அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இன்று பங்குனி மாத பூச நட்சத்திரம். இன்று அதிகாலை 3 மணி முதல் நாளை காலை 5 மணி வரை பூச நட்சத்திரம் உள்ளது. பூச நட்சத்திரம் என்றாலே வள்ளலார் பெருமானார் தான் நினைவிற்கு வருகின்றார். ஆனால் பங்குனி மாத பூச நட்சத்திர நாளில் முனையடுவார் நாயனார் குருபூஜை வருகின்றது. இதற்கு முந்தைய அறுபத்து மூவர் குரு பூஜை பதிவுகளில் சாக்கிய நாயனார். வாயிலார் நாயனார், கண்ணப்ப நாயனார் , அரிவாட்டாய நாயனார், சண்டேஸ்வர நாயனார், திருநீலகண்ட நாயனார், அப்பூதியடிகள், கலிக்கம்ப நாயனார், எறிபத்த நாயனார்,காரி நாயனார், கோச்செங்கட் சோழ நாயனார், தண்டியடிகள், காரைக்கால் அம்மை, நேச நாயனார்,கணநாதநாயனார் பற்றி அறிந்து கொண்டோம். இப்படியெல்லாம் நடக்குமா? என்றால் நடக்கும் என்று பெரிய புராணம் வழியில் அறிகின்றோம்.
இறைவன் மீது கல்லெறிந்து முக்தி அடைந்தவர் சாக்கிய நாயனார். மனத்துள் சிவத்தை இருத்தி முக்தி கண்டவர் வாயிலார் நாயனார். கறியை படைத்து , தம் கண்ணைக் கொடுத்து முக்தி கண்டவர் கண்ணப்பர், இறைவனுக்கு அமுது செய்து கொடுத்து தம் கழுத்தை அறுக்க முற்பட்டு முக்தி அடைந்தவர் அரிவாட்டாய நாயனார், சிவபூஜைக்கு இடையூறு செய்த தம் தந்தையில் கால்களை மழுவால் அரிந்து , சிவ பூஜை செய்து சண்டேஸ்வரர் பதவி பெற்று சிவனோடு கலந்தவர் சண்டேஸ்வர நாயனார், இறைவனின் பெயரைச் சொல்லி ஏற்ற சபதத்திற்காகத் தன் வாழ்வின் மகிழ்ச்சியைத் தியாகம் செய்த திருநீலகண்ட நாயனார், திருநாவுக்கரசரின் பெயரில் பற்பல தொண்டுகள் புரிந்து ,தன் மகன் பாம்பால்கடியுண்ட போதிலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படடக்கூடாதுஎன்ற அச்சத்தால், இறந்த மகனை மறைத்துவைத்து பின், இறந்த மகன், சிவன்அருளால் உயிர் பெற்று, சிவானந்த அனுபவத்தில் முக்தி பெற்றவர் அப்பூதியடிகள். அதுபோல் இன்று நாம் முனையடுவார் நாயனார் பற்றி அறிய உள்ளோம்.
முனையடுவார் நாயனார் போரிட்ட வருவாயால் சிவனடியார்களுக்கும் சிவாலயங்களுக்கும் தொண்டுகள் செய்த வேளாளர். இவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்.
முனையடுவார் நாயனார் பண்டைய சோழ நாட்டில் திருநீடூரில் வசித்த வேளாளர். திருநீடூர் தற்போது மயிலாடுதுறைக்கு அருகே உள்ளது.
பண்டைய காலத்தில் வீரத்தில் சிறந்தவர்கள் தம்மோடு மற்ற பல வீரர்களையும் சேர்த்துக் கொண்டு சிறுபடையை உருவாக்கி வைப்பர்.
மன்னர்களுக்கிடையே போர்நிகழும் சமயத்தில், அம்மன்னர்களுள் எவரேனும் இவர்களின் உதவியை வேண்டினால், அம்மன்னனுடன் சேர்ந்து போர் செய்து உதவி நாடிய மன்னனுக்கு வெற்றி கிடைக்கும்படி செய்வர்.
போரில் வென்ற மன்னனும் தனக்கு உதவிய படையுடை பெரும்வீரனுக்கு பல பரிசுகளையும் பொன்னையும் பொருளையும் வழங்கி சிறப்பிப்பர்.
கடையேழு வள்ளல்களுள் ஒருவராக வைக்கப்பட்ட மலையமான் திருமுடி காரி இத்தகைய படையைக் கொண்டிருந்த பெரும்வீரன்.
மலையமான் திருமுடி காரி எந்த அரசனுக்கு துணையாக நின்று போர் புரிகிறானோ, அம்மன்னன் உறுதியாக போரில் வெற்றி பெறுவான் என்ற எண்ணம் அக்கால மக்களிடத்தில் நிலவியது.
சங்க நூல்களில் பாண்டியனுக்கு உதவிய பெரும்படை வீரன் பாண்டியன் மறவன் என்றும், சோழனுக்கு உதவிய பெரும்படை வீரன் சோழ மறவன் என்றும் குறிப்பிடப்படுகின்றனர்.
வீரத்தில் சிறந்த முனையடுவார் நாயனாரும் தம்முடன் பல வீரர்களைச் சேர்த்துக் கொண்டு பெரும்படை வீரராகத் திகழ்ந்தார்.
தம் உதவியை நாடிவரும் மன்னனின் சார்பாகப் போர் புரிந்து அம்மன்னனுக்கு பெரும் வெற்றியை ஈட்டி தந்தார்.
மன்னர்களும் பெரும்படை வீரரான முனையடுவாருக்கு பொன்னையும் பொருளையும் பரிசில்களையும் வழங்கினர்.
பல உயிர்களைக் கொல்லும் கொடிய தொழிலான போர்த்தொழிலைச் செய்தாலும், முனையடுவார் சிவனாரிடத்தும் சிவனடியவர்களிடத்தும் பேரன்பினைக் கொண்டிருந்தார்.
ஆதலால் போர் தொழிலால் கிடைத்த பொருட்கள் முழுவதையும் சிவனடியார்களுக்கு திருத்தொண்டுகள் புரிவதற்கும், சிவாலயங்களுக்கு தொண்டுகள் புரிவதற்கும் பயன்படுத்தினார்.
சிவனடியார்களை வரவேற்று அறுசுவை உண்டியளித்து, அவர்கள் வேண்டுபவற்றை முகம் காணாது வழங்கி திருதொண்டு புரிந்தார்.
போர்முனையில் எதிரிகளை அடுவதைத் தொழிலாக கொண்டிருந்ததால், இவரின் இயற்பெயர் மறைந்து முனையடுவார் என்று அழைக்கப்பட்டார். இதில் முனை என்பது போர் முனையைக் குறிக்கும்.
போரிட்டு வந்த ஊதியத்தால் சிவனடியார்களுக்குத் தொண்டுகள் செய்த முனையடுவார் நாயனார், 63 நாயன்மார்களில் ஒருவராக வைக்கப்படும் சிறப்பினைப் பெற்றார்.
முனையடுவார் நாயனார் குருபூஜை பங்குனி மாதம் பூசம் நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.
முனையடுவார் நாயனாரை சுந்தரர் திருத்தொண்டத் தொகையில் ‘அறைகொண்டவேல் நம்பி முனையடுவார்க் கடியேன்‘ என்று போற்றுகிறார்.
4089 |
மாறு கடிந்து மண்காத்த வளவர் பொன்னித் திரு நாட்டு நாறு விரைப்பூஞ் சோலைகளின் நனைவாய் திறந்து பொழி செழுந்தேன் ஆறு பெருகி வெள்ளம் இடும் அள்ளல் வயலின் மள்ளர் உழும் சேறு நறுவாசம் கமழும் செல்வ நீடூர் திருநீடூர் | 9.5.1 |
4090 | விளங்கும் வண்மை மிக்குள்ள வேளாண் தலைமைக்குடி முதல்வர் களம் கொள் மிடற்றுக் கண் நுதலார் கழலில் செறிந்த காதல் மிகும் உளம் கொள் திருத்தொண்டு உரிமையினில் உள்ளார் நள்ளார் முனை எறிந்த வளம் கொண்டு இறைவர் அடியார்க்கு மாறாது அளிக்கும் வாய்மையார் | 9.5.2 |
4091 | மாற்றார்க்கு அமரில் அழிந்துள்ளோர் வந்து தம்பால் மா நிதியம் ஆற்றும் பரிசு பேசினால் அதன் நடுவு நிலை வைத்து கூற்றும் ஒதுங்கும் ஆள்வினையால் கூலி ஏற்றுச் சென்று எறிந்து போற்றும் வென்றி கொண்டு இசைந்த பொன்னும் கொண்டு மன்னுவார் | 9.5.3 |
4092 | இன்ன வகையால் பெற்ற நிதி எல்லாம் ஈசன் அடியார்கள் சொன்ன சொன்ன படி நிரம்பக் கொடுத்துத் தூய போனகமும் கன்னல் நறு நெய் கறி தயிர் பால் கனியுள்ளுறுத்த கலந்து அளித்து மன்னும் அன்பின் நெறி பிறழா வழித் தொண்டு ஆற்றி வைகினார் | 9.5.4 |
4093 | மற்றிந் நிலை பல்நெடு நாள் வையம் நிகழச் செய்து வழி உற்ற அன்பின் செந்நெறியால் உமையாள் கணவன் திருஅருளால் பெற்ற சிவலோகத்து அமர்ந்து பிரியா உரிமை மருவினார் முற்ற உழந்த முனை அடுவார் என்னும் நாமம் முன்னுடையார் | 9.5.5 |
4094 | யாவர் எனினும் இகல் எறிந்தே ஈசன் அடியார் தமக்கு இன்பம் மேவ அளிக்கும் முனை அடுவார் விரைப் பூம் கமலக் கழல் வணங்கி தேவர் பெருமான் சைவநெறி விளங்கச் செம்கோல் முறை புரியும் காவல் பூண்ட கழற் சிங்கர் தொண்டின் நிலைமை கட்டுரைப்பாம் | 9.5.6 |
4095 | சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி செறிவுண்டு என்று திருத்தொண்டில் சிந்தை செல்லும் பயனுக்கும் குறியுண்டு ஒன்றாகிலும் குறை ஒன்று இல்லோம் நிறை கருணையினால் வெறியுண் சோலைத் திருமுருகன் பூண்டி வேடர் வழிபறிக்க பறியுண்டவர் எம்பழவினை வேர் பறிப்பார் என்னும் பற்றாலே | 9.5.7 |
முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_68.html
நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html
ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_57.html
No comments:
Post a Comment