அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இன்று அக்டோபர் 5 ஆம் தேதி.. வள்ளலார் வருவிக்கவுற்ற தினம் இன்று. வள்ளலார் வருகையால் மடம் சங்கமானது. சத்திரம் சாலையானது. கோவில் சபையானது.இன்று தமிழகம் முழுதும் வள்ளலார் வருவிக்கவுற்ற தினம் சார்பில் பல இடங்களில் அன்னசேவை, அகவல் பாராயணம் என பல்வேறு வகைகளில் கொண்டாட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. வள்ளலார் வாழும் சித்தர் ஆவார். மரணத்தை வென்ற மாபெரும் மகான் ஆவார். வாடியப்பயிரை கண்டபோதெல்லாம் வாடியவர். அன்னசேவையை அணையா அடுப்பு மூலம் ஆரம்பித்து வைத்தவர். எட்டும் இரண்டும் பற்றி பேசியவர். பெயருக்கு ஏற்றார் போல் வள்ளலாக நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பவர். ஆன்மிகத்திற்கும் மட்டும் அல்ல..அறத்திற்கும் வள்ளல். ஆன்மிகமே அன்னதானத்தில் தான் அடங்கி இருக்கின்றது, ஒரு வேளை வயிற்றிற்கு சோறிடாது என்ன தான் ஆன்மிகம், அறம் என்று உபதேசித்தாலும் அது விழலுக்கு இறைத்த நீர் தான். வள்ளலார் என்று சொன்னாலே அன்னதானம் தான் நம் கண் முன் நிற்கின்றது. எத்துணை எத்துணை சான்றோர் பெருமக்கள் இன்றும் அந்த அறப்பணியை செய்து கொண்டிருக்கின்றார்கள். வள்ளலாரும் அவர் தம் மார்க்கமும் பற்றி பேசுவது பெருங்கடலில் சென்று ஒரே ஒரு நீர்த்துளியை எடுத்து பருகுவது போன்றதாகும்.
சென்ற புரட்டாசி மாத மகாளய பட்ச அன்னசேவை கூடுவாஞ்சேரி வள்ளலார் சபையில் நடைபெற்றது. அப்போது சபை பெரியோர்கள் அக்டோபர் 5 ஆம் தேதி வள்ளலார் வருவிக்கவுற்ற தினம் அன்னசேவை செய்ய கூறினார்கள். நாம் இதனை கட்டளையாகவே ஏற்றுக் கொண்டு அன்றே சிறு முன்தொகையாக ரூ.500 கொடுத்துவிட்டு வந்தோம். இது நாம் வழக்கமாக செய்யும் அன்னசேவை போல் தான் இருக்கின்றது. எனவே இனிப்பு, உளுந்த வடை சேர்த்து பிரிஞ்சி சாதம் இன்றைய அன்னசேவையில் சேர்த்தோம்.
இருப்பினும் மனதில் ஒரு நிறைவு நமக்கு ஏற்படவில்லை. அப்போது தான் பெங்களூரிலிருந்து நம் அன்பர் அன்னசேவைக்கு தேவையான அரிசி,பருப்பு, மளிகை பொருட்கள் வாங்கித் தரும்படி கூறினார்கள். அட..இது நமக்கு தோன்றாமல் போய் விட்டதே என்று கருதினோம். உடனே இதனையும் ஏற்பாடு செய்தோம். மேலும் அலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கேற்ற இலுப்பெண்ணெய் உள்ளதா என்று கேட்ட போது இரண்டு லிட்டர் உள்ளது என்று கூறினார்கள். எனவே இலுப்பெண்ணை 15 கிலோ கொண்ட ஒரு டின் வாங்கி தரலாம் என்று தீர்மானித்தோம்.
இதோ..அனைத்தும் குருவருளால் நிறைவேறியது.
பொருளுதவி செய்த அனைவருக்கும் நன்றி கூறி, இப்பதிவை நிறைவு செய்ய விரும்புகின்றோம். சென்ற ஆண்டில் இதே நாள் அக்டோபர் 5 ஆம் தேதியை நாம் ஒன்றும் செய்யாமல் கடந்தோம். ஆனால் இந்த 2020 ஆம் ஆண்டில் குருவருளால் நம்மால் முடிந்த அளவில் சுமார் 100 அன்பர்களுக்கு சிறப்பான முறையில் அன்னதானம், ஒரு நாள் அன்னதானம் செய்ய தேவையான அரிசி,பருப்புடன் மளிகை பொருட்கள், தீபமேற்ற இலுப்பெண்ணை கொடுத்துள்ளோம் என்றால் அனைத்தும் குருமார்களின் வழிகாட்டல் தான் என்பதை மீண்டும் இங்கே நாம் உணர்கின்றோம்.
No comments:
Post a Comment