அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இன்று பங்குனி மாத திருவாதிரை நட்சத்திரம். இன்று முழுதும் திருவாதிரை நட்சத்திரம் உள்ளது. இந்த நாளில் கணநாதநாயனார் குருபூஜை வருகின்றது. இதற்கு முந்தைய அறுபத்து மூவர் குரு பூஜை பதிவுகளில் சாக்கிய நாயனார். வாயிலார் நாயனார், கண்ணப்ப நாயனார் , அரிவாட்டாய நாயனார், சண்டேஸ்வர நாயனார், திருநீலகண்ட நாயனார், அப்பூதியடிகள், கலிக்கம்ப நாயனார், எறிபத்த நாயனார்,காரி நாயனார், கோச்செங்கட் சோழ நாயனார், தண்டியடிகள், காரைக்கால் அம்மை, நேச நாயனார் பற்றி அறிந்து கொண்டோம். இப்படியெல்லாம் நடக்குமா? என்றால் நடக்கும் என்று பெரிய புராணம் வழியில் அறிகின்றோம்.
இறைவன் மீது கல்லெறிந்து முக்தி அடைந்தவர் சாக்கிய நாயனார். மனத்துள் சிவத்தை இருத்தி முக்தி கண்டவர் வாயிலார் நாயனார். கறியை படைத்து , தம் கண்ணைக் கொடுத்து முக்தி கண்டவர் கண்ணப்பர், இறைவனுக்கு அமுது செய்து கொடுத்து தம் கழுத்தை அறுக்க முற்பட்டு முக்தி அடைந்தவர் அரிவாட்டாய நாயனார், சிவபூஜைக்கு இடையூறு செய்த தம் தந்தையில் கால்களை மழுவால் அரிந்து , சிவ பூஜை செய்து சண்டேஸ்வரர் பதவி பெற்று சிவனோடு கலந்தவர் சண்டேஸ்வர நாயனார், இறைவனின் பெயரைச் சொல்லி ஏற்ற சபதத்திற்காகத் தன் வாழ்வின் மகிழ்ச்சியைத் தியாகம் செய்த திருநீலகண்ட நாயனார், திருநாவுக்கரசரின் பெயரில் பற்பல தொண்டுகள் புரிந்து ,தன் மகன் பாம்பால்கடியுண்ட போதிலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படடக்கூடாதுஎன்ற அச்சத்தால், இறந்த மகனை மறைத்துவைத்து பின், இறந்த மகன், சிவன்அருளால் உயிர் பெற்று, சிவானந்த அனுபவத்தில் முக்தி பெற்றவர் அப்பூதியடிகள். அதுபோல் இன்று நாம் கணநாத நாயனார் பற்றி அறிய உள்ளோம்.
கணநாத நாயனார் பழம்பெரும் புகழ் பெற்ற தலமான சீர்காழியில் பிறந்த வேதியர். அவர் சீர்காழியில் வாழ்ந்த வேதியர்களுக்குத் தலைவராகவும், அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும் விளங்கினார்.
அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் கணநாதர். அவர் இறைவன் மற்றும் அடியவர்கள் பால் கொண்டிருந்த பேரன்பின் காரணமாக கையிலாயத்தில் சிவகணங்களின் தலைமைப் பதவியை இறையருளால் கிடைக்கப் பெற்றவர்.
கணநாதர் தம்முடைய மரபுக்கு ஏற்ப ஒழுக்கத்தில் சிறந்து, சீர்காழியில் உள்ள தோணியப்பர் திருக்கோவிலுக்குச் சென்று வழிபட்டு பலவகையான தொண்டுகளைச் செய்து வந்தார்.
திருக்கோவில், நந்தவனம் மற்றும் தெப்பம் முதலியவற்றை பாதுகாத்து அவ்வப்போது செப்பனிட்டு சிறப்பாக வைத்துக் கொள்வதை தம்முடைய வாழ்நாள் பணியாகக் கொண்டு அவற்றைத் திறம்படச் செய்து வந்தார்.
மேலும் அவர் திருக்கோவிலுக்குத் திருத்தொண்டு செய்ய விரும்பி வந்தவர்களை, அவரவர்களுக்கு ஏற்றவாறு தொண்டு செய்யும் வழியில் பயிற்சிகள் தந்து, சிறப்பாக அத்தொண்டில் ஜொலிக்கச் செய்தார்.
நந்தவனப்பணி செய்வர்களுக்கு எவ்வாறு செடி கொடிகளைப் பாதுகாத்து வளர்ப்பது என்பதைக் கற்றுத் தந்தார். பூக்களைப் பறிக்கும் முறையையும், அப்பூக்களை மாலையாகத் தொடுக்கும் பணியையும் சிலருக்குக் கற்றுக் கொடுத்தார்.
திருமஞ்சனப் பணி செய்பவர், இரவும் பகலும் ஆலயத்தில் திருவலகிடுபவர், மெழுகுபவர், திருவிளக்கு எரிப்பவர், திருமுறைகளை எழுதுபவர் மற்றும் அத்திருமுறைகளை ஓதுபவர் ஆகிய பலவகைத் தொண்டர்களுக்கும் முறையான பயிற்சிகளை தந்ததோடு அவர்களை அச்செயலில் சிறந்து விளங்கும்படி ஊக்குவித்தார்.
இதனால் கணநாதரைச் சுற்றிலும் எப்போதும் தொண்டர் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
இல்லறத்தில் வழுவாது நின்று, சிவத்தொண்டில் ஆர்வம் கொண்டு, தொண்டு புரிபவர்களுக்கு ஆதரவும் ஆக்கமும் அளித்து, யாவரும் நன்கு மதிக்க வாழ்ந்தார் நாயனார்.
அவருக்கு சீர்காழியில் தோன்றிய ஞானக் கொழுந்தான திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரிடம் அளவற்ற பக்தி உண்டாயிற்று. அவர் ஞானசம்பந்தரின் திருவடிகளை போற்றி வணங்கி வந்தார்.
தொண்டருக்குத் தொண்டராகவும் தொண்டர்களுக்கு நாதராகவும் ஞானசம்பந்தர் பக்தராகவும் வாழ்ந்த இப்பெருமான், சிவனாரின் திருவருளால் திருக்கையிலையை அடைந்து கணநாதராகும் பதவி பெற்றுச் சிறப்படைந்தார்.
முறையான சிவவழிபாடு மற்றும் சிவனடியாரான சம்பந்தரை போற்றி கையிலையில் சிவகணங்களுக்கான தலைமைப் பதவியைப் பெற்ற கணநாத நாயனாரை, சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்‘ என்று புகழ்கிறார். சரியை மூலம் இறைவனிடம் சேர்ந்த நாயனார் இவர் ஆவார்.
ஆன தொண்டினில் அமர்ந்தபேர் அன்பரும் அகல் இடத்தினில் என்றும்
ஞானம் உண்டவர் புண்டரீகக் கழல் அருச்சனை நலம் பெற்றுத்
தூ நறும் கொன்றை முடியவர் சுடர் நெடும் கயிலை மால்வரை எய்தி
மான நல்பெரும் கணங்கட்கு நாதராம் வழித் தொண்டின் நிலை பெற்றார்.
பாடல் விளக்கம்:
திருத்தொண்டில் விரும்பியிருந்த பேரன்பரான கணநாதரும், பரந்த மண் உலகத்தில் எந்நாளும் ஞானசம்பந்தரின் தாமரை போன்ற திருவடியை வழிபடுதலான நன்மையை அடைந்து, அதன் பயனாய்த், தூய மணமுடைய கொன்றைப் பூக்களைச் சூடிய சடையுடையவரின் ஒளியுடைய நீண்ட திருக்கயிலை மலையை அடைந்து, பெருமையுடைய நல்ல பெருஞ் சிவகணங்களுக்கு நாதராகும் தலைமை பெற்று, அங்கு வழி வழியாகச் செய்து வரும் திருத்தொண்டில் நிலைபெற்று நின்றார்.
கணநாத நாயனார் குருபூஜை பங்குனி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.
கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்
முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_68.html
நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html
ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_57.html
No comments:
Post a Comment