அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
நாம் ஸ்ரீ அகத்தியர் வழிபாட்டில் இணைந்த பிறகு, சித்தன் அருள் வாசிக்க தொடங்கினோம். இந்த வாசிப்பு நம்மை அகத்தியத்தை நோக்கி நம்மை நேசிக்க செய்தது. சித்தன் அருள் வழங்கி வரும் அந்தநாள் >> இந்த வருடம் தொகுப்பில் சில கோயில்களுக்கு சென்று வர தொடங்கினோம்.சித்தன் அருள் வழங்கி வரும் அந்தநாள் >> இந்த வருடம் தொகுப்பு நம்மை பொறுத்த வரை ஜீவ நாடி அற்புதங்களே ஆகும்.
இந்த அந்தநாள் >> இந்த வருடம் தொகுப்பின் மூலம் நாம் ஓதிமலை, பாபநாசம் ஸ்நானம், அகத்தியர் மார்கழி குரு பூசை, கோடகநல்லூர் தரிசனம் என தொடர்ந்து வருகின்றோம். இதில் நம்பிமலை தரிசனம் இன்னும் நாம் பெறாது இருந்தோம். அப்போது தான் சென்ற ஆண்டில் அந்தநாள் >> இந்த வருடம் தொகுப்பில் பின்வரும் செய்தி கிடைத்தது.
கோடகநல்லூர்:- (எல்லா தெய்வங்களும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள். தாமிர பரணியின் பெருமையை அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள். அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள் அருளுகிற நாள்)
10/11/2019 - ஞாயிற்று கிழமை - ஐப்பசி மாதம் சுக்லபக்ஷ த்ரயோதசி திதி - ரேவதி நட்சத்திரம்.
சரி. நம் TUT அன்பர்களோடு இரண்டு நாள் யாத்திரையாக கோடகநல்லூர் யாத்திரை மேற்கொள்ள வேண்டி குருவிடம் விண்ணப்பம் வைத்தோம். இதோ. நாம் சென்ற ஆண்டில் சென்று தரிசனம் செய்த கோடகநல்லூர் யாத்திரை அனுபவத்தை இங்கே தொடர்கின்றோம்.
இதற்கு முந்தைய தொகுப்பில் நம்பிமலை தரிசனம் பற்றி பேசி இருந்தோம். மீண்டும் அங்கிருந்து பதிவை தொடர்கின்றோம்.
நம்பிமலை தரிசனம் பெற்று கீழே திருக்குறுங்குடி வந்து சேர்ந்தோம். அங்கே மதிய உணவு உண்டோம். நாம் சென்ற நேரம் பகல் பொழுது என்பதால் திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் தரிசனம் பெற இயலவில்லை. வெளியே இருந்து பார்க்கும் போதே மனம் எப்போது தரிசனம் பெறுவோம் ஏங்கியது. தரிசனம் பெற இயலாவிட்டாலும் அந்த திவ்ய தேசத்தில் நம் மனம் பட்டது கண்டு மகிழ்ந்தோம்.
ராஹ புராணம் மற்றும் கைசிக புராணத்தில் இத்திருத்தலத்தைப் பற்றியக் குறிப்புகள் காணப்படுகின்றன. வராஹ புராணத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணு வராஹ வடிவத்தில் ஸ்ரீ லட்சுமி தாயாருடன் தங்கியிருந்து சிறிய குடிகை என்று பொருள்படும் இடமாதலால் குறுங்குடி எனப் பெயர் பெற்றது எனவும், வராஹ அவதாரத்தில் மிகப் பெரிய வடிவத்தில் இருந்த ஸ்ரீ மகாவிஷ்ணு, வடிவில் குறுகிய இடம் என்பதால் குறுங்குடி என்றும் இத்திருத்தலம் பெயர் பெற்றதாகப் புராணச் செய்திகள் தெரிவிக்கின்றன.
‘நம்பாடுவான்’ என்கிற பாணர் குலத்தைச் சேர்ந்த தீவிர விஷ்ணு பக்தர் திருக்குறுங்குடி இடத்தை அடுத்த மகேந்திரகிரி மலையிலே வாழ்ந்து வந்தார். அவர் யாழ் வாசிப்பதில் வல்லவர். அவர் கார்த்திகை மாதம் சுக்லபட்ச ஏகாதசி அன்று விரதம் இருந்து இத்தலத்துறையும் இறைவனை தரிசிக்க வருகிறார். வழியிலே பசியோடு இருந்த பிரம்ம ராட்சசன் ஒருவன் நம்பாடுவானை பிடித்துக் கொண்டு அவரை புசிக்கப் போவதாக கூறுகிறான். நம்பாடுவான் நம்பியை தரிசித்து விட்டு வந்து பிரம்ம ராட்சசனுக்கு இறையாவதாக சொல்லி அவரிடமிருந்து விடை பெற்று வந்து, கோயிலின் வாயிலில் நின்று, நம்பியை தரிசிக்க முயலுகிற போது கோயிலின் கொடிமரம் நம்பியை மறைத்தது.
ஆயினும் பக்தி சிரத்தையோடு நம்பாடுவான் பாடி வேண்ட. நம்பியும் நம்பாடுவானுக்கு மறைக்காமல் இருக்க கொடிமரத்தை நகரச் சொல்லுகிறார். அதன்படியே அதுவும் நகர்ந்து நம்பியை நம்பாடுவான் தரிசிக்க வகை செய்தது. இதனால் நம்பியைத் தரிசித்த நம்பாடுவான், மகிழ்ச்சியாக பிரம்ம ராட்சசனுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் காட்டை நோக்கி நடந்தார். அப்போது வயதானவர் தோற்றத்தில் அங்கே வந்த இறைவன், நம்பாடுவானை தடுத்து நிறுத்தி, அந்தக் காட்டில் ஒரு பிரம்ம ராட்சசன் வாழ்வதாகவும், அவன் அவ்வழியே செல்வோரை தின்று விடுவதாகவும் கூறினார்.
நம்பாடுவான் அவரிடம் முன்பு பிரம்ம ராட்சசனுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியைக் கூறி அதை நிறைவேற்றவே தான் அந்தக் காட்டுக்குள் செல்வதாகக் கூறினார். ராட்சசனைத் தேடி காட்டுக்குள் அலைந்த நம்பாடுவான் ஓரிடத்தில் ராட்சசனைக் கண்டு “ தான் நம்பியை தரிசித்து தனது விரதத்தை முடித்து விட்டதாகவும், இப்போது தன்னை இரையாக்கிக் கொள்ளலாம்” என்றும் கூறினார்.
ஆனால் பிரம்ம ராட்சசன் தன்னுடைய பசி அடங்கி விட்டதாகக் கூறி நம்பாடுவானை உண்ண மறுத்து விட்டான். அப்போது நம்பாடுவான் நம்பியைப் பாடி பரிசில் பெற்ற பாதி பழத்தை பிரம்ம ராட்சசனுக்குக் கொடுக்க, அதை உண்ட பிரம்ம ராட்சசன், சாபத்தால் தான் பெற்ற பிரம்ம ராட்சச வடிவிலிருந்து விமோசனம் பெற்றுத், தன் முற்பிறவு வடிவத்தைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.திருக்குறுங்குடி நம்பியை நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
தனிச்சிறப்பு
இத்தலத்திற்கு மன்னன் ஒருவன் தரிசனம் செய்ய வந்த போது “கருடன் பறக்கும் இடத்திற்கு கீழே பூமியை தோண்டினால், ஸ்ரீ தெய்வநாயகன் மற்றும் ஸ்ரீவரமங்கை ஆகியோரின் புதைந்துள்ள சிலைகள் கிடைக்கும்” என்ற அசரீரி கேட்டான், அசரீரியின்படி அந்த இடத்தை தோண்ட அந்த தெய்வ ரூபங்களை கிடைக்கப் பெற்றான். அவற்றை நாங்குனேரி வானமாமலை திருக்கோயிலில் அம்மன்னன் பிரதிஷ்டை செய்ததாக செய்தி உலவுகிறது.
பெரிய பெரிய சிவாலயங்களில் விஷ்ணு இடம் பிடித்திருப்பதைப் போல, இத்திருக்கோயிலில் சிவனுக்கென்று தனிச் சந்நிதி உள்ளது. இங்கே எழுந்தருளியிருக்கும் சிவபிரானுக்கு ‘மகேந்திரகிரி நாதர்’ என்றும் ‘ பக்கம் நின்ற பிரான்’ என்றும் பெயர்..
இந்த கோவிலில் தினசரி விஸ்வரூபம், காலசந்தி, உச்சி கால பூஜை. சாயரட்சை, அத்தாழம், அர்த்தசாமம் ஆகிய பூஜைகள் நடந்து வருகிறது. ஆண்டு தோறும் பங்குனி பிரம்மோற்சவம் கார்த்திகை மாதம் கைசிகஏகாதசி திருவிழாக்கள் நடந்து புரட்டாசி நவராத்திரி விழாவும் இங்கு பிரசித்திப் பெற்றது ஆகும். விழாவின் போது தினசரி பெருமாளுக்கு திருமஞ்சனம் நடத்தப்படும். திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு கருட சேவை நடத்தப்படுகிறது. அன்றைய தினங்களில் காலை, மதியம் 2 நேரங்களிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும், பகலில் நம்பி சுவாமிகளுக்கு திருமஞசனமும், இரவில் கருட சேவை உற்சவமும் இடம்பெறும்.
ஒருமுறை, ராமானுஜர் தனது பிரதம சீடனுடன் திருவனந்தபுரம் சென்று அனந்தபத்மநாபரை தரிசித்தார். அங்கும் வைணவ சம்பிரதாய பூஜை முறையை நடைமுறைப்படுத்த நினைத்தார். அதற்காக அங்கேயே தங்கினார். அவரது செயல்முறைகளையறிந்த அங்கே பூஜை கைங்கர்யத்தில் ஈடுபட்டவர்கள், தங்கள் பாரம்பரியமான பூஜைமுறைகளை மாற்றாமலிருக்கும்படி பெருமாளிடம் வேண்டினார்கள்.
அவர்களுக்கு இரங்கினார் பெருமாள். அன்றிரவு ராமானுஜர் தன் சீடருடன் மண்டபத்தில் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது பெருமாள், கருடனை அழைத்து ராமானுஜரின் உறக்கம் கலையாமல் தூக்கிச் சென்று திருக்குறுங்குடியில் விடச்சொன்னார். அப்படியே செய்தார் கருடாழ்வார்!
விடிந்தது. விழித்துப் பார்த்தார். திருக்குறுங்குடி தலத்தில் இருப்பதை அறிந்தார். எல்லாம் பகவான் செயல் என்று பெருமாளை வணங்கினார். தன்னுடன் படுத்துறங்கிய சீடன் வடுக நம்பியும் அங்குதான் இருப்பான் என்றெண்ணிய ராமானுஜர்க வடுகநம்பியை அழைத்தார்.
அப்போது, திருக்குறுங்குடி அழகியநம்பி பெருமாள், சீடர் உருவத்தில் வந்து ராமானுஜர் முன் கைகூட்டிப் பணிந்து நின்றார். நாட்கள் நகர்ந்தன.
ஒருநாள் ராமானுஜர் நீராடி வந்தபின் வழக்கம்போல் சீடனுக்கு திருநாமம் இட்டு, அவன் முகத்தைப் பார்த்து, ‘‘நம்பி உன்முகம் தெய்வாம்சம் பொருந்தித் திகழ்கிறது. உன்னில் நான் பெருமாளையே காண்கிறேன். இன்று நான் உனக்கிட்ட திருநாமம் மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது என்றார். பின்னர், கூடையிலிருந்த மலரையெடுத்து வடுகநம்பியின் காதுகளில் வைத்தார். ‘‘நம்பி, இப்போது உன் அழகு கூடிவிட்டது’’ என்று மகிழ்ந்தார்.
இருவரும் கோயிலுக்குப் புறப்பட்டார்கள். கொடிமரம் அருகே சென்ற போது, வடுகநம்பி மாயமானார். மூலஸ்தானம் சென்ற ராமானுஜர் அழகிய நம்பி பெருமாள் நெற்றியில், வடுக நம்பிக்கு தானிட்ட திருநாமமும், காதுகளில் வைத்த பூவும் அழகாகத் திகழ்வதைக் கண்டார். அப்போதுதான் தன் சீடன் வடுகநம்பியாக வந்தது பெருமாளே என அறிந்து சிலிர்த்தார்.
குரு சிஷ்ய பாரம்பரியம் உலகில் பரவ வேண்டும் என சீடனாக வந்தேன் என்றார் திருமால். ராமானுஜரை கருடன் திருவனந்தபுரத்திலிருந்து தூக்கிவந்து கிடத்திய பாறை திருப்பரிவட்டப்பாறை என்று போற்றப்படுகிறது. திருக்குறுங்குடி கோயிலிலிருந்து 12 கி.மீ. தூரத்தில் இந்தப் பாறை உள்ளது. தகுந்த குருவைத்தேடி அலையும் அன்பர்கள் இங்குவந்து ராமானுஜரை தரிசித்தால் குருவின் திருவருள் கிட்டும் என்பது ஐதீகம்.
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 38 - மூன்றாம் நாள் அர்த்தஜாம பூசை - அனைவரின் தரிசனம்! - https://tut-temples.blogspot.com/2020/09/38.html
No comments:
Post a Comment