"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, March 29, 2022

நாட்டமிகு தண்டிக்கும் அடியேன் - 29.03.2022

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்று பங்குனி மாத சதய நட்சத்திரம். இன்று பகல் 12  மணி முதல்  நாளை காலை  11 மணி வரை   சதயம் நட்சத்திரம் உள்ளது. இந்த நாளில் தண்டியடிகள் நாயனார்  குருபூஜை வருகின்றது. இதற்கு முந்தைய  அறுபத்து மூவர் குரு பூஜை பதிவுகளில் சாக்கிய நாயனார். வாயிலார் நாயனார், கண்ணப்ப நாயனார்,  அரிவாட்டாய நாயனார், சண்டேஸ்வர நாயனார், திருநீலகண்ட நாயனார், அப்பூதியடிகள், கலிக்கம்ப நாயனார், எறிபத்த நாயனார்,காரி நாயனார், கோச்செங்கட் சோழ நாயனார், காரைக்கால் அம்மையார்  பற்றி அறிந்து கொண்டோம். இப்படியெல்லாம் நடக்குமா? என்றால் நடக்கும் என்று பெரிய புராணம் வழியில் அறிகின்றோம். 

இறைவன் மீது கல்லெறிந்து முக்தி அடைந்தவர் சாக்கிய நாயனார்.  மனத்துள் சிவத்தை இருத்தி முக்தி கண்டவர் வாயிலார் நாயனார். கறியை படைத்து , தம் கண்ணைக் கொடுத்து முக்தி கண்டவர் கண்ணப்பர், இறைவனுக்கு அமுது செய்து கொடுத்து தம் கழுத்தை அறுக்க முற்பட்டு முக்தி அடைந்தவர் அரிவாட்டாய நாயனார், சிவபூஜைக்கு இடையூறு செய்த தம் தந்தையில் கால்களை மழுவால் அரிந்து , சிவ பூஜை செய்து சண்டேஸ்வரர் பதவி பெற்று சிவனோடு கலந்தவர் சண்டேஸ்வர நாயனார், இறைவனின் பெயரைச் சொல்லி ஏற்ற சபதத்திற்காகத் தன் வாழ்வின் மகிழ்ச்சியைத் தியாகம் செய்த திருநீலகண்ட நாயனார்,   திருநாவுக்கரசரின் பெயரில் பற்பல தொண்டுகள் புரிந்து ,தன் மகன் பாம்பால்கடியுண்ட போதிலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படடக்கூடாதுஎன்ற அச்சத்தால், இறந்த மகனை மறைத்துவைத்து பின், இறந்த மகன், சிவன்அருளால் உயிர் பெற்று, சிவானந்த அனுபவத்தில் முக்தி பெற்றவர் அப்பூதியடிகள்.அதுபோல்  இன்று நாம்  தண்டியடிகள் நாயனார் பற்றி அறிய உள்ளோம்.

எம்பெருமானின் அருளால் கண்பார்வையைப் பெற்ற நாயன்மார் தண்டியடிகள் நாயன்மார். சோழநாட்டில் திருவாரூர் என்னும் ஊரில் பிறந்த இவர் சிறுவயது முதலே எம்பெருமானை மனக்கண்ணில் கண்டு பக்தியுடன் விளங்கினார்.

தண்டியடிகள் வாழ்ந்த காலத்தில் சமணர்களின் ஆதிக்கம் ஓங்கியிருந்தது. அவர்களது மதத்தைப் பரப்பும் பொருட்டு அவர்கள் செயல்பட்டார்கள். சைவ தொண்டர்களுக்கும் இடையூறுகள் விளைவித்தார்கள். தண்டியடிகள் எம்பெருமானை நினைத்து நீராடும் குளத்துக்கு அருகில் சமணர்கள் மடங்களைக் கட்டி வந்தார்கள். பெருகிவரும் கூட்டம் குளத்தை மூடிவிடுமோ என்று அச்சம் கொண்ட தண்டியடிகள் குளத்தை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.

கண்ணற்ற நிலையிலும் குளத்தின் நடுவிலும், குளத்தைச் சுற்றிலும் அடையாளத்துக்கு கயிறுகள் நட்டு மண்ணை வெட்டி கூடையில் எடுத்து வந்து கொட்டினார். இதைக் கண்ட சமணர்கள் இவரையும் ஏளனத்துக்கு உள்ளாக்கினார்கள். நீங்கள் கண்பார்வை அற்றவர்கள்.  மண்ணைத் தோண்டி கொட்டுவதால் குளத்தில் இருக்கும் ஜீவராசிகள் இறந்துபோக வாய்ப்புண்டு என்றார்கள்.

அறத்திற்கு செய்யும் புறம்பான செயலை செய்துகொண்டிருக்கிறாய் என்று சமணர்கள் சொன்னாலும் ஜீவ ராசிகளைக் காக்கும் பொறுப்பு எம்பெரு மானுக்கே உரியது  அதனால் யாருக்கும் ஏன் உங்களுக்கும் கூட நல்லதே நடக்கும் என்றார். அப்போதும் அவரைக் கண்டு கொக்கரித்து நகைத்தார் கள். உனக்கு கண் மட்டும்தான் குருடு என்று நினைத்தோம். ஆனால் காதும் மந்தமாகத்தான் இருக்கிறது அதனால்தான் நாங்கள் சொல்வது உனக்கு ஏறவில்லை என்றார்கள்

எம்பெருமானின் திருவருளை திவ்வியமாய் மனக்கண்ணில் காண்கிறேன். அவனது நாமத்தை திருநாவால் சொல்லி மகிழ்கிறேன். ஆலயத்தில் ஒலிக்கும் வேத முழக்கங்களைக் கேட்கிறேன். எனது புலன்கள் அனைத்திலும் எம்பெருமானின் மகிமையை உணருகிறேன். ஆனால் நீங்கள் தான் கண்ணிருந்தும் குருடர்களாகவும், காதிருந்தும் செவிடர்களாகவும், வாய் இருந்தும் ஊமையாகவும் இருக்கிறார்கள் என்றார். அப்போதும் நகைத்து எள்ளியாடிய சமணர்களின் மீது வெறுப்பும் கோபமும் வந்தது.

தண்டியடிகள் சமணர்களிடம் எம்பெருமானின் அருளால் எனக்கு கண் ஒளி கிடைத்து தாங்கள் ஒளியிழக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார்.  நாங்கள் இந்த ஊரை விட்டு ஓடிவிடுகிறோம் என்றவாறு அடியாரின் கைகளிலிருந்த கூடையை பிடுங்கி எறிந்தனர். தண்டியடிகள் மனம் உருகி  எம்பெருமானிடம்  தம் குறையைத் தீர்த்துவைக்குமாறு வேண்டினார். இறைவனும் கனவில் காட்சிதந்து உன் குறைகள் எனக்கு நேர்ந்த குறைகளே அதனால் கலங்காமல் இரு நான் தீர்த்துவைக்கிறேன் என்றார்.

அரசன் கனவில் காட்சி தந்து என் அன்பன் ஒருவன் எனக்காக குளத்தை  செப்பனிட்டு திருப்பணி செய்கிறான். அவனை சந்தித்து அவன் வேண்டி யதைச் செய்து கொடு என்றார்.மறுநாள் அரசனும் தண்டியடிகளைச் சந்தித்தான். தட்டுதடுமாறி குளத்தை ஆழமாக்கும் அவரைக் கண்டு வணங்கி இறைவனது கட்டளையை கூறினான். சமணர்கள்  செய்த இடையூறுகளை அரசனிடம் சொல்லி வருத்தப்பட்டார் தண்டியடிகள்.

அரசன் இடையூறு செய்த சமணர்களை அழைத்தான். அவர்களும் தாங்கள்  தண்டியடிகளை ஏளனம் செய்ததையும் இடையூறு உண்டாக்கியதும் ஒப்புக்கொண்டார்கள். தண்டியடிகள் சொன்னது போல் அவர் பார்வை பெற்று தாங்கள் பார்வை இழந்தால் ஊரை விட்டு வெளியேறிவிடுவதாக உறுதி கூறினார்கள். அரசன் அரண்மனை பெரியோர்களிடம் ஆலோசித்து  தண்டியடிகள் அடியாரை அழைத்து தாங்கள் விரும்புவது போலவே எம்பெருமானை வேண்டி கண் பார்வை பெற்று காட்டுவீராக என்று பயபக்தியுடன் கூறினான்.

தண்டியடிகள் நாயனாரும் அதற்கு இசைந்து குளத்தில் இறங்கி உள்ளத்தில் மனக்கண்ணில் நிறுத்தியிருக்கும் எம்பெருமானை அழைத்து ஐயனே நான் தங்களின் அடிமை என்பதை உலகறியச் செய்ய அருள்வீர்களாக என்று உருகி கேட்டார். எம்பெருமானின் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரி்த்தவாறு தலைமேல் கைகூப்பியவாறு நீரில் மூழ்கி எழுந்தார். எம்பெருமானின் அருளால் தண்டியடிகள் கண்பார்வையைப் பெற்றார். மனக்கண்ணில் தரிசித்த எம்பெருமானின்  வசிப்பிடமான திருக்கோபுரத்தைக்  கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

அரசனை வணங்கினார் தண்டியடிகள். தண்டியடிகள் பார்வை பெற்ற நேரம் அவர்களைச் சுற்றியிருந்த சமணர்கள் தங்கள் ஒளியை இழந்தார்கள். பார்வையற்ற நிலையை அடைந்தார்கள். தர்மம் தவறாமல் ஆட்சி செய்த அரசன் சமணர்களிடம் நீங்கள் கூறியபடி இந்த நாட்டை வெளியேறுங் கள் என்றார். கூடியிருந்த அமைச்சர் பெருமக்களிடமும் சமணர்களை விரட்ட கட்டளையிட்டார்.

தண்டியடிகள் செப்பனிட்ட குளத்தைச் சுற்றி பார்த்தார். எம்பெருமானை ஆலயத்தில் தரிசித்து மனம் குளிர்ந்தார். தண்டியடிகள் திருக்குளத்தை பெரியதாக கட்டிமுடிக்க அரசப்பெருமான் உதவி புரிந்தார். அடிகளாரின் பணியை  அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தார்கள். நாயனார் வாழும் வரை சிவத்தொண்டு புரிந்து   சிவனின் திருவடியை பணிந்தார்.

பங்குனி மாதம்  சதயம் நட்சத்திரத்தில் இவருக்கு குருபூஜை கொண்டாடப்படுகிறது.


தண்டியடிகள் நாயனார் புராணம்

பாடல் எண் : 1

தண்டி யடிகள் திருவாரூர்ப்

பிறக்கும் பெருமைத் தவமுடையார்

அண்ட வாணர் மறைபாட

ஆடுஞ் செம்பொற் கழன்மனத்துக்

கொண்ட கருத்தின் அகனோக்கும்

குறிப்பே யன்றிப் புறநோக்கும்

கண்ட வுணர்வு துறந்தார்போற்

பிறந்த பொழுதே கண்காணார்.


பாடல் எண் : 2

காணுங் கண்ணால் காண்பதுமெய்த்

தொண்டே யான கருத்துடையார்

பேணும் செல்வத் திருவாரூர்ப்

பெருமான் அடிகள் திருவடிக்கே

பூணும் அன்பி னால்பரவிப்

போற்றும் நிலைமை புரிந்தமரர்

சேணு மறிய வரியதிருத்

தொண்டிற் செறியச் சிறந்துள்ளார்.


பாடல் எண் : 3

பூவார் சடிலத் திருமுடியார்

மகிழ்ந்த தெய்வப் பூங்கோயில்

தேவா சிரியன் முன்னிறைஞ்சி

வலஞ்செய் வாராய்ச் செம்மைபுரி

நாவால் இன்ப முறுங்காதல்

நமச்சி வாய நற்பதமே

ஓவா அன்பில் எடுத்தோதி

ஒருநாள் போல வருநாளில்.


பாடல் எண் : 4

செங்கண் விடையார் திருக்கோயில்

குடபால் தீர்த்தக் குளத்தின்பாங்

கெங்கும் அமணர் பாழிகளாய்

இடத்தாற் குறைபா டெய்துதலால்

அங்கந் நிலைமை தனைத்தண்டி

யடிகள் அறிந்தே ஆதரவால்

இங்கு நான்இக் குளம்பெருகக்

கல்ல வேண்டும் என்றெழுந்தார்.


பாடல் எண் : 5

குழிவா யதனில் குறிநட்டுக்

கட்டுங் கயிறு குளக்கரையில்

இழிவாய்ப் புறத்து நடுதறியோடு

இசையக் கட்டி இடைதடவி

வழியால் வந்து மண்கல்லி

எடுத்து மறித்துந் தடவிப்போய்

ஒழியா முயற்சி யால்உய்த்தார்

ஓதும் எழுத்தஞ் சுடன்உய்ப்பார்.


பாடல் எண் : 6

நண்ணி நாளும் நற்றொண்டர்

நயந்த விருப்பால் மிகப்பெருகி

அண்ணல் தீர்த்தக் குளங்கல்லக்

கண்ட அமணர் பொறாராகி

எண்ணித் தண்டி யடிகள்பால்

எய்தி முன்னின் றியம்புவார்

மண்ணைக் கல்லிற் பிராணிபடும்

வருத்த வேண்டா வென்றுரைத்தார்.


பாடல் எண் : 7

மாசு சேர்ந்த முடையுடலார்

மாற்றங் கேட்டு மறுமாற்றம்

தேசு பெருகுந் திருத்தொண்டர்

செப்பு கின்றார் திருவிலிகாள்

பூசு நீறு சாந்தமெனப்

புனைந்த பிரானுக் கானபணி

ஆசி லாநல் லறமாவது

அறிய வருமோ உமக்கென்றார்.


பாடல் எண் : 8

அந்தம் இல்லா அறிவுடையார்

உரைப்பக் கேட்ட அறிவில்லார்

சிந்தித் திந்த அறங்கேளாய்

செவியும் இழந்தா யோஎன்ன

மந்த வுணர்வும் விழிக்குருடும்

கேளாச் செவியும் மற்றுமக்கே

இந்த வுலகத் துள்ளனஎன்

றன்பர் பின்னும் இயம்புவார்.


பாடல் எண் : 9

வில்லால் எயில்மூன் றெரித்தபிரான்

விரையார் கமலச் சேவடிகள்

அல்லால் வேறு காணேன்யான்

அதுநீர் அறிதற் காரென்பார்

நில்லா நிலையீர் உணர்வின்றி

நுங்கண் குருடாய் என்கண்உல

கெல்லாங் காண யான்கண்டால்

என்செய் வீர்என் றெடுத்துரைத்தார்.


பாடல் எண் : 10

அருகர் அதுகேட் டுன்தெய்வத்

தருளால் கண்நீ பெற்றாயேல்

பெருகும் இவ்வூ ரினில்நாங்கள்

பின்னை யிருக்கி லோமென்று

கருகு முருட்டுக் கைகளால்

கொட்டை வாங்கிக் கருத்தின்வழித்

தருகைக் கயிறுந் தறியுமுடன்

பறித்தார் தங்கள் தலைபறித்தார்.


பாடல் எண் : 11

வெய்ய தொழிலார் செய்கையின்மேல்

வெகுண்ட தண்டி யடிகள்தாம்

மைகொள் கண்டர் பூங்கோயில்

மணிவா யிலின்முன் வந்திறைஞ்சி

ஐய னேஇன்று அமணர்கள்தாம்

என்னை யவமா னஞ்செய்ய

நைவ தானேன் இதுதீர

நல்கு மடியேற் கெனவீழ்ந்தார்.


பாடல் எண் : 12

பழுது தீர்ப்பார் திருத்தொண்டர்

பரவி விண்ணப் பஞ்செய்து

தொழுது போந்து மடம்புகுந்து

தூய பணிசெய் யப்பெறா

தழுது கங்கு லவர்துயிலக்

கனவி லகில லோகங்கள்

முழுது மளித்த முதல்வனார்

முன்னின் றருளிச் செய்கின்றார்.


பாடல் எண் : 13

நெஞ்சின் மருவும் கவலையினை

ஒழிநீ நின்கண் விழித்துஅந்த

வஞ்ச அமணர் தங்கள்கண்

மறையு மாறு காண்கின்றாய்

அஞ்ச வேண்டா வென்றருளி

அவர்பால் நீங்கி அவ்விரவே

துஞ்சும் இருளின் அரசன்பாற்

தோன்றிக் கனவி லருள் புரிவார்.


பாடல் எண் : 14

தண்டி நமக்குக் குளங்கல்லக்

கண்ட அமணர் தரியாராய்

மிண்டு செய்து பணிவிலக்க

வெகுண்டான் அவன்பால் நீமேவிக்

கொண்ட குறிப்பால் அவன்கருத்தை

முடிப்பா யென்று கொளவருளித்

தொண்டர் இடுக்கண் நீங்கஎழுந்

தருளி னார்அத் தொழிலுவப்பார்.


பாடல் எண் : 15

வேந்தன் அதுகண் டப்பொழுதே

விழித்து மெய்யில் மயிர் முகிழ்ப்பப்

பூந்தண் கொன்றை வேய்ந்தவரைப்

போற்றிப் புலரத் தொண்டர்பால்

சார்ந்து புகுந்த படிவிளம்பத்

தம்பி ரானர் அருள் நினைந்தே

ஏய்ந்த மன்னன் கேட்பஇது

புகுந்த வண்ணம் இயம்புவார்.


பாடல் எண் : 16

மன்ன கேள்யான் மழவிடையார்

மகிழுந் தீர்த்தக் குளங்கல்லத்

துன்னும் அமணர் அங்கணைந்தீ

தறமன் றென்று பலசொல்லிப்

பின்னுங் கயிறு தடவுதற்கியான்

பிணித்த தறிக ளவைவாங்கி

என்னை வலிசெய் தியான்கல்லுங்

கொட்டைப் பறித்தா என்றியம்பி.


பாடல் எண் : 17

அந்த னான வுனக்கறிவும்

இல்லை யென்றா ரியானதனுக்

கெந்தை பெருமா னருளால்யான்

விழிக்கி லென்செய் வீரென்ன

இந்த வூரில் இருக்கிலோம்

என்றே ஒட்டி னார்இதுமேல்

வந்த வாறு கண்டிந்த

வழக்கை முடிப்ப தெனமொழிந்தார்.


பாடல் எண் : 18

அருகர் தம்மை அரசனும்அங்

கழைத்துக் கேட்க அதற்கிசைந்தார்

மருவுந் தொண்டர் முன்போக

மன்னன் பின்போய் மலர்வாவி

அருகு நின்று விறல்தண்டி

யடிகள் தம்மை முகநோக்கிப்

பெருகுந் தவத்தீர் கண்ணருளாற்

பெறுமா காட்டும் எனப்பெரியோர்.


பாடல் எண் : 19

ஏய்ந்த வடிமை சிவனுக்கியான்

என்னில் இன்றென் கண்பெற்று

வேந்த னெதிரே திருவாரூர்

விரவுஞ் சமணர் கண்ணிழப்பார்

ஆய்ந்த பொருளுஞ் சிவபதமே

யாவ தென்றே அஞ்செழுத்தை

வாய்ந்த தொண்டர் எடுத்தோதி

மணிநீர் வாவி மூழ்கினார்.


பாடல் எண் : 20

தொழுது புனல்மேல் எழுந்தொண்டர்

தூய மலர்க்கண் பெற்றெழுந்தார்

பொழுது தெரியா வகையிமையோர்

பொழிந்தார் செழுந்தண் பூமாரி

இழுதை அமணர் விழித்தேகண்

ணிழந்து தடுமா றக்கண்டு

பழுது செய்த அமண்கெட்ட

தென்று மன்னன் பகர்கின்றான்.


பாடல் எண் : 21

தண்டி யடிகள் தம்முடனே

ஒட்டிக் கெட்ட சமண்குண்டர்

அண்டர் போற்றுந் திருவாரூர்

நின்றும் அகன்று போய்க்கழியக்

கண்ட அமணர் தமையெங்கும்

காணா வண்ணந் துரக்கவென

மண்டி வயவர் சாடுதலும் கண்கள் காணார் மனங்கலங்கி.


பாடல் எண் : 22

குழியில் விழுவார் நிலைதளர்வார்

கோலும் இல்லை எனவுரைப்பரார்

வழியீ தென்று தூறடைவார்

மாண்டோம் என்பார் மதிகெட்டீர்

அழியும் பொருளை வழிபட்டுஇங்கு

அழிந்தோம் என்பார் அரசனுக்குப்

பழியீ தாமோ என்றுரைப்பார்

பாய்க ளிழப்பார் பறிதலையர்.


பாடல் எண் : 23

பீலி தடவிக் காணாது

பெயர்வார் நின்று பேதுறுவார்

காலி னோடு கைமுறியக்

கல்மேல் இடறி வீழ்வார்கள்

சால நெருங்கி எதிரெதிரே

தம்மில் தாமே முட்டிடுவார்

மாலு மனமும் அழிந்தோடி

வழிக ளறியார் மயங்குவார்.


பாடல் எண் : 24

அன்ன வண்ணம் ஆரூரில்

அமணர் கலக்கங் கண்டவர்தாம்

சொன்ன வண்ண மேஅவரை

ஓடத் தொடர்ந்து துரந்ததற்பின்

பன்னும் பாழி பள்ளிகளும்

பறித்துக் குளஞ்சூழ் கரைபடுத்து

மன்ன னவனும் மனமகிழ்ந்து

வந்து தொண்டர் அடிபணிந்தான்.


பாடல் எண் : 25

மன்னன் வணங்கிப் போயினபின்

மாலு மயனும் அறியாத

பொன்னங் கழல்கள் போற்றிசைத்துப்

புரிந்த பணியுங் குறைமுடித்தே

உன்னும் மனத்தால் அஞ்செழுத்தும்

ஓதி வழுவா தொழுகியே

மின்னுஞ் சடையார் அடிநீழல்

மிக்க சிறப்பின் மேவினார்.


பாடல் எண் : 26

கண்ணின் மணிக ளவையின்றிக்

கயிறு தடவிக் குளந்தொட்ட

எண்ணில் பெருமைத் திருத்தொண்டர்

பாத மிறைஞ்சி யிடர்நீங்கி

விண்ணில் வாழ்வார் தாம்வேண்டப்

புரங்கள் வெகுண்டார் வேற்காட்டூர்

உண்ணி லாவும் புகழ்த்தொண்டர் மூர்க்கர் செய்கை யுரைக்கின்றாம்.


அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 
மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 பேயார்க்கும் அடியேன் - 21.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/21032022.html

கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன் - 26.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/26022022.html

இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன் - 20.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/20022022.html

 கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் அடியார்க்கும் அடியேன் - 06.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/06022022_5.html

ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன் - 03.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/03022022.html

 திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன் - 26.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/26012022_25.html

சண்டேசுவர நாயனார் குரு பூஜை - 22.01.22 - https://tut-temples.blogspot.com/2022/01/220122.html

எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன் - 16.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/16012022.html

கலை மலிந்தசீர் நம்பி கண்ணப்பர்க் கடியேன் - 15.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/15012022.html

 தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன் - 09.01.2022  - https://tut-temples.blogspot.com/2022/01/09012022.html

மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன் - 03.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/03012022.html

முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_68.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

இவரை எம்முன் கொண்டு நிறுத்துக - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_29.html

ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_57.html

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_20.html

விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_69.html

 வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_98.html

 செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post.html

No comments:

Post a Comment