அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
சித்தர்கள் பற்றி பேசுவதற்கு எப்போதுமே நமக்கு இனிக்கத் தான் செய்யும். அது போல் தான் சித்தர்கள் கொடுக்கும் அருள்நிலையும் என்று தோன்றுகின்றது. சித்தர்களின் வழிபாட்டை நாம் சிறந்த வழிபாடு என்றும் சொல்லலாம். நம் தளத்தில் சித்தர்களைப் பற்றி தொட்டு காட்டி வருகின்றோம்."சதா சர்வ காலமும் பேரனந்த நிலையில் இருப்பதான 'முக்தி' அல்லது மோட்சத்தை அடைவது என்பது மனிதனின் கருத்தாக்கத்திற்கு அப்பாற்பட்டதாகவே உள்ளது. இது குறித்து அளிக்கப்படும் எத்தகைய விளக்கங்களும் எளிதில் நம்பி ஏற்கத் தக்கதாகவும் இருப்பதில்லை . நானுங்கூட இப்படிப்பட்ட மனநிலை உள்ளவனாகத்தான் இருந்தேன், அதாவது மிகவும் எளிமையாகவும், எழுத்தறிவின்றியும் இருந்த ஒரு பிராமண விதவையைக் (ஸ்ரீ சக்கரை அம்மா) காணும் வரை அவ்வாறான மனநிலையே எனக்கு இருந்தது. அவர் எந்நேரமும் நிரந்தரமாக 'முக்தி' என்பதன் மெய்ப்பொருளாகிய பேரானந்தத்தில் திளைத்துக் கொண்டிருப்பவர் என்பதே அவருக்குரிய சிறப்பாகும். படித்தவர், படிக்காதவா, ஏழை, பணக்காரர், மேன்மக்கள், சாதாரணமானவர்கள் என எந்த நிலையில் உள்ள மக்கள் மத்தியிலும் அவரைப்போல் முக்தி என்னும் பேரானந்தத்தைத் தன் உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் எப்போதும் அனுபவித்துக் கொண்டு, அதனைப் பிறருக்கும் உணர்த்தும் நிலையினை எய்தியவர்களை நான் கண்டதுமில்லை, கேள்விப்பட்டதுமில்லை." -ஸ்ரீ சக்கரை அம்மாவைப் பற்றி அவரது பிரதான சீடர் டாக்டர் எம்.சி. நஞ்சுண்ட ராவ்
சித்தர்கள் என்றவுடனே நமக்கு எண்ணற்ற ஆண் சித்தர்கள்தான் நினைவுக்கு வருவார்கள். ஆனால், சர்வ வல்லமை படைத்த பெண் சித்தர்களும் உண்டு. அவர்களில் ஒருவர்தான் ஆனந்தாம்பாள் என்கிற 'சக்கரை அம்மாள்'.
சிவபெருமானையும், ஶ்ரீ சக்கரத்தையும் அனுதினமும் வழிபட்டு வந்தமையால் இவர் 'ஶ்ரீ சக்ர அம்மா' என்று அழைக்கப்பட்டார். நாளடைவில் இந்தப் பெயர் மருவி 'ஶ்ரீ சக்கரை அம்மா' வானது.
சிவபிரானின் ஒரு பாகமாக சக்தி சொரூபமாய் விளங்கும் உமையம்மைதான் பெரிய நாயகி என்ற நாமத்துடன் ஊர் நடுவே கோயில் கொண்டுள்ளாள். இதற்குப் பொருத்தமாக ஊரின் பெயரும் 'தேவிகாபுரம்' என, 'இது அம்மவின் பூமி' என்று பிரகடனம் செய்வதுபோல அமைந்துவிட்டது.
ஆனந்தாம்பாவின் வீடு கோயிலுக்கு வெகு அருகாமையிலேயே இருந்தது. மேலும், அவளது தந்தை சேக்ஷ குருக்கள் ஆலயத்தின் அர்ச்சகராக இருந்தார்.
எனவே ஆனந்தாம்பாவுக்கு ஆலயமே தன் வாசஸ்தலம் போல, நினைத்த மாத்திரத்தில் சென்று வெகு நேரம் பொழுதைக் கழிப்பது எளிதாக இருந்தது. யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே கோயிலில் குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்யும் பழக்கம் நீரில் விட்ட மீன் தானாகவே நீந்தித் திளைப்பதுபோல் அவளுக்கு மிகவும் சுலபமாக ஏற்பட்டுவிட்டிருந்தது. தந்தையார் கற்பித்த சிவ ஸ்துதியை ஜபித்தவாறு தியானம் செய்வதில் அலாதியான அமைதியும் இன்பமும் கண்டாள், சிறு பெண் ஆனந்தாம்பா. அதனால் அவள் வயதுச் சிறுமிகள் அனைவரும் வேடிக்கை விளையாட்டுகளில் மகிழ்ந்திருக்க, இவள் மட்டும் அமைதியாக தியானம் செய்வதிலேயே விருப்பம் மிக்கவளாக இருந்தாள்.
அக்கால வழக்கப்படி ஆனந்தாம்பாவுக்கு ஒன்பது வயதாகும்போதே திருமணம் செய்து வைத்துவிட்டனர். அவளுக்குக் கணவனாக வாய்த்தவர் சென்னையில் தற்சமயம் புதுப்பேட்டை என்று அறியப்படும் கோமளிஸ்வரன்பேட்டையில் இருந்த சட்டநாத மடம் என்ற மடத்தின் அதிபதி. அந்த மடம் செட்டியார் வகுப்பில் ஒரு பிரிவினரின் குரு மடமாகும். இந்த மடத்தின் அதிபதிகள்தான் அந்தப் பிரிவு செட்டியார் குடும்பங்களில் உபநயனம் விசேஷ பூஜை முதலியவற்றை நடத்தி வைப்பார்கள். சிவாசாரியார் என அழைக்கப்படும் மடாதிபதிகள் அந்தண குலத்தவராக இருப்பதோடு இல்லறத்தாராகவும் இருப்பதுண்டு. ஒன்பது வயது ஆனந்தாம்பாவின் கணவருக்கு அவளைத் திருமணம் செய்யும்போதுபோது வயது இருபத்து நான்கு மேலும், முதல் தாரத்தை இழந்துவிட்டிருந்த அவருக்கு ஆனந்தாம்பா இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டாள்.
உரிய வயது வந்ததும் ஆனந்தாம்பா தன் கணவனுடன் வாழ கோமளீஸ்வரன் பேட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். அங்கு அவள் கணவர் அவளை வெறும் வீட்டு வேலைக்காரியைப் போலவும் தனக்குப் பணிவிடை செய்யும் சேவகியாகவும்தான் நடத்தினார். இது ஒருவகையில் ஆனந்தாம்பாவுக்கு நன்மையாகவே தோன்றியது.அக்கால நாட்டுப் பெண்களுக்கு இணங்க வீட்டு வேலைகள் அனைத்தையும் முறைப்படிச் செய்து முடித்தபின் வீட்டின் மொட்டை மாடியில் இருந்த ஒரு திண்ணை மேடையில் அமர்ந்து தியானம் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டாள், ஆனந்தாம்பா. அடிக்கடி அருகாமை யில் உள்ள கோமளீஸ்வரன் கோயிலுக்கும் சென்று பொழுதைக் கழிக்க லானாள்.
கணவர் சாம்பசிவ சிவாசாரியார் மனைவியுடன் இல்லறம் நடத்துவதைவிட, வேறு வெளியிடத்துக் கேளிக்கைகளில் ஈடுபடுவதிலேயே கவனமாக இருந்தார். முறைகேடான வாழ்க்கை நடத்திய சாம்பசிவம், விரைவிலேயே தீராத நோய்வாய்ப்பட்டு, அற்ப ஆயுளில் மரணமடைந்தார். ஆக, ஆனந்தாம்பா இருபது வயதிலேயே விதவையாகிவிட்டாள்! இளமையிலேயே தான் விதவையாக நேர்ந்ததையும் ஒரு நல்வாய்ப்பாகவே ஆனந்தாம்பா கருதினாள். எவ்வித இடையூறுமின்றி தியானத்தில் மூழ்கிக் கிடக்க வாய்ப்புக் கிட்டியதாக எண்ணி மகிழ்ந்தாள். விதவையான மகளைச் சொந்த ஊரான தேவிகாபுரத்திற்கே அழைத்துச் சென்றார், ஆனந்தாம்பாவின் தந்தை. அங்கு சில நாட்களைக் கழித்த பின் அருகில் தன் சகோதரன் வசித்து வந்த போளூருக்குச் சென்றாள் ஆனந்தாம்பா. அங்கு 'நட்சத்திரக் குன்று' என்று அழைக்கப்பட்ட சிறு குன்றில் வசித்து வந்த நட்சத்திர குணாம்பா என்ற யோகினியின் பரிச்சயம் ஆனந்தாம்பாவுக்குக் கிடைத்தது. குணாம்பா ஆனந்தாம்பாவை மிகவும் நேசித்தார். அச்சமயம் போளூரில் வசித்து வந்த விட்டோபா என்ற சித்தரின் கவனமும் ஆனந்தாம்பா வுக்குக் கிட்டியிருக்கக்கூடும்.
மேலும் அருகாமையில் உள்ள சித்தர்களின் உறைவிடமான திருவண்ணாமலைக்குப் போளூர் வழியாகச் செல்லும் அல்லது திருவண்ணாமலையிலிருந்து திரும்பும் சித்தர்கள் பலரையும் சந்தித்து அவர்களின் ஆசியைப் பெறும் வாய்ப்பும் ஆனந்தாம்பா வுக்குக் கிடைத்தது. ஆனந்தாம்பாவுக்கு நட்சத்திர குணாம்பாளிடம் தனி ஈடுபாடு ஏற்பட்டது போலவே குணாம்பாளுக்கும் ஆனந்தாம்பாவிடம் ஓட்டுதல் ஏற்பட்டது. ஆனந்தாம்பா மீண்டும் சென்னைக்கே திரும்பிச் செல்ல நேர்ந்தபோது, "இனி நினைத்த மாத்திரத்தில் உங்களை எப்படிச் சந்திப்பேன்? நானோ ஒரு விதவை. மேலும் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவள். கட்டுப்பாடுகள் மிக்க வட்டத்திற் குள்ளேயிருந்து எப்படி என்னால் வெளியே வந்து உங்களைக் காண இயலும்?" என்று ஏக்கத்துடன் கூறினாள்.
அதைக் கேட்டு, ”கவலை வேண்டாம். நீ விரும்பும்போது என்னை வந்து காணலாம். அதேபோல் நீ யாரையெல்லாம் காண விரும்புகிறாயோ அவர்களையும் சென்று காணலாம்” என்று நட்சத்திர குணாம்பாள் ஆறுதல் கூறித் தேற்றினார். இதையொட்டியே 'லஹிமா' என்ற உடம்பை லேசாக்கிக் கொண்டு ஒரு பறவையைப் போல வானில் பறந்து செல்லும் சித்து ஆனந்தாம்பாளுக்குக் கிட்டியிருக்க வேண்டும். ஆனந்தாம்பாள் ஒரு பறவையைப்போல வானில் பறந்து செல்வதைப் பலரும் கண்டுள்ளனர். அவர்களுள் சிறந்த தமிழ் அறிஞரும் தேச பக்தருமான திரு. வி. கலியாண சுந்தரனார் தாம் எழுதிய 'உள்ளொளி' என்ற நூலில் அம்மாவின் பறக்கும் ஆற்றலைப் பதிவு செய்துள்ளார். திரு.வி.க. தமது 'உள்ளொளி'யில் பின் வருமாறு எழுதுகிறார்: சென்னை கோமளீஸ்வரன்பேட்டையில் ஒரு மாது இருந்தார்கள். அவர் காலம் சென்ற டாக்டர் நஞ்சுண்ட ராவின் குரு என்று உலகம் சொல்லும். அவ்வம்மையார் பறவையைப்போல் வானத்தில் பறப்பார். ஒருமுறை யான் வசித்த கல்லூரியின் (ராயப்பேட்டை வெஸ்லி கல்லூரி) மாடியில் பறந்து வந்து நின்றார். மானுடம் பறக்கிறது என்றால் விந்தையல்லவா? அக்காலத்தில் சென்னையில் வசித்த விருஞானியா பலர் சூழ்ந்துகொண்டு அம்மையார் நிலையை ஆராய்வர். அப்போது சென்னை மியூசியத் தலைவராக இருந்த இருந்த ஓர் ஐரோப்பியரால் (டாக்டர் எட்கர் தர்ஸ்ட ன்) பறவையார் நிலை பெரிதும் ஆராயப்பட்டது. அம்மையார் பறவை இனத்தில் சேர்ந்தவர் என்றும் அவரிடம் பறவைக்குரிய கருவி, கரண அமைப்புகள் சில உள்ளன என்றும் ஊர்தல் அறப்படி (evolution) அத்தகைய பிறவி இயற்கையில் அமைதல் கூடும் என்றும் அவரால் விளக்கப்பட்டது. அவர் விளக்கம் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. யான் தேச பக்தன் ஆசிரியராக இருந்த போது நஞ்சுண்ட ராவுடன் நெருங்கிப் பழகுதல் நேர்ந்தது. அமரர் ராவ் அவர்கள், அம்மா சித்தர் இனத்தைச் சேர்ந்தவர் என்று சொன்னார். பறவை நாயகியார் நிலை மனோதத்துவத்திற்கு எட்டுவதா? எண்ணிப்பாருங்கள்.”
ஆனந்தாம்பாளிடம் செலுத்திவிட்டே தமது ஸ்தூல உடலைத் துறந்திருக் கிறார் என்றும் கருத இடமுள்ளது. ஏனெனில், பிற்காலத்தில் ஸ்ரீ சக்கரை அம்மா தம்மை நட்சத்திர குணாம்பாள் என்றே வெளிப்படுத்தியதுண்டு.
கோமளிஸ்வரன்பேட்டைக்குத் திரும்பிய ஆனந்தாம்பாள் மடத்தின் மொட்டை மாடியிலிருந்த திண்ணை மேடையில் அமர்ந்து முன்னிலும் தீவிரமாக தியானத்தில் ஈடுபடலானார். அச்சமயம் அவர் ஊண் உறக்கமின்றி ஸ்ரீ சக்கர உபாசனையை மேற்கொண்டிருக்க வேண்டும். பத்தாண்டுக் கால மும்முர சாதனையின் பலனாக ஒரு நாள் ஓர் ஒளி வெள்ளம் அவரை மூழ்கடித்தது. தானே ஒளியுடல் பெற்றுப் பிரகாசிப்பதாக அவர் உணர்ந்தார் அக்கணத்தி லிருந்து அவர் பேரானந்தப் பெருவெளியில் மிதக்கலானார். எந்நேரமும் களிப்பில் திளைத்து, அந்த மகிழ்ச்சியில் வாய்விட்டுப் பெரிதாக நகைக்கவும் தொடங்கினார். மடத்தில் உள்ளவர்களும் உறவினர்களும் அவருக்கு சித்தப் பிரமை பிடித்துவிட்டதாகவே முடிவு கட்டிவிட்டனர். ஆனந்தாம்பா கோமளீஸ்வரன்பேட்டைக்குத் திரும்பியபோது அவருடன் அவரது சகோதரர் அருணாசலமும் கோமளீஸ்வரன்பேட்டைக்கு வந்துவிட்டார். மடத்தின் தலைமைக்கு சரியான வாரிசு இல்லாததால் அவரே மடத்தின் அதிபதியாகப் பொறுப்பும் ஏற்றுக்கொண்டார்.
இந்தச் சமயத்தில் அருணாசல சிவாசாரியார் உடல் நலம் குன்றியபோது டாக்டர் எம்.சி. நஞ்சுண்ட ராவ் அவருக்கு சிகிச்சையளிக்க கோமளிஸ்வரன் பேட்டைக்குச் செல்ல நேர்ந்தது. ஒருமுறை அவர் அருணாசலத்திற்கு சிகிச்சை வருவதைக் கேட்டு அதுபற்றி விசாரித்தார்.
மாடியில் ஒரு பெண் பைத்தியம் இருப்பதாகவும் அதுதான் இப்படி வேளை கெட்ட வேளைகளில் எல்லாம் அர்த்தமின்றிப் பெரிதாகச் சிரிப்பதாகவும் வீட்டில் இருந்தவர்கள் கூறினார்கள். டாக்டர் நஞ்சுண்ட ராவ் சிறந்த தேசபக்தராகவும் இருந்ததோடு, ஆன்மிக நாட்டம் மிக்கவராகவும் இருந்தார். சமூக நலப் பணிகள் பலவற்றில் ஈடுபட்டு, ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக சிகிச்சையும் மருந்துகளும் வழங்கி வந்தார். எனவே சென்னை நகரிலும் பிற நகரங்களிலும் அவர் மிகவும் பிரபலமானவராக விளங்கினார்.
ஆனந்தாம்பாள் சில சமயங்களில் மடத்திலிருந்து வெளிப்பட்டுக் கோமளீஸ் வரர் ஆலய கோபுர வாசலிலும் தரையில் அமர்ந்து வருவோர் போவோரை யெல்லாம் பார்த்து உலகியலின் அபத்தத்தை எள்ளி நகையாடுவதுபோல் சிரித்துக் கொண்டிருப்பது வழக்கம். ஒருமுறை அதனைக் கண்ட டாக்டர் நஞ்சுண்ட ராவ், அனைவரையும் போல் தாமும் ஆனந்தாம்பாளை புத்தி பேதலித்தவராகவே எண்ணிவிட்டார். ஆனால் மறுமுறை ஆனந்தாம்பாளைக் கண்டபோது ஆனந்தாம்பாள் கண்களின் தீட்சண்யத்தையும், முகத்திலும் விழிகளிலும் ஒளிரும் பிரகாசத்தையும் உற்று நோக்கி, அவருடன் பேசிப் பழக முனைந்தார்.
ஆனந்தாம்பாளை அணுகிய டாக்டர் ராவ், எதற்காக அவர் எப்போது பார்த்தாலும் சிரித்துக் கொண்டேயிருக்கிறார் என்று கேட்டபோது. எந்நேரமும் ஆனந்தமாக இருப்பதுதான் ஆன்மாவின் இயல்பு என்றும், மகிழ்ச்சியோ துன்பமோ ஸ்தூல, சூட்சும உடல்களைத்தான் பாதிக்குமேயன்றி, உள்ளுறையும் ஆன்மாவை அவை எவ்விதத்திலும் பாதிக்காது எனவும் இந்த உண்மையை உணராமல் இன்ப துன்பங்களில் உழன்று சலிக்கும் மனிதர்களைக் கண்டுதான் சிரிப்பதாகவும் அவர் கூறினார். அக்கணமே டாக்டர் ராவ் ஆனந்தாம்பாவின் சிறப்பை உணர்ந்து அவரைத் தமது குருவாக ஏற்றுப் பணிந்தார். அவரிடம் மேலும் நெருங்கிப் பழகி, அவர் ஸ்ரீ சக்கர உபாசனை செய்து பக்குவம் பெற்றுள்ளார் என்றும் தெரிந்துகொண்டார். அது முதல் அவரை ஸ்ரீ சக்கரத்தம்மா என்றே குறிப்பிட்டு எங்கும் அவரது பெருமையை எடுத்துக் கூறலானார். இப்பெயர் விரைவில் மக்கள் மொழியில் சக்கரை அம்மா என வழங்கத் தொடங்கி, இதுவும் மிகப் பொருத்தமே என்று, டாக்டர் ராவும் அவ்வாறே குறிப்பிடலானார்.
டாக்டர் நஞ்சுண்ட ராவ் பிரபல பிரமுகராகவும் மெத்தப் படித்தவராகவும் இருந்த போதிலும், சிறிதும் தயக்கமின்றி எழுதப் படிக்கத் தெரியாத ஓர் எளிய பிராமண விதவையான அம்மாவைத் தமது குரு என்று பகிரங்கமாக அறிவிக்கத் தயங்கவில்லை . அதன் பயனாக மேலும் பலர் அம்மாவின் பெருமையினை உணர்ந்து அவரை குருவாக ஏற்றனர்.
டாக்டர் ராவ் தமது சொந்த விவகாரங்களிலும் பொதுக் காரியங்களிலும் ஸ்ரீ சக்கரை அம்மாவின் அறிவுரையைக் கேட்டு அதன் பிரகாரமே நடந்து வந்தார். அதனால் அவர் மேற்கொண்ட பணிகள் யாவும் வெற்றி பெற்றன. டாக்டர் ராவ் அம்மாவைக் காசி உள்ளிட்ட பல புண்ணியத் தலங்களுக்கும் தம்முடன் அழைத்துச் சென்றார். ஒருமுறை அவர் அம்மாவைத் திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்று அப்போது ஸ்கந்தாசிரமத்தில் இருந்து வந்த பகவான் ஸ்ரீ ரமணரை தரிசித்தார். அப்போது ரமணரிடம் தமக்கு முக்தியளிக்குமாறு அம்மா வேண்ட, உங்களுக்கு ஏற்கனவே முக்தி பிராப்தியாகிவிட்டது என்று ரமணார் கூறினாராம். அம்மாவைப் பற்றிப் பின்னர் ஸ்ரீ ரமணரும் மிக உயர்வாகத் தம் சீடர்களிடம் பேசியதை, தேவராஜ முதலியார் என்ற ஸ்ரீ ரமணரின் சீடர் 'அனுதினமும் பகவானுடன்' என்ற தமது நூலில் பதிவு செய்துள்ளார்.
1901 ஆம் ஆண்டு ஸ்ரீ சக்கரை அம்மா டாக்டர் ராவ் மற்றும் சில சீடர்களுடன் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டார். அப்போது, தம் சீடர்களுக்கு என்றென்றும் அருள் பாலித்து வருமாறு அவர் வேண்டிக்கொண்டார். திரும்பி வரும் வழியில் திருவான்மியூரிலேயே ஓர் சவுக்குத் தோப்பைச் சுட்டிக் காட்டி, அந்த இடத்தை வாங்குமாறு தமது பிரதான சீடரான டாக்டர் ராவிடம் கூறினார். டாக்டரும் அதற்கு சம்மதித்துப் பின்னர் சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்புள்ள அந்த இடத்தை வாங்கினார். அம்மா அத்துடன் அமைந்துவிடவில்லை. விரைவில் தாம் தமது ஸ்தூல சரீரத்தைத் துறந்துவிடப் போவதாகவும் அறிவித்தார். தமது உடலை திருவான்மியூரில் தாம் சுட்டிக் காட்டிய இடத்தில் அடக்கம் செய்யுமாறும் டாக்டர் ராவிடம் கூறினார்.
டாக்டர் ராவ் அதனைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. அதெப்படி உங்களால் எங்களையெல்லாம் விட்டுவிட்டுப் போய்விட முடியும் என்று விளையாட்டாகக் கேட்டார். ஆனால் ஸ்ரீ சக்கரை அம்மா தாம் கூறியதை உறுதி செய்ததோடு, தம் உடல் அடக்கம் செய்யப்படும் இடத்தில் சமாதி எழுப்புமாறு கூறி அங்கிருந்தவாறு தமது சீடர்களுக்குத் தொடர்ந்து ஆசி வழங்குவதாகவும் உறுதி வழங்கினார். தமது சமாதி ஒரு நூற்றாண்டுக்குப் பிறகே மக்களின் கவனத்தை ஈர்க்கும் என்றும் அதன் பிறகு அதன் மகிமையினை உணர்ந்து பக்தர்கள் திரள் திரளாக அங்கு வந்து கூடுவார்கள் என்றும் தெரிவித்தார்.
ஸ்ரீ சக்கரை அம்மா தாம் கூறியது போலவே 1901 ஆம் ஆண்டே பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி மாலை 3:30 மணிக்குத் தமது ஸ்தூல உடலைத் துறந்தார். அம்மா தான்சொன்னபடியே மகா சமாதியடைந்து விட்டது குறித்து டாக்டர் ராவ் சொல்லொணா வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தார். பிறகு ஒருவாறு தம்மைத் தேற்றிக்கொண்டு, அம்மாவின் ஸ்தூல உடலை ஊர்வல மாக எடுத்துச் சென்று தாம் வாங்கியிருந்த இடத்தில் அடக்கம் செய்து அதன் மீது சமாதி ஆலயமும் அமைத்து முறைப்படி கும்பாபிஷேகம் செய்து நித்திய
பூஜைக்கு ஏற்பாடுகள் செய்தார். எனினும் அம்மா சொன்னது போலவே சரியாக ஒரு நூற்றாண்டு கழிந்தபின் 2001-ல் ஸ்ரீ சக்கரை அம்மா ஆலயம் புனருத்தார ணம் செயப்பட்டு 2002-ல் மஹா கும்பாபிஷேகமும் செய்விக்கப்பட்டு, அது முதல் சிறிது சிறிதாகப் பிரபல மடைந்து, ஊடகங்களிலும் ஸ்ரீ சக்கரை அம்மாவின் பெருமைகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மக்கள் அவற்றின் மூலமும், மற்றவர்கள் சொல்லக் கேட்டும் திரள் திரளாக ஸ்ரீ சக்கரை அம்மா வின் ஆலயத்திற்கு வந்து அம்மாவின் அருளைப் பெற்றுப் பயனடைந்து வருகின்றனர். தம் சீடர்களிடம் வாக்களித்ததற்கு இணங்க, தம்மை நாடி வருவோர்க்கெல்லாம் தமது சமாதியிலிருந்தவாறே தாய்மைப் பரிவுடன் அருள் பாலித்து வருகிறார், ஸ்ரீ சக்கரை அம்மா.
சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2020/10/2.html
No comments:
Post a Comment