"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, August 17, 2019

இன்பத்தை அள்ளித்தரும் வெள்ளியங்கிரி

 இதற்கு முந்தைய பதிவில் வெள்ளியங்கிரி மலையேற்றத்தில் முதல் மலை ஏறி தரிசனம் செய்தோம்.
இந்த பதிவில் இரண்டாம் மலை அனுபவம் பெறப் போகின்றோம்.முதல் மலையில் வெள்ளை விநாயகர்  தரிசனம் செய்து விட்டு அங்கிருந்த கடையில் நீர் வாங்கி அருந்தினோம்.பின்பு சற்று நேரம் இளைப்பாறி விட்டு இரண்டாம் மலை ஏற ஆயத்தம் ஆனோம். அங்கிருந்த கடையில் ஒரு செடி இருந்தது.அதற்கு பெரியார் "சிவன் செடி"  என்றார்கள். அதன் அருகில் பெண்கள் சென்றால் செடி இறந்துவிடும் என்று சொன்னார்கள். சற்று திகைப்பாய் இருந்தது.


இந்த சிவன் செடியானது வெள்ளிங்கிரி ஏழாவது மலை தாண்டி கிடைக்கும் என்று சொன்னார்கள்.நாங்கள் அப்படியே இரண்டாம் மலையின் ஆரம்பம் மற்றும் மலைப் பாதை பற்றி பார்த்துக் கொண்டிருந்தோம்.ஒரே மூச்சில் ஏறி விட வேண்டும் என்றும் தீர்மானித்தோம்.சரியாக 1 மணி அளவில் இரண்டாம் மலைப் பாதையில் நடை பயணம் ஆரம்பமானது.


பார்க்கும் போது,இரண்டாம் மலைப் பாதையில் படிக்கட்டுகள் இல்லை என்று தோன்றியது.முதல் மலையில் கல்லும்,மண்ணும்,படிக்கட்டுகளும் உள்ள பாதையில் நடந்தது சற்று கால் வலியை உணரச் செய்தது. மனதுள் "ஓம் சிவ சிவ ஓம்" என்று கூறிக் கொண்டே நடக்கலானோம்.



                                         (இரண்டாம் மலைப் பாதையின் ஆரம்பம் )


இரண்டாவது மலை சிற்சில இடங்களில் சமவெளியும் படிகளும் உள்ளன. அடர்ந்த மரங்கள் நிறைந்திருப்பதால் நல்ல தூய்மையான காற்றை வாசிக்க முடிந்தது. இம்மலையில் மிளகு திப்பிலி மூங்கில் வேங்கை போன்ற தாவர மர வகைகள் நிறைந்து காணப்படுகின்றன. இம்மலையின் முடிவில் பாம்பாட்டி சுனை என்ற தீர்த்தம் உள்ளது என்று சொன்னார்கள். இந்த இரண்டாம் மலை நம் உடலில் உள்ள சுவாதிஷ்டானம் மையத்திற்கு சான்றாகும்.
சமவெளிப் பாதை என்று முழுவதும் சொல்ல இயலவில்லை.ஏனெனில் ஆங்காங்கே கற்கள் உடைய கரடு முரடான பாதைகளும் இருந்தது. நேரம் செல்ல செல்ல, சற்று மூச்சு வாங்கியது. மேல் சட்டை ஏதும் அணியாது நடந்து கொண்டிருந்தமையால், சற்று குளிர் தெரிந்தது. அந்த குளிர் காற்றில், உடல் முழுதும் வேர்த்த நிலையில் ஒரு இன்பம் கிடைத்தது. உடல் முழுதும் ஒரு பரவசம். ஆனால் மனமோ பரத்தின் வசம். 
எப்பொழுது பாம்பாட்டி குகை வரும் என்று மனதில் நினைக்க தோன்றியது.இரண்டாம் மழையின் பாதி தூரத்தில் ஒரு கடை இருந்தது.அதனருகே சுனை இருந்தது.சற்று நீர் அருந்தி மீண்டும் நடக்கலானோம். கால் வலிக்க தொடங்கியது. மனதிலும் சற்று வலி ஆரம்பித்தது. இருப்பினும் ஓம் நம சிவாய என்ற சிவாயம் இருக்க நமக்கு ஒரு அபாயம் இல்லை என்று தோன்றியது.
கைத்தடி உதவி இன்றி நம்மால் இங்கு யாத்திரை செல்ல இயலாது என்பது உண்மையே. ஆனால் சிலர் மூங்கில் கைத்தடி இல்லாமால் நடந்து சென்றதை பார்த்தோம்.எல்லாம் அனுபவமே என்று தோன்றியது. சிறிது நேரத்தில் லேசாக மழை எட்டிப் பார்த்தது.மழையின் சாரலில்,குளிரின் மென்மையில்,கால் கடுக்க,மனத்தில் அவன் நாமம் சொல்ல..சொல்ல ..இனிக்குதடா..முருகா என்று தான் தோன்றியது.
இங்கே மண்ணால் ஆன பாதை இருப்பதால்,பார்த்து நடக்க வேண்டும்.இல்லையேல் வழுக்கி விழுந்து விட வாய்ப்புண்டு. கையில் கைத்தடி இருந்தாலும்,நாம் காலை இங்கே கவனமாக ஊன்றி நடக்க வேண்டும்.இல்லையேல் விழுவது உறுதி. 
அப்படியே சென்று கொண்டிருக்கும் போது,குகை கோவில் போன்ற ஒரு தோற்றம் தென்பட்டது.ஆனால் அருகே சென்று பார்த்த போது,பாறை இடுக்கு போன்று தெரிந்தது. ஆனால் அங்கே இருந்த பசுமை,குளுமை என்ற சூழல் ..அடடா ! போட வைத்தது.
மீண்டும் ஒரு முறை அருகில் சென்று பார்த்த போது,அது பாறை இடுக்கு தான்..குகை அல்ல என்று உறுதி செய்தோம்.அதற்குள் என்னுடன் வந்தவர்கள் சற்று தூரம் சென்று விட்டார்கள்.சற்றே பயமும் தொற்றியது.பின்பு உடனே வழக்கமான பாதைக்கு திரும்பி சற்று வேகம் கொடுத்து நடந்து,அவர்களோடு இணைந்தோம்.
இக்கரைக்கு அக்கரை பச்சை என்பார்கள்.முதல் மலை ஏறும் போது படிக்கட்டுகள். இரண்டாம் மலையில் சமவெளியுடன் மண் பாதை.எனவே இரண்டாம் மலை எளிதாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் இரண்டு,மூன்று முறை சறுக்கி விழுந்து இரண்டாம் மலையில் நடந்த போது
முதல் மலையில் உள்ள படிக்கட்டுகள் தேவலாம் போன்று தோன்றியது.
ஆம் ! சில இடங்களில் இது போன்ற படிகள் கொண்ட பாதையும் இருந்தது.அப்படியே பயணம் தொடர்ந்தோம்.சுமார் 2 மணி அளவில் நெருங்கி விட்டோம். பாம்பாட்டிச் சித்தர் குளிகை கண்ணில் பட்ட உடன் மெய்யும்,மனமும் ஒன்றியது.பாம்பாட்டி சித்தர் தரிசனம் பெற மனம் துடித்தது. அப்படியே அலைபேசியை எடுத்து பாம்பாட்டிச் சித்தர் தரிசனம் பெற்ற மருதேரி 
நிகழ்வைப் புரட்டினேன். அப்பொழுதான் ஒன்று புரிந்தது.காரணமின்றி காரியம் இல்லை.
ஓம் கிலீம் ஐம் சௌம் ஸ்ரீம் ஷ்ரீம் ஸ்ரீ சிவபிராபாகர சித்த யோகி ஸ்ரீ பாம்பாட்டி சித்தரே நம....
என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருந்தோம்.

                                           பாம்பாட்டிச் சித்தர் குகை தங்களுக்காக...

                                                                          (குகையின் உள்ளே )

பின்பு திருநீறணிந்து வெளியே வந்தோம். மனம் அந்த இடத்தை விட்டு அகலவில்லை.அடுத்து மூன்றாம் மலை என்ற வேண்டுமே..இறங்கி வரும் வழியில் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து விட்டு மூன்றாம் மலை நோக்கி நகர்ந்தோம்.

முந்தைய பதிவுகளுக்கு:


- அடுத்த பதிவில் முருகன் அருள் முன்னிற்க மூன்றாம்  மலை ஏறுவோம் 

No comments:

Post a Comment