"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, April 5, 2022

வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கு மடியேன் -05.04.2022

அனைவருக்கும்  அன்பு வணக்கங்கள்.

இன்று பங்குனி மாத ரோஹிணி நட்சத்திரம். இன்று மாலை 05:30  மணி முதல் நாளை மாலை 7 மணி வரை  பங்குனி மாத  ரோஹிணி  நட்சத்திரம் உள்ளது. இந்த நாளில் நேச நாயனார் குருபூஜை வருகின்றது. இதற்கு முந்தைய  அறுபத்து மூவர் குரு பூஜை பதிவுகளில் சாக்கிய நாயனார். வாயிலார் நாயனார், கண்ணப்ப நாயனார் , அரிவாட்டாய நாயனார், சண்டேஸ்வர நாயனார், திருநீலகண்ட நாயனார், அப்பூதியடிகள், கலிக்கம்ப நாயனார், எறிபத்த நாயனார்,காரி நாயனார், கோச்செங்கட் சோழ நாயனார், தண்டியடிகள், காரைக்கால் அம்மை பற்றி அறிந்து கொண்டோம். இப்படியெல்லாம் நடக்குமா? என்றால் நடக்கும் என்று பெரிய புராணம் வழியில் அறிகின்றோம். 

இறைவன் மீது கல்லெறிந்து முக்தி அடைந்தவர் சாக்கிய நாயனார்.  மனத்துள் சிவத்தை இருத்தி முக்தி கண்டவர் வாயிலார் நாயனார். கறியை படைத்து , தம் கண்ணைக் கொடுத்து முக்தி கண்டவர் கண்ணப்பர், இறைவனுக்கு அமுது செய்து கொடுத்து தம் கழுத்தை அறுக்க முற்பட்டு முக்தி அடைந்தவர் அரிவாட்டாய நாயனார், சிவபூஜைக்கு இடையூறு செய்த தம் தந்தையில் கால்களை மழுவால் அரிந்து , சிவ பூஜை செய்து சண்டேஸ்வரர் பதவி பெற்று சிவனோடு கலந்தவர் சண்டேஸ்வர நாயனார், இறைவனின் பெயரைச் சொல்லி ஏற்ற சபதத்திற்காகத் தன் வாழ்வின் மகிழ்ச்சியைத் தியாகம் செய்த திருநீலகண்ட நாயனார்,   திருநாவுக்கரசரின் பெயரில் பற்பல தொண்டுகள் புரிந்து ,தன் மகன் பாம்பால்கடியுண்ட போதிலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படடக்கூடாதுஎன்ற அச்சத்தால், இறந்த மகனை மறைத்துவைத்து பின், இறந்த மகன், சிவன்அருளால் உயிர் பெற்று, சிவானந்த அனுபவத்தில் முக்தி பெற்றவர் அப்பூதியடிகள். அதுபோல்  இன்று நாம் நேச நாயனார் பற்றி அறிய உள்ளோம்.



அக்காலத்தில் அந்த சாளுக்கியம் எனும் குந்தள நாடும் அதன் பகைநாடுகளும் பெரும் யுத்தம் செய்தன, அதில் காம்பீலியில் இருந்து மக்கள் வெளியேறும் அவசியம் வந்தது

அது சமண தாக்கம் என்கின்றார்கள், சமண மன்னன் செய்த அட்டகாசம் என்கின்றது சில குறிப்புகள்

அப்படி காம்பீலியில் இருந்து மக்கள் வெளியேறும் பொழுது சாலியர்களுக்கு அவர்கள் குடியேறவேண்டிய பகுதி பருத்தி விளைவிப்பதாகவும் சிவபூமியாகவும் நெசவுக்கு ஏற்ற பூமியாகவும் வணிக வாய்ப்பு கொண்டதாகவும் பலத்த காவல் கொண்டதாகவும் இருக்க தேடினர்

அப்பொழுது சோழநாடு அவர்களுக்கு தோதாயிற்று

பெரும் சாலியர் கூட்டம் காம்பீலியில் இருந்து சோழநாட்டின் மாயவரம் பக்கம் குடியேறிற்று, அங்கு சாலியர்களின் நெசவுதொழில் பெருகிற்று

துணியினை அறுப்பதால் அது அறுவையர் குலம் என்றானது போல, கூறு கூறாய் துணியினை விற்றதால் கூறை இனம் என்றாயிற்று, அவர்கள் வாழ்ந்த பகுதி கூறை நாடு என வழங்கலாயிற்று

அது கூறை நாடு என்ற வழக்கில் இருந்து "கொர நாடு" என திரிந்தது, மாயவரம் பக்கம் கொரநாடு என அழைக்கபடுவது இதனாலே

அப்பகுதி துணிகள் தரமானதாகவும் அழகானதாகவும் சிறந்து விளங்கியதால் திருமணம் முதலான முகூர்த்த விஷயங்களுக்கு சேலை வாங்கும் இடமானது, "கூறை சேலை" "கூறை பட்டு" எல்லாம் இப்படி வந்த பெயர்களே

கால கடந்து இப்பொழுதும் அப்பெயர் நிலைத்து நிற்கின்றது

கூறை நாட்டுக்கு அடியார் வரும்பொழுது சில சிலைகளுடன் வந்தார் என்கின்றது தரப்பு, வந்தவர் பிள்ளையார் சிலை உள்ளிட்ட சில சிலைகளை கொண்டு வந்தார் அவை இன்றும் கூறைநாடு புனுகீஸ்வரர் கோவிலில் உண்டு

அந்த புனுகீஸ்வரர் கோவில் திருவானைக்கா ஆலயம் போலவே ஆச்சரியமான வரலாற்றினை கொண்டது

ஆம், முற்பிறவி பலனால் கானக‌ லிங்கம் ஒன்றுக்கு புணுகு பூனை பூஜை செய்து முக்தி அடைந்ததால் அந்த லிங்கத்துக்கு புனுகீஸ்வரர் என பெயர் வந்தது.

முற்பிறவி பலனால் மிருகங்கள் இறைவனைப் பூஜித்து பேறு பெற்ற தலங்கள் பல உண்டு.

குற்றாலம், திருவானைக்கா, மதுரை ஆகிய தலங்களில் யானையும், நல்லூரில் சிங்கமும், சாத்தமங்கையில் குதிரையும், கருவூர், பட்டீஸ்வரம, பேரூர் ஆகிய தலங்களில் பசுவும், சிவபுரத்தில் பன்றியும், தென் குரங்காடுதுறை, வடகுரங்காடுதுறை ஆகிய ஊர்களில் குரங்குகளும், சோலூரில் மீனும், திருத்தேவன் குடியில் நண்டும் பூஜித்து பேறுபெற்றன.

அவை ஏன் பூஜித்தன அவற்றின் பூர்வ ஜென்ம வாசனை எது என்பதையெல்லாம் இறைவன் ஒருவனே அறிவான், மானிட பதர்கள் பலவுமே ஆலயம் பக்கம் வராத நிலையில் பூச்சியும் விலங்குகளும் இறைவனை பணிவதெல்லாம் முன் ஜென்ம தொடர்ச்சியே

அப்படி புனுகுப் பூனை ஒன்று சிவபெருமானை மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள இந்த‌ கூறைநாடு எனும் தலத்தில் பூஜித்துப் பேறுபெற்றது. கானகத்தில் இருந்த லிங்கத்து மேல் புனுகு பூனை ஒன்று தீரா பக்தி கொண்டு லிங்கத்திருமேனி முழுவதும் புனுகினை அப்பியது.

வில்வத் தளிர்களை வாயினால் கவ்வி இறைவனின் முடியில் சாத்தியது. இறைவனை வலம்வந்து வணங்கியது. இப்படியே சிவபெருமானை பல நாட்கள் அந்தப் புனுகுப்பூனை வணங்க மனம் மகிழ்ந்த இறைவன் அதற்கு தேவ வடிவைக் கொடுத்து கயிலாயத்திற்கு அழைத்துக்கொண்டார்.

அதனாலேயே இங்குள்ள ஈசன் புனுகீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

அந்த புனுகீஸ்வரர் கோவிலுக்கு வரும் அடியார்களுக்கு தன் திருதொண்டை கூறைநாட்டிலும் தொடர்ந்து வந்தார் நேசநாயனார்

மயிலாடுதுறை பக்கம் அந்த கூறைநாடெங்கும் அவர் தன் திருபணியினை செய்து வந்தார், அங்கும் எல்லா அடியாருக்கும் அமுதும் உடையும் கொடுத்து சிவதொண்டனாகவே நெசவு தொழிலை நடத்திவந்தார், புனுகு வாசம் ஒரு காலத்தில் அந்த லிங்கத்தில் அடியாரின் பக்தி வாசமும் கலந்தது

அங்கு வரும் அடியாருக்கெல்லாம் நேச நாயனார் தன் உழைப்பின் பலனான உடையும் உணவும் கொடுத்து ஆதரிக்க ஆதரிக்க அந்த சிவனடியார்கள் சிவனிடம் நேச நாயனார் பெயரால் நன்றி சொல்லி கிளம்பும் பொழுது சிவ லங்கம் அன்பால் மணம் வீசிற்று

காலெமெல்லாம் அப்பக்கம் உழைத்தபின் ஆரூரில் சில நாட்கள் தங்கி இருந்து சிவனை தரிசித்து கொண்டே தன் முதிர்ந்த வயதிலும் திருதொண்டை செய்தபடி முக்தி அடைந்தார் நேச நாயனார்

அவர் வாழ்வில் சிவன் வந்து பெரிதும் சோதிக்கவில்லை, அவர் தொண்டை இடைமறித்து அதில் அவர் மிக சிரமபட்டு தன்னை நிரூபித்து உலகுக்கு சொல்லும் வழக்கமான சிவ விளையாட்டெல்லாம் இல்லை

மாறாக நதி எப்படியாயினும் கடலுக்கு வரும் என்பது போல் அவர் வாழ்வினை அதன் போக்கிலே விட்டுவிட்டா சிவன், அந்த நதியும் திசைமாறாமல் மிக சரியாக தொண்டாற்றி இறைபதம் அடைந்தது.

ஆம் சோதனை வந்து நாயன்மார் என நிரூபிப்பது ஒருவகை, சோதனையே வராமல் வாழ்வின் கடைசிநொடி வரை ஒருவன் நிரூபிக்கின்றானா என இறைவன் ஓடவிட்டு சோதிப்பது இன்னொரு வகை

அடியாருக்கு வாய்த்தது இரண்டாம் வகை, அதில் ஊரும் உலகமுமே அவர் நாயனார் என சாட்சியாய் நின்றது, அப்படி ஒரு வாழ்வு அவர் வாழ்ந்திருந்தார்

மக்களே அவர் நாயனார் என சான்று சொன்னபின் இறைவன் வரவேண்டிய அவசியம் அங்கு ஏற்படவில்லை

காம்பீலி எனும் துங்கபத்ரா கரையோரம் தொடங்கிய அவரின் சிவ தொண்டு காவேரி கரையில் திருவாரூரில் முக்தியாய் முடிந்த பக்தி வரலாறு இதுதான்

திருநீலகண்டர் ஓடு கொடுத்தது போல, அமர்நீதி நாயனார் உடை கொடுத்தது போல இந்த நேசநாயனாரின் வாழ்வும் அவர்கள் சாயலே

தொழிலை மிக சரியாக செய்து, தன் தொழில் ஒன்றையே இறைவனுக்குரிய தொண்டாகவும் மாற்றி அதனாலே நாயன்மார் என அதி உன்னத நிலையினை அடைந்த அடியாரின் வரலாறு சொல்வதென்ன?

கர்மத்தில் இறைவனை நிறுத்தினால் அவனை எளிதாக அடையலாம், கீதை சொல்லும் கர்மயோகம் என்பது இதுவே.

அவர் தன் கர்மம் எனும் கடமை ஒன்றால் சிவதொண்டை செய்தார், ஆம் அவருக்கு மந்திரம் தெரியாது, யாகம் தெரியாது, அனுதினமும் கோவிலுக்கு சென்று அபிஷேகம் செய்வதும் தெரியாது

இருந்த இடத்தைவிட்டு ஒரு அடி நகரமுடியாத அவரின் தொழிலின் தர்மம் அப்படி

அந்த தொழில் தர்மமத்தினை கெட்டியாக பிடித்து கொண்டு அதில் சிவதொண்டு தன் சுயதர்மம் என்பதை கலந்து அதைவிட்டு துளியும் விலகாது திருத்தொண்டு புரிந்து வந்தார்

ஆம் கர்மம் எனும் கடமையில் இறைசிந்தனையினை நிறுத்தி அதற்காவே வாழ்ந்தால் அதுதான் மாபெரு பக்தி, கடவுளை அடையும் மிகபெரிய வழி என்பதை நிரூபித்தார் நேசநாயனார்

உங்களின் கர்மம் எதுவாகவும் இருக்கட்டும், அதில் சிவனை முழுக்க நிறைந்து கர்மத்தை செய்யுங்கள் உங்களுக்கும் ஆச்சரியங்கள் நிகழும்

அடியார் வாழ்வில் நோக்க வேண்டிய இன்னொரு விஷயம், அவர் பெரும் தனவான் அல்ல, பெரும் துணி வியாபாரம் செய்தவரும் அல்ல, ஆயிரகணக்கான நெசவாளர்களை வைத்து நெசவு செய்த பெரும் முதலாளியும் அல்ல‌

ஆனால் அவர் தன்னால் முடிந்ததை செய்தார், எது தன்னால் முடியுமோ அதை சிவனுக்காக ஒதுக்கினார். அவரால் அவர் சூழலால் செய்ய முடிந்தது நெசவு ஒன்றே. அந்த நெசவில் சிவனுக்கு எவ்வளவு செய்ய முடியுமோ அதை செய்தார்

ஆம், நீங்கள் எந்த தொழிலை செய்கின்றீர்களோ அதை சிவனுக்காய் நீட்டித்து செய்யுங்கள். நீங்கள் கட்டட பொறியாளரோ, பொறியாளரோ , வியாபாரியோ, கலைஞர்களோ, பணக்காரரோ, ஏழையோ, கூலியோ ,விவசாயியோ எதுவாகவும் இருங்கள் ஆனால் உங்களுக்கு தெரிந்த தொழிலை கர்மமாக செய்யும் பொழுது இறைசிந்தனையுடன் முழு மனதோடு செய்யுங்கள் எல்லாம் நலமாகும்

அடியார் வாழ்வு சொல்லும் மிகபெரிய தத்துவம் வஸ்திர தானமும் மிகபெரிய புண்ணியத்தை கொடுக்கும் என்பது

அடிப்படை தேவைகளில் உணவுக்கு அடுத்து மகா முக்கியமானது உடை, மானிடரின் மிக முக்கிய தேவை அது

தானம் கொடுப்பது மகா முக்கியம் என வலியுறுத்தும் இந்துமதம் 32 வகையான தானங்களில் வஸ்திர தானத்தை இரண்டாம் நிலையில் அதாவது அன்னதானத்துக்கு அடுத்து வைத்திருந்தது

இறைவனுக்கு உணவு படைப்பது போலவே உடுத்தியும் அழகு பார்த்த தர்மம் இது, உணவோடு உடைக்கு கொடுத்த முக்கியத்துவம் அது

வஸ்திர தானம் என்பது ஒருவனின் கடந்தபிறவி பாவம் எனும் கர்ம பலனை போக்கும் என்பது ஐதீகம், நேசநாயனார் வாழ்வில் அது நடந்தது

அந்த புண்ணியத்தை பெருக்கியதாலே அவரின் காம்பீலி நகருக்கு ஆபத்து வந்தபொழுது அவரின் புண்ணியம் சோழ நாட்டு மாயவரத்தில் அவரை பத்திரமாக கொண்டு சேர்த்து ஆரூரில் முக்தி அடையும் அளவு வழிகாட்டிற்று

ஆம் வஸ்திர தானம் செய்ய செய்ய ஒருவனின் பாவங்கள் தீரும், புண்ணியம் பெருகும் இதை ஒவ்வொருவரும் செய்தல் நன்று

வஸ்திர தானம் என்பது ஒரே வரியில் ஆடை கொடுப்பது அல்ல, அதிலும் சில வகை தானங்கள் உண்டு

கோவிலுக்கு பட்டு துணிகள்தான் தானமாக கொடுத்தல் வேண்டும், சன்னியாசிகளுக்கு காவி உடைகளும், ஏழைகளுக்கு எல்லா துணிகளும் அனுமதிக்கபட்டவை

கண்டிப்பாக தானம் கொடுக்கும் பொழுது புதிய சுத்தமான பழுதில்லா உடையினைத்தான் தானமாக கொடுத்தல் வேண்டும், பழையது பயன்படுத்தியது என கொடுப்பது தரித்திரத்தை கொண்டு வரும்

உண்மையில் தரித்திரம் கொண்டுவருமா என்றால் அதில்தான் இருகின்றது இந்துக்களின் ஆழ்ந்த அறிவு

உடை என்பது உடலை மறைக்க மட்டுமல்ல அது உடலின் சூட்சும சக்திகள் தொடர்புடைய உணர்வுகளை கொண்டது, ஒவ்வொருவர் உடலிலும் காணும் சரீரம் போல சூட்சும சரிரமும் அதன் சக்திகளும் உண்டு

அதை மறைக்கவும் அச்சக்தி வெளி செல்லாமல் இருக்கவும் துணிபோட்டு மறைத்தல் அவசியம், ஆலய கர்ப்பகிரகங்களில் திரையிடும் காரணம் இதுதான்

உடலுக்கு அப்படி திரையிடும் விஷயமே ஆடைகள், துறவிகள் பலருக்கு மேலாடை இல்லை ஏன் என்றால் அவர்களின் சக்திகளும் தன்மையும் விஷேஷமான சில பக்குவ நிலைகளும் மேம்பட்டவை

அவர்கள் உடலில் இருந்து சக்தி வெளிபட்டு கொண்டே இருக்க வேண்டும் அதை மக்கள் பெற்றுகொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக மேலாடைகளை பெரிதும் முழு ஞானம் பெற்ற‌ துறவியர் அணிவதில்லை, இந்நிலை என்பது வெகு வெகு அபூர்வமே

இம்மாதிரி ஞானியரின் உடல் சக்திமிக்கது என்பதால்தான் அதை எரிக்காமல் சமாதி ஆக்கி மக்களை வழிபட சொல்வார்கள், அதில் இன்றளவும் ஆச்சரியமான பலன்கள் உண்டு எனபது கண்கூடு

இந்த அபூர்வமான ஞான முழு பக்குவ ஞானியர் ஆடையும் அணிவதில்லை, இது சமணரில் கூட உண்டு

எனினும் கீழ்கோவணமும் கீழாடையும் சராசரி துறவிகள் யோகிகளுக்கு அவசியம் என்றது இந்துமதம், இன்றும் ஞானியர் கைபட்ட துணியின் சக்தி மகத்தானது என்பது உலக வழக்கு

கோவிலில் கர்ப்பகிரகத்திலும் சாமி சிலையிலும் சூழ்ந்திருக்கும் உடைகளை பக்தர்கள் விரும்பி வாங்கி வீட்டில் வைக்கும் விஷயமும் இதுதான், ஆம் சக்தி மிக்க இடத்தில் இருந்து நல்ல சக்திகளை அவை பெற்றுவரும்

துறவியர் நிலை இப்படி என்றால் இல்லற சாமான்யர்களின் உடல் சூட்சுமத்தை தன்னில் தாங்கியிருக்கும் ஆடைகள் இன்னொரு உடல் பயன்படுத்தும் பொழுது சில குழறுபடிகள் ஏற்படும், இதனாலே ஒருவர் பயன்படுத்திய ஆடையினை இன்னொருவருக்கு கொடுக்க கூடாது என்றார்கள், ஆம் சூட்சும உடலின் சாயலை ஆடை தாங்கி நிற்கின்றது

மந்திர தந்திர சூனிய வேலைகளில் ஒருவனின் ஆடை மிக முக்கிய பங்கு வகிப்பது இதனாலே.

ஆடை சுத்தமாக இருக்க வேண்டும், தூசுபடியாமல் மடித்து வைக்கபட வேண்டும், நறுமணம் கமழும் விதம் இருக்க வேண்டும் என வலியுறுத்தபட்டது இதனாலே

அதன் வண்ணங்களில் கூட பிரபஞ்ச சக்தியினை ஈர்க்கும் தன்மை உள்ளதால் துறவிக்கு, சாமான்யனுக்கு, அந்தணருக்கு என விதம் விதமாக நிறம் கொடுத்தார்கள் முன்னோர்கள்

ஆம் ஆடைகள் என்பது சாதாரணம் அல்ல, மானம் காக்கும் வழங்கும் ஆடைகளில் ஆயிரம் சூட்சுமமான விஷயங்கள் உண்டு

இன்னும் ஆடை உடுத்தலில் பல விஷயங்களை குறிப்பால் சொன்னார்கள், அதில் ஆலயம் செல்லும் பொழுது பட்டு அவசியம் என்றார்கள்

பெண்கள் பட்டுசேலை அணிந்து செல்வதும் ஆண்கள் பட்டுவேட்டி பட்டு துண்டு அணிந்து செல்வதும் கட்டாயமாக்கபட்டதே ஏன்? பட்டுக்கு சில நல்ல சக்திகளை கிரஹித்து உடலுக்கு அனுப்பி காக்கும் சக்தி உண்டு என்பதாலே ஆலயம் செல்லும்பொழுது பட்டு கட்டாயமாக்கபட்டது

பட்டுநூல் மின்சக்தியினை எளிதில் கடத்தாது என்பது விஞ்ஞானம் ஒப்புகொண்ட உண்மை, அப்படி சில சூட்சும சக்திகளை உள்ளடக்கி வைக்கும் தன்மை பட்டுக்கு உண்டு என்பதால் அது ஏற்பாடானது

இதுதான் சாமி சிலைக்கும் பட்டுகட்டி பார்க்கும் ஏற்பாடு என்றானது

இதனால் ஆலயங்களுக்கு வஸ்திர தானம் செய்யும் பொழுது பட்டு அவசியம், அப்படியே சாமான்ய பக்தர்களுக்கும் தானம் செய்யும் பொழுது பட்டு அவசியம்

சன்னியாசிகளுக்கு அவர்களுக்கு பிடித்தமான வெள்ளுடை அல்லது காவி உடை தானம் செய்வதே சிறப்பு

இது தவிர ஏழைகளுக்கும் உதவி தேவைபடும் நிலையில் உள்ளோருக்கும் எந்த ஆடையும் வழங்கலாம் ஆனால் எக்காரணம் கொண்டும் உபயோகித்த, அழுக்கான, கிழிந்த ஆடைகளை ஒருகாலமும் தானமாய் கொடுத்தலே கூடாது

தானம் செய்யும் பொழுது மிக முக்கியமான விஷயம் தானம் செய்கின்றோம் எனும் கர்வமும் பெருமையும் வந்துவிடவே கூடாது, அன்னதானமோ வஸ்திர தானமோ செய்யும் பொழுது நம் பாவங்களை கொடுத்து அதாவது கர்மத்தை கழித்து புண்ணியம் வாங்குகின்றோம் எனும் நிலையில் கொடுப்போரை வணங்கி அவர் தாள் பணிந்துதான் கொடுக்க வேண்டும், அதுதான் ஏற்புடையது.

ஆம் அடியாரின் வாழ்வு வஸ்திர தானத்தின் மகத்துவத்தை காட்டுகின்றது, ஆடை தானம் செய்தே புண்ணியம் சேர்த்து இறைவனை அடைய முடியும் என்பதை மிக தெளிவாக காட்டுகின்றது

ஆடைகளின் மகத்துவமும் சிறப்பும் அப்படியானவை

நேச நாயனார் வாழ்வில் சோதனை நேரடியாக இல்லை என்றாலும் மறைமுகமாக வந்தது, ஆம் அவர் துங்கபத்ரா நதியோரம் வேற்றுமொழி வேறு கலாச்சாரம் உணவு என வாழ்ந்தவர் அவருக்கு தமிழ் தெரிந்திருக்க நியாயமில்லை

அப்பகுதியில் அவர் சிவதொண்டு செய்தது பெரிய விஷயம் அல்ல, அது அவரின் சொந்தமண்

ஆனால் சிவன் எல்லோருக்கும் பொதுவானவர் எனும் வகையில் பிழைக்க வந்த கூறை நாட்டிலும், முன்பின் தெரியாத, மொழி தெரியாத, சொந்தபந்தம் ஏதுமில்லா அந்நிய நாட்டிலும் அடியார்களை கண்டு அவர்களுக்கு உதவி செய்தர் அல்லவா? அது சிலாகிப்புக்குரியது

ஆம் அடியார்களெல்லாம் சிவனின் தொண்டர்கள், அவர்களில் இனம்,மொழி,நாடு,குலம்,கோத்திரம் எனும் பிரிவினை ஏதுமில்லை சிவனின் தொண்டர்கள் எனும் ஒரு அடையாளம் போதும் என கூறைநாட்டிலும் தன் தொண்டை தொடர்ந்தார்

ஆம் தொண்டு செய்ய மனம் போதும். இடம் , காலம், சூழல் என எதுவும் அதை பாதிக்க கூடாது என தெளிவாக வாழ்ந்து காட்டினார் நேச நாயனார்.

எது நேசநாயனாரின் இந்த மாபெரும் பக்திக்கு காரணமாயிற்று?

சந்தேகமே இல்லாமல் சொல்லலாம் அவரின் உன்னதமான சிவ அன்பு, சிவன் மேல் அவர் கொண்ட பரிசுத்தமான அன்பு.

அதை எப்படி வெளிகாட்டுவது என எண்ணினார், அவருக்கு சிவனடியார்கள் உருவில் சிவனே தெரிந்தார்கள், சிவனடியார்க்கு செய்வதெல்லாம் சிவனுக்கே என எண்ணி மகிழ்ந்து அன்பின் உச்சியில் இந்த பெரும் தொண்டினை காலம் முழுக்க செய்தார்

அந்த சிவன் மேலான அன்பே , அந்த சிவனுக்கு உழைப்பதே தன் கர்மம் என அவர் முடிவு செய்து அதை தன் சுதர்மம் என ஏற்றுகொண்டு சுமந்ததிலே இந்த மாபெரும் பாக்கியம் அவருக்கு கிட்டிற்று

அவர் முன்னால் இரு தேர்வுகள் இருந்தன, ஒன்று தனக்கென நூற்று பொருள் சேர்த்து பெரும் தனவந்தனாகி வாழ்வாங்கு வாழும் வாய்ப்பு, அவரின் தொழில்திறமை அதற்கு வழி செய்யும்.

இன்னொன்று சிவனுக்காய் வாழ்ந்து தன் உழைப்பு நேரம் வாழ்வு எல்லாம் அவருக்கே அர்ப்பணிப்பது

இதில் இரண்டாம் வகையினை தேர்ந்து கொண்டார் சிவநேசர், அவரின் வாழ்வெல்லாம் அடியாரை கவனிப்பதிலும் ஆடை வழங்குவதிலுமே கழிந்தது.

ஆனால் அவர் காலத்தில் நூற்று சம்பாதித்தவர்கள், செல்வம் குவித்து மாளிகையில் வாழ்ந்தவர்கள் புது புது வகையாக நூற்று விற்றவர்களெல்லாம், செல்வத்தில் புரண்டவர்களெல்லாம் என்ன ஆனார்கள் என்பது வரலாற்றில் இல்லை, காலம் அவர்களை இழுத்து புதைத்துவிட்டது.

ஆனால் சிவனுக்காய் வாழ்ந்த அடியார் தலைமுறை தலைமுறைகளை தாண்டி இதோ நின்று கொண்டிருக்கின்றார், சிவாலயங்கள் உள்ள அளவும் அவர் நிற்பார்.

இதுதான் இறைவனுக்காய் வாழ்ந்தோருக்கும், தனக்காக வாழ்ந்தோருக்கும் உள்ள வித்தியாசம், தனக்கென வாழ்ந்தோர் தடம் தெரியாமல் சென்ற உலகில் சிவனுக்காய் வாழ்ந்த நேசநாயனார் தெய்வமென கொண்டாபடுகின்றார்.

தன்னலம் மறந்து தனக்காய் வாழ்ந்த பக்தனுக்கு சிவன் கொடுத்த வரம் இது.

இந்த உலகில் ஒவ்வொரு ஆன்மாவும் இறைவனை உணர்ந்து அடைய பிறப்பெடுக்கின்றன, அதை உணர்ந்து அவனை நோக்கி வாழ்ந்து அவனை அடையாதவரை, இந்த ஜீவாத்மா தன்னை உணர்ந்து பரமாத்வாவினை அடையாதவரை மறுபடி மறுபடி பிறக்கின்றன‌

அது ஏழு பிறப்பு அல்ல மாறாக எழுந்து கொண்டே இருக்கும் பிறப்பு, இதைத்தான் "எழு பிறப்பு" என தெளிவாக சொல்லி வைத்தார்  பெரும்ஞானி வள்ளுவ நாயனார்.

நேச நாயனார் அந்த உண்மையினை அவரின் நெசவாளர் பிறப்பில் கண்டு கொண்டார், சிவனை தேடினார் சிந்தையெல்லாம் சிவத்தை நிறைத்தார், அது மூச்சாக பேச்சாக சிவதொண்டு செயலாக வெளிபட்டது.

மனமெல்லாம் நிறைந்த சிவபக்தி அவரின் பெரும் தானமும் தர்மமுமாய் வளர்ந்தது, அது வளர வளர தன் முன் ஜென்ம கர்மாவினை எல்லாம் தீர்த்து புண்ணியம் தேடி நாயன்மார் என்றாகி கயிலாயமும் ஏகினார்

இப்பிறவியிலே உங்கள் கர்ம வாழ்வு மூலம் அதை அடைய நீங்கள் முயலாவிட்டால் பல பிறவிகள் எடுத்து எப்பொழுது இறைசிந்தனையில் மூழ்கி நிறைகின்றீர்களோ அப்பொழுதுதான் பிறப்பில்லா நிலையினை அடியார் போல் அடைவீர்கள்

அதை இன்றே தொடங்குங்கள், தானமும்  தர்மமும் உங்கள் கர்மாவின் பலனை புனிதமாக்கும்

நேச நாயனாரின் வாழ்வு கர்மத்தில் கடவுளை அடைய செய்ய அவரின் பக்தி வழிகாட்டியது போல் உங்கள் பக்தியும் உங்களுக்கு வழிகாட்டட்டும், எல்லா நலன்களும் உங்களை அடையட்டும்

நேச நாயனாரின் குருபூஜை பங்குனி மாதம் ரோகினி நட்சத்திரம் அன்று கொண்டாடபடும்

அன்று காம்பீலியில் இருக்கும் விருபாஷீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும், கன்னட மாநிலம் பெல்லாரி அருகே அமைந்திருக்கும் அந்த ஊரே அடியார் பிறந்த ஊர் என்பதால் பெரும் உற்சாகமாக கொண்டாடப்படும்

நெசவுத் தொழில் செய்து அதன் மூலம் இறைவனை அடைந்த அறுவையர் குலம் எனும் சாலியர் குலத்தில் பிறந்ததால் சாலிய இன மக்களின் தனிபெரும் நாயனார் என்றாகின்றார் நேசநாயனார், அவரின் குருபூஜை அவர்களுக்கு தனி கொண்டாட்டமாகும்

அவர் பெயரில் ஏகபட்ட அடையாளங்களை அம்மக்கள் ஏற்படுத்தி தலைமுறை தலைமுறையாக அவர் புகழை காத்து பரப்பி வருகின்றனர்.

சாலியர் எனும் சாலிய மகரிஷி வழிவந்த அவரின் சொந்த குலம் கடந்து எல்லா நெசவாளருக்கும் ஒரு தெய்வ வழிகாட்டியாக விளங்கும் அவர் செங்குந்தர், சவுராஷ்ட்ரர் போன்ற நெசவு  குலங்களாலும் கொண்டாடபடுகின்றார்

அடியாரின் குருபூஜை கூறைநாடு அதாவது இன்றைய மாயவரத்தின் புனுகீஸ்வரர் ஆலயத்திலும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும்

அங்கு அவருக்கு தனி சன்னதி உண்டு, அங்கு பங்குனி ரோகினி நட்சத்திர நாள் மகத்துவமானது, தனி சிறப்பாக கொண்டாடப்படும்

வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இந்த ஆலயத்துக்கு சென்று வாருங்கள், பட்டு வஸ்திரம் உள்ளிட்ட வஸ்திரங்கள அந்த ஆலயத்துக்கும் அங்கிருக்கும் அடியார்களுக்கும் தானமாக கொடுத்து வழிபடுங்கள்

அடியார் சன்னதி முன் இருந்து ஒரு துண்டு நூலோ துணியோ எடுத்து வந்து உங்கள் வீட்டில் வைத்தாலும் எக்காலமும் உங்கள் சந்ததி வஸ்திர தானம் கொடுக்கும் உயர் நிலையில் இருக்குமே தவிர கையேந்தி நிற்காது இது சத்தியம்.

அடியாரை மனதால் தொழுது அவர் வாழ்வில் இருந்து கர்மத்தினால் கடவுளை அடைவது எப்படி என்பதை படியுங்கள்.

முடிந்தமட்டும் நல் வஸ்திரதானத்தை ஆண்டுக்கு ஒருமுறையாவது செய்து வாருங்கள்.

அடியாரை போல் உங்கள் கர்மத்தாலும் இறைதொண்டு செய்து வர முயலுங்கள், நீங்கள் தொடங்கி செய்ய செய்ய அந்த சிவன் ஓடிவந்து உங்களை அரவணைத்து தன்னோடு சேர்த்து கொள்வார்.

தூய்மையான மனதுடன் வாக்கு காயம் மூச்சு என எல்லாவற்றிலும் இறைவனை நிறுத்தி ஒரு முழம் துணியினை தானமாக வழங்கினாலும் மிகபெரும் பலனை பெறாமல் இருக்கமாட்டீர்கள் , பன்மடங்காக திருப்பி சிவன் தருவார் இது சத்தியம். 







வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கு மடியேன்

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

நாட்டமிகு தண்டிக்கும் அடியேன் - 29.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/29032022.html

தென்னவனாய் உலகாண்ட செங்கணாற்கு அடியேன் - 02.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/02022022.html

கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன் - 26.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/26022022.html

இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன் - 20.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/20022022.html

 கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் அடியார்க்கும் அடியேன் - 06.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/06022022_5.html

ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன் - 03.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/03022022.html

 திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன் - 26.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/26012022_25.html

சண்டேசுவர நாயனார் குரு பூஜை - 22.01.22 - https://tut-temples.blogspot.com/2022/01/220122.html

எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன் - 16.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/16012022.html

கலை மலிந்தசீர் நம்பி கண்ணப்பர்க் கடியேன் - 15.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/15012022.html

 தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன் - 09.01.2022  - https://tut-temples.blogspot.com/2022/01/09012022.html

மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன் - 03.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/03012022.html

முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_68.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

இவரை எம்முன் கொண்டு நிறுத்துக - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_29.html

ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_57.html

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_20.html

விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_69.html

 வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_98.html

 செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post.html

No comments:

Post a Comment