எட்டு வயதுச் சிறுவனாக ஆதி சங்கரர், நர்மதை நதிக்கரையில் தன் குருவைத் தேடி அலைந்தபோது கோவிந்த பகவத்பாதர் என்னும் மகானைச் சந்தித்தார். அந்த மகான் சிறுவனை நோக்கி, ‘நீ யார்?’ என்று கேட்டார். அவருக்குப் பதிலளிக்கும்படியாக பாடியதே நிர்வாண சதகம். சுவாமி கோவிந்த பாதர், அவரை சீடனாக ஏற்றுக்கொண்டார். சுய அறிதலை நோக்கிய பயிற்சிகளுக்கு இந்தச் செய்யுள்கள் அடிப்படையாகப் பார்க்கப்படுகிறது.

சமத்துவம், அமைதி, சாந்தம், விடுதலை, ஆனந்தத்தைத் தரும் ஆத்ம சதகம் இது. ஆதி சங்கரரின் ஆத்ம சதகம், ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

மனம் புத்தி அகந்தை நினைவு அல்ல

செவிகள் சருமம் நாசி கண்கள் அல்ல

வெளி பூமி தீ நீர் காற்றும் அல்ல

நான் சிதானந்த வடிவமான சிவன்

நான் சுவாசமோ பஞ்சபூதங்களோ அல்ல

பொருண்மையோ பஞ்சகோசங்களோ அல்ல

என் பேச்சு கைகள் கால்கள் நான் அல்ல

நான் சிதானந்த வடிவமான சிவன்

விருப்பம் விரோதம் பேராசை மாயை

பெருமை பொறாமை

என்னிடம் இல்லை

எனக்கென்று கடமையோ செல்வத்துக்கான ஆசையோ

காமமோ விடுதலையோ இல்லை

நான் சிதானந்த வடிவமான சிவன்

புண்ணியமோ பாவமோ சவுக்கியமோ துக்கமோ

நான் அல்ல

மந்திரமோ தீர்த்தமோ வேதமோ யக்ஞங்களோ

எனக்குத் தேவையல்ல

அனுபவிப்பவன் அல்ல அனுபவம் அல்ல

நான் சிதானந்த வடிவமான சிவன்

மரண பயம் எனக்கில்லை

சாதியும் சமயமுமில்லை

எனக்குத் தந்தை தாய் கிடையாது

நான் பிறக்கவே இல்லை

நான் உறவினனோ நண்பனோ

ஆசிரியனோ அல்ல

நான் சிதானந்த வடிவமான சிவன்

நான் இரட்டைகள் ஒழிந்தவன்

வடிவமற்றதே எனது வடிவம்

எல்லாப் புலன்களிலும் பரவி எங்குமிருப்பவன்

பந்தத்திலும் இல்லை

விடுபடவும் இல்லை

பிடிபடவும் இல்லை

நான் சிதானந்த வடிவமான சிவன்