்கள்.சரி இனி ஆப்பூர் மலை தரிசனம் பெறலாமா?

ஒளஷதகிரி தரிசனம் பெறலாமா?


சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து ஒரகடம் செல்லும் வழியில் திருகச்சூரை அடுத்த கிராமம் ஆப்பூர்மலை உள்ளது. சிங்கப்பெருமாள் கோயிலிலிருந்து ஒரகடம் செல்லும் சாலை வழியே செல்லும் போது ஒரு மலையில் யாரோ வெள்ளை கோடு போட்டது தெரிந்தது.உடனே அங்கே சென்று விசாரித்தோம். அங்கே இருந்தவர்கள் வழி காட்டினார்கள்.




அந்த வழியாக நாங்கள் சென்றோம். பக்கத்தில் சென்றதும் அப்பப்பா..என்ன அழகு..மலையேற்ற பாதை பார்க்கவே ரம்மியமாக இருந்தது.



அருகில் செல்ல செல்ல ஆச்சர்யம் தாங்கவில்லை. அப்படி ஒரு அழகு..இங்கு முழுதும் படிகள் தான். பர்வதமலை, சதுரகிரி மலை, குருமலை, மிருகண்ட மகரிஷி மலை என ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். இங்கும் நமக்கு ஆச்சரியம் தான். 5 ஆண்டு கால காத்திருப்பில் மலை தரிசனம் என்றால் அவர் அருளாலே அவர் தாள் வணங்க வேண்டும் என்பது புரிந்தது. செம்மலை முருகனை தரிசிக்க கிளம்பினோம். ஆனால் குருவருள் நம்மை ஆப்பூர் மலைக்கு இட்டுச் சென்றது.


ஏற்கனவே கூறியது போல், இந்த மலை மிகவும் விசேஷமானது. ஆப்பூர் என்று சொல்வதை விட ஒளஷதகிரி என்று சொல்வது சாலப் பொருந்தும். வாயு பகவான் ஸ்ரீ ஆஞ்சநேயர் தூக்கிய சஞ்சீவி மலையின் ஒரு பகுதி என்றும் இன்றளவும் இமயமலை யோகிகள் இங்கு தவம் செய்து வருவதாகவும் சொல்லப்பட்டு வருகின்றது. அதற்கான பதாகையும் அங்கே அடிவாரத்தில் உண்டு.






அப்படியே மலை ஏற புறப்பட்டோம். படி இருப்பதால் மலை ஏற வசதியாக உள்ளது . சற்று நெட்டுகுத்தாக தான் மலை உள்ளது. ஒரே மூச்சில் ஏறுவது சற்று கடினம். நம்மோடு நம் அன்பர் சத்யராஜ் வந்திருந்தார். பொறுமையாகவே சென்றோம். ஆங்காங்கே இளைப்பாறி தான் மலை ஏறினோம். இங்கு மதியத்திற்கு மேல் தரிசனம் கிடையாது. எனவே வெயில் உச்சி செல்லும் முன்பு ஏறுவது சிறப்பு. நாம் மலை ஏறிய போது சிலர் தரிசனம் முடித்து கீழே இறங்கி கொண்டு வந்தார்கள்.








பெருமாள் நாமம் சொல்லிக்கொண்டே மலை ஏறினோம். பார்க்க பச்சை பசேலனே இருந்தது. அந்த பசுமையை வெண்ணிறம் பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருந்தது. நாமும் ஒரு 10 மணி அளவில் மலை ஏறிக்கொண்டு இருந்தோம். அதிகமாக தளர்ச்சி பெற வில்லை. இங்கு சித்தர்கள் காட்சி கிடைக்கும் என்பது நம் குருநாதரின் வாக்கு. எனவே மலை ஏறும் போதும், மலையின் மேலும் சரி..சத்தத்தைக் குறைத்து பேசுவது நல்லது.

அங்கே இருந்த ஒரு கல்லில் நாமம் போட்டு இருந்தார்கள். அட..நம் நெற்றியிலும் இட வேண்டும் என்று தோன்றியது.









சரியாக 500 படிகள் இங்கே உள்ளது. நாம் இதுவரை தரிசித்த மலை யாத்திரையில் இங்கு மட்டும் தான் முழுதும் படிகள் உள்ளது. நேரம் 10:30 எட்டி இருக்கும். லேசாக களைப்பு தோன்றியது. அப்போது தான் அட..கோயிலின் அருகிலே வந்துவிட்டோம் என பார்க்கும் போதே தெரிந்தது. கோயிலின் கோபுரம் தெரிய ஆரம்பித்தது.


கோயிலின் கோபுரம் பார்த்ததும் களைப்பு நம்மை விட்டு நீங்கியது. மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது. இங்கு சற்று நேரம் இளைப்பாறலாம் என்று நண்பர் சத்யராஜ் சொன்னார். சரி..என்று சொல்லிவிட்டு நாம் படியில் நின்று கொண்டு இருந்தோம்.



அங்கிருந்து ஒரு 10 படிகள் மட்டும் கற்கள் தெரிய இருந்தன. ஏதேனும் ஒரு மிக முக்கிய விழாவில் நமக்கு கிடைக்கும் பரிசு பொருளை பிரிக்கும் போது நம் மனம் எப்படி இருக்கும். அது போல் தான் கோயிலை எட்டிப் பார்த்து பார்த்து மகிழ்ந்தோம்.

இதுவரை சிவ பெருமானைத் தான் மலை யாத்திரையில் தரிசனம் செய்து இருக்கின்றோம். இது முதன் முதலாக பெருமாளின் மலை யாத்திரை தரிசனம்.  அரியும் சிவனும் நமக்கு ஒன்று தான். தற்போது அகத்தியர் தம் சீடர்களுக்கு பெருமாள் வழிபாட்டை மேற்கொள்ள சொல்லி இருக்கின்றார். எனவே நமக்கு தித்திப்பாக இருந்தது.

கோயில் குருக்களை சந்தித்த பின்னர், நித்ய பூசைக்காக உலக நன்மை வேண்டி நம் தளம் சார்பில் சிறு தொகையாக ரூ1000 கொடுத்துள்ளோம். ஆவணி திருவோணம் அன்று சிறப்பு பூசை செய்ய குருக்களிடம் கூறி உள்ளோம். திருமணத்தடை உள்ளவர்கள்,இல்லற வாழ்வில் பிரச்சினை உள்ளவர்கள் நம்மை தனியே தொடர்பு கொள்ளவும். அவர்களுக்கு ஆப்பூர் பெருமானிடம் பிரார்த்தனை சமர்ப்பிக்க உள்ளோம்

மேலே ஆப்பூர் பெருமான் தரிசனம் மற்றும் ஏனைய செய்திகளை அடுத்த பதிவில் தருகின்றோம். அதுவரை பொறுமை காக்கவும்.

முகவரி:

ஆப்பூர் சென்னை சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து ஒரகடம் செல்லும் வழியில் திருகச்சூரை அடுத்த கிராமம் ஆப்பூர்மலை.


- மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html


ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html


கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

2 comments:

  1. Replies
    1. தங்களின் கருத்திற்கு தலை வணங்குகின்றோம். நன்றி ஐயா

      Delete