"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, February 5, 2020

பாடல் பெற்ற தலங்கள் (10) - கற்குடியில் விழுமியானைக் கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே

இறை அன்பர்களே...

பாடல் பெற்ற தலங்கள் என்ற பதிவு நம் தலத்தில் கண்டு வருகின்றோம். அந்த வகையில் திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில், திருநெடுங்களம்,திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில்,திருமூக்கீச்சரம் பஞ்சவர்ணேசுவரர் கோயில்,திருஆனைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில், அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் கோயில், திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்,கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் தரிசனம் என பார்த்தோம். இந்த தொடர்பதிவில் இன்று நாம் காண இருப்பது  கற்குடி கற்பகக்கோயில். இதென்ன புதிதாக என்று நினைக்கின்றீர்களா? 

முன்பெல்லாம் ஊரின் பெயர் கேட்டால், ஊரில் உள்ள கோயிலைப்பற்றி சொல்லி நாம் இந்த ஊர் என்று சொல்வார்கள். இன்று நிலைமை தலைகீழ். அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் கோயிலுக்கு நாம் சென்ற போது, பேருந்தில் உள்ள நடத்துனருக்கு இந்த கோயில் பற்றி தெரியவில்லை என்று சொன்னார். நமக்கு அப்படியே தூக்கி வாரிப்போட்டது. பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கு கண்டிப்பாக ஊரில் உள்ள கோயிலைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். இப்போதெல்லாம் கோயிலைப் பற்றி கேட்டால் தெரியாது தான் என்பார்கள். அதுவே திரையரங்கம், மதுபானக் கடை என்றால் உடனே பதில் வரும். இப்படி இருக்கும் சூழலில் நாம் புராதன கோயிலுக்கு செல்லும் போது அந்த கோயிலின் மற்ற பெயர்களையும் உள்வாங்கி வர வேண்டும். சரி..கற்குடி செல்வோமா? அதாங்க.. 
உய்யக்கொண்டான் மலை தான். இன்றைய பாடல் பெற்ற கோயில் வரிசையில் உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில் பற்றி அறிய உள்ளோம்.




உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். இது தேவாரம் பாடிய நாயன்மார்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரதும் பாடல் பெற்ற சிறப்புப் பெற்றது. நந்திவர்ம பல்லவனால் அமைக்கப்பட்ட இது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் மார்க்கண்டேயரைக் காப்பாற்றுவதாக உறுதியளித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள நான்காவது சிவத்தலமாகும். 



கோயில் கோபுரம் தாண்டி உள்ளே சென்றதும் ஒரே ஒரு சந்நிதி இருந்தது.அங்கே முருகப்பெருமான் அருள் பாலித்துக் கொண்டிருக்கின்றார்.




நாம் இந்த தலத்திற்கு சென்ற போது நம்மிடம் அகலும்,எண்ணெய்யும் இருந்தது. எந்த கோயிலுக்கு சென்றாலும் வழக்கமாக தீபமேற்றுவது வழக்கம். அன்று அங்கேயே தீபமேற்ற தயாரானோம்.









அப்போது அங்கே திருமுறை பாராயணம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.செவிகளுக்கு இன்பமாக இருந்தது. கொஞ்ச நேரம் அங்கே அவற்றைக் கேட்டுவிட்டு, கோயிலுக்கு எப்படி செல்வது என்று கேட்டபோது அங்கே உள்ள மலையை காட்டினார்கள். நமக்கு ஒரே குதூகலமாய் இருந்தது. மலை என்றாலே நமக்கு ஒரே சந்தோசம் தான். இந்த கோயிலில் நாம் தீபமேற்றி வழிபட வேண்டும் என்பது நாம் நினைக்கவே இல்லை. குருவின் வழிகாட்டலில் இது தானாகவே நடந்தது. சித்தர் அருட்குடில் சார்பில் இங்கே மாதந்தோறும் அமாவாசை அன்று மோட்ச தீப பூசை நடத்தி வருகின்றார்கள். அப்படி என்றால் நாமும் இங்கே தீப வழிபாடு செய்தது குருவின் அருளாலே அன்றி வேறென்ன?

















மோட்ச தீபத்தின் உன்னதம் நமக்கு தீபம் ஏற்றும் போது கொஞ்சம் விளங்கியது. நேரம் ஆக,ஆக இருள் சூழ ஆரம்பித்தது. உடனே மேலே உள்ள கோயிலுக்கு செல்ல தயாரானோம்.






விநாயகரிடம் அனுமதி வாங்கிவிட்டு மலையேற தொடங்கினோம். அது என்ன என்று தெரியவில்லை. திருச்சியில் உள்ள மலைக்கோயில்கள் நம்மை ஒவ்வொருவிதத்தில் ஈர்க்கின்றன. மலைக்கோட்டை தாயுமான சுவாமிகள், எறும்பீஸ்வரர், இப்போது கற்குடி நாதர்.









அட..உழவாரப் பணி பற்றிய சிறப்பு செய்தி..மிக மிக எளிதாக உணர்த்தியுள்ளார். 







 கற்குடியில் விழுமியானைக் கற்பகத்தை கண்ணார காண நாம் சென்று கொண்டிருக்கின்றோம்.




சிறிய மலை தான். கொடிக்கம்பம் அடைந்து விட்டோம். தல வரலாறு பார்க்கலாமா?


மிருகண்டு முனிவர் நெடுங்காலம் புத்திரப்பேறு இல்லாமல் இருந்தார். தனக்கு ஒரு மகன் வேண்டும் என தவம் இருந்தார். சிவபெருமான் அவரிடம், ""உனக்கு ஞானமற்ற அங்கஹீனம் உள்ள, ஆனால் நூறு வயது வாழும் மகன் வேண்டுமா? அல்லது அழகும், அறிவும் மிக்க, 16 வயது வரையே ஜீவித்திருக்கும் மகன் வேண்டுமா என கேட்டார். 

குழம்பிப்போன மிருகண்டு தனக்கு ஞானபுத்திரனே வேண்டும் என்றார். மகனும் பிறந்தான். அவனுக்கு மார்க்கண்டேயன் என பெயரிட்டனர். பதினாறு வயதும் வந்தது. எமன் துரத்தினான். மார்க்கண்டேயர் பல க்ஷேத்திரங்களுக்கும் சென்று ஓடி ஒளிந்தார். இறுதியாக உய்யக்கொண்டான் திருமலைக்கு வந்தார். 

தன்னை எமன் துரத்துவதை சொன்னார். இறைவன் அந்தச்சிறுவனை பாதுகாத்தார். இதன்பிறகே அவர் திருவேற்காடு தலத்தில் சிரஞ்சீவி என்னும் பட்டம் தந்தார். 



மாலை நேர விளக்கொளியில் பாடல் பெற்ற தலத்தில் நம் கால் பதித்த போது



கோயிலில் இருந்த தூண்கள் ஒவ்வொன்றும் நம்மிடம் பேசுவதை உணர முடிகின்றது.








மார்க்கண்டேயருக்கு மீண்டும் ஜீவன் அளித்ததால் சுவாமி "உஜ்ஜீவநாதர்' எனப்படுகிறார். எண்ணிய விருப்பங்களை ஈடேற்றுவதால் "கற்பகநாதர்' என்றும் இவருக்கு பெயர் உண்டு. சுவாமி சுயம்பு வடிவில் உள்ளார். 50 அடி உயர மலையில் பாறையில் மிக அருமையாக கட்டப்பட்டுள்ளது 




 மார்க்கண்டேயரின் உயிரைக் காப்பதாக வரம் கொடுத்ததால் சிவனுக்கு, "உயிர்கொண்டார்' என்ற பெயர் ஏற்பட்டது. இவரே ஜீவன்களுக்கு ஆதாரமாக இருப்பதால் உஜ்ஜீவனநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. ஆடி பவுர்ணமியன்று இரவில், மார்க்கண்டேயருக்கு சிவன் காட்சி தந்ததாக ஐதீகம். எனவே, அந்நாளில் சிவனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். தவிர, பவுர்ணமிதோறும் இரவில் சிவனுக்கு தேன், பாலபிஷேகம் நடக்கும்.
















 மலைக்கோயில் ஓம் வடிவில் அமைந்துள்ளது. உஜ்ஜீவநாதர், அஞ்சனாட்சி அம்பாள் இருவரும் மேற்கு நேக்கியுள்ளனர். இவர்களது சன்னதிக்கு நடுவே கிழக்கு நோக்கி பாலாம்பிகை இருக்கிறாள். குழந்தைகளுக்கு ஏற்படும் பாலாரிஷ்டம் (ஒரு வகையான தோஷம்) நீங்க இவளிடம் வேண்டிக்கொள்கிறார்கள். தை மாதத்தில் ஓர்நாள் மாலையில் சிவலிங்கம், அஞ்சனாட்சி அம்பிகை மீது சூரிய ஒளி விழும். அந்நாளில் இருந்து 90 நாட்களுக்கு ஒருமுறை என, வருடத்தில் 4 முறை இங்கு சூரியபூஜை நடக்கும். பிரகாரத்தில் இடர்காத்தவர் என்ற பெயரில் சிவலிங்கம் இருக்கிறது. திருநாவுக்கரசர் தேவாரத்தில் இத்தலத்து சிவனை, இப்பெயரில் குறிப்பிட்டுள்ளார். இங்குள்ள சுப்ரமணியரிடம் அருணகிரிநாதர், "திருப்புகழ் பாடும் அறிவைக்கொடு!' என வேண்டிப் பாடியுள்ளார். வைகாசி விசாகத்தன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்று சுவாமி புறப்பாடும் உண்டு. கந்தசஷ்டியின்போது தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடக்கும். தைப்பூசத்தன்று முருகன், ஊருக்குள் சென்று ஐந்து கோயில் சுவாமிகள் சந்திக்கும் வைபவம் நடக்கும். சக்தி கணபதி, நால்வர், கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி, நவக்கிரகம், பைரவர், சூரியன், சனீஸ்வரர் ஆகியோர் பிரகாரத்தில் உள்ளனர். ஞானவாவி தீர்த்தம் பிரகாரத்தில் உள்ளது. இக்கோயிலில் இருந்து கி.மீ., தூரத்தில் அருணகிரிநாதர் திருப்புகழ் பாட முருகன் அருள் பெற்ற வயலூர் கோயில் உள்ளது.



இந்த கோயில் இராவணனுடைய சகோதரர்களில் ஒருவன் கரன். இவன் இத்தல இறைவனை வழிபட்டு அருள்பெற்றான். இக்கோயிலுக்கு மூன்று வாசல்கள் உள்ளன. இரண்டு தெற்கு நோக்கியும், ஒன்று கிழக்கு நோக்கியும் அமைந்துள்ளது. 










 50 அடி உயர மலையில் இந்த கோயில் இருக்கிறது. கோயிலைச் சுற்றி பொன்னொளி ஓடை, குடமுருட்டி, ஞானவாவி, எண்கோண கிணறு, நாற்கோண கிணறு ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. தேவி அஞ்சனாட்சி என வழங்கப்பெறுகிறாள். இவள் மை தீட்டப்பெற்ற கண்களைக் கொண்டவள். மற்றொரு அம்பிகை பாலாம்பிகை எனப்படுகிறாள். இரண்டு அம்மன்களுக்கும் தனித்தனி வழிபாடு நடக்கிறது. 





  • தற்போது இப்பகுதி மக்கள் வழக்கில் உய்யக்கொண்டான்மலை என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.
  • இறைவன் கல்லில் - மலையில் குடியிருப்பதால் கற்குடி என்னும் பெயர் பெற்றது.
  • இத்தலத்தில்தான் மார்க்கண்டேயரைக் காப்பாற்றுவதாக உறுதியளித்து இறைவன் அருள் புரிந்தார்.







  • நந்திவர்ம பல்லவ மன்னனால் அமைக்கப்பெற்ற கற்கோயில்
  • இத்திருக்கோவில் அமைந்த பகுதிக்கு 'நந்திவர்ம மங்கலம் ' என்னும் பெயருண்டு.
  • இக்கோவிலில் கரன் வழிபட்ட சிவலிங்கம் 'இடர்காத்தார் ' என்னும் பெயருடன் திகழ்கிறது.
  • கொடிமரத்தின் முன்பு, மார்க்கண்டேயனைக் காப்பதற்கு - எமனைத் தடுப்பதற்காகக் கருவறை விட்டு நீங்கி வந்து நின்ற, சுவாமியின் - பாதம் உள்ளது.
  • மூலவர் சுயம்பு மூர்த்தி, சதுர ஆவுடையாரில் அழகாக காட்சித் தருகிறார்.



























    இத்தலத்தில் உள்ள தீர்த்தங்களில் குடமுருட்டி என்பது, (தஞ்சை மாவட்டத்தில் ஓடும் ஆறு அல்ல. இது வேறு) சர்ப்பநதி, உய்யக்கொண்டான் நதி என்றும், கல்வெட்டில் வைரமேகவாய்க்கால் என்றும் உள்ளது.

    இத்திருக்கோவில் கல்வெட்டில் 'நந்திவர்ம மங்கலம்','ராஜாஸ்ரய சதுர்வேதி மங்கலம்' இவ்வூர் என்றும்; இறைவன் 'உய்யக்கொண்டநாதர் ' என்றும் குறிக்கப்படுகிறது.

கி. பி. 18ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற கர்நாடகப் போரின்போது இக்கோயில் பிரெஞ்சுக்காரரும் ஆங்கிலேயரும் மைசூர்க்காரரும் மாறிமாறித் தங்கியிருப்பதற்குரிய யுத்த அரணாக விளங்கியதாக அறியப்படுகிறது.  










இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:

திருஞான சம்பந்தர் பாடிய பதிகம்

வடந்திகழ் மென்முலை யாளைப் பாகம தாக மதித்துத்
தடந்திரை சேர்புனல் மாதைத் தாழ்சடை வைத்த சதுரர்
இடந்திகழ் முப்புரி நூலர் துன்பமொ டின்பம தெல்லாங்
கடந்தவர் காதலில் வாழுங் கற்குடி மாமலை யாரே.
திருநாவுக்கரசர் பாடிய பதிகம்

மூத்தவனை வானவர்க்கு மூவா மேனி
முதலவனைத் திருவரையின் மூக்கப் பாம்பொன்
றார்த்தவனை அக்கரவம் ஆர மாக
அணிந்தவனைப் பணிந்தடியா ரடைந்த வன்போ
தோலுந்தம்மரை யாடைசுடர்விடு
டேத்தவனை இறுவரையிற் றேனை ஏனோர்க்
கின்னமுதம் அளித்தவனை யிடரை யெல்லாங்
காத்தவனைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
சுந்தரர் பாடிய பதிகம்


விடையா ருங்கொடியாய் வெறியார்மலர்க் கொன்றையினாய்
படையார் வெண்மழுவா பரமாய பரம்பரனே
கடியார் பூம்பொழில்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
அடிகேள் எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே.
சிலையால் முப்புரங்கள் பொடியாகச் சிதைத்தவனே
மலைமேல் மாமருந்தே மடமாதிடங் கொண்டவனே
கலைசேர் கையினனே திருக்கற்குடி மன்னிநின்ற
அலைசேர் செஞ்சடையாய் அடியேனையும் அஞ்சலென்னே..  
பதிகங்கள் தனித்தனியே நமக்குக் கிடைக்கும் போது அறிய தருகின்றோம்.


எப்படி செல்வது?

திருச்சியில் இருந்து வயலூர் செல்லும் வழியில் சுமார் 6 கி.மீ., தூரத்தில் இவ்வூர் இருக்கிறது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி உண்டு,

மீள்பதிவாக :-



பாடல் பெற்ற தலங்கள் (9) - கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் & ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/01/9.html


பாடல் பெற்ற தலங்கள் (8) - திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/12/8.html

பாடல் பெற்ற தலங்கள் (7) - அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் - https://tut-temples.blogspot.com/2019/11/7_29.html

பாடல் பெற்ற தலங்கள் (6) - திருஆனைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/11/6_13.html


பாடல் பெற்ற தலங்கள் (5) - திருமூக்கீச்சரம் பஞ்சவர்ணேசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/10/5.html

பாடல் பெற்ற தலங்கள் (4) - திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/09/4.html


தரிசிப்போம் வாருங்கள் - தமிழகத்தில் உள்ள ஒரே கரக்கோயில் & பாடல் பெற்ற தலங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3.html


பாடல் பெற்ற தலங்கள் (2) - திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/08/2.html


பாடல் பெற்ற தலங்கள் (1) - திருநெடுங்களம் - https://tut-temples.blogspot.com/2019/07/1.html


ஸ்ரீ உரகமெல்லணையான் பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_59.html

No comments:

Post a Comment