அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இன்றைய பதிவில் வெள்ளியங்கிரி ஆண்டவர் தரிசனம் பெற இருக்கின்றோம். கடந்த மூன்று ஆண்டுகளாக நம் தளம் சார்பில் வெள்ளியங்கிரி யாத்திரை சென்று வருகின்றோம். முதல் ஆண்டு அனுபவம் என்றுமே மறக்க இயலா ஒன்று. வெளுத்து வாங்கிய மழையில், ஒரு நாள் இரவு முழுதும் தேநீர் கொட்டகையில் தங்கி இருந்து, 6 ம் மலையோடு திரும்பி, மீண்டும் அப்பனின் தரிசனம் பெற்று வந்தோம். 2018 ஆம் குழு அன்பர்களோடு சென்று வந்தோம். அந்த நிகழ்வின் காட்சிகளை இங்கே தருகின்றோம். ஏனென்றால் 7 ம் மலையில் ஈசனின் தரிசனம் பெற்ற நிகழ்வுகள் இன்னும் மனதுள் பசுமையாய் இருக்கின்றது.
என்ன தான் இருக்கின்றது வெள்ளியங்கிரியில் ? மீண்டும் மீண்டும் நினைக்க தூண்டுகின்றது.
முக்தித் தலங்கள் என்றொரு வரிசை பற்றி கேட்டிருப்போம்.கண்டிப்பாக அனைவரும் முக்தித் தலங்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
பிறக்க முக்தியளிப்பது - திருவாரூர்
வாழ முக்தியளிப்பது - காஞ்சிபுரம்
இறக்க முக்தியளிப்பது - வாரணாசி (காசி)
தரிசிக்க முக்தியளிப்பது - தில்லை (சிதம்பரம்)
சொல்ல முக்தியளிப்பது - திருஆலவாய் (மதுரை)
கேட்க முக்தியளிப்பது - அவிநாசி
நினைக்க முக்தியளிப்பது -திருவண்ணாமலை
இந்த பட்டியலில் வெள்ளியங்கிரி இல்லை.ஆனால் ஏதோ ஒன்று.... இல்லை இல்லை . பற்பல விசயங்கள் அங்கே உண்டு.அவற்றை அனுபவித்தால் தான் புரியும்.
வெள்ளியங்கிரி ஈசனை தரிசிக்க கண்டிப்பாக ஏழு மலை பயணம் செய்ய வேண்டும். ஏழு மலை ஒவ்வொன்றும் அற்புதம்.சூட்சும ரகசியம்,சித்தர்களின் ராஜாங்கம் என சொல்லிக்கொண்டே போகலாம்.
மலைகளைப் பார்க்கும் போதெல்லாம், அவை நம் கண்களுக்குக் கற்களாகத் தெரிவதில்லை. மலைகளை எழுந்து நிற்கும் இறையாகத் தான் கொள்கின்றோம்.
மலைகளின் உயரமே மனிதர்களுக்கு ஒரு செய்திதான். மலைகளில் ஏற வேண்டுமானால் குனிந்து நடக்க வேண்டும். நிமிர்ந்து கொண்டு மலை ஏற முடியாது.அடுத்த முறை மலை ஏறும் போது சற்று முயற்சித்துப் பாருங்கள்.
மலைகளில் இருந்து கீழே இறங்க நினைத்தால், நிமிர்ந்து நடக்க வேண்டும். இறையை அடைய வேண்டுமானால், உள்ளத்தில் பணிவு முக்கியம் என்பதையும், ஆணவம் மிகுந்தால் தாழ்வு நிச்சயம் என்பதையும் மலைகளின் உயரங்கள் சொல்லும் செய்தி ஆகும்.
மலை ஏறி இறங்கி தரிசனம் செய்யும் போது,நம்மிடம் முதலில் பணிவு பிறந்து, நம்மிடம் உள்ள தாழ்வு நீங்கும். ஒன்று நீங்கினால் தானே,மற்றொன்று நம்மிடம் வரும்.பக்திக்கு தேவை பணிவு.அந்த பணிவை தான் மலை ஏற்றம் தருகின்றது.
புவிக்கு ஈர்ப்பு விசை உண்டு என்பது எல்லோருக்கும் தெரியும். மலைகளுக்கு அவை கூடுதலாகவே உண்டு. மலைகள் பிரபஞ்ச ஆற்றலை ஈர்த்துத் தன்னகத்தே வைத்துக் கொண்டு, அவற்றை வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வல்லவை.இப்போது நாம் காணும் திரு அண்ணாமலை வேறொரு விதமாய் இருந்திருக்கும்.அந்த மலையில் நடந்து பார்க்கும் போது தான்,இயற்கை அன்னை நமக்கு வாரி வழங்க காத்திருப்பது நமக்கு புரியும்.
மலைகள் பேராற்றலின் சேமிப்புக் கிடங்குகள். மலைகள், அன்னையின் மடிகள்; இறையாற்றலைத் தேடும் உயிர்களையெல்லாம் அவை அரவணைக்கின்றன.
அதனால் தான் எவ்ளோ கஷ்டப்பட்டு ஏறினாலும்,மீண்டும்,மீண்டும் ஈர்க்கின்றது.
தமிழ்நாட்டின் சதுரகிரி, வெள்ளியங்கிரி, பருவதமலை, பழநிமலை, மருதமலையில் தொடங்கி, உத்தராகண்டின் இமயமலையில் உறைந்துள்ள கேதார்நாத், பத்ரிநாத் வரைக்கும் மலைக் கோயில்கள் மகத்துவம் மிக்கவையாக இருப்பதன் பின்னால், மலைகளின் ஈர்ப்பு விசையும் வெளிப்படுத்தும் விசையும் இருக்கின்றன.
தமிழ்நாட்டுச் சித்தர்களில் பலரும் இறையோடு உரையாட மலைகளையே தேர்ந்தெடுத்தனர். அகத்தியர் பொதிகை மலையிலும், பாம்பாட்டிச் சித்தர் மருதமலையிலும், போகர் பழநிமலையிலும், மச்சமுனி திருப்பரங்குன்றத்திலும், ராமதேவர் அழகர்மலையிலும், குதம்பைச் சித்தர் திருக்கழுக்குன்றத்திலும், இடைக்காடர் திருவண்ணாமலையிலும் தவமியற்றியவர்கள் ஆவர். மலைகள், நிலமகளின் மார்புகள்; இறைத்தாகம் கொண்ட உயிர்களுக்கெல்லாம் அவை ஆற்றல் நிறைந்த அமுதத்தை ஊட்டும் என்பதை சித்தர்கள் நன்கறிந்தவர்கள்.
இதோ வெள்ளியங்கிரி ஆண்டவர் தரிசனம்.
நான்காம் மலையிலிருந்து இப்போது நாம் ஏறிக்கொண்டு இருக்கின்றோம்.பச்சை நிறமே என்று பாட அல்லவா தோன்றுகின்றது. ஆடிப் பாடி கொண்டே சென்றோம்.
இதோ. ஏழாவது மலையில் அப்பனின் தரிசனம் பெற்றுக் கொண்டு இருக்கின்றோம்.
தூபம் ஏற்றி இந்த மண்ணிற்கும் அந்த விண்ணிற்கும் காட்டிய போது
வாத்தியங்கள் முழங்க, இதோ கற்பூரம் ஏற்றிய காட்சி
பின்னர் அங்கிருந்து ஆசி பெற்று, 7 மலையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தோம்.
கோடி கொடுத்தாலும் கிடைக்காத பேரின்பம் இது. அதிகாலை நேரத்தில், பனிக்காலத்தில் அப்பனின் பதிகம் ஓதி,கேட்டு, இன்புற்று, பிரபஞ்ச பேராற்றலை உணர்ந்து, தூப தீப தரிசனத்தில்; லேசான இளஞ்சூட்டில் அப்பப்பா ..சொல்லில் அடங்கா நிலை இது. வாழ்வில் ஒரு முறையேனும் அனுபவித்துப் பாருங்கள்.
அடுத்து மலையிறக்கம் ஆரம்பித்தோம்.
மூலிகை சூப் குடித்த போது
ஆறாம் மலை அடிவாரத்தில் அப்பனின் தரிசனம். இங்கே ஒரு குளியல் போட்டு பாருங்கள். தயை கூர்ந்து, சோப்பு, ஷாம்பு, பற்பசை போட்டு இங்கே அசுத்தம் செய்யாதீர்.
இயற்கையே இறை என்று மீண்டும் மீண்டும் கண்டோம்.
இதோ..மூன்றாம் மலை அருகில் நெருங்கி விட்டோம்.
பாம்பாட்டி சித்தர் குகையில் விளக்கேற்றி தரிசனம் செய்தோ. நமக்குத் தெரிந்த சித்தர்களை போற்றினோம்,
இதோ...முதல் மலையில் நடைபோட்டுக் கொண்டிருக்கின்றோம்.
அடிவாரம் வந்த பின்பு, கடைசியில் வந்த சில அன்பர்களை கஅழைத்து வர மீண்டும் நாம் சென்ற போது, மழை நம்மை ஆசிர்வாதம் செய்தது கண்டு மெய் சிலிர்த்தோம்.ஏனென்றால் அன்று முழுதும் நல்ல வெயில் அடித்தது. இந்த வெயிலில் மழை பெய்தது என்றால் அது பிரபஞ்சத்தின் கருணை தான்.
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
மீள்பதிவாக:-
இப்பிறப்பில் உன்னைக் காண்கின்றோம் - வெள்ளியங்கிரி ஈசா ! - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_7.html
வெள்ளியங்கிரி ஈசன் தரிசனம் கிடைக்குமா? - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_24.html
வெள்ளியங்கிரி ஈசனே! நீயே துணை - தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_22.html
மனதை வெளுக்கும் வெள்ளியங்கிரி - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_42.html
பாவம் தீர்க்கும் வெள்ளியங்கிரி - தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_58.html
இன்பத்தை அள்ளித்தரும் வெள்ளியங்கிரி - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_17.html
No comments:
Post a Comment