"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, January 17, 2020

சிவமலை என்றிடத் சித்தியாகுமால் - சிவன்மலை ஆண்டவர் தரிசனம்


சிவன் மலை

பெயரிலேயே தெரிகின்றது இந்த மலையில் எம் பெருமான் சிவபெருமான் இருப்பார் என்று..ஆனால் இப்படி நினைத்தால் அது மிகப் பெரும் தவறு. சிவன் மலையில் இருப்பவர் நம் முருகப் பெருமான் ஆவார். சிவன் மலை என ஏன் பெயர் ஏற்பட்டது. பொதுவாக முருகன் என்றாலே பழனி தான். பழனி மலை முருகப் பெருமான்  போகர் சித்தரினால் உருவாக்கப்பட்டவர்.  அதே போல் இந்த சிவன் மலைக்கும் ஒரு சித்தருக்கும் தொடர்பு உண்டு. அவர் யார்? சிவத்தை தம் பெயரை உள்ளடக்கியவர். ஆம் ... சிவ வாக்கியரே ஆவார்.

சிவ வாக்கிய சித்தர் பூஜித்த மலை தான் சிவன்மலை. சிவவாக்கியம் எனும் நூலை இயற்றிய சிவவாக்கியர் சித்தர் சிவன் மலையில் தங்கி தமது விருப்பதெய்வமான முருகப்பெருமானுக்கு திருக்கோயில் எழுப்பி வழிபட்டார். அவர் பெயரிலேயே மலை ’சிவன் மலை’ என்று வழங்கப்பட்டது.
ஒவ்வொரு கோயிலுக்கு செல்லும்போதும் அங்குள்ள சிறப்புகளை பற்றி கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அந்த வரிசையில் இங்கு "உத்தரவுப் பெட்டி " மிகப் பிரசித்தம். இது தான் சிவன் மலை ஆண்டவரின் கட்டளை என்று நமக்கு தோன்றுகின்றது.இந்தக் கோயிலில் ஆண்டவன் உத்தரவின் பெயரில், ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜை செய்வது வழக்கமாக உள்ளது. பூசைக்குப் பின்னர், அப் பொருள் ’உத்தரவுப் பெட்டி’ என்றழைக்கப்படும் கண்ணாடிப் பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது.ஏற்கனவே சிவன்மலை பற்றியும் உத்தரவு பெட்டி பற்றியும் நாம் கண்டுள்ளோம். இன்று சிவன் மலை சென்று எம் பெருமான் முருகனை காண உள்ளோம்.

சிவன் மலை பயணம் நாம் சென்ற அன்று பேருந்தில் பல முருக அடியார்கள் பாத யாத்திரை செய்து கொண்டிருந்தார்கள். நாம் திண்டுக்கலில் இருந்து சிவன்மலை செல்ல புறப்பட்டோம். அப்போது பேருந்தில் சில முருக அடியார்கள் வேலொடு காட்சி தந்தார்கள். இதுவே நமக்கு மிகப் பெரும் ஆசியாக இருந்தது. சிவன்மலை பயணம் வேலொடு தான் தொடங்கியது.



சிவன்மலை சென்று அடிவாரம் சென்றடைந்தோம். அடிவாரத்தில் இருந்து  வாகனங்கள் மேலே செல்ல வசதியாக சாலைகள் உள்ளன. நாம் மலை ஏற முற்பட்டோம்.



மலை ஏறும் பாதை மிக அருகிலே இருந்தது. அங்கு சென்று நாம் பார்த்ததும் சிவன்மலை கந்தன் பாதம் கனவிலும் காக்கும் என்று நம்மை முருகப் பெருமான் அழைப்பது போன்று இருந்தது.




சிவமலை என்று சொன்னால் என்னென்ன நடக்கும் என்று ஒரு பாடல் கண்டோம்.
 சிவமலை என்றிடத்  சிதையுந்தீவினை 
 சிவமலை என்றிடத் திருவந்தெய்திடும் 
 சிவமலை என்றிடத் சேரும் புண்ணியம் 
 சிவமலை என்றிடத் சித்தியாகுமால் 
முருகா என்றாலே மும்மை நலங்களும் பெற்று உயர்வு பெறுவார்கள் என்பது திண்ணம். இதில் சிவன்மலை சேர்ந்தால் கேட்கவா வேண்டும். நாம் சேர்த்து வாய்த்த தீவினை யாவும் சிதையும், நமக்கு திருவருள் வந்து கூடும், நம்மிடம் புண்ணியம் சேரும், நாம் நினைப்பது சித்தியாகும். இவையாவும் சிவமலை என்று ஓதினாலே போதும்.


மலை முழுதும் உள்ள படிகளில் மண்டபம் அமைத்து ஆங்காங்கே முருகன் புகழ் பாடி உள்ளார்கள்.அடுத்து நாம் கண்ட முருகன் துதி..சொல்லில் அடங்கா ஒன்று.

விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே.
நமது கண்களுக்குத் துணையாவது திருமுருகப்பெருமானது புனிதமானவையும் மென்மையானவையுமான செந்தாமரை மலர் போன்ற திருவடிகளேயாகும். உண்மையில் ஒருசிறிதும் குறையாத சொல்லுக்குத் துணையாவது 'முருகா' என்று கூறும் அப்பரமபதியின்
திருநாமங்களேயாகும். முன்பு செய்த பழியைத் தருகின்ற பாவத்தை அகற்றுவதற்குத் துணையாவது திருமுருகப்பெருமானின் பன்னிரண்டு புயங்களுமேயாகும். அஞ்சுந்தன்மையுடைய தனிமையான வழிக்குத் துணையாவது  கந்தப்பெருமானுடைய கூர்மையான வேலாயுதமும் மயிலுமேயாகும். இங்கு நம் யாத்திரை வேலொடு துவங்கியுள்ளது. நீங்களே எதிர்பாரா வண்ணம் யாத்திரை முழுமை கடைசியில் காண்க.


















ஒவ்வொரு முருகன் பாடல்/துதியையும் இங்கே நாம் இணைத்துள்ளோம். உடனே கீழே வர வேண்டாம். ஒவ்வொரு பாடலாக படித்து உணர்ந்து இங்கே வாருங்கள். என்ன நேர்த்தி.. படிக்கட்டுகள் பார்ப்பதற்கே அவ்வளவு நேர்த்தியாக உள்ளது.


70 ஆவது படியை அடைந்து விட்டோம்.மலை ஏறுவது  கொஞ்சம் சிரமாக இங்கு உள்ளது. அடுத்து 140 ஆவது படி அடைந்தோம்.

படி ஏறுபவர்கள் இங்கு இருக்கின்றார்கள்.





படிகளுக்கு பூஜை செய்து கொண்டு ஒரு பக்தை வந்து கொண்டிருந்தார்கள். அட..படி பூஜை செய்வது ரொம்ப ரொம்ப விசேடம். அதுவும் புத்தாண்டு போன்ற நாட்களில் செய்வது வெகு வெகு சிறப்பு. வள்ளிமலை, திருத்தணிகையில் இந்த படி பூசை வெகு விமரிசையாக புத்தாண்டு நாட்களில் நடைபெறும். நமக்கும் வெகு நாளாக படி பூசை செய்ய ஆசை. முருகன் நமக்கு அருள் செய்ய காத்திருக்கின்றோம்.

ஒருமையுடன் நினதுதிரு மலரடி என்ற பாடலுக்கு பின்னால் உள்ள செய்தி இதோ.
அந்த மாணவன் சென்னை, புரசைவாக்கத்தில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான். வகுப்பில் தமிழாசிரியர் "ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்...'' என்று தொடங்கி மீதி வாக்கியங்களை அந்த மாணவனைக் கூறச் சொன்னார். அதற்கு அவன், "எப்பொழுதும் வேண்டாம்... வேண்டாம்'' என்று நான் சொல்ல விரும்பவில்லை என்று சொல்லி இருக்கின்றான். பிறகு எப்படித்தான் சொல்வாய்... சொல்... என்று ஆசிரியர் வினவி இருக்கிறார். உடனே அந்த மாணவன், "ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்; உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகிற உறவு கலவாமை வேண்டும்; பெருமைபெறு நினது புகழ் பேச வேண்டும்; பெருநெறி பிடித்து ஒழுக வேண்டும்; மதமான பேய் பிடிக்காதிருக்க வேண்டும்'' என்று கடகடவென பாடி முடித்தான். இதனைக் கேட்டு வியப்பு மேலிடத் திகைத்து நின்றார் தமிழாசிரியர். தமிழாசிரியரைத் திகைக்கச் செய்த அந்த மாணவன் யார் தெரியுமா? அவர்தான் பிற்காலத்தில் "வள்ளலார்' என்று போற்றிப் புகழப்பட்ட இராமலிங்க அடிகளார். 
இதோ அந்தப் பாடல்.
ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவுகல வாமை வேண்டும்
பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்
பிடியா திருக்க வேண்டும்
மருவுபெண் ணாசையை மறக்கவே வேண்டும் உனை
மறவா திருக்க வேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வில்நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள்
வளர் தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே




மொத்தமாக இதோ 466 ஆவது படியைத் தொட்டுவிட்டோம். இதோ சிவன்மலை ஆண்டவனின் கோபுரம் கண்டுவிட்டோம். கன்னத்தில் முருகா..முருகா...என்று போட்டுகொண்டு கோயில் நோக்கி நடந்தோம்.



சிவன்மலை கோயிலுக்கு வெளியே தீபத்தூண் உள்ளது. அத் தூணின் அடிப்புறத்தில், விநாயகர் (கிழக்கே), சூலம் (தெற்கே), மயில் ((வடக்கே) மற்றும் தண்டபாணி (மேற்கே) வடிக்கப்பட்டுள்ளது. கோயிலின் உள்ளே தெற்குப் பிரகாரத்தில், கைலாசநாதர், ஞானாம்பிகை சன்னிதிகள் கிழக்குமுகமாக உள்ளன. மேற்குப் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் கன்னிமூலை விநாயகரும், வடமேற்கில் தண்டபாணியும், கருவறையின் வெளிச்சுவற்றில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, துர்க்கைக்கு எதிரில் சண்டிகேஸ்வரர் உள்ளனர். சனிபகவானுக்குத் தனி சன்னிதியும் அதுதவிர நவக்கிரக சன்னிதியும் அடுத்து பைரவர் சன்னிதியும் அமைந்துள்ளன.


இது தான் அந்த தீபத்தூண். கிழக்கே விநாயகர் தரிசனம் பெறலாம்.



ஐந்து கரத்தோனை வணங்கி ஆறுமுகத்தோனை வணங்கிட அருள் கேட்டோம். தீபமேற்றி வழிபாடு செய்து உள்ளே சென்றோம். அன்றைய தினம் முழுதும் முருகனோடு தான் என்று ஏற்பாடு செய்திருந்தோம். மொத்தம் 5 கால பூசை காண உள்ளே சென்றோம்.


பிரகாரம் சுற்றிவந்து, கொடிமரம், மயில்வாகனக் குறடு, பலிபீடம் கடந்தால், சுமுகர், சதேகர் துவாரபாலகர்கள். அடுத்து உள்ளே கருவறையில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி சமேதராக இருக்கிறார்.

இக்கோயிலின் தலவிருட்சமாக தொரட்டி மரம் உள்ளது.

தல இறைவன் : சுப்ரமணிய சுவாமி.
தல இறைவி: வள்ளி, தெய்வானை.
தல விருட்சம் : தொரட்டி மரம்.
தல தீர்த்தம் : காசி தீர்த்தம்.

திருவிழாக்கள்: சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், மாசி மகம், பங்குனி உத்திரம்.
பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன்


இத்தல முருகரின் பக்தையான ஒரு பெண் காசி சென்று நீராட விரும்பியும் காசி செல்ல வசதியில்லாததால் மனம் வருந்த, தம் பக்தைக்காக முருகப்பெருமான் காசித் தீர்த்தத்தை இத்தலத்திற்கே வரவழைத்தார்.


 திருமணத் தடை, குழந்தை பாக்கியம், தொழில் மேன்மை, நோய் பாதிப்பு என அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் அற்புதமலையாக விளங்குகிறது.


நவக்கிரக சன்னதியை, ஒன்பது முறை சுற்றி, வழிபட்டு வந்தால் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், அதிலிருந்து விடுபடலாம்.


சனி பகவான் தனி சன்னதியிலும் எழுந்தருளியுள்ளார்.


மலை மேல், சுரலோக நாயகி சமேத ஜூரஹரேசுவரர் எழுந்தருளியுள்ளார். காய்ச்சல் வந்தவர்கள் மிளகு ரசம் வைத்து, இங்கு வந்து பூஜை செய்து உண்டால், காய்ச்சல் நீங்கும் என்ற ஐதீகம் உள்ளது.


மற்ற திருத்தலங்கள் போலன்றி இங்கு முதல் வழிபாடு முருகப்பெருமானுக்கே.மற்ற திருத்தலங்களில் முதல் வழிபாடு பிள்ளையாருக்கே.


 நவக்கிரகங்கள் அனைத்தும் சூரியபகவானைப் பார்த்து நிற்கின்றன


 அணையாத தீபம் எரிந்து கொண்டுள்ளது சிறப்பாகும்.


 திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை தரிசிப்பதும், சூரிய நாராயணர் கோவில் சென்று சூரியனை வழிபடுவதால் ஏற்படும் சிறப்பும் இங்கு கிடைக்கும்.


அன்று மதிய பூசை செய்து நமக்கு வழங்கப்பட்ட பிரசாதங்கள் 





வெண் பொங்கல், சக்கரைப் பொங்கல், பஞ்சாமித்தம் என நைவேத்தியம் செய்யப்பட்டது பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. அன்றைய தினம் தளத்தின் அறிவிப்பை பார்த்து , பூசைக்கு வந்திருந்த அடியார் பெருமக்கள். யார் ? எங்கிருந்து வருகின்றார்கள் என்று நாம் அறிந்திலோம்? ஆனால் முருகன் நம்மையெல்லாம் இணைத்துக் கொண்டு வருகின்றார் என்பது கண்கூடு.


காணக் கிடைக்காத முருகனின் தரிசனம் இன்றைய கிருத்திகை நன்னாளில் நம் அன்பர்கள் அனைவருக்காகவும் இங்கே பகிர்கின்றோம். இந்த தரிசனம் ஒன்றே போதும்.வேறென்ன நமக்கு வேண்டும். 

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே! 



சிவமலையில் மதியம் பூசை முடித்து விட்டோம். அடுத்து அன்னசேவைக்காக காத்திருந்தோம். சிவன்மலை பயணம் வேலொடு தான் தொடங்கியது. வேலொடு தொடங்கிய யாத்திரை மயிலாடு முழுமை பெற்றது.இனிவரும் பதிவில் சிவமலை தரிசனம் மீண்டும் தொடர்வோம்.

மீள்பதிவாக:-

No comments:

Post a Comment