"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, December 2, 2019

கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல் (1)

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய பதிவில் கார்த்திகை மாத சிறப்பு திருவிழா பற்றி அறிய உள்ளோம். நம் முன்னோர்கள் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விழாவினை கொண்டாடி இருக்கின்றார்கள். சித்திரை மாதம் குல தெய்வ வழிபாடு, வைகாசி விசாகம், ஆனி பெருமாள் தரிசனம், ஆடி அம்மன் தரிசனம்  என தொடர்கின்றது. கார்த்திகை என்றாலே தீபம் தானே. அந்த ஜோதியை வணங்குவதே கார்த்திகை தீப நோக்கம் ஆகும்.




இது ஒரு மீள்பதிவு ஆகும்.குருவின் கருணையினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை குன்றத்தூர் கோவிந்தன் தரிசனம் பெற்று, அங்கே உழவாரம் செய்தோம். மேலும் சென்ற மாதம் கந்தலீஸ்வரர் கோயிலில் செய்த உழவாரப் பணி அனுபவத்தை பதிவாக தர விரும்பினோம். அந்த உழவாரப் பணி மறக்க முடியாத ஒன்று, ஒரே கல்லுல ரெண்டு மாங்கா என்று சொல்வார்கள். நம்மைப் பொறுத்த வரை ஒரே கல்லுல மூன்று மாங்கா..பின்னே..

உழவாரப் பணி நிறைவில் மூன்று தரிசனங்கள் பெற்றோம், குன்றத்தூர் கந்தலீஸ்வரர், குன்றத்தூர் முருகன் ,குன்றத்தூர் சேக்கிழார் பெருமான் என்று..இன்னும் அந்த தித்திப்பு மனதுள் உள்ளது குன்றத்தூர் கோவிந்தன் தரிசனம் பெற இயலவில்லை. அதனை இதோ வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு செய்து முடித்தோம். சரி ..நாம் விசயத்திற்கு வருவோம். இன்றைய பதிவில்  TUT குழுவின் மூலம் நாம் பெற்ற கார்த்திகை தீபம் தரிசனத்தை தர விழைகின்றோம்.


குன்றத்தூர் உழவாரப் பணி முடித்ததும், ஆலய நிர்வாகி அவர்கள், தீபத்திற்கு குன்றத்தூர் வருமாறு நம்மைப் பணித்தார். நாம் திருஅண்ணாமலை சென்று கார்த்திகை தீபம் காண விரும்புவதாய் சொல்லி இருந்தோம். திருஅண்ணாமலை செல்லாது இருந்தால் குன்றத்தூர் வருவதாக சொல்லி இருந்தோம். கடைசியில் திருஅண்ணாமலை தீப தரிசனம் செல்ல இயலவில்லை. நம் மகளிர் குழுவிடம் பேசி, மாலை குன்றத்தூர் கோயிலில் தீபம் ஏற்ற இலுப்ப எண்ணெய் வாங்கி வருமாறு கூறினோம். அவர்களும் சரி என்றார்கள். திருமதி பரிமளம், திருமதி சுபாஷினி, திருமதி மாலதி மூவரும் குன்றத்தூர் கந்தலீஸ்வரர் கோயிலுக்கு வருவதாக சொன்னார்கள்.

நாமும் அன்று மாலை சரியாக 5 மணி அளவில் கோயிலை அடைந்தோம். மூவரும் சற்று நேரத்தில் வந்து விட்டார்கள்.  நம் கையில் என்ன இருக்கின்றது? நடப்பதெல்லாம் அவனின் அருளன்றோ ! என்று நினைக்க தோன்றியது. திருமதி பரிமளம் அவர்கள், சென்ற மாத உழவாரம் போது, அறுபத்து மூவர் சன்னிதியை தூய்மையாக்கி விட்டு, அப்படியே ஒவ்வொரு அடியார்க்கும் விளக்கு போட்டால் எப்படி இருக்கும் என்று மனதுள் நினைத்தார்களாம். இதோ இன்றைய தீபத் திருநாளில் கனவு நனவானது.




கோயிலை அடைந்ததும், திரு விஜயகுமார் அவர்களிடம் பேசி, தீபம் ஏற்ற ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டோம். ஈசனார் தரிசனம் பெற்ற பின்பு, அப்படியே கோயிலின் வெளியே வந்து, விளக்கு எடுத்து வைத்தல்,திரி போடுதல் போன்ற வேலை ஆரம்பமானது.











நேரம் ஆக, ஆக துள்ளாத மனமும் துள்ளியது. பின்னே..முதன் முதலாய் கார்த்திகை தீபம் கோயிலில் வந்து கொண்டாட இருக்கின்றோம், மேலும் நம்முடன் TUT குழுவும் உள்ளது என்னும் போது , மனம் துள்ளுவதில் சந்தேகம் இல்லையே. இதோ அடியார் ஒருவர் கோலம் இட்ட காட்சி. நம்மை வரவேற்கும் அழகுக் கோலம் 







கோயிலின் வெளியே ஒரு கல்வெட்டு இருந்தது. அதனை அங்கிருந்த மூதாட்டி தொட்டு வணங்கினார்கள். நாம் சென்று கேட்டபோது, விளக்கம் சொல்லவில்லை, மாறாக அனைத்தும் இதில் அடக்கம் என்றார்கள், நாமும் சென்ற முறை வந்த உழவாரப் பணியின் போது, இதனை கவனிக்க வில்லை, இதோ இன்று கவனித்துப் பார்த்தோம், கல்வெட்டு எழுத்துக்கள் நமக்குப் புரியவில்லை
சொக்கப் பனை ஏற்ற தயார் 
தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமான கார்த்திகை பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. அக்னி ரூபமாய் போற்றப்படும் சிவனுக்கும், அக்னியில் உதித்த ஆறுமுகனுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் உகந்த மாதமாக கார்த்திகை மாதம் பக்தர்களால் போற்றப்படுகிறது. அந்த வரிசையில் இங்கு நாம் சிவனுக்கு ஏற்றப் படும் தீபம் பார்க்க வந்திருக்க நாம் நினைத்தோம். ஆனால் நடந்தது வேறு, அறுமுகனுக்கு ஏற்றப்படும் தீப தரிசனமும் நாம் பெற்றோம்.


                                                  இலுப்பை எண்ணெய் சேர்க்கப்பட்டது

                                            
                                    தீபம் ஏற்ற அகல் விளக்குகள் தயார் செய்த காட்சி

ஒவ்வொரு அடியாரிடமும் ஒவ்வொரு அகல், எண்ணெய் ஊற்ற, மற்றொருவர் வந்து திரி வைத்து, லேசாக கற்பூரம் வைத்த காட்சி 



  முதல் சுற்று முடிவில், அகல் தீர்ந்து விட்டது, இதோ மறுபடியும் வந்து, அகல்கள் துடைக்கப்பட்டன.


                                     சேக்கிழார் பெருமானுக்கு அகல் வைத்த காட்சி






                          நவகிரக சன்னதியில் தீபம் ஏற்ற ஆயத்தப் பணிகள் ஆரம்பம்



கோயிலின் மேலே தீபம் ஏற்ற தயார் செய்த காட்சி 
 


சைதாப்பேட்டை பகுதியில் இருந்து வரும் அடியார் இவர், ஒவ்வொரும் நாயன்மாரின் பிறந்த நட்சத்திரத்தில் இங்கு வந்து, அன்றைய தினம் அடியார்களை தொழுது, தூப தீபம் காட்டி வழிபடுவது இவரது வழக்கம். இதனை நாம் கேட்ட போது மெய் சிலிர்த்தது. அடுத்த சந்திப்பில் இவரிடம் நிறைய விசயங்கள் கேட்க வேண்டும் என்று மனதில் விரும்பினோம். நேரம் மாலை 5:50 மணியை நெருங்கி விட்டது.  நாம் கொடுத்த இலுப்பை எண்ணையை அகலில் ஊற்றிவிட்டு, மீதம் எண்ணையை முருகன் கோவிலில் சேர்ப்பிக்க உத்தரவானது. சரி ! என்று கூறிவிட்டு, நாம் குன்றத்தூர் முருகன் கோவில் நோக்கி புறப்பட்டோம். வெளியே வந்து பார்த்தால், குன்றத்தூர் முழுதும் ஒளி வெள்ளத்தில் மிதந்தது.






 ஒரே பதிவாக , கார்த்திகை தீப அனுபவத்தை தர விரும்பி தொடங்கினோம். ஆனால் பதிவின் நீளம் கருதி குன்றத்தூர் முருகன் கோயில் அடிவாரத்தில் நாம் இந்த பதிவை நிறைவு செய்கின்றோம். அடுத்த பதிவில் மீண்டும் தொடர்வோம். என்னவென்று தெரியவில்லை, குன்றத்தூர் பதிவு என்றாலே தொடர்பதிவு தான் போலிருக்கின்றது.

- மீண்டும் சிந்திப்போம்.

No comments:

Post a Comment