"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, February 22, 2020

வெள்ளியங்கிரி ஈசனே! நீயே துணை - தொடர்ச்சி

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் தலத்தில் ஏற்கனவே வெள்ளியங்கிரி யாத்திரை பதிவுகள் தந்துள்ளோம். மனதை வெளுக்கும் வெள்ளியங்கிரி என்றொரு பதிவில் ஆம்..வெள்ளியங்கிரி சென்று வந்தால் மனம் வெளுக்கப்படும் என்பது உண்மை. அதோடு மட்டுமா? பாவம் தீர்க்கும் வெள்ளியங்கிரி - தொடர்ச்சி  என்ற பதிவில் நம் பாவங்களை இது போன்ற மலை யாத்திரையில் கழுவி வெளியேற்ற முடியும். மனம் வெளுத்து, நம்மிடம் உள்ள பாவங்கள் தீர்ந்தால் நமக்கு வேறென்ன கிடைக்கும்? இன்பம் தானே. அதனை
இன்பத்தை அள்ளித்தரும் வெள்ளியங்கிரி என்ற பதிவில் சொல்லி இருந்தோம்.

இதோ. குருவருளால் மீண்டும் தொடர்பதிவாக வெள்ளியங்கிரி யாத்திரை தொடர்வோம்.

வெள்ளிங்கிரியின் இரண்டாம் மலையிலிருந்து மூன்றாம் மலை ஏற தொடங்குகின்றோம்.அதாவது
பாம்பாட்டி சித்தர் குகையில் சித்தர் தரிசனம் முடித்து மூன்றாம் மலை ஏற உள்ளோம். இந்த மூன்றாம் மலையானது நம் உடலில் உள்ள மணிபூரகம் சுரப்பியை குறிக்கின்றது.இந்த மலையானது அக்னி அம்சமாக உள்ளது.

மற்ற இருமலைகளை பற்றியும் இதே போல் குறிப்பால் உணர்வோமா?

முதல் மலையானது பிரணவ சொரூபம்.வெள்ளி விநாயகர் உறைவிடம். விநாயகரை தரிசித்தோம் அல்லவா? அதே தான். எடுக்கும் காரியங்கள் யாவிலும் வெற்றி பெற வெற்றி நாயகன் விநாயரை வழிபட்டு தான் அனைத்து செயலையும் ஆரம்பிப்போம்.அதே போன்ற நிகழ்வு தான் இங்கே முதல் மலையில்.

இரண்டாம் மலையானது நம் உடலில் உள்ள சுவாதிஷ்டானம் என்ற ஆதார சக்ரத்தைக் குறிக்கும்.அதென்ன சக்கரம்? என்று யோசிக்க வேண்டாம்.இது யோக மார்க்கம் சம்பந்தப்பட்டது.சித்தன் அருளால் இனிவரும் பதிவுகளில் யோகம் பற்றி அறியலாம்.இங்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டியது இரண்டாம் மலை நம் உடலில் உள்ள சுவாதிஷ்டானம் தொடர்பு கொண்டது.இங்கே பாம்பாட்டி சித்தர் குகை உண்டு.

சரி வாருங்கள் ! பயணத்தை தொடர்வோம்.

மூன்றாவது மலையில் கற்களும்,பாறைகளும் உண்டு.சில சரிவான பாறைகளின் மீது ஏறிச் செல்ல வேண்டும். ஏறும் போது வழுக்கி விழுவதால் இதற்கு வழுக்குப்பாறை என பெயர் பெற்றது. அப்பாறைகளில் இலகுவாக ஏறிச்செல்ல படி வடிவத்தில் செதுக்கி அமைத்துள்ளனர். சில இடங்களில் பாறைகளில் படிக்கட்டுகள் போன்று அமைத்துள்ளனர்.இங்கே பார்த்து நடக்க வேண்டும்.ஏனெனில் மூங்கில் பிரம்பை கொண்டு இங்கே ஊன்றி நடக்க இயலாது.மெதுவாக படி என்ற வேண்டும். அதுவும் மழை பெய்தால் சொல்லவே வேண்டாம்.நீரின் சலசலப்பில், வழுக்கு பாறை மீது கவனமாய் ஏற வேண்டும்.





மேலே நீங்கள் காண்பது வழுக்குப் பாறை.




மரத்தின் வேர்களுக்கு இடையே பாதை அமைந்துள்ளது. நடக்கும் போது மிகவும் கவனமாகச் செல்லவேண்டும். மழை காலங்கள் இப்படிகள் வழியே தான் மழை நீர் வருகின்றது. மழைநீரின் வேகத்துக்கேற்ப படிகள் இடம் பெயர்ந்து விடுகின்றன. சில இடங்களில் படிகள் அடித்துச் செல்லப்படுகிறது. மண் வழிப்பாதையில் மண் அரிப்பு ஏற்படுகிறது. 

ஒவ்வொரு சீசன் போதும் இப்பாறைகளை சீரமைத்து வருகின்றனர். இம் மலையிலும் இரண்டாவது மலையில் உள்ள தாவரங்களே காணப்படுகின்றன. வேங்கை மரத்தில் வடியும் பாலை சிறிய தேங்காய் ஓடுகளில் சேகரித்து கடைகளில் விற்பனை செய்கின்றனர். வேங்கைப் பாலால் கைக்குழந்தைகளுக்கு திலகம் இட்டால் வசீகரமாகும் என்பதுடன் கண் திருஷ்டி பாதிக்காது என இன்றும் கிராமங்களில் நம்புகின்றனர். திருப்பூர் அருகே உள்ள புகழ் பெற்ற அலகு மலை முருகனுக்கு அலங்காரத்தில் இந்த வேங்கைப் பாலால் தான் திலகம் இடப்படுகிறது என்பது கூடுதல் செய்தியாகும். 





மூன்றாவது மலையில் வழுக்குப் பாறை அமைத்தவர்களுக்கு மனதில் நன்றி கூறிக் கொண்டே யாத்திரையைத் தொடர்ந்தோம். கால் வலி ஆரம்பித்து விட்டது. இரண்டாம் மலையில் சற்று ஓய்வு எடுத்தோம்.பின்பு அப்படியே தொடர்ந்தோம்.மனதிற்குள் சிவ நாமம் கூறிக் கொண்டே நடக்கலானோம். மூன்றாவது மலை ஏற,ஏற பசியும் எடுக்க ஆரம்பித்து விட்டது. மூன்றாம் மலையில் கை  தட்டி சுனை வரும். அங்கு குடிக்க தண்ணீர் கிடைக்கும். ஆதலால் மூன்றாம் மலையில் சாப்பிடலாம் என முடிவெடுத்து நடக்க ஆரம்பித்தோம்.

சாதாரணமாக நடக்கும் போதே சற்று கால் வலி இருக்கும்.இப்போது பசியும் கூட சேர்ந்து கொண்டது.இன்னும் மூன்றாம் மலை இறுதி அடைய எவ்ளோ தூரம் செல்ல வேண்டுமோ ? என்று திகைப்பில் வெள்ளியங்கிரி ஈசன் மேல் பாரத்தை போட்டு விட்டோம்.

இம் மலையில் கைதட்டிச் சுனை என்ற தீர்த்தம் உள்ளது. ஒவ்வொரு மலை முடியும் இடம் தொடங்கும் இடம் என எந்தவிதமான அரிதியும் குறியீடும் இல்லை. இங்கே சொல்லப்படுகின்ற குறியீடுகள் அனைத்தும் நம்முடைய கவனத்திற்காகவே. சற்று தொலைவே..இதோ வந்து விட்டது 


இங்கே அமர்வதற்கு வசதியாய் சில பாறைகள் இருந்தது. அப்படியே சற்று அமர்ந்து ஓய்வு எடுத்தோம்.கை தட்டி சுனை இருந்தது. கை தட்ட,தட்ட சுனையின் நீரின் வேகம் மாறும் என்றார்கள்.ஆனால் அப்படி அங்கு இல்லை.சுனை நீரை பிடித்தோம்.  சிறிது குடித்தோம். என்ன குளிச்சி..என்ன சுவை..இது தான் உண்மையான நீர் என்றே தோன்றியது. அப்படியே யோசிக்கும் போது,தினமும் நாம் குடிக்கின்ற பில்டர் தண்ணீர், குப்பி தண்ணீர் இவை எல்லாம் நீரா? இல்லவே இல்லை நீர் போன்ற ஒரு திரவம். என்ன சொல்ல? நொந்து கொண்டோம்.

பின்பு உணவு பொட்டலங்களை எடுத்து,சாப்பிட தொடங்கினோம். சிறிது மழையும் தூறியது.தூறல் மழையில், குளிர் காற்றில், நல்ல மண் வாசனையோடு இரு உணவு பொட்டலத்தில் ஒன்றை எடுத்து பிரித்தால் அது தயிர் சாதம்.சொல்லவும் வேண்டுமா? அப்படியே எடுத்து சாப்பிட தொடங்கினோம்.



கை தட்டி சுனை நீர் 

சாப்பிட்டு விட்டு கை தட்டி சுனை சென்று,குடிக்க நீர் பிடித்துக் கொண்டோம்.இப்போது மணி சுமார் 3 மணி ஆகிவிட்டது. நாங்கள் போட்ட திட்டம் அன்றைய இரவே ஏழாம் மலை சென்று ஈசனை தரிசித்து,அங்கேயே தங்கிவிட்டு மறு நாள் காலை மலை இறங்கலாம் என்பது. ஆனால் நடப்பவை நம் கையிலா உள்ளது? அவன் அருள் இன்றி எதுவும் நடக்குமா என்ன? அப்படியே சிறிது நேரம் ஓய்வு எடுத்தோம்.



நேரம் வேறு சென்று கொண்டே இருக்கின்றது. வாருங்கள் 4 ம் மலை நோக்கி நகர்வோம் என்று அனைவரும் சேர்ந்து நடக்க ஆரம்பித்தோம்.ஒருவிதமான கோரை புற்கள் அடர்ந்து வளர்ந்த இடம் வந்தால் அது நான்காம் மலையின் தொடக்கம் என அறியலாம். இம்மலையை ஒட்டன் சமாதி மலை, திருநீர் மலை எனவும் கூறுவர். மலையின் மேற் பரப்பு வெண்மையான திருநீரை ஒத்த தரைப் பகுதியைக் கொண்டவை. பெரும்பாலும் மண்படிகள் தான் அமைந்துள்ளது. சுமார் 25% சதவீதம் பகுதி கற்படிகளால் ஆனவை. இம் மலையில் வசு வாசி என்ற மதுர களி பாக்கு அதிக அளவில் விளைகின்றது. சீற மஞ்சள் என்ற என்றும் வாடாத மஞ்சள் இம் மலையில் உள்ளது.

4ம் மலை முழுதும் திருநீர் மலை தான். சாரல் மழை வேறு ஆரம்பித்து விட்டது. அப்படியே சென்று கொண்டு இருக்கும் போது, கால்கள் வழுக்க ஆரம்பித்து விட்டது. மலை ஏற்றம் என்பதால் ஏறவும் முடியவில்லை.சில இடங்களில் பீதியை கிளப்பிவிட்டது.சற்று தட்டுத் தடுமாறி ஏறிக்கொண்டே இருந்தோம்.ஓரிடத்தில் வழுக்கி விட்டது. மேற்கொண்டு ஏறவும் முடியவில்லை.

அப்போது மேலிருந்து கீழே இறங்கும் நண்பரிடம்,சற்று கை பிடித்து மேலே தூக்கி விடுங்கள் என்றோம். அவர் தூக்கி விட்டு விட்டு,இங்கேயே இப்படி என்றால், போக போக கடின மாச்சே என்றார். அப்படியே மனதில் ஒரு நடுக்கம்.ஆயினும்.ஈசன் துணை இருக்க பயம் எதற்கு ? என்று நினைத்து நான்காம் மலை ஏறிக்கொண்டே இருந்தோம்.

நான்காம் மலையில் இந்த திருநீர் மலையை கடந்து, உச்சிக்கு சென்று கொண்டிருக்கின்றோம். எனக்கு முன்னாள் 4 பேர் சென்று விட்டார்கள். என்னுடன், பயண அவசியம் குழுவின் அன்பர் திரு அருணாந்த ஸ்வாமிகள் வந்து கொண்டிருந்தார். மழை வெளுத்துக் கட்டியது. இங்கே முழுதும் கற்களால் ஆனா படிக்கட்டுகள் இருந்தது.அப்படியே ஓரிடத்தில் ஓரமாக நின்று விட்டோம்.அப்போது மேலிருந்து கீழே இறங்குபவர்களை பார்த்தோம். விடாத மழையிலும் பயமின்றி இறங்கி கொண்டே இருந்தனர்.

சற்று ஆசுவாசப்படுத்தி விட்டு, அப்படியே தொடர்ந்தோம். நான்காம் மலையின் முடிவிற்கான பகுதியை நெருங்கி விட்டோம்.எமக்கு முன்னே சென்ற நால்வரும் நின்று கொண்டிருந்தனர்.அவர்களில் இருவர் வாருங்கள் கீழே இறங்கலாம் என்றனர்.ஏனெனில் மலை உச்சி, சாரல் மலை,கடுங் குளிர் என அனைத்தும் ஒன்று சேர்ந்து விட்டது.

அனைவரும் வந்து சேர்ந்த பின்னர், நாலு மலை ஏறிவிட்டோம்..தயை கூர்ந்து மேலே செல்வோம்.இவ்ளோ  தூரம் வந்தாச்சு. வாங்க போகலாம் னு சொல்லிட்டு அப்படியே நாலாவது மலையிலே நடக்க ஆரம்பித்தோம்.

சிர் ..சிர் ..என்ற அடர்ந்த காற்றின் சப்தம், வெளுத்து வாங்கும் மழை..மேற்கொண்டு எங்களால் நடக்க முடியவில்லை.அங்கே ஒரு கடை இருந்தது.கடைக்கு எதிரே இருந்த மறைப்பில் சற்று அமர்ந்தோம்.நடுங்கும் குளிரில் ..தலை முதல் கால் வரை நடுக்கம் தர ஆரம்பித்து விட்டது.இனிமேல் நடக்க இயலாது.பக்கத்தில் எங்காவது தங்கி விட்டு, மறு நாள் காலை யாத்திரையைத் தொடர்வோம் என முடிவெடுத்தோம். இது தான் ஈசனின் துணை என்பது.

நாங்கள் ஏழாவது மலை சென்று அங்கு இரவு தங்க ஏற்பாடு செய்தோம்.ஆனால் நான்காம் மலையில் நாங்கள் தங்க ஏற்பாடானது.நாங்கள் செய்த புண்ணியம்...நல்ல வேளை ..அங்கே பக்கத்திலேயே ஒரு தற்காலிக கூடாரம் ஒன்று இருந்தது.அங்கே இரவு தங்கலாம் என்று அங்கே சென்றோம்.

அங்கே கிடைத்த அனுபவங்கள், ஈசன் தரிசனம் என அனைத்தும் அடுத்த பதிவில்.

மீண்டும் சிந்திப்போம்.

முந்தைய பதிவுகளுக்கு:


மனதை வெளுக்கும் வெள்ளியங்கிரி  - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_42.html

பாவம் தீர்க்கும் வெள்ளியங்கிரி - தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_58.html

இன்பத்தை அள்ளித்தரும் வெள்ளியங்கிரி  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_17.html

No comments:

Post a Comment