அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். நம் தளத்திற்கு முருகன் அருள் முன்னின்று நடத்துவதால் தான், நாம் செய்யும் அனைத்து சேவைகளும் அற்புதமாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நிகழ்விலும் நாம் நெக்குருகி போகின்றோம். ஆப்பூர் பெருமாள் கோயில் சென்று உழவாரப் பணி செய்ய அருள் கிடைத்ததை பார்த்தோம். ஒரு அண்மைக்கால அற்புதக் கோயில் பற்றி ஜீவ நாடி அற்புதங்கள் பகுதியில் பார்த்தோம். நம் குருநாதர் அகத்தியரின் அருளாசியினால் லிகித ஜெபம் பற்றி கண்டோம். இது ஒரு துளி மட்டுமே. காரைக்குடி அகத்தியர் திருமகன் ஐயா அவர்களின் சந்திப்பு, மதுரை பரமசிவன் ஐயா அவர்களின் சந்திப்பும் நமக்கு ஜீவ நாடி அற்புதங்களே. மதுரை பரமசிவன் ஐயா அவர்களின் தொண்டிற்கு நாம் தலை வணங்குகின்றோம். மதுரை இறையருள் மன்றத்தின் சேவையும் பாராட்டுக்குரியது. சில பதிவுகளுக்கு முன்னர் பதிவில் ஜீவ நாடி என்றால் என்ன என்று பார்த்தோம். அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி கேட்டு பதிவு சமர்பித்தோம். மேலும் இரு அன்பர்களின் ஜீவ நாடி அற்புதங்களைப் பார்த்தோம்.
ஜீவநாடி பல உண்மைகளைப் புலப்படுத்தி வைத்துவிடும். ஆனால் எதை எங்கு பயன்படுத்த வேண்டுமோ அங்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.இடம், பொருள், ஏவல் அறிந்து குறிப்பறிந்து வெளியிட வேண்டும்.சித்தர்கள் பலர் சூட்சுமமாக ஜீவ நாடியில் அருள்வாக்கு சொல்லுவதால் அவர்கள் சம்பந்தமாக ஏற்படும் சகுனங்கள், நிமித்தங்களைக் கவனித்தால் 100% துல்லிய பலன்களைச் சொல்ல முடியும்.
ஜீவ நாடியும் ஜோதிடத்தை விட்டு விலகி எதையும் சொல்வதில்லை.மனிதனின் ஜாதக ரீதியாகவே பலன்களைச் சொல்லும் சித்தர்கள் சொல்வதால் கிரகங்களின் தாக்கங்களிலிருந்து தப்பிக்கின்ற வழிமுறைகளை ஏராளமாகச் சொல்வார்கள். பொதுவாக ஆலய வழிபாடுகளையே பரிகாரமாகச் சொல்வார்கள். ஒரு சில நேரங்களில் சில மூலிகைகளைப் பற்றியும் அதைப் பயன்படுத்தும் வித்தையும் சொல்வார்கள். சில நேரங்கள் யந்திரங்கள் பற்றியும், மந்திர ஜபம் பற்றியும் சொல்வார்கள்.
நமது ஞானஸ்கந்த ஜீவ நாடியின் மணி மகுடமாக நாங்கள் கருதுவது உபாசனை மார்க்கம். நெற்றியில் அடித்த்து போல் வருகின்ற உபாசனை முறைகள் உறுதியான பலன்களைத் தந்து உயர் வாழ்வை பலருக்கு தந்து கொண்டிருக்கிறது. இன்னும் பல சூட்சும இரகசியங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
ஜீவ நாடியைப் பற்றி எழுத ஆரம்பித்த உடனே பல்வேறு ஆன்மிக அருளாளர்களின் தொடர்பு கிடைத்தது. ஆசியில்லாமல் எந்த ஒரு காரியத்திலும் வெற்றிகள் கிடைப்பது சற்றுக் கடினம். ஒரு பல் மருத்துவர் ஒருவர் எம்மைத் தொடர்ந்து ஜீவநாடி படியுங்கள் எனது பிரச்சினைகளுக்கு
தீர்வு தாருங்கள் என்று சுமார் ஆறு மாதங்களாகக் கேட்டுக் கொண்டே இருந்தார். அவரை நான் முன் பின் பார்த்தது கிடையாது. தொலைபேசியில் பேசியிருக்கிறேன் அவ்வளவுதான். ஆனால் நாடியில் பலன் உரைக்க அவருக்கு ப்ராப்தம் கிடைக்கவேயில்லை. அவரும் விடாமல் முயற்சி செய்து வந்தார். தொடர்பு கொள்வோர் அனைவருக்கும் நான் நாடி படிப்பதில்லை.
எமக்கு பணம் நோக்கமே கிடையாது என்பதை அனைவரும் அறிவார்கள். பண பலத்தால் நாடியில் பலனை வாங்கிவிட முடியவே முடியாது. பக்தியால் மட்டுமே பலன் வரும்.எவர் ஒருவர் பக்தி மார்க்கத்திலும் சித்தர்கள் தேடலிலும், ஆன்மிக தாகத்திலும் இருக்கிறார்களோ அவருக்கு 100% துல்லியமாக நெற்றிப் பொட்டில் அடித்தால் போல் பலன் நாடியில் அருள்வாக்காக வருகிறது. அதேபோல் விரைவில் பலன் தரவும் செய்கிறது. எனவே இறைவனது உத்தரவு இல்லாமல் என்னால் பலன் சொல்ல முடியாது. அது வியாபாரமாகப் போய்விடும். ஜீவநாடியை வியாபார நோக்கில் படித்தால் சித்தர்களது சாபத்திற்கு ஆளாக நேரிடும். அதேபோல் சுயநலத்திற்காகவும் இதைப் பயன்படுத்தக் கூடாது. மொத்தத்தில் ஜீவநாடி ஒரு தெய்வீக சுகானுபவம். தெய்வத்தோடும், தேவதைகளோடும், சித்தர்களோடும் உரையாடும் ஒரு கலை இது. இதைத்தான் அந்த பல் மருத்துவரிடமும் சொல்லி வந்தேன். அவரும் புரிந்துக் கொண்டு உரிய நாள் வரட்டும் எனக் காத்திருந்தார்.
சேலத்தில் மிகப் புகழ் பெற்ற, சித்தர்களோடு தொடர்புடைய ஒரு சிறந்த ஸ்தலம் ஊத்துமலை முருகன் கோவில் அங்கே இருக்கின்ற முருகன் பேசும் தெய்வம். அடிக்கடி அங்கு செல்வேன். அதேபோல் அந்த மலையில் ஒரு குகையும் உண்டு. அந்த குகைக்கு அருகிலே அகத்தியர் பிரதிஷ்டை செய்த 44 முக்கோணங்களை கல்லினால் செதுக்கி வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ சக்கரம் உண்டு. அதனது ஆற்றல்களை அளவிட்டுக் கூற இயலாது.
பொதிகை மலை சென்று அகத்தியரைப் பார்க்க முடியாதவர்கள் இந்த ஊத்துமலை குகையில் தியானம் செய்து ஸ்ரீ சக்கரத்தை வழிபட்டால் அகத்தியர் தரிசனம் தருவார். அடியேனுக்கு அப்படித்தான் அகத்தியர்
தரிசனம் கிட்டியது.
அதுமட்டுமல்லாமல் அகத்தியர் பூஜித்த லிங்கம் ஒன்றும் அந்த மலையில் உண்டு. அகத்தியர் மட்டுமில்லாமல் சுகர் மகரிஷிக்கும் இந்த மலைக்கும் நிறைய தொடர்பு உண்டு. ஒரு முறை ஊத்துமலை சென்று குகையில் ஒரு நாள் முழுவதும் தங்கி ஜபம் செய்துவிட்டு வெளியே வந்து அகத்தீஸ்வர சுவாமியை தரிசனம் செய்யும் வேளையில் ஐயா என்றது ஒரு குரல். திரும்பிப் பார்த்தேன் ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார்.
ஐயா தாங்கள் தானே ஜீவ நாடி படிப்பவர், ஸ்கந்த உபாசகர் என்றார். ஆம் என்றேன். ஐயா நான் கடந்த ஆறுமாதமாக முயற்சி செய்தும் தங்களை வந்து சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் தான் ஐயா அந்த பல் மருத்துவர் என்றார். அட, ஆமாம் என்று நானும் யோசித்து எப்படி இங்கு வந்தீர்கள் என்றேன்.ஐயா இந்த கோவிலுக்கு நான் இதுவரை வந்தது கிடையாது. எந்து நண்பர் ஓர் ஆன்மிகவாதி, அவர் தான் ஏதேனும் ஒரு கோவிலுக்கு போவோம் என இங்கு கூட்டி வந்தார் என்று அவரது நண்பரையும் அறிமுகப்படுத்தினார். அவரும் “திருவருள் சக்தி” வாசகர்தான். அவருக்கும் ஒரே மகிழ்ச்சி.அதுமட்டுமில்லாமல் அங்கு வருகின்ற ஊற்று நீரில் குளித்தேன். அது ஒரு சிலிர்ப்பை உடலில் உண்டாக்கியது என்று சொல்லி ஐயா இறையருளால் உங்களைச் சந்தித்தேன். நாடி படித்து எனக்கு ஒரு விடை சொல்லுங்கள் எனக் கேட்டார்.
இதற்கு மேல் வேறு என்ன அதிசயம் வேண்டும் இதோ அகத்தியரே நம்மை சந்திக்க வைத்துவிட்டார். நிச்சயம் நாடியில் வாக்கு வரும் என நினைக்கிறேன் இருந்தாலும், 2 நாள் கழித்து தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் என விடை பெற்றுச் சென்றுவிட்டேன்.
மீண்டும் அழைத்தார், வந்தார். சுவடியைப் பூஜித்து பாடி அருள் வாக்கு ஆரம்பம் செய்யப்பட்டது. மடை திறந்த வெள்ளம் போல பலன்கள் கொட்டியது என்று தான் சொல்ல வேண்டும். மூச்சுவிடக் கூட முடியாமல் பலன்கள் வந்தது. அவரது முன் ஜென்மமும் வந்தது.தற்போதைய பிரச்சினையும் வந்தது. அதற்கு பலனும் வந்தது. எனக்கே ஆச்சரியம் இவ்வளவு பலனை ஒரே நாளில் சொல்லாத முருகன், அகத்தியர் மூலம் பலன் சொன்னார். இவருக்கும் அகத்தியருக்கும் பூர்வ ஜென்மத்தில்
நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்தது.ஆறு மாதமாக முயற்சி செய்தும் ஏன் கிடைக்கவில்லை? என்ற காரணமும் வெளிப்பட்டது.
“முன்ஜென்ம தொடர்புடைய ஸ்தீரி சாபம்
முழுமையாக முறை தவறி வந்த காதல்
மாசுபடும் மணவாழ்வு இவளை விடு
இல்லாவிடில் இருதார யோகமே
கட்டியவனை விட்டு கண்டவனோடுபோகும்
பெண்ணாவாள் பெருமையது பின்னால் இல்லை
முன்ஜென்ம முருகனடி சித்தரோடு
முழுமையான தொடர்பு கொண்டு நீயும்
மூலிகைகளைப் பிடுங்கி ஆய்வு செய்தாய்
முன்ஜென்ம தொடர்வதால் தந்தத்தை
தரணியில் பிடிங்கி சரி செய்கிறாய்
சென்று வர வேண்டுமது சிவசைலம்
சிங்கார சேக்ஷத்ரமது சென்றுவா
வந்த பின்னே வழியமாய் இவள் போவாள்
வசந்த காலமது வருமே பாரு
வாட்டமது கொண்டிடாதே வரிசையாய்
வளமான யோகமது வரும் வரும்
இடர்களையும் இன்மபது விளையும்
இனிப்பான மூலிகை ஒன்று உண்டு
உறுதியாய் அதை நீ அணிந்து கொண்டு
உபாசனை யோகத்தில் மூழ்க வேணம்
சித்தர்கள் பலவும் சீரருளும் முறையாக
சீக்கிரம் ஆசிதந்து அற்புதமாய்
முன்ஜென்மமது வெளிப்படுமே
செய்துவிட்டுக் கேள்!”
இன்னும் ஏராளமான இரகசியங்கள் வந்தது. சுருக்கத்தை மட்டுமே தந்திருக்கிறேன். இது ஏதோ கற்பனைப் பாடல் என நினைக்க வேண்டாம். எதுகை, மோனை, இலக்கணத்திற்கு எல்லாம் அப்பாற்பட்டது. ஸ்கந்தர் ஜீவ நாடி இதைக் கேட்ட அந்த வாலிபர் அதிர்ந்தார். காரணம் இவர் பல் மருத்துவம் படிக்கும் போது ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாகி மலர்ந்தது. இவரது தந்தை காவல் துறையில் மிகப்பெரிய உயர் அதிகாரி. அவருக்கு இவர் ஒரே மகன். மகனது காதலைப் பிடிக்காத பெற்றோர்கள் இந்த ஆறு மாதமாகப் பட்டபாடு கொஞ்ச நஞ்சம் இல்லை.
அவ்வளவு துயரம். நாடி படித்த பின்பே அவரது தந்தை வந்து சேர்ந்தார்.அவரிடம் பதிவு செய்யப்பட்ட பலனை அவரது மகன் போட்டுக் காண்பித்தவுடன் இன்பத்தின் உச்சத்திற்கே அவர் சென்றார்.ஆனால் அந்த வாலிபருக்கு மட்டும் ஒரே வருத்தம். கட்டினால் அவளைத்தான் கட்ட வேண்டும் என்று, பரிகாரம் செய் சரியாகும் என அனுப்பி வைத்தேன். சற்று வருத்தமோடு சென்றார். வேறு வழியில்லை.
முக ஸ்துதிக்காக பலன் சொல்வது எனது வேலையில்லை. வருவதை உரைப்பதே எமது கடமை. பல பேர் இருவரையும் சேர்த்து வைக்கிறேன் என்று சொல்லி பணம் பிடிங்கி இவரை ஏமாற்றியும் உள்ளார்கள்.உங்கள் மகனது காதலை பிரித்து வைக்கிறேன் என்று சொல்லி அவரது தந்தையிடமும் பணம் பறித்து உள்ளார்கள். எனக்கு அதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. தப்பு செய்தவன் இன்று நலமாக இருப்பது போல் தோன்றினாலும் தண்டனை நிச்சயம் பெறுவான். எனவே பரிகாரம் முடித்துவிட்டு வாருங்கள் என அனுப்பி வைத்துவிட்டேன். மீண்டும் நான்கு மாதங்கள் கழித்து அவரிடம் இருந்து அழைப்பு வந்தது
ஐயா, தாங்கள் சொன்னபடி எல்லாமே செய்துவிட்டோம் அந்த பெண்ணிடம் அடிக்கடி சண்டை வருகிறது. எனக்கு அவளைக் கண்டாலே வெறுப்பாக இருக்கிறது. அது மட்டுமல்ல அவளுக்கு வேறு ஒரு பையனை பார்த்துவிட்டார்கள். இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை பூங்காவில் பார்த்தேன். நெஞ்சம் குமுறிவிட்டது. உடனே உங்கள் நினைவு வந்தது. அலைபேசியில் அழைத்தேன் என்றார்.
மீண்டும் நாடி படிக்கப்பட்டது. இன்னும் சில இரகசியங்கள் உரைத்து உபாசனை மார்க்கத்தில் வழி சொல்லப்பட்டது. காரணம் இவர் முன்ஜென்மத்தில் சித்தர்களுக்கு தொண்டு செய்து, சில மூலிகைகளைக் காட்டில் சென்று பறித்து வரும் தொழிலில் இருந்தவர். அப்போது மூலிகைகளைப் பிடிங்கியவர், இந்த ஜென்மத்தில் சிறு மாறுபாடாக மனிதர்களின் பல்லைப் பிடிங்கி வைத்தியம் செய்து வருகிறார். முன் ஜென்மத்தில் இதே பெண்ணிடம் சாபம் வாங்கியதால் இந்த ஜென்மத்தில் அதே பெண் மூலம் மன வேதனையை அடைந்துள்ளார். உபாசனை மூலமே ஜபம், தவம் செய்தால் மட்டுமே முன் ஜென்ம தொடர்பு கிட்டும் என்றும் அகத்தியரும் அவரது குரு முருகனும் உரைத்ததால் உபாசனை போதிக்கப்பட்டது. தற்போது உபாசனை செய்து வருகிறார்.
ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று பேர் மட்டுமே வந்து போன மருத்துவமனை தற்போது 20 பேர் வருகிறார்கள். ஜோதிடப் பணி, ஆசிரியப் பணி, மருத்துவ பணி,அனைத்தும் இறை அருளால் கிட்டும் பணிகள். இறையருள் இல்லாமல் இந்த பணிகள் பலிக்காது. பல் மருத்துவத்தில் இன்னும் பல சாதனை புரிவாய் என அகத்தியரும், முருகனும் சொல்லியுள்ளார்கள். அது பலிக்கும். அதேபோல் விரைவில் நல்ல குணவதியை மணப்பாய் என்றும் வந்திருக்கிறது. அதுவும் பலிக்கும்.பலனை பொறுத்திருந்து பார்ப்போம்.
இறைவன் திருவிளையாடலைப் பாருங்கள். நமது நாடியில் வந்ததை பதிவு செய்து அடிக்கடி கேட்டும் வருகிறார். அதுவே மனதிற்கு உளவியல் ரீதியாகப் பலன் தரும் என்பதை அவரே சொல்கிறார். இதுபோல் இன்னும் ஆயிரம் சம்பவங்கள் உண்டு. உண்மையை உள்ளபடி உரைப்பதே எமது பணியாகும். இதைப் படிப்பவர்கள் இனிமேலாவது மனதளவிலும் கூட பிறருக்குத் தீங்கு செய்யக்கூடாது எனப் பிரகடனம் செய்யுங்கள்.தெய்வ வழிபாட்டில் ஈடுபடுங்கள். சித்தர்களை நித்தமும் பூஜியுங்கள், போற்றுங்கள், புத்துணர்ச்சியான வாழ்வு கிட்டும்.
நமது ஸ்கந்தர் ஜீவநாடி யாருக்கு பலன் சொல்லுமோ அவருக்கு நிச்சயம் ஏதாவது ஒரு வழியில் சொல்லியே தீரும். எம்மைத் தொடர்பு கொள்பவர்கள் இதைப் புரிந்து கொண்டு பொறுமை காப்பது அவசியம். ஐயா நான் ஒரு வருடமாகத் தொடர்பு கொள்கிறேன் படிக்கவே மாட்டேன் என்கிறீர்கள் எனப் பலர் என்னிடமும், ஆசிரியர் ஐயா அவர்களிடம் தங்களது கருத்துக்களைச் சொல்கிறார்கள். காரணம் இதுதான். உரிய காலம் வரும்போது படித்தால் தான் உண்மை புலப்படும். இல்லாவிடில் பலன் நடக்காது.
பொதுவாக, நாடி ஜோதிடம் பார்த்தால் சுமார் பத்தாயிரம் முதல் இருபதாயிரம் வரை பரிகாரம் சொல்கிறார்கள். அதே போல் பிறந்த தேதி, நேரத்தை வாங்கி அதைக் கொண்டு கணனியில் போட்டு, ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளைக் கொண்டு, மனப்பாடமாகப் பாடல் வடிவில்
சொல்கிறார்கள் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் ஈரோட்டில் இருந்து என்னைப் பார்க்க வந்த நபர். ஒரு சிலர் சொல்கின்ற பலனைக் கடைபிடிப்பது எப்படி என்பதில் ஆர்வம் செலுத்துவதில்லை. இவர் எப்படி பலன் சொல்கிறார் என்பதை மட்டுமே ஆய்வு செய்து ஜோதிடர்களை சோதனை செய்வது மட்டுமே பணியாகக் கொள்கிறார்கள். அதே போல் தான் நாடி என்ற பெயரில் நடக்கும் மோசடிகளையும் அறியாதவர் இல்லை. நமது ஸ்கந்தர் நாடியை அதனால்தான் அனைவருக்கும் உரைப்பது இல்லை. காரணம் எவருக்கு பிராப்தம் உள்ளதோ அவருக்கே உரைக்கிறோம்.
அதேபோல இதில் வரும் பரிகாரங்களும் பொதுவாக அன்னதானம், சித்தர்கள் பூஜை, ஜீவ சமாதி வழிபாடு, ஆலய தரிசனம், மணி, மந்திரம், ஔஷதம் என்கிற முறையில்தான் வருகிறது.பரிகாரங்கள் எத்தனை தான் செய்தாலும் அது பலிப்பதும். பலிக்காமல் போவதும், அவரவர் கர்ம வினையைப் பொறுத்தே அமைகிறது. அதே போல் நாடியில் வரும் பலன்களும் அவரவர் கர்ம வினைப்படியே நடக்கிறது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தீதும் நன்றும் பிறர் தர வாரா.
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
மீள்பதிவாக:-
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம: - https://tut-temples.blogspot.com/2020/01/17.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்) - https://tut-temples.blogspot.com/2019/11/10.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி! - https://tut-temples.blogspot.com/2019/11/9.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை! - https://tut-temples.blogspot.com/2019/09/6.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html
அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html
கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html
No comments:
Post a Comment