அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இன்று மாசி மாத அஸ்தம் நட்சத்திரம். இன்று மாலை 6 மணி முதல் நாளை மாலை 5 மணி வரை மாசி மாத அஸ்தம் நட்சத்திரம் உள்ளது. இந்த நாளில் எறிபத்த நாயனார் குருபூஜை வருகின்றது. இதற்கு முந்தைய அறுபத்து மூவர் குரு
பூஜை பதிவுகளில் சாக்கிய
நாயனார். வாயிலார் நாயனார், கண்ணப்ப நாயனார் , அரிவாட்டாய நாயனார், சண்டேஸ்வர நாயனார், திருநீலகண்ட நாயனார், அப்பூதியடிகள், கலிக்கம்ப நாயனார் பற்றி அறிந்து கொண்டோம். இப்படியெல்லாம் நடக்குமா? என்றால் நடக்கும் என்று
பெரிய புராணம் வழியில் அறிகின்றோம்.
இறைவன் மீது கல்லெறிந்து முக்தி
அடைந்தவர் சாக்கிய நாயனார். மனத்துள் சிவத்தை இருத்தி முக்தி கண்டவர் வாயிலார்
நாயனார். கறியை படைத்து , தம் கண்ணைக் கொடுத்து முக்தி கண்டவர் கண்ணப்பர்,
இறைவனுக்கு அமுது செய்து கொடுத்து தம் கழுத்தை அறுக்க முற்பட்டு முக்தி
அடைந்தவர் அரிவாட்டாய
நாயனார், சிவபூஜைக்கு இடையூறு செய்த தம் தந்தையில் கால்களை மழுவால் அரிந்து
, சிவ பூஜை செய்து சண்டேஸ்வரர் பதவி பெற்று சிவனோடு கலந்தவர் சண்டேஸ்வர நாயனார், இறைவனின்
பெயரைச் சொல்லி ஏற்ற சபதத்திற்காகத் தன் வாழ்வின் மகிழ்ச்சியைத் தியாகம்
செய்த திருநீலகண்ட நாயனார், திருநாவுக்கரசரின்
பெயரில் பற்பல தொண்டுகள் புரிந்து ,தன் மகன் பாம்பால்கடியுண்ட போதிலும்,
திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படடக்கூடாதுஎன்ற அச்சத்தால்,
இறந்த மகனை மறைத்துவைத்து பின், இறந்த மகன், சிவன்அருளால் உயிர் பெற்று,
சிவானந்த அனுபவத்தில் முக்தி பெற்றவர் அப்பூதியடிகள். அதுபோல் இன்று நாம் எறிபத்த நாயனார் பற்றி அறிய உள்ளோம்.
எறிபத்த நாயனார் சிவனடியார்களுக்கு துன்பம் ஏற்படுத்துவோரை மழுவால் தண்டித்து அடியார்களின் துன்பத்தைப் போக்கியவர்.புகழ்பெற்ற அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். அவரைப் பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
எறிபத்தர் கரூர் மாவட்டத்தின் தலைநகரான கரூரில் பிறந்தார். கரூரில் உள்ள ஆனிலைப் பெருமானிடமும், சிவனடியார்களிடம் பேரன்பு கொண்டிருந்தார். முற்காலத்தில் கரூர் சோழ நாட்டின் முக்கிய பகுதியாக விளங்கியது.
எறிபத்தர் சிவனடியார்களுக்கு துன்பம் ஏதும் நேர்ந்தால், அத்துன்பம் நிகழ காரணமானவர்களை தன் கையில் வைத்திருக்கும் மழு (கோடாரி) வினால் தண்டித்து சிவனடியார்களின் துன்பத்தைப் போக்குவார்.சிவனடியார்களுக்கு துன்பம் உண்டாக்குபவர்களை மழுவினால் எறிந்து பாதுகாத்ததால் இவர் எறிபத்தர் என்று அழைக்கப்பட்டார். ஆதலால் இவரின் இயற்பெயரை அறிய இயலவில்லை.
கரூரில் சிவகாமியாண்டர் என்னும் வயதோதிக சிவனடியார் வாழ்ந்து வந்தார். அவர் நந்தவனத்தில் பூக்கும் மலர்களை அதிகாலையில் கொய்து மாலையாகக் கட்டி ஆனிலைப் பெருமானுக்கு அணிவிக்கும் பணியைச் செய்து வந்தார்.
மலர் கொய்து மாலை கட்டி இறைவனை வழிபடும் முறைக்கு பள்ளித்தாமப் பணி என்று பெயர். இப்பள்ளிதாமப் பணியை சிவகாமியாண்டர் தவறாது செய்து வந்தார்.ஒருநாள் சிவகாமியாண்டர் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு நந்தவனத்திற்கு சென்று வாயில் துணியைக் கட்டிக் கொண்டு ஐந்தெழுத்தை உச்சரித்தபடி அன்றலர்ந்த மலர்களைப் பறித்து கூடையில் நிரப்பினார்.
பூக்கூடையை கையில் வைத்திருந்த மரத்தண்டில் கோர்த்து மரத்தண்டை தோளில் சுமந்தவாறு ஆனிலைப் பெருமானின் கோவிலை நோக்கி நடந்தார்.
அன்றைய தினம் ஆனிலைப் பெருமானின் கோவிலில் திருவிழா. ஆதலால் வீதியெங்கும் மக்கள் கூட்டம் நிறைந்திருந்தது.சிவகாமியாண்டர் மக்கள் கூட்டத்தில் தன்னை ஐக்கியப்படுத்தியபடி கோவிலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது புகழ் சோழனின் பட்டத்து யானையை காவிரியில் நீராட்டி வீதிவெளியில் பாகர்கள் கொண்டு வந்து கொண்டிருந்தனர்.
திடீரென யானைக்கு மதம் பிடித்து மக்கள் கூட்டத்திற்கு இடையில் ஓடியது.
யானை ஓடிவருதைக் கண்டதும் மக்கள் நாலாபுறமும் சிதறியடித்து ஓடினர். சிவகாமியாண்டாரால் வயது மூப்பின் காரணமாக வேகமாக ஓட இயலவில்லை.சிவகாமியாண்டாரை நெருங்கிய யானை தோளில் வைத்திருந்த பூக்கூடையைத் தள்ளியது. பூக்கள் எல்லாம் கீழே விழுந்து சிதறின.பூக்கள் சிதறிக் கீழே கிடப்பதைக் கண்டதும் சிவகாமியாண்டாருக்கு கோபம் உண்டானது. கையில் இருந்த தண்டினை ஓங்கியபடி யானையை நோக்கி அடிக்க வேகமாக ஓடி கீழே விழுந்தார் சிவகாமியாண்டார்.
“இறைவா, உனக்காக பறித்த பூக்களை யானை தட்டிவிட்டுச் செல்கிறதே, இறைவா இதைப் பார்த்துக் கொண்டு இருக்கிறீரே, காப்பாற்றுங்கள்” என்று கீழே விழுந்தபடி அரற்றினார்.
சிவகாமியாண்டாரின் அரற்றல் எறிபத்தரின் காதுகளில் ஒலிக்க அங்கு விரைந்தார் எறிபத்தர். நடந்த விவரங்களை சிவகாமியாண்டார் மூலம் அறிந்த எறிபத்தர் “யானை செல்லும் திசை எது?” என்று வினவினார்.
“இவ்வீதி வழியேதான் ஒடியது” என்று சிவகாமியாண்டார் காட்டிய திசை நோக்கி விரைந்து ஓடினார் எறிபத்த நாயனார். யானையின் முன்னால் சென்று நின்றார். எறிபத்தரைக் கண்ட யானை அவரைத் தூக்க துதிக்கையை நீட்டியது.
எறிபத்தர் விரைந்து செயல்பட்டு தன் கையிலிருந்த மழுவால் யானையின் துதிக்கையை துண்டாக்கினார். இடியைப் போன்று மரண ஓலமிட்டு யானை சரிந்து விழுந்து உயிரைத் துறந்தது.
யானை இறந்ததைக் கண்ட பாகர்களும் யானையை வழிநடத்தும் குத்துகோற்காரர்களும் எறிபத்தரைத் தாக்க வந்தனர்.
அதனைக் கண்ட எறிபத்தர் “சிவனடியாருக்கு துன்பம் விளைவிக்காதபடி யானையை வழி நடத்த தவறிய நீங்களும் தண்டிக்கத் தக்கவர்களே” என்றபடி நால்வரையும் மழுவால் வெட்டி வீழ்த்தினார்.
நடந்தவைகளை வேடிக்கைப் பார்த்தவர்கள் மன்னர் புகழ்ச்சோழரிடம் பட்டத்து யானை, பாகர்கள், குத்துகோற்காரர்கள் கொல்லப்பட்ட செய்தியினைத் தெரிவித்தனர்.
புகழ்ச்சோழரும் எதிரிகள்தான் இச்செயலைச் செய்திருக்க வேண்டும் என்று எண்ணி படைகளைத் திரட்டிக் கொண்டு யானை இறந்த இடத்திற்கு வந்து சேர்ந்தான். எறிபத்தர் மட்டும் அவ்விடத்தில் நின்றிருந்தார்.
யானை கொன்றவர்கள் தப்பி ஓடி விட்டார்கள் என்று எண்ணி அருகில் இருந்தோர்களிடம் யானையைக் கொன்றவர்கள் எங்கே என்று விசாரித்தான்.அவர்கள் எறிபத்தரைக் காண்பித்து இவர் தான் யானையைக் கொன்றார் என்றனர்.
நெற்றியில் திருநீறும், உடலில் ருத்திராட்சமும் அணிந்திருந்த எறிபத்தரைக் கண்டதும் இச்சிவனடியார் கோபம் கொள்ளும்படி ஏதோ நிகழ்ந்துள்ளது என்று எண்ணினான் மன்னன்.
குதிரையிலிருந்து இறங்கி எறிபத்தரிடம் சென்று நடந்தவைகளைக் கேட்டறிந்தான்.
“சிவனடியாருக்கு யானை செய்த தீங்கு அதன் பாகர்களை மட்டும் தண்டித்தால் போதாது. அதனுடைய உரிமையாளரான என்னையும் புனிதமான மழுவால் அல்லாமல் இந்த வாளால் தண்டியுங்கள்” என்று கூறி உடைவாளை உருவித் தந்து பணிந்தான்.
முதலில் யோசித்த எறிபத்தர் வாளை வாங்கவில்லை என்றால் மன்னன் தானே தனக்கு வாளால் தண்டனை கொடுத்துக் கொள்வான் என்று எண்ணி வாளை வாங்கினார்.
வாளால் தன்னுடைய கழுத்தை அறுத்துக் கொள்ள முயன்றார் எறிபத்தர்.
அதனைக் கண்ட புகழ்ச்சோழன் “ஐயா, என்னை தீராத பழிக்கு ஆளாக்கி விட்டீர்களே” என்று எறிபத்தரின் கைகளைப் பற்றி தடுத்தான்.
அப்போது “அடியவர்களே உங்கள் இருவருடைய பக்தியை உலகுக்கு உணர்த்தவே இவ்வாறு சோதித்தோம்” என்று அசரீரி ஒலித்தது.
யானையும், பாகர்களும் உயிருடன் எழுந்தனர். புகழ்ச்சோழரும், எறிபத்தரும் சிவனருளை எண்ணி மகிழ்ந்தனர். சிவகாமியாண்டாரின் கூடையில் பூக்கள் புதிது போல் நிரம்பின. அவர் அதனை எடுத்துக் கொண்டு ஆனிலைப் பெருமானை வழிபடச் சென்றார்.
எறிபத்த நாயனார் தன் வாழ்நாள் முமுவதும் சிவனடியாருக்கு துன்பம் நேராதவாறு கவனித்து தொண்டு செய்து இறுதியில் சிவலோகத்தை அடைந்து சிவகணங்களின் தலைவர் ஆனார்.
எறிபத்த நாயனார் குருபூஜை மாசி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.
சிவனடியார்களின் துன்பத்தை நீக்கிய இவரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில் இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன் என்று போற்றுகிறார்.
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
மீண்டும் சிந்திப்போம்.
No comments:
Post a Comment