"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, February 7, 2022

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - இரண்டாம் நாள் 2

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் தை அமாவாசை சிறப்பு அன்னசேவை சிறப்பாக நடைபெற்றது. திருச்சியில் இறைமடம் அன்பர்கள் சார்பில் 100 அன்பர்களுக்கு இரவு உணவாக தோசை வழங்கப்பட்டது. நாம் பழநி பாதயாத்திரை செய்த பொழுதில் இருந்தமையால் பழநியில் அன்னசேவைக்கு அரிசி மூட்டை வாங்கி கொடுக்க நினைத்தோம். குருவருளால் ஸ்ரீ மானூர் சுவாமிகள் மற்றும் புலிப்பாணி ஆசிரமத்திற்கு ஒவ்வொரு அரிசி மூட்டை வாங்கி கொடுத்தோம். நம் தளத்திற்கு தொடர்ந்து உறுதுணையாக இருந்து சேவை செய்து வரும் அனைவருக்கும் இங்கே நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

2020 ஆம் ஆண்டில் மார்ச் 12 ஆம் நாள் பதிவில்  நாம் 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை முதல் நாள் வழிபாடு பற்றி பகிர்ந்து இருந்தோம். இன்று இரண்டாம் நாள் பதிவை பகிர விரும்புகின்றோம்.

எந்த நாட்டிலும் நாம் காண இயலாத பல அதிசயங்கள் நம் நாட்டில் உண்டு. பொத்தாம் பொதுவாக நாம் பார்த்தால் இதில் என்ன அதிசயம் என்று நமக்குத் தோன்றும். சற்று ஆழ்ந்து சிந்தித்து பார்த்தால் தான் நம் மொழியின், நாட்டின், கலாச்சாரம்,பண்பாடு, பாரம்பரியம் என அனைத்தும் புரியும். இதில் நாம் சித்தர்கள், ஜீவ நாடி என எடுத்துக் கொள்ளலாம், இதில் மேலும் நமக்கு இன்பமூட்டுவது திருமுறைகள் ஆகும். ஆம். நமக்கு கிடைத்துள்ள திருமுறைகள் போன்று வேறெங்கும் உள்ளனவா என்று பார்த்தால் வெறும் கேள்விக்குறியே மிஞ்சும். எனவே தான் மீண்டும் மீண்டும் சொல்கின்றோம். பாரத பூமி பழம்பெரும் பூமி மட்டும் அன்று. இது ஞான பூமி. ஆடல்வல்லான் 64 திருவிளையாடல்களை வேறெந்த நாட்டிலாவது நடத்தி இருக்கலாமே? ஏன் நம் தமிழ் நாட்டில் நடத்தினார். சைவம் ம் மட்டுமல்ல. இதில் வைணவமும் அடங்கும். இதே போல் கௌமாரம், சாக்தம், காணாபத்யம் என அனைத்தும் எடுத்துக் கொள்ளலாம்.

தமிழ் மொழி ஒன்றே போதும், இது பக்தி மொழி மட்டும் அல்ல, வாழ்வியல் மொழி, முக்தி மொழியும் ஆகும்.எனவே தமிழ் மறைகள் படிப்பது,கேட்பது இன்பம் ஆகும். ஒரு தட்டில் தமிழ் மொழியில் உள்ள பக்தி நூல்களையும், மற்றோரு எடைத் தட்டில் பிற மொழி பக்தி நூல்களையும் வைத்தால் கூட தமிழ் மொழிக்கு ஈடு இணை சொல்ல முடியாது.

திருமுறைகள் என்றால் ஒன்று, இரண்டு இருக்கும் என்று எண்ண வேண்டாம். மொத்தம் பன்னிரு திருமுறைகள் உண்டு. கலியுகத்தில் நமக்கு ஊழ்வினையால் ஏற்படும் துன்பங்களுக்கும், வாழ்வில் நாம் சந்திக்கும் அனைத்து துன்பங்களுக்கும், பிறவி என்னும் மிகப்பெரிய பிணிக்கும், மருந்தாக அமைந்து நம்மைக் காத்து அருள்வது பன்னிரு திருமுறைகள் எனப்படும் சிவ ஆகமங்களாகும். மிகவும் பெருமைமிக்கது, அளப்பரியது, ஆற்றல்மிக்கது. வேத ஆகமங்கள் மற்றும் சைவ சித்தாந்தத்தின் பிழிந்த சாறாக, நமக்கு இன்பம் தரும் நமது தமிழ் மொழியில், அருளாளர்கள் வழியாக இறைவனால் நமக்கு அருளப்பட்டது, பன்னிரு திருமுறை என்னும் தமிழ் வேதம். நம்முடைய துன்பங்கள் அனைத்திற்க்கும் மூல காரணமாக விளங்குவது நம் அறியாமை. அந்த அறியாமையிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்கு திருமுறை வாக்குகள் பெரிதும் உதவுகின்றன. வினை வயப்பட்டுத் துன்புறும் நாம் திருந்தி உய்யும் பொருட்டு, இறைவன் அருளாளர்களை இப்பூமிக்கு அனுப்பி அவர்கள் வாயிலாக நமக்கு இந்த திருமுறைகளை அருளிச் செய்துள்ளான். திருமுறைகளில் உள்ள ஒவ்வொரு சொல்லும் மிகுந்த மந்திர ஆற்றல் உடையவை. திருமுறைகளை நாம் பாராயணம் செய்து ஓதுவித்தால், அதில் உள்ள மந்திர ஆற்றல், நம் உயிரில் கலந்து நமது அறியாமையைப் போக்கும். யாராலும் மாற்றியமைக்க முடியாத நம் விதியை, இறைவனின் கருணையினால் மட்டுமே மாற்றியமைக்க முடியும். விதியை மதியால் வெல்வது என்பது திருமுறைகளை ஓதுவித்து, இறைவன் அருள்பெற்று, நம் விதியை மாற்றுவதேயாகும்.



பன்னிரு திருமுறைகளால் நம் ஆன்மீக பூமியில் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் சில:


  • பாண்டிய மன்னன் வெப்பு நோய் தீர்ந்து, கூன் நிமிர்ந்தது. 
  • வேதங்களால் பூட்டப்பட்ட திருக்கதவு திறந்து, பின் தாளிட்டது. 
  • பாலை நிலம் நெய்தல் ஆனது. 
  • தேவார ஏடுகள் தீயில் கருகாமல் பச்சையாக இருந்தது, 
  • வைகை ஆற்று வெள்ளத்தில் எதிரே நீந்தியது. 
  • ஆண் பனை பெண் பனையாயிற்று. 
  • எலும்பு பெண்ணாகியது. 
  • விடத்தினால் இறந்த செட்டி உயிர் பெற்றார். 
  • ஆற்றில் போட்டது குளத்தில் கிடைத்தது. 
  • சுண்ணாம்பு காளவாயில் 7 நாட்கள் உயிரோடு இருந்தது. 
  • மதயானையை வணங்கச் செய்தது. கல்லில் கட்டி கடலில் வீசியவர் தெப்பமாக மிதந்து கரை சேர்ந்தது. 
  • நரி குதிரையாகியது. 
  • முதலை விழுங்கிய பிள்ளை 3 ஆண்டுகள் கழித்து மீண்டது. 
  • பிறவி ஊமை பேசியது. 
  • சிவபெருமானே தம் கைப்பட எழுதியது நூலானது. 


இன்னும் பல எண்ணற்ற அற்புதங்களை செய்துள்ளது பன்னிரு திருமுறை. திருமுறையே சைவநெறிக் கருவூலம், செந்தமிழ் வேதம்.

பன்னிரு திருமுறைகள், 27 ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டது. திருஞானசம்பந்தரால் பாடிய திருக்கடைக்காப்பு 1,2,3 ஆம் திருமுறை. திருநாவுக்கரசர் பாடிய தேவாரம் 4,5,6 ஆம் திருமுறை. சுந்தரர் பாடிய திருப்பாட்டு 7 ஆம் திருமுறை. மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், திருக்கோவையார் 8 ஆம் திருமுறை. 9 ஆசிரியர்கள் பாடிய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு 9 ஆம் திருமுறை. திருமூலர் அருளிய திருமந்திரம் 10 ஆம் திருமுறை. காரைக்கால் அம்மையார் முதலிய 11 ஆசிரியர்கள் அருளிய பிரபந்தம் 11 ஆம் திருமுறை. திருத்தொண்டர் 63 நாயன்மார்கள் வரலாறு பாடும் சேக்கிழார் அருளிய பெரியபுராணம் 12 ஆம் திருமுறையாகும். மொத்தம் 18,326 பாடல்களைக் கொண்டது பன்னிரு திருமுறை.




பிறப்பு இறப்பு, ஆதி அந்தம் இல்லாத சிவபெருமான் ஒருவரே முழுமுதற்கடவுள். பன்னிரு திருமுறை சிவபெருமானின் மந்திர வடிவமாகும். திருமுறை சிவாலயங்களில் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பெற்று சிவபெருமானாகவே வழிபடப் பெற்று வருவது. பன்னிரு திருமுறைகளை ஓதினாலும், ஓதுவதைக் கேட்டாலும், அத்தனை தீய சக்திகளும் அவ்விடத்திலிருந்து விலகி நல்ல மந்திர சக்தியால் அந்த இடம் சூழ்ந்து நல்லதே நடக்கும். ஆகையால் திருமுறை அறிவோம். தினமும் திருமுறை ஓதுவோம்.

பன்னிரு திருமுறை தினமும் ஓதுவதற்கு ஏற்ப, 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை என்று இன்று முதல் தொடர்கின்றோம். இன்று இரண்டாம் நாள் பன்னிரு திருமுறை கீழே தருகின்றோம்.

பன்னிரு திருமுறை - இரண்டாம் நாள் 

1 ஆம் திருமுறை 

 கற்றாங்கு எரி ஓம்பி, கலியை வாராமே
செற்றார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய
முற்றா வெண் திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா, பாவமே. 

2 ஆம் திருமுறை 

நித்த லுந்நிய மஞ்செய்து நீர்மலர் தூவிச்
சித்த மொன்றவல் லார்க்கரு ளுஞ்சிவன் கோயில்
மத்த யானையின் கோடும்வண் பீலியும் வாரித்
தத்துநீர்ப் பொன்னி சாகர மேவுசாய்க் காடே.

3 ஆம் திருமுறை 

துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்று 
அஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே.

4 ஆம் திருமுறை 

பத்தனாய்ப் பாட மாட்டேன் பரமனே பரம யோகீ
எத்தினாற் பத்தி செய்கே னென்னைநீ யிகழ வேண்டா
முத்தனே முதல்வா தில்லை யம்பலத் தாடு கின்ற
அத்தாவுன் னாடல் காண்பா னடியனேன் வந்த வாறே.

5 ஆம் திருமுறை 

அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே.

6 ஆம் திருமுறை 

வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓவாத சத்தத் தொலியே போற்றி
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி
காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

7 ஆம் திருமுறை 

பொன்னும் மெய்ப்பொரு ளும்தரு வானைப்
போக மும்திரு வும்புணர்ப் பானைப்
பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப்
பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை
இன்ன தன்மையன் என்றறி வொண்ணா
எம்மா னைஎளி வந்தபி ரானை
அன்னம்வை கும்வ யற்பழ னத்தணி
ஆரூ ரானை மறக்கலு மாமே

8 ஆம் திருமுறை 

போற்றியோ நமச்சி வாய 
புயங்கனே மயங்கு கின்றேன்
போற்றியோ நமச்சி வாய 
புகலிடம் பிறிதொன் றில்லை
போற்றியோ நமச்சி வாய 
புறமெனைப் போக்கல் கண்டாய்
போற்றியோ நமச்சி வாய 
சயசய போற்றி போற்றி.

9 ஆம் திருமுறை  - திருவிசைப்பா 

கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்
    கரையிலாக் கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை
    மதிப்பவர் மனமணி விளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்றஎம் சிவனைத்
    திருவீழி மிழலைவீற் றிருந்த
கொற்றவன் றன்னைக் கண்டுகண் டுள்ளம்
    குளிரஎன் கண்குளிர்ந் தனவே 

திருப்பல்லாண்டு 

குழல் ஒலி யாழ்ஒலி கூத்தொலி ஏத்தொலி
    எங்கும் குழாம்பெருகி
விழவொலி விண்ணள வுஞ்சென்று விம்மி
    மிகுதிரு வாரூரின்
மழவிடை யாற்கு வழிவழி ஆளாய்
    மணஞ்செய் குடிப்பிறந்த
பழவடி யாரொடுங் கூடிஎம் மானுக்கே
    பல்லாண்டு கூறுதுமே. 


10 ஆம் திருமுறை 

சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்து அன்று பொன் ஒளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே.

11 ஆம் திருமுறை 

பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாங் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
யெஞ்ஞான்று தீர்ப்ப திடர்.

12 ஆம் திருமுறை 

ஆதியாய் நடுவு மாகி யளவிலா வளவு மாகிச்
சோதியா யுணர்வு மாகித் தோன்றிய பொருளு மாகிப்
பேதியா வேக மாகிப் பெண்ணுமா யாணு மாகிப்
போதியா நிற்குந் தில்லைப் பொதுநடம் போற்றி

 வான்முகில் வழாது பெய்க
        மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
        குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க
        நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி
        விளங்குக உலக மெல்லாம்.

மீண்டும் சந்திப்போம் 

மீள்பதிவாக:-

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - முதல் நாள் 1 - https://tut-temples.blogspot.com/2020/03/7-1.html

No comments:

Post a Comment