"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, April 30, 2022

அந்தநாள் >> இந்த வருடம் - சுபகிருது வருஷம் - 2022-23

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நாம் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கும் சுபகிருது ஆண்டிற்கான அந்தநாள் >> இந்த வருடம் தொகுப்பை இன்றைய பதிவில் குருவருளால் தர உள்ளோம். மே மாதத்திற்கான நம் தளத்தின் சேவைகளுக்கு சிறு தொகை காணிக்கையாக செலுத்தி உள்ளோம். உங்கள் பார்வைக்கு கீழே சமர்ப்பிக்கின்றோம்.

1. கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய பூஜை

2. கூடுவாஞ்சேரி விநாயகர் கோயில் -  பௌர்ணமி வழிபாடு  

3. மாதந்தோறும் தஞ்சாவூர் சித்தர் அருட்குடில் - சிறு தொகை 

4. மாதந்தோறும் ஒரு நாள் - ERS டிரஸ்ட் சார்பில் நடைபெறும் அன்னதானம் 

5. தென்காசி ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோயிலில் தினமும் மதியம் ஒரு அன்பருக்கு அன்னசேவை 

6.மாதந்தோறும் திருஅண்ணாமலை சாதுக்கள் அன்னதானம் - சிறு தொகை உபயம் 

7. மாதந்தோறும் தர்ம சிறகுகள் அறக்கட்டளை - சிறு தொகை உபயம் 

8.கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் மாதந்தோறும் குடிநீர் உபயம் 

9.கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் மாதந்தோறும் கிருத்திகை,சதுர்த்தி பூஜைக்கு மாலை உபயம் 

10. தமிழ் மாத விழாக்கள் மற்றும் கோயில் கும்பாபிஷேக திருப்பணிக்கு சிறு தொகை உபயம் 

இங்கே நாம் சில சேவைகளை மட்டுமே குறிப்பிட்டுள்ளோம். இன்னும் குருவருளால் பல சேவைகள் தொடர்ந்து வருகின்றது.இது தவிர மாதந்தோறும் நமக்கு கிடைக்கும் பொருளுதவி கொண்டு மேலும் பல கோயில்களுக்கு நம்மால் இயன்ற சேவைகள், மருத்துவ உதவி, ஞான தானமாக திருவருள் பயணம் இதழ் சந்தா, TUT தளத்தின் பதிவுகள்  என இன்னும் பல... அனைத்தும் நீங்கள் தருகின்ற பொருளுதவியாலும், அருளுதவியாலும் தொடர்ந்து செய்து வருகின்றோம். இன்னும் பற்பல சேவைகளை நாம் குருவருளால் செய்ய வேண்டியுள்ளது. நமக்கு உற்ற துணையாகவும் உறுதுணையாகவும் உள்ள தங்கள் அனைவருக்கும் நன்றி கூறி இங்கே மகிழ்ச்சி அடைகின்றோம்.

சரி.இனி விசயத்திற்கு வருவோம். அந்த நாள் இந்த வருடம் வழிபாடு நமக்கு கிடைத்த பொக்கிஷம் ஆகும்.ஒவ்வொரு ஆண்டும் அந்த நாள் இந்த வருடம் மூலம் நாம் குருவருளும் இறையருளும் பெற்று வருகின்றோம். இவற்றை நாம் வார்த்தையில் சொல்ல இயலாது. 


அகத்தியப் பெருமானின் "சித்தன் அருளை" வாசித்து வரும் அடியவர்கள், அகத்தியப் பெருமான் குறிப்பிட்ட தினங்களில், நாடி வாசித்த மைந்தனை, கோடகநல்லூர், நம்பிமலை, பாபநாசம், கரும்குளம், திருச்செந்தூர் என்று பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, இறை, சித்த அனுபவங்களையும், ஆசிர்வாதங்களையும் பெற்றுக் கொடுத்ததை, நாம் அனைவரும் அறிவோம். அதில் மறைமுகமாக "அந்த நாள்/இந்தநாள்" என்று அகத்தியப் பெருமான் பல இடங்களில், குறிப்பிட்டதை கவனித்திருக்கலாம். பல அகத்தியர் அடியவர்களும், அந்த தினத்தில் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று அருள் பெற்றது நினைவிருக்கும்.

நம் அனைவருக்குமே, "அந்த நாள் இந்த வருடம்", எப்போது வருகிறதோ, அன்று, அங்கு சென்று இருந்து இறைவன்/பெரியவர்களின் அருள், ஆசிர்வாதம், நிம்மதியான வாழ்க்கைக்காக பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம், ஒவ்வொரு அகத்தியர் அடியவரின் மனதுள் இருக்கும். உங்களின் அந்த இனிய எண்ணைத்தை பூர்த்தி செய்வதற்காக, இந்த வருடம் "அந்த நாட்களை" தெரிவு செய்து இங்கே தருகிறேன். குறித்து வைத்துக்கொண்டு, அங்கெல்லாம் சென்று, அவர் அருள் பெற்று வருமாறு, வேண்டிக் கொள்கிறேன்.

ராமரும் சீதையும் ராமேஸ்வரத்தில்:-

ராமேஸ்வரத்தில் சிவபெருமான் தானே விரும்பி அமர்ந்தார். சித்திரை மாதத்தில், ராமரும், சீதையும் அங்கே வந்து, வளர்பிறை ஏகாதசி அன்று (12/05/2022, வியாழக்கிழமை) சிவபெருமானுக்கு பூசை செய்து பத்து நாட்கள் அங்கு உறைவார்கள்.  

ஸ்ரீ போகர் திருநட்சத்திரம்:-

28/05/2022 - சனிக்கிழமை வைகாசி மாதம் - பரணி நட்சத்திரம்.

நம்பிமலை:- (இறைவனும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருக்க, அகத்தியப் பெருமான் நம்பிமலை பெருமாளுக்கு 200 வருடங்களுக்கு ஒருமுறை செய்கிற பூசையை செய்த நாள்)

08/08/2022 - ஆடி மாதம் - திங்கட்கிழமை - சுக்லபக்ஷ ஏகாதசி திதி, கேட்டை நக்ஷத்திரம்

பாபநாசம்:- (நதிகள் எல்லாம் அகத்தியப் பெருமானுடன் இருந்து அன்று தீர்த்தமாடியவர்கள் அனைவருக்கும், அவர்கள் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் புண்ணியம் கொடுத்த நாள். நவகிரக தம்பதிகள் ஆசிர்வதித்த நாள்)

09/08/2022 - ஆடி மாதம் - செவ்வாய்கிழமை - சுக்லபக்ஷ துவாதசி/திரயோதசி திதி - மூலம் நட்சத்திரம்.

திருச்செந்தூர்:- (ஓதியப்பர், அகத்தியர், அனுமன் ஆகிய மூவரும் சேர்ந்து இருந்த நாள். அதில், முருகர் அனுமனுக்கு அன்று அனுமனின் நட்சத்திரம் ஆனதால், அவரை ஆரத்தழுவி, நல்வாழ்த்து தெரிவித்த நாள். இன்றும் எல்லா மாதமும் அனுமன், அவரது நட்சத்திரத்தன்று திருசெந்தூரில் அன்று மாலை வந்து முருகரின் அருள் பெற்று செல்கிறாராம்.)

09/08/2022 - ஆடி மாதம் - செவ்வாய்கிழமை - சுக்லபக்ஷ துவாதசி/திரயோதசி திதி - மூலம் நட்சத்திரம்.

ஓதியப்பர் பிறந்த நாள்:- போகர் கூற்றின் படி, ஓதியப்பர் ஆவணி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார். ஓதியப்பரின் பிறந்த நாளை அபிஷேக ஆராதனைகளுடன் கொண்டாடுகிற நாள். சித்தர்கள் அனைவரும் அன்று அங்கே ஒன்று கூடி, ஓதியப்பரை தரிசனம் செய்து, பின்னர் 90 நாட்களுக்கு அங்கேயே தங்கி இருக்க தொடங்குகிற நாள்.

24/08/2022 -ஆவணி மாதம் - புதன்கிழமை - திரயோதசி திதி பூசம் நட்சத்திரம் (மாலை 3.35 முதல்).

கோடகநல்லூர்:- எல்லா தெய்வங்களும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள். தாமிரபரணியின் பெருமையை அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள். அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள் அருளுகிற நாள்.

06/11/2022 - ஞாயிற்றுக்கிழமை - ஐப்பசி மாதம் சுக்லபக்ஷ த்ரயோதசி திதி - ரேவதி நட்சத்திரம்.

முருகர், விநாயகர், ஐயப்பன் இணைந்து சந்தாேசமாக விளையாடக்கூடிய இடம் ஓதிமலை உச்சியில். ஓதிமலை உச்சியில் ஆலய சுற்றுபிரகாரத்தில். கார்த்திகை மாதத்தில் வரும் கடைசி சஷ்டி நாள் - 14/12/2022 புதன் கிழமை.

பாபநாச ஸ்நானம்:- தாமிரபரணி புராணத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சிவபெருமானை லிங்க ரூபத்தில் பிரதிஷ்டை செய்து, தாமிரபரணி தேவியானவள், அகத்தியப் பெருமான் முன்னிலையில் தவமிருந்து, இறைவனிடமிருந்து, நம் மனித குலத்திற்காக ஒரு வரத்தை பெற்றாள். எவர் இந்த இடத்தில், மார்கழி மாதத்தில் எம் தீர்த்தத்தில் நீராடி, உம்மை கண்டு வணங்குகின்றனரோ, அவர்களுக்கு இந்த பூமியில் இனிமேல் பிறவி என்பதே இருக்கக்கூடாது. சிவபெருமானும் தாமிரபரணியின் பூசை, தவத்தில் மகிழ்ந்து "அப்படியே ஆகட்டும்" என்று கூறி பாபநாத சுவாமி கோவில் லிங்கத்தினுள் மறைந்தார். அந்த நாட்கள் இந்த வருடம் 16/12/2022 முதல் 14/01/2023 க்குள் வருகிறது.

சிவபெருமான், சிதம்பரம்:-

06/01/2023 - வெள்ளிக்கிழமை, பௌர்ணமி திதி, திருவாதிரை நட்சத்திரம். ஆருத்திரா தரிசனம். சிதம்பரம் கோவிலில் சிவபெருமான், அபிஷேக நேரத்தில், ஸ்தல வ்ருக்ஷத்தின் அடியில் அமர்ந்திருப்பார். அன்று சிவபெருமானே விரும்பி அமர்கிறார். நாமும்  அன்று அங்கு அமர வேண்டும் என்கிறார் அகத்தியப்பெருமான்.

அகத்தியப் பெருமானின் திரு நட்சத்திரம்:-

09/01/2023 - திங்கட்கிழமை - மார்கழி மாதம், துதியை திதி - ஆயில்யம் நட்சத்திரம்.

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்

மீள்பதிவாக:-

சித்தன் அருள் - 1052 - அந்தநாள்>>இந்தவருடம்-கோடகநல்லூர்-இரண்டாம் அபிஷேக பூசை! - https://tut-temples.blogspot.com/2021/12/1052.html

சித்தன் அருள் - 1048 - அந்தநாள் >> இந்த வருடம் இரண்டாம் பூஜை - கோடகநல்லூர்! - https://tut-temples.blogspot.com/2021/12/1048.html

 அந்தநாள் >>இந்தவருடம் இரண்டாம் பூஜை - கோடகநல்லூர் - 12.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/12122021.html

 TUT கோடகநல்லூர் யாத்திரை - 10.11.2019 - https://tut-temples.blogspot.com/2021/10/tut-10112019.html

அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 18.10.2021 - https://tut-temples.blogspot.com/2021/10/18102021.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/10/tut_32.html

 "சித்தன் அருள்" அருளிய கோடகநல்லூர் உழவாரப் பணி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_4.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/10/tut.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/10/tut.html 

 கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

இறைவா...அனைத்தும் உன் செயலே! - அனைவருக்கும் நன்றி - https://tut-temples.blogspot.com/2022/04/blog-post_14.html

ஆறாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2022/04/tut.html

 ஐந்தாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2021/04/tut.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (5)  - https://tut-temples.blogspot.com/2020/04/tut-5.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (3) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-3.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html

Sunday, April 24, 2022

ஸ்ரீ அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - திருவோணம் 2022-23 !

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவின் அருளாலே குருவின் பாதம் தொட்டு இன்றைய பதிவை தொடங்குகின்றோம். இன்று திருவோண நட்சத்திரம். இன்றைய சித்திரை மாத திருவோண நட்சத்திரம் இன்று இரவு 8 மணி வரை உள்ளது. ஏற்கனவே நம் தளத்தில் திருவோண நட்சத்திர வழிபாடாக நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமான் உத்திரவு கொடுத்துள்ளார். அதனை அப்படியே தருகின்றோம். அன்பர்கள் இந்த திருவோண வழிபாட்டை மாதந்தோறும் தவறாது செய்து வரும்படி வேண்டுகின்றோம். 




இவ்வளவு கவலையுடன் ஏன் வாழ வேண்டும் என யோசிக்கிறாய்.? 

கடந்த 2  ஆண்டுகள் நடந்த மருத்துவ பேரிடரில் உன்னை தாண்டி வர வைத்த இறைவன் ஒரு காரணமில்லாமலா அதை செய்து இருப்பார்.? கடந்த இரண்டு ஆண்டுகளில் உன்னை காப்பாற்றிய இறைவன் இனியும் உன்னை காப்பாற்றுவார். கரையேற்றுவார்.உன்னை பலர் போற்றும் படி செய்வது அவர் பொறுப்பு.கவலையை உன் மனதில் சுமக்காதே. இறைவனின் பெயரை உன் எண்ணங்களில் சுமந்து கொள். இனி உனக்கு எல்லாம் நன்மையே

அகத்தியப்பெருமானின் உத்தரவு, சித்தன் அருள் தொகுப்பு - 840 இல் கீழவருமாறு உரைக்கப் பட்டிருந்தது.

"ஆறறிவு பெற்ற மனிதனை தவிர பிற உயிர்கள்/ஆத்மாக்கள் (அனைத்து பிராணிகளும்) உடலை நீத்து சென்றாலும்  அவைகளை மோக்ஷத்திற்கு கரை ஏற்றிவிட இங்கு மனிதர்களின் பிரார்த்தனை தேவைப்படுகிறது. ஆதலின், கீழ்கண்ட பிரார்த்தனையை அகத்தியர் அடியவர்கள் அனைவரும் குறிப்பிட்ட தினத்தில் சூரிய உதயத்துக்கு பின், சூரிய அஸ்தமனத்துக்குள் செய்யச்சொல்கிறார்.

எல்லா மாதமும் "திருவோணம்" நட்சத்திரத்தன்று, ஒரு செம்பு பாத்திரத்தில் நீர்விட்டு, அதில், சிறிது துளசி, சிறிது மஞ்சள்பொடி, சிறிது பச்சைக்கற்பூரம் சேர்த்து, வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து, வலதுகையை அந்த நீரில் மேலாக வைத்து "ஓம் ஸ்ரீ மாய மாலனே நமஹ" என 108 முறை ஜெபித்து, பின்னர் அந்த நீரை பூமியில்/மண் தரையில் விட்டுவிடவேண்டும். இதை செய்யும் முன், பெருமாளிடம், "அகத்தியர் உத்தரவின் பேரில் இதை செய்கிறோம். இதை ஏற்றுக்கொண்டு அனைத்து ஜீவ ராசிகளுக்கும், மோக்ஷத்தை அருளிட வேண்டும்" என வேண்டிக் கொள்ளவேண்டும். நாம் பூமியில் விடும் தீர்த்தத்தை/பிரார்த்தனையை ஏற்று சென்று, இறைவனிடம் அவ்வுயிர்களுக்கு மோக்ஷத்தை வழங்க அகத்தியப்பெருமான் செய்வார் என உரைத்துள்ளார். பிரார்த்திப்பவர் வாழ்வும் சிறப்பாக மேம்படும் என்ற அருள் வாக்கும் வந்துள்ளது."

அடியேன் இந்த உத்தரவை எல்லா மாதமும் நிறைவேற்றி வருகிறேன். அதன் பெருமையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

அகத்தியரின் உத்தரவை நிறைவேற்றி, அவர் அருள் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.




திருவோண நட்சத்திரத்தன்று, இவ்வுலகில் பல்லுயிர்களும் மோக்ஷம் பெறும் எண்ணத்தில், நம் குருநாதர் அனைவரையும் ஒரு குவளை நீரில், மஞ்சள்பொடி, துளசி, பச்சைக்கற்பூரம் இட்டு, 108 முறை "ஓம் மாயமாலனே நமஹ! என ஜெபித்து, பூமியில் விடவேண்டும் என உரைத்துள்ளார்.

இந்த வருடம் (01/04/22 - 31/03/2023) எல்லா மாதமும் திருவோண நட்சத்திரம் வருகிற தேதியை கீழே தருகிறேன். குறித்து வைத்துக்கொண்டு, அவர் கூறியது போல் செய்து, புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளுங்கள் என வேண்டிக் கொள்கிறேன்!

சித்திரை - 24/04/2022
வைகாசி - 21/05/2022
ஆனி - 18/06/2022 - 15/07/2022
ஆடி - 11/08/2022
ஆவணி - 08/09/2022
புரட்டாசி - 05/10/2022
ஐப்பசி - 01/11/2022
கார்த்திகை - 29/11/2022
மார்கழி - 26/12/2022
தை - 22/01/2023
மாசி - 19/02/2023
பங்குனி -18/03/2023 -14/04/2023

அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்

மீள்பதிவாக:-

இறைவா...அனைத்தும் உன் செயலே! - அனைவருக்கும் நன்றி - https://tut-temples.blogspot.com/2022/04/blog-post_14.html

ஆறாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2022/04/tut.html

 ஐந்தாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2021/04/tut.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (5)  - https://tut-temples.blogspot.com/2020/04/tut-5.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (3) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-3.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html

Friday, April 22, 2022

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (5)

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் TUT தளத்தில் வாழ்வாங்கு வாழ என்ற  தொடர் பதிவு கேள்வி-பதில் வடிவில் நாம் தொடர்வது அனைவரும் அறிந்ததே.சென்ற பதிவில் ஆறு  கேள்விகள் பார்த்தோம்.ஆறு கேள்விகளுமே அறிவை மேம்படுத்தும்  என்று நம்புகின்றோம். பதிவின் இறுதியில் முந்தைய பதிவுகளின் சுட்டிகளை இணைத்துள்ளோம்.படிக்காதவர்கள் கண்டிப்பாக படிக்கவும். ஏற்கனவே படித்தவர்களும் ஒரு முறை படிக்கவும்.மீண்டும் மீண்டும் மனதுள் இந்த செய்திகளை அசை போட்டால் தான் வாழ்வாங்கு வாழ நம்மால் முடியும். சென்ற பதிவில் உடல்,உயிர்,மனம் போன்ற செய்திகளுடன் குரு, சத்குரு, சற்குரு, சித்தர்கள், மகான் போன்ற விளக்கங்கள் பார்த்தோம், சாகாக்கலை பற்றி சிறிது தொட்டு காட்டினோம்.அதிலும் கடைசி கேள்வியும் அதற்கான பதிலும் இருக்கின்றதே, மீண்டும் மீண்டும் படித்து மனதில் இருத்த வேண்டிய ஒன்று.

இவற்றையெல்லாம்  தெரிந்து,உணர்ந்து கொண்டாலே வாழ்வாங்கு வாழ்வது சாத்தியமே.

சரி. இந்த மாத சில கேள்விகளும், வாழ்வாங்கு வாழ்வதற்கான பதில்களும் இதோ...

முதலில் மௌனத்தின் குரல் பற்றி 

கேள்வி - மௌனம் என்றால் பேசாமல் அமைதியாக இருப்பதுதானே ! நீங்கள் ''மௌனத்தின் குரல்'' என்று சொல்வது முரண்படுகிறதே ?

இராம் மனோகர் - ஹா... ஹா.... ஹா... இப்பொழுதுதான் நான் ரொம்பப் பேசப் போகிறேன். நண்பரே மௌனம் வலிமையானது. ஆழ்கடலைப் போல அழுத்தமானது. இந்தப் பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ரிதம் உண்டு. அது போல மௌனத்திற்கும் ரிதம் உண்டு. ஆங்கிலத்தில் சொல்லும் பொழுது SILENCE SPEAKS LOUDER THAN WORDS என்பார்கள். ஒரு சிறிய விதைக்குள் எப்படி விருத்திகள் அனைத்தும் ஒடுங்கிக் கிடக்கின்றனவோ ! அது போல அலைகள் அனைத்தும் மௌனத்தில்தான் ஒடுங்கி நிற்கின்றன. மௌனத்தில் இருந்தான் நாதம் வந்தது. மௌனத்தில் இருந்துதான் குரல் வந்தது. அதற்கு முன் அவை அங்கேதான் இருந்தன. மௌனத்தின் குரலை மௌனத்தில்தான் உணர முடியும். எவ்வளவு அதிகமான ஓசைகள் எழும்பினாலும், சில இடங்களில் போய் அமர்ந்தால் நம் மனம் மௌனமாகி விடுகின்றதே ! அது எப்படி ?





கடற்கரையில் போய் அமர்ந்து தியானம் செய்கிறார்கள். அங்கே ஆர்ப்பரிக்கும் அலைகளின் பேரிரைச்சல் ஓயாமல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அடர்ந்த வனங்களுக்குள் போய் அமர்ந்து கொண்டு தியானம் செய்கிறார்கள். அங்கேயும் சலசலவென இலைகள் பேரிரைச்சலை ஏற்படுத்துகின்றன. ஆனாலும், மனம் அவற்றை உணர்வதில்லையே ! அமைதியாக, மௌன நிலையில் தவம் செய்கிறார்களே! அது எப்படி ? ஏனென்றால் அந்த ஓசைகளில் குழப்பமில்லை. எண்ணற்ற ஓசைகள் அங்கே முட்டி மோதிக் கொண்டு நம் மன அமைதியை குலைப்பதில்லை. ஒரே கதியில் சீராக ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. எனவே நம் மனமும் எளிதில் ஒரே எண்ணத்தில் நிலை பெற்று நிற்க முடிகிறது.

எப்படி ஒரே எண்ணத்தில் நிலைத்திருப்பதை மௌனம் என்று சொல்கிறோமோ, அது போலவே ஒரே கதியில் ஒலிக்கும் ஓசை கூட மௌனம்தான். பிரபஞ்சம் கடந்து வானவெளிக்குப் போனால் இந்த மௌனமான ஓசையைக் கேட்கலாம். அந்த ஓசை மௌனத்தைப் போலவே அழுத்தமானதாகவும், ஆழமானதாகவும் இருக்கும். அந்த ஓசையின் அதிர்வு நம் உயிரின் அடி வேர் வரை போய் பரவி நம் அகங்காரத்தை அசைத்துப் பார்க்கும். எனவே மௌனத்திற்கு குரலோ, ஓசையோ, அலையோ இல்லை என்று எண்ணி விடாதீர்கள். எல்லாம் அதற்குள்தான் ஒடுங்கிக் கிடக்கின்றன. சரி நம் விஷயத்திற்கு வருவோம்.

மௌனத்தின் குரல் அதாவது மௌனத்தின் ஒலி என்று சொல்லும் பொழுது ப்ரணவத்தை சுட்டிக் காட்டுவார்கள். ப்ரணவ ஒலியானது மனதை அமைதிப்படுத்தும். அந்தப் பரணவ ஒலியிலிருந்தே மற்ற எல்லாம் வந்தன என்று சொல்வார்கள். ப்ரணவ ஒலியின் பாங்குடைய ஓசைகள் மனதை அமைதிப்படுத்தும். அதற்கு உதாரணமாக கடலின் ஓசை, வனத்தில் காற்றில் அசையும் மரங்களின் ஓசை, சங்கின் ஓசை இது போன்று பல ஓசைகள் ப்ரணவத்தின் பாங்கிலேயே அமைந்துள்ளன. எனவேதான் வனங்களிலே போய் தவம் செய்கிறவர்களை அந்த ஓசை சலனப்படுத்துவது இல்லை. மேலும் அமைதியைத் தீவிரப்படுத்துகிறது.

கடற்கரையில் போய் அமர்ந்தால் மனம் அமைதியாக இருக்கிறது என்று சொல்லக் கேட்கிறோம். ஆனால், கடலோ ஓயாது அலையடித்து இரைந்து கொண்டே இருக்கிறது. என்றாலும், அந்த ஓசையில் ப்ரணவத்தின் பாங்கு மிகுந்திருப்தால், அவ்வளவு இரைச்சலையும் தாண்டி மனம் அமைதி அடைகிறது. மேலும் கடற்கரையில் எந்தத் தடையுமின்றி காற்று வேகமாக வந்து நம் காது மடல்களில் மோதி துளையினுள் நுழையும் போது சங்கின் ஓசை கேட்கிறது. அதுவும் ப்ரணவத்தின் பாங்குடைய ஓசையே. எனவே கடற்கரையில் மன அமைதி அதிகரிக்கிறது. இதே பின் நோக்கிப் போகும் போது ஒன்றிலிருந்து ஒன்று என்று எல்லாம் தோன்றியிருந்தாலும், எல்லாம் ப்ரணவமாகிய ஓசையிலிருந்தே வந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது. எனவேதான் நாத ப்ரம்மம் என்கிறார்கள்.
அந்த ப்ரணவமாகிய ஓசை எங்கிருந்து வந்தது. அது பரப்ரம்மத்திடமிருந்து வந்தது. அந்தப் பரப்ரம்மமோ மௌனமே வடிவானது. ஆக மௌனம் என்றால் இறைவன். அவரின் குரல் எது ? அது வேதம்(ஸ்ருதி). வேதம் என்ன சொல்கிறது ? வேறொன்றும் சொல்லவில்லை, எல்லாவற்றையும் கடந்து மௌனத்தில் நிலைபெறவே சொல்கிறது. மௌனம் என்றால், இருபத்தி நான்கு தத்துவங்களும் அடங்கி நிற்பதுவே மௌனம். நாம் பொதுவாக பேசாமல் இருப்பதுவே மௌனம் என்கிறோம். பேசிக் கொண்டே இருப்பவரின் மனதில் அசாந்தி நிலவுகிறது. பேச்சுக் குறையும் அளவிற்கு மனம் சாந்தி அடைகின்றது. பேசியே ஜெயிப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், அது ஆன்மிக வெற்றி ஆகாது. நுணலும் தன் வாயால் கெடும் என்ற நாலடியார் பாட்டு சொல்வதைப் போல, பேசியே கெட்டவர்கள்தான் அதிகம்.முறை தவறி வாயைப் பயன்படுத்திக் கெட்டுப் போனவர்களே பேயாக அலைகிறார்கள் என்று சொல்லும் வழக்கம் இருக்கிறது. அவர்கள் தங்களுக்குத் தாங்களே கேடு விளைவித்துக் கொள்வதோடு, பிறர்க்கும் இன்னல் விளைவிக்கின்றனர்.

அத்தகைய வீண் பேச்சாளர்களுக்கும் பேரின்பத்திற்கும் வெகு தூரம். நிறைகுடம் ததும்புவதில்லை. அறிவிற் சிறந்தவர்கள் அமைதியாகவே இருக்கிறார்கள். கிணற்றின் வாயை சுற்றுச் சுவர் கட்டி பாதுகாக்காவிட்டால் காற்று மற்றும், விலங்குகள், மனிதர்களால் கிணறு மாசுபட்டு கிணற்று நீர் வீணாகி விடும் அது போல, மனிதனும் தன் வாயைக் கட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது. இரண்டு காரியங்களுக்கு இந்த வாயானது உதவுகிறது. ஒன்று உணவு மற்றொன்று பேச்சு. உணவைப் பொருத்தமான வேளையில் அளவாக உண்பவன் உத்தமனாக வாழ்கிறான். அதையே அளவு கடந்து புசித்து விட்டு தன் உடல் வாழ்வைப் பாழ்படுத்துபவன் அதமனாகிறான். மற்றொன்று பேச்சு. அளந்தெடுத்துப் பொருத்தமான சமயத்தில் தக்கவர்களிடம் மட்டும் பேச மனிதன் கடமைப்பட்டிருக்கிறான். அல்லாதவர்கள் துன்பப்பட நேரிடும்.

தவத்தில் நாட்டம் அதிகரிக்கும் அளவிற்கு ஒருவனிடம் பேச்சற்ற நிலை அதிகரிக்கிறது. யோகத்தைப் பொருத்த வரை முதற்கட்டமாக அமைவதே சொல்லையும், செயலையும் ஒன்று படுத்துவதுதான். உள்ளத்தில் இருப்பதுதான் உரையாக வடிவெடுத்து வரும். ஆனால், பெரும்பாலனவர்களுக்கு அவ்வாறு நடைபெறுவது இல்லை. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களே அதிகம் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் உறவை எனக்கு ஏற்படாமல் செய் என்று வள்ளலார் இறைவனிடம் வேண்டுகிறார். இதையேதான் அர்ஜுனனைப் பார்த்து கிருஷ்ண பரமாத்மா ''நீ பண்டிதன் போல் பேசுகிறாய், பாமரன் போல் விசனப்படுகிறாய்'' என்று சொன்னார். இங்கே சிந்தைக்கும், சொல்லுக்கும் முரண்பாடு ஏற்பட்டு விட்டது. இரண்டுக்கும் பொருத்தமில்லை. இரண்டையும் பொருந்தும் படிச் செய்வதே யோகத்தின் முதற்கட்டம்.

அதற்குப் பிறகு செயலையும் அதனோடு பொருத்தும் போது திரிகரணங்களும் ஒன்றுபடுகின்றன. திரிகரணங்களும் ஒன்றுபடுத்துபவர்களுக்கே மௌனம் வாய்க்கும். முக்தி கிட்டும். முக்தி என்றால் விடுதலை. அதாவது பிரபஞ்சக் கூறுகளாகிய உடல் மற்றும் உள்ளத்தினின்று விடுதலை அடைவது. மனம் கூத்தாடும் போது அது சொல்லாக வடிவெடுக்கிறது. மனம் ஒடுங்க ஒடுங்க எண்ணங்கள் குறைகின்றன. அதைத் தொடர்ந்து பேச்சும் குறைந்து விடுகின்றது. பேச்சற்ற நிலையிலேயே ஆனந்தம் இருக்கிறது. தூங்கும் போது யாரும் பேசுவதில்லை. எனவேதான் ஆனந்தமாகத் தூங்கினேன் என்கிறார்கள். ''ஆனந்தம் ப்ரம்மம்'' என்பது வேத வாக்கு. எனவே மௌனமே ஆனந்தம் என்பதுவே மௌனத்தின் வாக்கு. அதாவது மௌனத்தின் குரல்.

பிரபஞ்ச வாழ்வைப் பொருத்த வரை பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் இருப்பவனும், பேசாமல் அமைதியாக இருக்க வேண்டிய இடத்தில் பேசிக் கொண்டிருப்பவனும் துன்பத்தையே அடைவான். வியாபாரத்தில் தேவைக்கேற்ப இன்முகத்தோடு பேச வேண்டும். பிரச்சனைகள் வரும் பொழுது சபையில் நன்கு யோசித்து அறிவுப்பூர்வமாகப் பேச வேண்டும். ஒரு ஆசிரியர் பாடத்தை விளக்குவதற்காக மாணவர்கள் முன் தெளிவாகப் பேச வேண்டும். இப்படி பேச வேண்டியவர்கள் பேசியே ஆக வேண்டும். இது உலகாய வாழ்வில் தவிர்க்க முடியாத விஷயம். அது போலவே பேசாமல் இருக்க வேண்டிய அல்லது இருந்து விட வேண்டிய இடங்களும், சந்தர்பங்களும் நிறைய உண்டு. அப்பொழுது பேசாமல் மௌனமாக இருப்பதுதான் நல்லது.
ஆனால், நான் இங்கே என் முகநூல் பக்கங்களில் மௌனத்தை முன்னிறுத்திப் பேசுவது புறவுலக விஷயங்களைக் குறித்து அல்ல. இது ஆன்மீகம். உள்முகமானப் பயணம். இதில் மௌனமே பாதையாக அமைந்திருக்கிறது. மௌனம் கலைந்த மனம் பாதை மாறிப் போய்க் கொண்டே இருக்கும். இலக்கை எட்ட முடியாது. இதைத்தான் தாயுமானவர் ''சொல்லும், பொருளுமற்றுச் சும்மா இருப்பது'' என்பார். மேலும் ''அதுவே அல்லும், பகலும் எனக்கு ஆசை பராபரமே'' என்பார். சொல்லால் அமைவது மொழி. மொழியால்தான் மனிதன் கருத்துக்களை ஏற்கவோ, பிறருக்கு வழங்கவோ முடியும். மொழியே இல்லாத மனிதன் மற்றவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு விடுவான். உலகாய வாழ்வில் பற்று உள்ளவர்களுக்கு இந்நிலை பொருந்தாது. கொடுமையான குற்றம் புரிந்தவர்களைத் தனிமைச் சிறையில் அடைப்பது வழக்கம்.

அதன் கொடுமை அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும். ஆனால், ஆன்ம பரிபாகம் அடைந்த ஒருவரிடம் கேட்டால் அதை விட ஆனந்தம் எதுவுமில்லை என்பார். இதைத்தான் ''இனிது இனிது ஏகாந்தம் இனிது'' என்று ஔவை குறிப்பிடுவார்.

சொல்லையும், பொருளையும் பிரிக்க முடியாது. தாகத்தில் தவிக்கிற ஒருவனிடம் போய் தண்ணீர் என்று சொன்னவுடன், அதற்கேற்ற சித்தவிருத்தி அவனிடத்தில் உருவாகி விடும். இன்னும் தாகம் அதிகரித்து விடும். சித்த விருத்திகள் என்பது தடாகத்தில் அலைகள் அடிப்பதைப் போன்றது. அலையடிக்கிற தடாகத்தின் அடிப் பகுதி காட்சிக்குத் தெரியாது. அது போல விருந்தி மயமாய் இருக்கும் மனதிற்கு தனக்கு ஆதாரமாய் இருக்கும் ஆத்ம சொரூபம் அனுபவத்திற்கு எட்டாது. உலகாய வாழ்வைப் பொருத்த வரை சொல் ஒரு பெரிய பந்தபாசமாகின்றது. ஏனென்றால், அதைக் கேட்கும் பொழுதெல்லாம் அதற்கு ஏற்ற விகாரத்தை மனம் எடுக்கிறது.

சொல்லின் வாயிலாக அதன் கருத்தை ஏற்கும் பொழுதுதான் மனிதர்கள் இன்பதுன்ப நுகர்ச்சிக்கு ஆளாகிறார்கள். பிறர் போற்றுவதை இன்பம் என்கிறார்கள். தூற்றினால் துன்பம் என்கிறார்கள். மனம் ஒடுங்கிய நிலையில் உள்ளவர்களுக்கோ சொல் பொருளற்றதாக ஆகி விடுகின்றது. மனதை வென்றவர்களுக்கே மௌனம் சாத்தியப்படுகிறது. மனமடங்கிய நிலையையே சும்மா இருப்பது என்கிறார் தாயுமானவர். இரவும் பகலும் சொல்லை ஒதுக்கித் தள்ளுபவர்களே மௌனத்தில் நிலைக்கிறார்கள். அவர்கள் பேசுவதுமில்லை, பிறர் பேசுவதை பொருட்படுத்துவதும் இல்லை. அத்தகைய மௌனத்தில் தீவிரமாக ஈடுபடும் பொழுது சித்த விருத்தி தானாக ஒடுங்கி விடுகின்றது. சித்த விருத்தி என்ற அலையடிக்காத மனதிற்கு ஆன்ம தரிசனமும் வாய்க்கிறது. இத்தகைய பெருநிலை வாய்க்க நாம் மௌனத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதை உணர்த்தவே நான் இடைவிடாமல் பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால், நான் மௌனத்தில் நின்றே பேசுகிறேன். நான் பேசவில்லை. மௌனமே பேசுகிறது.



நண்பர் - தியானத்தினால் பழைய வினைகள் அழிந்து விடும் என்றால், நம் நல்ல வினைப்பதிவுகளும் (புண்ணியம்) அழிந்து விடும் அல்லவா? ஆனால் பட்டினத்தார் ''பற்றித் தொடரும் இருவினை புண்ணிய பாவமுமே'' என்று சொல்கிறாரே ?


இராம் மனோகர் - வினைகளை வேரறுப்பது என்பது இறுதி கட்டமாகும். அதாவது இறுதி கட்டம் என்றால், தியானத்தின் மேல் மட்ட நிலைகளில் நிகழக் கூடியது. அது வரையிலும் மனம் கொண்டுள்ள சம்ஸ்காரங்களாகிய பழைய வினைப் பதிவுகளின் தாக்கத்திலிருந்து விடுபடவே நாம் முயற்சி செய்கிறோம். இதற்கிடையே அவ்வப்பொழுது நம் தியானத்தின் ஆழத்தில் செல்லும் பொழுது க்ஷண நேரம் இணைப்பு நேர்ந்து விடுவதுமுண்டு. அந்த இணைப்பு ஏற்படும் பொழுதெல்லாம் நம் பதிவுகள் சிறிது சிறிதாகக் கரைந்து போவதும் உண்டு. ஆனால், அது நீடிப்பதில்லை. அதை நீட்டிக்கச் செய்வதையே தியான அனுபூதி என்பார்கள். பேராற்றலோடு நம் உயிராற்றலை கலக்க விடும் பொழுதுதான் வினைகளை வேரறுக்க முடியும். இதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். சராசரி மனிதன் பிறப்பிறப்பில் உழலும் பொழுது அவனைப் பற்றித் தொடர்வது இரு வினைகளான பாவமும், புண்ணியமும் என்றுதான் அவர் சொன்னார்.
வினைப் பதிவுகளைப் பொருத்த வரை இறைநிலைக்கு நல்ல பதிவுகள், கெட்ட பதிவுகள் என்றெல்லாம் பேதமில்லை. நம்மைப் பொருத்த வரை பழைய பதிவுகள்தான் நம் நடத்தையை, நம்முடைய ஜீவிதத்தை நிர்ணயம் செய்கின்றன. இதில் எந்தவித மாற்றுக் கருத்துமில்லை. அதே சமயம் ஒரு காலத்தில் நல்லது செய்யும் பொழுது ஏற்பட்ட பதிவாக இருந்தாலும் கூட அது இன்றைய சூழலில் எண்ணமாகக் கிளம்பி, செயலாக மலரும் பொழுது தீய விளைவுகளை ஏற்படுத்தி விடக் கூடும். எனவே வினைகளை வேரறுக்க வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோளாகிறது. அதனால்தான் ஔவை பிராட்டி ''இரு வினை தன்னை அறுத்திருள் கடிந்து'' என்பார். அந்த வகையில் பார்க்கும் பொழுது இறந்த காலம் என்பது நம் தலை மேல் நாமே ஏற்றி வைத்துக் கொண்ட ஒரு பெருஞ்சுமையாகவே இருக்கிறது.

பற்றாக் குறைக்கு ஒவ்வொரு நொடியும் மேலும் மேலும் புதுப்புது பதிவுகளை உண்டாக்கி சுமையை ஏற்றிக் கொண்டே போகிறோம். ஒவ்வொரு நொடியும் நொடிப் பொழுதில் இறந்தகாலமாகிக் கொண்டேதானிருக்கிறது. கடந்து போகும் ஒவ்வொரு நொடியும் இறந்த காலத்தின் மற்றொரு நொடியாகக் கூடி விடுகிறது. தொடர்ந்து இயங்குவதாலும், சிந்தித்துக் கொண்டே இருப்பதாலும் நாம் மீண்டும் மீண்டும் பதிவுகளை உருவாக்கிப் பதிய வைத்துக் கொண்டே இருக்கிறோம். இப்படி புதிய சுமைகளை உருவாக்காமல் இருக்கவும், பழைய சுமைகளைக் குறைக்கவுமே தியானம் தேவைப்படுகிறது. அதாவது மனமானது அதன் இயக்கத்தில் தூய்மைபடுத்தப்பட்டு ஒழுங்குபடுவதற்கு தியானம் உதவுகிறது. இதனால் புறச் செயல்களும் ஒழுங்குபடும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

தியானம் என்பது வழிமுறைதான். அதன் பலன்தான் மனக்குவிப்பாகும். இந்த மனக்குவிப்பினால் என்ன நடக்கிறது ? மனக்குவிப்பினால் நமக்கு மன வலிமை ஏற்படுகிறது. இதனால் தேவையில்லாத அல்லது விரும்பத் தகாத சிந்தனைகளை நம்மால் ஒதுக்கி விட முடிகிறது. இதுவே பழக்கமாகும் பொழுது மனதிற்கு இயல்பாகவே ஒரு குறிப்பிட்ட செயலில் மட்டும் அதாவது நாம் ஈடுபடும் செயலில் மட்டும் ஒருமுகப்பட்டு நிற்கும் ஆற்றல் வாய்த்து விடுகிறது. எனவே வேறு எண்ணங்களோ, எண்ணத் தடைகளோ ஏற்பட வழியில்லாமல் போய் விடுகின்றது. ஒரே எண்ணத்தோடு செய்யப்படுவதால் நாம் செய்யும் அந்தக் காரியமும் வெற்றி பெறுகின்றது. சுருக்கமாகச் சொன்னால் தியான முயற்சியினால் நாம் நம் புறச் செயல்களை ஒழுங்குபடுத்திக் கொள்வதோடு, புதிய எண்ணங்களைக் குறைத்து, புதிய மேல் பதிவுகளை ஓரளவு தவிர்த்து விடுகிறோம். தியான அனுபூதியினால் பழைய வினைப் பதிவுகளை நீக்குகிறோம்.


ஐயம் 1- ஐயா ஒரு சந்தேகம். எல்லாவற்றிற்கும் விஞ்ஞான ரீதியாக விளக்கம் தருகிறீர்கள். யோகம், ஞானம் பற்றி நிறையப் பேசுகிறீர்கள். ஆனால், சித்தர்கள் மறுத்துப் பாடியுள்ள பக்தி மார்க்கத்தை நியாயப்படுத்துகிறீர்கள். இது எனக்குப் புரியவில்லை.


ஐயம் 2- பக்தி மார்க்கத்தால்  மட்டுமே எண்ண ஓட்டங்களை கட்டுப்படுத்த முடியுமா ?



இராம் மனோகர் - எல்லாம் புரிந்து விட்டால் பிறகு நமக்கு இங்கு என்ன வேலை ? புரிதல் என்பது அவரவர் அறிவின் நிலையை ஒத்து அமைகின்றது. உங்கள் அறிவுக்கு புலப்பட்ட அல்லது அறிவுறுத்தப்பட்ட விஷயங்கள் உங்களுக்கு எளிதில் விளங்கும். ஆனால், உங்கள் அறிவுக்கு எட்டாத விஷயத்தைப் பற்றி மற்றவர்கள் பேசும் பொழுது இது போன்ற குழப்பங்கள் மனதில் எழுகின்றன. சில நேரங்களில் அறிவுக்கு எட்டினாலும் கூட சில செய்யத் தகாத செயல்களை நாம் செய்து கொண்டுதான் இருக்கிறோம். காரணம் மனம் பக்குவப்படவில்லை என்பதால்தான்.மேலே நின்று பார்ப்பவனுக்கு எல்லாம் சமமாகத்தான் தெரியும். ஆனால், நாம் கீழே அல்லவா நின்று கொண்டிருக்கிறோம். முக்திக்கான உபாயங்களாக நம் முன்னோர்கள் சுட்டிக் காட்டுவது நான்கு வழிகளை. சரியை(பக்தி), கிரியை(கர்மம்), யோகம், ஞானம். என்கிற நான்கு வழிகள். இதில் பக்திதான் முதலில் வருகின்றது.

பக்தி என்பது குற்றமான செயலா என்ன ? அதை நான் வந்து இங்கே நியாயப்படுத்துவதற்கு. எல்லா சமயத்தினரும் இறைவன் மீது பக்தி செலுத்தத்தான் செய்கிறார்கள். மேலும் இன்றைய வாழ்க்கைச் சூழலில் மனிதனுக்கு பக்தி யோகம் ஒரு எளிய உபாயமாகவும், நல்ல ஆரம்ப நிலையாகவும் இருக்கிறது. எல்லோருமே ஆன்ம விசாரம் கொண்டு யோக, ஞான மார்க்கத்தை கடைபிடித்து விட முடியாது, எல்லாமே தெரிந்திருந்தாலும் மனம் பரிபக்குவம் அடையும் வரை ஒருவன் யோகத்திலோ, ஞானத்திலோ முன்னேற முடியாது. எல்லாம் தெரிந்தவர் ஞானியல்ல. தெரிந்து, தெளிந்து அதை உணர்ந்தவரே ஞானி. சராசரி மனிதனானவன் தன் மனதைப் பக்குவப்படுத்த ஏற்படுத்தப்பட்ட ஒரு யுக்தியே பக்தி மார்க்கம் என்பது. புலன் மயக்கம், பற்று, பாசம் இவற்றிலிருந்தெல்லாம் மனதை சிறுகச் சிறுகப் பிரித்தெடுத்து இறைவன் பாற் செலுத்துகின்ற யுக்தியே பக்தி. ஆனால், அந்த பக்தியின் மூலமாகவே பிரபஞ்ச வாழ்வின் தேவைகளை, இச்சைகளை பூர்த்தி செய்து கொள்ள நினைப்பதும், மேலும் மேலும் பற்றுகளை வளர்த்துக் கொண்டே செல்வதையும்தான் சித்தர்கள் கண்டிக்கிறார்கள்.

ஆற்றைக் கடக்க ஒரு படகில் ஏறுகிறோம். கடந்த பிறகு மேலும் நாம் காரியங்களை நோக்கிப் போக வேண்டியதுதானே முறை. அதை விடுத்து யாராவது இந்தப் படகுத்தான் ஆற்றைக் கடக்க உதவியது. எனவே, இந்தப் படகை மறக்கக் கூடாது என்று சொல்லி, தலையில் வைத்துக் கொண்டு போவார்களா ? அது போலவே பக்தி என்பது ஒரு உபாயம். மனதை நெறிப்படுத்த, ஒரு நிலைப்படுத்த, சத்துவ குணத்தை நிலைக்கச் செய்து மற்ற இரு குணங்களை மட்டுப்படுத்த உதவும் ஒரு உபாயம். அதில் முறையாக ஈடுபட்டு, அடுத்த நிலைக்குப் போக வேண்டுமே அல்லாது, அதனோடும் பற்று கொண்டு அடுத்த நிலையை மறந்து விடலாகாது என்பதே சித்தர்களின் கருத்து. அதைத்தான் ஈசனோடாயினும் ஆசையை அறுமின் என்றார்கள். எனவே பக்தி மார்க்கம் என்பது கட்டாயத் தேவையாகும். கல்லைக் கூடக் கடவுளாக ஒருனுக்கு காண முடியுமானால், அவன் மனதில் பேதமற்றவனாகி விடுகிறான். இங்கு காணும் யாவும் கடவுளே என்ற நிலைக்கு உயர்ந்து விடுகிறான். அப்பொழுது அவன் இயம நியமங்களைக் கடந்தவனாகிறான்.
புறத் தேவைகளுக்காக கடவுளை நாடுபவனுக்கு இத்தகைய நிலை வாய்க்காது. தன் பிறப்பின் நோக்கத்தை உணர்ந்து, இறைவனை அடைய வேண்டும் என்ற வேட்கை கொண்ட உண்மையான பக்தி உள்ளவர்களுக்கே இந்நிலை வாய்க்கும். உண்மையான பக்தியுடையவன் கடவுளை எண்ணி தன் புலன்களை அடக்குகிறான். இதுவே பிரத்தியாகாரம் ஆகின்றது. கருவறையில் உள்ள தன் இறைவனை நோக்கி தன் மனதைச் செலுத்தி தனை மறந்து வணங்கி நிற்கிற பொழுது அது தாரணையாகின்றது. அந்நிலை நீடித்து கண்மூடி மனதிற்குள் தெய்வ தரிசனத்தைக் காணும் பொழுது அவன் மனம் தியானத்தின் அனுபூதியை அடைகின்றது. யோகி பல யுக்திகளைக் கடைபிடித்து அடைகின்ற அனுபூதியை உண்மையான பக்தியின் மூலமாக பக்தன் அடைகின்றான். அப்பொழுது அவனுக்கு ஒளி தரிசனம் கிடைக்கின்றது. அறிவில் பிரகாசம் கூடுகின்றது. தனை மறந்து தியானத்தில் திளைத்திடுகிறான். ஞானத்தை அடைகின்றான்.

ஞானத்தை அடைந்த பிறகு அவன் நிலைப்பாடு வேறு மாதிரியாக இருக்கும். வெளியே குவிந்த மனது இப்பொழுது உள்ளே குவியத் துவங்கும். குவிந்து நீடித்து நிலைத்து பரவெளியில் லயித்திடும். எனவே பக்தி என்பது ஒரு படித்தரமாக இருக்கின்றது. அந்தப் படியைக் கடந்து அடுத்தப் படிக்கு ஏறிச் செல்ல வேண்டும் என்பதையே சித்தர்கள் கிண்டலாகச் சுட்டிக் காட்டுகிறார்கள். பக்தி, யோகம், ஞானம் எல்லாம் இறைவனை அடைய முயல்பவர்களுக்கு அமைந்தப் படித்தரங்களே. இத்தகைய உயர்ந்த விஷயங்களை புரிந்து கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறேன். முதல் படி பக்தி என்றால் முடிவு முக்தியாகும். இடையே எத்தனையோ நிலைகள் இருக்கின்றன. எனவே குழப்பங்களையும், குதர்க்கமான எண்ணங்களையும் தவிர்த்து நேர்மறை சிந்தனையோடு அணுகும் பொழுது சொல்லப்படும் விஷயத்திலுள்ள உண்மைப் பொருள் தானே விளங்கும். மாறாக எதிர் மறை எண்ணங்களோடு அணுகும் பொழுது உண்மை புலப்படாது.

மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்

நன்றி திரு.ராம் மனோகர்

முந்தைய பதிவுகளுக்கு:-

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (4) - https://tut-temple.blogspot.in/2017/10/4.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (3) - https://tut-temple.blogspot.in/2017/09/3.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (2) - http://tut-temple.blogspot.in/2017/08/2.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (1) - http://tut-temple.blogspot.in/2017/07/1.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html

Friday, April 15, 2022

மங்கல தேவி கண்ணகி திருக்கோயில் - சித்திரை முழுநிலவு திருவிழா - 16.04.2022

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர். சிலப்பதிகாரம் உணர்த்தும் மூன்று உண்மைகள் என்ற கேள்விக்கு பதிலாக இதனை அனைவரும் படித்திருப்போம். ஆனால் இவை அனைத்தும் மதிப்பெண்ணுக்கானவை அல்ல. வாழ்க்கைக்கான சூத்திரம் என்று இப்போது தான் உணர்ந்தும் வருகின்றோம்.சிலப்பதிகாரம் என்றதும் கண்ணகித் தாய் நமக்கு நினைவிற்கு வருவார்கள். கண்ணகியை தெய்வமாக வழிபடும் வழக்கம் தற்போதும் நடைமுறையில் உள்ளது.கண்ணகி கோயில் பற்றி நாம் தேடிய போது தமிழ் நாட்டில் கூடலூர் வனத்தில் மங்கலதேவி கண்ணகி கோவில் உள்ளது என கேள்விப்பட்டோம். சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் அன்னையை தரிசித்து வந்தோம். அந்த அனுபவத்தை இங்கே சொல்ல விழைகின்றோம்.




மங்கலதேவி கோவில் (மங்களா தேவி கண்ணகி கோயில்) கேரளத்தின் இடுக்கி மாவட்டத்திலுள்ள குமுளி என்ற ஊரிலிருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டின் கூடலூர் வனப்பகுதியில் பளியங்குடி எனுமிடத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இது கடல் மட்ட அளவில் இருந்து சுமார் 5000 மீட்டர் உயரத்தில் உள்ளது. ஆண்டுக்கு சித்திரா பௌர்ணமி தினத்தன்று ஒரு நாள் மட்டுமே இக்கோயில் பகுதிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இங்கிருந்து ஒரு பக்கம் கிழக்கு மலைத்தொடர்களையும், அதனுடன் தமிழ் நாட்டில் இணைந்திருக்கும் சில கிராமப்பகுதிகளையும் நன்றாக காணலாம்.




கோவலனுக்கு பாண்டிய மன்னன் முழுமையாக விசாரிக்காமல் மரண தண்டனை அளித்துக் கொன்று விட்டதறிந்து கோபத்துடன் கண்ணகி பாண்டிய மன்னனின் அரச சபையில் அவன் தவறை உணர்த்தித் தவறாக நீதி வழங்கிய மதுரை மாநகரமே தீப்பற்றி எரியட்டும் என்று சாபம் விட்டு மதுரையை எரித்துவிட்டு அங்கிருந்து வெளியேறி 14 நாட்கள் நடந்து திருச்செங்குன்றம் எனும் மலையில் இருந்து தேவலோகம் சென்றதாக வரலாறு சொல்கிறது. இந்த இடத்தில்தான் மங்கலாதேவி கண்ணகி கோயில் இருக்கிறது. இது சுருக்கமாக சொன்ன செய்தி. இனி கொஞ்சம் விரிவாக காண்போம்.

 சோழ நாடான காவிரிப்பூம்பட்டினத்தில், கோவலனுடன் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை நடத்தி வந்தாள் கண்ணகி. கோவலனுக்கு யாழ் இசைப்பதில் அதீத ஆர்வம் உண்டு. அதே போல் ஆடல், பாடல்களிலும் விருப்பம் கொண்டவனாக இருந்து வந்தான். இந்த நிலையில் பூம்புகாரில் ஆடல் தொழில் செய்து வந்த மாதவியின் ஆடல் நிகழ்ச்சியைக் கண்டு கோவலன் மனம் மகிழ்ந்தான். அவளிடம் தன் மனதை பறிகொடுத்தான். அவர்களிடையே நெருக்கம் ஏற்பட்டதால், கண்ணகியை மறந்து, மாதவியின் வீட்டிற்கு சென்று அவளுடன் வாழ்க்கையை வாழத் தொடங்கினான். கோவலனின் செல்வம் அனைத்தும் குறைந்து போகிறது. மாதவியுடன் மனம் வேறுபட்டு, அவளை விட்டுப் பிரிந்து மீண்டும் கண்ணகியிடம் வந்து சேர்ந்தான்.

தான் இழந்த பொருள் அனைத்தையும் மீட்டுவிடும் நோக்கத்தில், கண்ணகியை அழைத்துக் கொண்டு காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து வெளியேறி, மதுரை நோக்கிச் செல்கிறான். அங்கு கோவலன் வணிகம் செய்வதற்காகக் கண்ணகி தனது காற்சிலம்புகளில் ஒன்றினைக் கழற்றிக் கொடுக்கிறாள். கோவலன் கண்ணகியை மாதரி எனும் ஆயர்குலப் பெண்ணிடம் அடைக்கலமாக இருக்கச் சொல்லிவிட்டு, அந்தச் சிலம்பை விற்பதற்காக நகருக்குள் செல்கிறான்.

நகருக்குள் சென்ற கோவலன், தான் கொண்டு சென்ற சிலம்பை அங்கிருந்த அரண்மனைப் பொற்கொல்லனிடம் காட்டுகிறான். அந்தப் பொற்கொல்லன் முன்பே அரசியின் சிலம்புகளில் ஒன்றைத் திருடி இருந்தான். அந்தக் குற்றத்தை மறைக்க இதுதான் சரியான நேரம் என்று எண்ணிய அவன் அந்தச் சிலம்புடன் அரண் மனைக்குச் செல்கிறான். அப்போது அரசவையில் ஆடல் நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சியினைக் கண்டு அரசன் தன்னை மறந்து விட்டான் என்று நினைத்து, அரசி மனம் வேறுபட்டு அந்தப்புரம் சென்று விடுகிறாள்.

அரசியைச் சமாதானப்படுத்தும் நோக்கத்துடன் அரசன் அந்தப்புரம் செல்லும் வழியில், பொற்கொல்லன் அரசனைக் கண்டு, அரசியின் சிலம்பு காணாமல் போன குற்றத்தில் கோவலனைத் திருடனாக்கிக் குற்றம் சுமத்துகிறான். இந்நிலையில் அரசன் அது குறித்து முழுமையாக விசாரிக்காமல் கோவலனுக்கு மரண தண்டனை அளித்து விடுகிறான். கோவலனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

இச்செய்தி அறிந்த கண்ணகி கோபத்துடன் பாண்டிய மன்னனின் அவைக்குச் சென்று வழக்கு உரைக்கிறாள். இந்த வழக்கின் முடிவில் உண்மையறிந்த பாண்டிய மன்னன், தனது தவறான தீர்ப்பை நினைத்து வருந்தி, அவன் அமர்ந்திருந்த அரியணையிலிருந்து கீழே விழுந்து உயிர் துறந்தான். அரசனைத் தொடர்ந்து அவனது மனைவியும் மன்னன் மார்பு மீது சாய்ந்து அழுதபடி தன் உயிர் நீத்தாள். அதன் பின்பும் கண்ணகியின் கோபம் குறையவில்லை. கற்பில் சிறந்த 7 பெண்களின் பெயரை உச்சரித்து, ‘அவர் களைப் போல் நானும் கற்பில் சிறந்தவளாக வாழ்ந்தது உண்மையானால், இந்த மதுரை தீக்கிரையாகட்டும்’ என்று சாபமிட்டாள். அவளது கற்பின் வலிமையால் மதுரை மாநகரமே நெருப்புக்கு இரையானது. அதில் தீயவர்கள் இறந்தனர்; நல்லவர்கள் உயிர் தப்பினர்.

பின்னர் கண்ணகி அங்கிருந்து வெளியேறி, நீண்ட தூரம் நடந்து சென்ற அவள் சேரநாட்டை அடைகிறாள். அங்கிருந்த குன்றில் வேங்கை மர நிழலில் நின்று கொண்டிருக்கிறாள். அவளைக் கண்ட வேடுவர்களிடம், தான் அடைந்த துன்பம் கொண்ட தனது வாழ்க்கையை முழுமையாகக் கூறுகிறாள். அதன் பின்னர், அங்கு வானோர் வடிவில் வந்த கோவலனோடு, கண்ணகி தெய்வ விமானமேறி தேவலோகம் சென்றாள். இதனைக் கண்டு அந்தப் பகுதி மக்கள் கண்ணகியை, அம்மனாக நினைத்து ‘இவளே நமது காவல் தெய்வம்’ என்று கூறி வழிபடத் தொடங்கினர்.

 இந்த நிலையில் சேர மன்னனான சேரன் செங்குட்டுவன் அந்தப் பகுதிக்கு நகர்வலமாக வந்தான். அப்போது அந்தப் பகுதி மக்கள் மன்னனைச் சந்தித்து, கண்ணகி என்ற பெண்ணைப் பற்றியும், அவள் மனித உடலோடு, தேவ விமானத்தில் ஏறி தேவலோகம் சென்றதையும் தெரிவித்தனர். இதையறிந்த மன்னன் ஆச்சரியம் கொண்டான்.

அப்போது மன்னனுடன் இருந்த புலவர் சீத்தலை சாத்தனாரும், ‘அரசே! அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட துன்பம் பற்றிய செய்தியை நானும் பாண்டிய நாட்டில் இருந்து வந்த தகவலால் அறிந்தேன். அந்தப் பெண்ணின் கணவன் மீது பொய் குற்றம் சாட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு நியாயம் கேட்கச் சென்ற அந்தப் பெண்ணின் பக்கம் நியாயம் இருப்பதை உணர்ந்த பாண்டிய மன்னன், அங்கேயே நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உயிர் இழந்தான். மன்னன் இறந்ததும் அவனது மனைவியும் உயிர் துறந்தாள். பின்னர் மதுரையை தன் கற்பு நெறியால் எரித்து விட்டு, இவ்விடம் வந்து சேர்ந்திருக்கிறாள்’ என்றார்.












அதைக் கேட்ட சேர நாட்டு மன்னனுக்கு மேலும் ஆச்சரியம் சேர்ந்தது. கற்பில் சிறந்தவளாகவும், மனித உடலுடன் தேவலோகம் செல்லும் அளவுக்கு உயர்ந்த பண்புகளைக் கொண்டவளாகவும் இருக்கும் கண்ணகிக்கு ஆலயம் கட்டுவது என்று மன்னன் முடிவு செய்தான். அவள் தேவலோகம் சென்ற அதே இடத்தில் கண்ணகிக்கு ஆலயம் எழுப்பப்பட்டது. தமிழ்நாடு, கேரளா மாநில எல்லையான மேற்குத் தொடர்ச்சி மலையின் மீது வண்ணாத்திப் பாறை என்னும் இடத்தில் கண்ணகி கோவில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரத்து 380 அடி உயரத்தில் இருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வரும் சித்திரை முழுநிலவு தினத்தன்று இந்த மங்கலதேவி கண்ணகி கோயிலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர். இந்தக் கோவில் வழிபாட்டிற்காக தமிழ்நாடு, கேரளா மாநில அரசுகளைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி அதன்படி வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. வருடந்தோறும் இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழுவும் கேரளா அரசு சார்பில் இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தைகள் நடத்தி சித்திரை முழுநிலவு திருவிழாவிற்கு பக்தர்களை அனுமதிக்கின்றனர். மற்ற நாட்களில் இங்கு செல்ல அனுமதி அளிக்கப்படுவதில்லை.




 கேரள மாநிலம் குமுளியில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டின் கூடலூர் வனப்பகுதியான பளியங்குடியில் இருந்து சுமார் 6.6 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் இருக்கிறது.



















ஆண்டுக்கு ஒரே ஒரு நாள் கோவில் திறந்தாலும் மக்கள் கூட்டம் சாரை சாரையாக காண முடிகின்றது.




மலை யாத்திரையில் விருப்பம் உள்ள அன்பர்கள் இங்கே சென்று தரிசனம் செய்வது கூடுதல் சிறப்பு.

மேலும் தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள அடிவாரம் கண்ணகி கோவில் ஒன்றும் உள்ளது.இங்கேயும் நாளை சித்திரை முழுநிலவு திருவிழா கொண்டாடப்பட உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக திருவிழாக் கோலம் தான். அழைப்பிதழ் இங்கே பகிர்கின்றோம். வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு அன்னையின் அருள்  பெற வேண்டுகின்றோம்.





அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

 - மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்

மீள்பதிவாக:-

 அன்னையைப் போற்றுவோம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_12.html

 ஐந்தாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2021/04/tut.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (5)  - https://tut-temples.blogspot.com/2020/04/tut-5.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (3) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-3.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html


பாடல் பெற்ற தலங்கள் (1) - திருநெடுங்களம் - நெஞ்சில்வைப்பார் இடர்களையாய் நெடுங்களமே யவனே!  - https://tut-temples.blogspot.com/2019/05/1_8.html

ஸ்ரீ ஆதிசங்கரர் ஜெயந்தி  - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_9.html

ஸ்ரீமத் பகவத் ராமானுஜரின் 1002 ஆவது அவதாரப் பெருவிழா - 9/5/2019 - https://tut-temples.blogspot.com/2019/05/1002-952019.html

விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன்  - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_69.html

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!  - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_24.html

 கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

 மனிதம் வளர்க்கும் மாமனிதர் முல்லைவனம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_7.html

 எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html

Thursday, April 14, 2022

இறைவா...அனைத்தும் உன் செயலே! - அனைவருக்கும் நன்றி

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானின் அன்பாலும், அருளாலும், சித்தர் பெருமக்களின் ஆசியோடும் இன்றைய தமிழ் புத்தாண்டில் ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றோம். இன்றைய குருநாளில் அனைத்து குருமார்களின் பாதம் பணிகின்றோம். இன்றைய குருநாள் சேவையாக 

1. சின்னாளப்பட்டியில் அன்னதானம் 

2. சதுரகிரி மகாராஜபுரம் - வள்ளலார் பசியாற்றுவித்தல் 50 அன்பர்களுக்கு அன்னதானம் 

3. திருவொற்றியூர் வள்ளலார் தெய்வீக அறக்கட்டளை அன்னதானம் 

4. திருஅண்ணாமலை ஸ்ரீ தயவு ஆஸ்ரமம் அன்னதானம் 

என குருவருளால் செய்ய பணிக்கப்பட்டோம். இவை அனைத்தும் குருவின் அருளாலே தான் நடைபெற்று வருகின்றது. இறை வணங்கி அறம் செய்தல் என்றும் நலமாக அமையும். இன்றைய நன்னாளில் 2020 மே மாதம் நம் குருநாதர் அருளிய வாக்குக்களை இங்கே குருவருளால் பகிர விரும்புகின்றோம். இதில் தேடல் உள்ள தேனீக்கள் குழுவின் பெயருக்கு நம் குருநாதர் அருளிய அருளை மீண்டும் மீண்டும் நாம் படித்து உள்வாங்கி கொள்ள விரும்புகின்றோம். 

திருவண்ணாமலை கிரிவலம் முறையாக சுற்றி வர ஆசிகள், அஷ்ட லிங்க தரிசனம், இடுக்கு பிள்ளையார் பற்றி கூறுங்கள் :

தேகத்தை நன்றாக பராமரிக்க வேண்டும் என்று எத்தனை வழிமுறைகளைக் கூறினாலும் அதனை காலகாலம் மனிதன் ஏற்பதில்லை. புறம் தள்ளி விடுகிறான். எனவேதான் இறை வழிபாட்டோடு தேக ஆரோக்கியத்தையும் சேர்க்க வேண்டியிருக்கிறது .அந்த வகையிலே பிரகார வலம், கிரிவலம் இவையெல்லாம் அவசியம். பதட்டமின்றி, நிதானமாக அடிமேல் அடியெடுத்து வேறு லௌகீக விஷயங்களை, உலகியல் விஷயங்களை பேசாமல் மௌனமாக மனதிற்குள் இறை நாமத்தை மட்டும் உருவேற்றிக் கொண்டு வலம் வருவதே சிறப்பு. அடுத்ததாக எந்த கிரிவலமாக இருந்தாலும் ஆங்காங்கே உள்ள சிறு ஆலயமோ, உப சன்னிதிகளோ தென்பட்டால் அங்கும் சென்று அமைதியாக பிரார்த்தனை செய்ய நன்மை உண்டாம். இஃதொப்ப நிலையிலே, முறை என்றால் மனம் வேறு சிந்தனைக்குள் ஆட்படாமல் மனம் முழுக்க இறை நாமத்தை மட்டும் மனதிற்குள் சொல்லிக் கொண்டே பிரகார வலமோ, ஆலய வலமோ, கிரிவலமோ ஒரு மனிதன் செய்வது மிகவும் சிறப்பு. எனவே இதை மட்டும் கடைபிடித்தால் போதும். 

திருவிடைக்கழி முருகப் பெருமான் தலம் பற்றி : 

எத்தனை தலங்கள் இருந்தாலும் எல்லா தலங்களுமே சிறப்புதான். எந்தெந்த மனிதர்களுக்கு எந்தெந்த தலங்கள் சென்றால், நட்சத்திர ரீதியாக, ஜாதக ரீதியாக, கர்ம வினை ரீதியாக, சில நன்மைகள் உண்டு என்ற கணக்கு இருந்தாலும் அதற்காக அதனையே பிடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை. எல்லா ஸ்தலங்களும் சிறப்புதான். எப்பொழுது சிறப்பு ? அந்த மனிதன் அந்த ஸ்தலத்தில் அந்த ஆலயத்தில் நின்று கொண்டு, வேறு எந்த எண்ணங்களும் இல்லாமல் இறை சிந்தனையோடு அமைதியான முறையில் பிரார்த்தனையை தொடர்ந்தால் அவனுடைய பாவங்கள் நீங்கும். இருந்தாலும் இஃதொப்ப இன்னவன் வினவுகின்ற திருவிடைக்கழியில் மனிதர்கள் கருதுவது போன்ற தோஷங்களுக்கு மட்டுமல்லாது செவ்வாய் தோஷம் குறைவதற்கும், குருதி தொடர்பான பிணிகள் நீங்குவதற்கும் அங்கு பிரார்த்தனை செய்வதோடு சத்ரு சம்ஹார திரிசதி பூஜைகளை செய்ய ஏற்ற ஸ்தலங்களில் அஃதும் ஒன்று. 

ஸ்தல யாத்திரை, மலை யாத்திரை செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய சூட்சும நுணுக்க வழிபாடுகள் பற்றி : 

அமைதி, அமைதி, அமைதி. மனதிற்குள் *இறை நாமம், இறை நாமம், இறை நாமம். அவ்வளவே. 

 ஓதி மலை உழவாரப்பணி, வள்ளி மலை வழிபாடு, கோடகநல்லூர் யாத்திரை, சதுரகிரி வழிபாடு பற்றி ஆசிகள் :

அனைத்திற்கும் நல்லாசிகள், மென்மேலும் தொண்டு தொடர நல்லாசிகள்.

 பௌர்ணமி, அமாவாசை, சஷ்டி நாட்களில் அன்ன சேவை செய்கிறோம். இதில் குறையிருந்தால் எங்களை வழி நடத்தி ஆசீர்வதிக்க வேண்டுகிறோம் :

தேனியின் நாமகரணத்தை சூட்டியிருக்கிறார்கள். தேனீக்களைப் பற்றி தெரியுமா ? தேனீக்கள் கடுமையாக போராடி நுணுக்கமாக தேனையெல்லாம் சேர்த்து வைக்கும். அப்போது அந்த தேனை மனிதன் ஒருவகையில் களவாடி விடுகிறான். எனவே இது குறித்து ஒரு மரபு சொல் கூட மனிதர்களிடையே வழங்கிக் கொண்டிருக்கிறது. அதனை நினைவூட்டுகிறோம். ஒரு மனிதன் தேனீக்களிடம் சென்று “ இத்தனை கடினப்பட்டு நீங்கள் எல்லோரும் தேனை சேகரிக்கிறீர்கள். ஒரு தினம் வந்து மனிதன் அல்லது மனிதர்கள் களவாடி விடுகிறார்களே, எடுத்து விடுகிறார்களே, உங்களுக்கு வருத்தமாக இல்லையா ? “ என்று கேட்டால் “ ஒரு வகையில் வருத்தம்தான். இருந்தாலும் நாங்கள் வருத்தப்படவில்லை “. “ ஏன் வருத்தப்படவில்லை ? “ என மீண்டும் அந்த மனிதன் வினவுகிறான். 




அதற்கு தேனீக்கள் கூறுகின்றன “ எங்கள் உழைப்பாகிய தேனைதான் மனிதனால் திருட முடியுமே தவிர நாங்கள் தேனை எடுக்கின்ற அந்தக் கலையை எங்களிடமிருந்து மனிதர்களால் ஒருபொழுதும் திருட முடியாது “ என்று சொல்கிறது.இதுதான் மனிதர்களுக்கும் பாடம். மனிதன் சேர்த்து வைத்த செல்வத்தை ஒருவன் திருடலாம். ஆனால் அவன் செல்வம் தேடுகின்ற கலையை திருட முடியுமா? முடியாது.எனவே, விளைவை ஒருவன் எடுத்து கையாளலாம். அந்த விளைவை கொண்டு வந்து சேர்க்கும் அந்த ஒரு கலையை, யுக்தியை யாராலும் திருட முடியாது என்பதை இவர்களும் புரிந்துகொள்ளட்டும். 

 திருக்கோஷ்டியூர் தலத்தின் மகிமையை பற்றி :

நம்பியாண்டார் நம்பியை நினைவூட்டுகிறது .அஃதொப்ப ஸ்தலம். எனவே சுக்கிர தோஷம் நீக்கும் ஸ்தலம். திருமண தோஷம் நீக்கும் ஸ்தலம். பலவிதமான புண்ணியங்களும், பாவங்களும் கலந்து வாழ்கின்ற மனிதர்களுக்கு, இஃதொப்ப கடை பிறவி வேண்டும் என ஆசைப்படுகின்ற மனிதர்களுக்கும் ஏற்ற ஸ்தலம் அப்பா.

இன்றைய நன்னாளில் நம் குழுவிற்கு அன்பர்கள் வழங்கிய வாழ்த்து செய்தியை இங்கே படக் காட்சிகளாக தருகின்றோம்.

முதலில் ஆவடி சதீஷ்குமார் ஐயாவிடம் இருந்து :-




அடுத்து தாம்பரம் அனந்த கிருஷ்ணன் ஐயாவின் வாழ்த்து செய்தி 




அடுத்து பெங்களூர் சாந்தாராம் ஐயாவின் செய்தி 



தொட்டியம் சாய் பைரவ பீடம் வழங்கிய வாழ்த்து செய்தி 



நம் நண்பர் திரு.பிரபு ஐயா, செஞ்சி 




தாம்பரம் தங்கவேல் ஐயா பகிர்ந்த வாழ்த்து 


கோயம்புத்தூர் திருமதி அனு அம்மையார் கொடுத்த வாழ்த்து செய்தி 






திரு.ரமேஷ் ஐயா , திருச்சியிலிருந்து வழங்கிய வாழ்த்து செய்தி 



மலேசியா பிரபாகர் ஐயா கொடுத்த வாழ்த்து செய்தி 



பெங்களூர் அசோக் ஐயா கொடுத்த வாழ்த்து செய்தி கீழே உங்கள் பார்வைக்கு 


தஞ்சாவூர் சித்தர் அருட்குடில் திரு.கணேசன் ஐயா கொடுத்த வாழ்த்து செய்தி. நம்மை நம் குருநாதர் வழியில் நடத்தி வரும் திரு.கணேசன் ஐயாவிற்கு நம் நன்றிகளை இங்கே தெரிவித்து மகிழ்ச்சி அடைகின்றோம்.





சேலம் சசிகுமார் ஐயா கொடுத்த அன்பு செய்தி 



திரு.சந்துரு கொடுத்த எண்ணப்பதிவு 



மலேஷியா சாந்தி பாலச்சந்தர் அம்மா கொடுத்த வாழ்த்து செய்தி.



இவை அனைத்தும் நம் குருநாதர்  அருளாலே அன்றி வேறொன்றும் இல்லை. நம் தளத்தின் 6 ஆம் ஆண்டு பயணத்திற்கு வாழ்த்து செய்தி அனுப்பி நம்மை உற்சாகப்படுத்தி, நம் தளத்தின் சேவைகளில் பொருளுதவி, அருளுதவி செய்து நமக்கு உறுதுணையாக உள்ள அணைத்து அன்பர்களுக்கும் நன்றி கூறி மகிழ்கின்றோம்.

அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!


மீள்பதிவாக:-

 ஐந்தாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2021/04/tut.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (5)  - https://tut-temples.blogspot.com/2020/04/tut-5.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (3) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-3.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html