"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, November 4, 2019

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி!

முருகன் அருள் முன்னிற்க!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். நம் தளத்திற்கு முருகன் அருள் முன்னின்று நடத்துவதால் தான், நாம் செய்யும் அனைத்து சேவைகளும் அற்புதமாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நிகழ்விலும் நாம் நெக்குருகி போகின்றோம். ஆப்பூர் பெருமாள் கோயில் சென்று உழவாரப் பணி செய்ய அருள் கிடைத்ததை பார்த்தோம். ஒரு அண்மைக்கால அற்புதக் கோயில் பற்றி ஜீவ நாடி அற்புதங்கள் பகுதியில் பார்த்தோம். இன்று மீண்டும் நம்பிமலை பற்றி அறிய இருக்கின்றோம்.


நடப்பவை எல்லாம் நல்லதற்கே என்று நினைப்பவன் நான். எத்தனையோ ஆபத்தான சூழ்நிலைகளிலும் அகத்தியப் பெருமான் என்னை சுற்றி அரணாக நின்று காத்த நாட்கள் உண்டு. நானும் அடிப்படையாக மனிதன் தானே. சிலவேளை பயம் வரும். இருந்தும் மனதை தேற்றிக்கொண்டு, அகத்தியரையே திட்டிக்கொண்டு சமாளிப்பேன்.  "இவர் எதற்காக இப்படி மாட்டிவிடுகிறார்" என்று கூட வெறுத்துப் போய் விடுவேன். எத்தனையோ குழப்பமான நிலைகளில் மனதில் தோன்றியதை எல்லாம் வார்த்தைகளாக வெளிக்கொட்டி, அதை அகத்தியப் பெருமான் கேட்டு, அவரிடமிருந்து பலமான குட்டு பலமுறை வாங்கியிருக்கிறேன்.

அப்படி ஒருநாள் யாரும் இல்லாத போது நாடியை புரட்டிப் பார்த்தேன். ஒரு மலை மீது இருக்கும் கோவிலுக்கு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் செல்க, அங்கு யாம் வந்து உரைக்கின்றோம் என்று உத்தரவு வந்தது. அதை சிரம் மேற்கொண்டு நானும் எனது ஒரு சில நண்பர்கள் குழாமுடன் கிளம்பினேன். அந்த நாள் 31/07/2009, வெள்ளிக்கிழமை, அனுஷம் நட்சத்திரம், சுக்ல பக்ஷ தசமி. என்னை போகச் சொன்னது நம்பிமலை கோவிலுக்கு. இது திருநெல்வேலி ஜில்லாவில் திருகுறும்குடி என்கிற கிராமத்துக்கு அருகில் உள்ளது. தமிழக வன பாதுகாப்புக்கு உட்பட்டு இருக்கிற ஒரு வனாந்திரத்தின் மத்தியில் உள்ளது, நம்பி மலை கோவில்.  மேல் இருக்கும் கோயில் 108 வைஷ்ணவ ஸ்தலங்களில் ஒன்று. நம்பியாறு என்கிற நதி இங்கு உற்பத்தியாகி, சிற்றாறு தாமிரபரணியாக உருவாகுவதும் இங்கு தான்.

நாங்கள் சென்ற வண்டி ஏதோ ஒரு காரணத்தால் தாமதமாக சென்று சேர்ந்தது. ஏன் என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் சொன்ன நேரம் கழிந்துவிட்டது என்று நினைத்து, வழியெல்லாம் பொருமிக்கொண்டே வந்தேன். நண்பர்களோ, "இதுகெல்லாம் ஏதோ ஒரு காரணம் இருக்கும். பொறுமையாக இருப்போமே" என்று சொல்லிக்கொண்டு வந்தனர். இருந்தாலும் பொறுமை இழந்த நான் வெளியே எட்டி பார்த்து "வெயில் வேறு அதிகமாக உள்ளது. எப்படி அடிவாரத்திலிருந்து மேலே ஏறப்போகிறோம்? இன்று எனக்கு சந்திர அஷ்டமம் வேறு. மௌனமாக இருக்கவேண்டும் என்று நினைத்தேன். அதையும் கலைத்து, இப்படி சோதனை செய்கிறாரே" என்று கூறிக்கொண்டு வந்தேன்.

ஒரு வழியாக மலை அடிவாரம் வந்து சேர்ந்த பொழுது மணி 10.30 ஆகிவிட்டது. வண்டியில் வந்த களைப்பு, வெயிலின் கடுமை, வியர்வை, நினைத்தது போல் பயணம் அமையாதது, எப்படி இனி மலை ஏறி போகப்போகிறோம் என்ற நினைப்பு போன்றவை உடலை அசத்த, சற்று நேரம் ஒரு இடத்தில் அமர்ந்து சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என்று நினைத்தேன். இருந்தாலும் அகத்தியர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமே என்று நாடியை புரட்ட, சும்மா சொல்லக்கூடாது, நன்றாகவே என்னை வறுத்துவிட்டார்.

நாடியில் வந்தது இதுதான்.

"ஒளி மறை அனுஷம் உதித்திட்ட வேளையிலே மனம் குளிர்ந்து அகத்தியன் வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன். இன்னவனுக்கு ஆங்கு ஓர் ஊர்துவண்டி சற்று தாமதமாக வந்ததாக புலம்பிக்கொண்டான் என் மைந்தன். அன்னவனுக்கு இன்னும் புரியவில்லை. அது ராகு காலம். நல்ல காலத்தில் காலடி எடுத்து வைத்தால் தான் எதிர்காலத்தில் நடப்பதெல்லாம் நல்லதாக நடக்கும் என்பதற்காகவே 10.22 க்கு தாண்டா அகத்தியனே அங்கு கால் எடுத்து வைக்கச் சொன்னேன். 9 முதல் 10.30 வரை ராகு காலம் என்பதாலே, அங்கு அடி எடுத்து வைக்கவேண்டாம் என்பதற்காகவே தான் ஊர்தி வண்டி கூட என்றைக்கும் இல்லாமல் இன்று சற்று தாமதமாக வந்து சேர்ந்தது. ஆகவே, நடக்கின்ற காரியங்களும், சொல்லப்படுகின்ற விஷயங்களும் நல்லதொரு சகுனத்தில் ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான் அகத்தியன் கணக்கு. ஆகவே தான் அகத்தியன் படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறேன். ஆண்டு 50தாய் இவன் படித்தும் இன்னும் அவனுக்கு போதிய ஞானம் இல்லை என்பதை அகத்தியன் எண்ணுகிறேன். நேரம் ஆகிவிட்டது, மலையில் தான் நேரமாகிவிட்டது, விசுக் விசுக் என்றிருந்தான். இறை, இயற்கையை பழிப்பதற்கு இவனுக்கு என்னடா அதிகாரம் இருக்கிறது. காலம் ஆகத்தாண்டா செய்யும். காலம் கனியும் வரை சற்று பொறுத்திருக்க வேண்டும் என்று ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் நீ, உன்னை நீயும் கட்டுப் படுத்திக் கொள்ளவில்லை. 10.30 மணிக்குத் தான் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்று நியதி. அதன் படி காலடி எடுத்து வைத்தாய். இனி நேராக உன்னை ஆச்வாசப்படுத்திக்கொண்டு உடன் வந்திருப்பவரின் அறிவுரை படி நேராக நம்பி மலைக்கு செல்க. மற்றவற்றை கோயில் வாசலிலே யாம் மேற்கொண்டு உரைப்பேன் என அருளாசி.

இன்னொரு சொல்லும் கூட உண்டடா!  இங்கு மனிதர்கள் போடுகின்ற பஞ்சாங்கத்திலே ஆங்கு ஒரு சந்திராஷ்டமம் என்று உண்டு. மேஷ மைந்தனுக்கோ இன்று சந்திராஷ்டமம் என்றான். எப்போதுமே உன் பயணத்தின் போதெல்லாம் சந்திராஷ்டமம் வந்து குறிக்கிடத்தான் செய்யும். விதி. ஆனால், அந்த சந்திராஷ்டமங்கள், இன்று முதல் இவனுக்கு அகத்தியன் ஒரு உறுதி மொழி தருகிறேன்,  "எந்த சந்திர அஷ்டமமும் இவனுக்கு ஒன்றும் செய்யாது. ஏன் என்றால் அப்படி ஒரு எண்ணம் முதலில் இருந்தது. புறப்படும் போதும், வரும் போதும், நிற்கும் போதும், நடக்கும் போதெல்லாம், சந்திராஷ்டமம் வருகிறது என்றால் சற்று வாயடக்கி மௌனமாக இருந்துவிட்டால் போதுமே என்று எண்ணுவான். வாயை அடக்கினால் வார்த்தை இல்லை. வார்த்தை இல்லை என்றால் எதிர்காலம் இல்லை. வார்த்தையை அடக்க  வேண்டாம், கடுமையான வார்த்தையை சொல்லவேண்டாம் என்றேனே தவிர மௌனமாய் இருப்பதில் அர்த்தம் இல்லை. ஆக அவனுக்கு இன்றைக்கு ஒன்று சொல்லுகிறேன். அருகிலுள்ள விதிமகளிடம் கேட்டு விட்டு உரைக்கிறேன். இன்னவனை பொறுத்த அளவில் சித்தர் நிலைமையை நோக்கி சென்று கொண்டிருக்கிறான். சித்தர் நிலைமையை நோக்கி சென்று கொண்டு இருக்கிற அத்தனை பேர்களுக்கும் சந்திராஷ்டமம் ஒன்றும் செய்யாது. அந்த வாக்குறுதியை யாம் உலாவி வரும் தென் பொதிகை மலையோரம் நின்று தென்றல் காற்றாக இருந்து நான் சொல்கிறேன், இனி யாருக்குமே சந்திராஷ்டமம், எந்த வித தொல்லையும் தராது என்று அருளாசி. இன்றிலிருந்து அகத்தியன் கொடுக்கிற புது காணிக்கையடா! ஏன் என்றால், நீ என் இடத்துக்கு வந்திருக்கிறாய். நான் உனக்கு ஏதேனும் வெகுமதி தரவேண்டும் அல்லவா. ஆக இந்த விதத்தில் தான் அகத்தியன் ஏதேனும் வெகுமதி தர முடியும். சந்திரனையும், அஷ்டமங்களையும் பற்றி நீ கவலைப்படாதே. நீ உன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு ஏகுக நம்பிமலை நோக்கி என்று அருளாசி." என்று முடித்துக்கொண்டார்.
நண்பர்களோ "நங்கள் அப்போதே சொன்னோம். எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும் என்று. இப்பொழுது பாருங்கள், அவரிடம் திட்டு வாங்கிவிட்டீர்கள். இது உங்களுக்கு தேவையா?" என்று கிண்டலடித்தனர்.

சற்று நேர ஆசுவாசத்திற்கு பின் மெதுவாக மலை மீது வளைந்து செல்லும் பாதையில் நடக்கத் தொடங்கினோம். கோவில் இருக்கும் இடத்தை அடைந்த உடன், ஒரு நமஸ்காரத்தை செய்துவிட்டு, நேராக நம்பியாறு சென்று களைப்பு தீர குளித்தோம். பின்னர் வந்து மலை மேல் நம்பியை தரிசித்துவிட்டு, கோவில் வாசலில் பெருமாளுக்கு நேராக அமர்ந்து நாடியை புரட்டினேன். அதில் வந்த தகவல்கள் ஆச்சரியப்பட வைத்தது.

"ஒளி மறை அனுஷம் உதித்திட்ட வேளை இது. இங்குள்ளோர் அனைவருக்கும் எதிர்கால நிலைப்பற்றி, அகத்தியன் ஏன் இங்கு வரச்சொன்னேன் என்பது பற்றியெல்லாம், பெரும் கதை ஒன்றை யாம் சொல்லப்போகிறேன். நடந்து முடிந்த காலங்கள் எல்லாம், நீங்கள் எல்லாம் வாழ்ந்தது வாழ்க்கையல்ல. இனிமேல் வாழப்போவதுதான் வாழ்க்கை என்கிற முறையில் அகத்தியன் பல்வேறு காரணங்களை இங்கு சொல்லப்போகிறோம். அகத்தியன் இங்கு வந்து வாக்கு உரைக்க, நீங்கள் மனிதர்கள் மட்டுமல்லாமல், சித்தர்கள் 17 பேர்களும் இப்பொழுது என் முன் கூடியிருக்கிறார்கள். நீண்டநாட்களுக்குப் பின் அகத்தியன் என்ன சொல்லப்போகிறான் என்று கேட்பதற்காக. அருமை மைந்தர்கள், சிஷ்யர்கள் அனைவரையும் வரச்சொன்னேன். அத்தனை பேர்களும் இந்த மலையில் குழுமியிருக்கிற நேரமடா. அருமையான காலம், அருமையான சூழ்நிலை.  அன்றொருநாள் யாம் உரைத்தோம், வட்டப்பாறை பக்கத்தில் அமர்ந்து, வானத்தில் வட்ட நிலா பவனி வர, தெம்மாங்கு பாடுகின்ற குயிலோசை போல ஆங்கோர் அருவி வீழ்ச்சியில் நாதம் வர, தென்றல் காற்று அமைதியாக வீச, இங்கு உட்கார்ந்து மனித சித்தர்களும், தெய்வ சித்தர்களும் பேசுவோம் என்று அன்றைக்கும் ஒரு நாள் சொன்னேன். இன்றைக்கு ஒத்திகை பார்க்கத்தான் உங்களை வரச்சொல்லியிருக்கிறேன். பின் ஒரு நாள் மிகப்பெரிய காரியம் நடக்கப் போகிறது. அதற்குப் பிறகுதான் இந்த பூலோகத்தில் வித விதமான மாற்றங்கள் எல்லாம் ஏற்படப் போகிறது. அதிலிருந்து பொல்லாத பாபங்கள் செய்கின்ற அத்தனை பேர்களும் புழுப் புழுவாய் நெளிந்து உயிர் துடிக்கப் போகிறார்கள். புண்ணியவான்கள் அத்தனை பேர்களுக்கும் நல்லதொரு வாழ்க்கையை அகத்தியன் காட்டப் போகிறேன். ஏன் இங்கு வரச்சொன்னேன் என்பதெற்கெல்லாம் காரணம் உண்டு. இத்தனை காத தூரம் தள்ளி விட்டு, இந்த மலை பாங்கான அடியில், மௌனமான நேரத்தில் நம்பி திருக்கோயில் முன்பே இங்கு அகத்தியன் வந்து அமர்ந்ததுக்கும், அருள் வாக்கு சொல்வதற்கும் எத்தனையோ காரணங்கள் உண்டு. எல்லாம் தெய்வ ரகசியம் என்பதால் சிலவற்றை யாம் உரைக்கின்றோம்.

அருமை தம்பி போகன் அன்னவனும் பக்கத்தில் அமர்ந்திருக்கிறான். போகன் கொடுக்கின்ற மருந்துதான் உலகத்தில் மிகச் சிறந்ததான மருந்தடா. அகத்தியன் கூட  முழுப் பொறுப்பையும் போகனிடம் விட்டுவிட்டேன். போகனை வழிபட்டு வருகின்ற பலருக்கு, அவர்கள் கொடுக்கின்ற மருந்துகளெல்லாம் ஔஷதிகள் அல்ல, உயிர் காக்கும் மூலிகைகளாக இருக்கும். அந்த உயிர் காக்கும் மூலிகைகளை இன்னவன் கையால், இன்னவன் கொடுத்தால்தான், உயிர் பிழைக்கும் என்று நியதியும் இருக்கிறது, விதியும் இருக்கிறது. ஆகவே, போகனும் பக்கத்தில் அமர்ந்திருக்கிறான். போகனைப் பற்றி நிறைய விஷயங்கள்  சொல்லவேண்டும்.ரசவாதம் பண்ணினவன். பாதரசத்தை உண்டாக்கியவன். அதனால் 400, 500 ஆண்டுகள் மனிதர்களை வாழவைக்க முடியும் என்ற தத்துவத்தை உணர்த்தியவன். அப்படிப்பட்ட அரும் பெரும் ரகசியத்தை எல்லாம் அருகிலுள்ள போகன் ஓலைச்சுவடியில் எழுதி வைத்திருக்கிறான்.இந்த நல்லநாளில், அந்த ஓலைச்சுவடியை, 9 நாட்களுக்கு, அதாவது போகன் ஔஷதம் நடத்துகின்ற அன்னவன் கையில், 9 நாளைக்கு கையிலே ஒப்படைக்கிறேன். போகரின் சம்மதம் கேட்டுத்தான் சொல்கிறேன். அந்த நாடியை கொண்டுவரச் சொன்னதன் காரணமே, போகன் பெயரால் மருத்துவம் நடத்தும் அன்னவன் கையில் இன்று முதல் 9 நாட்கள் ஒப்படைத்துவிட்டு, பிறகு ஒவ்வொன்றாக யாம் சொல்லுவோம். ஒவ்வொரு ஔஷதங்களும், ஒவ்வொரு உயிரை காக்கும்,  ஒவ்வொரு நோயை போக்கும் என்பது உலகறிந்த விஷயம். மருத்துவம் சம்பந்தமாக பேசுகிறேன் என்று எண்ணிட வேண்டாம். இங்குள்ள மூவர் மருத்துவத்தில் தலை சிறந்தவர்களாக இருக்கின்ற காரணத்தால் அவர்களுக்கு மருத்துவத்தை முதலில் சொல்லிவிட்டு, பின் பொது வாழக்கைக்கும், இயல்பான நிலைமைக்கும் அகத்தியன் யாம் வருகிறேன்.

ஔஷதம் என்றாலே மருந்து. மருந்து எதற்கு என்றால் ஆயுளை காப்பதற்கு மட்டுமல்ல, மனத்துக்கும் மருந்து தேவை. அதனால் மா மருந்து என்பார்கள். மனம் ஒருநிலை பட்டுவிட்டால் வாழ்க்கையை வென்று விடலாம். மனத்தை பற்றி எத்தனையோ செய்திகள், எத்தனையோ வரலாறுகள். எத்தனையோ புனிதமான ஆத்மாக்கள் எல்லாம் படிப் படியாக பேசியிருக்கிறார்கள். பகுதி பகுதியாகவும், விலாவாரியாகவும் பேசியிருக்கிறார்கள். இங்கு மட்டுமல்ல, உலக நாடுகளில் முழுவதுமே மனத்தைப் பற்றியும், மனத்தின் பேராற்றலை பற்றியும், மனம் என்னென்ன பாடு படுத்துகிறது என்பதை எல்லாம் சொல்லி அவ்வப்போது குறிப்பேடுகளில் எழுதிவைத்தும், கொள்கை என பரப்பி வருகிற காலம் இது. மனம் ஒருவனுக்கு அமைதியாகிவிட்டால் வாழ்க்கையில் எங்கோ சென்று விட்டான். எதை  கொண்டு வந்தான்,எதை எடுத்துச் செல்வதற்கு என்று "பகவத் கீதையில்" அன்றொருநாள் பகவான் கிருஷ்ணன் சொன்னோதொரு வார்த்தை எல்லாம் இன்றைக்குத்தான் நிஜமாகப் போகிறதடா.




எதிர்காலத்தில், எந்தன் கை பிடிக்க ஒரு நாயகி வரவில்லையே என்ற கவலையும் உண்டு. இன்னவன் குடும்பத்திலே, ஒரு மிகப் பெரிய பிரம்மஹத்தி தோஷம் உண்டு. அதுமட்டுமல்ல, அன்னவன் குடும்பத்தை சேர்ந்த பலர் என்ன பண்ணியிருக்கிறார்கள் என்றால்,  முன் ஜென்மத்தில் ஜமீன்தாராக இருந்தவர்கள் என்று ஏற்கனவே சொன்னேன். ஜமீந்தார் காலத்துக்கு முற்காலத்தில், ஏறத்தாழ 333 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த மலையும், மலையை சார்ந்து இருந்த இடங்களையும் ஆண்டுகொண்டிருந்த காலத்திலே, தெரிந்தோ, தெரியாமலோ செய்த பிழை ஒன்று உண்டு. ஐந்து சிறுவர்களை, கண்ணை கட்டிவிட்டு, மலையிலே இருந்து கீழே தள்ளி, கருவேலங் குச்சியால், அவர்கள் கண்ணை குத்தி வேடிக்கை பார்த்த நிகழ்ச்சி ஒன்று உண்டு.

அப்பொழுதே அகத்தியன் நினைத்தேன், இன்னவனுக்கு தந்தைக்கு, தந்தைக்கு, தந்தை; அன்னவன் அகத்தியன் நாடியை நாடி வந்த பொழுது, அப்பொழுது சொன்னேன் "உன் குடும்பத்தில் ஆங்கொரு பிரம்மஹத்தி தோஷம் இருக்கிறது. அந்த தோஷத்தை நிவர்த்திக்க, நீ ஏகுக ராமேஸ்வரம் என்று சொன்னேன். ராமேஸ்வரம் சென்று அன்றைக்கே ஒரு தில தர்ப்பணம் செய்துவிட்டு வந்திருந்தால், இவன் குடும்பத்தில் நேத்ர தோஷம் ஏற்பட்டிருக்காது. நேத்ரம் என்றால் கண், தோஷம் என்றால் கண் பார்வை இல்லாத நிலமை. ஆனால், இதற்கு அவன் காரணமல்ல, அவன் தந்தைக்கு, தந்தைக்கு, தந்தை செய்துவிட்ட மிகப் பெரிய குற்றமே காரணமாகும். இப்பொழுதும் பழுது ஒன்றுமில்லை, அதற்கான மூலிகை ஒன்று இங்கே இருக்கிறது. நேத்ரா தோஷ நிவாரணி என்று ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டேன். அதை விட பன்மடங்கு உள்ள செடி, இப்பொழுது தான் முளைத்திருக்கிறது. அதையும் பார்த்துவிட்டுத்தான், அதையும் உனக்கு சொல்லவேண்டும் என்பதற்காகத்தான், அகத்தியன் உன்னை இங்கு அழைத்தேன்.  இல்லை என்றால், அகத்தியன் இந்நேரம் மலையை சுற்றி வந்து கொண்டிருக்கிற நேரம். யாருக்கும் வாக்குரைக்க மாட்டேன் என்று சொன்ன நேரம். ராகுவின் நேரமானதால், நல்லது வேண்டாம் என, மங்களமான விஷயம் வேண்டாம் என்று சொன்னேன். இப்பொழுது ராகுவே மனமுகுந்து போனதால், அன்னவன் துணை கொண்டுதான் அகத்தியன் நான் இதை செப்புகிறேன். ஆகவே அன்னவன் ஒன்று செய்யட்டும். இங்கிருந்து, ஏற்கனவே சொன்னேனே, 42 காத தூரத்தில், ஒரு அருமையான செடி ஒன்று பூத்திருக்கிறது. அதற்கு, நேத்ர தோஷ நிவாரணி என்று பெயர். சிவபெருமானின் முக்கண்ணை போலவே அந்த செடி இருக்கும். மொத்தமே 9 செடிகள், 9 இலைகள் இருக்கும். அதன் அடியிலே, வேரிலிருந்து ஒரு ஒளி வட்டம் கீழிருந்து மேலே சென்று கொண்டிருக்கும். நள்ளிரவு நேரத்தில் தான் பறிக்க முடியும், ஆனால் தக்க பாதுகாப்புடன் தான் செல்ல வேண்டும். அந்த நேத்ர தோஷ நிவாரணி என்று சொல்லுகின்ற அந்தச் செடி, மற்ற செடிகளுக்கு வெளிச்சத்தை காட்டுவது போல் இருக்கும். எந்த வித கருவியும் கொண்டு செல்லாமல், எந்த வித ஒளி உமிழும் கருவியும் கொண்டு செல்லாமல், நடை பாதையிலிருந்து அங்கிருந்து 12 காத தூரம் சென்றால், நடு மட்டத்தில், நந்தவனத்தில், கரும் துளசிக்கு பக்கத்தில் அந்த ஒளி படரும் செடி முளைத்திருக்கிறது. அது ஒரு மூலிகை செடி. தள்ளி நின்று கண்டால் தெரியும். பூமியிலிருந்து ஒளிவட்டம் அதன் இலைக்கும் செடிக்கும் போய் கொண்டிருக்கும். அது பின்னால் 12 ஆண்டுகள் கழித்து மாமரமாக மாறும். ஆனால் அது மாமரமாக மாறும் வரை அந்த செடியை வைத்திருப்பார்களோ, வெட்டிவிடுவார்களோ, அகத்தியன் யாம் அறியேன். ஆனால் இன்றைய தினம் அந்த செடி பூத்திருக்கிறது. அங்கு சென்று அந்த செடி இலையை, தைரியமாக பறித்து வரலாம்.

அதை பறித்து விளக்கெண்ணையை வைத்து, ஆமணக்கு எண்ணை என்று அதற்கு பெயர், ஆமணக்கு எண்ணயில் அந்த செடியின் சாற்றை பிழிந்து வேப்பமர பொந்திலே அதை வைத்து, அடைகாத்து, 32 நாள் கழித்து, அந்த சாற்றை எடுத்து, ஒளி இழந்த அந்த குழந்தை, நபர்களுக்கெல்லாம் இரவில் நடுநிசி நேரத்தில், 12 மணியிலிருந்து 2 மணிக்குள் அந்த காலம் மூன்றாம் ஜாமத்தில், ஒரு சொட்டு, 2 சொட்டு என்று ரெண்டு பக்கம் விட்டு வந்தால், எந்த மருத்துவரினாலும் சாதிக்க முடியாத அந்த சாதனையை, அந்த மூலிகை செடி சாதிக்கும். அந்த செடியை நட்டவர் "போகனடா". ஆகவே, போகன் நட்ட முதல் செடி அது தான். அவன் உச்சந்தலயிலிருந்து உள்ளங்கால் வரை என்றுதான் எழுதியிருக்கிறான். அதை இப்பொழுது சற்று புரட்டிப் பார்த்தேன். போகனிடம் ஏற்கனவே அனுமதி வாங்கிவிட்டதால், அகத்தியனே போகன் சார்பாக பேசுகிறேன். போகன் நட்ட முதல் செடி அதுதான். ஆனால் 24 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் அந்த செடி பூக்கும், காய்க்கும். அதன் பூவுக்கு வாசனை இருக்காது. நெருங்கி போனால், சந்தன வாசனையும், மகிழம்பூ வாசனையும் அடிக்கும். மகிழம் பூ இருந்தாலே, அங்கே பாம்புகள் அதிகம் வரக்கூடிய இடமடா. அந்த வாசனைக்கு ஆசைப்பட்டு வரும். ஆகவே, அங்கு சில அற்புதமான நாகங்களை பார்க்கலாம். அது எதுவும் செய்யாது, யாரையும் கடிக்காது. அந்த அற்புதமான நாகத்தை பார்த்துவிட்டால், ஆதி சேஷனை நேரடியாக பார்த்த புண்ணியம் கிடைக்கும். எந்த வித தொல்லையும் இல்லாமல்  சுருண்டு ஓரத்தில் படுத்துக் கிடக்கும். ஆனால் அதிலும் ஒரு ஒளி இருக்கும். அதன் பின் புறத்தில் நாமங்களில் பார்த்திருப்பாய், மூன்று வகை நாமங்கள் வரிசையாக இருக்கும். மேலே நடுவே, கீழே என்று மூன்று வகை நாமங்கள் அந்த பாம்புக்கு உண்டு. இதை எதற்கு சொல்லுகிறேன் என்றால், அப்படிப்பட்ட பாம்புகள், ஒருவேளை, நடமாடி, நம்பி கோவிலுக்கு வரலாம். தரிசனம் செய்வதற்காக. யாரையும் கடிக்காது. ஆனால் கடுமையான விஷம் கொண்டவை. அந்த நாகப் பாம்புகள், அந்த மரத்தை சுற்றி இருப்பதால், அந்த இலையின் ஒளிவட்டம் கூட அந்தக் கண்ணுக்கு தெரியும். அந்த செடியின் இலையை பறித்து, விளக்கெண்ணை, ஆமணக்கெண்ணையில் ஊறப்போட்டு, சாறு பிழிந்து வேப்ப  மரத்துப் பொந்துக்குள் வைத்துவிட்டு, 32 நாட்கள் கழித்து எடுத்து வந்து, அதை ரெண்டு சொட்டு கண்ணிலே விட்டால், இழந்த பார்வை பெறலாம் என்று சற்று முன் சொன்னேன். அது எந்த மருத்துவத்திலும், தற்கால மருத்துவர்கள் அல்ல, எக்கால மருத்துவனாலும் சாதிக்க முடியாத சாதனயடா. அதையும் முடிந்தால், ஏன் என்றால் சற்றுமுன் அகத்தியன் இங்கு வந்து அமர்ந்த பொழுது, பழைய ஓலைச் சுவடியை புரட்டிப் பார்த்து, நல்லதொரு ஜமீந்தார் குடும்பத்தை சேர்ந்தவன், நாலு திக்கும் கொடி கட்டி பறந்தவன், மலை பாங்கு அரசனாக வாழ்ந்தவன், ஏகப்பட்ட மூலிகைகளை பயிரிட்டு அப்பொழுதே நிறைய கொடுத்தவன். அந்த குடும்பத்தை சேர்ந்தவன் என்பதாலும், இவன் மூதாதையர்கள் செய்த தவறால் தான் அங்கு நான்கு பேர்கள் விழியை இழந்து நிற்கின்ற காட்ச்சியை அகத்தியன் யான் கண்டேன். அவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவ வேண்டும் என்றுதான் அகத்தியன் விரும்பினேன்.

ஏற்கனவே, முன்பு உரைத்தேன். யாருக்காவது, எதற்காவது அகத்தியன் மேல் பற்று கொண்ட அனைவருக்கும் ஏதேனும் ஒரு நன்றி கடன் செய்யவேண்டும் என்று அகத்தியன் ஆசைப் பட்டேன் என்று சொன்னேன் அல்லவா! அப்பொழுது இது ஒன்று விட்டுவிட்டது. ஏன் என்றால் இது மிக மிக முக்கியம். வாழ்க்கையிலே ஒளி ஏற்றிய புண்ணியம் என்று இதைத்தான் சொல்லுவார்கள். விளக்கு வைத்து ஒளி ஏற்றுவது என்பது ஒரு பக்கம். வாழ்க்கையில் ஒளி ஏற்றுவது என்பது மறுபக்கம். ஆனால் இவர்களுக்கு கண்ணிலே ஒளி இல்லை, வாழ்க்கை இல்லை. கண்ணிலாமல் வாழ்க்கை இருந்து விட்டால், மிகப் பெரிய கொடுமை. அந்த கொடுமையை அனுபவித்த எத்தனையோ பேர்களை காப்பாற்றி இருக்கிறேன்.

எனக்கொரு யோசனை சற்று முன் தான் தோன்றிற்று. இல்லை என்றால் அகத்தியன் இத்தனை தூரம் வாய் திறந்து பேசியிருக்க மாட்டேன். மௌனமாக் உலா வந்து கொண்டிருப்பேன். 9 சித்தர்களை வைத்து உங்களை காக்க வைத்துவிட்டேன். ஆகவே அஞ்சிட வேண்டாம்.

சற்று முன் சொன்னேனே, ஆங்கொரு தங்கத்துக்கு மன்னனாக இருக்கிறவன், நீ இருக்கிறாய், அகத்தியன் இருக்கிறாய் என்று, அந்த வார்த்தை அகத்தியனுக்கு புளங்காகிதமாயிற்றடா. என்ன நம்பிக்கை உனக்கு அகத்தியன் மேல்? எப்படிப்பட்ட நம்பிக்கையை அசையாமல் வைத்திருக்கிறான்.  எத்தனை காரியங்களை படிப்படியாக செய்கிறான் என்பதை எல்லாம் பார்க்கும் போது இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களை அகத்தியன் வைத்திருக்கிறேன் என்று அகத்தியனே ஒருமுறை மாரை தட்டிக் கொள்கிறேனடா. அகத்தியன் தன் நிலை விட்டு இறங்கக் கூடாது. அவன் 4000 ஆண்டு முனிவன், அவன் பற்று பாசம் எல்லாம் தாண்டி நிற்கிறவன் என்றாலும் கூட, லோபா முத்திரையை பக்கத்தில் வைத்துக்கொண்டு அகத்தியன் பற்று பாசம் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என்று கேட்கலாம். லோபாமுத்திரை என்பது காவிரி தான். காவிரிதான் என்னிடம் 6 மாதம் காவிரியாகவும், 6 மாதம் லோபா முத்திரையாகவும் இருக்கிறாள். 6 மாதம் தாமிர பரணி நதியாகவே இருக்கிறாள். ஆக, தாமிரபரணி நதியைத்தான் அகத்தியன் அருகிலே வைத்துக் கொண்டு இருக்கிறேனடா! இல்லை என்றால், எந்த மாநிலத்துக்கும், எந்த ஊருக்கும் கிடைக்காத சிறப்பு, தாமிரபரணிக்கு கிடைக்குமா? ஆகவே, லோபா முத்திரையை வணங்கினால், தாமிரபரணியை வணங்கியது போல் ஆகும். லோபமுத்திரையை நான் நினைத்தால், தாமிர பரணியே உனக்கு வந்து அபிஷேகம் செய்தது போல் ஆகும்.  லோபமுத்திரையை வணங்கினால், காவிரி நதியே வந்து உன்னை கட்டியணைத்து, தாயாக முத்தமிட்டு, நெஞ்சில் தடவி கொடுத்து, பூ வாரி பொட்டுவைத்து, உன்னை கை தூக்கி அணைத்து செல்வதைப் போலவே எண்ணலாம். அத்தனை பாசமும், பண்பும் அகத்தியன் வைத்திருக்கிறேனடா! அகத்தியன் ஒரு பிரம்மச்சாரி, அகத்தியனுக்கு மனைவி என்பது கிடையாது. ஆனால் தனிப்பட்ட ஒரு முனிவன் ஒரு வீட்டில் இருந்துவிட்டால், அதை தோஷம் என்று சொல்வார்களே என்பதற்காகத்தான், இதையெல்லாம் மானிடர்கள் பிற்காலத்தில் ஏற்படுத்துவார்கள், அதில் அகத்தியன் பெயரும் கெட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் ,அகத்தியனே லோபாமுத்திரை என்கிற பெயரை உண்டாக்கி, அதில் காவிரியையும், தாமிர பரணியையும் கலக்கச் செய்திருக்கிறேன்.

இப்போது கூட, இந்த நதி நீரை ஒரு வாரம் என்ன, ஒரு மாதம் வைத்திருந்தால் கூட கெட்டுவிடாது. அப்படிப்பட்ட புண்ணியநதி அது. அப்படிப்பட்ட தாமிரபரணி, தன்  நீரிலேயே தானே குளிக்க ஆசைப்பட்டாள். அப்படி ஆசைப்பட்ட அவள், ஆனந்தமாக மலை உச்சியிலிருந்து இறங்கி, ஆனந்தமாக நீச்சல் அடித்துக் கொண்டு வருகிறாள். அப்படி வருகின்ற நேரத்தில் தான், என் எதிரே,  இடது பக்கத்தில் இருக்கின்ற அந்த தங்கராசும் அவன் நண்பர்களும் நீராடி விட்டு வந்திருக்கிறார்கள். ஆகவே, தாமிரபரணியே, இவனை வாழ்த்தி நீராடிவிட்டு சென்று இருக்கிறது. அது என்பது மிகப் பெரிய புண்ணியம். அந்த புண்ணியத்தை சற்று முன்புதான் பெற்றார்கள் என்பதால், அதை சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் அவனையும் வரச்சொன்னேன். ஏன் என்றால், இவர்கள் நீராடியது வெறும் நீர் வீழ்ச்சி அல்ல. அவசரப் பட்டு குளித்ததாக எண்ண வேண்டாம். இந்த நேரத்தில் தான் தாமிரபரணி, மலை உச்சியிலிருந்து மெதுவாக, அமைதியாக இறங்கி வந்து, இரு பக்கமும் அக்கம் பக்கம் பார்த்துவிட்டு, தன் இருகையால் தண்ணீரை எடுத்து தெளித்துவிட்டு வந்த நேரம். அப்படி தெளிக்கும் போதுதான் இவர்கள் இருவரும் நீராடினார்கள். ஆகவே, அந்த நீராடிய தன்மை, தாமிரபரணியே இவர்களுக்கு நீராடி வைத்திருக்கிறது என்பது மிகப் பெரிய புண்ணியம். இனி இவர்கள் எத்தனை காலம், ஆண்டுகள், இந்த மலையில் நடந்தாலும், இத்தகு அதிசயங்களைப் பெறப் போகிறார்கள். இங்கு அகத்தியன் சொன்னது கூட, சற்றுமுன் நடந்த அதிசயத்தைத்தான் சொல்லியிருக்கிறேன். இன்னும் பல அதிசயங்கள், அவர்கள் காணப் போகிறார்கள்.

நன்றி :- சித்தன் அருள்

மீள்பதிவாக :-

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

No comments:

Post a Comment