"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, February 12, 2022

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஏழாம் நாள் 7

 அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஏழாம் நாள் பதிவாக இன்று காண உள்ளோம். பன்னிரு திருமுறை படிக்க படிக்க இன்பம். இவற்றையெல்லாம் நாம் அறிந்திட புல்லாகி,பூடாகி, புழுவாகி என்ற பிறப்பில் மனித பிறப்பில் இன்று அறிகின்றோம். பெறற்கரிய மானுடப் பிறப்பை நாம் பெற்று இருக்கின்றோம். ஆனால் இதன் அருமை அறியாது இருக்கின்றோம். மானுடப் பிறப்பின் அருமை தெரிந்தால் மட்டுமே நாம் திருமுறை பக்கம் கொஞ்சமாவது நாம் செல்ல இயலும். 

எந்த நாட்டிலும் நாம் காண இயலாத பல அதிசயங்கள் நம் நாட்டில் உண்டு. பொத்தாம் பொதுவாக நாம் பார்த்தால் இதில் என்ன அதிசயம் என்று நமக்குத் தோன்றும். சற்று ஆழ்ந்து சிந்தித்து பார்த்தால் தான் நம் மொழியின், நாட்டின், கலாச்சாரம்,பண்பாடு, பாரம்பரியம் என அனைத்தும் புரியும். இதில் நாம் சித்தர்கள், ஜீவ நாடி என எடுத்துக் கொள்ளலாம், இதில் மேலும் நமக்கு இன்பமூட்டுவது திருமுறைகள் ஆகும். ஆம். நமக்கு கிடைத்துள்ள திருமுறைகள் போன்று வேறெங்கும் உள்ளனவா என்று பார்த்தால் வெறும் கேள்விக்குறியே மிஞ்சும். எனவே தான் மீண்டும் மீண்டும் சொல்கின்றோம். பாரத பூமி பழம்பெரும் பூமி மட்டும் அன்று. இது ஞான பூமி. ஆடல்வல்லான் 64 திருவிளையாடல்களை வேறெந்த நாட்டிலாவது நடத்தி இருக்கலாமே? ஏன் நம் தமிழ் நாட்டில் நடத்தினார். சைவம் ம் மட்டுமல்ல. இதில் வைணவமும் அடங்கும். இதே போல் கௌமாரம், சாக்தம், காணாபத்யம் என அனைத்தும் எடுத்துக் கொள்ளலாம்.

தமிழ் மொழி ஒன்றே போதும், இது பக்தி மொழி மட்டும் அல்ல, வாழ்வியல் மொழி, முக்தி மொழியும் ஆகும்.எனவே தமிழ் மறைகள் படிப்பது,கேட்பது இன்பம் ஆகும். ஒரு தட்டில் தமிழ் மொழியில் உள்ள பக்தி நூல்களையும், மற்றோரு எடைத் தட்டில் பிற மொழி பக்தி நூல்களையும் வைத்தால் கூட தமிழ் மொழிக்கு ஈடு இணை சொல்ல முடியாது.

திருமுறைகள் என்றால் ஒன்று, இரண்டு இருக்கும் என்று எண்ண வேண்டாம். மொத்தம் பன்னிரு திருமுறைகள் உண்டு. கலியுகத்தில் நமக்கு ஊழ்வினையால் ஏற்படும் துன்பங்களுக்கும், வாழ்வில் நாம் சந்திக்கும் அனைத்து துன்பங்களுக்கும், பிறவி என்னும் மிகப்பெரிய பிணிக்கும், மருந்தாக அமைந்து நம்மைக் காத்து அருள்வது பன்னிரு திருமுறைகள் எனப்படும் சிவ ஆகமங்களாகும். மிகவும் பெருமைமிக்கது, அளப்பரியது, ஆற்றல்மிக்கது. வேத ஆகமங்கள் மற்றும் சைவ சித்தாந்தத்தின் பிழிந்த சாறாக, நமக்கு இன்பம் தரும் நமது தமிழ் மொழியில், அருளாளர்கள் வழியாக இறைவனால் நமக்கு அருளப்பட்டது, பன்னிரு திருமுறை என்னும் தமிழ் வேதம். நம்முடைய துன்பங்கள் அனைத்திற்க்கும் மூல காரணமாக விளங்குவது நம் அறியாமை. அந்த அறியாமையிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்கு திருமுறை வாக்குகள் பெரிதும் உதவுகின்றன. வினை வயப்பட்டுத் துன்புறும் நாம் திருந்தி உய்யும் பொருட்டு, இறைவன் அருளாளர்களை இப்பூமிக்கு அனுப்பி அவர்கள் வாயிலாக நமக்கு இந்த திருமுறைகளை அருளிச் செய்துள்ளான். திருமுறைகளில் உள்ள ஒவ்வொரு சொல்லும் மிகுந்த மந்திர ஆற்றல் உடையவை. திருமுறைகளை நாம் பாராயணம் செய்து ஓதுவித்தால், அதில் உள்ள மந்திர ஆற்றல், நம் உயிரில் கலந்து நமது அறியாமையைப் போக்கும். யாராலும் மாற்றியமைக்க முடியாத நம் விதியை, இறைவனின் கருணையினால் மட்டுமே மாற்றியமைக்க முடியும். விதியை மதியால் வெல்வது என்பது திருமுறைகளை ஓதுவித்து, இறைவன் அருள்பெற்று, நம் விதியை மாற்றுவதேயாகும்.




பன்னிரு திருமுறைகளால் நம் ஆன்மீக பூமியில் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் சில:
  • பாண்டிய மன்னன் வெப்பு நோய் தீர்ந்து, கூன் நிமிர்ந்தது. 
  • வேதங்களால் பூட்டப்பட்ட திருக்கதவு திறந்து, பின் தாளிட்டது. 
  • பாலை நிலம் நெய்தல் ஆனது. 
  • தேவார ஏடுகள் தீயில் கருகாமல் பச்சையாக இருந்தது, 
  • வைகை ஆற்று வெள்ளத்தில் எதிரே நீந்தியது. 
  • ஆண் பனை பெண் பனையாயிற்று. 
  • எலும்பு பெண்ணாகியது. 
  • விடத்தினால் இறந்த செட்டி உயிர் பெற்றார். 
  • ஆற்றில் போட்டது குளத்தில் கிடைத்தது. 
  • சுண்ணாம்பு காளவாயில் 7 நாட்கள் உயிரோடு இருந்தது. 
  • மதயானையை வணங்கச் செய்தது. கல்லில் கட்டி கடலில் வீசியவர் தெப்பமாக மிதந்து கரை சேர்ந்தது. 
  • நரி குதிரையாகியது. 
  • முதலை விழுங்கிய பிள்ளை 3 ஆண்டுகள் கழித்து மீண்டது. 
  • பிறவி ஊமை பேசியது. 
  • சிவபெருமானே தம் கைப்பட எழுதியது நூலானது. 


இன்னும் பல எண்ணற்ற அற்புதங்களை செய்துள்ளது பன்னிரு திருமுறை. திருமுறையே சைவநெறிக் கருவூலம், செந்தமிழ் வேதம்.

 



பன்னிரு திருமுறைகள், 27 ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டது. திருஞானசம்பந்தரால் பாடிய திருக்கடைக்காப்பு 1,2,3 ஆம் திருமுறை. திருநாவுக்கரசர் பாடிய தேவாரம் 4,5,6 ஆம் திருமுறை. சுந்தரர் பாடிய திருப்பாட்டு 7 ஆம் திருமுறை. மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், திருக்கோவையார் 8 ஆம் திருமுறை. 9 ஆசிரியர்கள் பாடிய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு 9 ஆம் திருமுறை. திருமூலர் அருளிய திருமந்திரம் 10 ஆம் திருமுறை. காரைக்கால் அம்மையார் முதலிய 11 ஆசிரியர்கள் அருளிய பிரபந்தம் 11 ஆம் திருமுறை. திருத்தொண்டர் 63 நாயன்மார்கள் வரலாறு பாடும் சேக்கிழார் அருளிய பெரியபுராணம் 12 ஆம் திருமுறையாகும். மொத்தம் 18,326 பாடல்களைக் கொண்டது பன்னிரு திருமுறை.



பிறப்பு இறப்பு, ஆதி அந்தம் இல்லாத சிவபெருமான் ஒருவரே முழுமுதற்கடவுள். பன்னிரு திருமுறை சிவபெருமானின் மந்திர வடிவமாகும். திருமுறை சிவாலயங்களில் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பெற்று சிவபெருமானாகவே வழிபடப் பெற்று வருவது. பன்னிரு திருமுறைகளை ஓதினாலும், ஓதுவதைக் கேட்டாலும், அத்தனை தீய சக்திகளும் அவ்விடத்திலிருந்து விலகி நல்ல மந்திர சக்தியால் அந்த இடம் சூழ்ந்து நல்லதே நடக்கும். ஆகையால் திருமுறை அறிவோம். தினமும் திருமுறை ஓதுவோம்.

பன்னிரு திருமுறை தினமும் ஓதுவதற்கு ஏற்ப, 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை என்று இன்று முதல் தொடர்கின்றோம். இன்று இரண்டாம் நாள் பன்னிரு திருமுறை கீழே தருகின்றோம்.


பன்னிரு திருமுறை - ஏழாம்  நாள் 

1 ஆம் திருமுறை 

பூ ஆர் மலர் கொண்டு அடியார் தொழுவார்; புகழ்வார், வானோர்கள்;
மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார்
தூ மாமழை நின்று அதிர, வெருவித் தொறுவின் நிரையோடும்
ஆமாம் பிணை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே.


2 ஆம் திருமுறை 

தேனமர் பொழில் கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி
    வளர் செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
    மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளுநாளும் அடியாரை வந்து
    நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
   அரசாள்வர் ஆணை நமதே!!


3 ஆம் திருமுறை 

இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.


4 ஆம் திருமுறை 

மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்
தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.

5 ஆம் திருமுறை 

ஞானத் தால்தொழு வார்சில ஞானிகள்
ஞானத் தால்தொழு வேனுனை நானலேன்
ஞானத் தால்தொழு வார்கள் தொழக்கண்டு
ஞானத் தால் உனை நானுந் தொழுவனே.

6 ஆம் திருமுறை 

இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி
இயமான னாயெறியுங் காற்று மாகி
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்
பெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும்
பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி
நெருநலையாய் இன்றாகி நாளை யாகி
நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே.


7 ஆம் திருமுறை 

தானெனை முன் படைத்தான் அது அறிந்து தன் பொன்னடிக்கே
நானென பாடலந்தோ நாயினேனைப் பொருட்படுத்து
வானெனை வந்து எதிர்கொள்ள மத்த யானை அருள்புரிந்து
ஊனுயிர் வேறு செய்தான் நொடித்தான்மலை உத்தமனே.


8 ஆம் திருமுறை 

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கு எழுந்தருளுவது  இனியே?


9 ஆம் திருமுறை - திருவிசைப்பா

செங்கணா போற்றி திசைமுகா போற்றி
    சிவபுர நகருள்வீற் றிருந்த
அங்கணா போற்றி அமரனே போற்றி
    அமரர்கள் தலைவனே போற்றி
தங்கணான் மறைநூல் சகலமுங் கற்றோர்
    சாட்டியக் குடியிருந் தருளும்
எங்கணா யகனே போற்றிஏ ழிருக்கை
     இறைவனே போற்றியே போற்றி  

திருப்பல்லாண்டு 

சீரும் திருவும் பொலியச் சிவலோக
   நாயகன் சேவடிக்கீழ்
ஆரும் பெறாத அறிவுபெற் றேன்பெற்ற
   தார்பெறு வார்உலகில்
ஊரும் உலகும் கழற உழறி
   உமைமண வாளனுக்காட்
பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம்
   பல்லாண்டு கூறுதுமே.


10 ஆம் திருமுறை

அவளை அறியா அமரரும் இல்லை
அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன் றில்லை
அவளன்றி ஊர்புகும் ஆறறி யேனே .


11 ஆம் திருமுறை

சிந்தனை செய்ய மனம் அமைத்தேன் செப்ப நா அமைத்தேன்
வந்தனை செய்யத் தலை அமைத்தேன் கை தொழ அமைத்தேன்
பந்தனை செய்வதற்கு அன்பமைத்தேன் மெய் அரும்ப வைத்தேன்
வெந்த வெண்ணீறணி ஈசற்கு இவை யான் விதித்தனவே

12 ஆம் திருமுறை

"அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும்
அவனுடைய அறிவெல்லாம்  நமையறியும் அறிவென்றும்
அவனுடைய செயலெல்லாம் நமக்கினிய வாமென்றும்
அவனுடைய நிலைஇவ்வாறு அறிநீ" என் றருள் செய்வார்

 


 வான்முகில் வழாது பெய்க
        மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
        குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க
        நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி
        விளங்குக உலக மெல்லாம்.


அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

மீண்டும் சந்திப்போம் 

மீள்பதிவாக:-

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஆறாம் நாள் 6 - https://tut-temples.blogspot.com/2022/02/7-6.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஐந்தாம் நாள் 5 - https://tut-temples.blogspot.com/2022/02/7-5.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - நான்காம் நாள் 4 - https://tut-temples.blogspot.com/2022/02/7-4.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - மூன்றாம் நாள் 3 - https://tut-temples.blogspot.com/2022/02/7-3.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - இரண்டாம் நாள் 2 - https://tut-temples.blogspot.com/2022/02/7-2.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - முதல் நாள் 1 - https://tut-temples.blogspot.com/2020/03/7-1.html

No comments:

Post a Comment