"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, March 5, 2020

தீராத நோய்களைத் தீர்க்கும் திருமகன் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் - குரு பூஜை அழைப்பிதழ் - 07.03.2020

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

அள்ள அள்ள குறையாது அருள் தருபவர்கள் சித்தர்கள். நம் தளத்தை கூர்ந்து பார்த்து பார்த்தால் தெரியும். தளத்தின் பதிவுகளில் மகான்கள், சித்தர்களின் குரு பூசை தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றது. இது நம்மால் தீர்மானம் செய்யப்படுவது அன்று. முழுக்க முழுக்க குருவின் அருளால் தான் இங்கே பதிவுகள் வழங்கப்பட்டு வருகின்றது.

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ்,களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ்,நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ், சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி ,குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை,சித்தர்கள் அறிவோம்: கூடுவாஞ்சேரி மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள், பூந்தமல்லி பைரவ சித்தர் என சித்தர்களின் தரிசனம் நம் தலத்தில் வந்து கொண்டே உள்ளது.

புதுவை சித்தர்கள் வரிசையில் இன்று நாம் அறிய இருப்பது ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள்.



பதிவின் இறுதியில் நாம் நமக்கு கிடைத்த அழைப்பிதழ் இணைத்துள்ளோம். நாம் சுவாமிகள் பற்றி மட்டும் தான் சொல்ல நினைத்தோம். ஆனால் நமக்கு சுவாமிகள் குரு பூசை பற்றிய அழைப்பிதழ் கிடைத்தது. இறைவனின் கருணையை பார்க்கும் போது, தேடல் உள்ள தேனீக்களாய் குழுவிற்கு சித்தர்கள் ஆசியும், மகான்களின் ஆசியும் பரிபூரணம் என்பது தெரிகின்றது. காரணமின்றி காரியமில்லை என்பது மீண்டும் மீண்டும் நமக்கு உணர்த்தப்பட்டு வருகின்றது. சரி..வாருங்கள். குருவருள் பெறுவோம்.




மகான் படே சாஹிப் சுவாமிகள் ஒரு இஸ்லாமிய ஆத்ம ஞானி.புதுவை, சின்ன பாபு சமுத்திரம் என்ற
ஊருக்கு அருகில் வாழ்ந்து சமாதியடைந்ததாக வரலாறு கூறுகிறது. அவரது பூர்வீகம் என்ன- தாய் தந்தை யார், அவர் எங்கிருந்து, எப்படி புதுவை வந்தார் என்ற விபரம் ஏதும் இல்லை.உண்மைப் பெயர் என்ன என்பதும் தெரியவில்லை. மிகப் பெரிய ஞானி என்பதை-உருதுவில் மஹான் படே சாஹிப் என்று மக்கள் இவரை அழைக்கிறார்கள்.

இறைவனின் பேராற்றலை உணர்ந்த பிறகு சாதி, மதம், இனம் அறவே மறைந்துவிடும். படே என்றால் பெரிய என்று பொருள். உயர்ந்த இத்தகைய நிலையில் இருந்த உத்தமராக விளங்கியதால் இவரை பாபா படே சாயபு என்று அழைத்தனர்.ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற மத ஒருமைப்பாட்டைக் காக்கும் சித்த புருஷரே ஸ்ரீ படேசாகிப் ஆவார். நோயாளிகளுக்கு விபூதி கொடுத்தே நோய்களைப் பறந்தோடச் செய்தார்.

இவர் யாரிடமும் பேச மாட்டார்.மௌனமாகவே இருப்பார்.சதா இறை சிந்தனையில் மௌனமாக இருப்பார்.புதுவையிலுள்ள திருக்கனூர் என்னும் சிற்றூரில் சில காலம் தங்கியிருந்துள்ளார். திருக்கனூருக்கும், சின்ன பாபு சமுத்திரத்திற்கும் இடையிடையே சென்று வருவதுண்டு.

இறைவனின் கருணையால்,சித்துக்கள் கைவரப்பெற்றார்.ஆற்றல் பெருகியது. மக்கள் இவரது ஆற்றலை உணர்ந்து இவரை தஞ்சமடைந்தார்கள்.பாமர மக்கள் மகானுக்கு மரியாதை செலுத்தினார்கள்.தாங்க முடியாத நோய் உள்ளவர்கள் தங்கள் குறைகளை
மகானிடம் கூறுவார்கள்.சற்று நேரம் கழித்து தலையசைப்பார்.நோய் குணமாகிவிடும். அங்குள்ள ஒரு மரத்தைச் சுற்றும்படி ஜாடை காட்டுவார்.சுற்றுவார்கள். நோய் குணமாகும்.விளையாடிக் கொண்டிருக்கும் சிறு குழந்தைகளிடம் செல்வார்.

ஒவ்வொரு குழந்தையின் கையிலும் ஒரு பிடி மண்ணை அள்ளிக் கொடுத்துக் கையை மூடச் சொல்வார்.பின் தாம் அங்குள்ள குழியில் உட்கார்ந்துக் கொண்டு மேலுள்ள மண்ணைப் போட்டு தம்மை மூடச் சொல்வார். குழந்தைகளும் அவ்வாறே செய்து விட்டு கையை திறந்து
பார்க்க -கையிலுள்ள மண் சர்க்கரையாக மாறியிருக்கும். இந்த அதிசயத்தை-தங்கள் பெற்றோரிடம் சொல்வார்கள்.ஊர் மக்கள், திரண்டு வந்து மண்ணால் மூடப்பட்ட மகானை -காப்பாற்ற மண்ணை எடுத்துவிட்டு பார்ப்பார்கள்.மகான் இருக்க மாட்டார். ஒரு சிலர் மகானை வேறு இடத்தில் பார்த்ததாக சொல்வார்கள்.அங்கு சென்று தேடினால் அங்கும் இருக்க மாட்டார். ஊர்மக்கள்,வருத்தமுற்று இருக்கையில் கூட்டத்தினின்று திடீரென்று வெளிவந்து காட்சி கொடுப்பார்.



ஒரு நாள் இறைவனிடமிருந்து தனது ஆத்ம சாதனை முடிந்த குறிப்பு கிடைத்தது.இறைவனோடு கலப்பதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டார்.குழந்தைகளை குழி தோண்டச் சொன்னார்.குழந்தைகள் கையில் மண்ணை அள்ளிக் கொடுத்துவிட்டு கையை மூடிக் கொள்ளச் சொல்லிக் குழியில் இறங்கினார். தன் மேல் மண்ணைப் போட்டு மூடச் சொல்லிவிட்டு கையை திறந்துப் பார்க்கச் சொன்னார்.குழந்தைகள் கையை திறந்துப் பார்த்தனர்.கையில் மிட்டாய் இருந்தது.

இம்முறை,உண்மையிலேயே மகான் சமாதியடைந்ததை மக்கள் உணர்ந்து கொண்டனர்.சில நாள் கழித்து பம்பாய் சுவாமி என்னும் மகானின் சீடர் மகானின் சமாதி மேல் கட்டிடம் எழுப்பி-மக்கள் வந்து வழிபட வசதி ஏற்படுத்திக் கொடுத்தார்.மகானின் மகத்துவத்தை உணர்ந்த மக்கள் தினமும் சமாதியில் வழிபாடு நடத்துகின்றனர்.பிரதி செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சமாதிக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.மகான் படே சாஹிப்- ஒரு இஸ்லாமிய ஞானியானாலும், அனைத்து மத மக்களும் வழிபாடு செய்வது-ஞானபூமியாகிய நமது புதுவையின் பெருமையாகும்.



சமாதி முன் அணையா விளக்கு எப்போதும் ஒளிவிட்டு எரிந்துக் கொண்டிருக்கிறது. காற்றிலும், மழையிலும் கூட அணைவதே இல்லை.ஒரு சமயம் விளக்கில் எண்ணெய் தீர்ந்து விட்டது.விளக்கு அணையப் போகும் சமயம்,அப்போது அங்கு படுத்திருந்த ஒருவரின் கனவில் சொல்லி எண்ணெய் ஊற்றச் செய்தார்.மக்கள் தங்கள் குறைகளை சமாதிமுன் நின்று மனம் விட்டுசொல்லி அழுகின்றனர்.அவர்களின் பெருந்துயர் தீர்கிறது.சிலர்,அத்திருக்கோயிலிலேயே இரவு தங்கியிருந்து வேண்டிக் கொள்கின்றனர்.சிலர் நேர்த்திக் கடனாக பிஸ்கட்டும்,அன்னதானமும் வழங்குகின்றனர்.



ஆண்டுதோறும் மகான் படே சாஹிபிற்கு குருபூஜை மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது. குருபூஜையன்று ஒரு பெரிய அண்டாவை வைத்து விடுகின்றனர்.மக்கள், தங்கள் வசதிகேற்ப, தங்கள் வீட்டிலேயே சாதம் கிண்டி அந்த அண்டாவில் கொண்டு வந்து கொட்டி விடுகின்றனர்.
அச்சாதத்தை எல்லோருக்கும் அன்னதானமாக கோவிலார் கொடுக்கின்றனர்.

   இமயமலையின் அடிவாரத்தில் சுமார் 2000 அடி கீழே புதைத்திருந்த நிஷ்டதார்யம் எனப்படும் உளிபடாத கல்லை இறையருள் வழிகாட்டுதலால் இவர் தொட்டு அழகிய அருணாசலேஸ்வர் லிங்கமாக உருப்பெற செய்துள்ளார். இது இவரின் சமாதி அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவர் கையால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அற்புத விநாயகர் சிலை அளவில்லா அருளை வாரி வழங்கி வருகிறார். அவ்வூரில் மகான் படேசாகிப் ஆத்ம சாதனை செய்து இறைவனோடு கலந்துள்ளார். இவ்வூரில் மகானின் சமாதி மிக அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ளது. 




ஒருநாள் வனத்தாம் பாளையம் சென்று பண்ணகுப்பத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வரப்பில் படுத்துக் கொண்டிருந்த ஒரு கருநாகம் மகானின் பாதத்தை தீண்டிச் சென்றது. அதைக் கண்டு அறுவடை செய்து கொண்டிருந்த மக்கள் நடுநடுங்கினார்கள். என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ என்று புலம்பினார்கள். ஆனால் மகான் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் போய்க் கொண்டே இருந்தார். மக்கள் அவர் கூடவே ஓடி, விஷ முறிவு மருந்து சாப்பிட வற்புறுத்தினார்கள். இதைக் கேட்ட மகான் புன்முறுவல் பூத்தார். மக்கள் ஆச்சரியத்துடன் அவர் கூடவே பண்ணகுப்பம் போய்ச் சேர்ந்தார்கள்.

இரவு முழுவதும் மகானை கவனித்துக் கொண்டு உண்ணாமல் உறங்காமல் கவலையோடு இருந்தனர். இரவு முழுவதும் மகானும் உறங்கவில்லை. மறுநாள் காலை அங்கு உள்ள பிள்ளையார் கோயிலுக்குச் சென்றார். ஆனை முகத்தானை வணங்கினார். அவர் உடல் முழுவதும் நீலம் பரவி இருந்தது. பகவானிடத்தில், சர்வேஸ்வரனின் புதல்வனிடத்தில், ஞான சொரூபமான பெரிய பிள்ளையினிடத்தில் உள்ளாழ்ந்த வலுவான எண்ணத்தைச் செலுத்தினார். இமைகள் மூடிக்கொண்டன. நிஷ்டை நிலைக்கின்றது. ஒன்றும் ஒன்றும் ஒன்றில் ஒன்றாகிவிட்டது. ஒரே ஏகாந்த நிலை கூடுகின்றது. குணங்களற்ற நிலை, காலங்களற்ற நிலை வந்தெய்துகிறது.



அப்போது அவரைத் தீண்டிய அதே கருநாகம் ஆனந்தமாக கோயிலுக்குள் நுழைந்தது. பக்கத்திலுள்ளவர்கள் அலறியடித்து எழுந்தார்கள். மகான் ஆனந்த அனுபூதியில் நிலைத்திருந்தார். அந்த கருநாகம் யாரையும் எதுவும் செய்யவில்லை. மகான் அருகில் வந்தது, அவரை மூன்று முறை வலம் வந்தது. அது தீண்டிய இடத்தில் வாயை வைத்து விஷத்தை உறிஞ்சியது. உடனே விநாயக பெருமானை வலம் வந்தது. சுற்றி இருந்தவரகளை திரும்பி திரும்பி நோக்கியது. மகானின் சிரசின்மேல் ஏறி படம் எடுத்தது. மறுபடியும் இறங்கி மூன்று முறை தன் தலையால் அவரின் பாதத்தில் வணங்கியது. அவரது முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தது. ஒருமணிநேரம் கழித்து மகானின் கண்கள் மெல்லத் திறன்தன. நிஷ்டை கலைந்தது. தன்னை பார்த்துக் கொண்டிருக்கும் கருநாகத்தைப் பார்த்தார். அது உடனே அவர் கண்களை நோக்கி தன் உடம்பை சுருட்டி தலையைக் குனிந்து வணங்கியது. பின்னர் அவர் பாதத்தில் அப்படியே குனிந்தபடியே தன் உயிரை விட்டது.







அந்த நாகத்திற்கு மகான் தனது இரண்டு கைகளாலும் ஆசீர்வாதம் செய்து மோட்ச பதவியளித்தார். அதன் பூவுடலுக்கு தன் கைகளாலேயே இறுதிச்சடங்குகளும் செய்து முடித்தார். மக்கள் பிரமிப்புடன் இந்த நிகழ்ச்சியை கண்டனர். மரணத்தை வெல்லக்கூடிய சக்தி மகான் அவர் கையிலேயே வைத்திருந்தார் என்பதை புரிந்து கொண்டனர். கொடிய விஷத்தை கொடுத்த கருநாகத்திற்குகூட அவரால் மோட்சம் அளிக்க முடிந்தது.மேலும் அந்த ஊர் மக்களுக்கு விஷம் தீண்டாதபடியும், தீண்டினாலும் அது அவர்கள் உடலில் ஏறாதபடியும் விஷ ஜந்துக்களுக்கு ஆணையிட்டு ஆசீர்வதித்தார். மக்களின் மனதில் அந்த ஆத்மஞானி தெய்வம் என்ற நிலையில் வைத்து போற்றப்பட்டார். இன்றளவும் போற்றப்படுகிறார்.



 ஒவ்வொரு வாரமும் வருகிற செவ்வாய்கிழமையும், ஒவ்வொரு மாதம் வருகிற ஆயில்ய நட்சத்திரமும் சித்தர் பீடத்தின் முக்கிய விசேஷ நாட்கள் ஆகும். ஒவ்வொரு மாதமும் வருகிற ஆயில்ய நட்சத்திரத்தில் சித்தர் பீடத்தை மகான் தேரில் பவனி வருகிறார். ஒவ்வொரு வாரம் வருகிற வியாழன், ஞாயிறு விசேஷ நாட்கள் ஆகும். கொடிய தொற்று நோய்கள், தீராத வியாதிகள் போன்றவற்றால் அவதியுறுவோர் செவ்வாய், வியாழன், ஞாயிறு கிழமைகளில் தரிசனம் செய்து இயன்ற அளவு அன்னதானம் நீர்மோர், பிஸ்கட், பழவகைகள் தானம் செய்தால் உத்தமமான பலன் கிடைக்கும். வேண்டுதலுடன் வருவோர் 5 செவ்வாய் கிழமை சித்தர் பீடத்தில் இரவு தங்கி சென்றால் உத்தமமான பலன் கிடைக்கும்.





மகான் படேசாகிப் சின்ன பாபுசமுத்திரத்தில் வெட்ட வெளியில் கி.பி.1868 பிப்ரவரி மாதம் 12-ம் தேதி செவ்வாய்க்கிழமை சமாதியடைந்தார்.

வருகின்ற 07.03.2020 சனிக்கிழமை அன்று  ஸ்ரீ மகான் படே சாஹிப் அவர்களின் மகா குருபூசை கொண்டாடப்பட உள்ளது. அழைப்பிதழை இணைத்துள்ளோம். அன்பர்கள் கலந்து கண்டு சுவாமிகளின் அருள் பெற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.




ஞானியர்களின் ஓட்டம் இன்னும் தொடரும்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-


நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 04.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/04032020.html

களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

No comments:

Post a Comment