அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானின் அன்பாலும், அருளாலும், சித்தர் பெருமக்களின் ஆசியோடும் இன்றைய தமிழ் புத்தாண்டில் ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றோம். இன்றைய குருநாளில் அனைத்து குருமார்களின் பாதம் பணிகின்றோம். இன்றைய குருநாள் சேவையாக
1. சின்னாளப்பட்டியில் அன்னதானம்
2. சதுரகிரி மகாராஜபுரம் - வள்ளலார் பசியாற்றுவித்தல் 50 அன்பர்களுக்கு அன்னதானம்
3. திருவொற்றியூர் வள்ளலார் தெய்வீக அறக்கட்டளை அன்னதானம்
4. திருஅண்ணாமலை ஸ்ரீ தயவு ஆஸ்ரமம் அன்னதானம்
என குருவருளால் செய்ய பணிக்கப்பட்டோம். இவை அனைத்தும் குருவின் அருளாலே தான் நடைபெற்று வருகின்றது. இறை வணங்கி அறம் செய்தல் என்றும் நலமாக அமையும். இன்றைய நன்னாளில் 2020 மே மாதம் நம் குருநாதர் அருளிய வாக்குக்களை இங்கே குருவருளால் பகிர விரும்புகின்றோம். இதில் தேடல் உள்ள தேனீக்கள் குழுவின் பெயருக்கு நம் குருநாதர் அருளிய அருளை மீண்டும் மீண்டும் நாம் படித்து உள்வாங்கி கொள்ள விரும்புகின்றோம்.
திருவண்ணாமலை கிரிவலம் முறையாக சுற்றி வர ஆசிகள், அஷ்ட லிங்க தரிசனம், இடுக்கு பிள்ளையார் பற்றி கூறுங்கள் :
தேகத்தை நன்றாக பராமரிக்க வேண்டும் என்று எத்தனை வழிமுறைகளைக் கூறினாலும் அதனை காலகாலம் மனிதன் ஏற்பதில்லை. புறம் தள்ளி விடுகிறான். எனவேதான் இறை வழிபாட்டோடு தேக ஆரோக்கியத்தையும் சேர்க்க வேண்டியிருக்கிறது .அந்த வகையிலே பிரகார வலம், கிரிவலம் இவையெல்லாம் அவசியம். பதட்டமின்றி, நிதானமாக அடிமேல் அடியெடுத்து வேறு லௌகீக விஷயங்களை, உலகியல் விஷயங்களை பேசாமல் மௌனமாக மனதிற்குள் இறை நாமத்தை மட்டும் உருவேற்றிக் கொண்டு வலம் வருவதே சிறப்பு. அடுத்ததாக எந்த கிரிவலமாக இருந்தாலும் ஆங்காங்கே உள்ள சிறு ஆலயமோ, உப சன்னிதிகளோ தென்பட்டால் அங்கும் சென்று அமைதியாக பிரார்த்தனை செய்ய நன்மை உண்டாம். இஃதொப்ப நிலையிலே, முறை என்றால் மனம் வேறு சிந்தனைக்குள் ஆட்படாமல் மனம் முழுக்க இறை நாமத்தை மட்டும் மனதிற்குள் சொல்லிக் கொண்டே பிரகார வலமோ, ஆலய வலமோ, கிரிவலமோ ஒரு மனிதன் செய்வது மிகவும் சிறப்பு. எனவே இதை மட்டும் கடைபிடித்தால் போதும்.
திருவிடைக்கழி முருகப் பெருமான் தலம் பற்றி :
எத்தனை தலங்கள் இருந்தாலும் எல்லா தலங்களுமே சிறப்புதான். எந்தெந்த மனிதர்களுக்கு எந்தெந்த தலங்கள் சென்றால், நட்சத்திர ரீதியாக, ஜாதக ரீதியாக, கர்ம வினை ரீதியாக, சில நன்மைகள் உண்டு என்ற கணக்கு இருந்தாலும் அதற்காக அதனையே பிடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை. எல்லா ஸ்தலங்களும் சிறப்புதான். எப்பொழுது சிறப்பு ? அந்த மனிதன் அந்த ஸ்தலத்தில் அந்த ஆலயத்தில் நின்று கொண்டு, வேறு எந்த எண்ணங்களும் இல்லாமல் இறை சிந்தனையோடு அமைதியான முறையில் பிரார்த்தனையை தொடர்ந்தால் அவனுடைய பாவங்கள் நீங்கும். இருந்தாலும் இஃதொப்ப இன்னவன் வினவுகின்ற திருவிடைக்கழியில் மனிதர்கள் கருதுவது போன்ற தோஷங்களுக்கு மட்டுமல்லாது செவ்வாய் தோஷம் குறைவதற்கும், குருதி தொடர்பான பிணிகள் நீங்குவதற்கும் அங்கு பிரார்த்தனை செய்வதோடு சத்ரு சம்ஹார திரிசதி பூஜைகளை செய்ய ஏற்ற ஸ்தலங்களில் அஃதும் ஒன்று.
ஸ்தல யாத்திரை, மலை யாத்திரை செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய சூட்சும நுணுக்க வழிபாடுகள் பற்றி :
அமைதி, அமைதி, அமைதி. மனதிற்குள் *இறை நாமம், இறை நாமம், இறை நாமம். அவ்வளவே.
ஓதி மலை உழவாரப்பணி, வள்ளி மலை வழிபாடு, கோடகநல்லூர் யாத்திரை, சதுரகிரி வழிபாடு பற்றி ஆசிகள் :
அனைத்திற்கும் நல்லாசிகள், மென்மேலும் தொண்டு தொடர நல்லாசிகள்.
பௌர்ணமி, அமாவாசை, சஷ்டி நாட்களில் அன்ன சேவை செய்கிறோம். இதில் குறையிருந்தால் எங்களை வழி நடத்தி ஆசீர்வதிக்க வேண்டுகிறோம் :
தேனியின் நாமகரணத்தை சூட்டியிருக்கிறார்கள். தேனீக்களைப் பற்றி தெரியுமா ? தேனீக்கள் கடுமையாக போராடி நுணுக்கமாக தேனையெல்லாம் சேர்த்து வைக்கும். அப்போது அந்த தேனை மனிதன் ஒருவகையில் களவாடி விடுகிறான். எனவே இது குறித்து ஒரு மரபு சொல் கூட மனிதர்களிடையே வழங்கிக் கொண்டிருக்கிறது. அதனை நினைவூட்டுகிறோம். ஒரு மனிதன் தேனீக்களிடம் சென்று “ இத்தனை கடினப்பட்டு நீங்கள் எல்லோரும் தேனை சேகரிக்கிறீர்கள். ஒரு தினம் வந்து மனிதன் அல்லது மனிதர்கள் களவாடி விடுகிறார்களே, எடுத்து விடுகிறார்களே, உங்களுக்கு வருத்தமாக இல்லையா ? “ என்று கேட்டால் “ ஒரு வகையில் வருத்தம்தான். இருந்தாலும் நாங்கள் வருத்தப்படவில்லை “. “ ஏன் வருத்தப்படவில்லை ? “ என மீண்டும் அந்த மனிதன் வினவுகிறான்.
அதற்கு தேனீக்கள் கூறுகின்றன “ எங்கள் உழைப்பாகிய தேனைதான் மனிதனால் திருட முடியுமே தவிர நாங்கள் தேனை எடுக்கின்ற அந்தக் கலையை எங்களிடமிருந்து மனிதர்களால் ஒருபொழுதும் திருட முடியாது “ என்று சொல்கிறது.இதுதான் மனிதர்களுக்கும் பாடம். மனிதன் சேர்த்து வைத்த செல்வத்தை ஒருவன் திருடலாம். ஆனால் அவன் செல்வம் தேடுகின்ற கலையை திருட முடியுமா? முடியாது.எனவே, விளைவை ஒருவன் எடுத்து கையாளலாம். அந்த விளைவை கொண்டு வந்து சேர்க்கும் அந்த ஒரு கலையை, யுக்தியை யாராலும் திருட முடியாது என்பதை இவர்களும் புரிந்துகொள்ளட்டும்.
திருக்கோஷ்டியூர் தலத்தின் மகிமையை பற்றி :
நம்பியாண்டார் நம்பியை நினைவூட்டுகிறது .அஃதொப்ப ஸ்தலம். எனவே சுக்கிர தோஷம் நீக்கும் ஸ்தலம். திருமண தோஷம் நீக்கும் ஸ்தலம். பலவிதமான புண்ணியங்களும், பாவங்களும் கலந்து வாழ்கின்ற மனிதர்களுக்கு, இஃதொப்ப கடை பிறவி வேண்டும் என ஆசைப்படுகின்ற மனிதர்களுக்கும் ஏற்ற ஸ்தலம் அப்பா.
தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html
தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html
No comments:
Post a Comment