"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, April 14, 2020

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (3)

அனைவருக்கும் அன்பு வணக்கம்.

அனைவரும் தமிழ் புத்தாண்டை இனிதே வரவேற்றுள்ளோம். நாமும் இந்த சார்வரி ஆண்டில் 4 ஆம் ஆண்டில் குருவருளால் அடியெடுத்து வைக்கின்றோம். இதனை சிறப்பிக்கும் பொருட்டு  தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழுவின் அன்னதான சேவை, உழவாரப் பணி சேவை என பார்த்தோம். இன்றைய பதிவிலும் நம் குழுவின் அடுத்த நிலை நோக்கி நகர்ந்த ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய வழிபாடு பற்றி தொடர உள்ளோம். அன்னதானம், உழவாரப் பணி என தொடர்ந்த நாம், ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய வழிபாடு மூலம் குருவருளைப் பற்றிடவும், பெற்றிடவும் முடிகின்றது. ஆரம்பத்தில் நாமும் இந்த வழிபாடு ஸ்ரீ அகத்தியர் வழிபாடு என்று மட்டும் நினைத்தோம். ஆனால் பின்னர் சித்தர் போற்றித் தொகுப்பு பாடி பூசைகள் நடைபெற்ற போது தான் இது ஆயில்ய ஆராதனை மட்டுமன்று; சித்தர்களின் பூசை என்று உணர்ந்தோம்.

இப்போது நம் தள பதிவுகளை திரும்பி பார்க்கும் போது நாம் ஏற்கனவே சித்தர்கள் அறிவோம் என்ற ஒரு பதிவை அளித்துள்ளது நினைவிற்கு வருகின்றது. அந்தப் பதிவை பார்த்துவிட்டு ஒரு அன்பர் சித்தர் காப்புப் பாடல் வேண்டும் என்று சொல்லி இருந்தார். நாமும் அவருக்கு அதனை பகிருந்தோம். இனி..நாம் எப்போது ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய பூசை ஆரம்பித்தோம், எப்படி முதல் பூசை நடந்தது என்பது போன்ற அனுபவத்தை இங்கே காண்போம்.



நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவனை
      நிங்காதார்  குலம் தழைக்க நிதியாவானை
செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்
     சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை
     வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர்  என்று யுகயுகத்தும் தோன்றும்
     அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!

2016 ஆம் ஆண்டில் நாம் அன்னதானம், உழவாரப்பணி என்று ஆரம்பித்த நாம் 2017 ஆம் ஆண்டில் தேடல் உள்ள தேனீக்களாய் - (TUT) குழுவிற்கென்று வலைத்தளம் ஏப்ரல் 14 ம் தேதி ஆரம்பித்தோம். இதனை அப்படியே நம் ஆண்டு விழா என்று கணக்கில் வைத்து வருகின்றோம். 2017 ஆம் ஆண்டில் தான் ஆயில்ய பூசை நமக்கு குருவருளால் கிடைத்தது. 2016 முதல் நமக்கு ஜீவ நாடி அறிமுகம் கிடைத்தது. ஜீவ நாடி உத்தரவுப்படி சில வழிபாட்டு முறைகளை நாம் தொடங்கினோம். அதுவரையில் கூடுவாஞ்சேரியில்  உள்ள ஸ்ரீ மாமரத்து விநாயகர் கோயில் பற்றி யாம் அறியவில்லை. ஆனால் கூடுவாஞ்சேரி வந்து சுமார் 2 ஆண்டுகள் அப்போது ஆகி விட்டது. பின்னர் ஒரு நாள் நமக்கு ஸ்ரீ மாமரத்து விநாயகர் கோயில் தரிசனம் கிடைத்து. அன்று தான் நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமான் தரிசனமும் கண்டோம். அப்போது தான் ...அடடா..குருநாதரை நம் வீட்டு அருகிலே இருப்பது அறியாது இத்தனை நாட்களை வீணாக்கி விட்டோமோ என்று தோன்றியது. இது தான் கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலையும் கதை என்றும் தோன்றியது.

உடனே நாம் குருநாதரிடம் விண்ணப்பம் வைத்து விட்டு வந்தோம். அடுத்து நமக்கு கிடைத்த ஜீவநாடி உத்தரவில் ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை செய்ய அருள வேண்டும் என்று வினவினோம். நம் குருநாதர் சரி என்று நாடியில் வாக்குரைத்தார். இது பற்றி நம் குழு அன்பர்களிடம் பேசி, முதல் வழிபாடாக  ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் உள்ள ஸ்ரீ அகத்தியர் பெருமானுக்கு  2017 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் 8 ம் நாள் (21.08.2017) திங்கட்கிழமை நடைபெற்றது.



 இது நாம் எதிர்பாராத ஒன்று. ஆனால் நம் TUT குழுமத்தின் அடுத்த கட்ட பயணத்தில் இது ஒரு மைல் கல் என்றால் அது மிகையில்லை.கூடுவாஞ்சேரி வந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. அகத்தியரின் தரிசனத்தில், கல்யாண தீர்த்தம், பஞ்செட்டி என்று பயணம் செய்துள்ளோம். கூடுவாஞ்சேரியில் உள்ள மாமரத்து விநாயகர் கோவிலில் அகத்தியர் தரிசனம் பெறலாம் என்று கேள்விப்பட்டோம். ஆனால் காலம் கனிய வேண்டுமே. இரண்டு, மூன்று முறை கோவிலுக்கு சென்று, வணங்கியபோது,சற்று ஆழ்ந்த அமைதியில், அகத்தியருக்கு ஆயில்யம் நட்சத்திரம் அன்று ஆராதனை செய்ய மனம் விரும்பியது.உடனே குருக்களிடம் சொன்னோம்.இதோ ஆயத்தப் பணிகள் நடந்து 2017 ஆம் ஆண்டில் 21.08.2017 முதல் ஆயில்யம் பூஜை நடைபெற்றது. இனி மாதந்தோறும், ஆயில்ய நட்சத்திர ஆராதனை நடைபெறும். சன்மார்க்க அன்பர்கள் தவறாது கலந்து கொண்டு,குருவருள் பெற அன்போடு அழைக்கின்றோம்.

 குருக்கள் ஏற்கனவே நம்மிடம், பூஜையில் சித்தர்கள்  போற்றி சொல்லி துதிக்க

 என்று சொன்னார்கள். நாம் அவரிடம் மேற்கொண்டு கேட்டதற்கு அவரே கொண்டு வருவதாகவும், சொன்னார்கள். ஆனால் அன்று அதை மறந்து விட்டார்.நானும் குருக்கள் சித்தர் போற்றி துதிக்க ஏற்பாடு செய்திருப்பார் என்று வெறுங்கையை வீசி சென்று விட்டோம். அகத்தியர் பூஜையை அவர் ஆரம்பிக்கும்  முன்பு நம்மை சித்தர் போற்றி துதி படிக்க சொன்னார்கள்.நமக்கு உடனே பதற்றம் உருவாகி விட்டது. நாம் சற்று மறுத்து விட்டோம். பின்பு உடனே அலைபேசியை எடுத்து , அகத்தியர் வனம் மலேஷியா திரு.சண்முகம்  ஆவடையப்பா ஐயாவின்  நினைவில் உடனே சித்தர் போற்றி தொகுப்பை இணையத்தில் எடுத்து,குருக்களிடம் அனுமதி கேட்டு , துதிக்க ஆரம்பித்தோம். நம் உறவுகளுக்காக இணைப்பை பதிவின் இறுதியில் இணைத்துள்ளோம். அனைவரும் குரு நாளில் கண்டிப்பாக சித்தர் போற்றித் தொகுப்பை மறக்காது வேண்டவும்.


முதலில் நாமும்,குருக்களும் மட்டுமே அகத்தியர் முன்பு இருந்தோம். குருக்களின் இசைவு கேட்டு, சித்தர் துதி ஆரம்பமானது. காப்பான கருவூரார் பாடலில் ஆர்மபித்து அப்படியே,நம் அப்பனை நினைத்து, பாடிக் கொண்டே சென்றோம். வேகமாக பாடி முடித்து விட்டோம்.சுமார் 10  நிமிட இடைவெளி முடித்து, அகத்தியர் முன் சுமார் 5, 6 அன்பர்கள் நின்றிருந்தனர்.எல்லாம் அவர் அருள் தானே !


அகத்தியர் அலங்காரம் முடிந்ததும்,ஆர்த்தி காண்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.







இதற்குத் தானே ஆசைப்படுகின்றோம் எம் ஐயனே ! அம்மையும் அப்பனுமாய் காண்கின்றோம் வெள்ளொளி வேந்தே! அருணாச்சல சிவ ! அருணாச்சல சிவ ! பொய்யை  நீக்கி மெய்யை உணர்த்தும் முழுமுதற் கடவுளே..ஒப்பிலா மணியே ...தமிழ் தந்த கடவுளே. என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தோம். கண் குளிர அகம் மகிழ அகத்தியர் தரிசனம் கிடைக்கப் பெற்றோம்.இது தாம்  பெரும்பேறு. செல்வத்துள் செல்வம். அறுசுவை கேள்விப்பட்டிருப்போம். அகத்தியர்  தரிசனத்தில் ஏழாம் சுவை உணர்ந்தோம். ஏன் ! எதற்கு ? என்று தெரியவில்லை. நடப்பதெல்லாம் நின் அருளாலே என்று மனதுள் நன்றி சொன்னோம். குருக்கள் தீபாராதனை காட்ட தாயாராகி விட்டார்.




தீபாராதனை உங்களுக்காக ! எப்பேர்ப்பட்ட புண்ணியம் செய்துள்ளோம். இந்த கவின்மிகு,அருள்மிகு,அன்புமிகு,கருணைமிகு,ஆற்றல்மிகு தரிசனம் பெற ! கண்ணில் சிறிது நீர்த்துளி எட்டிப்பார்த்தது. அனைவரும் ஆரத்தி எடுத்துக் கொண்டார்கள். அப்புறம் குருக்கள்,அகத்தியரிடம் வேண்டி, நம்மைப் பார்த்து, அகத்தியர், நம்மை மாதந்தோறும் ஆயில்ய ஆராதனை செய்ய விரும்புவதாக சொன்னார்கள். மிக்க நன்றி என்று குருக்களிடம் கூறிவிட்டு, நமது TUT குழுவின் சார்பாக இங்கே, அகத்திய ஆராதனை ஆயில்யம் நட்சத்திரம் அன்று  அளித்தோம்.அடுத்து அவர் சொன்ன செய்தி  நம்மை அற்புதத்தில் ஆழ்த்தியது.

பொதுவாக அமாவாசை தினம் சித்தர்கள்,முனிவர்கள் வழிபாடு  செய்ய உகந்தது. நாம் அன்று செய்த பூஜை ஆயில்ய நட்சத்திரத்தோடு, அமாவாசை என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி என்றதும், உள்ளம் நெகிழ்ந்தது.பின்பு அகத்தியர் தரிசனம் கண்டீர்களா? என்றார்? நாம் சுற்றும்,முற்றும் பார்த்தோம். இல்லை என்றோம். அப்போது அவர் தொடர்ந்தார். சித்தர்களின் ஆசி, நீங்கள் நினைப்பது போல்,அதிசயமாக நிகழாது. நம்முள் ஒருவராக வந்து ஆசி கொடுப்பார்கள் என்றார்.அங்கே இருந்த சாது ஒருவரைக் காண்பித்தார்.இவர் வருவார் என்று நாங்கள் நினைக்கவில்லை.இவர் தான் இங்கே அகத்தியர் சொரூபமாக வந்து உள்ளார் என்றார். நாமும் உடனே சுதாரித்துக் கொண்டோம்.உணர்ந்தோம். எப்படியோ முதல் பூஜையில் எங்களுக்கு சாது ரூபத்தில் வந்து ஆசி வழங்கிய அகத்தியரை நாம் வணங்கினோம்.



                           முருகப் பெருமானுடன் இணைந்த அகத்தியர் தரிசனம்

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு. உடனே வெற்றிலை, பாக்கு உடன் பழங்கள் கொடுத்து சாதுவிடம் வேண்டினோம்.அவர் காட்சிப்படம் எடுக்க அனுமதிக்க வில்லை. நைவேத்தியமாக சுண்டல் வழங்கப்பட்டது. நமக்கு ஒரு பிரசாதத்தோடு சேர்த்து,சுண்டலும் தந்தார்கள். நாம் அலுவலகம் வந்து அவற்றை எடுத்து சுவைத்துப் பார்த்தோம். என்ன சுவை ! இன்னும் நாக்கில் சுவை ஊறுகின்றது ? அந்த காரமும், சுவையும்! அடடா ! என்னன்னே தெரியல! என்ன மாயமோ? கோவில் பிரசாதம் ....கோவில் பிரசாதம் தான்.சாட்சாத் ..அகத்தியர் அருள் நிறைந்ததன்றோ !



2017 ஆம் ஆண்டில் தொடங்கிய கூடுவாஞ்சேரி ஆயில்ய பூஜை இரண்டு ஆண்டுகளைத் தாண்டி தற்போது வரை குருவருளால் நடைபெற்று வருகின்றது. முதல் ஆயில்ய பூஜையில் நாம் ஒருவராக கலந்து கொண்டு ஓரே ஒரு பிரசாதம் வழங்கி மகிழ்ந்தோம். அடுத்த சில மாதங்களில் ஆயில்ய பூஜை மார்கழி மாதத்தில் குரு பூஜை என்று கொண்டாடினோம். 108 தீபமேற்றி முதல் குருபூஜை கூடுவாஞ்சேரியில் கொண்டாடி மகிழ்ந்தோம்.  இந்த 108 தீப வழிபாடு நமக்கு அடுத்த வழிபாடு பற்றி உணர்த்த காரணமாக இருந்தது. அது என்ன? என்று தெரிந்த அன்பர்கள் கூறலாம். இங்கே தான் நமக்கு தீப வழிபாட்டின் முக்கியத்துவம் புரிந்தது. அடுத்தடுத்த ஆயில்ய பூசையில் அன்பர்கள் கலந்து கொண்டு அருள் பெற்று வருகின்றனர். அதே போல் ஒவ்வொரு ஆயில்ய பூசையும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பாக இருக்கும். இப்படி தான் வழிபாடு இருக்கும் என்று நாம் திட்டமிடமாட்டோம். ஆனால் குருவருளால் ஆயில்ய வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்த ஆயில்ய பூசை வழிபாட்டில் குருநாதரின் தரிசனம் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமாக நம்மை ஈர்க்கும் படி இருக்கும். இடையில் ஒரு முறை சந்தன காப்பு அலங்கார தரிசனம் கண்டோம். 2019 மார்கழி ஆயில்ய பூசையில் அதாவது குரு பூஜையில் ராஜ அலங்காரம் கண்டு மகிழ்ந்தோம்.
2018,2019,2020 என மூன்று ஆண்டுகளாக ஆயில்ய பூஜை நம் தளம் சார்பில் குருபூஜையாக கொண்டாடி வருகின்றோம். இது மட்டுமல்ல. ஸ்ரீ அகத்தியர் குரு பூஜைக்கு நமக்கு தெரிந்த மற்ற கோயில்களுக்கு நம் தளம் சார்பில் சிறு தொகையும் அளித்து வருகின்றோம். 



இந்த ஆண்டு ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி சிறப்பாக நடைபெற்றது. 108 தீப விளக்கேற்றி, சந்தன காப்பு அலங்காரத்தில் தீபாராதனை கண்டு, சித்தர்கள் போற்றி படித்து, ஸ்ரீ அகத்தியர் மூல மந்திரம் ஓதி, கைலாய தரிசனம் கண்டோம். இந்த ஆண்டு நம் தளம் சார்பில் வடை , பாயாசம் கொடுத்து சிறு விருந்தாக அனைவருக்கும் பிரசாதம் வழங்கினோம். மேலும் கோயில் குருக்கள், உதவியாளர், பணியாளர் என அனைவருக்கும் புத்தாடை கொடுத்து மரியாதை செய்வித்தோம். இதற்கு மேல் நமக்கு என்ன வேண்டும்? குருநாதரின் அருள்..அருள்..அருளே...வேண்டும்.

 இங்கே நாம் சொல்லி இருப்பவை சில துளிகள் மட்டுமே. ஒவ்வொரு ஆயில்ய வழிபாட்டின் போது  நம்முடன் வந்து உறுதுணையாக இருக்கும் அன்பர்களுக்கு இங்கே நாம் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். எப்படி ஆரம்பித்தோம் என்று புரியவில்லை. ஆனால் மூன்றாண்டு  நிறைவில் மன மகிழ்வுடன் வாழ்தலுக்கான புரிதல் கிடைத்துள்ளது.

எங்கள் சேவை விரிவடைய பொருளுதவி செய்யலாம். எங்களுடன் நேரிடையாக பங்கேற்றும் உதவலாம்.

"அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்"

நாங்கள் விதைப்பது அன்பு மட்டுமே.
வழி நடத்தும் பேராற்றலுக்கு நன்றி,
அக மகிழ்கின்றோம். அவன்அருளாலேஅவன் தாள் வணங்கி !!!. 

நன்றி 

மீண்டும் ஒரு முறை  வழக்கம் போல் உறுதுணையாகவும் உற்ற துணையாகவும் இருக்கும் அனைத்து நல்லுள்ளங்களை இங்கே வணங்கி, வாழ்த்தி மகிழ்கின்றோம்.

- மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html

சார்வரியே வருக! தென்காளகஸ்தி திருக்காளாத்தீஸ்வரர்-ஞானம்பிகை திருக்கோயில் செல்வோம் வாருங்கள்!! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_76.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html

TUT அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - https://tut-temples.blogspot.com/2020/03/tut.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html


ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html

No comments:

Post a Comment