அனைவருக்கும் வணக்கம்
மூத்தோனை வணங்கி, வினை தீர்க்கும் விநாயகர் பற்றி இங்கே அறியலாம். அண்மையில் நாம் சென்று வந்த யாத்திரையில் கண்ட சௌதட்கா ஸ்ரீ மஹாகணபதி கோயிலில் பெற்ற தரிசனத்தை இங்கே கண்டு அருள் பெறுவோம். அதற்கு முன்பாக சில தகவல்கள்.
விநாயகர் - வினை தீர்ப்பவர், நாயகர் என்றால் நமக்குத் தெரியும், விநாயகர் என்றால் பெருமை பொருந்திய,முன்னின்று நடத்தும், மங்களம் தருகின்ற, எந்த ஒரு செயலையும் செய்து முடிக்கின்ற நாயகர் என்று பொருள் கொள்ளலாம்.
எந்த ஒரு கோயில் என்றாலும் அதற்கென்றே சில ஆகம விதிகள் படி அமைப்பர். இந்த நீளம்,அகலம், கோபுரம், விமானம், கருவறை என அனைத்தும் கணக்கிட்டு கோயில் அமைப்பர். இது போன்ற கட்டுக்குள் அதாவது ஆகம விதிகளுக்குள் அடங்காதவர் நம் விநாயகர். ஆற்றோரத்தில் இருப்பார், ஆல மரத்தடியில் இருப்பார், ரோட்டோரத்தில் இருப்பார், வீட்டின் முற்றத்திலும்,முட்டுச் சந்திலும் இருப்பார். இவருக்கு யார் வேண்டுமானாலும் கோயில் எழுப்பலாம். இது போன்ற ஒரு அமைப்பில் தான் சௌதட்கா ஸ்ரீ மஹாகணபதி கோயில் உள்ளது.
முருகனுக்கு அறுபடை வீடு என்று உள்ளது. அதே போல் விநாயகருக்கும் உண்டு. முதலில் அறுபடை வீடு என்பது எண்ணைக்கையில் குறிப்பதன்று. இது ஆற்றுப்படை வீடு என்றே கூறப்படும்.இது பின்னாளில் எண்ணிக்கை குறித்து ஆறுபடை வீடு என்றானது. இது பற்றி நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் தெளிவு செய்கின்றார்.வாய்ப்பு கிடைத்தால் படித்து இங்கே தருகின்றோம். சரி..விநாயகருக்கு உடைய அறுபடை வீடு இதோ.
முதல் படைவீடு – திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில்
இரண்டாம் படைவீடு – கடலூர் விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில்மூன்றாம் படை வீடு – நாகப்பட்டினம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்
நான்காம் படைவீடு – மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
ஐந்தாம் படைவீடு – காசி துண்டிவிநாயகர் திருக்கோயில்
ஆறாம் படைவீடு – கடலூர் திருநாரையூர் சித்தநாதேஸ்வரர் திருக்கோயில்
விநாயகர் நமக்கு உணர்த்தும் பாடம் என்ன என்று நாம் என்றாவது அறிந்து இருக்கின்றோமோ? தினமும் அவரை துதிக்கின்றோம். துதிக்கும் போது என்றாவது ஒரு நாள் அவர் நமக்கு சொல்கின்ற பாடம் பற்றி பார்த்து இருப்போமா? முதலில் கோயிலுக்கு சென்று கண் மூடி வணங்கும் பழக்கத்தை விட்டுவிடுங்கள். கண் திறந்து கடவுளைக் கண்டு , முதலில் கண்ணில் நிறுத்தி, பின் மனதில் இறுத்தி வணங்க பழகுங்கள். நாளாக, நாளாக உங்களுக்குள் அந்த கடவுள் வாசம் மட்டுமல்ல..சுவாசம் செய்வார்.
விநாயகரிடம் என்ன தெரிகின்றது? பெரிய காது, சின்ன வாய் ,பெரிய வயிறு, பெரிய தலை, சிறிய கண்,தும்பிக்கை. இவை எல்லாம் ஏன் பெரிதும் ,சிறிதுமாக உள்ளது. சின்ன காதாக படைத்து பெரிய வாயாக படைத்திருக்கலாமே ? அனைத்திற்கும் பொருள் உண்டு.
பெரிய காது - நல்ல செய்திகளை நிறைய கேளுங்கள்
சின்ன வாய் - குறைவாக பேசவும்
பெரிய வயிறு - உலகமே நான் தான் என நம்புங்கள்
பெரிய தலை - நல்ல செய்திகளை சிந்தியுங்கள்
சிறிய கண் - எதையும் உன்னிப்பாக கவனியுங்கள்
தும்பிக்கை - லட்சியத்தில் உறுதி கொள்ளுங்கள்.
இதோ.. அவரே சொல்லுகிறார்.
இது போன்று விநாயகப் பெருமான் பற்றிய செய்திகள் ஏராளமாக உள்ளது. இது போன்ற செய்திகளை தனிப்பதிவாக அறியலாமா. இனி சௌதட்கா ஸ்ரீ மஹாகணபதி கோயிலுக்கு செல்வோம்.
அண்மையில் நாம் மங்களூர் ஆன்மிக யாத்திரை சென்றோம். மங்களூர் முழுதும் பசுமை நிரம்பி வழிகின்றது. முதலில் நாம் குக்கே சுப்பிரமணியர் கோயிலுக்கு சென்றோம். முதலிலே முருகன் அருள் பெற்றோம். ஆனால் விநாயகர் தரிசனம் பெறாது இருக்கின்றோம் என்று மனதில் வருத்தம் இருந்தது. இதனை நாம் வெளிகாட்டிக்கொள்ளவும் இல்லை. உடனே ஓட்டுநர் அடுத்து நாம் ஒரு விநாயகர் கோயிலுக்கு செல்கின்றோம் என்றார். மனம் குதூகலித்தது. மனமெங்கும் அந்த தொந்திக் கணபதியை நிறைத்தோம்.
குக்கே சுப்பிரமணியர் கோயிலில் இருந்து சுமார் 35கி.மீ பயணம் செய்தோம். மனதில் விநாயகர் கோயில் என்றால் விநாயகர் மட்டுமா? கோபுரம் எப்படி என்று பல கேள்விகள். ஆனால் அங்கு சென்று அடைந்ததும் நம்மை பரந்த வெளியே வரவேற்றது. பரந்த வெளியில் பசுமை அப்பி இருந்தது. கண்ணுக்கு குளிர்ச்சியாக மட்டுமின்றி மனதிற்கு குளிர்ச்சியாகவும் அந்த இடம் இருந்தது.
வெளியில் இருந்து பார்த்த போதே விநாயகரின் தரிசனம் கிடைத்தது.இருந்தாலும் அருகில் சென்று தரிசிக்க நாம் விரும்பினோம். அதற்குள் கோயில் வரலாறு கேட்டுவிடுவோமா?
சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர், இந்த பகுதியில் ஒரு கோயிலை செல்வந்தர் ஒருவர் பராமரித்து வந்துள்ளார். அங்கு ஏற்பட்ட ஒரு போரில் அந்த கோயில் அப்படியே அழிந்து விட்டது. பின்னர் அந்த பகுதியில் இருந்த மாடு மேய்க்கும் சிறுவர்கள் அங்கிருந்த கோயிலில் உள்ள விநாயகப் பெருமானை மட்டும் எடுத்து வந்து தற்போது இருக்கும் இடத்திற்கு கொண்டு வந்து வழிபட்டு இருக்கின்றார்கள். அப்போது அங்கே கிடைத்த வெள்ளரிப் 'பிஞ்சுகள் கொண்டு அனுதினமும் விநாயகருக்கு படைத்தது வழிபாடு செய்து இருக்கின்றார்கள். அதுவே இந்த இடத்திற்கு "சௌதட்கா" என்ற பெயரை வழங்கிற்று.
சௌதீ என்றால் கன்னடத்தில் வெள்ளரிப்பிஞ்சினையும் அட்கா என்பது பரந்து விரிந்த இடம் என்ற பொருளும் சேர்ந்து "சௌதட்கா" ஆயிற்று.
நாம் ஏற்கனேவே சொல்லியது போல், இங்கு விநாயகப் பெருமான் பரந்த வெளியில் இருக்கின்றார். கர்ப்ப கிரகம் இங்கே இல்லை. அந்த பரம் பொருளை கர்ப்ப கிரகத்துள் அடைக்க முடியமா என்ன?அந்த பரம் பொருளை பரந்து விரிந்த இடத்தில் தானே காண முடியும். தர்மஸ்தலா என்ற கோயிலில் இருந்து சுமார் 16 கி.மீ தொலைவில் இந்த கோயிலை அடையலாம். இந்த கோயிலில் உள்ள மற்றொரு சிறப்பம்சம் இங்கே ஏகப்பட்ட மணிகள் கட்டி இருந்தார்கள். சும்மா ஒரு இடத்தில இருந்தால் பரவாயில்லை. திரும்பி பார்க்கும் இடமெல்லாம் மணிகள் தான்.
இந்த மணிகள் அனைத்தும் தம் கோரிக்கைகள் நிறைவேறியதும் பக்தர்கள் கட்டியதாக சொன்னார்கள். அப்படி என்றால் இந்த பிள்ளையார் வேண்டுவன தரும் பிள்ளையார் என்பதில் துளி அளவும் சந்தேகமில்லை. நாம் இவருக்கு மணிப் பிள்ளையார் என்று பெயர் வைத்துள்ளோம். இவரை வேண்டுதல் பிள்ளையார் என்றும் கூட அழைக்கலாம் அன்றோ!
சரி.தரிசனத்திற்கு செல்வோமா?
நம்மை வரவேற்கும் கோயில் பதாகை. உள்ளே செல்லும் போதே இரு மருங்கிலும் மணிகள், மணிகள். இவ்வளவு மணிகளை நாம் ஒரு சேர கண்டதில்லை. ஆலய மணிகள் சப்தமின்றி இங்கே இருந்தது. அனால் ஆலயமணிகளின் அணிவகுப்பு கண்ணில் நிறைந்தது.
ஒரு பெரிய மணியைக் கண்டோம்.
அங்கிருந்த கடையில் மணிகளாக தொங்கிக் கொண்டிருந்தது.அந்த அழகை நீங்களே பாருங்கள்.
திரும்பிய இடமெல்லாம் மணிகள். இந்தப் பிள்ளையாரை மட்டுமல்ல, கோயிலையே மணிக்கோயில் என்றும் அழைக்கலாம் என்று தோன்றுகின்றது. இதோ தூரத்தில் தெரிகின்றார் அல்லவா? அவரே தான்.
அருகில் சென்றோம். நமக்குத் தெரிந்த துதிகளை ஓதினோம்.
இந்து இளம்பிறை போலும் ஏயிற்றனை
நந்தி மகன்தனை, ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே!
மூஷிக வாகன மோதக ஹஸ்த சாமர கர்ண விளம்பித்த சூத்ர |
வாமண ரூப மகேஸ்வரப் புத்திர விக்ன விநாயக பாத நமஸ்தே||
"பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக்கரிமுகத்துத்தூமணியே நீ எனக்கு
சங்கத்தமிழ் மூன்றும் தா."
என்றெல்லாம் வேண்டினோம்.
முக்கிய திருவிழாக்களில் அலங்கார தரிசனத்தில் மணிப் பிள்ளையார் தரிசனம் மேலே இணைத்துள்ளோம். மேற்கொண்டு செல்ல உள்ள யாத்திரையில் நீர் தான் வழி நடத்த வேண்டும் என்று வேண்டி, அங்கிருந்து விடை பெற்றோம்.
எப்படிச் செல்வது ?
- மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்
No comments:
Post a Comment