அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
தை மாத நிறைவு பெற்று நாம் அனைவரும் மாசி மாதத்தில் சென்று கொண்டு இருக்கின்றோம். தை மாத வழிபாட்டில் குருநாதர் வழிபாடும், தை அமாவாசை சேவை குருவருளால் சிறப்பாக நடைபெற்றது. மாசி மாதம் என்றாலே நமக்கு மாசி மகம் தான் என்றும் அருளாக நிற்கும். மாசி மகம் சகல தோஷமும் நீக்கும் நாள் ஆகும். அதிலும் நம் குருநாதரின் அருளால் வருடந்தோறும் மாசி மகத்தன்று கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழாவில் கடந்த 3 ஆண்டுகளாக நாம் கலந்து கொண்டு குருவருள் பெற்று வருகின்றோம்.இந்த ஆண்டும் வருகின்ற 17.02.2022 அன்று கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா பாபநாசத்தில் நடைபெற உள்ளது. விரைவில் அழைப்பிதழ் பகிர்கின்றோம். அதற்கு முன்பாக சென்ற ஆண்டில் நாம் அழைப்பிதழ் வைத்து தரிசனம் செய்த கூடுவாஞ்சேரி அருள்நிலைகளை இங்கே காண உள்ளோம்.
குருநாதர் சரணத்தின் நிழல் கிடைக்குமா ? என்று நாம் ஏங்கியே அன்று தரிசனம் செய்தோம். சென்ற ஆண்டில் 07.02.2021 அன்று நம் குழுவின் அன்பர் திரு.செல்லப்பன் கூடுவாஞ்சேரிக்கு வந்தார். உடனே நாம் குருநாதர் தரிசனத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கூடுவாஞ்சேரி கோயிலுக்கு சென்றோம். குருக்கள் வந்த உடன் மூத்தோனை வணங்கினோம்.பின்னர் குருநாதர் தரிசனம் பெற சென்றோம். குருநாதருக்கு பூ மாலை அணிவித்து அழைப்பிதழை சமர்பித்தோம்.
குருநாதரின் அருளை பெற்ற பின்னர்,அருகிலே குருவின் குருவாம் ஸ்ரீ முருகப் பெருமான் தரிசனம் பெற்றோம். அவரிடமும் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா அழைப்பிதழ் வைத்து அருள் பெற்றோம்.
அடுத்து கூடுவாஞ்சேரி வேலி அம்மன் கோயிலுக்கு சென்றோம். வேலி அம்மன் சன்னிதியில் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா அழைப்பிதழ் வைத்து லோக ஷேமத்திற்காக சங்கல்பம் செய்து அருளை பெற வேண்டுதல் செய்து கொண்டிருந்தோம். அப்போது தாயின் அருளை அங்கே நாம் பெற்றோம். அது என்ன என்று பதிவின் இறுதியில் சொல்கின்றோம். நீங்கள் கீழே உள்ள அருள்நிலைகளை ஒவ்வொன்றாக பாருங்கள். நன்கு கவனித்து பார்த்தாலே உங்களுக்கு நாம் சொல்ல வரும் செய்தி புரியும்.
அடுத்து கூடுவாஞ்சேரி வள்ளலார் சபைக்கு சென்று கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா அழைப்பிதழ் வைத்து அருள் பெற்றோம். வேலி அம்மன் ஆலய அருள்நிலையை யாரும் கவனித்தீர்களா? லோக ஷேமத்திற்காக சங்கல்பம் செய்து வேலி அம்மனிடம் வேண்டிக் கொண்டிருந்தோம். அப்போது அங்கே அம்மனுக்கு சாற்றிய பூ மாலை கழுத்தில் இருந்து அழைப்பிதழ் மேலே விழுந்தது. குருக்களும் இரண்டு முறை சரி செய்து பார்த்தார். மீண்டும் மீண்டும் பூ மாலை கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா அழைப்பிதழ் மேலே விழுந்தது. ஆஹா. இது தான் அன்னையின் அருள். இதன் மூலம் குருநாதரின் அருளையும் நாம் பெற்றது இன்னும் நம்முள் உயிர்ப்பாக உள்ளது.
இது போன்று தான் நம் குருநாதர் ஒவ்வொரு நிகழ்விலும் நமக்கும், நம் அன்பர்கள் அனைவருக்கும் அருளை பொழிந்து வழி நடத்தி வருகின்றார்.
சென்ற ஆண்டு மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா அருள்நிலைகளை அடுத்த பதிவில் தருகின்றோம். இந்த ஆண்டு வருகின்ற 17.02.2022 மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழாவிற்கு அனைவரையும் வருக ! வருக!! என்று இரு கரம் கூப்பி வரவேற்கின்றோம். விரைவில் அழைப்பிதழோடு உங்கள் அனைவரையும் சந்திக்கின்றோம்.
அவன் அருளாலே அவன் தாள் பணிந்து
ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
மீண்டும் சந்திப்போம்
No comments:
Post a Comment