"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, February 5, 2022

கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் அடியார்க்கும் அடியேன் - 06.02.2022

அனைவருக்கும்  அன்பு வணக்கங்கள்.

இன்று தை மாத  ரேவதி   நட்சத்திரம்.  நேற்று நேற்று 9 மணி முதல் இன்று இரவு 7 மணி வரை  தை மாத ரேவதி  நட்சத்திரம் உள்ளது. இந்த நாளில் கலிக்கம்ப நாயனார் குருபூஜை வருகின்றது. இதற்கு முந்தைய  அறுபத்து மூவர் குரு பூஜை பதிவுகளில் சாக்கிய நாயனார். வாயிலார் நாயனார், கண்ணப்ப நாயனார் , அரிவாட்டாய நாயனார், சண்டேஸ்வர நாயனார், திருநீலகண்ட நாயனார், அப்பூதியடிகள் பற்றி அறிந்து கொண்டோம். இப்படியெல்லாம் நடக்குமா? என்றால் நடக்கும் என்று பெரிய புராணம் வழியில் அறிகின்றோம். 

இறைவன் மீது கல்லெறிந்து முக்தி அடைந்தவர் சாக்கிய நாயனார்.  மனத்துள் சிவத்தை இருத்தி முக்தி கண்டவர் வாயிலார் நாயனார். கறியை படைத்து , தம் கண்ணைக் கொடுத்து முக்தி கண்டவர் கண்ணப்பர், இறைவனுக்கு அமுது செய்து கொடுத்து தம் கழுத்தை அறுக்க முற்பட்டு முக்தி அடைந்தவர் அரிவாட்டாய நாயனார், சிவபூஜைக்கு இடையூறு செய்த தம் தந்தையில் கால்களை மழுவால் அரிந்து , சிவ பூஜை செய்து சண்டேஸ்வரர் பதவி பெற்று சிவனோடு கலந்தவர் சண்டேஸ்வர நாயனார், இறைவனின் பெயரைச் சொல்லி ஏற்ற சபதத்திற்காகத் தன் வாழ்வின் மகிழ்ச்சியைத் தியாகம் செய்த திருநீலகண்ட நாயனார்,   திருநாவுக்கரசரின் பெயரில் பற்பல தொண்டுகள் புரிந்து ,தன் மகன் பாம்பால்கடியுண்ட போதிலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படடக்கூடாதுஎன்ற அச்சத்தால், இறந்த மகனை மறைத்துவைத்து பின், இறந்த மகன், சிவன்அருளால் உயிர் பெற்று, சிவானந்த அனுபவத்தில் முக்தி பெற்றவர் அப்பூதியடிகள்.அதுபோல்  இன்று நாம்கலிக்கம்ப நாயனார்  பற்றி அறிய உள்ளோம்.


கலிக்கம்ப நாயனார் புராணம்

"கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பர்க்கு அடியேன்."

"சிவ வேடங்கொண்ட பணியாளனையும் வழிபட்டவர். மறுத்த மனைவி கையை வெட்டிய வணிகர்."

“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே”

சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.
நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்தத் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்..

"வெறித்த கொன்றை முடியார் தம் அடியார் இவர் முன் மேவுநிலை
குறித்து வெள்கி நீர் வாராது ஒழிந்தாள் என்று மனம் கொண்டு
மறித்து நோக்கார் வடிவாளை வாங்கிக் கரகம் வாங்கிக் கை
தறித்துக் கரக நீரெடுத்துத் தாமே அவர் தாள் விளக்கினார்."

பாடல் விளக்கம்:-

மணம் கமழும் கொன்றை மலரை அணிந்த திருச்சடையையுடைய இறைவரின் அடியவரான இவர், முன்பு இருந்த நிலைகுறித்து, அவர் திருவடியை விளக்க நாணி நீர் வார்க்காது விட்டார் என்று மனத்தில் எண்ணி, மீண்டும் அவர் முகத்தையும் பார்க்காமல், கூர்மையான வாளை உருவி, அவர் கையிலிருந்த கரகத்தை வாங்கிப் பின், அவரது கையை வெட்டித் துண்டாக்கி, கரகத்தை எடுத்து நீர் வார்த்துத் தாமே அவருடைய கால்களை விளக்கினார்.


இறைவன்: சுடர்க்கொழுந்தீஸ்வரர்

இறைவி: அழகியகாதலி, ஆமோதனம்பாள்

அவதாரத் தலம்: பெண்ணாடம்

முக்தி தலம்: பெண்ணாடம்

குருபூசை நாள்: தை - ரேவதி

கலிக்கம்ப நாயனார் சிவனடியாராக வந்த தன்னிடம் பணிபுரிந்த முன்னாள் பணியாளரை அடியாராகக் கருதி வழிபட்டவர்.

முன்னாள் பணியாள் என்ற காரணத்தினால் அடியவர் வழிபாட்டிற்கு தாமதித்த தன்னுடைய மனைவியின் கையினை வெட்டிய வணிகர்.

பண்டைய நடுநாட்டில் பெண்ணாடகம் என்ற சிறப்பு வாய்ந்த திருத்தலம் ஒன்று இருந்தது. தேவகன்னியர் (பெண்) + காமதேனு (ஆ) + இந்திரனின் வெள்ளை யானை (கடம்) ஆகியோர் வழிபட்ட தலமாதலால் பெண்ணாடகம் என்று பெயர் வந்தது.

தற்போது பெண்ணாடகம் கடலூர் மாவட்டத்தில் உள்ளது. திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் இத்தலத்திற்கு வந்து இறைவனைப் போற்றிப் பாடியுள்ளனர். பெண்ணாடகத்தில் உள்ள திருக்கோவில் தூங்கானை மாடம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது.

பெண்ணாடகத்தில் வணிகத் தொழில் புரியும் கலிக்கம்பர் என்ற அடியவர் ஒருவர் இருந்தார். தொழிலில் வல்லவரான அவர் சிவனாரிடத்தும் அவர்தம் அடியவரிடத்தும் பேரன்பு கொண்டிருந்தார்.

தினந்தோறும் தூங்கானை மாடத் திருக்கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுதலை பெரும்பேறாகக் கருதினார்.

சிவனடியார்களை வரவேற்று உபசரித்து அவர்களுக்கு அறுசுவையுடன் திருவமுது செய்வித்து, அவர்களுக்கு வேண்டிய பொன்னும் பொருளும் கொடுத்து உபசரித்து வந்தார்.

இவ்வாறு இருக்கையில் ஒருநாள் தம்முடைய இல்லத்திற்கு திருவமுது செய்விக்க வந்திருந்த சிவனடியார்களை முறைப்படி வரவேற்றார்.

கலிக்கம்ப நாயனார் மனைவியார் அடியார்களின் திருவமுதிற்காக வீட்டினைச் சுத்தம் செய்து அறுசுவை உணவு வகைகளை சிறப்பாக செய்து வைத்தார்.

சிவனடியார்களுக்கு திருவமுது படைப்பதற்கு முன் அக்கால வழக்கப்படி அவர்களின் திருவடிகளை நீரால் கழுவி தூய்மையாக்க கலிக்கம்பர் முற்பட்டார்.

கலிக்கம்பரின் மனைவியார் செம்பில் இருந்து நீரினை ஊற்ற, கலிக்கம்பர் அடியார்களின் திருவடிகளைக் கழுவினார்.

அப்போது வந்திருந்த சிவனடியார்களில் ஒருவர் ஆசனத்தில் வந்து அமர்ந்தார். சிவனடியாரின் முகத்தைப் பார்த்ததும் கலிக்கம்பரின் மனைவிக்கு எரிச்சல் ஏற்பட்டது.

ஏனெனில் அவ்வடியார் சிலகாலங்களுக்கு முன்பு கலிக்கம்பரிடம் பணியாளாக இருந்தவர். கலிக்கம்பரின் ஏவலைப் பிடிக்காத அப்பணியாள் சிலகாலம் கழித்து தற்போது சிவனடியாராக வந்துள்ளார்.

எரிச்சல் மிகுதியால் செம்பிலிருந்து அடியாரின் திருவடியைக் கழுவுவதற்கு தண்ணீரை வார்க்காமல் காலந் தாழ்த்தினார் கலிக்கம்பரின் மனைவி.

மனைவியாரின் முகத்தைப் பார்த்ததும் கலிகம்பருக்கு மனைவியாரின் உள்ளக் குறிப்பு உணர்ந்தது.

‘இவர் சிவனடியாராக இங்கு வந்ததை எண்ணாமல், பழைய காலத்துக் கதையை நினைத்து காலந் தாழ்த்துகிறாளே’ என்று எண்ணிய கலிக்கம்ப நாயனார், உள்ளே சென்று வாளை எடுத்து வந்தார்.

மனைவியிடம் இருந்த செம்பினை வாங்கிக் கொண்டு சிறிதும் தயங்காமல் அவருடைய கையை வாளால் வெட்டி விட்டார். கலிக்கம்பரின் மனைவியார் மயங்கி கீழே சரிந்தார்.

பின்னர் வந்தரை பணியாள் என்று எண்ணி அருவருப்பு கொள்ளாது சிவனடியாராகக் கருதி அவருடைய பாதங்களை செம்பிலிருந்த நீரால் கழுவினார். அடியாரின் மனங்கோணாது திருவமுது செய்வித்தார்.

இத்தனை காலம் தம்முடன் இருந்தும் தம் மனைவிக்கு சிவனடியார் இடத்தில் வேற்றுமை உணர்வு வந்ததால் இல்லாள் என்று பாராமல் கையைத் தறித்தார் கலிக்கம்பர்.

அடியார் மீதிருந்த கலிக்கம்பரின் பேரன்பினால் சிவனார் கலிக்கம்பரின் மனைவியாருக்கு மீண்டும் கையை அளித்ததோடு அவ்விருக்கும் தம் திருவடியில் நீங்காதிருக்கும் பெரும் பாக்கியத்தையும் அருளினார்.

கலிக்கம்ப நாயனார் குருபூஜை தை மாதம் ரேவதி நட்சத்திரத்தில் அனுசரிக்கப்படுகிறது.

சிவனடியாராக வந்த முன்னாள் பணியாளரை வேற்றுமை கருதாது அடியார் வழிபாடு மேற்கொண்ட கலிக்கம்ப நாயனாரை சுந்தரர் திருத்தொண்டத் தொகையில் ‘கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன்‘ என்று போற்றுகிறார்.

"ஓத மலிநீர் விடமுண்டார் அடியார் என்று உணரா
மாதரார் கை தடிந்த கலிக் கம்பர் மலர்ச் சேவடி வணங்கிப்
பூத நாதர் திருத்தொண்டு புரிந்து புவனங்களில் பொலிந்த
காதல் அன்பர் கலிநீதியார் தம் பெருமை கட்டுரைப்பாம்."

பாடல் விளக்கம்:-

குளிர்ந்த பெருகிய நீர் பொருந்திய கடலில் எழுந்த நஞ்சையுண்ட இறைவரின் அடியவரது திருவேடத்திற்குரிய பெருமை இதுவென்று உணராத மனைவியாரின் கையை வெட்டிய கலிக்கம்ப நாயனாரின் மலர் போன்ற அடிகளை வணங்கி, சிவகணங்களின் தலைவரான சிவபெருமானுக்குத் திருத்தொண்டு செய்து எவ்வுலகத்தும் விளங்கும் பெரும் பத்திமையுடைய அன்பரான "கலிக்கம்ப  நாயனாரின்" பெருமையை உரைப்பாம். 



கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் அடியார்க்கும் அடியேன்

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன் - 03.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/03022022.html

 திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன் - 26.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/26012022_25.html

சண்டேசுவர நாயனார் குரு பூஜை - 22.01.22 - https://tut-temples.blogspot.com/2022/01/220122.html

எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன் - 16.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/16012022.html

கலை மலிந்தசீர் நம்பி கண்ணப்பர்க் கடியேன் - 15.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/15012022.html

 தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன் - 09.01.2022  - https://tut-temples.blogspot.com/2022/01/09012022.html

மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன் - 03.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/03012022.html

முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_68.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

இவரை எம்முன் கொண்டு நிறுத்துக - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_29.html

ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_57.html

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_20.html

விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_69.html

 வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_98.html

 செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post.html

No comments:

Post a Comment