"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, May 31, 2019

காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்


அனைவருக்கும் வணக்கம். 


இன்று வைகாசி  பரணி   நட்சத்திரம். சித்திரை பரணியில் சிறுத்தொண்டர் நாயனார் பதிவோடு நம் 
புதிய தளத்தை ஆரம்பம் செய்தோம். இன்று வைகாசி பரணியோடு ஒரு மாதம் கடந்திருக்கின்றோம். வெறும் நாட்களை நாம் கடத்த விரும்பவில்லை. ஏதாவது இந்த சமுதாயத்திற்கு உதவும் வகையில் ஒரு சிறு எறும்பு செய்யும் பணியைத் தான் நாம் இதுவரை செய்து வருகின்றோம். நம் புதிய தளத்தின் பார்வையாளர்களின் எண்ணிக்கை சுமார் 2500 எண்ணிக்கையை தாண்டியுள்ளது. இந்த ஒரு மாதத்தில் அகத்தியர் ஆயில்யம் பூசை சிறப்பாக நடைபெற்றது.  நாம் நம் தளம் சார்பில் கொடுத்த சிறு தொகையில் கூடுவாஞ்சேரி வேலி அம்மன் கோயிலில் சிவ தாளம் காண சென்றோம். இன்றைய பிரதோஷ தரிசனத்தில் நாமும் அதனை இசைத்தோம். இதெல்லாம் நடக்கும் என்று நாம் கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் குருவருள் நமக்கு வழி நடத்தி வருகின்றது.

என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே யிருங்கடல் வையத்து
முன்ன நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப்
பன்னி யாதரித் தேத்தியும் பாடியும் வழிபடு மதனாலே.







இந்த ஆண்டு கூடுமானவரையில் அடியார்களின் பூசை தொகுத்து தந்து வருகின்றோம். அந்த வரிசையில் இன்று கழற்சிங்கன் நாயனார்   பற்றி சிறிது உணர்வோம்.

    "கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்
    காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்" - திருத்தொண்டத்தொகை.

கழற்சிங்க நாயனார் பல்லவர் குலத்திலே தோன்றியவர்; சிவனடி அன்றி வேறொன்றை அறிவினிற் குறியாதவர்; வடபுலவேந்தரை வென்று அறநெறியில் நின்று நாடாண்ட வேந்தராகிய இவர் ஒரு நாள் திருவாரூரை அடைந்து திருக்கோயிலை வணங்கச் சென்றார். அப்பொழுது திருக்கோயிலை வலம்வந்து திருப்பூ மண்டபத்தை அடைந்த பட்டத்தரசி அங்கு கீழே வீழ்ந்து கிடந்த மலரொன்றை எடுத்து மோந்தாள். அவள் கையில் புதுமலரைக் கண்ட அங்குவந்த செருத்துணையார் என்னும் சிவனடியார் இவள் இறைவனுக்குச் சாத்தும் மலரை மோந்தாள் என்று வெகுண்டு அம்மலரை எடுத்து மோந்த மூக்கினை கத்தியால் அரிந்தார். பட்டத்தரசி கீழே விழுந்து அரற்றி அழுதாள். உள்ளே பூங்கோயில் இறைவரைப் பணிந்து வெளியேவந்த கழற்சிங்கர், அரசியின் புலம்பலை அறிந்து வந்து மிகவும் வெகுண்டு 'அச்சமின்றி இந்தக் கொடுஞ்செயலைச் செய்தவர் யார்?' என வினவினார் .அருகே நின்ற செருத்துணையார், 'இவள் இறைவர்க்குச் சாத்துதற்குரிய மலரை எடுத்து மோந்தமையாலே நானே இதைச் செய்தேன்' என்றார். அப்போது கழற்சிங்கர் அவரை நோக்கி, 'பூவை எடுத்த கையையன்றோ முதலில் வெட்டுதல் வேண்டும்? என்று சொல்லித் தம் உடைவாளை உருவிப் பட்டத்தரசியின் கையைத் தடிந்தார். இத்தகைய அரிய தொண்டினைச் செய்த கழற்சிங்க நாயனார் சைவநெறி தழைத்தோங்க அரசாண்டு சிவபெருமான் திருவடி நீழலில் அமர்ந்திருக்கும் பெருவாழ்வு பெற்றார்.



பல்லவ மன்னரான மூன்றாம் நந்திவர்மனே, கழற்சிங்க நாயனார் என்பது ராசமாணிக்கனாரின் பெரிய புராண ஆராய்ச்சி நூல் தகவல். இராஷ்டிர கூட அரச மரபில் வந்த சிறந்த சமண பக்தரான அமோகவர்ஷ நிருபதுங்கன் மகள் சங்கா தான் தண்டிக்கப்பட்ட பட்டத்துஅரசி என்பதும் ராசமாணிக்கனாரின் ஆராய்ச்சி முடிவு.

சற்று விரிவாக காண்போம்.

 கழற்சிங்க நாயனார், பல்லவ மன்னர்களின் குலத்தின் வழி வந்தவர். சிவபெருமானின் மீது அளவற்ற அன்பு கொண்ட இவர், தன்னுடைய அன்றாடப் பணிகளில் எது விடுபட்டாலும், சிவ வழிபாட்டை தவறாது செய்து விடும் சிறந்த சிவ பக்தர் ஆவார். சிவ அருளின் காரணமாக நாட்டையும் அறநெறி தவறாது ஆட்சி செய்து வந்தார். இவர் வடபுலத்து மன்னர்களையெல்லாம் வென்று வாகை சூடி பொன்னும், பொருளும் பெற்றார். அவற்றையெல்லாம் இறைவனின் ஆலய வழிபாட்டிற்கும், அடியார்களுக்கும் வழங்கி வந்தார்.

இந்த நிலையில் கழற்சிங்க மன்னருக்கு திருவாரூரில் கோவில் கொண்டிருக்கும் பெருமானை தரிசனம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதனை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் தனது மனைவியையும் அழைத்துக் கொண்டு பரிவாரங்களுடன் திருவாரூர் நோக்கிப் புறப்பட்டார். திருவாரூரில் உள்ள எம்பெருமானின் கோவிலை அடைந்ததும், பிறைசூடி அருள் பாலிக்கும் ஈசனை மனமுருக வேண்டினார். சிரம் தாழ்த்தி வீழ்ந்து வணங்கினார். பின்னர் இறைவனின் அருள்வடிவத்திலே தன்னை மறந்து, கண்ணில் நீர்மல்க உள்ளத்திலே அன்பு பொங்க பக்தியிலே மூழ்கிப்போனார்.

அந்த நேரத்தில் கழற்சிங்க நாயனாரின் பட்டத்து அரசியானவர், திருக்கோவிலை வலம் வந்து அங்கிருந்த மண்டபங்களைக் கண்டு அதிசயித்துக் கொண்டிருந்தார். அவ்வாறு வலம் வரும் வேளையில் மணி மண்டபத்தில் சிலர், இறைவனுக்கு அணிவிப்பதற்காக மலர்களை மாலையாக தொடுத்துக் கொண்டிருப்பதை அரசியார் கண்டார். கண்ணை கவரும் வண்ணத்துடனும், கருத்தைக் கவரும் நறுமணத்துடனும் இருந்த அந்த மலர்களை கண்டதும் அரசிக்கு ஆனந்தம் மேலிட்டது. நறுமணம் வீசும் மலர்களைக் கண்டதும், தன்னிலை மறந்தார். அங்கிருந்த ஒரு மலரை எடுத்து மூக்கின் அருகே வைத்து முகர்ந்துப் பார்த்தார்.

 மணி மண்டபத்தில் மலர் தொடுத்துக் கொண்டிருந்த அடியார்களில், செருத்துணை நாயனாரும் ஒருவர். அவர் அடியவர்களுக்கும், ஆண்டவனுக்கும் யாராவது அறிந்தோ அறியாமலோ தவறு செய்தால் அதனை உடனே கண்டிப்பார், இல்லாவிடில் தண்டிப்பார். அப்படிப்பட்ட செருத்துணை நாயனாருக்கு, அரசியின் செயலைப் பார்த்ததும் கடும் கோபம் வந்தது. இறைவனுக்கு அணிவிக்கும் மாலைக்காக தொடுக்க வைத்திருந்த மலரை முகர்ந்து பிழை செய்தவர், அரசி என்பதைக்கூட அவர் சிந்தனைச் செய்யவில்லை. தவறு என்பதை அறிந்ததும் தான் வைத்திருந்த வாளால், அரசியின் மூக்கை வெட்டினார்.

பூவினும் மென்மையான பட்டத்தரசி மயக்கமுற்று மண் மீது சாய்ந்தாள். இந்தச் செய்தி, சிவபெருமானை வழிபட்டுக் கொண்டிருந்த மன்னருக்கு எட்டியது. மன்னர் அரசியிடம் விரைந்து வந்தார். நிலத்தில் துவண்டு விழுந்து துடித்துக் கொண்டிருந்த அரசியாரின் நிலையைக் கண்டு மன்னனின் நெஞ்சம் பதைபதைத்தது.

‘அஞ்சாமல் இந்தக் கொடிய செயலைச் செய்தவர் யார்?’ என்று கண்களில் கோபம் தெறிக்கக் கேட்டார்.

அந்த அச்சுறுத்தும் குரலோசையைக் கேட்டு, ‘மன்னா! இச்செயலை செய்தது நான்தான்’ என்று துணிந்து கூறினார் செருத்துணை நாயனார்.

உடலில் சிவ சின்னத்துடன், சைவத் திருக்கோலத்தில் நின்றிருந்த செருத்துணை நாயனாரைப் பார்த்ததும் மன்னன் ஒருகணம் சிந்தித்தான். ‘சிவனடியார் தோற்றத்துடன் காணப்படும் இவர், இச்செயலை செய்யும் வகையில் என் மனைவி செய்த பிழைதான் என்னவோ!’ என்று எண்ணியவர். அதுபற்றி அந்த அடியவரிடமே கேட்டார்.

‘அரசியார் எம்பெருமானுக்குரிய மலர்களை முகர்ந்து பார்த்தார். அதன்காரணமாகவே அவரது மூக்கை நான் துண்டிக்கும் நிலை ஏற்பட்டது’ என்றார் செருத்துணை நாயனார்.

மன்னர் மனம் கலங்கினார். இரு கரம் கூப்பி செருத்துணை நாயனாரை வணங்கியவர், ‘ஐயனே! நீங்கள் தண்டனையை முறைப்படி அளிக்கவில்லை’ என்று கூறியபடியே தன்னுடைய உடைவாளை கையில் எடுத்தார். மேலும் கழற்சிங்க நாயனார் கூறுகையில், ‘கையில் எடுக்காமல் மலரை எவ்விதம் முகர்ந்து பார்க்க இயலும். எனவே முதலில் தவறு செய்த கைக்கு தாங்கள் தண்டனை கொடுக்காமல் விட்டுவிட்டீர்களே!’ என்று கூறியவர், அத்துடன் நில்லாமல், சட்டென்று அரசியின் மலர் கரங்களை வெட்டினார்.

தன்னைக் காட்டிலும் உயர்ந்த சிவ பக்தி கொண்ட மன்னருக்கு தலைவணங்கினார் செருத்துணை நாயனார்.

அப்போது சிவபெருமான், உமா தேவியருடன் இடப வாகனத்தில் எழுந்தருளினார். பட்டத்தரசியாருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கி அருளினார். மன்னருடைய சிவபக்தியையும், அடியார்கள் மீது அவர் கொண்டுள்ள பக்தியையும் மெச்சியவர், அனைவருக்கும் ஆசி கூறி மறைந்தார்.

சிவபக்தியும், சிவ அடியார்களை பணிந்தும் வாழும் கழற்சிங்க நாயனாரை, அனைவரும் போற்றிப் பணிந்தனர். மன்னரின் புகழ் திக்கெட்டும் பரவியது. மன்னர் கழற்சிங்க நாயனார் பூவுலகில் பல்லாண்டு காலம் வாழ்ந்து அறநெறி பிறழாமல் அரசாட்சி புரிந்தார். முடிவில் சிவ பெருமானின் திருவருளால், சிவலோகம் அடைந்து இன்புற்றார்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_68.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

இவரை எம்முன் கொண்டு நிறுத்துக - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_29.html

ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_57.html

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_20.html

விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_69.html

 வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_98.html

 செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post.html


எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html


 அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html
 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html
 சத்குரு ஸ்ரீ ராம பரதேசி சுவாமிகள் குரு பூஜை - 06/05/2019 - https://tut-temples.blogspot.com/2019/05/06052019.html
 பஞ்சேஷ்டி அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_13.html

No comments:

Post a Comment