"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, January 6, 2020

யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

 திதிகளில் சிறந்தது துவாதசி திதி. மாதங்களில் சிறந்தது மார்கழி.  மந்திரங்களில் சிறந்தது காயத்ரி  அது போல் தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள்.இதை எளிதாக சொல்லிவிடலாம் ,ஆனால் அனுபவித்து செய்யும் போது தான் இதன் உண்மை புரியும்.அன்ன தானம் பற்றி மேலும் சிறிது உணர்ந்து விட்டு,அன்றைய அன்னதான நிகழ்வின் துளிகளை பார்ப்போம்.மகா பெரியவா அன்ன தானம் பற்றி கூறிய செய்திகள் தொடர்கின்றது.

தர்மங்களில் தலையானது தானமே! : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ரந்தி தேவன் கதையிலிருந்தும், உஞ்சவ்ருத்திப் பிராம்மணன் கதையிலிருந்தும் என்ன தெரிகிறதென்றால் தனக்கென்று ஒன்றுமே வைத்துக்கொள்ளாமல் தானம் பண்ண வேண்டும்;தன் ப்ராணனே போனாலும் ஸரி, இன்னொரு ஜீவனை நம் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும் என்ற த்யாக தத்வம் தெரிகிறது. இன்னொன்று என்ன தெரிகிறதென்றால், ஒருத்தர் கஷ்டத்தில் இருக்கிறபோது அவர் என்ன ஜாதி, என்ன மதம், நல்லவரா – கெட்டவரா என்று இதையெல்லாம் ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருக்காமல், யாராயிருந்தாலும், எப்படிப் பட்டவராயிருந்தாலும் நம்மாலான உபகாரத்தைப் பண்ணி, கஷ்டம் நிவ்ருத்தியாவதற்கு ஸஹாயம் பண்ண வேண்டும் என்பது.

வித்யாஸங்கள் பார்க்கவேண்டிய இடத்தில் பார்த்துத்தான் ஆகவேண்டும். சாஸ்த்ரப்படி லோக க்ஷேமத்துக்காக ஏற்பட்ட அதிகார பேதங்களைக் காப்பாற்றத்தான் வேண்டும். ஆனால் கஷ்டம், துக்கம் என்று வருகிற போது வித்யாஸமே பார்க்கக் கூடாது.
குறிப்பாக, அன்னதானத்தைப் பற்றிச் சொல்கிறபோது ‘யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின்’ என்றே திருமந்திரத்தில் சொல்லியிருக்கிறது.

”யாரானாலும் எவரானாலும், நாராயண ஸ்வரூபம்” என்று ரந்திதேவன் அன்னதானம் செய்தான். மஹாதாரித்ரியத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த இளையான் குடிமாற நாயனாரிடம் ஒரு சிவனடியார் பிக்ஷை கேட்டு வந்தபோது அவர், ஈஸ்வரனே இப்படி வந்திருக்கிறான் என்று நினைத்தார். கொட்டுகிற மழையிலே வயலுக்குப் போய் அங்கே விதைத்திருந்த நெல்லையே மறுபடி பொறுக்கி எடுத்துக்கொண்டு வந்து சிவனடியாருக்கு பிக்ஷை பண்ணினார். வாஸ்தவத்திலேயே அந்த சிவனடியார் பரமேஸ்வரன்தான். அப்படியே காட்சி கொடுத்தார். இது பெரியபுராணக் கதை.

எல்லா தானங்களிலும் அன்னதானம் விசேஷம். பகவானும் கீதையில் (3.13) எவன் தனக்காக மட்டும் ஆஹாரம் தேடிச் சாப்பிட்டுக் கொள்கிறானோ அவனுடைய பாபத்தையும் முழுக்க அவனேதான் அநுபவித்தாக வேண்டும்; வேறு யாரும் அதில் பங்கு எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்கிறார். பிறனுக்குப் போடாமல், தான் மட்டுமே தின்கிறவன் சாதம் சாப்பிடவில்லை, பாபத்தையே புஜிக்கிறான் என்கிற மாதிரிச் சொல்கிறார்.

அன்னதானத்துக்கு என்ன விசேஷம் என்றால் இதிலேதான் ஒருத்தரைப் பூர்ணமாகத் திருப்திப்படுத்த முடியும். பணம், காசு, வஸ்த்ரம், நகை, பூமி, வீடு இந்த மாதிரியானவற்றை எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக் கொள்கிறவன் அதற்குமேல் தந்தாலும், ‘வேண்டாம்’ என்று சொல்லமாட்டான். அன்னம் போடுகிற போதுதான் ஒருத்தன் என்னதான் முட்ட முட்டச் சாப்பிட்டாலும், ஓர் அளவுக்கு மேல் சாப்பிட முடியாது. ‘த்ருப்தோஸ்மி : போதும்’ என்று சொல்கிறான். அந்த அளவுக்கு மேல் போய் விட்டால், ”ஐயையோ! இனிமேல் போடாதீர்கள்” என்று மன்றாடவே செய்கிறான். இம்மாதிரி ஒருத்தன் பூர்ண மனஸோடு திருப்தி தெரிவிக்கிறபோதுதான் தாதாவுக்கும் தானத்தின் பலன் பூர்ணமாகக் கிடைக்கும்.

நேராக உயிரோடு உடம்பைச் சேர்த்து வைத்து ரக்ஷிப்பதும் அன்னம்தான். அதனால்தான் ‘உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தாரே’ என்று சொல்லியிருக்கிறது. மணிமேகலையில் இப்படி அன்னதான விசேஷத்தைச் சொல்லியிருக்கிறது. இது பௌத்த ஸம்பந்தமான காப்பியம். பௌத்தம், ஜைனம் எல்லாமே கலந்தாங்கட்டியாக வைதிக ஸம்பிரதாயங்களோடு சேர்ந்திருப்பதாகவே தமிழில் உள்ள ஐம்பெருங்காப்பியங்களிலிருந்து தெரிகிறது. மணிமேகலைக்கு காஞ்சீபுரத்தில் அக்ஷயபாத்திரம் கிடைத்து, அதை அவள் வைத்துக்கொண்டு ஸகல ஜனங்களின் பசிப்பிணியையும் போக்கினாள். இதற்கு அநேக யுகங்கள் முந்தியே இதே காஞ்சீபுரத்தில் ஸாக்ஷாத் அம்பாளும் இதே அன்னதானத்தைப் பண்ணியிருக்கிறாள். ஜகன்மாதா இங்கே, ‘இரு நாழி நெல் கொண்டு எண் நான்கு அறம் இயற்றினாள்’ என்று சொல்லியிருக்கிறது.

எண் நான்கு அறம் என்றால் முப்பத்திரண்டு தர்மங்கள். தர்மம் என்றால் மநுஷ்ய வாழ்க்கை நெறிகள் எல்லாமும்தான் என்றாலும், பொது வழக்கில் ‘தானம்’ என்ற ஒன்றுக்குமட்டுமே ‘தர்மம்’ என்ற பேரும் வந்துவிட்டது. தர்மங்களில் இது அத்தனை உசத்தியான இடத்தைப் பெற்றுவிட்டது! ‘தான-தர்மம்’ என்று சேர்த்தே சொல்கிறோம். ‘தர்மம் போடு தாயே!’ என்றுதான் பிச்சைக்காரர்கள் கூடச் சொல்கிறார்கள். தர்மசாலை என்றாலே அன்னசத்திரந்தான். வேதப் பிரமாணத்துக்கு ஸமதையான சிறப்புப் பெற்ற அவ்வை வசனத்திலும் ‘ஈதல் அறம்’ என்று தானத்தையே தர்மம் என்று equate பண்ணியிருக்கிறது.

இதிலே ஒரு வேடிக்கை, அதாவது பரஸ்பர விருத்தம் (முரண்பாடு) மாதிரி ஒரு அம்சம். தானம் என்று பண்ணினால் அதை வாங்கிக் கொள்ளவும் ஒருத்தன் இருந்தாகணும். Donor இருந்தால் Donee-யும் இருக்கணும். ஆனால் தானம் கொடுப்பதை ரொம்பவும் சிறப்பித்துச் சொல்கிற அதே சாஸ்திரங்களே தானம் வாங்குவதை மிகவும் தாழ்வானதாகச் சொல்லியிருக்கின்றன. ”நான் கொடுக்கிறவனாகவே எப்போதும் இருக்கணும்; வாங்குகிறவனாக ஒருபோதும் இருக்கக்கூடாது”- யாசிதாரச்ச நஸ்ஸந்து மா ஸ்ம யாசிஷ்ம கஞ்சந – என்றே பிரார்த்தனை இருக்கிறது. ஆத்திசூடியிலும் “ஈவது விலக்கேல்” என்றவுடனேயே “ஏற்பது இகழ்ச்சி” என்றும் வருகிறது. ஏற்பதற்கு ஒருத்தன் இல்லாவிட்டால் எப்படி ஈவது? யாசகன் இல்லாமல் தாதா ஏது?

அக்ஷர-த்வய-மப்யஸ்தம் நாஸ்தி நாஸ்தீதி யத் புரா |
ததேவ தேஹி தேஹீதி விபரீத-முபஸ்திதம் ||
என்று ஸ்லோகமிருக்கிறது. ”நாஸ்தி, நாஸ்தி” (இல்லை, இல்லை) என்கிற இரண்டு எழுத்துக்களை* எவன் முன் ஜன்மாவில் சொல்லி யாசகர்களை விரட்டி அடித்தானோ, அவனே மறு ஜன்மாவில் ”தேஹி தேஹி” என்கிற இரண்டு எழுத்துக்களை சொல்லிக்கொண்டு பிச்சைக்காக அலைகிறான் என்று அர்த்தம். இங்கே ஈகையின் சிறப்பு, ஏற்பதன் இகழ்ச்சி இரண்டும் தெரிகிறது. பகவானே யாசகம் கேட்கவேண்டி வந்ததே என்று ‘உடம்பைக் குறுக்கிக் கொண்டு’ தான் வாமனரூபமாக ஆகி மஹாபலியிடம் போனான் என்கிறார்கள்.

இப்படி யாசகம் வாங்குவதை ரொம்பவும் இழிவாகச் சொன்னதற்குக் காரணம் அத்யாவசியமிருந்தாலொழிய பிறத்தியானைப் பிடுங்கக் கூடாது என்பதால்தான். ஸம்பாத்தியம் அவனவனும் உடம்பாலோ புத்தியாலோ உழைத்துப் பெறத்தான் பாடுபடணும். அவனவனுடைய வீட்டின் நல்லது கெட்டத்துகளுக்கான செலவுகளையும் எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு அவனவனேதான் ஸேமித்துக் கொள்ளணும். தவிர்க்கமுடியாத unemployment, வியாதி வக்கை, நிராதரவான நிலையில்தான் யாசகம் வாங்க வேண்டும்.

பொதுக்காரியங்களுக்கு யாசகம் வாங்கித்தான் ஆக வேண்டியிருக்கும். இங்கே தாதா என்று individual-ஆக (தனி நபராக) ஒருத்தன் இருந்தாலும், ‘யாசகன்’ என்று individual -ஆக எவனும் கீழ்ஸ்திதியில் இல்லை. ஆனால் இந்தமாதிரி பொதுப் பணிகளில்கூட, ஒரு ஆஸ்பத்திரி கட்டுவது, ஆலயத் திருப்பணி செய்வது என்றால்கூட அத்யாவசியத்துக்கு அதிகமாக ஓஹோ என்று plan போடாமல், கலெக்ஷன் என்று பறக்காமல், பல பேரைப் பிடுங்கி எடுக்காமல், அளவாகத் திட்டம் போட்டுக் கொண்டு, கூடிய மட்டும் பஹிரங்கப்படுத்தாமல், அவரவர்கள் தங்களுக்குள்ளேயே செலவுகளைப் பகிர்ந்து கொள்ளப் பார்க்கிறதே சிலாக்யம்.

முன்னாளில் வேதமும் யஜ்ஞமும் பூஜையும் தியானமும் வித்யாதானமுமே ஒரு ப்ராம்மணனின் 24 மணி ‘ஆகுபேஷன்’ ஆகிவிட்டதால், அவனுடைய குடும்ப போஷணைக்காக மற்றவர்கள் தானம் தருவதை வாங்கிக் கொள்ள அவனுக்கு அதிகாரமிருந்தது. ஸந்நியாஸி ஸதாகாலமும் ஸாதனை பண்ணணும்;அதோடு அவனுக்கு பிக்ஷை விதித்திருக்கிறது. மற்றபடி யாசக விருத்தி ரொம்பவும் நிஷித்தந்தான்……..

முப்பத்திரண்டு வகையான அறங்களை, அதாவது தானங்களை சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிறது. முதலில் ஜனங்களுக்கு ”உணவீதல்”, அப்புறம் பசுக்களுக்கு இரை கொடுப்பது, இப்படியே சொல்லிக்கொண்டு போய் தர்ம சத்திரம் கட்டுவது, நந்தவனம் வைப்பது, வைத்யசாலை வைப்பது, குளம் வெட்டுவது என்றெல்லாம் சொல்லிக் கடைசியில் ரொம்பக் குறைச்சலான திரவியச் செலவில் செய்கிற தண்ணீர்ப் பந்தல் கைங்கர்யத்தோடு முடித்திருக்கிறது. சிரமும் இதில்தான் குறைச்சல். சிரமமும் செலவும் குறைச்சல் என்றாலும், வாயும் தொண்டையும் வற்றி வருகிறவர்களுக்கு ஜில்லென்று புனர்ஜீவன் தருகிற மாதிரி தண்ணீர்ப்பந்தல் வைத்து மோர்த் தீர்த்தம் தருவது மஹா பெரிய புண்யமாகும். நம் பெரியவர்கள் தலைமுறைத் தத்வமாகச் செய்து வந்த இம்மாதிரியான நல்ல விஷயங்களை, சின்னச் சின்ன ஸூக்ஷ்மமான தர்மங்களையெல்லாம் இப்போது நாம் மறந்து விட்டோம்.

காஞ்சீபுரத்தில் அம்பாள் தானே இந்த தர்மங்களையெல்லாம் நடத்தி நமக்கு வழி காட்டியிருக்கிறாள். அங்கே காமாக்ஷியம்மன் கோயிலில் அன்னபூர்ணிக்கு ஒரு ஸந்நிதி இருக்கிறது. இது தவிர காமாக்ஷியே அன்னதானம் மட்டும் இல்லாமல் முப்பத்திரண்டு தர்மங்களையும் செய்திருக்கிறாள். திருவையாற்றிலும் அம்பாள் தர்மஸம்வர்த்தனியாக, அறம் வளர்த்த நாயகியாக இருக்கிறாள்.

மநுஷ்யர்களுக்குள் ஜாதி, யோக்யதை முதலானவைகளைப் பார்க்காமல் உபகாரம் பண்ண வேண்டும் என்பது மட்டுமில்லை. இம்மாதிரி மனித இனம் மட்டுமின்றி, ஸகல ஜீவராசிகளுக்கும் சிரமங்கள் தீரவேண்டும் என்று சொல்லித்தான் ரந்திதேவன் பஞ்சமனுக்குத் தீர்த்தத்தை வார்த்தான்.

அன்னதானம் ஒரு புண்ணிய காரியம். மகா பெரியவாவின் அருளுரைகளை படித்துவிட்டு,நாம் சும்மா இருக்கலாமா? யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் என்ற வரிகள் நம்மை இன்னும் அன்னதானம் செய்ய ;சொல்லி தூண்டுகின்றது. இதோ இப்போது நாம் அமாவாசை தாண்டி கிருத்திகை,ஷஷ்டி,பௌர்ணமி, அஷ்டமி தினங்களில் நம் சேவையை விரிவு செய்துள்ளோம்.







நாம் 2020 ஆண்டை அன்னதானம் செய்து தான் வரவேற்றோம். அன்றைய தினம் செங்கல்பட்டு செம்மலை முருகன் கோயில் தரிசனம் பெற சென்றோம். எனவே அங்குள்ள அரசு மருத்துவமனையில் உள்ள அன்பர்களுக்கு சுமார் 15 பேருக்கு உணவு வழங்கி வந்தோம்.






இன்றைய கிருத்திகை நன்னாளில் சுமார் 15 பேருக்கு நம் தளம் சார்பில் பசியாற்றுவித்தோம்.

ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று
ஈசனுடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்று
கூடும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்று
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று
மாறு படு சூரரை வடித்த முகம் ஒன்று
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்று
ஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே!

திருச்சிற்றம்பலம் 
ஓம் நமசிவாய

இன்று  அம்மையப்பர் கருணையினாலும் ,  குருநாதர் ஸ்ரீ அகத்தியர் குருவருளாலும் கிருத்திகை  அன்னதான அறப்பணி  சுமார் 15 அன்பர்களுக்கு நடைபெற்றது. அன்னதான சேவைக்கு உதவிய அன்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்
ஓம் நமசிவாய

தேடல் உள்ள தேனீக்களாய்  அன்னதான குழு -TUT

மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

கொடுப்பதும் பெறுவதும் - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_11.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_2.html

மறந்தவர்களுக்கு மகாளய பட்சம் - 14.09.2019 முதல் 28.09.2019 வரை - https://tut-temples.blogspot.com/2019/09/14092019-28092019.html

திரும்பிப் பார்க்கின்றோம் - ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22.07.2017 - https://tut-temples.blogspot.com/2019/09/22072017.html

அற்றார் அழி பசி தீர்த்தல் - அன்னம்பாலிப்பு சிறப்புப் பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_27.html

No comments:

Post a Comment