அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இன்று தை மாத திருவாதிரை நட்சத்திரம். இன்று முழுதும் திருவாதிரை நட்சத்திரம் உள்ளது. இதற்கு முந்தைய அறுபத்து மூவர் குரு பூஜை பதிவில சாக்கிய நாயனார். வாயிலார் நாயனார், கண்ணப்ப நாயனார் பற்றி கண்டோம். இப்படியெல்லாம் நடக்குமா? என்றால் நடக்கும் என்று பெரிய புராணம் வழியில் அறிகின்றோம். இறைவன் மீது கல்லெறிந்து முக்தி அடைந்தவர் சாக்கிய நாயனார். மனத்துள் சிவத்தை இருத்தி முக்தி கண்டவர் வாயிலார் நாயனார். கறியை படைத்து , தம் கண்ணைக் கொடுத்து முக்தி கண்டவர் கண்ணப்பர் . இது போல் இன்று நாம் அரிவாட்டாய நாயனார் பற்றி அறிய உள்ளோம்.
சோழ வள நாட்டின் கணமங்கலம் என்ற ஊரில் பிறந்தவர் தாயனார் என்னும் சிவபக்தர். இவர் நாள்தோறும் ஈசனுக்கு செந்நெல் அரிசியால் ஆன அமுதும், செங்கீரை, இனிய மாவடு ஆகியவற்றை இறைவனுக்கு நைவேத்தியமாக படைத்து வழிபடும் வழக்கம் கொண்டவர். பெரும் செல்வந்தராக இருந்த காரணத்தால், இறைவனுக்கு அனுதினமும் அமுது செய்து படைப்பதில், தாயனாருக்கு எந்த தடையும் இருக்கவில்லை.
எந்த ஒரு விஷயமும் அப்படியே சென்று கொண்டிருப்பதில் எந்த சுவாரசியமும்
இல்லை தானே. அதனால் தாயனாரின் வாழ்க்கையில் கொஞ்சம் விளையாட நினைத்தார்,
இறைவன். ஆம்.. அவரது பக்தியை சோதித்துப் பார்ப்பதோடு, அதன் மூலம் அவரை
உலகறியச் செய்யவும் இறைவன் சித்தமானார்.
அதன் தொடக்கமாக அதுநாள் வரை செல்வச் செழிப்பில் திளைத்து வந்த தாயனாரின்
செல்வம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது. எந்த வழியில் செல்வம்
செலவாகிறது என்பதே தெரியாத வகையில் ஒரு பக்கமாக செல்வம் போய்க்
கொண்டிருந்தது. இதனால் சில காலத்திலேயே வறுமையின் பிடியில்
சிக்கிக்கொண்டார் தாயனார்.
ஆனாலும் கூட வறுமையில் இருந்தாலும் தாயனார் தளர்வின்றி, முன்பைவிட அதீத
அன்புடன் இறைவனுக்கு தொண்டு செய்யத் தொடங்கினார். செந்நெல் அரிசியும்,
செங்கீரையும், மாவடுவும் முன்பு போலவே இறைவனுக்கு நைவேத்தியமாக படைத்து
வந்தார். அதற்காக தாயனார் கூலிக்கு நெல் அறுக்கச் சென்றார். அதன் வாயிலாக
கிடைக்கும் செந்நெல்லைக் கொண்டு அமுது செய்து இறைவனுக்கு நைவேத்தியம்
படைத்து வந்தார். கூலியாக கிடைக்கும் செந்நெல் முழுவதையும் இறைவனுக்கே
அமுது செய்து படைத்து விடுவார். கார் நெல்லை மட்டும் உணவாக்கி தாயனாரும்,
அவரது மனைவியும் உண்பார்கள்.
ஒரு நாள் அதற்கும் சிக்கலை உருவாக்கினார் இறைவன். ஒரு கட்டத்தில் கூலியாக
கிடைத்து வந்த நெல் அனைத்தும் செந்நெல்லாகவே கைக்கு வந்து சேர்ந்தது. கார்
நெல் கிடைக்கவில்லை. ‘செந்நெல் முழுவதும் இறைவனுக்கே’ என்ற கொள்கையில்
இருந்து பின்வாங்க மனமில்லாத தாயனார், அனைத்து செந்நெல்லையும் அமுதாக்கி
இறைவனுக்கு படைத்தார். தன் வீட்டின் கொல்லை புறத்தில் இருந்த கீரைகளை
சமைத்து கணவனும், மனைவியும் உண்டனர். ஓரிரு நாளில் கீரையும் கிடைக்காமல்
போய்விட, தண்ணீர் மட்டுமே அருந்தி இறைதொண்டை தடையின்றி தொடர்ந்தார்
தாயனார்.
ஒரு நாள் வழக்கம்போல், தாயனார், கூடை நிறைய தூய செந்நெல் அரிசி, மென்மையான
செங்கீரை, மாவடு போன்றவற்றை சுமந்து கொண்டு மனைவியுடன் கோவிலை நோக்கிச்
சென்று கொண்டிருந்தார். பல நாட்களாக பட்டினி என்ற நிலையால், அவரது கால்கள்
மேற்கொண்டு நடக்க முடியாமல் தள்ளாடின.
தாயனாரின் பின்னால் வந்த அவரது மனைவி, தன் கணவன் கீழே விழுந்து விடாமல்
இருக்க தன் வலக்கரத்தால் கழுத்தை தாங்கிப் பிடித்தும், சரிந்து விழுந்தார்
தாயனார். இதனால் அவர் தலையில் சுமந்திருந்த கூடை விழுந்து செந்நெல் அரிசி,
கீரை, மாவடு போன்றவை தரையில் பரவின. தூய்மையற்றதாய் மாறின. நொந்து போனார்
தாயனார்.
‘இறைவனுக்கு படைக்க வைத்திருந்த அனைத்தும் சிதறிப்போனப் பின் கோவிலுக்கு
சென்று என்ன செய்வது?’ என்று சிந்தித்தவர், எல்லாம் இறைவனின் இடம், அவன்
இல்லாத இடமே இல்லை. அப்படிஇருக்கையில் நிலப்பரப்பிலும் அவன் இருக்கவே
செய்வான். ஆகவே தாயனார் இறைவனை வேண்டினார். ‘இறைவா! நீ எங்கும் நிறைந்தவன்,
எல்லாம் ஆனவன். இந்த நிலவெடிப்பிலும் நீ இருக்கிறாய். எனவே நிலப்பரப்பில்
விழுந்துகிடப்பவற்றை அமுது செய்து அருளும். இல்லையேல் தவறு செய்தவனாவேன்.
ஆகையால் என்னை மாய்த்துக் கொள்ளவும் தயங்க மாட்டேன்’ என்று ஈசனிடம்
மன்றாடினார்.
நாள்தோறும் இறைவனுக்கு, தாயனார் அமுது செய்விக்கும் போது ஈசன் அமுது
செய்யும் குறிப்பாக ‘விடேல்’ என்ற ஒலி கேட்பது வழக்கம். அந்த ஒலி
கேட்காததால் இறைவன் அமுது செய்யவில்லை என்பதை உணர்ந்து, தன் இடையில் சொருகி
வைத்திருந்த அரிவாளை எடுத்து, கழுத்தை அறுக்க முயன்றார்.
அப்போது நிலவெடிப்பில் இருந்து வெளிப்பட்ட ஒரு கை, தாயனாரை தடுத்து
நிறுத்தியது. மேலும் மாவடுவைக் கடிக்கும் ஒலியாக, ‘விடேல், விடேல்’ என்னும்
ஓசையும் எழுந்தது.
இறைவனுடைய கருணையை எண்ணி துதித்தார் தாயனார். இறைவனை துதிபாடிய கண்ணீர் உகுந்த படி நின்றார்.
அப்போது இடப வாகனத்தின் மீது பார்வதி சமேதராக சிவபெருமான் காட்சி
கொடுத்தார். “அன்பனே! நீ புரிந்த செய்கையால் உயர்வு பெற்றார். உன்
மனைவியுடன் என்றும் சிவலோகத்தில் நம்மை விட்டு நீங்காது வாழ்வாய்” என்று
அருள் செய்து மறைந்தார்.
இறைவன் இவ்விடத்தில் அமுது செய்யும் பேற்றினை நான் பெறவில்லையே என்றெண்ணி அரிவாளால் தன்னுடைய கழுத்தை அறுக்க முயன்றதால் தாயனார் அரிவாள் தாய நாயனார் என்ற அழைப்பட்டார். நாளடைவில் அதுவே அரிவாட்டாய நாயனார் என்றானது.
தவறாது கடைபிடித்து வந்த சிவபாட்டிற்குரிய பொருட்களை தவற விட்டதால் தன் உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்த அரிவாட்டாய நாயனாரை ,சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்‘ என்று வியக்கிறார்.
எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்
மீள்பதிவாக:-
முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_68.html
நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html
ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_57.html
No comments:
Post a Comment