"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, January 25, 2022

திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன் - 26.01.2022

அனைவருக்கும்  அன்பு வணக்கங்கள்.

நாளை தை மாத  விசாக நட்சத்திரம். நாளை சனிக்கிழமை 26.01.2022  காலை 8  மணி முதல் 27.01.2022 வரை தை மாத விசாகம் நட்சத்திரம் உள்ளது. இன்றைய நன்னாளில் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களை கூறி மகிழ்கின்றோம்.மேலும் இந்த நன்னாளில் இரு குருமார்களின் குருபூஜை கொண்டாட உள்ளோம். அதில் ஒருவர்  பராபரக் கண்ணி தந்து , எங்களுக்கு தாயும் ஆன பரமே போற்றி என போற்றப்படும் ஸ்ரீ தாயுமான சுவாமி ஆவார். இவரைப் பற்றி ஏற்கனவே இதற்கு முந்தைய பதிவில் கண்டோம். 

அடுத்து இந்த  நன்னாளில் திருநீலகண்ட நாயனார் குருபூஜை வருகின்றது. இதற்கு முந்தைய  அறுபத்து மூவர் குரு பூஜை பதிவுகளில் சாக்கிய நாயனார். வாயிலார் நாயனார், கண்ணப்ப நாயனார் , அரிவாட்டாய நாயனார், சண்டேஸ்வர நாயனார் பற்றி அறிந்து கொண்டோம். இப்படியெல்லாம் நடக்குமா? என்றால் நடக்கும் என்று பெரிய புராணம் வழியில் அறிகின்றோம். இறைவன் மீது கல்லெறிந்து முக்தி அடைந்தவர் சாக்கிய நாயனார்.  மனத்துள் சிவத்தை இருத்தி முக்தி கண்டவர் வாயிலார் நாயனார். கறியை படைத்து , தம் கண்ணைக் கொடுத்து முக்தி கண்டவர் கண்ணப்பர், இறைவனுக்கு அமுது செய்து கொடுத்து தம் கழுத்தை அறுக்க முற்பட்டு முக்தி அடைந்தவர் அரிவாட்டாய நாயனார், சிவபூஜைக்கு இடையூறு செய்த தம் தந்தையில் கால்களை மழுவால் அரிந்து , சிவ பூஜை செய்து சண்டேஸ்வரர் பதவி பெற்று சிவனோடு கலந்தவர் சண்டேஸ்வர நாயனார். அதுபோல் இன்று நாம் திருநீலகண்ட நாயனார் பற்றி அறிய உள்ளோம்.





திருநீலகண்ட நாயனார், இறைவனின் பெயர் சொல்லி ஏற்ற சபதத்திற்காகத், தன் வாழ்வின் மகிழ்ச்சியைத் தியாகம் செய்தவர். அவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். அவரின் வாழ்வில் சிவபெருமான் நிகழ்த்திய லீலையை  இப்போது பார்ப்போம்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் குயவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். குயவர் என்பவர் மண்ணிலிருந்து பானை, சட்டி போன்ற உபயோகப் பொருட்களைத் தயார் செய்பவர். அவருடைய பெயர் திருநீலகண்டர் என்பதாகும். அவர் சிதம்பரத்தில் உள்ள சிவனிடத்தில் (பொன்னம்பலவாணர்) பேரன்பும், பக்தியும் கொண்டிருந்தார்.

சிதம்பரம் பூலோகக் கையிலாயம் என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது. அது தில்லை மரங்கள் நிறைந்த பகுதியாக விளங்கியதால் தில்லை வனம் என்றும் கூறப்படுகிறது.

திருநீலகண்ட நாயனார் சிவடியார்களுக்கு மண்ணிலிருந்து ஓடுகள் செய்து கொடுப்பதைத் தொண்டாகச் செய்து வந்தார். ஏனெனில் அடியர்களுக்கு செய்யும் சேவை சிவனுக்கு செய்வதைப் போன்றது அல்லவா? ஆதலால் அத்தொண்டை மிகுந்த விருப்பத்துடன் செய்து வந்தார்.அவர் எப்போதும் சிவனின் நீலநிறத் தொண்டையை நினைத்து ‘திருநீலகண்டம் திருநீலகண்டம்’ என்று உருகிக் கூறியபடியே இருப்பார். இதனால் அவரை எல்லோரும் திருநீலகண்டர் என்றே அழைத்தனர்.

அவர் ஏன் சிவபெருமானின் நீலநிறக் கண்டத்தை நினைத்து உருகினார்? சிவபெருமானின் நீலகண்டமே பாற்கடலில் தோன்றிய கொடிய நச்சிலிருந்து (விசத்திலிருந்து) உலக உயிர்களைப் பாதுகாத்தது.

ஒருமுறை தேவர்களும் அசுரர்களும் அமுதத்தினைப் பெற, மந்தார மலையை மத்தாகவும், வாசுகிப் பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்தனர். அமுதம் என்றும் இறவாமல் வாழும் சிரஞ்சீவி தன்மையைக் கொடுக்க வல்லது.அப்போது வாசுகிப் பாம்பு வலி தாங்காமல் உலக உயிர்களைக் கொல்லும் கொடிய ஆலகால விசத்தினைக் கக்கியது. உலக உயிர்களைக் காக்க சிவபெருமான் அவ்விசத்தினை விழுங்கி தன்னுடைய தொண்டையில் (கண்டம்) இருத்தினார்.

விசத்தால் சிவனின் கண்டம் நீலநிறமாக மாறியது. அன்றிலிருந்து இறைவனார் திருநீலகண்டனார் ஆனார்.மக்களைக் காக்கும் மகேஸ்வரனை மனதில் வைத்து, திருஞான சம்பந்தர் திருநீலகண்ட பதிகம் என்னும் பத்துப் பாடல்களைப் பாடினார்.

நாம் நோயுற்ற காலம், இறைவனை வழிபட்டு நோய் நீங்கி சுகமாக வாழ, திருநீலகண்ட பதிகம் பாடல்களைப் பாடலாம்.

திருநீலகண்டரின் மனைவியும் சிவனிடத்தும், அடியவர்களிடத்தும் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். கணவனும், மனைவியும் அடியவர்களுக்கு தொண்டு செய்து இல்லறத்தை நல்லறமாக நடத்தி வந்தனர்.அப்போது ஒருநாள் முற்பிறவி பாவத்தின் பயனாக திருநீலகண்டர் பரத்தையரிடம் சென்று வந்தார். இதனை அறிந்த அவருடைய மனைவி திருநீலகண்டரிடம் பேசுவதை நிறுத்தினார். எனினும் இல்லாளின் பணிகளைச் செய்து வந்தார். திருநீலகண்டரைத் தீண்டுவதைத் தவிர்த்தார்.

ஒருநாள் திருநீலகண்டர் தன்னுடைய மனைவியைத் தொட‌ முற்பட்டபோது “நீங்கள் என்னைத் தொட்டால் உயிரோடு இருக்க மாட்டேன். திருநீலகண்டத்தின் மீது ஆணை” என்று அவர் மனைவி கூறினார்.திருநீலகண்டத்தின் மீது ஆணையிட்டதால், இனி மனைவியை மட்டுமல்லாமல் எப்பெண்ணையும் மனதாலும் தொட மாட்டேன் என்று திருநீலகண்டர் சபதம் ஏற்றார்.

அப்போதிருந்து அவர் ஐம்புலன்களையும் அடக்கி வாழ்ந்தார். அவர்கள் இருவரும் சிறிய வீட்டில் இருந்தும் உடல் தொடர்பின்றி இருந்தனர். ஆண்டுகள் பல ஓடின. தம்பதியர் இருவரும் முதுமைப் பருவம் எய்தினர்.திருநீலகண்டத்தின் மீது ஆணையிட்டதால், திருநீலகண்டரும் அவருடைய மனைவியும் கொண்ட மனஉறுதியினை உலகுக்கு எடுத்துக்காட்டி, அவர்களுக்கு அருள் செய்ய இறைவனார் திருவுள்ளம் கொண்டார்.

இறைவனார் வயது முதிர்ந்த சிவனடியாராக வேடம் பூண்டு, திருநீலகண்டரின் இல்லத்திற்கு வந்தார். திருநீலகண்டரும் அவருடைய மனைவியும் சிவனடியாரை அன்புடன் வரவேற்று உபசரித்தனர்.

சிவனடியார் திருநீலகண்டரிடம் திருவோடு ஒன்றினை கொடுத்து “இந்த ஒடு மிகவும் புனிதமானது. இதற்கு ஈடுஇணை ஏதும் இவ்வுலகத்தில் இல்லை. இதனைப் பத்திரமாக வைத்திருங்கள். நான் தக்க சமயம் வரும்போது உங்களிடத்திலிருந்து இதனைப் பெற்றுக் கொள்கிறேன்.” என்று கூறினார்.திருநீலகண்டரும் அதனைத் தன்னுடைய பாக்கியம் என்று கூறி பெற்றுக் கொண்டு பாதுகாப்பான இடத்தில் வைத்தார்.

நாட்கள் பல உருண்டோடின. சிவனடியார் ஒருநாள் திருநீலகண்டரின் வீட்டிற்கு வந்து தன்னுடைய திருவோட்டினைத் திருப்பித் தருமாறு கூறினார்.திருநீலகண்டரும் திருவோட்டினை பாதுகாப்பாக வைத்திருந்த இடத்தில் சென்று தேடினார். அங்கு திருவோடு இருக்கவில்லை. சிவனருளால் ஏற்கனவே அது மறைந்திருந்தது.

மனம் பதைத்து திருநீலகண்ட நாயனார் சிவனடியாரிடம் திருவோட்டினைக் காணவில்லை என்பதைத் தெரிவித்தார். அதனைக் கேட்ட சிவனடியார் மிகவும் கோபம் கொண்டார்.அதனைக் கண்ட திருநீலகண்டர் “ஐயா, உங்களுக்கு வேறு ஒரு நல்ல திருவோட்டினை செய்து தருகிறேன். என்னுடைய பிழையை பொறுத்துக் கொள்ளுங்கள்.” என்றார்.

“என்னுடைய திருவோட்டின் பெருமைகளை அறிந்து கொண்டதால், நீ அதனை உன் வசம் வைத்துக் கொள்ளப் பார்க்கிறாய். என்னுடைய ஒப்பற்ற திருவோட்டினை இப்போதே என்னிடம் ஒப்படைத்துவிடு” என்று கத்தினார் சிவனடியார்.

திருநீலகண்டரின் மனைவியார் நடந்தவைகளைப் பார்த்து கண்ணீர் மல்க நின்றார்.

“ஐயா, உங்களுடையதை எனதாக்கிக் கொள்ளும் எண்ணம் ஏதும் எனக்கில்லை.” என்றார் திருநீலகண்ட நாயனார்.“உன்னுடைய மகனின் கரம் பற்றி குளத்தில் மூழ்கி, உன்னுடைய நிலை பற்றி எனக்கு சத்தியம் செய்து கொடு” என்றார் சிவனடியார்.

“எனக்கு குழந்தைகள் ஏதும் இல்லை” என்றவாறு விழித்தார் திருநீலகண்டர்.

“அப்படியானால் உன்னுடைய மனைவியின் கரம் பற்றி குளத்தில் மூழ்கி சத்தியத்தைச் செய்” என்றார் சிவனடியார்.

தனக்கும் மனைவிக்கும் இடையே உள்ள பிணக்கால் தன்னால் மனைவியின் கரம் பற்றி சத்தியம் செய்ய இயலாது என்பதை திருநீலகண்டர் தெரிவித்தார்.

“அப்படியானால், நீதான் என்னுடைய திருவோட்டினை மறைத்து வைத்துக் கொண்டுள்ளாய் என்பது தெளிவாகிறது. எனக்கு நீதி கிடைக்க வேண்டும். ஆதலால் வா, இப்போதே நாம் வழக்காடு மன்றம் செல்வோம்.” என்று கூறினார்.

திருநீலகண்டரும் அதற்கு சம்மதித்தார். இருவரும் தில்லை வாழ் அந்தணர்கள் இருந்த வழக்காடு மன்றத்திற்கு வந்தனர். சிவனடியார் நடந்தவைகளைக் கூறி, தனக்கு நியாயம் வேண்டும் என்ற கோரிக்கையை வழக்காடு மன்றத்தில் வைத்தார்.அவையோரும் திருநீலகண்டரிடம் “சிவனடியாரின் திருவோடு தங்களிடம் இல்லை எனில், மனைவியின் கரம் பிடித்து குளத்தில் மூழ்கி எழுந்து சத்தியம் செய்து தரவேண்டும்.” என்றனர்.

இதனைக் கேட்டதும் கலங்கிய திருநீலகண்டர் மனைவிக்கும் தனக்கும் பிணக்கு உள்ளதால், அவரின் கரம் பற்றி சத்தியம் செய்ய இயலாத நிலையை வெளியே கூற முடியாமல் மூழ்கித் தருகிறேன் என்று மட்டும் கூறினார். அவையோரும் சம்மதித்தனர்.

திருநீலகண்டர் தம் மனைவியுடன் திருப்புலீச்சுரத்து அருகிலுள்ள பொற்றாமரைக் குளத்திற்கு வந்தார். அவையோர் உள்ளிட்ட எல்லோரும் அங்கியிருந்தனர்.மூங்கில் கம்பு கொண்டு வந்த திருநீலகண்டர் ஒருபக்கத்தை பிடித்துக் கொண்டு மறுபக்கத்தை மனைவியைப் பிடிக்கச் சொன்னார்.



அதனைக் கண்ட சிவனடியார் மனைவியின் கரம் பற்றியே குளத்தில் மூழ்க வேண்டும் நிபந்தனை விதித்தார்.மீண்டும் சங்கடத்திற்கு ஆளான திருநீலகண்டர், மனைவியார் தன் மீது ஊடல் கொண்ட காரணத்தை அவையோரிடம் கூறினார். பின்னர் அவையோரின் சம்மதத்தை எதிர்பார்க்காமல், இருவரும் மூங்கில் கம்பினைப் பிடித்தவாறு குளத்தில் மூழ்கினர்.

இருவரும் குளத்தை விட்டு எழும்போது, இறையருளால் முதுமை நீங்கி இளமைப் பொலிவுடன் எழுந்தனர். அங்கியிருந்த அனைவரும் ஆச்சர்யப்பட்டனர். சிவனடியாரைத் தேடிய‌ போது அவரைக் காணவில்லை.அப்போது சிவபெருமான் உமையம்மையுடன் காளை வாகனத்தில் காட்சியளித்தார். “புலனை வென்றோர்களே, இளமைப் பொலிவுடன் எம்மை நீங்காதிருப்பீர்களாக” என்று வாழ்த்தினார்.

திருநீலகண்ட நாயனாரும் அவருடைய மனைவியாரும், பலகாலம் இப்புவியில் சிவத்தொண்டு புரிந்து, இறுதியில் சிவனடியைச் சேர்ந்தனர்.இறைவனின் பெயரைச் சொல்லி ஏற்ற சபதத்திற்காகத் தன் வாழ்வின் மகிழ்ச்சியைத் தியாகம் செய்த, திருநீலகண்ட நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்.

திருநீலகண்ட நாயனார் குருபூஜை நாள் தை விசாகம் ஆகும்.




இவரையே திருநீலகண்டத்துக் குயவனாருக்கும் அடியேன் என்று பெரியபுராணத்தில் சேக்கிழார் குறிப்பிடுகிறார்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

சண்டேசுவர நாயனார் குரு பூஜை - 22.01.22 - https://tut-temples.blogspot.com/2022/01/220122.html

எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன் - 16.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/16012022.html

கலை மலிந்தசீர் நம்பி கண்ணப்பர்க் கடியேன் - 15.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/15012022.html

 தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன் - 09.01.2022  - https://tut-temples.blogspot.com/2022/01/09012022.html

மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன் - 03.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/03012022.html

முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_68.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

இவரை எம்முன் கொண்டு நிறுத்துக - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_29.html

ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_57.html

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_20.html

விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_69.html

 வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_98.html

 செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post.html

No comments:

Post a Comment