"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, May 7, 2019

மனிதம் வளர்க்கும் மாமனிதர் முல்லைவனம்

முல்லைவனம்!

மரம் நட்டு மனிதம் வளர்க்கும் மாமனிதர்தான் முல்லைவனம்.பெயருக்கேற்றார்  போல், அன்பை தன்னுள்ளே உள்ள இதய வனத்தில் புதைத்து இருக்கின்றார்.இவரைப் போன்ற நல்லுள்ளங்களின் சேவை தான், இன்றைய கால கட்டத்தின் தேவை.இவர் மரங்கள் நட்டு பாதுகாப்பது மழைக்காக மட்டும் அன்று. மரங்களை நம்மைப் போன்றே மற்றுமொரு உயிராக கருதுகின்றார்.தூய உள்ளம்,தொண்டு உள்ளம், பசுமை உள்ளம் கொண்ட மரங்களின் காதலர் மட்டுமன்று.மரங்களின் காவலரும் கூட.

ஊழியின் பிடியில் வாழ்ந்து வரும் நாம்,சற்று நினைத்துப் பாருங்கள். இன்னும் ஒரு 50 ஆண்டுகள் கழித்து,நம் சந்ததியினர் என்ன சாப்பிடுவார்கள் ? இப்போது நமக்கு கிடைக்கும் காற்றாவது அவர்களுக்கு கிடைக்குமா? நீர்நிலைகளின் கதி என்ன? பாக்கெட்டுகளில் விற்கப்படும் நீர்,இனிவரும் காலத்தில் சிறு குப்பிகளில் கிடைக்குமா ? மை உறிஞ்சும் பில்லர்களில் சொட்டு சொட்டாய் நீர் உறிஞ்சுவார்களோ? நெஞ்சம் பதைபதைக்கின்றது.

இனி மேல் வரும் நிலை மாறவும், இப்போது நாம் அனுபவித்து  வரும் சூழியலை கொஞ்சம் மேம்படுத்தவும்,ஓராயிரம் முல்லைவனம் போன்ற நல்உள்ளங்கள் தேவை.இந்த பதிவை படிக்கும் ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் குறைந்தது 5 மரங்களையாவது நட்டு பராமரிக்க வேண்டும்.

மரங்கள். நாம் நினைப்பது நாம் உயிர் வாழ காற்று தருகின்றது என்று? அதையும் தாண்டி. நமக்கு வாழ்வியல் வரங்களைத் தருகின்றது. நம்மைப் போன்ற ஒரு உயிர். அருகில் சென்று தொட்டுப் பாருங்கள்.மரங்கள் நம்முடன் பேசும். பசுமை மூலம் நமக்கு உயிர்த்தலை தருகின்றது.மண்ணை மெருகேற்றுகின்றது, நீரை வளமாக்குகின்றது. சூழலியலை சமன் படுத்துகின்றது.ஓராரியிரம் உயிர்களுக்கு கூடமாய் விளங்குகின்றது. பொது நலம் போதிக்கும் கடவுளாய் நாம் மரங்களை பார்க்க வேண்டும். மரம் வளரும் போது வேர் விட்டு பரப்புதலை பார்க்கும் போது,மனிதனும் குடும்பத்தை கிளைகளாக பரப்ப வேண்டும் என்று சொல்கின்றது.

மரங்கள்.
வாழ்வியல் போதிக்கும் ஆசான்.இறைமையை போதிக்கும் இறைவன், அறம் போற்றும் ஆண்டவன்.
தல விருட்சங்கள் என்று ஆன்மிகத்திலும் அறம் வைத்தான் எம் சித்தர்கள்.அவர்கள் நம் முப்பாட்டன்மார்கள்.

நன்றாய் சிந்தித்து பாருங்கள்.வேப்பமர சூழலில் வளர்ந்த நாம் இன்று வேப்பங்குச்சியை இணைய வணிகத்தில் வாங்கும் கொடூர நிலைக்கு தள்ளப் பட்டிருக்கின்றோம்.இதை பெருமையாய் வேறு பேசிக் கொள்கின்றோம்.காலம் கடந்து விடவில்லை.இனியேனும் சற்று விழித்து,நம் கண் முன்னே உள்ள மரங்களைப் பாதுகாப்போம். அண்மையில் facebookல் பார்த்த செய்தியை, அவரின் அனுமதியோடு இங்கே பகிர்கின்றோம்.

நாங்கள் சிறு வயதாக இருக்கும் போது எங்கள் ஊரில் வீட்டிற்கொரு தென்னை மரம் இருக்கும். எங்கள் வீட்டருகே இருக்கும் மலையின் உச்சியிலிருந்து பார்த்தால் செங்கல்பட்டு முழுவதும் தென்னந்தோப்பு போல் ஒரு காட்சிப்பிழை தோன்றும். அதனிடையே எங்கள் வீடுகளை தேடுவதே ஒரு தனி இன்பம் :)

அப்போது எல்லா வீட்டிலும் இளநீர், கீற்றுகளை வெட்ட பக்கத்து சிற்றூர்களிலிருந்து மரமேறிகள் வருவார்கள். இவர்கள் உழவர்களாக இருந்தவர்கள். நன்றாக இளநீர் குடிப்போம், தாத்தா கீற்றுகளை வேய்ந்து வாசலுக்கு தட்டி செய்வார். குச்சிகளை துடைப்பமாக்குவார். மரமேறுபவர்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவராக கருதப்படுவார். அவர் வீட்டு நல்லது கெட்டதுகளில் நாங்களும், எங்களுக்கு அவர்களும் வருவார்கள்.

வெட்டிப் போட்ட தென்னை கீற்றுகள் மலை போல் குவிந்து கிடக்க படுத்து உருளுவோம் நண்பர்களோடு, நல்ல குளுமையாக இருக்கும். ஓலை மீது உட்கார்ந்து ஒருவன் இழுத்துச் செல்ல வண்டி போல் பயன்படுத்துவோம்.  தாத்தா பார்த்தால் பேயாட்டம் தான், தடி எடுத்து துரத்துவார். பாட்டி எங்களுக்கு வக்காலத்து வாங்கும் :) வாழ்வின் பெரு வசந்த காலங்கள் அவை.

காலம் செல்ல செல்ல சில வீடுகளில் தென்னைகளும் இன்ன பிற மரங்களும் காணாமல் போயின. வீடு கட்ட வேண்டுமே. அதன் பிறகு எப்போதாவது மரமேறுபவர்களைப் பார்ப்பேன். வீடு கட்டுவதற்காக மரங்களை வெட்ட அவர்கள் வந்த போது தான்.

இப்போதும் ஒரு 60% வீடுகளில் தென்னை மரங்கள் உள்ளன. ஆனால் அவைகள் அப்படியே இருக்கின்றன எவ்வளவு காற்று மழை வந்தாலும். அந்த வீட்டு மாந்தர்கள் மட்டும் மாறிவிட்டார்கள் நவீன நுகர்வு  குமுகத்தினராய்.  தேங்காய் தரையில் விழுந்தால் கூட எடுப்பாரில்லை.  என் போல் கூச்சமில்லாதவர்கள் கண்ணில் பட்டால் மட்டும் எடுப்பார்கள்.

தன்னிறைவாக வாழ்ந்த ஒரு இனம் நுகர்வின் அடிமையாய் மாறிய கதையிது.

பளபளக்கும் தரைக்கு அடியில் எங்கள் வீட்டுத் தென்னையின் வேர்கள் மரித்துக் கிடக்கின்றன. கூடவே தாத்தன் பாட்டியின், எங்கள் சிறுபருவ நினைவுகளும்.

தினேசு
10-08-17

இதுபோல் எத்துணை,எத்துணை வாழ்வின் நிகழ்வுகளை/ நிதர்சனங்களை  இழந்திருக்கிறோம் என்று தெரியவில்லை.

மரங்கள் பற்றி போதும். இனி மனிதம் வளர்க்கும் முல்லைவனம் பற்றி அறிவோம்.
இவரின் நோக்கம் மரங்களைக் காப்பதே. இவர் பாரம்பரியமான மரம் வளர்க்கும் முறைகள் பற்றி விளக்குகின்றார்.பசுமைக்காக வாழும் மனிதர்.விரைவில் இவரை சந்தித்து மேலும் பல தகவல்கள் தர இறையிடம் வேண்டுகின்றோம்.

மரங்களுக்காக தம் வாழ்வை அர்ப்பணித்த மனிதர் இவர்.நாளொரு மேனியும்,பொழுதொரு வண்ணமுமாக இவரின் சேவைகள் மிளிர்ந்து வருகின்றது. சென்னையை உலுக்கிய வர்தா புயலுக்குப் பின்,இவர் சென்று சுமார் 500 மரங்களை உயிர்ப்பித்து வந்துள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்,முல்லைவனம் ஐயாவின் பயணத்தை இங்கே பதிப்பதில் TUT பெருமை கொள்கின்றது.


 மரங்களைப் பராமரிப்பதற்காகவே எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி சென்னை முழுதும் உழைத்துக் கொண்டிருக்கும் நல்ல உள்ளம். வர்தா புயல் பற்றி பக்கமாய் மீடியாக்கள் பேசிக் கொண்டிருந்த கால கட்டத்திலேயே தனி மனிதனாய் எதையும் எதிர்ப்பார்க்காமல் தன்னால் இயன்ற மரங்களை காப்பாற்றி மீட்டுள்ளார், ஆங்கிலம் தெரியாது, அரசியல் கிடையாது, எளிமையாக 24/7 பசுமைக்காகவே வாழும் மனிதர், இவரின் பாரம்பரிய மரம் வளர்க்கும் முறை மரங்களை எளிதில் அழிவிலிருந்து மீட்கவும், போராடி தங்களை தாங்களே வளர்ப்பிக்கவும் வழி வகை செய்கிறது.







மேற்கண்ட இணைப்பு படங்கள் ஒவ்வொன்றும் முல்லைவனம் ஐயாவின் கனவினை சொல்லும். கனவினை நனவாக்கியும் வருகின்றார். நாள்தோறும் பசுமை பற்றியே போற்றி வருகின்றார்.ஏதேனும் மரங்கள் துயரத்தில் இருந்தால் (ஆணி அடித்தல் போன்ற செய்கைகள் ),உடனே தன் பசுமைக் கரம் நீட்டி உதவிடுவார்.மரங்களை மட்டுமா? இவர் வளர்க்கிறார். மரங்களின் மூலம் மனிதம் சேர்த்தும் வளர்க்கிறார். மரங்களின் தந்தை,மரங்களின் காவலன் என்றும் இவரைப் பாராட்டலாம்.

2012 ம் ஆண்டு முதல் இவர் ஆற்றி வரும் தொண்டின் துளிகளை இங்கே சமர்ப்பிக்கின்றோம். கடந்த ஓராண்டாய் சமூக வலைத்தளத்திலும் விழிப்புணர்வு ஊட்டி வருவது இங்கே குறிப்பிடத் தக்கது.




















தனது சேவையை "ட்ரீ பேங்க் " என்ற தன்னார்வ தொண்டின் மூலம் இவர் பசுமையை இப்புவியில் போர்த்தி வருகின்றார். ட்ரீ பேங்க் மூலம் ஏராளமான மரக்கன்றுகளை இலவசமாக கொடுத்து வருகின்றார். ஒவ்வொரு பண்டிகையையும் அர்த்தமுள்ளதாக மாற்றி வருகின்றார்.தீபாவளி,பொங்கல்,சுதந்திர விழா போன்ற நிகழ்வுகளில் நாம் தற்போது என்ன செய்கின்றோம்.பண்டிகை என்றாலே வீட்டில் ஓய்வு,நாள் முழுதும் தொல்லை தரும் தொலைக்காட்சியுடன் என்று கழித்து வருகின்றோம்.ஆனால் முல்லைவனம் ஐயா அவர்கள் அன்று சிறப்பானமுறையில் மரம் நடுதல்,பராமரித்தல் பற்றி தொண்டாற்றுகின்றார்.

இவரின் சேவையைக் கண்டும்,கேட்டும் ஏராளமான இளைஞர் ட்ரீ பேங்க் கில் இணைந்து, மரம் நடுதல் மூலம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றார்கள்.

சென்னை வர்தா புயல் தாக்கி விழுந்த மரம் நடுதல் அடையாறு பகுதியில்.31.12.2016 இன்று மரக்கன்று வங்கியின் சேவை பணி





சென்னை வர்தா புயல் தாக்கி விழுந்த மரங்கள் நடும் பணி சேவைகளையும் நாளை.01.01.2017 ஆம்  ஆண்டு பசுமை புத்தாண்டு என நாம் அனைத்து பொது மக்களும் ஓரு மரம் நடவேண்டும் என மரக்கன்று வங்கி(Treebank) 31.12.2016இன்று பொது மக்களுக்கு பத்தாண்டு பரிசாக மரக்கன்றுகள் வழங்கி  உள்ளது.இதுபோல் சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்நிலையில் TUT என்ற பயணம் ஓராண்டை கடந்த பிப்ரவரி மாதம் நிறைவு செய்தது. உழவாரப்பணி,அன்ன தானம், தொழு நோயாளிகள் தொண்டு இல்லம் என்று பார்த்து, நாமும் பசுமை நோக்கி ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பி, ஐயாவிடம் பேசினோம்.அவரது வழிகாட்டலின் பேரில் சில செடிகளை , estancia park வெளியே நட்டோம்.இந்த புதிய முயற்சிக்கு உதவிய ஐயாவுக்கு நன்றி சொல்லி நேரில் சந்தித்த நிகழ்வுகளை இங்கே கீழே காணாலாம்.
அதற்கு முன்பாக ஒரு முக்கியமான செய்தியாக அவரைப்பற்றி.சென்னை விருகம்பாக்கம் பெருமாள்கோவில்தெரு பிளாட்பாரம்தான் இவரது குடியிருப்பு.சொந்த வீடு கிடையாது, வாடகை கொடுக்கும் அளவிற்கு வசதி கிடையாது,ஆகவே ஒதுக்குப்புறமான இடத்தில் நாலு கம்புகளை நட்டு அதற்குள் வசித்து வருகிறார்.

ஸ்ரீபெரும்புதூரில் இருந்த போது இவரது தாத்தா சித்திரை விவசாயத்திற்கு போகும்போது முல்லைவனத்தையும் கூடவே அழைத்துப் போய் மரம் செடி கொடிகள் பற்றி நிறைய சொல்வராம்.அப்படி அவர் சொன்ன விஷயங்கள் இவரது மனதில் ஆழமாக பதிந்துவிட்டது.
எட்டாவதிற்கு மேல் படிப்பு வராத நிலையில் தனக்கு பிடித்த தோட்ட வேலைக்கு போக ஆரம்பித்தார்.அதில் தேர்ச்சி பெற்று யாராவது வீட்டு தோட்டம் , மாடி தோட்டம் அமைக்க கூப்பிட்டால் போய் அமைத்து கொடுத்து அதில் வரும் வருமானத்தில் குடும்பம் நடத்திவருகிறார்.
இப்படி இளம் பிராயம் முதலே மரம் செடி கொடிகளுடனேயே வளர்ந்ததால் அவைகளின் குணாதிசயங்கள் பற்றி நன்கு தெரியும்.எல்லோரையும் மரம் வளர்க்கவைக்க வேண்டும் என்பதற்காக, வரக்கூடிய வருமானத்தில் தன் தேவைக்கு கூட எடுக்காமல் மரக்கன்றுகளை இலவசமாக வாங்கி கொடுக்க ஆரம்பித்தார்.

இந்த சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள எந்த பள்ளிக்குழந்தையாக இருந்தாலும் முல்லைவனத்திடம் மரக்கன்றுகள் வாங்காமல் இருக்கமாட்டார்கள்.பள்ளிக்கூடங்களுக்கு தானே வலியச் சென்று மாணவர்களிடம் மரம் வளர்ப்பது எவ்வளவு எளிது என்று பேசி மரக்கன்றுகள் வழங்குவார்.இந்த நிலையில்தான் சென்னைக்கு அடுத்தடுத்த வந்த புயலால் மரங்கள் பல விழுந்துவிடவே இந்த மரங்களையே நடுவது அல்லது அது இருந்த இடத்தில் வேறு மரங்களை நடுவது என்று முடிவு செய்தார்.

குளு குளு அறையில் உட்கார்ந்து புயலில் விழுந்த மரங்களை மீண்டும் நட்டால் வளருமா?வளராதா? என்று பட்டிமன்றம் நடத்தாமல் நம்மால் முடிந்த வரை விழுந்த மரங்களை எழுந்து நிறுத்துவோம் என்ற களப்பணியில் கடந்த சில நாளாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்.
விழுந்த மரம் எல்லாமே இறந்துவிடுவதில்லை, சில மரங்கள் ஒரு வருடம் ஆனால் கூட உயிரைவிடாமல் துடித்துக்கொண்டு இருக்கும் அந்த மரங்களை அடையாளம் கண்டு அவைகளுக்கு மருந்து சாத்தி உரிய இயற்கை உரங்களுடன் குழியில் நட்டால் மாண்டு போனதாக கருதப்படும் மரங்கள் நிச்சயம் மீண்டுவிடும்.

ஆமாம் நீங்களே நடைபாதை வாசியாச்சே எப்படி இந்த மரத்திற்கான மருந்து மற்ற செலவுகளுக்கு சமாளிக்கிறீர்கள் என்ற போது என் தாயார் பாப்பாத்தி இந்த பகுதியில் வீடு வீடாக போய் பால் பாக்கெட் போடுகிறவர் எப்படியும்சிலர் பால் பாக்கெட் வேண்டாம் என்று சொல்லிவிடுவர் அந்த பாலை மருந்துக்கு பயன்படுத்திக்கொள்கிறேன்.அதே போல என்னிடம் இலவசமாக மரக்கன்றுகள் வாங்கிக்கொண்டு போய் விளையாட்டாக வளர்க்க ஆரம்பித்து இப்போது அது வளர்ந்து தரும் சந்தோஷம் காரணமாக உனக்கு என்ன வேண்டும் என்று கேட்பார்கள். நான் மரம் வளர்க்க தேவையான மருந்து பொருளாக வாங்கிக்கொடுத்துவிடுங்கள் என்பேன் ஆகவே மரத்திற்கு தேவையான மருந்து செலவு இப்படித்தான் கிடைக்கிறது என்றார்.

என் மனைவி இருந்தவரை இலவச மரக்கன்றுகளை அவர்தான் தண்ணீர் ஊற்றி பராமரித்தார்.இப்போது என் குழந்தைகள் தங்களுடைய இளைய குழந்தைகளாக எண்ணி மரக்கன்றுகளை வளர்த்து வருகின்றனர்.ஏழை எளிய மக்கள் கூடுமிடமான அரசு பொது மருத்துவமனை,அரசுப்பள்ளி,பூங்கா போன்ற இடங்களில் மரங்களை மீண்டும் நடுவதற்கு கூப்பிடுங்கள் நான் வந்து சரி செய்துதருகிறேன்,மரங்களை அறுப்பதற்கான ரம்பம் போன்றவைகளை வாடகைக்கு எடுக்கவேண்டியிருக்கிறது அந்த செலவுதான் சமாளிக்க முடிவதில்லை. யாராவது இது போன்ற பொருள்களை, பொருள்களாக வாங்கித்தந்தால் போதும் அவர்களுக்கு மரங்களின் ஆசிகள் என்றென்றும் உண்டு என்று சொல்லும் முல்லைவனத்தோடு பேசுவதற்கான எண்:9444004310

நாமும் சில சமயங்களில் ஐயாவை சந்தித்து,எங்களால் முடிந்த உதவியை TUT சார்பாக செய்து வருகின்றோம்.இந்த பதிவை படிக்கும் அன்பர்கள் தங்களால் முடிந்த உதவியை அவருக்கு செய்யவும்.மேற்கொண்டு குறைந்தது 1 மரமாவது நட்டு பராமரிக்கவும்.

ஆங்..எங்களின் ஓராண்டு நிறைவின் - மரம் நடு விழாவின் துளிகள்

                                                    முல்லைவனம் ஐயாவுடன்  சந்திப்பில்



மரம்/செடி நட - குழிகள் தாயார் நிலையில் 










நிகழ்வில் பங்கு பெற்ற அனைவரும் மகிழ்வுற்றனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் TUT குழுவின் சார்பாக நன்றி கலந்த வணக்கத்தை  தெரிவித்துக் கொள்கின்றோம்.வெகு விரைவில் மீண்டுமொரு பசுமை நிகழ்வை நடத்திட இறையிடம் வேண்டுகின்றோம்.


2 comments:

  1. Congratulations u r teams wonderful working 🙏🙏🙏🙏💐💐💐

    ReplyDelete
    Replies
    1. சிவ சிவ நன்றி பெருமானே.
      தொடர்ந்து நம் தளத்தை பார்வையிட்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகின்றோம். நன்றி வணக்கம்
      ஓம் அகத்தீசாய நம
      ரா.ராகேஸ் சின்னாளபட்டி

      Delete