"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, February 10, 2022

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - நான்காம் நாள் 4

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - நான்காம்  நாள் பதிவாக இன்று காண உள்ளோம். பன்னிரு திருமுறை படிக்க படிக்க இன்பம். இவற்றையெல்லாம் நாம் அறிந்திட புல்லாகி,பூடாகி, புழுவாகி என்ற பிறப்பில் மனித பிறப்பில் இன்று அறிகின்றோம். பெறற்கரிய மானுடப் பிறப்பை நாம் பெற்று இருக்கின்றோம். ஆனால் இதன் அருமை அறியாது இருக்கின்றோம். மானுடப் பிறப்பின் அருமை தெரிந்தால் மட்டுமே நாம் திருமுறை பக்கம் கொஞ்சமாவது நாம் செல்ல இயலும். 

எந்த நாட்டிலும் நாம் காண இயலாத பல அதிசயங்கள் நம் நாட்டில் உண்டு. பொத்தாம் பொதுவாக நாம் பார்த்தால் இதில் என்ன அதிசயம் என்று நமக்குத் தோன்றும். சற்று ஆழ்ந்து சிந்தித்து பார்த்தால் தான் நம் மொழியின், நாட்டின், கலாச்சாரம்,பண்பாடு, பாரம்பரியம் என அனைத்தும் புரியும். இதில் நாம் சித்தர்கள், ஜீவ நாடி என எடுத்துக் கொள்ளலாம், இதில் மேலும் நமக்கு இன்பமூட்டுவது திருமுறைகள் ஆகும். ஆம். நமக்கு கிடைத்துள்ள திருமுறைகள் போன்று வேறெங்கும் உள்ளனவா என்று பார்த்தால் வெறும் கேள்விக்குறியே மிஞ்சும். எனவே தான் மீண்டும் மீண்டும் சொல்கின்றோம். பாரத பூமி பழம்பெரும் பூமி மட்டும் அன்று. இது ஞான பூமி. ஆடல்வல்லான் 64 திருவிளையாடல்களை வேறெந்த நாட்டிலாவது நடத்தி இருக்கலாமே? ஏன் நம் தமிழ் நாட்டில் நடத்தினார். சைவம் ம் மட்டுமல்ல. இதில் வைணவமும் அடங்கும். இதே போல் கௌமாரம், சாக்தம், காணாபத்யம் என அனைத்தும் எடுத்துக் கொள்ளலாம்.

தமிழ் மொழி ஒன்றே போதும், இது பக்தி மொழி மட்டும் அல்ல, வாழ்வியல் மொழி, முக்தி மொழியும் ஆகும்.எனவே தமிழ் மறைகள் படிப்பது,கேட்பது இன்பம் ஆகும். ஒரு தட்டில் தமிழ் மொழியில் உள்ள பக்தி நூல்களையும், மற்றோரு எடைத் தட்டில் பிற மொழி பக்தி நூல்களையும் வைத்தால் கூட தமிழ் மொழிக்கு ஈடு இணை சொல்ல முடியாது.

திருமுறைகள் என்றால் ஒன்று, இரண்டு இருக்கும் என்று எண்ண வேண்டாம். மொத்தம் பன்னிரு திருமுறைகள் உண்டு. கலியுகத்தில் நமக்கு ஊழ்வினையால் ஏற்படும் துன்பங்களுக்கும், வாழ்வில் நாம் சந்திக்கும் அனைத்து துன்பங்களுக்கும், பிறவி என்னும் மிகப்பெரிய பிணிக்கும், மருந்தாக அமைந்து நம்மைக் காத்து அருள்வது பன்னிரு திருமுறைகள் எனப்படும் சிவ ஆகமங்களாகும். மிகவும் பெருமைமிக்கது, அளப்பரியது, ஆற்றல்மிக்கது. வேத ஆகமங்கள் மற்றும் சைவ சித்தாந்தத்தின் பிழிந்த சாறாக, நமக்கு இன்பம் தரும் நமது தமிழ் மொழியில், அருளாளர்கள் வழியாக இறைவனால் நமக்கு அருளப்பட்டது, பன்னிரு திருமுறை என்னும் தமிழ் வேதம். நம்முடைய துன்பங்கள் அனைத்திற்க்கும் மூல காரணமாக விளங்குவது நம் அறியாமை. அந்த அறியாமையிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்கு திருமுறை வாக்குகள் பெரிதும் உதவுகின்றன. வினை வயப்பட்டுத் துன்புறும் நாம் திருந்தி உய்யும் பொருட்டு, இறைவன் அருளாளர்களை இப்பூமிக்கு அனுப்பி அவர்கள் வாயிலாக நமக்கு இந்த திருமுறைகளை அருளிச் செய்துள்ளான். திருமுறைகளில் உள்ள ஒவ்வொரு சொல்லும் மிகுந்த மந்திர ஆற்றல் உடையவை. திருமுறைகளை நாம் பாராயணம் செய்து ஓதுவித்தால், அதில் உள்ள மந்திர ஆற்றல், நம் உயிரில் கலந்து நமது அறியாமையைப் போக்கும். யாராலும் மாற்றியமைக்க முடியாத நம் விதியை, இறைவனின் கருணையினால் மட்டுமே மாற்றியமைக்க முடியும். விதியை மதியால் வெல்வது என்பது திருமுறைகளை ஓதுவித்து, இறைவன் அருள்பெற்று, நம் விதியை மாற்றுவதேயாகும்.


பன்னிரு திருமுறைகளால் நம் ஆன்மீக பூமியில் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் சில:
  • பாண்டிய மன்னன் வெப்பு நோய் தீர்ந்து, கூன் நிமிர்ந்தது. 
  • வேதங்களால் பூட்டப்பட்ட திருக்கதவு திறந்து, பின் தாளிட்டது. 
  • பாலை நிலம் நெய்தல் ஆனது. 
  • தேவார ஏடுகள் தீயில் கருகாமல் பச்சையாக இருந்தது, 
  • வைகை ஆற்று வெள்ளத்தில் எதிரே நீந்தியது. 
  • ஆண் பனை பெண் பனையாயிற்று. 
  • எலும்பு பெண்ணாகியது. 
  • விடத்தினால் இறந்த செட்டி உயிர் பெற்றார். 
  • ஆற்றில் போட்டது குளத்தில் கிடைத்தது. 
  • சுண்ணாம்பு காளவாயில் 7 நாட்கள் உயிரோடு இருந்தது. 
  • மதயானையை வணங்கச் செய்தது. கல்லில் கட்டி கடலில் வீசியவர் தெப்பமாக மிதந்து கரை சேர்ந்தது. 
  • நரி குதிரையாகியது. 
  • முதலை விழுங்கிய பிள்ளை 3 ஆண்டுகள் கழித்து மீண்டது. 
  • பிறவி ஊமை பேசியது. 
  • சிவபெருமானே தம் கைப்பட எழுதியது நூலானது. 


இன்னும் பல எண்ணற்ற அற்புதங்களை செய்துள்ளது பன்னிரு திருமுறை. திருமுறையே சைவநெறிக் கருவூலம், செந்தமிழ் வேதம்.



பன்னிரு திருமுறைகள், 27 ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டது. திருஞானசம்பந்தரால் பாடிய திருக்கடைக்காப்பு 1,2,3 ஆம் திருமுறை. திருநாவுக்கரசர் பாடிய தேவாரம் 4,5,6 ஆம் திருமுறை. சுந்தரர் பாடிய திருப்பாட்டு 7 ஆம் திருமுறை. மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், திருக்கோவையார் 8 ஆம் திருமுறை. 9 ஆசிரியர்கள் பாடிய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு 9 ஆம் திருமுறை. திருமூலர் அருளிய திருமந்திரம் 10 ஆம் திருமுறை. காரைக்கால் அம்மையார் முதலிய 11 ஆசிரியர்கள் அருளிய பிரபந்தம் 11 ஆம் திருமுறை. திருத்தொண்டர் 63 நாயன்மார்கள் வரலாறு பாடும் சேக்கிழார் அருளிய பெரியபுராணம் 12 ஆம் திருமுறையாகும். மொத்தம் 18,326 பாடல்களைக் கொண்டது பன்னிரு திருமுறை.



பிறப்பு இறப்பு, ஆதி அந்தம் இல்லாத சிவபெருமான் ஒருவரே முழுமுதற்கடவுள். பன்னிரு திருமுறை சிவபெருமானின் மந்திர வடிவமாகும். திருமுறை சிவாலயங்களில் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பெற்று சிவபெருமானாகவே வழிபடப் பெற்று வருவது. பன்னிரு திருமுறைகளை ஓதினாலும், ஓதுவதைக் கேட்டாலும், அத்தனை தீய சக்திகளும் அவ்விடத்திலிருந்து விலகி நல்ல மந்திர சக்தியால் அந்த இடம் சூழ்ந்து நல்லதே நடக்கும். ஆகையால் திருமுறை அறிவோம். தினமும் திருமுறை ஓதுவோம்.

பன்னிரு திருமுறை தினமும் ஓதுவதற்கு ஏற்ப, 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை என்று இன்று முதல் தொடர்கின்றோம். இன்று இரண்டாம் நாள் பன்னிரு திருமுறை கீழே தருகின்றோம்.


பன்னிரு திருமுறை - நான்காம்  நாள் 

1 ஆம் திருமுறை 

நன்று உடையானை, தீயது இலானை, நரை-வெள் ஏறு
ஒன்று உடையானை, உமை ஒரு பாகம் உடையானை,
சென்று அடையாத திரு உடையானை, சிராப்பள்ளிக்-
குன்று உடையானை, கூற, என் உள்ளம் குளிருமே.

2 ஆம் திருமுறை 

என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே யிருங்கடல் வையத்து
முன்ன நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப்
பன்னி யாதரித் தேத்தியும் பாடியும் வழிபடு மதனாலே. 

3 ஆம் திருமுறை 

நம்புவார் அவர் நாவின் நவிற்றினால்,
வம்பு நாள்மலர் வார் மது ஒப்பது;
செம்பொன் ஆர் திலகம், உலகுக்கு எலாம்;
நம்பன் நாமம் நமச்சிவாயவே.

4 ஆம் திருமுறை 

ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் றோன்றினராய்
மூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க
ஏன்றா னிமையவர்க் கன்பன் றிருப்பா திரிப்புலியூர்த்
தோன்றாத் துணையா யிருந்தனன் றன்னடி யோங்களுக்கே.

5 ஆம் திருமுறை 

நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்;
நமச்சிவாயவே நான் அறி விச்சையும்;
நமச்சிவாயவே நா நவின்று ஏத்துமே;
நமச்சிவாயவே நன்நெறி காட்டுமே.

6 ஆம் திருமுறை 

பாட்டான நல்ல தொடையாய் போற்றி
    பரிசை யறியாமை நின்றாய் போற்றி
சூட்டான திங்கள் முடியாய் போற்றி
    தூமாலை மத்தம் அணிந்தாய் போற்றி
ஆட்டான தஞ்சும் அமர்ந்தாய் போற்றி
    அடங்கார் புரமெரிய நக்காய் போற்றி
காட்டானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி
    கயிலை மலையானே போற்றி போற்றி

7 ஆம் திருமுறை 

பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே.

8 ஆம் திருமுறை 

போற்றி அருளுக! நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக! நின் அந்தமாஞ் செந்தளிர்கள்!
போற்றி!எல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்!
போற்றி! எல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி! எல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்!
போற்றி! மால் நான்முகனுங் காணாத புண்டரிகம்!
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றி! யாம் மார்கழிநீ ராடேலோர் எம்பாவாய்!

9 ஆம் திருமுறை - திருவிசைப்பா

அற்புதத் தெய்வம் இதனின்மற் றுண்டே
    அன்பொடு தன்னைஅஞ் செழுத்தின்
சொற்பதத் துள்வைத் துள்ளம்அள் ளூறும்
    தொண்டருக் கெண்டிசைக் கனகம்
பற்பதக் குவையும் பைம்பொன்மா ளிகையும்
    பவளவா யவர்பணை முலையும்
கற்பகப் பொழிலும் முழுதுமாங் கங்கை
    கொண்டசோ ளேச்சரத் தானே 

 திருப்பல்லாண்டு 

ஆரார் வந்தார் அமரர் குழாத்தில்
    அணியுடை ஆதிரைநாள்
நாரா யணனொடு நான்முகன் அங்கி
    இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள்
    திசையனைத்தும் நிறைந்து
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும்
    பல்லாண்டு கூறுதுமே. 

10 ஆம் திருமுறை

போற்றி என்பார்  அமரர் புனிதன் அடி;
போற்றி என்பார்  அசுரர் புனிதன் அடி;
போற்றி என்பார் மனிதர் புனிதன் அடி;
போற்றி என் அன்புள் விளங்க வைத்தேனே.

11 ஆம் திருமுறை

பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
    மேனி பொலிந்திலங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
    வீழ்சடை வெள்ளிக்குன்றம்
தன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
    மால்விடை தன்னைக்கண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
    ஆகிய ஈசனுக்கே 

12 ஆம் திருமுறை

இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவா! நீ ஆடும் போதுன் அடியின்கீழ் இருக்க என்றார்
 


 வான்முகில் வழாது பெய்க
        மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
        குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க
        நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி
        விளங்குக உலக மெல்லாம்.


அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

மீண்டும் சந்திப்போம் 

மீள்பதிவாக:-

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - மூன்றாம் நாள் 3 - https://tut-temples.blogspot.com/2022/02/7-3.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - இரண்டாம் நாள் 2 - https://tut-temples.blogspot.com/2022/02/7-2.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - முதல் நாள் 1 - https://tut-temples.blogspot.com/2020/03/7-1.html


No comments:

Post a Comment