"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, September 24, 2019

பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2)

TUT தள வாசகர்களே.

இதோ சதுரகிரி மலை ஏற்றம் என்ற இந்தப் பதிவின் மூலம் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம். நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்று சொல்வார்கள். இது நூற்றுக்கு நூறு உண்மை. சதுரகிரி யாத்திரை மூலம் இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தோம். இப்போது நினைத்துப் பார்த்தாலும் மெய் சிலிர்க்கிறது. அந்த இறை அனுபவத்தை காணும் முன்பு, சதுரகிரி பற்றி சில தகவல்கள் அறிவோம். 

சதுரகிரி - இயற்கை அன்னையின் ஆற்றல் களம், சித்தர்களின் பொக்கிஷம், சித்தர்களின் அரசாங்கம், மூலிகைக் காட்டின் சங்கமம், நீர்நிலைகளின் ஆதாரம், ஐம்பூதங்களும் ஆர்ப்பரிக்கும் ஆன்மிக பூமி, திருஅண்ணாமலையாரை அடுத்தும் நம்மை அதிகளவில் ஈர்க்கும் இடம் என்றால் அது சதுரகிரி என்றே சொல்ல விரும்புகின்றோம். சதுரகிரி கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 ஆதி உயரமும், 66 ஆயிரம் ஏக்கர் பரப்பளவும் கொண்ட மலை. என்ன தான் இருக்கின்றது சதுரகிரியில் என்று கேள்வி கேட்கும் உள்ளங்களுக்கு இதோ கீழே உள்ள செய்திகள் நமக்கு புரிய வைக்கும் என்று நம்புகின்றோம்.

 1. சதுரகிரியை பூலோக கைலாயம் என்று அழைக்கின்றார்கள். ஏனெனில் சிவபெருமான் - உமா தேவி திருமணம் காட்சியை அகத்தியர் சதுரகிரியில் காண விரும்பி, அத்தனை தெய்வங்களும் தேவாதி தேவர்களும் திருமணத்தை முன்னிட்டு ஒரு சேர இங்கே, சிவனாரின் திருமணக் கோலம் கொண்டமையால் பூலோக கைலாயம் என்று அழைக்கப் படுகின்றது.


2. சிவபெருமானே சித்தராக வடிவெடுத்து, பச்சைமால் என்ற பக்தருக்கும், சுந்தரானந்தர், சட்டைநாதர்க்கும் காட்சி தந்து, சுயம்பு லிங்கமாய் உள்ள இடமே மகாலிங்கம் ஆகும்.

 

3. அகத்தியர் சதுரகிரியில் வாசம் செய்கின்ற போது, நித்ய பூஜைக்காக ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார், இதுவே சுந்தர மகாலிங்கம் ஆகும்.

4. அன்னை சிவபெருமானின் சரிபாதி ஆக தவம் செய்த இடம் இங்கே தான். தவ முடிவில்இருவரும் அர்த்த நாரீஸ்வரராக காட்சி கொடுத்ததும் இங்கே தான்.

5. அன்னை பிரதிஷ்டை செய்த லிங்கமே சந்தன மகாலிங்கமாக இங்கு உள்ளது. ( நினைத்தால் மனம் சிலிர்க்கிறது , பயணம் அனுபவத்தில் தொடர்வோம் )

6. இலங்கைப் போரில் லட்சுமணனின் உயிர் காக்க அனுமன் சஞ்சீவி மலையை எடுத்து வந்த போது, சஞ்சீவி மலையின் ஒரு பாகம் விழுந்து, இங்கே மூலிகை வனமாக உள்ளது

7. மரணமில்லா பெறுவாழ்வு வாழ உயர்த்தும் காயகல்ப மூலிகைகள் இங்கே உள்ளது. (இது போன்ற விஷயங்களில் ஈடுபடும் போது  தக்க சற்குருவின் துணை நாடவும் )




8. சிவனும், விஸ்ணுவும் ஒன்றே என்று சிவபெருமான் "சங்கர நாராயணனாக" காட்சி அளித்து,இரட்டை லிங்கமாக சதுரகிரியில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார்.

இது போல் எண்ணற்ற செய்திகள்,சித்தர் பாடல்கள் சதுரகிரியின் பெருமையை பறை சாற்றிக்கொண்டு வருகின்றது.இதோ அகத்தியர் சொல்லும் செய்தி

"கேளடா சதுரகிரியின் வளமைதன்னை
காண்பவர்க்கு கெதிமோட்சங் கிட்டுங்கிட்டுங்
ஆளடா சதுரகிரி எண்கோணமாகும்
அருளான கோணமெல்லாம் குகைதானுண்டு
சூளடா கிரிமுடியில் குகைதானுண்டு
சொன்ன குகை ஒன்பதிலும் நவசித்தர்
தளடா சிறப்புடனே தவசுபண்ணி
தன்னருளால் பிர்மமய மானார்பாரே"

எட்டு கோணங்களை உள்ளடக்கிய மலையே சதுரகிரி. இந்த எட்டு கோணங்களிலும் மலை உள்ளது, இந்த எட்டு மலைகள், சதுரகிரி மலை உச்சி என ஒன்பது இடங்களில் குகைகள் உண்டு. இந்த குகைகளில் நவகோடி சித்தர்கள் சிறப்பாக தவம் செய்து வருகின்றார்கள். சிலர் பிரம்மம் உணர்ந்து அதன் மயமாய் உள்ளார்கள். இந்த ஒன்பது குகைகளை தரிசிப்பவர்களுக்கு மோட்சம் கிட்டும் என அகத்தியர் தம் சீடர் புலத்தியருக்கு கூறுகின்றார். கேட்கும் போதே மனதுள் ஒருவித சூட்சும உணர்வில் நாம் உள்ளோம் அல்லவா? இதுபோல் எத்துணை செய்திகள் உண்டோம்? சித்தர்கள் தான் அருள் செய்ய வேண்டும்.

நாம் சதுரகிரி யாத்திரை செல்ல முடிவு செய்ததும், இல்லை இல்லை அவர் தான் நம்மை அழைத்தார். வழக்கம் போல் நம் TUT குழு உறவுகள் சுமார் 14 பேர் என திட்டமிட்டோம். ஆனால் நம் அனைவர்க்கும் தெரியும். கடந்த நவம்பர் மாதம் மலை எப்படி இருந்தது என்று? பயணத்தை மாற்றவும் திட்டமிட்டோம். பின்பு அனைவரும் ஒன்று சேர்ந்து, சித்தர்களிடம் வேண்டி, சரியாக ஒரு வாரத்திற்கு முன்பு, தினசரி பிரார்த்தனை செய்தோம். அந்த நாளும் வந்தது. இதோ சென்னையில் இருந்து மதுரை பயணம்.சனிக்கிழமை காலை சுமார் 5 மணி அளவில் மதுரை இறங்கி, அனைவரும் திருமங்கலம் செல்ல தயார் ஆனோம். திருமங்கலம் இறங்கி தாணிப்பாறை செல்ல தயாரானோம். சுமார் 30 நிமிடம் காத்திருந்தோம். இதோ..ஒரே பேருந்தாக தாணிப்பாறை சிறப்பு பேருந்து கிடைத்தது. கூட்டம் இருந்தது. சுமார் 2 மணி நேரம் பயணம். ஏற்கனவே அனுபவம் உள்ளவர்கள் அப்படியே சதுரகிரியாரைப் பற்றி பேசிக் கொண்டு வந்தார்கள். கேட்க கேட்க பிரமிப்பாய் இருந்தது. நமக்கு இது முதல் பயணம், எனவே மனத்துள் பிரார்தித்துக் கொண்டே சென்றோம்.

தானிப்பாறையை நெருங்க ,நெருங்க ஆச்சர்யம் நம்மை தொற்றியது. பேருந்தும் தாணிப்பாறை அடிவாரம் செல்லாமல் சுமார் 2 கி.மீ தள்ளி இறக்கி விட்டார்கள், இறங்கியதும் நம் கண்ணில் பட்டது அன்னதானம் தான். அங்கேயே அடிவாரத்தில் ஏகப்பட்ட அன்னதானக் கூடங்கள், மடங்கள் இருந்தது,




தூரத்தில் இருந்து அழுத்திய காட்சிகள் மேலே. இங்கே தான் செல்ல இருக்கின்றோம், எல்லாம் அவன் அருள் என்று மனத்துள் வைத்து, அன்னதானத்தில் வழங்கி கொண்டிருந்த தயிர் சாதத்தை ஒரு பிடி பிடித்தோம். கையில் தடியுடன் நடக்க ஆரம்பித்தோம். நம்முடன் வந்த மகளிர் அணியினர் அனைவரும் தடி வைத்துக் கொண்டார்கள். பார்ப்பதற்கு அனைவரும் ஞானத் தாயாக காட்சி அளித்தனர்.

இதோ தாணிப்பாறை அடைந்து விட்டோம். இனிதான் அதிரடி ஆரம்பம்.



அடுத்த பதிவில் மீண்டும் பயணிப்போம்.

No comments:

Post a Comment