"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, April 17, 2020

ஓம் நமோ பகவதே ஶ்ரீ ரமணாய!

 அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய பதிவில் நாம் குருவருள் பற்ற இருக்கின்றோம். ரமணாமிர்தம் என்றும் இனிமையானது. அட. இன்றைய பதிவில் நாம் 500 ஆம் பதிவாக ரமணர் பற்றி படிக்க இருக்கின்றோம் என்றால் இது குருவருள் தான் என்பது நமக்கு தெளிவாக புரிகின்றது அல்லவா? இதே போன்று தான் கடந்த சித்திரை முதல் நாள் அன்று தமிழ் புத்தாண்டு அன்று TUT முயற்சியாக தினம் ஒரு ரமணாமிர்தம் பகிர்ந்தோம்.

பகவான் ரமணர் பற்றிய சில செய்திகளை இங்கே காண்போம். சில சம்பவங்களை பகிர்கின்றோம். பார்க்க எளிமையாக இருக்கும். ஆனால் எளிமையின் மூலம் நாம் இங்கே மெய்யை உணர முடியும். பகவான் ரமணர் காட்டிய வழியும் எளிமையே..ஆம். "நான் யார்". என்பதே அந்த உபதேசம். ஆனால் இந்த எளிய உபதேசம் மூலம் நாம் மெய்ஞானம் அடைய முடியும்.

விரூபாக்ஷி குகையில் பகவான் ரமணர் வசித்து வந்த காலம்.

கண் பார்வையற்ற பாட்டி ஒருத்தி, தினந்தோறும் தட்டுத் தடுமாறி யார் உதவியுடனாவது மலை ஏறி வந்து, பகவான் ரமணரைத் தரிசிப்பாள். தன் நைந்த புடவையில் தின்பண்டங்கள் எதையாவது முடிந்துகொண்டு வந்து பகவானுக்குத் தருவாள்.

அன்றைய தினமும் அவ்வாறே பாட்டி, பகவானுக்கு மிகவும் பிடித்த அரிசிப் பொரியைக் கொண்டு வந்திருந்தாள்.

பகவானைத் தரிசித்துவிட்டு அதை அவர் கையில் கொடுத்தாள். பகவானும் அதை அன்புடன் பெற்றுக் கொண்டு, “பாட்டி, உனக்கோ முடியவில்லை. கண் பார்வையும் இல்லை. எதற்காக இவ்வளவு கஷ்டப்பட்டு மலையேறி வருகிறாய்?” என்றார்.

அதற்குப் பாட்டி, “பகவானே, உங்களைத் தரிசனம் செய்யத்தான் இப்படி தினந்தோறும் வருகிறேன்” என்றாள்.

“நீதான் என்னைப் பார்க்க முடியாதே? கீழேயிருந்தே என்னை நினைத்துக் கொள்ளக் கூடாதா, இப்படிக் கஷ்டப்பட வேண்டுமா என்ன?” என்றார் பகவான், இரக்கம் ததும்பிய குரலில்.

“ஆமாம் பகவான். என்னால் உங்களைப் பார்க்க முடியாதுதான். ஆனால், நீங்கள் என்னைப் பார்க்க முடியுமே. உங்கள் அருட்பார்வை என் மீது விழுமே. அந்த பாக்கியத்துக்காகத்தான் நான் தினந்தோறும் வருகிறேன். என்ன கஷ்டம் வந்தாலும் இனிமேலும் வருவேன்” என்றாள் பாட்டி.

பாட்டி அப்படிச் சொன்னதைக் கேட்டதும் பகவானின் கண்கள் கலங்கி விட்டன. எதுவும் பேசாமல் மௌனமாகி விட்டார்.

அன்பின் வழியது உயிர்நிலை...ஆம். இது போல் தான் நாம் தினமும் குருமார்களின் அருட்பார்வை பட வேண்டிக்கொண்டு இருக்கின்றோம்.

அடுத்து ரமணர் யார் என்ற கேள்விக்கான விடை சொல்லும் நிகழ்வை தருகின்றோம்.

பகவான் ரமணர் யார்?
------------------------------------------

அம்ருதநாத யதீந்திரர் என்பவர் பகவான் ரமணரின் அத்யந்த பக்தர். அவருக்கு பகவான் உண்மையிலேயே யார் என்று அறிய ஆவல் ஏற்பட்டது.
தன் ஆவலை ஒரு வெண்பாக எழுதி பகவானிடம் சமர்ப்பித்தார்.

“அருணாசல பரிசோபித பரமாத்புத குகையில்
கருணாநிதி ரமதேயநி பகவான் முனி ரமணன்
ஹரியோ சிவகுருவோ முனிவரனோ யதிபதியோ
அறிவான் தனியதுவோ மமகுருமா முனி மஹிமா”
- என்பது அந்தப் பாடல்.

“மிக அழகானதாக உள்ள இந்த அற்புதமான அண்ணாமலையின் குகையில் கருணாநிதியாக விளங்கும் முனிவரான பகவான் ரமணர் என்பவர் யார்? ஹரியா, சிவனா, முனிவர்களின் தலைவனா, யதீந்திரனா? என் குரு முனிவரின் மஹிமையைப் பற்றி நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்” என்பது இதன் பொருள்.

இதற்குப் பதிலாக பகவான்,

“அரியாதியி தரசீவர தகவாரிச குகையில்
அறிவாய்ரமி பரமாத்தும னருணாசல ரமணன்
பரிவாலுள முருகாநல பரனார்ந்திடு குகையார்ந்
தறிவாம்விழி திறவாநிச மறிவாயது வெளியாம்”

என்பதாக, “ஹரியிலிருந்து தொடங்கி எல்லா ஜீவராசிகளின் இதயத்திலும் ஞானமாய் விளையாடும் பரமாத்மாவே அருணாசல ரமணன். இதயக் குகையில் வீற்றிருக்கும் அவனை அறிய, விழிப்பு என்னும் ஞானக் கண்ணைத் திறந்து பார்த்தால் உண்மை தெளிவாகும்” என்ற ஸ்ரீ அருணாசல ஸ்துதிப் பஞ்சகத்தில் தான் கூறியிருக்கும் பாடலை எழுதிக் காண்பித்தார்.

எங்கும், எல்லா உயிரிடத்தும் நீக்கமற நிறைந்திருக்கும் பரமாத்மாவே பகவான் ரமணர் என்பதை யதீந்திரர் உணர்ந்தார். பணிந்தார்.

நாமும் உணர்வோம். பணிவோம். உயர்வோம். ஓம்.

ஏன் எப்படி என்று தெரியவில்லை? நம் தலத்தில் சென்ற வாரம்  அருணா! கருணா ! என உருக்கும் அருணாசல அக்ஷரமணமாலை பற்றி பதிவு செய்து இருந்தோம். இதோ. இன்றைய தமிழ்  புத்தாண்டு தினத்தில் நம் தளம் சார்பில் ஏதேனும் புது முயற்சியாக ஏதேனும் செய்ய வேண்டுமே என்ற உள்ளக்கிடக்கை இருந்தது. அதனை தினமும் அருணாசல அக்ஷரமணமாலை பற்றி சில வரிகளை படக்காட்சியாக தரலாம் என்று எண்ணி திட்டமிட்டோம்.இதோ. இன்று முதல் நாள் அருணாசல அக்ஷரமணமாலை பாடலின் வரிகள்.



அடுத்து. அன்பின் ருசி எப்படி இருக்கும் என்பது பற்றிய ஒரு நிகழ்வை தருகின்றோம்.



அலங்காரத்தம்மாள் ஒரு பக்தை. வாழ்க்கையில் பல்வேறு துன்பங்களை அனுபவித்தவள். துறவி ஒருவர் மூலமாக பகவான் ரமணரைப் பற்றிக் கேள்விப்பட்டு அண்ணாமலைக்கு வந்தாள். பகவான் ரமணர் அப்போது விருபாக்ஷி குகையில் தங்கி இருந்தார். பக்தர்கள் பிக்ஷையெடுத்து வரும் உணவைத் தான் அவர் உள்பட பிற அடியவர்கள் எல்லாரும் பகிர்ந்து உண்டு வந்தனர்.

இதைக் கண்ட அலங்காரத்தம்மாள் மனம் வருந்தினார். தனக்கிருந்த சொத்துக்களை எல்லாம் விற்றுவிட்டு அண்ணாமலைக்கு வந்தாள். மலைக்குக் கீழே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டவள், தினந்தோறும் பகவானுக்குச் சமைத்து உணவு பரிமாற ஆரம்பித்தாள். அவளும் அவள் மருமகளும் சேர்ந்து அப்பளம் இட்டு விற்று அதிலிருந்து வரும் பணத்தில் பகவானுக்கும் பிற அடியவர்களுக்கும் பிக்ஷை அளிக்கும் கைங்கரியத்தைச் செய்து வந்தனர்.

நாளடைவில் வயது முதிர்ந்ததால் அலங்காரத்தம்மாளுக்கு தள்ளாமை ஏற்பட்டது. தொடர்ந்து உணவு அனுப்புவதும் கஷ்டமானது. அந்தத் தள்ளாமையிலும் கூட அவள் பகவானுக்கென்று உணவு சமைத்து எடுத்து வருவாள். தன்னால் முடியாதபோது மருமகளிடமோ அல்லது வேறு யாராவது பகவானைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்களிடமோ கொடுத்தனுப்புவாள்.

அப்போது கீழே ஆச்ரமம் உருவாகி வந்த நேரம். அலங்காரத்தம்மாளின் தள்ளாமையைக் கண்டு வருந்திய சில பக்தர்கள், அவளிடம், “பாட்டி. நீங்கள் ஏன் இப்படிச் சிரமப்படுகிறீர்கள். பகவானை ஆச்ரமம் பார்த்துக் கொள்ளும், நீங்கள் உங்கள் உடம்பைப் பார்த்துக் கொண்டு ஓய்வில் இருங்கள்” என்றனர்.

உடனே அவள், “உடம்பு தள்ளாடினால் என்ன, காசே இல்லாவிட்டால்தான் என்ன, தடி ஊன்றி நடந்து பிச்சை எடுத்து வந்தாவது உணவு தயாரித்து பகவானுக்குக் கொடுப்பேன். என் கடைசிக் காலம் வரை பகவானுக்கு உணவு தருவதுதான் என் வேலை” என்றாள், உரத்த குரலில்.

அலங்காரத்தம்மாளுக்கு பகவானின் மீது இருக்கும் அன்பையும், பக்தியையும் கண்டு வியந்தனர் பக்தர்கள்.

ஒருநாள். ஆச்ரமத்தின் மதிய உணவு நேரம். பகவான் உட்பட எல்லாருக்கும் பரிமாறி ஆகி விட்டது. எல்லாரும் சாப்பிடக் காத்திருந்தனர். ஆனால், பகவான் இலையில் கை வைக்கவில்லை. காரணம் புரியாமல் திகைத்த அடியவர்கள், என்ன, ஏது என்று விசாரித்தபோதுதான் அலங்காரத்தம்மாள் கொண்டு வந்த உணவு பகவானுக்கு வைக்கப்படாதது தெரிய வந்தது. உடனே அதனை எடுத்துக் கொண்டு வந்து பகவானின் இலையில் வைத்த பிறகு தான் அவர் சாப்பிடத் துவங்கினார்.

அது ‘உணவின் ருசி அல்ல; அன்பின் ருசி’ என்பதை பக்தர்கள் உணர்ந்தனர். வியந்தனர்.

அனைத்தையும் துறந்த துறவி என்றாலும் அலங்காரத்தம்மாள் போன்ற பக்தர்களின் அன்பிற்குக் கட்டுப்பட்டவராக இருந்தார் பகவான் ரமணர்.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?


 அடுத்து ”ஒளியில் கலந்த ஒளி”பற்றி காண்போமா 

ரமணாச்ரமம். ஏப்ரல் 14, 1950, வெள்ளிக்கிழமை.

அன்று காலை முதலே பக்தர்கள் வரிசையாக பகவான் ரமணரது தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். சுற்றியுள்ள கிராமத்திலிருந்தெல்லாம் மக்கள் திரளாக வந்து பகவானை தரிசித்துச் சென்றனர்.

பிற்பகல் நேரம். தனக்கு உதவியாக இருந்த தொண்டர் சிவானந்தத்திடம் ரமணர் முகமலர்ச்சியுடன் “தாங்க்ஸ்” என்றார். எழுதப் படிக்கத் தெரியாத அந்த பக்தர் அதன் பொருள் புரியாது பகவானைப் பார்க்க அவர், “அதுதான் ஓய்! சந்தோஷத்தைத் தெரிவிப்பதற்கான இங்க்லிஷ் வார்த்தை. ரொம்ப நன்றி என்றர்த்தம்” என்றார். அந்த இறுதிக் கணத்திலும் பகவானுக்குத் தன் மீதிருந்த கருணையையும் அன்பையும் எண்ணி நெகிழ்ந்து கண்ணீர் விட்டார் சிவானந்தம்

மதிய நேரத்தில் ஆச்ரமத்து மயில்கள் ஒன்று கூடித் திடீரென அகவ ஆரம்பித்தன. எப்போதும் அவை அம்மாதிரி அகவுவதில்லை என்பதால், ரமணர், அவற்றிற்கு உணவு கொடுத்தாகி விட்டதா என்று ஆச்ரமத் தொண்டரிடம் விசாரித்தார். ஆம் என்பது தெரிந்ததும் பின் ஏன் அவை கத்துகின்றன என்று கேட்டார்.

பகவானைச் சில நாட்களாக வெளியே காண இயலாத மயில்கள் அவர் இருந்த அந்தக் குறுகிய அறையின் வாசல்புறத்தே வரிசையாக வந்து நின்றன. பகவானின் கருணைப் பார்வை அவற்றிற்கும் கிடைத்தது.

மாலையாயிற்று. படுக்கையில் சாய்ந்த நிலையிலிருந்த தம்மை நேராக உட்கார வைக்கும்படித் தொண்டர்களிடம் சொன்னார் பகவான். அவ்வாறு அமர்த்தப்பட்ட சிலமணித் துளிகளில் அவருக்கு மூச்சு விடக் கஷ்டமாயிற்று. உடனே மருத்துவர், அதற்கான கருவியை மூக்கில் வைக்க ஆயத்தமானபோது, தமது கையை அசைத்து அதனை மறுத்தார். பின் கண்களை மூடிக் கொண்டார். அப்படியே சில நிமிடங்கள் கடந்தன.

அது சிறு அறை என்பதால் மருத்துவரும், ஆச்ரமப் பணியாளர்களுமாக ஒரு சிலர் மட்டுமே அறையில் இருக்க முடிந்தது. பிறர் வெளியே குழுமி பகவானையே பார்த்த வண்ணம் இருந்தனர். அங்கு பூரண அமைதி நிலவியது. பக்தர் ஒருவர் மெள்ள பகவான் இயற்றிய அக்ஷரமண மாலையைப் பாட ஆரம்பித்தார். கூடவே பிற பக்தர்களும் இணைந்து பாடத் துவங்கினர்.

அருணாசல சிவ அருணாசல சிவ
அருணாசல சிவ அருணாசலா
அருணாசல சிவ அருணாசல சிவ
அருணாசல சிவ அருணாசலா

அருணாசலம் என அகமே நினைப்பவர்
அகத்தை வேரறுப்பாய் அருணாசலா
அருணாசல சிவ அருணாசல சிவ
அருணாசல சிவ அருணாசலா

- குரல் எங்கும் ஒலித்தது.

பாடலைக் கேட்டு மூடியிருந்த தம் கண்களை மெள்ளத் திறந்து பார்த்தார் ரமணர். அவர் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது. பின் மெள்ளக் கண்களை மூடிக் கொண்டார். சில நிமிடங்களில் ஆழமான மூச்சு ஒன்றன் பின் ஒன்றாய் வெளிப்பட்டது. அருகில் நின்றவர்கள் அடுத்த மூச்சை எதிர்பார்த்து நிற்க உள்ளே சென்ற மூச்சுக் காற்று இதயத்திலேயே நின்றது. மூலத்தில் சென்றொடுங்கி, ஆன்மாவில் நிலைத்தது.

பகவான் ரமணர் மஹா சமாதி அடைந்தார். அப்போது நேரம் இரவு மணி 8.47.

பகவான் மஹா சமாதி அடைந்த அதே நேரத்தில் வானில் பகவானது அறையின் மேல் புறத்தில் பிரகாசமிக்க பேரொளியொன்று தோன்றி அருணாசல மலையை நோக்கி வேகமாகச் சென்று மறைந்தது.

ரமணரின் தாயார் அழகம்மை ரமணரைப் பிரசவிக்கும்போது ஒரு பார்வையற்ற கிழவி உடனிருந்தாள். அவள், ரமணர் அருட் குழந்தையாக அவதரிக்கும்போது சில நிமிடங்கள் மட்டும் ஒரு “பேரொளி”யைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றாள். திருச்சுழியில் அன்று தோன்றிய அப்பேரொளி, திருவண்ணாமலையை நாடி வந்து, வாழ்ந்து, வளர்ந்து இறுதியில் அதனுடனேயே இரண்டறக் கலந்து ஒன்றானது. மனித குலம் உய்ய வழியானது.




அருணாசல சிவ அருணாசல சிவ
அருணாசல சிவ அருணாசலா
அருணாசல சிவ அருணாசல சிவ
அருணாசல சிவ அருணாசலா

அருணாசலம் என அகமே நினைப்பவர்
அகத்தை வேரறுப்பாய் அருணாசலா
அருணாசல சிவ அருணாசல சிவ
அருணாசல சிவ அருணாசலா


என்று நாமும் நாள்தோறும் பாடி, பகவான் ரமணர் காட்டிய வழியில் நம்மை உணர்த்த அவரிடமே வேண்டுகின்றோம்.

நாமும் உணர்வோம். பணிவோம். உயர்வோம். ஓம்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!
மீண்டும் சிந்திப்போம் 
மீள்பதிவாக:-

அருணாச்சலத்திலிருந்து வருகின்றேன் - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_14.html
அருணா! கருணா ! என உருக்கும் அருணாசல அக்ஷரமணமாலை - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_17.html
 குரு தரிசனம் : அருணாச்சலத்திலிருந்து வருகின்றேன் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_64.html
 பாலகுமாரனின் பார்வையில் பகவான் ஸ்ரீரமண மகரிஷி  - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_4.html
பங்குனி உத்திரம் - கந்த குரு கவசம் சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_41.html
மார்கழி சிறப்பு பதிவு : திருப்பாவையும், திருவெம்பாவையும் - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_17.html
தைத் திருநாள் வாழ்த்துக்கள் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_15.html

No comments:

Post a Comment