"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, August 6, 2019

பித்தாபிறை சூடிபெரு மானே அருளாளா - சுந்தரமூர்த்தி நாயனார் குரு பூசை இன்று

 அனைவருக்கும் வணக்கம்.

நம் தளம் சார்பில் கொண்டாடிய மாணிக்கவாசகர் குரு பூசை பதிவை இன்று படித்திருப்பீர்கள் என்று நினைக்கின்றோம். அட..நினைத்தல் என்றாலே இது தான் நம் கருத்தில் வருகின்றது. அது நீள நினைந்து அடியேன்  என்பதே. இன்று ஆடி சுவாதி. சுந்தரமூர்த்தி நாயனார் குரு பூசை இன்று கொண்டாடப்படுகின்றது. நாமும் நம் தளம் சார்பில் கடம்பூர் கரக்கோயிலில் இணைத்துள்ளோம். அருகில் உள்ள ஆதனூர் கைலாசநாதர் கோயில் சென்று நால்வர் தரிசனம் பெற்று, நம் தளம் சார்பில் சிவபுராணம் கொடுத்துவிட்டு வந்தோம். 

அடியாரைப் பற்றி பேசுவதும், கேட்பதும் நாம் செய்த புண்ணியமே. நாயன்மார்கள் வாழ்விலிருந்து நாம் உணர வேண்டிய செய்திகள் இதோ.






அடுத்து..சுந்தர மூர்த்தி சுவாமிகள் பற்றி அறிவோம்.சுந்தரமூர்த்தி நாயனார் என்பவர் சைவசமயத்தில் போற்றப்படும் நால்வரில் ஒருவரும், அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவரும் ஆவார். இவர் திருமணம் செய்துகொள்ள இருந்தபோது சிவபெருமான் கிழவனாக சென்று தடுத்தார்.பின்பு சுந்தரரின் பிறவி நோக்கம் சிவபெருமானை புகழ்ந்து பாடுவது என புரியவைத்தார். இதனை தடுத்தாட்கொள்ளுதல் என சைவர்கள் கூறுகிறார்கள். இவர் இறைவன் மீது பல தலங்களுக்குச் சென்று பாடியுள்ளார். இப்பாடல்களை திருப்பாட்டு என்று அழைக்கின்றனர். திருப்பாட்டினை சுந்தரர் தேவாரம் என்றும் அழைப்பர். [திருமணத்தினை தடுத்து சுந்தரரை அழைத்துவந்த சிவபெருமானே பரவையார், சங்கிலியார் என்ற பெண்களை திருமணம் செய்துவைத்தார்.



இவர் வாழ்ந்தது கி. பி. எட்டாம் நூற்றாண்டளவிலாகும்.இவர் பாடிய தேவாரங்கள் 7 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன.  இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகை என்னும் நூலில் 60 சிவனடியார்கள் பற்றியும், 9 தொகை அடியார்கள் பற்றியும் குறிப்புகள் உள்ளன. இந்நூலின் துணை கொண்டே சேக்கிழார் பெரியபுராணம் எனும் நூலை இயற்றினார். அதில் சுந்தர மூர்த்தி நாயனாரையும், அவரது பெற்றார்களான சடையனார், இசை ஞானியார் ஆகிய மூவரையும் இணைத்து சிவதொண்டர்களின் எண்ணிக்கையை 63 என கையாண்டார்.

சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பாடல்களை சுந்தரர் தேவாரம் என்று அழைக்கின்றனர். இப்பாடல்களை திருப்பாட்டு என்றும் அழைப்பது வழக்கம். இப்பாடல்களை பன்னிரு திருமுறைகளிலும், தேவாரத்திலும் இணைத்துள்ளார்கள்.

இவர் சிவபெருமான் மீது பாடிய பாடல்கள் 38000 என்று கூறுகின்றனர். இவை பண்களோடு அமைந்துள்ளன. அதனால் பண் சுமந்த பாடல்கள் என்றும் கூறுகின்றனர். இவற்றில் 100 பதிகங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் 17 பண்கள் இடம்பெற்றுள்ளன.தேவாரங்களில் செந்துருத்திப் பண் கொண்டு பாடல்பாடியவர் இவரே. தேவாரங்களைப் பாடிய மற்ற ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் இந்தப் பண்ணில் பாடல்களை பாடவில்லை. 

சுந்தரர் அருளிய திருப்பதிகங்களை ’திருப்பாட்டு’ என்று அழைப்பது மரபு. இவர் அருளியவை முப்பத்து எண்ணாயிரம் அவற்றில் கிடைத்த பதிகங்கள் 101.

சுந்தரமூர்த்தி நாயானார் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூர் எனும் ஊரில் சடையனார் - இசைஞானியார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவர் ஆதி சைவர் எனும் குலத்தினை சேர்ந்தவர்.  இவரது இயற்பெயர் நம்பியாரூரன் என்பதாகும்.நம்பியாரூரன் என்பதை ஆரூரன் என்று சுருக்கி அழைப்பர். இவருடைய அழகினைக் கண்டு சிவபெருமானே சுந்தரர் என்று அழைத்தமையால், அப்பெயரிலேயே அறியப்படுகிறார். 

சுந்தரர் சிறுவயதில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திருமுனைப்பாடி அரசர் நரசிங்கமுனையார் கண்டார். சிறுவன் சுந்தரனை அரண்மனைக்கு அழைத்துச் சென்று இளவரசனைப் போல அனைத்துக் கலைகளையும் கற்றுத் தந்தார்.

மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்கு புத்தூரில் உள்ள சடங்கவி சிவாச்சாரியாரின் மகளை திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் அங்கு வந்த இறைவன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஒரு ஓலையைக் காட்டிச் சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். திருமணம் தடைப்பட, சுந்தரரை அழைத்துக்கொண்டு கோயிலுள் நுழைந்த வயோதிகர் திடீரென மறைந்தார். இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை உணர்ந்த சுந்தரர், "பித்தா பிறை சூடி" என்ற தனது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார். பாடல்களின் மூலமாக இறைவனை தன்னுடைய நண்பனாக்கிக் கொண்டார். சிவத் தலங்கள் தோறும் சென்று தேவாரப் பதிகங்கள் பாடி இறைவனைப் பணிந்தார். இறைவன் பால் இவர் கொண்டிருந்த பக்தி "சக மார்க்கம்" என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தனது தோழனாகக் கருதித் தனக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டார். "நீள நினைந்தடியேன்" என்று தொடங்கும் அவர் பாடிய தேவாரப் பதிகம் மூலம், குண்டலூரில் தான் பெற்ற நெல்லை தனது ஊர் கொண்டு சேர்க்க இறைவனிடம் உதவி கேட்பதைக் காணலாம்.

அரசரான சேரமான் பெருமாள் இவருக்கு நண்பராயிருந்தார்.



இறைவனும் இவர் மற்றொருவரிடம் பொருள் பெற அனுமதித்ததில்லை.சேரமான் பெருமானை இவர் சந்தித்து திரும்பும் போது, அம்மன்னர் பொன்,பொருள்,மணியிழைகள்,ஆடைகள் போன்ற பல பொருட்களையும் இவருடன் அனுப்பி வைத்தார். திருமுருகன்பூண்டியில், இறைவன் அவற்றை எல்லாம் தமது பூதகணங்களை வேடர்களாக மாற்றி அவர்களைக் கொண்டு பறித்துக் கொண்டார். சுந்தரர் ’கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர்....’ எனத்துவங்கும் பதிகம் பாடி இறைவனிடம் இருந்து பொருட்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.திருமுருகன்பூண்டி சிவபெருமான் கோவிலில் பைரவர் சந்நிதி அருகிலுள்ள குழியில் தான் சுந்தரரிடமிருந்து கவர்ந்த பொருட்களை இறைவன் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.




 சுந்தரர் தனது 18 ஆவது வயதில் சிவனடி சேர அடைந்திட பதிகம் பாடினார். சிவபெருமான் வெள்ளை யானை சுந்தருக்கு அனுப்ப, அதில் ஏறி கைலாயம் சென்றார். அங்கிருந்த சிவனும் பார்வதியும் வரவேற்று முக்தியளித்தனர்.






சுந்தரத் தமிழில் சுந்தரரின் தேவாரப்பாடல் படிப்போம்.

தலம் : ஒற்றியூர் 

அழுக்கு மெய்கொடுன் றிருவடி அடைந்தேன்
  அதுவும் நான்படப் பாலதொன் றானாற்
பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள்
  பிழைப்பன் ஆகிலுந் திருவடிப் பிழையேன்
வழுக்கி வீழினுந் திருப்பெய ரல்லால்
  மற்று நான்அறி யேன்மறு மாற்றம்
ஒழுக்க என்கணுக் கொருமருந் துரையாய்
  ஒற்றி யூரெனும் ஊருறை வானே.  1 


கட்ட னேன்பிறந் தேன்உனக் காளாய்
  காதற் சங்கிலி காரண மாக
எட்டி னாற்றிக ழுந்திரு மூர்த்தி
  என்செய் வான்அடி யேன்எடுத் துரைக்கேன்
பெட்ட னாகிலுந் திருவடிப் பிழையேன்
  பிழைப்ப னாகிலுந் திருவடிக் கடிமை
ஒட்டி னேன்எனை நீசெய்வ தெல்லாம்
  ஒற்றி யூரெனும் ஊருறை வானே.  2 


கங்கை தங்கிய சடையுடைக் கரும்பே
  கட்டி யேபலர்க் குங்களை கண்ணே
அங்கை நெல்லியின் பழத்திடை அமுதே
  அத்தா என்னிடர் ஆர்க்கெடுத் துரைக்கேன்
சங்கும் இப்பியுஞ் சலஞ்சலம் முரல
  வயிரம் முத்தொடு பொன்மணி வரன்றி
ஒங்கு மாகடல் ஓதம்வந் துலவும்
  ஒற்றி யூரெனும் ஊருறை வானே.  3 


ஈன்று கொண்டதோர் சுற்றமொன் றன்றா
  லியாவ ராகிலென் அன்புடை யார்கள்
தோன்ற நின்றருள் செய்தளித் திட்டாற்
  சொல்லு வாரைஅல் லாதன சொல்லாய்
மூன்று கண்ணுடை யாய்அடி யேன்கண்
  கொள்வ தேகணக் குவழக் காகில்
ஊன்று கோல்எனக் காவதொன் றருளாய்
  ஒற்றி யூரெனும் ஊருறை வானே.  4 


வழித்த லைப்படு வான்முயல் கின்றேன்
  உன்னைப் போல்என்னைப் பாவிக்க மாட்டேன்
சுழித்த லைப்பட்ட நீரது போலச்
  சுழல்கின் றேன்சுழல் கின்றதென் னுள்ளம் 
கழித்த லைப்பட்ட நாயது போல
  ஒருவன் கோல்பற்றிக் கறகற இழுக்கை
ஒழித்து நீயரு ளாயின செய்யாய்
  ஒற்றி யூரெனும் ஊருறை வானே.  5 


மானை நோக்கியர் கண்வலைப் பட்டு
  வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சித்
தேனை ஆடிய கொன்றையி னாய்உன்
  சீல முங்குண முஞ்சிந்தி யாதே
நானும் இத்தனை வேண்டுவ தடியேன்
  உயிரொ டும்நர கத்தழுந் தாமை
ஊனம் உள்ளன தீர்த்தருள் செய்யாய்
  ஒற்றி யூரெனும் ஊருறை வானே.  6 


மற்றுத் தேவரை நினைந்துனை மறவேன்
  எஞ்சி னாரொடு வாழவும் மாட்டேன்
பெற்றி ருந்து பெறாதொழி கின்ற
  பேதை யேன்பிழைத் திட்டதை அறியேன்
முற்றும் நீஎனை முனிந்திட அடியேன்
  கடவ தென்னுனை நான்மற வேனேல்
உற்ற நோயுறு பிணிதவிர்த் தருளாய்
  ஒற்றி யூரெனும் ஊருறை வானே.  7 


கூடினாய் மலை மங்கையை நினையாய்
  கங்கை ஆயிர முகம்உடை யாளைச்
சூடி னாயென்று சொல்லிய புக்கால்
  தொழும்ப னேனுக்குஞ் சொல்லலு மாமே
வாடி நீயிருந் தென்செய்தி மனனே
  வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சி
ஊடி னாலினி ஆவதொன் றுண்டே
  ஒற்றி யூரெனும் ஊருறை வானே.  8 


மகத்திற் புக்கதோர் சனிஎனக் கானாய்
  மைந்த னேமணி யேமண வாளா
அகத்திற் பெண்டுகள் நானொன்று சொன்னால்
  அழையேற் போகுரு டாஎனத் தரியேன்
முகத்திற் கண்ணிழந் தெங்ஙனம் வாழ்கேன்
  முக்க ணாமுறை யோமறை யோதீ
உகைக்குந் தண்கடல் ஓதம்வந் துலவும்
  ஒற்றி யூரெனும் ஊருறை வானே.  9 


ஓதம் வந்துல வுங்கரை தன்மேல்
  ஒற்றி யூருறை செல்வனை நாளும்
ஞாலந் தான்பர வப்படு கின்ற
  நான்ம றையங்கம் ஓதிய நாவன்
சீலந் தான்பெரி தும்மிக வல்ல
  சிறுவன் வன்றொண்டன் ஊரன் உரைத்த
பாடல் பத்திவை வல்லவர் தாம்போய்ப்
  பரகதி திண்ணம் நண்ணுவர் தாமே.  10 
  
தலம் : ஒற்றியூர் 

பாட்டும் பாடிப்
  பரவித் திரிவார்
ஈட்டும் வினைகள்
  தீர்ப்பார் கோயில்
காட்டுங் கலமுந்
  திமிலுங் கரைக்கே
ஓட்டுந் திரைவாய்
  ஒற்றி யூரே.  1 


பந்துங் கிளியும்
  பயிலும் பாவை
சிந்தை கவர்வார்
  செந்தீ வண்ணர்
எந்தம் அடிகள்
  இறைவர்க் கிடம்போல்
உந்துந் திரைவாய்
  ஒற்றி யூரே.  2 


பவளக் கனிவாய்ப்
  பாவை பங்கன்
கவளக் களிற்றின்
  உரிவை போர்த்தான்
தவழும் மதிசேர்
  சடையாற் கிடம்போல்
உகளுந் திரைவாய்
  ஒற்றி யூரே.  3 


என்ன தெழிலும்
  நிறையுங் கவர்வான்
புன்னை மலரும்
  புறவிற் றிகழுந்
தன்னை முன்னம்
  நினைக்கத் தருவான்
உன்னப் படுவான்
  ஒற்றி யூரே.  4 


பணங்கொள் அரவம்
  பற்றிப் பரமன்
கணங்கள் சூழக்
  கபாலம் ஏந்தி
வணங்கும் இடைமென்
  மடவார் இட்ட
உணங்கல் கவர்வான்
  ஒற்றி யூரே.  5 


படையார் மழுவன்
  பால்வெண் ணீற்றன்
விடையார் கொடியன்
  வேத நாவன்
அடைவார் வினைகள்
  அறுப்பான் என்னை
உடையான் உறையும்
  ஒற்றி யூரே.  6 


சென்ற புரங்கள்
  தீயில் வேவ
வென்ற விகிர்தன்
  வினையை வீட்ட
நன்று நல்ல
  நாதன் நரையே
றொன்றை உடையான்
  ஒற்றி யூரே.  7 


கலவ மயில்போல்
  வளைக்கை நல்லார்
பலரும் பரவும்
  பவளப் படியான்
உலகின் உள்ளார்
  வினைகள் தீர்ப்பான்
உலவுந் திரைவாய்
  ஒற்றி யூரே.  8 


பற்றி வரையை
  எடுத்த அரக்கன்
இற்று முரிய
  விரலால் அடர்த்தார்
எற்றும் வினைகள்
  தீர்ப்பார் ஓதம்
ஒற்றுந் திரைவாய்
  ஒற்றி யூரே.  9 


ஒற்றி யூரும்
  அரவும் பிறையும்
பற்றி யூரும்
  பவளச் சடையான்
ஒற்றி யூர்மேல்
  ஊரன் உரைத்த
கற்றுப் பாடக்
  கழியும் வினையே.  10 
  
தலம் : கச்சூர் ஆலக்கோயில்

முதுவாய் ஓரி கதற முதுகாட்
  டெரிகொண் டாடல் முயல்வானே
மதுவார் கொன்றைப் புதுவீ சூடும்
  மலையான் மகள்தன் மணவாளா
கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்
  கண்டால் அடியார் கவலாரே
அதுவே ஆமா றிதுவோ கச்சூர்
  ஆலக் கோயில் அம்மானே.  1 


கச்சேர் அரவொன் றரையில் அசைத்துக்
  கழலுஞ்சிலம்புங் கலிக்கப் பலிக்கென்
றுச்சம் போதா ஊரூர் திரியக்
  கண்டால் அடியார் உருகாரே
இச்சை அறியோம் எங்கள் பெருமான்
  ஏழேழ் பிறப்பும் எனையாள்வாய்
அச்சம் இல்லாக் கச்சூர் வடபால்
  ஆலக் கோயில் அம்மானே.  2 


சாலக் கோயில் உளநின் கோயில்
  அவையென் றலைமேற் கொண்டாடி
மாலைத் தீர்ந்தேன் வினையுந் துரந்தேன்
  வானோர் அறியா நெறியானே
கோலக் கோயில் குறையாக் கோயில்
  குளிர்பூங் கச்சூர் வடபாலை
ஆலக் கோயிற் கல்லால் நிழற்கீழ்
  அறங்கட் டுரைத்த அம்மானே.  3 


விடையுங் கொடியுஞ் சடையும் உடையாய்
  மின்னேர் உருவத் தொளியானே
கடையும் புடைசூழ் மணிமண் டபமுங்
  கன்னி மாடங் கலந்தெங்கும்
புடையும் பொழிலும் புனலுந் தழுவிப்
  பூமேல் திருமா மகள்புல்கி
அடையுங் கழனிப் பழனக் கச்சூர்
  ஆலக் கோயில் அம்மானே.  4 


மேலை விதியே வினையின் பயனே
  விரவார் புரமூன் றெரிசெய்தாய்
காலை யெழுந்து தொழுவார் தங்கள்
  கவலை களைவாய் கறைக்கண்டா
மாலை மதியே மலைமேல் மருந்தே
  மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த
ஆலைக் கழனிப் பழனக் கச்சூர்
  ஆலக் கோயில் அம்மானே.  5 


பிறவாய் இறவாய் பேணாய் மூவாய்
  பெற்ற மேறிப் பேய்சூழ்தல்
துறவாய் மறவாய் சுடுகா டென்றும்
  இடமாக் கொண்டு நடமாடி
ஒறுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்
  கண்டால் அடியார் உருகாரே
அறவே ஒழியாய் கச்சூர் வடபால்
  ஆலக் கோயில் அம்மானே.  6 


பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால்
  அதுவும் பொருளாக் கொள்வானே
மெய்யே எங்கள் பெருமான் உன்னை
  நினைவார் அவரை நினைகண்டாய்
மையார் தடங்கண் மங்கை பங்கா
  கங்கார் மதியஞ் சடைவைத்த
ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர்
  ஆலக் கோயில் அம்மானே.  7 


ஊனைப் பெருக்கி உன்னை நினையா
  தொழிந்தேன் செடியேன் உணர்வில்லேன்
கானக் கொன்றை கமழ மலருங்
  கடிநா றுடையாய் கச்சூராய்
மானைப் புரையும் மடமென் னோக்கி
  மடவா ளஞ்ச மறைத்திட்ட
ஆனைத் தோலாய் ஞானக் கண்ணாய்
  ஆலக் கோயில் அம்மானே.  8 


காதல் செய்து களித்துப் பிதற்றிக்
  கடிமா மலரிட் டுனையேத்தி
ஆதல் செய்யும் அடியார் இருக்க
  ஐயங் கொள்வ தழகிதே
ஓதக் கண்டேன் உன்னை மறவேன்
  உமையாள் கணவா எனையாள்வாய்
ஆதற் பழனக் கழனிக் கச்சூர்
  ஆலக் கோயில் அம்மானே.  9 


அன்னம் மன்னும் வயல்சூழ் கச்சூர்
  ஆலக் கோயில் அம்மானை
உன்ன முன்னும் மனத்தா ரூரன்
  ஆரூ ரன்பேர் முடிவைத்த
மன்னு புலவன் வயல்நா வலர்கோன்
  செஞ்சொல் நாவன் வன்றொண்டன்
பன்னு தமிழ்நூல் மாலை வல்லார்
  அவரெந் தலைமேற் பயில்வாரே.  10 
 
திருச்சிற்றம்பலம்


- மீண்டும் சிந்திப்போம்

மீள்பதிவாக:-

 TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html
 சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html
சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html


சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் (02/06/2019) - https://tut-temples.blogspot.com/2019/05/02062019.html



நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html
எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html

No comments:

Post a Comment