அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இன்று மார்கழி மாத ரேவதி நட்சத்திரம். இன்று பிற்பகல் 1 மணி முதல் நாளை மதியம் 1 மணி வரை ரேவதி நட்சத்திரம் உள்ளது. இதற்கு முந்தைய அறுபத்து மூவர் குரு பூஜை பதிவில சாக்கிய நாயனார் பற்றி கண்டோம். இப்படியெல்லாம் நடக்குமா? என்றால் நடக்கும் என்று பெரிய புராணம் வழியில் அறிகின்றோம். இறைவன் மீது கல்லெறிந்து முக்தி அடைந்தவர் சாக்கிய நாயனார். இது போல் இன்று நாம் வாயிலார் நாயனார் பற்றி அறிய உள்ளோம்.பெயர்: வாயிலார் நாயனார்
குலம்: வேளாளர்
பூசை நாள்: மார்கழி ரேவதி
அவதாரத் தலம்: திருமயிலை
முக்தித் தலம்: திருமயிலை
"நெஞ்சகமே கோயில் நிறைவே சுகந்தம்; அன்பு மஞ்சள் நீர்; பூசைகொள்ள வாராம் பராபரமே"
என்று பரம்பொருளைக் கூவியழைக்கிறார் தாயுமானவர்.
இறைவழிபாடு இருவகைப்படும்:
1.புறவழிபாடு
2.அகவழிபாடு
புறவழிபாடு என்பது, ஆலயம் சென்று வழிபடுவது. ஆலயம் தூய்மை செய்வது, தீபம் ஏற்றுவது போன்றவை.
அகவழிபாடு என்பது, தன் உள்ளத்துக்குள்ளேயே இறைவனை அமர்த்தி, ஆத்மா என்ற தீபம் ஏற்றி பூஜை செய்து வழிபாடு செய்து முக்தி அடைவது ஆகும். இவ்வகை வழிபாட்டில் முக்தி நிலை பெற்றவருள் மிகச் சிறந்தவர் வாயிலார் நாயனார்.
"வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை"
என்று திருநாவுக்கரசர் அருளினார். இறைவனை உடம்பால் வணங்கிடவேண்டும்; வாயினால் வாழ்த்திட வேண்டும்; மனதால் தியானம் செய்ய வேண்டும் என்கிறது இப்பாடல். இறைவனை உடம்பால் வணங்குவது எளிது; அதைவிட மேலானது அவன் புகழ்பாடுவது; இந்த இரண்டையும் விட அரிது இறைவனை சிந்தையில் இருத்தி தியானிப்பதாகும்.. அதனால்தான் மானசீக பூஜை அளவற்ற மகிமை கொண்டதாகப் போற்றப்படுகிறது.
மகிமை மிக்க மானசீக பூஜையால் இறைவனை வழிபட்டு, சிவாலயமே செல்லாமல், தலைசிறந்த சிவனடியராக விளங்கியவர் ஒருவர் உண்டென்றால் அவர் 63 நாயன்மார்களுள் ஒருவரான வாயிலார் நாயனார்தான். நாயன்மார்களில் இவர் வேறுபட்ட சிந்தனையுடையவராக இறைவனை மானசீகமாக துதித்தது இறைவனை மிகவும் கவர்ந்தது.
அது மட்டும் இன்றி சரியைத் திருத்தொண்டுகளான திருவலகிடல், திருமெழுக் கிடல், திருவிளக்கேற்றல், தலை வணங்கல், சிவன் புகழ் பாடல் ஆதியன புறவுறுப்புக்களாகிய கை, தலை, நா முதலியன சிவஞ்சாரும் நெறியில் நிற்கப் பயிற்று மாறுபோல தூபம், தீபம், மலர், நீர், நைவேத்தியம் முதலியன செய்வித்து வழிபட்டு செய்தார்.
அவர் சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தவர். இவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் 63 நாயன்மார்களில் வேளாளர் 12 நாயன்மார்களில் ஒருவர் ஆவார். இவர் எப்பொழுது வாழ்ந்தார் என்று திட்டவட்டமாகத் தெரியவில்லை. இவரைப்பற்றி 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த
சேக்கிழார் அவர்கள் தம்முடைய பெரியபுராணத்திலும் , 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த
சுந்தரமூர்த்தி நாயன்மார், அவருடைய திருத்தொண்டத் தொகையில்
"தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்"
என்று கூறியிருப்பதாலும், இவர் 8 ஆம் நூற்றாண்டுக்கும் முன்னர் வாழ்ந்த சிவனடியார் என்பது புலப்படும்.. இவர் வாழ்க்கையின் வரலாறு மிகவும் சுருக்கமானது. இவர் சிவபெருமானையே எப்பொழுதும் மனத்திலே வைத்துத் தொழுது ஏதும் பேசாமலே அன்பு செய்து வந்தார்.சிவ பூஜை ஒரு தவமாக மேற்கொண்டார்.
பரமசிவனை ஒருபொழுதும் மறவாத மனமாகிய ஆலயத்துள் இருத்தி, ஞானமாகிய திருவிளக்கை ஏற்றி, ஆனந்தமாகிய திருமஞ்சனமாட்டி, அன்பாகிய திருவமுதை நிவேதித்தலாகிய ஞானபூசையை நெடுங்காலஞ்செய்து கொண்டிருந்து, சிவபதத்தை அடைந்தார்.
இவர் சூத்திரத் தொல்குடியில் பிறந்த வேளாளர் என்பதை பெரிய புராணத்தில்,
"மன்னு சீர்மயி லைத்திரு மாநகர்த்
தொன்மை நீடிய சூத்திரத் தொல்குல
நன்மைசான்ற நலம்பெறத் தோன்றினார்;
தன்மை வாயிலார் என்னும் தபோதனர்" என்று கூறுகின்றார்.
இதில் "தன்மை வாயிலார் என்னும் தபோதனர்" என்னும் தொடர் மிகவும் இன்றியமையாதது. வாயிலார் என்னும் பெயர் அவர் பேசாமல், மௌனமாய் சிவன் பால் அன்பு வழிபாடு செய்தவர் என்னும் பொருளோடு, அவர் என்றும் "நான்" என்னும் அகந்தை எழாத அரும் தன்மையைப் பெற்றிருந்தார் என்பதை "தன்மை வாயிலார்" என்பது குறிக்கும்.
தன்மை என்பது "நான்" என்பதைக் குறிப்பது. வாயிலார் நாயன்மாருக்கு திருமையிலை கபாலீசுவரர்-கற்பகாம்பாள் கோயிலில் முருகன் உண்ணாழிகைக்கு அருகில் தனி உண்ணாழிகை (சன்னதி) உண்டு. மார்கழியில் ரேவதி நாள்மீன் கூடும் நாளில் குருபூசை என்னும் வழக்கம் உண்டு.
மானசீகமான தவத்துக்கு இணையான இறை வழிபாடு எதுவுமே இல்லை. பரம ஏழைக்கும் வலிய வந்து அருள் மழைபொழியும் பரம்பொருளுக்கு மிக உகந்த வழிபாடு உள்ளத்தில் கோயில் அமைத்து நாளும் அன்பையே மலராகக் கொண்டு மானசீகமாக, மற்றவர் அறியும் வண்ணம் வெளியில் தெரியாமல் அர்ச்சனை செய்வதே மிக உயர்ந்த அர்ச்சனையாகும் என்பதையே இவரது வாழ்வு விளக்குகிறது.
“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே”
சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். எனவே இத்தகைய சிறப்புமிக்க வழிபாட்டு முறையை உலகுக்கு உணர்த்திச் சென்ற சிவ அன்பர் வாயிலார் நாயனாரின் முக்தி நாளில் இதனை நினைவு கூர்வோம். அவரின் மானசீக வழிபாட்டுக்குத் தலை வணங்குவோம்.
தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
மீள்பதிவாக:-
மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன் - 03.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/03012022.html
முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_68.html
நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html
இவரை எம்முன் கொண்டு நிறுத்துக - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_29.html
ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_57.html
முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_68.html
நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html
ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_57.html
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_20.html
விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_69.html
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_98.html
செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post.html
No comments:
Post a Comment