அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
நம் தளத்தில் அவ்வப்போது சித்தர்கள் தரிசனம் கண்டு வருகின்றோம். அருள்மிகு வீரராகவ சுவாமிகள், கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள், போகர், ஸ்ரீ ரோம மகரிஷி , ஸ்ரீ சதானந்த சுவாமிகள், ஸ்ரீ சுப்பையா சுவாமிகள், மண் உண்ட மகான் ஸ்ரீ மல்லையா சுவாமிகள், ஸ்ரீ காவாங்கரை கண்ணப்ப சுவாமிகள் என தொட்டுக்காட்டி வருகின்றோம். இன்றும் ஒரு மாபெரும் ஞானி பற்றி காண இருக்கின்றோம்.எப்போது அழைப்பாரோ என்று வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கின்றோம்.சித்தர்கள் நம்மை வாழ்விக்க வந்தவர்கள். பார்ப்பதற்கு பித்தர்கள் போன்று தோன்றலாம். சிவத்தை ஜீவனில் உணரும் போது பித்தம் தெளிந்து சித்தம் வெளிப்படும். சிலர் குருவாக, சிலர் சற்குருவாக, சிலர் சத்குருவாக என வாழையடி வாழையாய் ஞானம் போதிக்க வருபவர்கள். சென்னையில் மட்டுமா சித்தர் பரம்பரை உள்ளது என்று நினைத்த நமக்கு தமிழ் நாடு என்ற அளவில் விரிந்து பார்த்தோம். அத்தனையும் தாண்டி பாண்டிச்சேரியில் இன்னும் உயிர்ப்பாக சித்தர்களின் அருளை உணர முடிகின்றது.
சென்னையும், புதுச்சேரியும் சித்தர்கள் உலாவும் புண்ணிய பூமி. இந்த உலகிலே எங்கெங்கோ நாம் பிறந்திருக்கலாம். ஆனால் இந்தியாவில் பிறந்து நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்றால் அது நம் முன்னோர் செய்த புண்ணியமே. இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் நாம் பிறந்து வாழ்ந்து கொண்டிருப்பது அதனினும் புண்ணியமே.
தமிழ்நாடு முழுதும் ஜீவன் முக்தர்களின் அரசாட்சி தான். திரும்பிய இடமெங்கும் உயிர்நிலை கோயில்கள். சென்னை முதல் கன்னியாகுமரி வரை சித்தர்களின் ராஜ்ஜியம் தான். அந்த வரிசையில் சென்னை என்றால் நமக்கு மிக மிக நெருக்கமாக சதானந்தர். இவரைத் தாண்டி பாரத்தால் சென்னையில் சாங்கு சித்தர், வேளச்சேரி மகான், பட்டினத்தார் என நீளும் பட்டியலில் திருஒற்றியூர் பற்றி சொல்ல இந்த ஒரு பதிவு போதாது. இது போல் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு இடத்திலும் சித்தர்களின் அருளாசி நிரம்பி வழிவதை நாம் உணர முடிகின்றது. அந்த வரிசையில் இன்று நாம் திண்டுக்கல் செல்ல இருக்கின்றோம்.
சித்தர்கள் என்று ஆரம்பித்தால், பழநியை முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். பதினென் சித்தர்களில் ஒருவரான போகர் பெருமான் அடங்கி இருப்பது பழநி மலைøயே! போகரின் வழியைப் பின்பற்றி எண்ணற்ற சித்தார்கள் இந்தப் பகுதியில் அவதரித்தனர். ஒட்டன்சத்திரம், கசவனம்பட்டி, மானூர், கணக்கம்பட்டி, திண்டுக்கல் என்று பழநியை ஒட்டிய ஊர்களில் வசித்த சித்தர்கள் எண்ணிக்கை சொல்லி மாளாது! ஒரு காலத்தில் இந்த ஊர்களில் தெருவிலும் சாக்கடையிலும் திரிந்த சித்தர்கள் அதிகம். இப்படி திண்டுக்கல்லில் குடி கொண்ட ஒரு சித்த புருஷரைத்தான் பார்க்கிவிருக்கிறோம்.
திண்டுக்கல் நகரையே தற்போது வாழ்வித்து வருபவர் எங்கள் சுவாமிதான் என்று கொண்டாடுகிறார்கள் இவரின் பக்தர்கள் திண்டுக்கல் மலைக் கோட்டையின் மேற்குப் புறமாக (கோட்டை மாரியம்மன் கோயிலுக்குப் பின்பக்கம்) ஜீவ சமாதி அடைந்து, தன்னை நம்பி வரும் பக்தர்களை இன்றளவும் காத்து அருள் புரிந்து வருகிறார் இந்த சுவாமிகள். யார் இந்த சுவாமிகள்? இவரது அவதாரம் எப்படி நிகழ்ந்தது? பெற்றோர் யார்? பூர்வாஸ்ரமம் என்ன? - இப்படிப் பல கேள்விகளுக்கு அடுத்தடுத்து விடை சொல்ல முடியாது என்றாலும். சுவாமிகளின் சரித்தரத்தில் இருந்து கிடைக்கப் பெறும் தகவல்களைப் பார்ப்போம்.
ஸ்ரீமத் ஓத சுவாமிகள் என்று பக்தர்களால் அழைக்கப்படும் இவரை சுப்பையா சுவாமிகள் என்றும் குறிப்பிடுகிறார்கள். சுவாமிகளுக்குப் பெற்றோர் இட்ட பெயர் - சுப்பிரமணியன். இவரது திரு அவதாரமே மிகவும் சிலிõர்க்க வைக்கும் ஒன்று. கி.பி. 1850-ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் திருவாதிரை நடசத்திரத்தில் தோன்றியவர் ஒத சுவாமிகள். ஆதிரை திருநட்சத்திரம் ஈசனின் ஜன்ம நட்சத்திரம் ஆயிற்றே? என்று சொல்ல தோன்றுகிறதா? ஆம்! காசியில் வாழும் ஸ்ரீவிஸ்வநாதரின் ஆசியோடும் அருட்கடாட்சத்தோடும் அவதரித்தவர்தான் ஒத சுவாமிகள்.
அது மட்டுமல்ல... சுவாமிகளின் அவதாரத்தைக் கண்டு ஆசி வழங்குவதற்கு மும்மூர்த்திகளும் அவர் ஜனித்த கிராமத்துக்கே வந்தார்கள் என்றால் பிரமிப்பாக இருக்கிறதா? பிரமிக்க வைக்கும் சுவாமிகளின் திரு அவதாரத்தைப் பார்ப்போம்.
பழநியில் இருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ள பாலசமுத்திரம் என்கிற கிராமத்தில் வாழ்ந்து வந்தது சுவாமிகளின் குடும்பம். ஒத சுவாமிகளின் தந்தையாரான பரமேஸ்வர ஐயர், இறை பக்தி மிக்கவர். ஒரு முறை வட மாநிலங்களுக்கு க்ஷேத்திராடனம் சென்றார். வாகன வசதி எல்லாம் இல்லாத அந்தக் காலத்தில் சுமார் ஏழு வருடங்கள் நீடித்தது இந்த யாத்திரை. அதாவது வீட்டை விட்டுக் கிளம்பி, ஏழு வருடங்களுக்குப் பிறகுதான் மீண்டும் வீடு திரும்பினார் பரமேஸ்வர ஐயர். அந்தக் காலத்தில் யாத்திரை என்றால் இப்படிதான் இருக்கும். யாத்திரை நிகழ்ந்த ஏழு வருடமும் கடுமையான விரதம். காய்ந்த சருகு மட்டுமே உணவு. எங்காவது நீர்நிலைகளில் ஒடுகின்ற தண்ணீரை மட்டுமே அருந்தவார். இப்படிக் கஷ்டப்பட்டுச் சென்று காசி விஸ்வநாதருக்குக் கங்கையின் நீர் கொண்டு அபிஷேகம் செய்து, ஆனந்தப்பட்டார் பரமேஸ்வர ஐயர். அந்த ஜோதிர்லிங்க சொரூபனின் சந்நிதியிலேயே ஆசிர்வாதமும் கிடைத்தது. பரமேஸ்வரா.... இந்தக் காசிவிஸ்வநாதனே உனக்கு மகனாக கூடிய சீக்கிரம் பிறக்கப் போகிறான், பார் என்று அங்கே ஒர் அசரீரி வாக்கு எழுந்தது. மனம் மகிழ்ந்தார் பரமேஸ்வர ஐயர்
அதன் பின் பூரி, திருப்பதி, ராமேஸ்வரம் முதலான க்ஷேத்திரங்களை தரிசனம் செய்து பாலசமுத்திரம் திரும்பினார் பரமேஸ்வரர். மகான் வழங்கிய ஆசி மனத் திரையில் ஒடிக் கொண்டே இருந்தது. தன் மனைவியிடம் அவ்வப்போது இதைச் சொல்லிப் பூரிப்பார். உத்தம மகன் பிறக்கப் போகும் நாளை அந்தப் பெற்றோர் ஆர்வாமுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். காலங்கள் ஒடின, காசி விஸ்வநாதரின் அருளால் மணி வயிறு வாய்க்கப் பெற்றார் பரமேஸ்வரரின் துணைவியார். பிரசவ காலமும் நெருங்கியது. பிரசவ வலி ரொம்பவும் வாட்டியது. எனவே, உள்ளூரில் இருந்த மருத்துவச்சியின் துணையோடு, வீட்டின் தனியான ஒர் அறையில் கிடத்தப்பட்டார் பரமேஸ்வரரின் துணைவியார். வீட்டுக்கு வெளியே தவிப்புடன் காணப்பட்டார். பரமேஸ்வரர். என்னதான் இறைவனின் ஆசியோடு மகன் பிறக்கப்போவதாகத் திருவாக்கு மலர்ந்திருந்தாலும், உள்ளே பெரும் அவஸ்தையுடன் மனைவியானவள் அலறிக்கொண்டிருக்கும்போது. கணவனுக்குத் தவிப்பில்லாமல் இருக்குமோ? ஒரு சில நிமிடங்கள் உருண்டோடின. உள்ளே எந்த விதமான அலறல் சத்தமும் இல்லை. மருத்துவச்சியின் ஆறுதல் குரலும் கேட்கவில்லை. மாறாக வேத ஒலி கனகம்பீரமாக, அட்சர சுத்தமாக கேட்டது. பிரசவ அறைக்குள் இருந்து வேத ஒலி எப்படி? வெளியே தவிப்புடன் நின்றிருந்த பரமேஸ்வர ஐயரும் அவரின் உறவினர்களும் பிரமித்தனர்.
மருத்துவச்சி வந்து தகவல் சொல்வாள் என்ற எதிர்பார்ப்புடன் வெளியே காத்திருந்த அனைவருக்கும் பிரமிப்புதாங்க முடியவில்லை. எனவே கதவை வேகமாகத் திறந்து உள்ளே நுழைந்தார்கள். அங்கே அவர்கள் கண்ட காட்சியில் நிலை குலைந்துபோனார்கள். பேசுவதற்கு வார்த்தைகள் எதுவும் எழவில்லை. பரமேஸ்வர ஐயரின் மனைவி அப்போது பிரசவத்திருந்த அந்த ஆண் சிசு புன்னகை ததும்பும் முகத்தோடு காணப்பட்டது.
கண்களில் அதீதமான ஒரு பிரகாசம் இழையோடியது. குழந்தையின் முகம் தவிர, உடல் முழுதும் ரோஜாப்பூக்களால் மறைக்கப்பட்டிருந்தது. தவிர, குழந்தையின் அருகிலும் ஆங்காங்கே ரோஜாப்பூக்கள் சிதறி இருந்தன. இதென்ன அதிசியம்? இந்த ரோஜாப்பூக்களை மருத்துவச்சி அணிவித்திருப்பாளோ? அப்படியென்றால் அவளுக்கு ஏது இத்தனை பூக்கள்? அதுவும் இந்தப் பூக்கள் சாதாரணமான ஒரு தோட்டத்தில் மலர்ந்தவையாகத் தெரியவில்லையே? தேவலோக நந்தவனத்தில் இருந்து பறித்துக் கொண்டுவந்தவை போல் பிரகாசிக்கின்றனவே! இதன் அலாதியான நறுமணம் ஊரையே கூட்டுகிறதே! இப்படி என்னென்னவோ யோசித்த பரமேஸ்வர ஐயரால் அதற்குமேல் அமைதியாக இருக்க முடியவில்லை. மருத்துவச்சியிடமே கேட்டார். தாயே... என்ன நடந்தது இங்கே? இந்த ரோஜாப்பூக்கள் எப்படி வந்தன?
முதலில் அவளுக்குப் பேச்சே வரவில்லை. பிறகு, மெள்ள ஆரம்பித்தாள்: என் கண்களால் நான் கண்ட இந்தச் சம்பவத்தை நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. தெய்வீக அம்சம் முகத்தில் ததும்பும் மூன்று பேர் பிரசவ காலத்தில் இங்கே தோன்றினார்கள். காண்பவரை மயக்கும் ஒரு வித பிரகாசம் அவர்களிடம் இருந்தது. ஒருவர் நெற்றியில் திருநீறும், இரண்டாமவர் திருமண்ணும், மூன்றாமவர் சந்தனமும் தரித்திருந்தனர். எனக்கோ வியப்பு கலந்த அதிர்ச்சி. பிரசவம் நடக்கின்ற இந்த அறைக்குள் ஆண்மக்களாகிய நீங்கள் வந்திருக்கிறீர்களே.....யார்?என்று கேட்டேன்.
முதலாமவர் கயையில் இருந்து வந்திருப்பதாகவும், இரண்டாமவர் காசியில் இருந்து வந்திருப்பதாகவும், மூன்றாமவர் பிரம்ம கபாலத்தில் இருந்து வந்திருந்ப்பதாகவும் சொன்னார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இப்போது நீங்கள் பார்க்கும் இந்த ரோஜாப்பூக்களும், வெளியில் இருந்தபோது ஒலித்த வேத ஒலியும் அவர்களுடைய செயல்களாகத் தான் இருக்கும் போலிருக்கிறது. அவர்கள் இந்த அறைக்குள் இருந்தபோது ஒரு வித மயக்கம் என்னை ஆட்கொண்டது. மருத்துவச்சி சொன்ன தகவலைக் கேட்ட பரமேஸ்வர ஐயர், வந்தவர்கள் யாராக இருக்கும் என்பதை யூகித்துக் கொண்டார். காசி விஸ்வநாத ரின் அருளோடு பிறந்த இந்தக் குழந்தையை ஆசிர்வதிக்க மும் மூர்த்திகளான சிவன், விஷ்ணு,பிரம்மா ஆகியோர் சேர்ந்து வந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து மெய் சிலிர்த்தார். அவருடைய கண்கள் கலங்கின. தனது வாரிசான அந்தச் சிசுவை - வருங்கால ஞானியை உச்சி முகர்ந்து தழுவினார். பிறகு, பூஜையறைக்குப் போய் கண்ணீர் மல்க இறைவனுக்கு நன்றி சொன்னார்.
அதே வேளையில் பழநி திருக்கோயிலில் பூஜையின்போது ஒலிக்கப்படும் பிரமாண்டமான மணியின் ஒசை கணீரெனக்கேட்டது. அதன் முழக்கம் ஒம்....ஒம் என்பதுபோல் இருந்தது பரமேஸ்வர ஐயருக்கு. இதையே ஒரு நல்ல அறிகுறியாக எடுத்துக் கொண்டு, குழந்தைக்கு முருகப் பெருமானின் திருநாமமான சுப்பிரமண்யன் என்பதையே சூட்டிவிட்டார். பரமேஸ்வர ஐயர்என்றாலும், பின்னாளில் சுப்பையா என்றே எல்லோராலும் அழைக்கப்பட்டார் சுவாமிகள். சுவாமிகளுடைய ஐந்தாவது வயதில் அவருக்கு உபநயனம் நடந்தது. சிறு வயதிலிருந்தே இறை இன்பத்தில் நாட்டம் அதிகம் கொண்டவராகத் திகழ்ந்தார். சுவாமிகள். ஒம் என்றும், ஆதிசங்கரா என்றும் சொல்லிக் கொண்டே இருப்பார். ஒரு கட்டத்தில் தந்தையார் மறைந்துவிட்டார். அதன் பின் காடு என்று சுற்றித் திரிய ஆரம்பித்தார். ஒரு முறை தன் தாயாரிடம், நீ என்னை எப்போது கூப்பிடுகிறாயோ அப்போது நான் வருகிறேன் எனக்கென்று சில பணிகள் இருக்கின்றன. என்று சொல்லி, அன்னையின் ஆசியுடன் வீட்டை விட்டு வெளியேறினார். தனது எட்டு வயதிலேயே அஷ்டமாஸித்திகளும் சுவாமிகளுக்குக் கைவரப் பெற்றதாகச் சொல்லவர். பாரத தேசத்தின் பல இடங்களில் ஒரே நேரத்தில் தோன்றி இருக்கிறார். அவரின் பக்தர்கள் இதை அபூர்வமாகப் பேசிக்கொள்வர்.
திண்டுக்கல் மலைக்கோட்டையின் மேற்குப் புறம் அடர்ந்த புதர்கள் மண்டி, ஒரே காடாக இருந்தது. இதைக் கடந்து உள்ளே நடந்தால், ஒரு சில குகைகள் உண்டு. ஜன நடமாட்டமே இல்லாத இந்த இடம் ஆரம்ப காலத்தில் சுவாமிகளின் தவத்துக்கு உதவியது. குகைக்கு மேலே இருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டே இருக்கும். சுவாமிகள் வெட்டிய ஒரு குளம் ஒன்றும், அய்யன் குளம் என்ற பெயரில் இன்று அழைக்கப்பட்டு வருகிறது. மலைப் பகுதிகளிலும், திண்டுக்கல் தெருக்களிலும் பித்தன் போல் திரிவார் சுவாமிகள். அடையாளம் தெரிந்தவர்கள் இவருடைய திருப்பாதங்களில் விழுந்து கும்பிடுவார்கள். விவரம் அறியாத ஜன்மங்கள் இவரைக் கேலி பேசியும் கற்களால் அடித்தும் துன்புறுத்தியது உண்டு. எல்லோரையும் ஆசிர்வதிப்பார் சுவாமிகள். எண்ணற்ற லீலைகளை சிறு வயதிலேயே நிகழ்த்திக் காண்பித்தார் சுவாமிகள். தெருவில் குடிநீர் எடுத்துக்கொண்டு போகும் ஒருவண்டியில் உள்ளே ஒட்டுமொத்த நீரையம் ஒரே மடக்கில் விறுவிறுவெனக் குடித்துவிடுவார். இதைப் பார்ப்பவர்கள் வாய் பிளந்து நிற்ப்பார்கள். அடுத்து, குடித்த நீர் மொத்தத்தையும் வெளியே துப்பி விடுவார். பகவான் ஸ்ரீரமண மகரிஷியைத் திருவண்ணாமலைக்கு அனுப்பி வைத்த பெருமை ஓத சுவாமிகளையே சாரும். ஸ்ரீரமணர் திருச்சுழியில் பிறந்தவர். தந்தையின் பணி மாறுதல் காரணமாக அவரது குடும்பம். திண்டுக்கல்லுக்கு இடம் பெயார்ந்தது. அபிராமி அம்மன் கோயில் அருகே ரமணரின் குடும்பம் வசித்துவந்தது. அப்போது நகராட்சி உயர்நிலைப்பள்ளியில்சேர்க்கப்பட்டார் ரமணர். துவக்கத்தில் ஒழுங்காகத்தான் பள்ளிக்குச் சென்றார்.
ஆனால், ஒரு முறை அவதூதராகத் தெருக்களில் வலம் வரும் ஒத சுவாமிகளைப் பார்த்த மாத்திரத்தில், ரமணர் மனத்துக்குள் ஏதோ ஒன்று பிசைய ஆரம்பித்தது. இவர் பின்னாலே செல் என்று அவருக்கு மூளை உத்தரவிட்டது. ஒத சுவாமிகள் செல்லும் இடமெல்லாம் அவர் பின்னால் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார். காடு மலை எங்கு சென்றாலும், அவரது நடவடிக்கைளையே கண் கொட்டாமல் பார்த்து வியப்பார் ரமணர். ஓரு கட்டத்தில் சிறுவனான ரமணரை அடையாளம் கண்டுகொண்ட ஓத சுவாமிகள், அவரை அருகே அழைத்தார். நீ திருவண்ணாமலைக்குச் செல்..... அங்கே உனக்கான பணி காத்துக்கொண்டிருக்கிறது. அண்ணாமலையார் உன்னை வரவேற்கக் காத்திருக்கிறார் என்றார் ஓத சுவாமிகள். அதன் பின்தான் ஒரு சந்தர்ப்பத்தில் வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு, புறப்பட்டார் ரமணர். சிருங்கேரி ஆச்சார்ய ஸ்வாமிகளே, நம் ஓத சுவாமிகளுக்கு முழுமரியாதை கொடுத்து, அழைத்துப் பேசிய விவரம் இன்னும் சுவாரஸ்யமானது. ஓத சுவாமிகள் என்கிற சுப்பையா சுவாமிகள் திண்டுக்கலில் அவதூதராக வீதி வீதியாகச் சுற்றிக்கொண்டிருந்த காலம்....எதாவது ஒரு தெருச் சாக்கடையில் சாஷ்டாங்கமாக அமர்ந்து அந்த நீரை ஆனந்தமாக அளைந்துகொண்டிருக்கும் சுவாமிகளைப் பார்க்கும் திண்டுக்கல் வாசிகள் அந்த இடத்திலேயே நமஸ்கரித்து அவரை வணங்குவார்கள். மகான்களைப் பொறுத்தவரை சாக்கடையும் ஒரு கங்கைதான். சாக்கடையையும் ஒரு கங்கையாகப் பார்க்க முடிந்தால்தான், அவர்கள் மகான்கள் ஆனார்கள்.
சுவாமிகளின் ஸித்துத் திறனை அப்போதே புரிந்துகொண்டு இவரிடம் வந்த ஆசி பெற்ற ஆன்மிகப் பெருமக்கள் அதிகம். இறை இன்பத்தை அனுபவிக்கும் வாய்ப்பே கிடைக்கப் பெறாத ஒரு சிலர், இந்தக் காட்சியைக் கண்டு அருவருப்புடன் மூக்கை பிடித்துக்கொண்டு நடப்பார்கள். அவர்களைப் பார்த்து சுவாமிகள் சிரிப்பார். இந்தக் காலக்கட்டத்தில்தான் சிருங்கேரி ஆச்சார்யாளும் ஓத சுவாமிகளும் சந்திக்கும்படியான ஒரு ஆன்மிக நிகழ்வு நடந்தது. சுவாமிகள் யார் என்பதை - அவரை பற்றி அறிந்திராதவர்களுக்கு - உலக்கு எடுத்துக்காட்டும் நிகழ்வாக அமைந்தது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் சிருங்கேரி ஆச்சார்யாளே இருந்தார்.என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது சிருங்கேரி ஸ்ரீமடத்தின் முப்பதிரண்டாவது பீடாதிபதியான ஜகத்குரு ஸ்ரீநரசிம்ம பாரதி சுவாமிகள் திண்டுக்கல்லுக் கு விஜயம் செய்திருந்தார். அபிராமி அம்மன் ஆலயத்தின் எதிரே இருக்கும் சாலையில் சிருங்கேரி மடம் இருந்தது. அங்கே முகாமிட்டிருந்தார் ஆச்சார்யர். சிருங்கேரி மடத்தின் மீது அபிமானம் கொண்ட எண்ணற்ற பக்தர்கள் அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்தும் வந்து திண்டுக்கல் மடத்தில் குவிந்திருந்தார்கள். ஆச்சார்யரின் தரிசனத்தில் திளைத்தார்கள். திண்டுக்கல் நகரில் வசித்துவரும் பக்தர்களுக்கு ஆசி வழங்க வேண்டும் என்பதற்காக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வலம் வந்து கொண்டிருந்தார்.
சிருங்கேரி ஆச்சார்யர், படடுப் பீதாம்பரம் தரித்து, சங்கர சொரூபமாக பல்லக்கில் அமர்ந்து தெருவாசிகளுக்கு ஆசி வழங்கிக்கொண்டே வந்துகொண்டிருந்தார். பல்லக்குக்கு முன்னால் மேளமும் தாளமும் வேத கோஷமும் அமர்க்களப்பட்டன. யானை, குதிரை , ஒட்டகம் போன்றவை சாலைகளில் அணிவகுத்துச் சென்றன. தங்கள் நகருக்கு வந்த ஸ்ரீசிருங்கேரி மகானை உற்சாகமாக வரவேற்கும் பொருட்டு, ஒவ்வொரு வீட்டு வாசலிலும் தெருவிலும் நீர் தெளித்து, மாக்கோலம் போட்டிருந்தனர் மக்கள். ஆச்சயார்ருக்கு சமர்ப்பிப்பதற்காக பழங்கள், புஷ்பங்கள் போன்றவற்றை வாங்கி வைத்திருந்து, தங்கள் வீட்டு வாசலுக்குஎப்போது வருவார் என்கிற எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். திரளான பக்தகோடிகள் பல்லக்கின் முன்னாலும் பின்னாலும் செல்ல... கோலாகலமான இந்த ஊர்வலம் பங்களாத் தெருவை எட்டியது. அந்தத் தெருவின் துவக்கத்தில் ஒரு சாக்கடை உண்டு. கன்னங்கரேலென்ற அந்தச் சாக்கடை நீரில் - எவரும் பார்த்தலே குமட்டிக் கொண்டு வரும் அந்த நீரில் - ஆனந்தமாக ஸ்நானம் செய்துகொண்டிருந்தார். ஒத சுவாமிகள். சிருங்கேரி ஆச்சார்யரின் ஊர்வலம், இந்த இடத்தைக் கடக்கும்போது அண்ணாந்து ஆச்சார்யரைப் பார்த்தார் ஒத சுவாமிகள். பிறகு ஒரு பெருமூச்செறிந்து, ஹும்... பல்லக்கு, பட்டுப் பீதாம்பரம் தெரு வழியே போகுது பார் என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டார்.
சிருங்கேரி ஆச்சார்யரான ஸ்ரீநரசிம்ம பாரதி சுவாமிகள் பெரும் கீர்த்தி வாய்ந்தவர். எண்ணற்ற ஸித்திகள் கைவரப் பெற்றவர். சுவாமிகளை நேருக்கு நேர் பார்க்கவில்லை என்றாலும், இந்த இடத்தில் இருந்து கொண்டு யாரோ தன்னை விமரிசிக்கிறாரே என்பதை ஞானத்தால் உணர்ந்த ஆச்சார்யர், சட்டென்று பல்லக்கை நிறுத்தச் சொன்னார். கீழே இறங்கினார். தெருவில் நடந்தார். வேதம் ஒதிக்கொண்டு வந்த பண்டிதர்களும், சிருங்கேரி மடத்தின் பக்தர்களான திண்டுக்கல்வாசிகளும் குழம்பினர். பல்லக்கை நிறுத்தச் சொல்லிவிட்டு, ஆச்சார்யர் அவ்வளவு அவசரமாக எங்கே செல்கிறார் என்கிற கவலையுடன் அவரைப் பின்தொடர ஆரம்பித்தனர். சாக்கடையில் அமர்ந்து ஸ்நானம் செய்துகொண்டிருந்த ஒத சுவாமிகளின் அருகே வந்தார் ஆச்சார்யர். ஒரு புன்னகை புரிந்தார். ஒத சுவாமிகளும் ஆச்சார்யரை நோக்கினார். சாக்கடையில் அமர்ந்திருந்த ஒத சுவாமிகளின் அருகே வந்து, அண்ணா... என்ன கோலம் இது! என்று ஆச்சரியமாகக் கேட்டார் சிருங்கேரி ஆச்சார்யர். ஓ....நரசிம்மனா...வா நரசிம்மா. வா வா என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். இதற்க்குள் அங்கு சூழ்ந்திருந்த வேத பண்டிதர்களும் உள்ளூர் பிரபலங்களும், சிருங்கேரி ஆச்சார்யரிடம் ஸ்வாமி....இவன் பித்துப்பிடித்தவன். இவனை ஒரு பொருட்டாக மதிக்காதீர்கள் ஸ்வாமீ..... இதே ஊரில் வெகு நாட்களாக இப்படித்தான் திரிந்து
கொண்டிருக்கிறான் இவனைப் பார்த்தாலே எல்லோருக்கும் குமட்டிக்கொண்டு வரும் என்று முகம் சுளித்துக்கொண்டே சொன்னார்கள்.
இப்படி சொன்னவர்கள் அனைவரையும் பார்த்து உத்தரவு போல் சிருங்கேரி ஆச்சார்யர் சொன்னார். அப்படி எல்லாம் சொல்லக்கூடாது. சுத்தமான தங்கத்தின் மேல் படிந்திருக்கிற மாசு போன்ற நிகழ்வு இது. சுவாமிகள் பரிசுத்தமானவர். எவரையோ சுத்தம் செய்வதற்காக அவர் இந்தச் சக்கடையில் இறங்கி ஸ்நானம் செய்துக்கொண்டிருக்கிறார். மாபெரும் சித்த புருஷர். இறை பக்தியில் இத்தகைய நிலையை அடைவது என்பது எவருக்கும் எளிதில் கைகூடாது. நானும் இது போன்ற நிலையை அல்லவா எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.... அதற்காகத்தானே இன்னமும் இருந்து வருகிறேன். சிருங்கேரி ஆச்சார்யரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட மாத்திரத்தில், அதுவரை சுவாமிகளிடம் ஏனோதானோ என்று இருந்து வந்த வேத பண்டிதர்களும் திண்டுக்கல்வாசிகளும் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டனர். இதோடு சிருங்கேரி ஆச்சார்யர் நிறுத்திக்கொள்ளவில்லை. தான் தங்கி இருந்த சங்கர மட முகாமுக்கு ஒத சுவாமிகளை சகல மரியாதைகளோடு அழைத்து வருமாறு உத்தரவிட்டார். அதன்படி மடத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்ட சுவாமிகளின் உடலில் இருந்து சந்தன மணம் அபாரமாக வீசியது. திருமேனியில் சாக்கடை நீரும் குப்பையும் அப்பியிருந்தாலும் உடலிலிருந்து நறுமணம் அல்லாவோ வீசுகிறது.... இவர் எப்பேர்ப்பட்ட மகானாக இருக்கவேண்டும் என்று வியந்து பலரும் ஒத சுவாமிகளின் திருவடிகளில் விழுந்தனர். ஒரு தனி அறையில் சிருங்கேரி ஆச்சார்யரும் ஒத சுவாமிகளும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர். அதன் பின் ஒத சுவாமிகளை வழியனுப்ப, சிருங்கேரி ஆச்சார்யரே வெளியே வந்துவிடைகொடுத்தாராம். வரேன் நரசிம்மா..... என்று சத்தமாகக் கூறியபடி ஒத சுவாமிகள் அங்கிருந்து கிளம்பினாராம்.
ஒரு மகானை இன்னொரு மகானே அறிய முடியும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் உதாரணம். குழந்தைகளுடன் விளையாடுவது என்றால், ஒத சுவாமிகளுக்குக் குதூகலம்தான்! அதுவும் குடிசைப் பகுதிகளுக்கு அடிக்கடி சென்று அங்குள்ள குழந்தைகளுடன் உற்சாகமாக விளையாடுவார். விளையாட்டுப்பொருட்களைக்காட்டி அவர்களை சந்தாஷப்படுத்துவார். ஒடியாடி விளையாடுவார்; குதித்துக் குதித்து விளையாடுவார். தெருவோரத்தில் குப்பைகளைக் கொட்ட வைத்திருக்கும் நகராட்சித் தொட்டியில், குப்பைகளுக்கு நடுவே உடலைக் குறுக்கிக்கொண்டு சம்மணமிட்டு அமர்ந்துவிடுவார் சுவாமிகள். பிறகு, அங்கு விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளை அழைத்து, தன் தலையில் நெருப்பு மூட்டச் சொல்வார். ஹே..... என்று ஆர்ப்பரிக்கும் குழந்தைகள் . சுவாமிகளின் தலையில் சிறிது காய்ந்த குப்பையை வைத்து, நெருப்பு மூட்டும். ஓம்.....ஓம் என்று சுவாமிகள் உச்சரித்துக்கொண்டே இருப்பார்.நெருப்புக்குள் சுவாமிகள் எங்கே இருக்கிறார் என்பதையே கண்டுபிடிக்க முடியாது. குழந்தைகள் எட்ட நின்றபடி தேடித் தேடிப் பார்க்கும். கொழுந்து விட்டு எரிந்த குப்பைகள் ஒரு கட்டத்தில் அணைந்து சாம்பலாகிவிடும். தொட்டியின் அருகே எவராவது சென்றால் அப்படித் தகிக்கும். அத்தகைய தொட்டிக்குள் இருந்து அநாயாசமாக எழுந்து வெளியே வருவார் சுவாமிகள். அவரது உடம்பில் தீப் பட்ட சுவடு கொஞ்சமும் இருக்காது. இது ஏதோ வேடிக்கை போலும் என்பதாக நினைத்துக் கைகொட்டிச் சிரிக்கும் அந்தக் குழந்தைகள்.
அதுபோல் குழந்தைகளுக்கு ஜுரம் போன்ற ஏதாவது வியாதி இருந்தால், சுவாமிகளே அவர்களது வீடுகளுக்குத் தேடிப் போவார். குழந்தையைப் பெற்ற தாயும், சுவாமிகளைப் பார்த்து, எம் புள்ள குணாமாகணும் சாமீ என்று கைகூப்பி வேண்டுவார். குழந்தையை வாங்கி ஓரிரு விநாடிகளுக்கு சுவாமிகள் கொஞ்சுவார். என்னே ஆச்சரியம்.... அடுத்த சில நிமிடங்களில் குழந்தைக்கு இருந்த வியாதி பஞ்சாய்ப் பறந்தோடிப் போய்விடும். திண்டுக்கலில் சௌராஷ்டிர பிராமணர் ஒருவர் வசித்து வந்தார். திருமணாகி, குழந்தையே இல்லை. சுவாமிகளின் மேல் கொள்ளைப்பிரியம். தீவிரமான பக்தர். சுவாமிகளை தரிசிக்கவில்லை என்றால் அவருக்கு உணவு செல்லாது; தூக்கம் வராது. தங்கள் வீட்டில் மழலை ஒலி கேட்க, குழந்தை வரம் வேண்டி, சுவாமிகளை அவ்வப்போது பிரார்த்தனை செய்வார். விதியின் போக்கை யார் அறிவார்? பூர்வ வினைகளின் காரணமாகக் காச நோய் அந்த சௌராஷ்டிர பிராமணரைத் திடீரெனப்பற்றிக்கொண்டது. குடும்பத்தினர் அதிர்ந்து விட்டனர். மருத்துவ சிகிச்சை மேற்கொண்டனர். ஒரு டாக்டரது சிகிச்சை பலன் தரவில்லை என்றால் இன்னொரு டாக்டரைப் பார்த்தனர். ஆனாலும், சிகிச்சையினால் எந்தப் பலனும் விளையவில்லை. ஒரு கட்டத்தில் அனுபவித்தில் முதிர்ந்த டாக்டர்களே, இது தீர்க்க முடியாத வியாதி, உயிர் பிழைப்பதே சிரமம். இருக்கும்வரை அவர் சந்தோஷமாக இருக்குட்டும். வீட்டுக்கு அழைத்துச் சொல்லுங்கள் என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்கள்.
திக்கற்றவருக்கு தெய்வமே துணை.... மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் மகானே துணை! அந்த சௌராஷ்டிர பிராமணர், ஒத சுவாமிகள் இருந்து வரும் குகைக் கோயிலுக்குப் போய் வழிபட ஆரம்பித்தார். தினமும் மனமுருகப் பிரார்த்திப்பார். இப்படித்தொடர்ந்து ஒரு மண்லம் வழிபட்டார். ஆனாலும், பிராமணரின் உடல்நிலையில் எந்த வித முன்னேற்றமும் இல்லை, ஒரு நாள் மனம் வெறுத்துப்போனார். சுவாமிகளை வழிபட்டும் உடல் நிலை தேறவில்லை என்றால், இந்த உடல் இருந்து என்ன பயன்? என்று தீர்மானித்தவர் அந்தக் கோயிலேயே தன் உயிரை விட முடிவெடுத்தார். அன்றைய தினம் நள்ளிரவு வேளையில் தன்னை மாய்த்துக் கொள்வதாக இருந்தார். பிராமணர். மனைவியைப் பிரிகிறோமே
என்கிற வேதனையும் இல்லாமல், தன் உயிரைப் போக்கிக் கொள்வதற்கு ஒரு நேரம் பார்த்துக் காத்திருந்தார். குகைக் கோயிலின் ஏதோ ஒரு மூலையில் சுவாமிகள் ஆழ்ந்த நிஷ்டையில் இருந்தார். மனமுருக அவரைப் பிராத்தித்துக்கொண்டார். மற்றப்படி வேறு எவரும் அங்கே இல்லை. தன் பக்தன் ஒருவன் , இப்படி உயிரை மாய்த்துக்கொள்ள ஒத சுவாமிகள் விரும்புவாரா? சித்து வேலைகளைத் துவக்கினார். அந்த நள்ளிரவு வேளையில் பிராமணரின் வீட்டுக்குப் போனார். கதவைத் தட்டினார். மனைவிதான் கதவைத் திறந்தார். (கணவர்தான் உயிரைப் போக்கிக்கொள்வதற்காக இங்கே குகைக் கோயிலில் அமர்ந்திருக்கிறாரே!). அகால வேளையில் சுவாமிகளைப் பார்த்தும் பதறிப் போனார் மனைவி. பிறகு, தோபாரம்மா .... உம் புருஷன் அங்கே உக்கார்ந்து என் நிஷ்டையைக் கெடுத்துக்கொட்டிருக்கான். அவனை அந்த இடத்துக்கு இனிமே வரச் சொல்லாதே. அவனுக்கு ஒரு வியாதியும் இல்லை. தேவை இல்லாம மனசைப் போட்டுக் குழப்பிக்கறான். கூடிய சீக்கரமே உங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கப் போகுது. உடனே கௌம்பிப் போய், அவனை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துடு. அதுதான் நல்லது என்று சொல்லி, மனைவியையும் ஆசிர்வதித்து மறைந்தார்.
அடுத்து என்ன நடந்தது போன்ற சுவாரஸ்யமான செய்திகளை அடுத்த பதிவில் காண்போம்.
மீள்பதிவாக:-
திருவெண்காடர் உணர்த்தும் வாழ்வியல் நீதி - பட்டினத்தார் குருபூசை 13.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/13082019.html
TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html
எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html
சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html
சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html
சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html
சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html
சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html
நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html
ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html
உயிர்நிலை கோயில்களின் அருளை உள்வாங்குங்கள்! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post.html
கருணைக் கடலே... கண்ணப்ப சுவாமிகளே போற்றி !! - குருபூசை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_1.html
ஊழ்வினை போக்கும் TUT உழவாரப் பணி அறிவிப்பு & ஒரு நாள் ஆன்மிக யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/09/tut_93.html
பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3) - https://tut-temples.blogspot.com/2019/09/3.html
பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2) - https://tut-temples.blogspot.com/2019/09/2.html
சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_92.html
தீராத நோய்களைத் தீர்க்கும் திருமகன் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் - குரு பூஜை அழைப்பிதழ் - 07.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/07032020.html
நினைத்ததை
நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் -
04.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/04032020.html
களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html
நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html
சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html
குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html
சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html
அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html
No comments:
Post a Comment