அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
நம் தளத்தில் அவ்வப்போது நம்மை வழிநடத்தும் புத்தகங்கள் பற்றி தொட்டுக்காட்டுவது உண்டு. மிக நீண்ட நாட்கள் கழித்து ஒரு நூல் பற்றி இங்கே பேச உள்ளோம். சில நாட்களுக்கு முன்னர் பாவ புண்ணியக் கணக்குகள் பற்றிய பதிவை பகிர்ந்து இருந்தோம். அன்பர்கள் சிலர் தங்கள் கருத்துக்களை விருப்பம் கொண்டு கூறவே, மீண்டும் நூல் ஒன்றை இங்கே பிடிக்க விரும்புகின்றோம்.
புத்தகங்கள் வாழ்வை புத்தாக்கம் பெற செய்பவை. இன்றைய கால கட்டத்தில்
அனைவரும் அலைபேசியினூடே பல செயலிகள் மூலம் புத்தகங்கள் படித்து
வருகின்றனர். என்ன தான் தொழில்நுட்ப நீட்சிக்கு சென்றாலும், நம்முடைய
கையில் புத்தகம் வைத்து படிக்கும் சுகானுபவம் தனி தான்.
புத்தகங்கள் கையில் வைத்து படிக்கும் போது,அவை நம்மிடம் பேசும், நம்மை
சிந்திக்க தூண்டும்.சில இடங்களில் அவற்றை செல்லமாக கிள்ளுவதுண்டு.சிலர்
அடிக்கோடிட்டு கொஞ்சுவதுமுண்டு.இவ்ளோ ரசனையாக வாழ்ந்த நாம்,இன்று பிழைப்பு
தேடி அவற்றை மறந்து விட்டோம்.
அனைத்து சாதனையாளர்களின் வாழ்விலும் கண்டிப்பாக ஒரு புத்தகம்
திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கும்.அடியேனைக் கேட்டால் "புத்தகங்கள்
மாபெரும் புதையல்கள்" என்பேன். இந்த வழக்கம் பணிக்கு வந்த பின்பு மறந்தே
விட்டது.தற்போது தான் துளிர்விட ஆரம்பித்து இருக்கின்றது.எத்தனையோ பேர்
வெளிநாட்டு சிந்தனையாளர்களின் தன்னம்பிக்கை நூல்களை ஓடி ஓடி வாங்குவது
கண்டு, நமக்கு கோபம் கொப்பளிக்கிறது. வள்ளுவர் தராத சிந்தனையா?
பாட்டி அவ்வையார் தராத நீதி நூல்களா? என அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஆயிரக்கணக்கான இது போன்ற நூல்கள் பொதிந்து கிடக்கின்றன. மதிப்பெண்ணுக்காக
படித்தது போதும்.வாழ்வில் மதிப்பு வர நூல்களை கையில்
பிடிப்போம்.திருக்குறள்,ஆத்திச்சூடி போன்ற நூற்களை அதிகளவில் வாங்கி வைத்து
படியுங்கள். படிக்க முடியாவிட்டால்,வீட்டில் அவை இருக்கட்டும்.ஒவ்வொரு
தமிழனின் வீட்டில் இவை கண்டிப்பாக இருக்க வேண்டும்.
வீட்டில் இந்த நூல்கள் இருக்கும் போது,ஒரு நாள் கண்டிப்பாக புரட்ட
ஆரம்பிப்பீர்கள்..பின்பு படிக்க ஆரம்பம் செய்வீர்கள்.இது போன்ற நூல்களை
எப்போதும் கையில் வைத்து இருங்கள்.விழாக்கள்,நிகழ்வுகளில்
பரிசளியுங்கள்.குழந்தைகளுக்கு நீதியை சொல்லிக் கொடுங்கள்.இப்படி எல்லாம்
வளர்த்தால் தான் பிள்ளைகள்.இல்லையென்றால் அவர்கள் தொல்லைகள் என்பது
உண்மை.நாள்தோறும் செய்தித்தாள்களில் எத்தனை எத்தனை குற்ற சம்பவங்கள்
..சொல்ல முடியவில்லை.இவற்றுக்கெல்லாம் காரணம் ..கேட்டால் கலி காலம்.அது ஒரு
புறம் இருக்கட்டும். நீதியை புகட்டாது வளரும் குழந்தைகளின் எதிர்காலங்கள்
நாம் நாளிதழில் காண்பது போலவே இருக்கும்.
சுகி சிவம் ஐயாவின் சொற்பொழிவில் கேட்டது தங்களின் பார்வைக்கு.சற்று கடின/கோப வார்த்தைகளே.
கருத்தரித்து பிறப்பதெல்லாம் பிள்ளைகள் அல்ல
பெற்றோர் கருத்தை அறிந்து நடப்பவர்கள் தான் பிள்ளைகள்
அனைவரையும் குற்றம் சொல்வதை நிறுத்துங்கள். அது சரி இல்லை.இது சரி இல்லை என
புலம்ப வேண்டாம்.மாற்றத்தை தங்களிடம் இருந்தே துவக்குங்கள். சென்ற பௌர்ணமி
திரு அண்ணாமலை கிரிவலம் முடித்து ஈசானிய லிங்கம் அருகில், கோவிலூர் மடம்
சார்ந்து புத்தகங்கள் விற்பனைக்கு இருந்தது. அவ்வைப் பாட்டியைக் கண்டதும்
கீழ்க்கண்ட புத்தகங்களை வாங்கி விட்டேன்.ஒவ்வொரு முறை படிக்கும் போதும்,
அவர்கள் என்னுடன் பேசுவது போல் உள்ளது. அவ்வையார் என்று சொன்னால்
ஆத்திச்சூடி பற்றி தெரியும்.எத்தனை பேருக்கு நல்வழி,மூதுரை,கொன்றை வேந்தன்
பற்றி தெரியும் ?
இவற்றையெல்லாம் நம் தலைமுறைக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது நாமே.பள்ளிகள்
மதிப்பெண்களுக்காகவே.எனவே அதை மறந்து விடுங்கள்.ஊழியின் பிடியில் வாழும்
நாம் இப்போதே இது போன்ற அறம் சார்ந்த செயல்களை செய்யுங்கள்.அப்படி
செய்பவர்களை ஊக்கப்படுத்துங்கள்.
புதிய அகம் தருகின்ற புத்தக வரிசையில் இன்று நாம் காண இருப்பது
சிந்திப்போம் சிந்திக்க வைப்போம்
என்ற புத்தகமே. என்னைப் பொறுத்த வரை, பத்தே பத்து ரூபாயில் வாழ்வியல் பற்றி
தெரிந்து கொள்ள வேண்டுமா? ஆன்மிகம் பற்றி புரிய வேண்டுமா? முதலில் ஒன்றை
புரிந்து கொள்ளுங்கள்.ஆன்மிகம் வேறு...வாழ்க்கை வேறு அல்ல...இரண்டும்
ஒன்றே..வயதான முதியோர்கள் தான் ஆன்மிகம் பக்கம் செல்ல வேண்டும் எனபது போன்ற
கருத்துக்கள் எல்லாம் போலியான பரப்புரைகள். வாழ்தல் புரிய வேண்டுமானால்
ஆன்மிகம் முக்கியம்.இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்
போன்றவை.இந்த நூல் தமிழ்,ஆங்கிலம்,ஹிந்தி,தெலுங்கு,கன்னடம் மொழிகளில்
கிடைக்கின்றது.
சரி..புத்தகத்திற்குள் சென்று மூழ்கி,முத்தெடுக்கலாமா?
புத்தகத்தை திறந்த உடன், ஒரு கட்டத்திற்குள் பாவம் என்றால் என்ன? புண்ணியம்
என்றால் என்ன என்று அடக்கி சொல்லி விட்டார்கள். இதை விட வேறென்ன வேண்டும்?
மனித பிறவியே ! பாவ புண்ணிய கணக்கின் தீர்ப்பே ! இவை அனைத்தும் தெரிந்தும்
நமக்கு பாவமா என்றால் என்ன? புண்ணியம் என்றால் என்ன என்று என்பது பற்றி
யாரும் தெளிவாக சொன்னதில்லை.இத்தோடு வாழ்தல் பற்றியும் சொல்லி
இருக்கின்றார்கள்.
நம்மைப் பொறுத்த வரையில், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பாவ,புண்ணியம் பற்றி
சொல்வார்கள். பொய் சொன்னால் பாவம். அடித்தால் பாவம். ஏமாற்றினால் பாவம்.
இந்த வரிசையில் லேட்டஸ்ட் கொன்னால் பாவம் தின்னால் தீரும். நம்மால் ஒரு
முடிவுக்கு வர முடிகின்றதா ? என்றால் முடியவில்லை.இதைத் தான் தெள்ளத்
தெளிவாக
கடமையைச் செய்யும் போது தவிர மற்ற நேரங்களில் பிறருக்கு துன்பம் அளித்தால் பாவம்,பிறர் துன்பம் நீக்கினால் புண்ணியம்
இது சரியாகத் தானே உள்ளது.இவ்வளவு எளிமையாக,புரியும்படி சொல்ல முடியமா? பாவ
புண்ணிய கணக்குகள் பற்றி.ஆரம்பமே அட்டகாசமாக இருந்ததால்,இந்த புத்தகம்
மேலும் என்னை உந்தியது.
அடுத்த பகுதிகளில் கீதாசாரம் இருந்தது.ஏற்கனவே ?இது ஆன்மிக களஞ்சியம்
என்று! பொருளடக்க பெட்டகத்துக்குள் சென்றேன். கருத்தாழமிக்க
தலைப்புக்கள்.ஒவ்வொன்றும் சிறப்பான, சிந்திக்க தூண்டும் கருத்துக்கள்
அடங்கிய தொகுப்புகள்.இது ஒரு வாழ்வியல் நூல்,ஆன்மிகப் பொக்கிஷம், அனுபவத்
தென்றல், பசுமை நிறைந்த பூஞ்சோலை, வேறு என்ன வார்த்தைகள் உண்டோ அவை
அனைத்தும் இங்கே பொருந்தும்.தங்களின் பார்வைக்கு பொருளடக்கம்
கடவுள் என்ற தலைப்பில் ஆரம்பித்து, உறுதிமொழி மற்றும் பேராசைகளின் பட்டியல்
உடன் நிறைவு பெறுகின்றது. இன்று கடவுளின் பெயரால் தானே ஏகப்பட்ட
குழப்பங்கள்.என் கடவுள் பெரிதா? உன் கடவுள் பெரிதா? என்று
போட்டிகள்,பொறாமைகள். கடவுளோடு மதங்களின் பெயரால் நடைபெறும் நிகழ்வுகள்
பார்க்கும் போது மனம் பதறுகின்றது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் இந்த
கடவுள் கட்டுரை சிறப்பாய் கடவுள் பற்றி விளக்குகின்றது.தெளிவாக சொல்ல
வேண்டிய கருத்துக்களை வேறொரு எழுத்துருவில்,சற்று தடிமனாக காட்டி
உள்ளார்கள்.இதிலிருந்து, இவர்களின் நோக்கம் புரிகின்றது.உதாரணத்திற்கு கீழே
பாருங்கள்.
இது போன்று தான் ஒவ்வொரு தலைப்பிலும் விளக்க கட்டுரைகள்.அனைத்தும்
எளிமையின் வண்ணத்தில் அலங்கரிக்கப் பட்டுள்ளது. அடுத்த தலைப்பு அஸ்வமேத
யாகம் பற்றி. இங்கே நான் மேற்கொண்டு விளக்க விரும்பவில்லை. அனைத்துமே பலாச்
சுளைகள் தான். அதுவும் வெறும் பலாச் சுளைகள் அல்ல. தேனில் ஊற வைத்த பலாச்
சுளைகள். அவ்ளோ தித்திப்பு.புத்தகத்தை வாங்கி பருகுங்கள்.உங்கள் நட்புக்கள்
மற்றும் உறவுகளிடம் தெரிவியுங்கள்.
சிறு குறிப்பாக ஆசிரியர் பற்றி. ஜே.பி.பால சுப்ரமணியம். தம் மகளை இழந்த
பின்னர் எழுதிய நூல் இது. தம் மகளின் நினைவாக hemalathamemorialtrust
நடத்தி வருகின்றார்.இவர்கள் நன்கொடை பெற்றுக் கொள்ள மாட்டார்களாம். இன்று
தொண்டு,சேவையிலும் ஏமாற்று வேலை நடந்து வருவதை கண் கூடாய்க்
காண்கின்றோம்.ஆனால் இவர்கள் நன்கொடை வெளியில் பெறாமல்,தங்கள் குடும்ப
உறவுகளிடமே பெற்று நடத்தி வருகின்றார்கள். இவர்கள் செய்த தொண்டைப்
பற்றியும் குறிப்பிட்டு எழுதி உள்ளார்கள்.இவருக்கு ஒரு ராயல்
சல்யூட்.இப்படிப்பட்ட பெரும் மனிதரை, நாம் வாழ்நாளில் ஒரு முறையேனும்
சந்திக்க விரும்புகின்றோம். இறையின் சித்தம் எப்படியோ..அப்படியே
நடக்கட்டும்.
சரி, நம் தளத்தின் உழவாரப் பணி உறவுகளுக்கு இந்த புத்தகத்தை அன்பளிப்பாக
கொடுக்க நினைத்து தொடர்பு கொண்டோம். அதற்கு முன்பாக, இன்று நாம் எத்தனையோ
பொருட்களை கூரியர் மூலம் பெறுகின்றோம். அதற்கென்று சேவை கட்டணம் நாம்
செலுத்துகின்றோம்.இங்கே நான் தொடர்பு போது ,அவர்கள் புத்தகங்களின் தேவைக்கு
ரூ 10 வீதம் அனுப்புங்கள் என்றனர். சேவைக் கட்டணம் பற்றி அவர்கள் சொல்லவே
இல்லை.மீண்டும் நாம் அவர்களிடம்,கூரியர் சேவைக் கட்டணம் ஏதும்?
என்றோம்.அவர்கள் நாங்கள் இங்கே சேவை செய்து வருகின்றோம்.இதுவும் அதில்
அடக்கம்.எனவே வேண்டாம் என்றனர். அவர்கள் புத்தகத்தில் உள்ளதை அப்படியே
செய்து வருகின்றார்கள் எனபது திண்ணம்.
இந்த நூலைப் பற்றிய அனுபவத்தை பின்னுரையாக, நூலின் கடைசி அட்டைப்
பக்கத்தில் கொடுத்துள்ளார்கள்.அதை மேலே தங்களுக்காக
கொடுத்துடுள்ளோம்.பின்னுரை மேலும் நூலின் மேல் உள்ள ஆர்வத்தை தூண்டும்
என்பது உறுதி. அதில் ஒருவர் படுக்கைஅறையில் வைத்து படித்து கொண்டு
வருகின்றார் என்பதும், இந்த நூல் கர்ம யோகம் பற்றி ஆழமாக பேசுகின்றது
என்பதும் ஆகச் சிறந்த உதாரணங்கள். இந்நூல் படித்து ஒருவர் ஏழை பெண்களுக்காக
இல்லம் ஒன்றை ஆரம்பித்துள்ளார் என்பது இந்நூலின் வெற்றியே.
இறுதியாக, நாம் எவ்வளோ செலவு பண்ணுகின்றோம். பொதுவாக,புத்தகத்திற்கான செலவு
என்பது மூலதனமே. அப்படி பார்த்தால்,இந்த புத்தகம் சாதாரணமான ஒன்று
அல்ல.எனவே 10 ரூபாய் என்பது மிக குறைந்த செலவே.இந்த புத்தகத்தில் உள்ள
கருத்துக்களுக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் தகும்.எனவே இந்த பதிவை
படிக்கும் அன்பர்கள், குறைந்த அளவு ஒரு 5 புத்தகமாவது வாங்கி வைத்துக்
கொள்ளுங்கள். தங்களின் சுற்றம்,நட்பு என தெரிந்தவரிகளிடம் இந்த புத்தகம்
கொடுத்து உதவுங்கள்.இதுவும் ஒரு வகையில்புண்ணியமே.யாம் அடுத்து ஒரு
குறிப்பிட்ட எண்ணிக்கையில் இந்த புத்தகம் வாங்க உள்ளோம். வாங்க உள்ள
புத்தகங்களை ஏதேனும் ஆசிரமம் சென்று, மூத்தோர்களுக்கு கொடுக்க உள்ளோம்.
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
No comments:
Post a Comment