"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, April 25, 2020

அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

அனைவரும் இப்படி ஒரு அசாதாரண சூழலில் இருந்து வருகின்றோம். இதற்கு காரணம் என்ன? ஏன் இப்படி ஒரு நிலையில் நாம் இருக்கின்றோம் என்று பல்வேறு கேள்விக்கணைகளை நாம் தொடுத்தாலும் இதுவும் கடந்து போகும், எல்லாம் நன்மைக்கே என்ற மன நிலையை கைக்கொள்ள வேண்டியது மிக மிக அவசியம் ஆகும்.

இன்று அட்சய திருதியை. வழக்கத்திற்கு மாறாக இப்படி இருக்குமா என்பது கனவிலும் நாம் நினைக்காத ஒன்று. மக்கள் கூட்டம் தங்கம் வாங்க அலைமோதும். ஆனால் இன்று அத்தியாவசிய தேவையான அரிசி, பருப்பு,எண்ணெய் வாங்கிக் கொண்டு இருக்கின்றோம். உடனே ஆடம்பரம்..அது இது? என்று நினைக்க வேண்டாம். பொதுவாக நாம் இந்த நாளில் நம்மால் முடிந்த சேவைகள் செய்து வருகின்றோம். குறிப்பாக அன்னதானம், பசுக்களுக்கு நம்மால் இயன்ற சேவை என தொடர்வோம்.  ஆனால் தற்போதுள்ள சூழலில் இதெல்லாம் நடக்குமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அட்சய திருதியைக்கான சேவை நம் தளம் சார்பில் குருவருளால் சிறப்பாக நடைபெற்றது.




இந்த பதிவை படிக்கும் அனைவரது இல்லத்திலும் அனைத்து செல்வங்களும், அனைத்து பெறுதற்கரிய பேறுகளும் பெற்று வாழ்ந்திட வேண்டி சித்தர்கள், மகான்கள், ரிஷிகளிடம் நம் பிரார்த்தனையை சமர்ப்பிக்கின்றோம்.




இலக்குமி தோத்திரம்


 அகத்திய முனிவர் தம்முடைய மனைவியோடு கொல்லாபுரம் என்னும் ஊருக்குச் சென்றார். கொல்லாபுரத்தில் உள்ள திருமகள் திருக்கோவிலிற்கு சென்று இங்கு குடிகொணடிருக்கும் திருமகளை போற்றி பின்வரும் பாடலைப் பாடினார்.

 திருமகளும் மனமகிழ்ந்து அகத்திய மகரிசியிற்கு காட்சி கொடுத்து “அகத்திய மகரிசியே தங்களின் போற்றிப் பாடலிற்கு நான் மிகவும் மனமகிழ்ந்தேன். இப் பாடலை யாரொருவர் உள்ளத்தூய்மையோடு பாடி போற்றுகிறாரோ அவர் அரிய பெரிய இன்பங்களை நுகர்வார். இப் பாடல்கள் எழுதப் பெற்ற ஏடானது இல்லத்திலே இருக்குமானால் வறுமையைக் கொடுக்கின்ற தவ்வையானவள் அவ்வில்லத்தை அடைய மாட்டாள்.” என்று திருவாய் மலர்ந்தருளினாரகள். இப் பாடல்களை நாள்தோறும் படிப்பவர்கள் வறுமை நீங்கி செல்வத்தையடைந்து அச் செல்வத்தினாலான பயனையும் நுகர்வர் இது நடைமுறையில் கண்டறிந்த உண்மை. இந் நூல் வீட்டிலிருக்குமானால் செல்வ நலம் சிறந்தோங்கும்.


1
மூவுலகம் இடரியற்றும் அடலவுணர்
உயிரொழிய முனிவு கூர்ந்த
பூவைஉறழ் திருமேனி அருட்கடவுள்
அகன்மார்பில் பொலிந்து தோன்றித்
தேவர்உல கினும்விளங்கும் புகழ்க்கொல்லா
புரத்தினிது சேர்ந்து வைகும்
பாவைஇரு தாள்தொழுது பழமறைதேர்
குறுமுனிவன் பழிச்சு கின்றான்



மூன்று உலகங்களுக்கும் துன்பத்தை விளைவிக்கின்ற வலிமை பொருந்திய அசுரர்களுடைய உயிரை ஒழிக்கின்றதும், பூவையொத்த மென்மையான, அழகிய உடலை கொண்ட அருட் கடவுளான திருமாலின் மார்பில் தோன்றிய தாயே, தேவர் உலகத்திலும் சிறப்பான புகழ்மிக்க கொல்லாபுரம் ஊரில் சேர்ந்து இனிதாக வீற்றிருக்கும் பாவையாகிய திருமகளின் இரண்டு திரு அடிகளையும் வணங்கி, பழைமையான சாத்திரங்களையெல்லாம் ஆராய்ந்து குரு முனிவரான அகத்திய முனிவர் பாடுகின்றார்.
2
கொழுதியிசை அளிமுரலும் தாமரைமென்
பொகுட்டி லுறை கொள்கைபோல
மழையுறழுந் திருமேனி மணிவண்ணன்
இதயமலர் வைகு மானே
முழுதுலகும் இனிதீன்ற அருட்கொம்பே
கரகமலம் முகிழ்த்தெந் நாளுங்
கழிபெருங்கா தலில்தொழுவோர் வினைதீர
அருள்கொழிக்குங் கமலக் கண்ணாய்.


தேனிற்காக வரும் வண்டினம் பண்களை பாடுவதற்கு இடமாக இருக்கும் தாமரை மலரின் கொட்டையில் உறைகின்ற தத்துவம் போன்ற மழை நீர் நிரம்பிய கருமுகிலினை ஒத்த நிறத்தினையுடைய திருவுடம்பினையுடைய மணிவண்ணனாகிய திருமாலின் உள்ளமாகிய தாமரை மலரில் வாழுகின்ற மான் போன்ற அருட்பார்வை கொண்ட திருமகளே. உலகம் முழுவதும் உனது அருளினால் தீன்றிய அருட்கொடியே. என்னாளும் உனை மறவாது தாமரை மலர் போல் இரு காரமும் குவித்து உன்னை மிகுந்த காதலோடு அதாவது மிகுந்த அன்போடு வணங்குபவர்களின் தீவினை தீர்த்து அருள் பொழியும் தாமரை மலர் போன்ற கண்களை உடையவளே!
3
கமலைதிரு மறுமார்பன் மனைக்கிழத்தி
செழுங்கமலக் கையாய் செய்ய
விமலைபசுங் கழைகுழைக்கும் வேனிலான்
தனையீன்ற விந்தை தூய
அமுதகும்ப மலர்க்கரத்தாய் பாற்கடலுள்
அவதரித்தோய் அன்பர் நெஞ்சத்
திமிரமகன் றிடவொளிருஞ் செழுஞ்சுடரே
எனவணக்கஞ் செய்வான் மன்னோ.


தாமரை மலர் போன்ற கண்ணுடைய திருமகளே. அழகிய மறுவமைந்த மார்பினை உடைய திருமாலின் இல்லத்தரசியே. செழுமை நிறைந்த தாமரை மலரினை ஒத்த கையினை உடையவளே, செந்நிறமான விமலையே, பசுமையான கரும்பினை வில்லாக வளைக்கும் வேனிற் காலத்திற்குரியவனான காமனைப் பெற்றவளே, தூய்மையான அமுதகலசத்தை ஏந்திய பூ போன்ற மென்மையான கையினை உடையவளே, பாற்கடலில் பிறந்தவளே, அன்பர்கள் மனதில் இருக்கும் இருளை அகற்றி ஒளிரச் செய்யும் செழுமையான பேரொளியே என்று போற்றி வணக்கிறேன்.
4
மடற்கமல நறும்பொ குட்டில் அரசிருக்கும்
செந்துவர்வாய் மயிலே மற்றுன்
கடைக்கணருள் படைத்தன்றோ மணிவண்ணன்
உலகமெலாம் காவல் பூண்டான்
படைத்தனன்நான் முகக்கிழவன் பசுங்குழவி
மதிபுனைந்த பரமன் தானும்
துடைத்தனன்நின் பெருஞ் சீர்த்தி எம்மனோ
ரால் எடுத்துச் சொல்லற் மாற்றோ.


அழகிய இதழ்களையுடைய நல்ல மணமுள்ள தாமரை பூக் கொட்டையில் அரசாயிருக்கும் நற்பவளம் போன்ற சிவந்த அதரங்களை உடைய மயில் போன்றவளே, மற்றும் உன் கடைக்கண் பாரரவை அருள் பெற்றல்லவா நீல மணி நிறத்தினையுடைய திருமால் உலகையெல்லாம் காக்கும் தொழிலை மேற்கொண்டார். நான்கு முகக்கடவுள் படைத்தல் தொழிலை செய்தார். பசுமையான பிறைச்சந்திரனை அணிந்த சிவபெருமானும் அழித்தற் தொழிலைச் செய்தார். நின் பெருங் கீர்த்தி என்னை போன்றோரால் எப்படி எடுத்துச் சொல்ல முடியும்
5
மல்லல்நெடும் புவியனைத்தும் பொதுநீக்கித்
தனிபுரக்கு மன்னர் தாமும்
கல்வியினில் பேரறிவில் கட்டழகில்
நிகரில்லாக் காட்சி யோரும்
வெல்படையில் பகைதுரந்து வெஞ்சமரில்
வாகைபுனை வீரர் தாமும்
அல்லிமலர்ப் பொகுட்டுறையும் அணியிழைநின்
அருள்நோக்கம் அடைந்துள்ளாரே.




வளம் பொருந்திய பரந்த பூமி முழுவதையும் பொதுவானவற்றிலிருந்து விலகி தனியே ஆட்சி செய்யும் அரசர்கள் தானும், கல்வியிலும், பெரிய அறிவிலும், மிகுந்த அழகிலும் சிறந்து விளங்குவோரும், வெல்லுகிற படையினால் பகைவர்களை துரத்தி கொடிய போரில் வெற்றி வாகை சூடும் வீரர்கள் தானும், தாமரை மலரின் அகவிதழாம் அல்லி வட்டத்தினுள் உள்ள கொட்டையின் தங்கியிருக்கின்ற அழகிய அணிகலன்களை அணிந்த திருமகளாம் தங்களின் திருஅருளைப் பெற்றவர்களே ஆவர்.
6
செங்கமலப் பொலந்தாதில் திகழ்ந்தொளிரும்
எழின்மேனித் திருவே வேலை
அங்கண்உல கிருள்துரக்கும் அலர்கதிராய்
வெண்மதியாய் அமரர்க் கூட்டும்
பொங்கழலாய் உலகளிக்கும் பூங்கொடியே
நெடுங்கானில் பொருப்பில் மண்ணில்
எங்குளைநீ அவணன்றோ மல்லல்வளம்
சிறந்தோங்கி இருப்ப தம்மா.


செந்தாமரை மலரின் பொன்னிறமான மகரந்தத்தை போல் சிறந்து ஒளிரும் அழகிய எழில் மேனியினளே திருமகளே, கடலால் சூழப்பட்ட இந்த உலகத்தின் இருளை விரட்டும் சூரியனாய், வெண்மையான சந்திரனாய், தேவர்களை மகிழ்விக்கும் பொங்கும் நெருப்பாய் நின்று உலகை காக்கும் பூங்கொடி ஆனவளே! நீண்ட காட்டில், மலையில், நிலத்தில் நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கு செல்வ வளம் சிறப்பாக ஓங்கி இருக்கிறதம்மா.
7
என்றுதமிழ்க் குறுமுனிவன் பன்னியொடும்
இருநிலத்தில் இறைஞ்சலோடும்
நன்றுனது துதிமகிழ்ந்தோம் நான்மறையோய்
இத்துதியை நவின்றோர் யாரும்
பொன்றலரும் பெரும்போகம் நுகர்ந்திடுவர்
ஈங்கிதனைப் பொறித்த ஏடு
மன்றல்மனை அகத்திருப்பின் வறுமைதரு
தவ்வை அவண் மருவல் செய்யாள்.


என்று திருமகளை புகழ்ந்து பாடிய தமிழிற்கு இலக்கணம் செய்த குறு முனியாகிய அகத்திய முனிவர் தனது மனைவியோடு நிலத்தில் வீழ்ந்து வணங்கலானார். அங்கு தோன்றிய திருமகளும் நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த வல்லவனே நீ என்னை புகழ்ந்து பாடிய பாடலிற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இப்பாடல்களை முறைப்படி படிப்பவர்கள் பெரிய இன்பத்தை அனுபவிப்பார்கள். என்னை புகழ்ந்த இந்த பாடல்கள் எழுதிய ஏடு யார் வீட்டில் இருக்கிறதோ அவர்கள் வீட்டிற்கு வறுமையைத் தரும் எனது தமக்கையானவள் வரமாட்டாள் என வரமளித்தார்கள்.இப்பாடல்கள் அதிவீரராம பாண்டியர் மொழிபெயர்த்த காசி காண்டத்தில் இடம் பெற்றுள்ளது.

பூசிக்கும் முறை:-

பூசை அறையில் பஞ்சமுக தீபமேற்றி வைத்து நறுமணம் தரக்கூடிய சாம்பிராணி தூபம் அல்லது பத்தி பொருத்தி வைத்து, முதலில் விக்கின வினாயகரை காரிய சித்தி வேண்டி வணங்க வேண்டும். பின்னர் அகத்திய மகரிசியிற்கு குரு வணக்கம் செலுத்த வேண்டும். அதன் பின்னர் மகாலட்சுமி தாயிற்கு மந்திர புட்ப, தூப தீப ஆராதனை செய்து வணங்க வேண்டும். பிறகு இப்பாடல்களை 3. 5, 9 முறை என படித்து தூப தீப நைவேத்திய ஆராதனை செய்து முடிக்க வேண்டும்.
அகத்திய மகரிசி காட்டிய வழியில் மகாலட்சுமி தாயை வணங்கி நாமும் வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்வோமாக.

 அகத்தியர் அருளிய திருமகள் துதியை இந்த பதிவில் படிப்பவர்கள் அனைவரும் 16 வளங்களும் பெற்று பெருவாழ்வு வாழ அந்த பரம்பொருளிடம் விண்ணப்பம் வைக்கின்றோம்.

மீண்டும் சிந்திப்போம் 

மீள்பதிவாக:-

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன் ! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_25.html

அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (5) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-5.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (3) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-3.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html

சார்வரியே வருக! தென்காளகஸ்தி திருக்காளாத்தீஸ்வரர்-ஞானம்பிகை திருக்கோயில் செல்வோம் வாருங்கள்!! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_76.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html

TUT அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - https://tut-temples.blogspot.com/2020/03/tut.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html

No comments:

Post a Comment