"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.
Showing posts with label திருச்சிராப்பள்ளி. Show all posts
Showing posts with label திருச்சிராப்பள்ளி. Show all posts

Tuesday, August 1, 2023

திருமந்திரம் 3000 முற்றோதுதலும்! மணப்பாறை, அருள்மிகு சௌந்தர்யநாயகி உடனாய ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில் தரிசனமும்!!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் தளத்தில் சென்ற மாதம் திருமந்திரம் 3000 முற்றோதுதல் பற்றிய அழைப்பிதழ் பகிர்ந்து இருந்தோம். குருவருளால் நாம் நேரில் சென்று திருமந்திரம் முற்றோதுதலில் கலந்து அருள் பெறும் வாய்ப்பு கிட்டியது. பொதுவாக முற்றோதுதல் என்றாலே திருவாசக முற்றோதுதல் தான் நாம் கண்டு,கேட்டு இருக்கின்றோம். ஆனால் ஞான நூல்கள் அனைத்தையும் முற்றோதுதல் செய்வது நம் மரபு என்று கூறலாம்.அந்த வகையில் சென்ற மாதம் நடைபெற்ற முற்றோதுதல் அருள்நிலைகளையும், நாம் நேரில் தரிசித்த ஆலய தரிசனத்தையும் (மணப்பாறை, அருள்மிகு சௌந்தர்யநாயகி உடனாய ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில் ) இன்றைய பதிவில் காண இருக்கின்றோம்.


அன்றைய தினம் சுமார் காலை 9 மணி அளவில் மணப்பாறை, அருள்மிகு சௌந்தர்யநாயகி உடனாய ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயிலை அடைந்தோம். மலைக்கோயில் என்பதால் நமக்கு இன்னும் ஈர்ப்பு உண்டானது. மேலும் நம் குருநாதர் ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில் என்றதும் நாம் மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். சிறிய மலைக்கோயில் தான் என்றாலும் மிக வெகுவாக ஆற்றல் இருப்பதை உணர்ந்து கொண்டோம்.





இதோ கோயிலின் உள்ளே நுழைய இருக்கின்றோம்.


நாம் கொஞ்சம் தாமதமாகத் தான் சென்றோம். நாம் சென்ற நேரத்தில், முற்றோதுதல் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தது.. முதலாம் தந்திரம் ஓதிக் கொண்டு இருந்தார்கள்.


நாமும் திருமந்திர புத்தகத்தை கொண்டு, அவர்களோடு சேர்ந்து ஒவ்வொரு மந்திரமாக படிக்க ஆரம்பித்தோம். திருமந்திரத்தை பாடல் என்றோ, பதிகம் என்றோ சொல்லக்கூடாது. மந்திரம் ஒவ்வொரு பாடலையும் மந்திரம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் நூலின் பெயர்  அது தானே. மேலும் படிக்க படிக்க நமது மனதை திறப்படுத்தி விடும் என்பதாலும் திருமந்திரம் என்று கூறி வருகின்றோம். பின்னர் அங்கே திருமூலர் பெருமான் கண்டு, வழிபாடு செய்தோம்.







திருமூலர் பெருமானை காண, காண கண்கள் குளிர்ந்தது. திருமந்திரத்தை கேட்க, கேட்க இன்பம் கொண்டோம். ஐம்புலன்களும் நம்மை சிவபரம்பொருளின் பேரருளில் திளைக்க வைத்தது. பின்னர் மீண்டும் திருமந்திரம் படிக்க ஆரம்பித்தோம்.



சுமார் 9 மணி அளவில் காலை உணவாக பொங்கல், இட்லி என உண்டோம். வயிற்றுக்கு உணவாகவும், செவிக்கு உணவாக திருமந்திரமும் என்ற நிலை தொடர்ந்த வண்ணம் இருந்தது. 


அடுத்து ஆலய தரிசனம் காண்போமா?

கோயிலினுள் உள்ளே சென்றதும் நந்தியெம்பெருமான் தரிசனம் பெற்றோம்.



அங்கே உள்ள மண்டபத்தில் தான் திருமந்திரம் 3000 முற்றோதுதல் நடைபெற்றுக் கொண்டிருந்தது.




மிக அமைதியான, இயற்கை வளம் சூழ்ந்த, மரங்கள் சூழ்ந்த, சிறு குன்றின் மேல் அமைந்துள்ள பழமையான சிவாலயம்.பார்ப்பதற்கு கண்ணைக் கவரும் அமைதியான அற்புதமான ஆலயம்.இந்த புராதனமான மலைக்கோவில் பல்வேறு இறை இரகசியங்களை தன்னுள் கொண்டு விளங்குகின்றது.இங்கு இறைவன் ஸ்ரீ அகத்தீஸ்வரர் சுயம்புவாக உள்ளார்.நல்ல அழகான தோற்றம்.இறைவி ஸ்ரீ வடிவுடை நாயகி பெண் குலத்திற்கு பல்வேறு நல்ல வரங்களை அருளும் தாயாக உள்ளார்.தாய்மைப்பேறு வேண்டுவோரும்,அடைந்தோரும் வாழ்வில் ஒருமுறையாவது கட்டாயம் வழிபடவேண்டிய கோவில்.




தற்போது தான் கும்பாபிஷேகம் நிறைவு பெற்றதால் கோயில் நம்மை இன்னும் பல வண்ணங்களில் கவர்ந்தது. பல வண்ணங்கள் நம் எண்ணங்களை கவர்ந்தது. இது நம் மனதையும் , எண்ணங்களையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது என்றே கூறலாம். மலைக்கோயில் வேறு என்பதும் , குருநாதர் தரிசனம் பெற்ற கோயில் என்பதும் கூடுதல் சிறப்பாக நாம் கருதினோம்.





கோயில் வாயில் அருகில் மதிய உணவு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள்.



ஸ்ரீதண சிருஷ்டி ரகசியத்தை ஸ்ரீ அகத்திய பெருமானுக்கு அம்பாள் சொன்ன திருத்தலம் இது.இங்குள்ள அம்பாள் சன்னிதியின் கோபுரத்தில் ஸ்ரீதண சக்ரம் இருப்பதாக ஒரு ஐதீகம்.இங்கு சூர்ய பகவானும் சந்திர பகவானும் தனித்தனி கருவறையில் ஒரே மண்டபத்தில் மிக அருகில் இருவரும் உள்ளனர்.இது ஒரு வித்தியாசமான அமைப்பு.இங்கு முருகப்பெருமான்,பைரவர்,நவகிரகங்கள்,நந்தி,சண்டிகேஸ்வரர் மற்றும் கோஷ்டத்தில் உள்ள ஸ்ரீ மகாவிஷ்ணு தேவர் சிலை ரூபங்கள் மிக தத்ரூபமாக உள்ளது.கோவில் மலையைச் சுற்றிலும் மரங்கள்.கோவில் பிரகாரத்தை சுற்றும்போது அத்துணை ரம்யம், அழகு மற்றும் அமைதி.இதை இங்கு வழிபடும் ஒவ்வொரு வரும் நன்கு உணரலாம்.

அகத்தீஸ்வரர் பாட்டு கண்டு மகிழ்ந்தோம். பாடி, படித்து மகிழ்ந்தோம்.





மதியம் சுமார் 2 மணி அளவில் அன்னம்பாலிப்பு நடைபெற்றது. அறுசுவை உணவு மிக சுவையாக இருந்தது. மறுபுறம் முற்றோதுதல் தொடர்ந்த வண்ணம் இருந்தது. 


மதிய உணவை முடித்து மீண்டும் நாம் ஒரு முறை ஆலய தரிசனம் செய்தோம்.




இங்கு கன்னிமூலை கணபதி நீண்ட பிரகாரத்தில் உள்ளார்.கோஷ்டத்தில் உள்ள ஸ்ரீ தக்க்ஷணாமூர்த்தி மிக அழகாக உள்ளார். இவருக்கு எதிரே உள்ள தூனில்தான்  ஸ்ரீ தாயுமான சுக சித்தர் உருவம்  உள்ளது.இவரை வணங்குவது போல எதிரே உள்ள தூணில் பெண் உருவம்.தாயுமான சுக சித்தர் இந்த ஆலயத்தில் நெடுங்காலும் தவம் இயற்றி வந்துள்ளார்.இவர் இடுசுரை கர்ப்பம் என்ற தவ வலிமை கொண்டவர்.இவர் இந்த தவ வலிமையைக் கொண்டு கர்ப்பம் தாங்க முடியாதவர்கள்,கருச்சிதைவு ஆகுபவர்களது கருவினை தனது வயிற்றுக்கு மாற்றிக்கொண்டு சில நாட்கள் கழித்து மீண்டும் அந்தக் கருவினை உரிய தாயின் கர்ப்பத்திற்குள் குழந்தையாக மாற்றி விடுவார்.இந்த அற்புத தவப்பயனைக் கொண்டு பல்வேறு தாய்மார்களுக்கு நல்அருள் புரிந்துள்ளார்.இந்த உத்தம சித்தபுருஷரை இன்றும் நாம் இந்த கோவிலில் கோஷ்டத்தில் உள்ள ஸ்ரீ தக்க்ஷணாமூர்த்திக்கு எதிரே உள்ள தூணில் தரிசிக்கலாம்.






வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று ஓதி மகிழ்ந்தோம்.













சுமார் மாலை 5 மணி அளவில் ஒன்பதாம் தந்திரத்தில் உள்ள திருமந்திரம் ஓதிக்கொண்டு இருந்தோம். அப்போது ஒரு சிவன் அடியார் சிவ நடனம் புரிந்தார். சுமார் 30 நிமிடம் சிவத்திரு.சந்திரசேகரன் ஐயா ஆடிய சிவநடனம் நம்மை மெய் சிலிர்க்க வைத்தது. 




பின்னர் நாம் சிவ மல்லிகா அம்மையாரிடம் கூறிவிட்டு, அங்கிருந்து திருச்சியில் உள்ள திருமூலர் தரிசனம் பெற அங்கிருந்து புறப்பட்டோம். நிறைவாக கலந்து கொண்ட அன்பர்களுக்கு இனிப்பு,காரம் கொடுத்தார்கள். அன்றைய தினம் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்பது போல் திருமந்திரம் 3000 முற்றோதுதலும்! மணப்பாறை, அருள்மிகு சௌந்தர்யநாயகி உடனாய ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில் தரிசனமும்!! ஒரு சேர ஒரே நாளில் பெற்றோம். 

திருமூலர் அருளிய திருமந்திரம் பாராயணம் செய்வோம். திருமந்திரத்தையே வாழ்க்கையெனக் கொண்டு சிவத்தை பூஜித்து வாழ்வோம்! 


இறைவன் : ஸ்ரீ அகத்தீஸ்வரர்

இறைவி      : ஸ்ரீ வடிவுடை நாயகி

மாவட்டம்    : திருச்சி

பழமை   : சுமார் 1500 வருடங்களுக்கு மேல்

கோவில் முகவரி மற்றும் தொடர்புக்கு

அருள்மிகு ஸ்ரீ வடிவுடைய நாயகி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம்

ஆண்டார்கோவில் பஸ் நிறுத்தம்,

திருச்சி-மணப்பாறை செல்லும் வழியில்  மணப்பாறையில் உள்ளது.

மணப்பாறை 

திருச்சி மாவட்டம்.

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!


அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_31.html

திருவாசகம் முற்றோதுதல் - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில், நெடார் கிராமம், தஞ்சாவூர் - 06.08.2023 - https://tut-temples.blogspot.com/2023/07/06082023.html

வீரபாண்டி - ஸ்ரீ அகத்தியர் குரு பீடம் - திருவாசகம் முற்றோதல் பெருவிழா - 23.07.2023 - https://tut-temples.blogspot.com/2023/07/23072023.html

திருவாசகத் தேன் பருகலாம் வாரீர் - https://tut-temples.blogspot.com/2022/01/blog-post_10.html

திருவாசகத் தேன் - 01- சிவபுராணம் - https://tut-temples.blogspot.com/2022/02/01.html

பிரார்த்தனை எனும் மகா சக்தி!  - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_17.html

இறைப்பணியாக குருவருளால் நீர் மோர் சேவை! - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_9.html

சத்தியத்தைப் பேசு, தர்மத்தை கடைப்பிடி! - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post.html

மயிலேறி விளையாடு குகனே...புல் வயல்நீடு மலைமேவு குமரேசனே... - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_29.html

 பசித்தோர் முகம் பார்; பரம்பொருள் அருள் கிட்டும்  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_27.html

 கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகஸ்தியர் - ஆனி ஆயில்யம் வழிபாடு - 22.06.2023  -  https://tut-temples.blogspot.com/2023/06/22062023.html

 அருள்மிகு ஸ்ரீ சற்குரு சுவாமிகள் - 113 ஆம் ஆண்டு குருபூஜை விழா (19.06.2023 முதல் 21.06.2023 வரை) - https://tut-temples.blogspot.com/2023/06/113-19062023-21062023.html

 திருமூலர் அருளிய திருமந்திரம் 3000 முற்றோதல் (ஞான வேள்வி) - 18.06.2023  - https://tut-temples.blogspot.com/2023/06/3000-18062023.html

 அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_16.html

 ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_14.html

 தேடிக் கண்டுகொண்டேன் - திருஅங்கமாலை  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_13.html

 ஒருவன் என்னும் ஒருவன் காண்க - வான் கலந்த மாணிக்கவாசகர் மலரடி போற்றிகள்!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_11.html

Thursday, February 13, 2020

பாடல் பெற்ற தலங்கள் (10) - வரம் தரும் வயலூர் முருகன்


இறை அன்பர்களே...

பாடல் பெற்ற தலங்கள் என்ற பதிவு நம் தலத்தில் கண்டு வருகின்றோம். அந்த வகையில் திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில், திருநெடுங்களம்,திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில்,திருமூக்கீச்சரம் பஞ்சவர்ணேசுவரர் கோயில்,திருஆனைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில், அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் கோயில், திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்,உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில் என பார்த்தோம். இதில் அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் கும்பாபிஷேகத்திற்கு காத்துக் கொண்டிருக்கின்றார். கும்பாபிஷேக அழைப்பிதழ் நமக்கு கிடைத்து விட்டது.  விரைவில் அறிவிப்பு செய்கின்றோம். பாடல் பெற்ற தலங்கள் வரிசையில் சைவத் தலங்களாக பார்த்து வருகின்றோம். சைவம்,வைணவ பாகுபாடு நமக்கேது? இந்த தொடர்பதிவிலேயே வைணவத்தலங்கள், திருப்புகழ் தலங்கள் என தொடர விரும்புகின்றோம்.

அந்த வரிசையில் இன்று வரம் தரும் வயலூர் முருகன் அருள் பற்ற விழைகின்றோம்.

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று சொல்வார்கள். அந்த வரிசையில் வயலூர் முருகன் குன்றில் இருப்பார் என்று கற்பனை செய்து கொண்டு சென்றோம். ஆனால் நம் கற்பனை தவறானது என்று அங்கு சென்று கண்டோம்.திருச்சியில் இருந்து மேற்கே சுமார் 12 கி.மீ தொலைவில் இருக்கின்றது வயலூர். வயலூருக்கு செல்லும் பாதை முழுதும் வயல் சூழ்ந்து காணப்படுகின்றது.அதனால் தான் வயலூர் என்று பெயர் உருவானதோ? என்று நினைக்க தோன்றுகின்றது.





இக்கோயில் முருகப் பெருமானுக்காகச் சிறப்புற்றதாகும். கௌமார வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக முருகப் பெருமானின் அடியாரான அருணகிரிநாதர் பாடிய தலமாகவும் திருமுருக கிருபானந்த வாரியார் போற்றிய தலமாகவும் இது விளங்குகிறது 
இந்த திருத்தலத்தின்பெருமை ஞானம் விளையும் திருத்தலம் என்பது. ஆ என்ற காமதேனுவும், சோமன் வழிபட்ட சோமரசம்பேட்டையும் சூழ இருக்கிறது வயலூர். இங்கு கந்தன் தனது வேலால் குத்தி ஒரு திருக்குளத்தை உருவாக்கி தந்தையாகிய சிவபெருமானை வழிபட்டதாக கூறுகிறது புராணம். அக்னித்தீர்த்தம் என்று அழைக்கப்படும் அந்த தீர்த்தம் அக்னித்தேவனும் வழிபட்டதால் ஆலயத்தின் சிவபெருமான் அக்னீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். தேவி முன்னிலை நாயகி என்று அழைக்கப்படுகிறார்.





உறையூரை தலைநகராக கொண்டு சோழர்கள் ஆட்சி செய்த காலம் அது.. வேட்டைக்குச்சென்ற சோழ மன்னன் தாகத்தோடு ஓரிடத்தில் அமர, அங்கு 3 கிளைகளுடன் காட்சி தந்ததாம் ஒரு கரும்பு. அதனை ஒடித்தபோது ஒரு கரும்பில் இருந்து ரத்தம் கொட்ட பதறிப்போனான் மன்னன். உடனடியாக அந்த இடத்தைத் தோண்ட அங்கு லிங்க ரூபத்தில் எழுந்தருளினார் சிவபெருமான். அவருக்கு கோயில் கட்ட நினைத்த மன்னனின் ஆசை ஈடேறவில்லை. அதன் பின்னர் சிறு கோயிலாக எழுந்தது இந்த ஆலயம்



'அருளில் சீர் பொய்யாத கணபதி
திருவக் கீசன் வாழும் வயலியில்
அழகு கோயில் மீதில் மருவிய பெருமானே '

இந்த பாடலின் அழகும் அருணகிரி நாதரின் வாக்கும் இனிமையே இங்குள்ள முருகனைப்போல. வயலூரின் சிறப்பே, அருணகிரிநாதருக்கு முருகன் மயில் மீது அமர்ந்து காட்சி கொடுத்து திருப்புகழ் பாட வைத்ததுதான். சும்மா இரு. சொல்லற என்று சொல்லி, வா என் புகழ் பாடு என அருள் சுரந்து அருணகிரிநாதருக்கு முன்மொழிந்து தந்த இடம் வயலூர் என்கிறது இந்த கோயிலின் தல வரலாறு. அவர் இங்கு நீண்டகாலம் தங்கியிருந்து முருகப்பெருமானை வழிபட்டு, பாடி பரவசப்பட்ட இடம் இந்த வயலூர்.

அருணகிரிநாதர் மட்டுமல்ல, ஞானவரோதயர் என்ற அடியாருக்கு அருள் புரிந்த திருத்தலம். இந்த ஞானவரோதயர், கந்தபுராணத்தில் 7 ஆவது காண்டமாகிய உபதேச காண்டம் பாடியவர். விராலிமலைத் தலப்புராணமும் இவர் பாடியிருக்கிறார்.தாய், தந்தையை வழிபட்டு அனைவருக்கும் வழிகாட்டுகிறான் இந்த வயலூர் முருகன். அதனால் கோயிலுக்குள் சென்றதும் நாம் எதிர்கொள்வது சிவ சொரூபமே..பிள்ளையாரப்பாவுக்கு இல்லாத முதல் வணக்கமா? இந்த திருத்தலத்தில் உள்ள கணபதி பொய்யாக்கணபதியாக பெயர் கொண்டுள்ளார். இவரிடம் வேண்டினால் பொய்க்காது என்பது வாக்கு. இவர் சந்நிதிக்கு அருகே அருணகிரி நாதருக்கு பீடம் அமைக்கப்பட்டு இருக்கிறது.




தலச் சிறப்புகள்

  • தம்மை நாடி வரும் பக்தர்களின் வேண்டுகோட்களை மறவாமல் நிறைவேற்றி அவர்தம் துயரம் போக்குவதால் ஆதிநாதர் என்னும் மூலவரை மறப்பிலி நாதர் எனவும் வழங்குகின்றனர். அக்னி வழிபட்டமையால், ஆதிநாதர் அக்னீஸ்வரன் என்றும் வழங்கலானார்.
  • வடமுகம் நோக்கி அமர்ந்திருக்கும் ஆதிநாயகி இத்தலத்தின் தனிச்சிறப்பு.
  • பொய்யான வாழ்வின் மாயைகளை அகற்றித் தம்மை நாடி வருபவருக்கு மெய்ஞானம் அருளும் காரணத்தால் இங்கு வீற்றிருக்கும் கணபதியைப் பொய்யாக் கணபதி எனத் துதிக்கின்றனர். இவரது கையில் உள்ள விளாங்கனி, பழத்தின் ஓடு போன்ற மனித உடல்சார்ந்த மாயைகளை நீக்குவதன் உருவகம் எனப் பொருள் கூறுவர்.
  • வயலூரை முத்தித் தலம் எனப் போற்றுவர்.
  • இங்கு தாண்டவக் கோலத்தில் இருப்பினும், உற்சவரின் காலடியில் முயலகன் உருவகம் கிடையாது. தில்லை அம்பல நடராசனைப் போலன்றி, ஆடிய பாதனார் இத்தலத்தில் அமைதியான தோற்றம் கொண்டு காணப்படுகிறார்.
  • தெய்வானை, வள்ளி ஆகிய இருவருடனும் ஆதி நாதரையும் ஆதி நாதியையும் முருகப் பெருமான் பூசிப்பது வயலூரின் தனிச் சிறப்பு.
  • இங்குள்ள சக்தி தீர்த்தம் முருகப் பெருமான் தமது வேலால் குத்தி உருவாக்கியது எனக் கூறுவர்.
  • அருணகிரிநாதரை திருவண்ணாமலையில் தடுத்தாட்கொண்ட எம்பிரான் முருகப் பெருமான் வயலூருக்கு அவரை அழைத்து அதன் சிறப்புக்களைப் பாமாலையாகத் தொடுக்க வைத்தான்.
  • 20ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த பக்திமானும் சொற்பொழிவாளருமான திருமுருக கிருபானந்த வாரியார், வயலூர் முருகனிடத்தே மாறா பக்தி பூண்டிருந்தார்.
  • திருமணத் தடைகளைப் போக்கும் தலமாக இதனைப் போற்றுகின்றனர்.



 திருவண்ணாமலையில் முருகன் அருள் பெற்ற அருணகிரியார், அவர் அடியெடுத்துக்கொடுக்க "முத்தைத்தரு' எனத்துவங்கும் திருப்புகழ் பாடினார். அதன்பின், அவர் வேறு பாடல் பாடவில்லை. ஒருசமயம் அவர் முருகனைத் தரிசனம் செய்தபோது ஒலித்த அசரீரி, "வயலூருக்கு வா!' என்றது. மகிழ்ந்த அருணகிரியார் இங்கு வந்தார். அப்போது, முருகன் அவருக்குக் காட்சி தரவில்லை. தான் ஏமாற்றமடைந்ததாக உணர்ந்தவர், "அசரீரி பொய்யோ?' என உரக்கக் கத்தினார். அப்போது, விநாயகர் அவர் முன் தோன்றி "அசரீரி உண்மையே!' எனச்சொல்லி, இங்கிருந்த சுப்பிரமணியரைக் காட்டினார். முருகன், தனது வேலால் அருணகிரிநாதரின் நாக்கில் "ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை எழுதினார். அதன்பின், இத்தல முருகனைப் போற்றி அவர் 18 பாடல்கள் பாடிய அருணகிரியார், பல முருக தலங்களுக்கும் சென்று திருப்புகழ் பாடினார். இவ்வாறு, நமக்கு திருப்புகழ் என்ற ஒப்பற்ற பாடல்கள் கிடைக்க அருள் செய்தவர் இங்குள்ள முருகன் ஆவார்.




வயலூர் முருகனை வழிபட்டு இறவாப்புகழை பெற்றார் அருணகிரிநாதர் என்ற ஒன்று போதும் இந்த தலத்தின் பெருமைக்கு சான்று. பழனி, திருச்செந்தூருக்கு வேண்டுதல் வைத்தவர்கள் இந்த கோயிலில் வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தலாம். ஆனால், வயலூரானுக்கு வைத்த வேண்டுதலை வேறு கோயிலில் செலுத்த முடியாது அசலோடு வசூலித்துவிடுவான் இந்த வடிவேலன் என்பது இந்த ஊர் மக்களின் சொல்லாக இருக்கிறது.


தத்து திருப்புதல் என்ற நேர்த்திக்கடன் இந்த கோயிலின் வழக்கமாக இருக்கிறது. தோஷம் உள்ள குழந்தைகளை குறிப்பிட்ட காலம் வரை கோயிலுக்கு தத்து கொடுத்தலும், உரிய காலம் முடிந்ததும் தத்து திருப்புதலும் செய்கிறார்கள்.


திருமண பரிகார தலமாகவும் வயலூர் இருக்கிறது. வரம் தருவான் வயலூரான் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாகவும், பெரும்பாலான நேரங்களில் நிஜமாகவும் இருக்கிறது. இந்த கோயிலில் வைகாசி விசாகம், கார்த்திகை திருவிழா, சஷ்டி விழா என வழக்கமான விழாக்களும் வெகு விமரிசையாக நடக்கின்றன.



 முருகபக்தரான கிருபானந்த வாரியார், 1934ம் ஆண்டில், இக்கோயிலுக்கு வந்தார். அப்போது அர்ச்சகராக இருந்த ஜம்புநாத சிவாச்சாரியார், அவருக்கு சுவாமி தரிசனம் செய்து வைத்தார். இதில் மகிழ்ந்த வாரியார், ஐம்பது பைசாவை அவரிடம் காணிக்கை கொடுத்துச் சென்றார். அன்றிரவில் கோயில் நிர்வாகி ஒருவரின் கனவில் சந்நியாசி வடிவில் தோன்றிய முருகன், "ஐம்பது பைசா வாங்கியிருக்கிறாயே? அதை வைத்து கோபுரம் கட்ட முடியுமா?' என்று கேட்டார். வியந்த நிர்வாகி, மறுநாள் கோயிலுக்கு வந்தபோது, வாரியார் ஐம்பது பைசா கொடுத்ததை அறிந்தார். அவருக்கு அந்த காசை திருப்பி அனுப்பி விட்டார். அதன்பின், இங்கு வந்த வாரியார், நடந்ததை அறிந்து, கோபுரம் கட்டி கும்பாபிஷேகம் செய்வித்தார்.

 எங்கும் நிறைந்த முருகப்பெருமான் வயலூர் தலத்தில் தமக்கு அருள் புரிந்தான் என்று தமிழ் கூறும் நல்லுலகு பூராவிலும் சென்ற நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக முழக்கி வந்தவர் வாரியார் சுவாமிகள் வயலூரைப் பற்றி தமிழ் மக்கள் அறியும் படி செய்தவர் வாரியார். நான் அன்றாடம் வழிபட்டு வரும் வயலூர் முருகப்பெருமான் திருவடிகளை வணங்கி சொற்பொழிவை தொடங்குகிறேன் என்று முன்னுரை வழங்கிய பின்பே சொற்பொழிவை தொடங்குவார். அந்த அளவு இத்தலத்துக்கும் வாரியாருக்கும் பிரிக்க முடியாத பிணைப்பு. இத் திருக்கோயில் பெருமளவு புகழ்பெற செய்ததற்கான அத்தனை பெருமையும் வாரியாருக்கே சாரும்.




"கைத்தல நிறைகனி" எனத்துவங்கும் பாடலை, இங்குள்ள பொய்யாக் கணபதியைக் குறித்தே அருணகிரிநாதர் பாடியதாகக் கூறுவர்.

இத்தலத்து முருகப் பெருமானைக் குறித்து அருணகிரி நாதர் பாடிய திருப்புகழ்ப் பாடல் ஒன்றினைக் கீழே காணலாம்:
திருவு ரூப நேராக அழக தான மாமாய திமிர மோக மானார்கள் கலைமூடுஞ்
சிகரி யூடு தேமாலை யடவி யூடு போயாவி செருகு மால னாசார வினையேனைக்
கருவி ழாது சீரோதி யடிமை பூண லாமாறு கனவி லாள்சு வாமீநின் மயில்வாழ்வுங்
கருணை வாரி கூரேக முகமும் வீர மாறாத கழலு நீப வேல்வாகு மறவேனே
சருவ தேவ தேவாதி நமசி வாய நாமாதி சயில நாரி பாகாதி புதல்வோனே
சதம கீவல் போர்மேவு குலிச பாணி மால்யானை சகச மான சாரீசெ யிளையோனே
மருவு லோக மீரேழு மளவி டாவொ ணாவான வரையில் வீசு தாள்மாயன் மருகோனே
மநுநி யாய சோணாடு தலைமை யாக வேமேலை வயலி மீது வாழ்தேவர் பெருமாளே.






திருவிழாக்கள் : வைகாசி விசாகப்பெருவிழா,கந்த சஷ்டி பெருவிழா,தைப்பூசம்,பங்குனி உத்திரம்

வைகாசி விசாகம் - 12 நாட்கள் -10 ஆயிரம் பக்தர்கள் கூடுவர்.

கந்த சஷ்டித் திருவிழா (சூரசம்காரம்) - 7 நாட்கள் - ஆயிரம் பக்தர்கள் கூடுவர்

பங்குனி உத்திரம் - 4 நாள் திருவிழா  - 25 ஆயிரம் பக்தர்கள் கூடுவர்

தைப் பூசம் - 3 நாள் - 10 ஆயிரம் பக்தர்கள் கூடுவர்.



இதோ நம் தல அன்பர்களுக்காக கந்த சஷ்டியில் 6 நாள் நம் முருகப் பெருமான் அருளினை அப்படியே இங்கு பகிர்கின்றோம்.























பச்சை மயில் வாகனனே சிவ
பால சுப்ரமண்யனே வா இங்கு
இச்சையெல்லாம் உன் மேல் வைத்தேன் அதில்
எள்ளளவும் ஐயமில்லையே 


என்று பாடிப்  பரவசம் பெற்று இருப்பீர்கள் என்று நாம் விரும்புகின்றோம்.

கடன்தொல்லையோ, பிள்ளைகளுக்கான வேண்டுதல்களோ, திருமண பரிகாரங்களோ எதுவானாலும் வந்தவர்களின் மனம் குளிர வைக்கிறான் இந்த வயலூர் முருகன். வைத்த கண் வாங்காமல் பார்க்க வைக்கும் இந்த வடிவேலனை, வயலூர் நாயகனை கண்குளிர பார்த்துவிட்டு வந்தவர்களின் மனங்களையும் இவர் ஆட்சிகொண்டு விடுகிறான். அந்த அனுபவம் பெற்றது பெரும் பேறு.

எப்படி செல்வது?

திருச்சியில் இருந்து வயலூர் செல்லும் வழியில் சுமார் 6 கி.மீ., தூரத்தில் இவ்வூர் இருக்கிறது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி உண்டு,

மீள்பதிவாக :-


பாடல் பெற்ற தலங்கள் (9) - கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் & ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/01/9.html


பாடல் பெற்ற தலங்கள் (8) - திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/12/8.html

பாடல் பெற்ற தலங்கள் (7) - அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் - https://tut-temples.blogspot.com/2019/11/7_29.html

பாடல் பெற்ற தலங்கள் (6) - திருஆனைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/11/6_13.html

பாடல் பெற்ற தலங்கள் (5) - திருமூக்கீச்சரம் பஞ்சவர்ணேசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/10/5.html

பாடல் பெற்ற தலங்கள் (4) - திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/09/4.html

தரிசிப்போம் வாருங்கள் - தமிழகத்தில் உள்ள ஒரே கரக்கோயில் & பாடல் பெற்ற தலங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3.html

பாடல் பெற்ற தலங்கள் (2) - திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/08/2.html

பாடல் பெற்ற தலங்கள் (1) - திருநெடுங்களம் - https://tut-temples.blogspot.com/2019/07/1.html

ஸ்ரீ உரகமெல்லணையான் பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_59.html

பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020_6.html