"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, December 16, 2019

மாதங்களில் நான் மார்கழி

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை

என்ற திரையிசை பாடல் கேட்டிருப்போம். என்னப்பா? திடீரென்று திரைப்பக்கம் சென்று விட்டோம் என்று எண்ண வேண்டாம். இப்போது உள்ள பாடல்களில் என்ன சொல்ல என்று தெரியவில்லை. ஆனால் பழைய பாடல்கள் காலத்தால் அழியாதவை. ஆன்மிகமும் ஊட்டுபவை. தமிழ் மொழியின் உயிர்நாடி இவை. இப்போதுள்ள தலைமுறைக்கு இதுவெல்லாம் தெரியாது. இணையத்தில் இருப்பது இப்போதுள்ள தலைமுறை. இதயத்துள் இருப்பது பழைய தலைமுறை. காலத்திற்கேற்ப நாம் மாற வேண்டும் என்பது உண்மை தான்.  மேற்கத்திய கலாச்சாரம் நமது வேலையில் ஊடுருவி தற்போது நமது வாழ்க்கை முறையிலும் ஊடுருவிவிட்டது. முக்கியத்துவம் இல்லாத விஷயங்கள் நமது நேரத்தை ஆக்கிரமித்தது  வாழ்க்கையில் எந்த விதத்திலும் நமக்கு பயன்தராத விஷயங்களுக்கு நாம் அதி முக்கியத்துவம் கொடுத்து அதில் நேரத்தை வீணடித்து அதை பெருமையாக கருதுறோம் என்பதே உண்மை.

அதே மாதிரி வசதியான வாழ்க்கைக்கு தேவையானவற்றை சம்பாதிப்பதில் தான் நமக்கு வாழ்வின் பெரும்பாலான நேரமும் ஆற்றலும் செலவாகிறது. ஆனால் ஆன்மாவுக்கு உணவிடுவது பற்றி எவருமே சிந்திப்பது இல்லை. ஆகையால் தான் பிரச்னை என்று வரும்போது அதை எதிர்கொள்ளக்கூடிய பக்குவமோ தைரியமோ எவருக்கும் இருப்பதில்லை. மனமும் அதற்கு தயாராக இருப்பதில்லை. விளைவு தவறான முடிவு எடுக்கப்படுகிறது. அது வாழ்க்கைக்கும் மிகப் பெரிய தண்டனையாக மாறிவிடுகிறது. நமது அனைத்து சந்தோஷங்களையும் குலைத்துவிடுகிறது. இதனை நாம் கண்கூடாக தினசரி நாளிதழில் பார்த்து வருகின்றோம்.

எப்போது எந்தப் பிரச்னை நம்மை தாக்கும் என்றும் எவரும் சொல்லமுடியாது. எனவே எதையும் சந்திக்கக்கூடிய ஆன்ம பலத்துடன் அனைவரும் இருக்கவேண்டும். அதற்கு உறுதணையாக இருப்பவை ஆலய தரிசனம் மற்றும் இறைவழிபாடு ஆகியவை தான்.

அதுவும் மார்கழி மாத ஆலய தரிசனம் தீராத பிரச்னைகள் அனைத்தையும் தீர்க்கவல்லது. உங்கள் ஆன்மபலத்தை அதிகரித்து அனைத்து நற்பலன்களையும் கொட்ட வல்லது. ராகு-கேது, சனி, என தோஷமிருப்பவர்கள் அனைவரும் தயங்காது சோம்பல்படாது இந்த மார்கழி மாதத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மார்கழி மாதம்  மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்லும் மாதம்.  கிருஷ்ண பரமாத்மா கீதையில் “மாதங்களில் நான் மார்கழியாவேன்” என்று கூறுகிறானென்றால் மார்கழியின் சிறப்பை யூகித்துக்கொள்ளுங்கள்.

அது பீடை மாதம் அல்ல… பீடுடைய மாதம் (அதாவது செல்வம் மிகுந்த மாதம்) என்பது தான் மருவி நாளடைவில் பீடை மாதம் என்றாகிவிட்டது.  நம் வாழ்வை அர்த்தமுள்ள தாக்கி கொள்ளவேண்டுமானால், இம்மாதத்தில் சரணாகதி என்னும் உயர் தத்துவத்தை கடை பிடிக்கவேண்டும்.

மார்கழி மாதத்தில் இறைவனை வணங்கி வழிபட்டு நோன்பிருந்து பயன் பெற வேண்டி இந்த மாதத்தை இறை உணர்விற்கும் பக்திக்கும் என ஒதுக்கியுள்ளார். ஆகையால்தான் இந்த மாதத்தில் திருமணங்கள் செய்வதில்லை. இந்த மாதத்திற்கு மற்றொரு ஏற்றம். மிகவும் பக்தி சிரோன்மணியாவும், தன் எஜமானனைத் தொழுபவர்கள் துன்பத்தை எல்லாம் துடைத்தருளும் வள்ளலாகவும் விளங்கும் ஆஞ்சநேய ஸ்வாமிகள் திரு அவதாரமும் இந்த மாதத்தில்தான்.

 இந்த பெருமை பொருந்திய மாதம் முழுதும் இறை வழிபாட்டுக்கு என்றே பெரியோர்கள் ஒதுக்கிவைத்துள்ளனர். இம்மாதங்களில், சுபநிகழ்ச்சி நடத்தினால், வழிபாடு பாதிக்கும் என்பதாலேயே, இம்மாதங்களில் அவற்றை நடத்தாமல் தவிர்த்தனர். மார்கழி மாதத்தை, “மார்கசீர்ஷம்” என்று வட மொழியில் சொல்வர். “மார்கம்” என்றால், வழி- “சீர்ஷம்” என்றால், உயர்ந்த- “வழிகளுக்குள் தலைசிறந்தது” என்பது பொருள். இறைவனை அடையும் வழிக்கு இது உயர்ந்த மாதமாக உள்ளது. இதற்கும் காரணமிருக்கிறது.


வருடத்தில் மற்ற நாட்களில் கோவில்களுக்கு செல்ல முடியாதவர்கள் இந்த மார்கழி மாதத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மார்கழி மாதம் மட்டும் கோவிலுக்கு சென்றாலே வருடம் முழுதும் கோவிலுக்கு சென்ற பலன் கிடைத்துவிடும்.

இதற்காகவே, ஆண்டாளும், மாணிக்கவாசகரும், திருப்பாவை, திருவெம்பாவை பாடி, நமக்கு வழிகாட்டியுள்ளனர்.


இந்த மாதத்தை நோன்பு மாதம் என்றும் சொல்வதுண்டு. பாவையர் நோன்பிலிருந்து நல்கணவனைப் பெறுவார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது முதுமொழி. மார்கழியில் பாவையர் நோன்பிருந்து வழிபட தை பிறந்தவுடன் அவர்களின் விரதத்தின் பயனாக நல்லதொரு வழி பிறந்து அவர்களின் நோக்கம் நிறைவேறும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை. ஆகவேதான் சைவ வைஷ்ணவர்கள் இந்த மாதத்தினை சிற்ப்பாக நோன்பிருந்து கொண்டாடி வழிபட என்று வகுத்துள்ளனர். வைணவ ஆழ்வார்களில் ஒரே பெண்மணியாக உள்ள ஆண்டாள் மார்கழி நோன்பிருக்க என திருப்பாவை பாடி அளித்துள்ளார். சைவக்குறவர்கள் நால்வரில் கடைசீயான மாணிக்கவாசகப் பெருந்தொகை திருவெம்பாவை எனவும் திருப்பள்ளி எழுச்சி எனவும் இந்த மார்கழி மாதத்திற்கு எனவே பாடி வழிபட அளித்துள்ளார்.

இந்த இருவரும் அளித்துள்ள பாடல்கள் யாவும் மிகச் சிறந்தவை. பாடி வழிபட, பலன் அளிக்கக்கூடியவை. இந்த இருவரும் அளித்துள்ள பாடல்கள் யாவும் மிகச் சிறந்தவை. பாடி வழிபட, பலன் அளிக்ககூடியவை. எவரையேனும் எதற்கும் ப்ரயோஜனம் இல்லாதவர்கள் என்று கருதினால் அவர்களை பூமிக்கு பாரம் என்று திட்டுவார்கள். ஆனால் உண்மையில் பூமிக்கு பாரம் ஆனவர்கள் யார் என்பதை குறிப்பிடும்போது கோதைத் தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு என்று கூறப்பட்டுள்ளது. கோதை எனறு பெயர் கொண்ட ஆண்டாள் நாச்சியார் பாடிக்கொடுத்த திருப்பாவை ஐஐந்தும் ஐந்தும் (5x5+5=30) அதாவது 30 பாடல்களையும் அறியாத மானிடர்களைத்தான் பூமிக்கு பாரம் என்று கணக்கிட்டுள்ளார்கள். நாம் எவரும் பூமிக்கு பாரமாக இருக்க விரும்ப மாட்டோம். நான்கு செயல்களை மனிதன் தினமும் தவறாமல் செய்ய வேண்டும்.

1. துயிலெழும்போது ஹரி ஹரி என்று எழுந்திருக்கவேண்டும். ('உத்திஷ்ட சிந்தய ஹரிம்')

2. குளிக்கும்போது கேசவனின் நாமம் சொல்லி குளிக்க வேண்டும். ('வ்ரஜன் சிந்தய கேசவம்')

3. உண்ணும்போது கோவிந்தனை மனதில் நினைத்து உண்ணவேண்டும். ('புஞ்சன் சிந்தய கோவிந்தம்')

 4. தூங்க போகும்முன் மாதவனை நினைக்க வேண்டும். ('ஸ்வபன் சிந்தய மாதவம்') . இந்த நான்கு செயல்களையும் செய்வதால் எவருக்கும் எந்தவிதமான கஷ்டமோ நஷ்டமோ கிடையாது. மாறாக அமைதியான வாழ்க்கை நிச்சயமாக கிட்டும். இந்த நான்கு செயல்களையும் மக்கள் முந்தய காலத்தில் தவறாமல் செய்துவந்தனர் என்பதை விளக்குமாப்போல ஆண்டாள் நாச்சியார் தனது திருப்பாவை பாசுரத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.

மார்கழி மாத நோன்பு, மிகவும் சிறந்தது. மார்கழி மாத வழிபாடு வழி வழியாகத் தொடர்கிறது. மார்கழி அதிகாலை 4.30 மணிக்கே எழுந்து விடவேண்டும். வீட்டை சுத்தம் செய்து, நீராடி, கோலமிட்டு, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களைப் பாட வேண்டும்.

சூரிய உதயமானதும், உங்கள் இஷ்ட தெய்வம்  குடியிருக்கும் கோவிலுக்குச் சென்று, சுவாமியை தரிசிக்க வேண்டும். “இறைவா… என் வாழ்வை உன்னிடம் ஒப்படைக்கிறேன். நீ தரும் நல்லது, கெட்டதை அன்போடு ஏற்கிறேன். எல்லாம் நன்மைக்கே என்று நினைக்கிறேன். நீயே கதியென சரணாகதி அடைந்து விட்ட என்னை வழி நடத்து…” என்று பரிபூரணமாக நம்மை அவனிடம் ஒப்படைத்துவிடவேண்டும்.

மார்கழி மாதம் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்பை பெறுவர். திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழிலில் நஷ்டம் நீங்கி லாபம் பெருகும்.

மார்கழி மாதங்களில் வீட்டு முன்பு கோலமிட்டால் மகாலட்சுமி வீடு தேடி வருவார் என்பது நம்பிக்கை. மார்கழியில் காலையில் எழுந்து வெளியே நடந்தால் ஓசோன் வாயு நுரையீர லுக்கு என்று புத்துணர்ச்சி தரும். மார்கழி மாத காற்று தோலுக்கும் , வெள்ளை சிகப்பு உயிர் அணுக்களுக்கும், புற்று நோய்களுக்கும், உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. இது விஞ்ஞான பூர்வமான அறிவியல் உண்மை.மனம் தூய்மையாகும். கோலமும், பாடலும் மனதை ஒருமைப்படுத்தி உணர்வுகளைச் செம்மைப்படுத்தும

 மார்கழி மாதத்தில் சுப நிகழ்சிகள் நடத்தக்கூடாதே தவிர, அது தொடர்பாக முயற்சிகளில் தாராளமாக ஈடுபடலாம். உதாரணத்துக்கு ஜாதக பரிவர்த்தனை, வீடு வாசல் பார்ப்பது, இடம் தேடுவது, பெண் தேடுவது உள்ளிட்டவைகளை தாராளமாக செய்யலாம். அனைத்தையும் செய்து வைத்துக்கொண்டு தயார் நிலையில் இருந்து தை பிறந்ததும் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திக்கொள்ளலாம



இதோ. நம் தளத்திலும், facebook இணையத்திலும் தினம் ஒரு திருப்பாவை, திருவெம்பாவை பகிர குருவருள் நமக்கு வழிகாட்டியுள்ளது. அன்பர்கள் வழக்கம் போல் படித்து பயன் பெற வேண்டுகின்றோம்.


 பக்தியோடு இறைவனைத் தொழுவதற்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ள இறைவனின் வடிவமாகிய இந்த மாதத்திலே யாவரும் நோன்பு இருந்து, பக்தி மார்க்கத்தை கடைபிடித்து, கோதை நாச்சியாரும், மாணிக்க வாசகரும் அருளிய பாடல்கள் அறிந்து பாடி, பூமிக்கு பாரமில்லாமல் இருப்போமாக!'

இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றோமே யாவோம் உமக்கே யாம் ஆட்செய்வோம் மற்றய காமங்கள் மாற்று'என வேண்டி, அவன் தான் வணங்கி, அருள் பெற்று இன்புறுவோமாக!

மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஆகாயத்தில் ஒரு ஆலயம் - ஸ்ரீ பர்வத மலை கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_16.html


யாத்திரையாம் யாத்திரை பருவதமலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_42.html

பரம்பொருளைக் காண பருவத மலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_87.html

No comments:

Post a Comment