"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, December 10, 2019

வேண்டும்..வேண்டும்.. வேண்டுவோம்

அனைவருக்கும் வணக்கம்.

இன்று  டிசம்பர் 11, மகாகவியின்  பிறந்த தினம். அவரைப் பற்றி கொஞ்சமாவது இன்று சிந்திக்க வேண்டுகின்றோம். ஏற்கனவே தினசரிப் பிரார்த்தனை - எண்ணிய முடிதல் வேண்டும் என்ற தலைப்பில் ஒரு பதிவை இட்டுள்ளோம். சென்ற ஆண்டு ஜூன் மாதம் அந்தப் பதிவு இணையத்தில் பதிவேற்றினோம்.ஓராண்டு கால இடைவெளியில் திரும்பிப் பார்க்கும் போது, TUT குழு தன் கடமையை,சேவையை பாரதியின் வழியில் செவ்வனே செய்து வருகின்றது. மீண்டும் ஒரு முறை

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே  எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்.
தெளிந்த நல்லறிவு வேண்டும்;
பண்ணிய பாவமெல்லாம்
பரிதிமுன் பனிபோல,
நண்ணிய நின்முன் இங்கு
நசிந்திடல்  வேண்டும் அன்னாய்.
- மகாகவி பாரதியார்.










 இந்தப் பாடல் ஒரு முக்கியமான பாடல். பாரதியாரின் தீர்க்கதரிசனத்தை உணர்த்தும் பாடல்.அடிமைப்பட்டு கிடந்த இந்த தேசத்தில் என்ன  எண்ணி இருப்பார் ? சுதந்திரம் வேண்டும்  என்று தானே? அவர் எண்ணி கிடைக்காமல் போய் விடுமா? இதோ கிடைத்து விட்டது. ஆம்! சுதந்திர காற்றை சுவாசிக்கின்றோம். இந்த ஒன்று போதாதா? "எண்ணிய முடிதல் வேண்டும் " என்ற பாடலின் உதாரணத்திற்கு,

இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளும் வைர வரிகள்.மேலோட்டமாக  பாடலின் நுட்பம் நமக்கு தெரியாது.வேண்டும்...வேண்டும் ..என்று கேட்பதாக தோன்றும்.ஆனால் கூர்ந்து பார்த்தால் ஒவ்வொரு வரியும் அடுத்த வரியுடன் தொடர்பு கொண்டவை.இந்த பாடல்  பூக்கள் அன்று.பூக்களால் தொடுக்கப் பட்ட பூச்சரம் இது.

நம்முடைய வாழ்க்கையில் நம்முடைய உயர் எது? என்று கேட்டால் என்ன சொல்வது? வள்ளுவர் தான் சொல்லிவிட்டாரே ! பின்பு மறு பேச்சு உண்டா?  குளத்தில் உள்ள தாமரைப் பூவின் உயரம் என்பது குளத்தின் நீரின் உயரம்.அது போல் நம்முடைய உயரம் நம் உள்ளத்தின் உயரம்.

உள்ளத்தில் இருந்து என்ன வெளிப்படுகிறது ? எண்ணங்கள் தான். எனவே நாம் எண்ணும் எண்ணங்கள் நடந்து முடிக்க வேண்டும் என்பது இங்கே முதல் வரிக்காக விளக்கம்.மனித வாழ்க்கையே எண்ணங்களால் கட்டமைக்கப்பட்ட கட்டடம் அன்றி வேறில்லை.

அப்படியே அடுத்த வரிக்கு செல்வோம். நல்லவே  எண்ணல் வேண்டும்; இரு வரிகளையும் பொருத்திப் பாருங்கள். நினைக்கின்ற அனைத்து  செயல்களும் நடக்க வேண்டும். பொதுவாக நினைப்பவை நடக்க வேண்டும் என்றால், நல்லதும் நினைக்கலாம்,தீமையும் நினைக்கலாம்.
அப்படி நல்லன நினைப்பது நமக்கும் நல்லது,பிறருக்கும் நல்லது.சில நேரங்களில் நல்லன நடக்காது போகலாம். ஆனால் நாம் தொடர்ந்து நல்லன எண்ணிக் கொண்டே இருத்தல் வேண்டும். எனவே தான் அடுத்த வரியாய் நல்லவே எண்ணல் வேண்டும் என்கின்றார்.

இப்போது "திண்ணிய நெஞ்சம் வேண்டும்" என்கின்றார். ஏன் நெஞ்சம் வேண்டும் என்று சொல்லி இருக்கலாம். வெறும் நெஞ்சம்/உள்ளம் எப்படிப்பட்டது தெரியுமா? அது நல்லன,அல்லன என இரண்டையும் தரும். நாம் ஏற்கனவே சொல்லியது போல், நல்லவே எண்ண வேண்டும் என்றால் உறுதியான நெஞ்சம் அல்லவா வேண்டும். நாம் சில நல்ல விசயங்களை நினைக்கின்றோம்.அது நடக்காது போகின்றது.உடனே என்ன செய்கின்றோம் ? தீயன மெல்ல மெல்ல உள்ளே வருகின்றது ? ஏன் வருகின்றது ? உறுதியற்ற உள்ளமாய் உள்ளதால் தானே? உள்ளம் உறுதியானால் நல்லன வரும். எண்ணும் எண்ணம் யாவும் ஈடேறும் என்பது தெளிவல்லவா !

உள்ளம் உறுதியானால் போதுமா? அடுத்து வருகிறார்  "தெளிந்த நல்லறிவு வேண்டும்;" என்று. நாம் நினைக்கின்ற எண்ணங்களின் பிறப்பிடம் நமது உள்ளம். அந்த உள்ளம் உறுதியாய் இருக்க வேண்டும்.ஆயினும் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்கள் நமக்கு நன்மையா ? தீமையா? என்பது நம் அறிவிற்கு தானே தெரியும். அந்த அறிவு நூற்களை கற்று வரலாம், தற்போது "Google Search" ல் வருகின்ற காலம். அனுபவத்தில் வரலாம். செய்யும் செயல்கள் வெற்றி பெறுவது நம்முடைய அறிவினால் தான்.இதை  உணர்ந்ததால் தான் வேதாத்திரி மகரிஷி அறிவிற்கு கோவிலாய் "அறிவுத் திருக்கோயில் " கட்டினார் என்பது தெளிவாய்ப் புரிகின்றது.கீழ்க்கண்ட கவியைப் படியுங்கள்.உண்மை புரியும்.

“அறிவே தான் தெய்வமென்றார் தாயுமானார்
அகத்ததுதான் மெய்ப்பொருள் என்றெடுத்துக்காட்டி
அறிவதனை அறிவித்தார் திருவள்ளுவர்
அவ்வறிவை அறிவதற்கு முறைகள் சொன்னார்
அறிஞர் திருமூலர் அவ்விறிவில் ஆழ்ந்து
ஆனந்தக் கவியாத்தார் இராமலிங்கர்
அறிவில் அறிவாய் நிலைத்து அறம்வகுத்தோர்
அதனை வாழ்ந்து காட்டினோர்நினைவு கூர்வாம்.”



அடுத்த நான்கு வரிகள் தான் இந்தப் பாடலின் கருப்பொருளை நமக்கு உணர்த்துகின்றது.முதல் நான்கு வரிகளை மட்டும் எடுத்து  பொருள் கொண்டால் நமக்கு மேம்போக்காகத் தெரியும்.அடுத்த நான்கு வரியில் தான் பாடலின் உண்மைப் பொருளை வைத்துள்ளார்.

  இத்தனையும் இருந்தால்தான் நாம் நினைத்தது கைகூடும். சில சமயம் அவைகள் கூடாமலும் போகலாம். எண்ணியவை நல்லனவாகவே இருக்கலாம். தெளிந்த அறிவால் நம் நெஞ்சம் உறுதியாக இருக்கலாம் ஆனால் ஏதோ ஒன்று நாம் நினைப்பதை நடக்கவிடாமல் தடுக்கிறது. அது நாம் பண்ணிய பாவம்.

மனிதனாகப் பிறந்தாலே பாவங்கள் செய்யாமல் இருக்க முடியாது. மனித ஜன்மமே நாம் பாவங்கள் செய்ததால்தான் எடுக்கிறோம். வினைப் பதிவே பல தேகம் கண்டாய் ...பாவங்கள் கூடலாம் இல்லை குறையலாம், ஆனால் பாவங்கள் செய்யாமல் உலக உயிர்கள் ஜனிப்பதில்லை. ஆசையால் பாவமும் பாவத்தால் பிறப்பும் மனித வாழ்க்கையில் சுழலும் வட்டங்கள். அதற்காக பாவ விமோசனமே இல்லை என்று சொல்லமுடியாது.

சூரியன் முன் பனித்துளி எவ்வாறு ஆவியாகிவிடுகிறதோ அதேபோல் இறைவன் எனும் மகா சூரியன் முன் நின்று கண்ணீர் விட்டு கதறும்போது நாம் செய்த பாவங்கள் தொலைந்துவிடுகின்றன என்கிறான் பாரதி.எனவே நாம்  பாவங்கள் அழிய ...இறைவனிடம் முழுமையாக சரணாகதி அடைந்து கண்ணீர் விட்டு கதறி அழுவோம். ஏன் கதறி அழ வேண்டும்.யோசித்துப் பாருங்கள்.இந்த ஒரு நாளில் நாம் எவ்வளவு பாவம் செய்திருப்போம் என்று. ஒரு நாள்  கணக்கே சொல்லி மாளாது எனில் இந்தப் பிறவியில் பிறந்த நாள் முதல் இன்று வரை ? அப்பப்பா அழத் தோன்றுகின்றதா ?

எந்தப் பாவத்தையும் நாம்  இனிமேல் செய்யாமல் இருப்போம்! செய்த பாவத்திற்கு இறைவனிடம் வேண்டுவோம்.

ஆக, இறைவன் முன் நம் பாவங்கள் நீங்கிவிடும்போது, நமக்கு நல்லறிவு கிடைக்கும். நல்லறிவால் மன வலிமை உண்டாகும். மன வலிமையால் நாம் நல்லனவே நினைப்போம். நல்லன எண்ணும்போது, நாம் எண்ணியன நடப்பதில் தடையேதும் இல்லை.

 அன்பர்களே, இந்த மகத்துவம் மிக்க பாடலை தினமும் உங்கள் பிரார்த்தனையில் சேர்த்து வேண்டுங்கள்.கண்டிப்பாக ஒரு மாதத்திற்குள் மாற்றத்தை உணர்வீர்கள்.இந்த பாடல் சிறந்த சுயமுன்னேற்ற சிந்தனையை தூண்டும் பாடல்.

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே  எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்.
தெளிந்த நல்லறிவு வேண்டும்;
பண்ணிய பாவமெல்லாம்
பரிதிமுன் பனிபோல,
நண்ணிய நின்முன் இங்கு
நசிந்திடல்
 வேண்டும் அன்னாய்.

இது வெறும் சாம்பிள் தான். பாரதியின் வேண்டுதல் எப்படி பரிமாற்றம் பெற்றிருக்கின்றது என இன்னும் ஆழ சென்று அறிவோம்.

முதலில் வேண்டுதல் என்றால் என்ன? ‘வேண்டுதல்’ என்பது, கடவுள் தம் சக்தியால் பக்தர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காகக் கேட்பது என்று பொருள்படும். மக்கள் தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால், அந்தத் துன்பம் நீங்கவும், உலக வாழ்க்கைக்குத் தேவையான விருப்பங்கள் நிறைவேறவும் இறைவனிடம் வேண்டுவர். இந்த வேண்டுதலை எப்படி அடியார் பெருமக்கள் செய்து இருக்கின்றார்கள்?இறைவனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்ட பக்தர்கள் தங்கள் துன்பம் நீங்க இறைவனிடம் வேண்டவில்லை. இறைவனோடு சேர வேண்டும் என்றே விரும்புகின்றனர். இந்த மண்ணுலக வாழ்க்கைத் துன்பமானது. ஆகவே, பிறவி வேண்டாம் என்று அவர்கள் பாடுவதைக் காணலாம். காரைக்கால் அம்மையார் சிவபெருமானிடம்,

பிறவாமை வேண்டும் மீண்டும்
      பிறப்பு உண்டேல் உன்னைஎன்றும்
மறவாமை வேண்டும்

(பெரியபுராணம் : காரைக்கால் அம்மையார் - 1781)

என்று வேண்டுவதாகச் சேக்கிழார் சொல்கிறார். அவர் பிறப்பை விரும்பவில்லை, பிறந்துவிட்டால் சிவபெருமானை மறக்காமல் இருக்க விரும்புகிறார். வேறு எந்த நோக்கமும் அவருக்கில்லை.

திருநாவுக்கரசர், ‘சிவபெருமானின் குனித்த புருவத்தையும், குமிண் சிரிப்பையும், நடனமாடுவதற்காக எடுத்த பாதங்களையும் காண்பதென்றால் மனிதப் பிறவி வேண்டும் (தேவாரம்- 4941) என்று கேட்கிறார்.

இராமலிங்க அடிகள், ‘அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மையப்பா’ என்று சிவபெருமானை வேண்டுகிறார்.

ஆண்டாள்,

எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கேநாம் ஆட்செய்வோம்

(திருப்பாவை - 29)

எனக் கண்ணனிடம் விண்ணப்பிக்கிறாள். இவர்கள் நல்ல உள்ளம், நல்ல சிந்தனை உடையவர்கள். இறைவனை உறுதியாக நம்பினர். ஆயினும், இவர்கள் வேண்டுதல்கள் தங்களைக் கடைத்தேற்றும் நோக்கத்தில் உள்ளன. வீடு பேறு அடையப் பிறவியாகிய துன்பத்தைக் கடக்க விரும்புகின்றனர். பாரதிக்கு முன்னோடியாக, அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும் என்று இராமலிங்க அடிகள் இறைவனிடம் வேண்டுகிறார். இவர்களைப் பின்பற்றிப் பாரதியின் வேண்டுதல்கள் விளங்குகின்றன. பாரதியின் வேண்டுதல்கள் என்ன என்று பார்க்கலாமா?.

இந்த நாட்டு மண்ணையும் மைந்தர்களையும் தம் உயிராக மதித்தவர் பாரதி. ஆகவே, உலகிலுள்ள ஓரறிவுடைய உயிரினம் முதல் ஆறறிவுடைய மனித இனம் வரை இன்புற்று வாழவேண்டும் என்று வேண்டுகிறார். தம் வேண்டுதல்களை விநாயகர் விரைவில் நிறைவேற்றுவார் என்று நம்புகிறார். ஆகவே,

கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்
மண்மீ துள்ள மக்கள் பறவைகள்
விலங்குகள் பூச்சிகள் புற்பூண்டு மரங்கள்
யாவுமென் வினையால் இடும்பைத் தீர்ந்தே
இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும் , . . . . . . . . . . . . .

(விநாயகர் நான்மணிமாலை - 32)

என்று பாரதி வேண்டுகிறார்.

மனிதன் முதல் புல் பூண்டு வரை இன்பமாக வாழ விரும்புகிறார் பாரதி. அந்த அரிய செயலை விநாயகர் தம் உள் இருந்து அருள்புரிந்து தாமே பிற உயிர்களின் துன்பத்தை நீக்க அருள் புரிய வேண்டும் என்று கேட்கிறார். எல்லா உயிர்களிலும் உள்ளிருந்து ஆட்டுவிப்பவன் இறைவனே!.

எல்லோரும் இன்புற்றிருக்க நினைத்தார் தாயுமானவர். வாடிய பயிரைக் கண்டு வாடினார் இராமலிங்க அடிகள். பாரதியும் புல், பூண்டு, பூச்சி இவைகளும் இன்புற்று வாழ வேண்டும் என்பதைத் தம் வேண்டுகோளாக முன் வைக்கிறார்.


எல்லா உயிர்களுக்கும் நல்லது செய்ய விரும்பும் பாரதி, சக்தியிடம் கேட்பதைப் பாருங்கள்.

எண்ணிய முடிதல் வேண்டும் 
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்.

(அன்னையை வேண்டுதல்)

எதை விதைக்கிறோமோ அதுதான் விளையும். நல்ல எண்ணத்தை விதைத்தால் நல்ல செயல் விளையும். ஆகவே நல்லதை எண்ணவும், அதைச் செயல்படுத்தவும் தேவையான வலிமையும் உறுதியும் உடைய நெஞ்சம் கேட்கிறார் பாரதி.

உலகில் பிறக்கும் மனிதர்கள் பயனுள்ள வகையில் வாழ்தலே சிறப்பு என்று நினைக்கிறார் பாரதி. ஆகவே, சிவசக்தியைப் பார்த்து, என்னை அறிவு மிகுந்தவனாகப் படைத்து விட்டாய். அந்த அறிவால் மனித குலம் பயன்படும் வகையில் வாழ்வதற்கான வலிமையைக் கொடு என்று வேண்டுகிறார். எதற்காக? இந்த உலகம் பயனுற வாழ்வதற்காக. ஆகையால்,

எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்,
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?


என்று பாடுகிறார்.


39 ஆண்டுகளே உலகில் வாழ்ந்த பாரதி நூறு வயது, நீண்ட புகழ், செல்வம், பேரழகு முதலியன தமக்கு வேண்டுமென்று விரும்பியிருக்கிறார். இந்த உலகை மேனிலைப் படுத்த அறிவும் வலிமையும் இருந்தால் போதுமா? போதாது. அவர் விரும்பியதைச் செய்து முடிக்க நீண்ட ஆயுள், செல்வம் முதலியவை தேவை. ஆகவே, பாரதி விநாயகர், சக்தி, ஆகியோரிடம்,

எனக்கு வேண்டும் வரங்களை
     இசைப்பேன் கேளாய் கணபதி
கனக்கும் செல்வம் நூறுவயது
     இவையும் தரநீ கடவாயே

(விநாயகர் நான்மணிமாலை - 7)

நோவு வேண்டேன், நூறாண்டு வேண்டினேன்

(விநாயகர் நான்மணிமாலை - 20)

நீண்டபுகழ் வாணாள் நிறைசெல்வம் பேரழகு
வேண்டு மட்டும் ஈவாய் விரைந்து

(விநாயகர் நான்மணிமாலை - 33)

நூறு வயது புகழுடன் வாழ்ந்துயர்
நோக்கங்கள் பெற்றிட வேண்டு மென்றே

(வைய முழுதும் - 6)

(வாணாள் - வாழ்நாள், ஆயுட்காலம்)

எனத் தம் உயர்ந்த நோக்கங்கள் நிறைவேற வேண்டுகிறார். நூறாண்டு காலம் உலகில் வாழ அருள் செய்யும் படி மூன்று முறை கேட்கிறார். அதைச் செய்து முடிப்பதற்கு முன்பு காலன் (எமன்) தம் உயிரைக் கவர்ந்து விடக்கூடாது என்று நினைத்த பாரதி காலனைப் பார்த்து,

காலா! . . . . . . . . . . . . . . . . .என்றன்
காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன் . . .
ஆலாலம் உண்டவன்அடி சரணென்ற மார்க்கண்டன் - தனது
ஆவி கவரப்போய் நீபட்ட பாட்டினை அறிகுவேன் . . . .

(காலனுக்கு உரைத்தல்)

என்று எச்சரிக்கிறார். காலனிடம் அவர் செல்ல மாட்டாராம். காலன் அவரிடம் செல்ல வேண்டுமாம்.

பாரதி, தம் பூத உடம்பு நீங்கினாலும் புகழுடம்பு நிலைத்து நிற்க விரும்பி நீண்ட புகழ் வேண்டியிருக்கிறார். அவர் கனவு நனவாகி விட்டது. இன்றும் அவர் பேசப்படுகிறாரல்லவா? மீண்டும் ஒருமுறை...




பாரதியிடம் நாமும் ஏதாவது கேட்க வேண்டும். என்ன கேட்பது? வேறென்ன? அவரின் வழியிலேயே
எண்ணிய முடிதல் வேண்டும்.


பாரதி பற்றி நாளெல்லாம் பேசலாம். தமிழுக்கு மட்டுமா பாரதி சொந்தம். இதோ..எம் சித்தன் பாரதி இயற்றிய பக்தி  பாடல்களில் வேலன் பாட்டு தருகின்றோம்.

வேலன் பாட்டு

[ராகம் -- புன்னாகவராளி] [தாளம் -- திஸ்ர ஏகம்]

வில்லினை யொத்த புருவம் வளைத்தனை,
  வேலவா! --அங்கொர்
வற்பு நொறுங்கிப் பொடிப் பொடி
  யானது, வேலவா!
சொல்லினைத் தேனிற் குழைத்துரைப் பாள்சிறு
  வள்ளியைக் --கண்டு
சொக்கி மரமென நின்றனை
  தென்மலைக் காட்டிலே.
கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட
  பாதகன் --சிங்கன்
கண்ணிரண் டாயிரங் காக்கைக்
  கிரை யிட்ட வேலவா!
பல்லினைக் காட்டிவெண் முத்தைப் பழித்திடும்
  வள்ளியை --ஒரு
பார்ப்பனக் கோலந் தரித்துக் கரந
 தொட்ட வேலவா! 1

வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்குங்
  கடலினை --உடல்
வெம்பி மறுகிக் கருகிப்
  புகைய வெருட்டினாய்.
கிள்ளை மொழிச்சிறு வள்ளியெனும் பெயர்ச்
  செல்வத்தை --என்றும்
கேடற்ற வாழ்வினை இன்ப
  விளக்கை மருவினாய்.
கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வு
  குலைத்தவன் --பானு
கோபன் தலைபத்துக் கோடி
  துணுக்குறக் கோபித்தாய்.
துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறுவன
  மானைப்போல்-தினைத்
தோட்டத்தி லேயொரு பெண்ணை
  மணஙகொண்ட வேலவா! 2

குறிப்பு: -- வேலன் அல்லது சுப்பிரமணியக் கடவுள் என்பது  ஆத்மாவின் வீர்ய ரூபமாகிய அக்னி தேவனுக்குப் பெயர். இஃது வேதப் பொருள்.

ஆறு சுடர்முகங் கண்டு விழிக்கின்ப
  மாகுதே; --கையில்
அஞ்ச லெனுங்குறி கண்டு
  மகிழ்ச்சியுண் டாகுதே.
நீறு படக்கொடும் பாவம் பிணி பசி
  யாவையும்-இங்கு
நீக்கி அடியரை நித்தமுங்
  காத்திடும் வேலவா!
கூறு படப்பல கோடி யவுணரின்
  கூட்டத்தைக் --கண்டு
கொக்கரித் தண்டங் குலுங்க
  நகைத்திடுஞ் சேவலாய்!
மாறு படப்பல வேறு வடிவொடு
  தோன்றுவாள் --எங்கள்
வைரவி பெற்ற பெரு ங்கன
  லேவடி வேலவா!

- மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-


தினசரிப் பிரார்த்தனை - எண்ணிய முடிதல் வேண்டும்.- https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_75.html

No comments:

Post a Comment